புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Wednesday, October 10, 2018

நேர்படப் பேசும் தலைமுறை

வாராத ஒரு மழையைச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றும், அதற்காக சில நாட்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தும், அதற்காகவே சில தேர்தல்களைத் தள்ளி வைத்தும், அதே போல அடுத்த ஒரு மழைக்காக காத்திருக்கும் என் தமிழ்கூறும் நல்லுலகிற்காக ....

இறைவிகளையும்
தேவதைகளையும்
மனைவிகளாக்கிக் கொள்வதை
இறைவி கண்டிப்பது
இறைவனுக்குப் பிடிக்கவில்லை

இறைவியின் கவனம் சிதறடிக்க‌
தேவதை ஒருத்தியை
அனுப்புகிறார் இறைவன்

தேவதைக்கான கட்டளை என்பது
இறைவியைப் பேசவிடாமல்
தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பது

ஏமாற்றப்படுவதை
ஒருநாள் உணர்ந்த இறைவி
தேவதையைச் சபிக்கிறாள்

உரையாடல் என்ற
ஆயுதத்தையே அபகரிக்கிறது அச்சாபம்
யார் பேசினாலும்
கடைசி வார்த்தைகளை மட்டுமே
திரும்ப பேச முடியும்

குகைகளில் தஞ்சம் அடைந்த தேவதை
பேசுபவர்களின் கடைசி வார்த்தைகளையே
மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறாள்

அத்தேவதையின் பெயர் Echo
எதிரொலிக்கான ஆங்கில வார்த்தையானாள்

காலங்கள் மாறிவிட்டன‌
தலைமுறைகள் ஓடிவிட்டன‌
கதை மட்டும் இன்னும் இருக்கிறது

இறைவியின் இரத்தலை இறத்தலாக்கும் இறைவனாய்
ஓட்டுக்கட்சி அரசுகள்!
இறைவி என்பதை மறந்துபோன‌ இறைவியாய்
ஓட்டைவிற்ற‌ மக்கள்!
இறைவியின் கைகளில் இறைவனின் தேவதையாய்
இரைச்சலுடன் ஊடகங்கள்!

இரைச்சலை எதிரொலிக்கும்
சபிக்கப்பட்ட தேவதையாய்
மீண்டும் மீண்டும் அதே மக்கள்!

– ஞானசேகர்

Monday, October 08, 2018

டாஸ்மாக்

பாதயாத்திரைப் பக்தர்களுடன்
பகவான் தானும் நடப்பதாக‌
தண்ணீர்ப் பந்தல் வைக்கிறார்கள்
பாதையோரப் பக்தர்கள்.

பாதையோரப் பக்தனாக‌
பகவான் தாகம் தீர்ப்பதாக‌
தண்ணீர்ப் பந்தல் நுழைகிறார்கள்
பாதயாத்திரைப் பக்தர்கள்.

- ஞான‌சேகர்

Monday, October 01, 2018

சிஸ்டம் சரியில்லை

ஒரு பெண்ணை
இரண்டு ஆட்டோ ஓட்டுனர்கள்
கடத்திப் போய்
கற்பழித்த வழக்கில்
கைப்பற்றப்பட்ட ஆட்டோவில் எழுதி இருந்தது
'போடா, ஆண்டவனே நம்ம பக்கம்'.

– ஞானசேகர்

Wednesday, September 19, 2018

உலகப் புத்தகத் திருவிழா 2018 - ஜகார்த்தா, இந்தோனேசியா

Seek knowledge even from China - முகமது நபி

வெகு நேர்த்தியாகத் திட்டமிட்டு நான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் இரு விடயங்கள், பயணித்தலும் வாசித்தலும். உண்மையில் இரண்டும் பிரிக்க முடியாதவை. ஒன்றின் தூண்டுதலில் இன்னொன்றைச் செய்ய வேண்டிய நிலைதான் பெரும்பாலும் அமைந்து விடுகிறது. அதற்குப் பல சான்றுகளை எனது பழைய பதிவுகளில் படித்திருப்பீர்கள். மிகப் பெரிய பயணத்திற்கான அல்லது மிகச் சிறந்த புத்தகத்தை வாசிப்பதற்கான தூண்டுதலை உண்டாக்கும் ஆரம்பப் பொறி எதிர்பாராத தருணத்தில் அமைந்து விடுகிறது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ஷார்ஜாவில் நடந்த புத்தகக் கண்காட்சிக்குச் சென்று வந்ததை ஒரு கட்டுரையாக சென்ற வருடம் எழுதி இருந்தார். சென்னை புதுக்கோட்டை திருச்சி ஒசூர் ஹைதராபாத் என பல நகரங்களின் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருக்கிறேன். டெல்லி ஜெய்பூர் கொல்கத்தா நகரங்களில் நடக்கும் புத்தகக் கண்காட்சிகளுக்கும் வருங்காலத்தில் செல்ல வேண்டுமென்ற திட்டமும் எனக்குண்டு. புத்தகங்களைத் தேடி நாடுவிட்டு நாடும் செல்லலாம் என்று அக்கட்டுரை தூண்டியது. எனது முன்னோடிகளான பாஹியான், யுவான் சுவாங் போன்ற சீனப் பயணிகள் அப்படி தூண்டப்பட்டு, புத்தமத நூல்களைத் தேடி இந்தியா வந்தவர்கள் தான்.

சரி. ஆனால் எஸ்ரா உலகம் அறிந்த எழுத்தாளர். அவரை அழைத்து உபசரித்து, செலவே இல்லாமல் எல்லா வசதிகளும் செய்துதர எல்லா நாடுகளிலும் தமிழர்கள் இருக்கிறார்கள். கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடலாமா? இப்படியொரு சிந்தனை என்னைக் கீழே இறக்கிவிட்டது. அரசனை எதிர்த்து விசாவே இல்லாமல் புத்தரை மட்டுமே நம்பி கிளம்பி காஞ்சிபுரம் வரை வந்த யுவான் சுவாங், என் சிந்தனையைக் கொஞ்சம் மேலேற்றிவிட்டார். ஊஞ்சலாடிய சிந்தனை நிலைகொண்ட ஒரு பொழுதில், உலகப் புத்தகத் திருவிழா நடக்கும் இடங்களைத் தேடினேன். மாதத்திற்குக் குறைந்தது இரண்டு வீதம் வருடம் முழுக்க உலகம் முழுவதும் எங்கோ அது நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் டெல்லி கொல்கத்தா என்ற இரண்டு இந்திய நகரங்களைத் நீக்கிவிட்டு வெளிநாடுகளில் தேடினால், இரண்டு நகரங்கள் தான் இந்தியர்களுக்கு இலவச விசா தருகின்றன. ஹாங்காங் மற்றும் ஜகார்த்தா. ஒரு தாயின் கருணையோடு பத்து மாதங்கள் என்னை ஏற்கனவே நொந்து சுமந்ததாலும், கட்டுப்படாத விலைவாசி உடைய டாலர் தேசம் என்பதாலும் ஹாங்காங் நீக்கப்பட்டது.

ஜகார்த்தாவில் வருங்காலத்தில் நான் சுற்றிப் பார்க்க ஏற்கனவே ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். புத்தகத் திருவிழாவை மையமாகக் கொண்டு அத்திட்டத்தையும் நிறைவேற்ற அலுவலகம் விடுப்பு தரவில்லை. எனவே அத்திட்டத்திற்குப் பாதிப்பு இல்லாமல், ஜகார்த்தா நகரைச் சுற்றிப் பார்க்க, இரண்டு முழு நாட்களும், ஒரு பிற்பகலும், ஒரு முற்பகலும் திட்டமிட்டேன். எது மாதிரியான புத்தகங்கள் அங்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு ஏதும் இல்லாமல், ஓர் அனுபவத்திற்காக செல்வதாக எண்ணிக் கொண்டேன். நான் சென்று சேர்ந்த நாளில், அங்கிருந்த அலுவலக நண்பர் ஒருவரைத் தொடர்பு கொண்டேன். தன் வீட்டில் கவிஞர் வைரமுத்துவுடன் உணவு உண்பதை, ஒரு ஜகார்த்தாக்காரர் முகநூலில் பதிவிட்டு இருப்பதாகச் சொன்னார். அநேகமாக அவரும் புத்தகத் திருவிழாவிற்கு வந்திருக்கக் கூடும் என்றும் சொன்னார்.

இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நாடு இந்தோனேசியா என்பதால், அது பெரும்பாலும் இஸ்லாமியப் புத்தகங்கள் மட்டுமே கொண்ட கண்காட்சியாக இருந்தது. தமிழ்ப் புத்தகங்கள் இல்லை. இந்தியப் பதிப்பகங்கள் இல்லை. ஆங்கிலப் புத்தகங்கள் கொஞ்சம் இருந்தன. பெரும்பாலும் இந்தோனேசிய மொழிப் புத்தகங்கள். புதினங்கள் சில கண்டேன். கவிதைகள் காண முடியவில்லை. எனது விருப்பப் புத்தகங்களில் ஒன்றான ஜெருசலேம் புத்தகம், இந்தோனேசிய மொழியில் இருந்ததில் மகிழ்ச்சி. அது தமிழிலும் இப்போது வந்துள்ளது. ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், பார்வையாளர்கள் கூட்டத்தில் அமர்ந்திருந்தேன். வெளியிட்டப்பட்ட அப்புத்தகத்தை எல்லாருக்கும் தந்தார்கள். எனக்கும்தான். இந்தோனேசிய மொழிப் புத்தகம் அது. நான் என்றுமே படிக்கப் போவதில்லை என்றாலும், எனது புத்தக அலமாரியில் இனி தனியிடம் உண்டு. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நான்கில் ஒரு பங்குதான் புத்தகங்கள் இருக்கும். ஒரு மணிநேரத்தில் சுற்றி முடித்துவிட்டேன்.

இந்தோனேசியர்கள் தங்களுக்கான புத்தகங்களைத் தேடி கூடி இருந்த அவ்விடத்தில், ஓர் ஓரமாக அமர்ந்து, நான் கொண்டு போயிருந்த தமிழ்ப் புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். ஓசூர் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய முகில் அவர்களின் பயண சரித்திரம் என்ற புத்தகம் அது. கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி எதையோ தேடிப் பயணித்த யுவான் சுவாங்கும், மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிப் பயணித்த நானும் ஒருவருக்கொருவர் புன்னகைத்துக் கொண்டோம். அடுத்து எங்கென்று அவர் கேட்டது போல் இருந்தது. அநேகமாக சனவரில் கொல்கத்தா புத்தகக் கண்காட்சி என்றேன்.

அதுவரை எனது ஜகார்த்தா பயணத்துப் புகைப்படங்களை இச்சுட்டியில் நீங்கள் காணலாம். தற்போது எடிட்டிங் சென்சார் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. காத்திருங்கள்!

https://plus.google.com/103740705199337696353

– ஞானசேகர்

Sunday, August 19, 2018

ஏற்கனவே நிகழ்த்தப்பட்ட மரணங்கள்

ஐந்தாவது தலாய் லாமா
மரணித்த செய்தி
உலகிற்குத் தெரியும் முன்
பத்து ஆண்டுகள் ஓடிவிட்டன.

இங்கிலாந்து மன்னர் இரண்டாம் ஜார்ஜ்
இறந்த செய்தி
அமெரிக்கக் காலனியை அடைய
ஆறு வாரங்கள் ஆயின‌.

தஞ்சை மாமன்னர் இராசராசசோழன்
உடல்நலக் குறைவுற்றதை
இலங்கையில் மகன் இராசேந்திரச்சோழன் அறிய‌
ஒரு மாதம் ஆனது.

அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்
சுட்டுக் கொல்லப்பட்டதைக் கேட்டு அதிர்ச்சியடைய
இலண்டன் மக்களுக்குப்
பன்னிரண்டு நாட்கள் தேவைப்பட்டன.

இவர்கள் எல்லாரையும் விட‌
மேலானவர்கள் நாங்கள்
இறப்பு நிகழும் முன்னே
மரணச்செய்தி சொல்லிவிடும்
BREAKING NEWS ஊடகங்களால்.

– ஞானசேகர்
(Gabriel Garcia Marquez அவர்களின் Chronicle of a Death Foretold என்ற தலைப்பும் பொருத்தமாய் இருக்கும்)

Thursday, June 21, 2018

எண்வழி தனிவழி

நல்ல எண்ணம்
நல்ல நம்பிக்கை
நல்ல பேச்சு
நல்ல செயல்
நல்ல வாழ்க்கை
நல்ல முயற்சி
நல்ல சிந்தனை
நல்ல நோக்கம்

எட்டு வழிகள்
பிறப்புக்கும் இறப்புக்கும்
இடையில் இருக்கச் சொன்னார்
பௌத்த சமயத்தில் புத்தர்.

சென்னைக்கும் சேலத்துக்கும்
இடையில் இல்லாததால்
போராடிக் கொண்டிருக்கிறோம்
அபத்த சமயத்தில் நாங்கள்.

- ஞானசேகர்

Friday, April 06, 2018

இந்தியாவைச் சுற்றி இன்னுமொரு வாரம்

நீரைப்போல்
உன் சிறைகளில் இருந்து
கசிகின்றவனாக இரு


நீரைப்போல்
எங்கே சுற்றி அலைந்தாலும்
உன் மூல சமுத்திரத்தை
அடைவதையே
குறிக்கோளாய்க் கொள்வாயாக !
- அப்துல் ரகுமான்


ஏற்கனவே ஒருமுறை நான் தனியாக இந்தியாவை இரயில்களில் ஒருவாரம் சுற்றி வந்தது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். அதற்கான சுட்டி இதோ:
http://jssekar.blogspot.in/2014/08/blog-post.html

இப்போது இரண்டாம் முறை அதே மாதிரியான பயணம்.
8 இரவுகள். 8 இரயில்கள்.
7 பகல்கள். 7 ஊர்கள்.
3 உலகப் பாரம்பரியச் சின்னங்கள்.
2 முறை போலிஸ்காரர்கள் என்னைச் சந்தேகப்பட்டு பிடித்து விசாரித்தார்கள்.

பயணங்களில் படிக்க எடுத்துச் சென்ற புத்தகங்கள்:
1. நரன் என்பவரின் கேசம் என்ற சிறுகதைத் தொகுப்பு
2. இன்னொருவருடன் சேர்ந்து அமர்தியா சென் எழுதியிருக்கும் An uncertain glory
கிட்டதட்ட 180 மணி நேரங்கள் தொடர்ந்து இயக்கத்திலேயே இருந்திருக்கிறேன். முன்போலவே எந்த ஊரிலும் தங்கவில்லை. இரவில் இரயில்களில் தூங்கி, பகல்களில் ஊர்சுற்றி மகிழ்ச்சியாகத் திரும்பி வந்திருக்கிறேன்.

மொத்த பயணத்தில் இருமுறை தான் ஒழுங்கான உணவு கொண்டேன். இரயில் நிலைய நடைமேடைகளில் கடுமையான களைப்பில் மக்களோடு மக்களாக படுத்து உறங்கி இருக்கிறேன். இரண்டு நாட்களுக்குப் பிறகு தான் வட இந்தியாவையே தொட முடிந்தது. சூரிய உதயம் முதல் மறைவு வரை நான் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்த நான்காம் நாள் தான், இதுவரையான என் இந்தியப் பயணங்களில் மிகவும் உற்சாகமான நாள். கோடை வெப்பம், மோசமான மதிய உணவு, இரயில் இயந்திரக் கோளாறால் ஏற்பட்ட தாமதம் என எல்லாம் சேர்ந்து ஐந்தாம் நாளில், உள்ளம் வேண்டியபடி செல்ல உடல் கொஞ்சம் ஒத்துழைக்கவில்லை. காமம் செப்பாது உள்ளது சொல்ல வேண்டுமானால், ஆறாம் நாளில் கொஞ்சம் காமம் தலைக்கேறி உள்ளம் கொஞ்சம் ஒத்துழைக்கவில்லை. எங்குமே என்னைப் புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை என்பதை ஏழாம் நாள் இரவில் தான் உணர்ந்தேன்.

என்னிடம் ஸ்மார்ட் போன் கிடையாது. இயர் போன் காதில் மாட்டி தேன்மதுரப் பாடல்கள் கேட்கும் பழக்கமும் கிடையாது. விந்திய மலைத் தொடர்களில் உள்ள ஒரு குன்றில், குடிநீர் கூட இல்லாமல், சுட்டெரிக்கும் வெயிலில் தன்னந்தனியாக 3கிமீ ஏறிய போது இம்மூன்று பாடல்களை என் மொபைல் போனில் இருந்து ஒலிக்கச் செய்தேன்.
1. தாரைத் தப்பட்டை திரைப்படத்தில் வரும் 'பாருவாய பிறப்பற வேண்டும்' என்ற திருவாசகப் பாடல்
2. பாரதி திரைப்படத்தில் வரும் 'நிற்பதுவே நடப்பதுவே'
3. கபாலி திரைப்படத்தில் வரும் 'நெருப்புடா'
'பயமா? ஹாஹாஹாஹா' என நானும் சத்தம் போட்டுச் சிரித்துக் கொண்டேன். இது போல ஒவ்வொரு பயணத்திலும், ஒவ்வோர் இடத்திற்குப் பின்னும் விதவிதமான கதைகள் உண்டு. கட்டை விரலில் தள்ளித் தள்ளிப் படங்கள் பார்க்கும் இத்தலைமுறை, அவற்றில் ஈடுபாடு காட்டுவதில்லை என்பதால், அவற்றை எழுதாமல் தவிர்க்கிறேன்.

கீழ்க்கண்ட சுட்டியில் என் பயணத்தை நீங்களே படம்பார்த்து கதை தெரிந்து கொள்ளுங்கள். தற்போது எடிட்டிங் - சென்சார் - வசனம் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறேன். One week around India என்ற வாக்கியத்தை இப்பயண ஆல்பங்களின் பெயரில் சேர்த்திருக்கிறேன். எனவே அதைத் தேடினால் நீங்கள் பயண ஆல்பங்களை அடையலாம். கனரா வங்கியில் தொடங்கிய என் பயணம், உங்களில் பலர் முகம் சுழித்து மூக்கை மூடிக் கொள்ளும் ஓர் இடத்தில் முடிகிறது.
https://plus.google.com/103740705199337696353

அந்த ஒருவாரம் உலகத்தில் என்ன நடந்தது என்றே எனக்குத் தெரியாது. திரும்பி வந்த பின் சில விடய‌ங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். என் பயணத்துக்கு முன் இமயமலை போன சூப்பர் ஸ்டார், நான் திரும்பி வந்த பிறகும் என்ன ஆனார் என்று தெரியவில்லை. பரோலில் வந்திருந்த சசிகலா, சிறை திரும்பினாரா என்றும் தெரியவில்லை. சினிமா வேலைநிறுத்தம் நிறுத்தப்படவில்லை. நான் எதிர்பார்த்த மாதிரியே காவிரி பிரச்சனை அப்படியே இருந்தது. 600 வருட இந்திய அரசியலை ஓரிரு நாட்களில் சோ கேட்டுத் தெரிந்து கொள்ளும், முகமது பின் துக்ளக் திரைப்படக் காட்சி நினைவுக்கு வந்தது. பயணம் ஓர் அறிஞனை மேலும் அறிஞனாக்குகிறது; ஒரு பைத்தியக்காரனை மேலும் பைத்தியமாக்குகிறது.

- ஞானசேகர்

Sunday, February 04, 2018

அரசு அகராதிகள்

.
.
.
எத்தனைப் பொய்கள் முன்பு
என்னிடம் சொன்னாய் அம்மா

அத்தனைப் பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்
.
.
.
அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?
.
.
.
- ஞானக்கூத்தன் ('அம்மாவின் பொய்கள்' கவிதையிலிருந்து)


'இங்கு
Spokan English
கற்றுத் தரப்படும்'
என விளம்பரம் வைத்திருந்தார்கள்.

Spoken என்பதைத்
தவறாக எழுதியிருப்பதாகச் சொன்னேன்.

பேசமட்டும் தான் கற்றுத் தரப்படும்
எழுதுவதற்கல்ல என்றார்கள்.

- ஞானசேகர்

Wednesday, January 31, 2018

தூது

'வைகைக்கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
மன்னன் மனம் வாடுதென்று
மங்கைதனைத் தேடுதென்று
காற்றே! பூங்காற்றே!
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் 
காதோரம் போய் சொல்லு'
என்று 'உயிருள்ளவரை உஷா' திரைப்படத்தில், காற்றைக் காதலன் காதலிக்குத் தூதுவிடுவது போல் டி.ராஜேந்தர் பாட்டு எழுதி இருப்பார். தூது என்று ஒரு தனி சிற்றிலக்கிய வகையே தமிழில் உண்டு.

'ஆடையின்றி வாடையின் மெலிந்து

கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே'
என்று சத்திமுத்தப் புலவர் நாரையைத் தன் மனைவிக்குத் தூது அனுப்புவதைப் பள்ளிக்கூடங்களில் படித்திருப்போம். கிளி கண்ணாடி புகையிலை தமிழ் காக்கை என்று தமிழ் இலக்கியங்கள் தூதுவிட்டிருக்கின்றன. வடமொழியில் கூட தூது உண்டு. காளிதாசர் எழுதிய மேகதூதம் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதில் வரும் ஒரு கதையை உங்களுக்குச் சொல்கிறேன். அதை நீங்கள் பொது வெளியில் அப்பாவித்தனமாக மேற்கோள்காட்டி விடாதீர்கள். பிறகு சாமியார்கள் யாராவது உங்கள் மேல் சோடா பாட்டில் வீச நேரிடும். அதாகப்பட்டது, ரந்திதேவா என்ற அரசன் தினமும் 2000 பசுக்களைக் கொன்று அனைவருக்கும் உணவிட்டதால் நாட்டு மக்களிடம் நற்பெயர் பெற்றிருந்தானாம். அப்படி வெட்டப்பட்ட பசுக்களின் இரத்தம், இன்றைய சம்பல் நதியாக ஓடுகிறதாம். ரந்திதேவனுக்கு மரியாதை செலுத்தச் சொல்லி, காதல் தூதைச் சுமந்து போகும் மேகத்திற்கு யக்சன் ஒருவன் சொல்வதாக, மேகதூதத்தில் சொல்கிறார் காளிதாசர்!

ஆளுகின்ற அரசனுக்கு மேகம் தூது போயிருக்கிறது! மக்களாட்சியில் சினிமாக்காரர்கள் கிரிக்கெட்காரர்கள் சாமியார்கள் பணம் கலவரம் என ஆட்சியாளர்கள் மக்களுக்குத் தூதுவிடுவதுண்டு. ஆனால் நமது ஆட்சியாளர்களைப் பார்த்து நம் கஷ்டங்களைச் சொல்வது மக்களாட்சியில் சாத்தியமில்லை. பஞ்சம் என்றால், மத்திய குழு வந்து, நிவாரணம் சொல்லி, நிதி கைக்கு வரும்போது ஒன்றும் மிஞ்சாது; வெள்ளம் என்றால், சொட்டு நீர் கூட தன்மேல் படாமல் மேற்பார்வையிட்டு போகிறார்கள்; புயல் என்றால், அது ஆப்பிரிக்காவை எல்லாம் கடந்தபின் இருபது நாள் கழித்து வருகிறார்கள்; சுனாமி என்றால் ஹெலிகாப்டர் மட்டும்தான். சரி இப்படி தூது அனுப்பி செய்தி சொன்ன நம் முன்னோர்கள் போல், நம் காலத்து ஆட்சியாளர்களுக்கு எப்படியாவது தூது அனுப்ப முடியுமா என்று ஒருநாள் யோசித்தேன். விளைவு இக்கிறுக்கல்கள்:

(ஓகி) புயல்
குஜராத்திற்கு வராமல்
குமரிக்கு மட்டும் போனதால்
தேர்தலுக்குப் பின் வருகிறோம்
புயலுக்குப் பின்னான அமைதி குலைக்க.


துகில்
ஒபாமா பக்கத்தில்
எட்டு லட்சம் கோட்டு போட்டு
ஒய்யாரமாய் நிற்பது கண்டு
துகில் கலைந்து
நிர்வாணமாய்த் திரும்பியது
காந்தியின் கைத்தறி.


மான்
மான்கள் நாங்கள்
கான்கள் நீங்கி
தூதுகள் போயின்
இராமன்கள் துரத்தும்
கான்கள் கொல்லும்.


தென்றல்

தெற்கில் இருந்து
வீசிய தென்றல்
மன்றத்தில் மன்றாடிவிட்டு
திரும்பியது வடக்கில் இருந்து
இந்தி வாடையாய்.


நெஞ்சு

வெந்து விழுந்து
முறிந்து உருகி
கருகி அடங்கிய‌
குஜராத் முஸ்லிம்கள்.
நின்று சிரித்து
வென்று நடக்கும்
ஐம்பத்தாறு அங்குல கவசம்.


மேகம்
எப்போதாவது இந்தியாவிற்கு வந்துபோகும்
அயல்நாட்டு விமானப் பயணங்களில்
போராட்டங்கள் போல்
திரண்டு திரிவதால்
கர் வாப்சி செய்து
திருப்பி அனுப்பப்பட்டன‌
கைலாசத்திற்கும்
வைகுண்டத்திற்கும்
கருந்தோல் மேகங்கள்.

-  ஞானசேகர்

Monday, January 29, 2018

சாணக்கியன் in Digital (H)India

வாஜ்பாய்க்கு மகிழ்ச்சி
சாதுக்கள் எப்போதும்
சாதுவாய் இருப்பது
- வைரமுத்து

Based on true events.....

பத்து இலட்சம் செலவு செய்
தெர்மோகோல் ஆடை செய்
ஆவி ஆகாது வைகையாறு மூடு
மங்குனி மந்திரி மதுரையில் என்பார்கள்

ஒன்றரை கிலோமீட்டர் சேலை நெய்
கோதாவரி மூடச் செய்
ஆற்றைத் தாயே என்று சொல்லிவை
கோதாவரி காத்த கோமகன் என்பார்கள்


குரங்கு மனிதனானதை யாரும் கண்டிலர்
டார்வின் சொன்னது பொய்யெனச் சொல்
அறிவியல் அறியா அமைச்சர் என்பார்கள்

யானைத்தலை மனித முண்டத்தில் ஒட்டிய அற்புதம்
அகில இந்திய அறிவியல் மாநாட்டில் சொல்
அகில உலக மாநாடுகளுக்கும் உன்னையே அழைப்பார்கள்


ஊருக்கு வெளியே மகிளா பவன் கட்டு
மாதவிலக்கானவளை அங்கு போய் தங்கச் சொல்
காட்டுமிராண்டிகள் காலத்தில் கர்நாடகம் என்பார்கள்

ஒற்றை நாடென்று ஒரே வரியில் சொல் (GST)
பெண்மையே தெய்வீகக் காட்சியடா என்று முழங்கு
பெண்ணின் நாப்கினுக்கு விலையேற்றி தூரமாக்கலாம்


கடல்நீரின் உப்பு நீக்கி நன்னீராக்கு
லிட்டர் குடிநீர் பத்து ரூபாய்க்கு விற்கச் சொல்
டாஸ்மாக் மூடிவிட்டு மறுவேலை பார் என்பார்கள்

ஏதோ நீர் பிடித்து பாட்டிலில் நிரப்பு
தபாலில் கங்காஜல் என்று சொல்
தபால்துறை தழைப்பது காண்பாய்


வாரிசையோ உறவையோ சிபாரிசு செய்
ஓய்வுபெறும் தோட்டிகளுக்குச் சட்டம் செய்
மலத்தில் மூழ்குகிறது மராட்டியம் என்பார்கள்

கடவுளுக்குச் செய்யும் தொழிலென்று சொல்
சுத்தமாய் இருக்க வரிகள் விதி
தோட்டியும் தோட்டியாகவே இருக்கக் காண்பாய்


சுரபி நந்தினி காம‌தேனு வேதங்களில் இல்லை
பசுவுக்கென்று தனியே கடவுளோ கோவிலோ இல்லை
உன் புராணமே உன் பசுவின் வாய் தீட்டு என்கிறது
என் மாட்டை நான் தின்றால் உனக்கென்ன என்பார்கள்

இப்படி வசமாக மாட்டிக் கொண்ட‌ சமயங்களில்
காசுவாங்கி மிஷனரிகள் சதியென்று சொல்
கேட்டவனைப் பாகிஸ்தான் போகச் சொல்
ஓர் இஸ்லாமியனையோ தலித்தையோ தூக்கிலிடு


தாய்மொழி கட்டாயமாக்கு
கிணற்றுத் தவளைக் கல்விமுறை என்பார்கள்

சமஸ்கிருதம் தேவபாஷை என்று பரப்பு
இதோ படிக்கிறோம் இந்தி என்பார்கள்


அரசு செலவில் இரட்டை இலை கட்டு
பறக்கும் குதிரையென‌ மறுதலிக்கச் செய்வார்கள்

ஊர் கூட்டித் தேரிழுத்து மசூதி இடி
கோவில் கட்ட ஓட்டுப் போடுவார்கள்


ஏழை வீட்டில் குறியிட்டு வை
யூதன் வீட்டில் நாசி வைத்த குறி என்பார்கள்

உலர்பனி விலைக்கு வாங்கி இல்லாத சாமி செய்
கோமகன் ஆட்சியைச் சொர்க்கம் என்பார்கள்


இமயக்கல் கங்கைவழி வந்து கண்ணகி சிலையானது கிடக்கட்டும்
கங்கைக் கரையில் வள்ளுவனுக்குச் சிலை வைத்து முக்காடிடு

விவசாயிகள் அம்மணமாய்ப் போராடட்டும்
நிர்வாணச் சாமியாரைச் சட்டசபைக்குக் கூப்பிடு

கீழடி கிடக்கட்டும்
தாஜ்மகாலுக்குக் கீழ் சிவன்கோவில் மீட்டெடு


கேள்விகள் கேட்கப்படும் முன்
தவறான பதில்கள் பரப்பிவிடு
சொல்லும் ஒவ்வொரு பொய்யிலும்
கொஞ்சம் உண்மை தெளி
செய்யும் ஒவ்வொரு செயலிலும்
கொஞ்சம் மதம் தூவு.

- ஞானசேகர்
(சந்தத்திற்காக இக்கவிதையில் ஒருவரி 'சதுரங்க வேட்டை' திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்டது)

Wednesday, January 24, 2018

சாதிக்காளைகள்

இன்னின்னார் காளை என்பது
இன்னின்ன சாதிக்காரன்
அடக்கக்கூடாது என்பதற்கும் தான்.

- ஞானசேகர்

Monday, January 22, 2018

யாத்திராகமம்

போக்குவரத்து நெரிசலில்
நட்ட நடுவில் மாட்டிக் கொண்ட‌
வாகனத்தில் வாசித்தேன்
'என் சமூகம்
உனக்கு முன்பாகச் செல்லும்'.

- ஞானசேகர்

Saturday, January 20, 2018

சங்கறுக்கும் நக்கீரனோ?

(எதனையும் அதனதன் இயற்பெயரால் அழைப்பதே ஞானத்தின் ஆரம்பம் என்கிறது ஒரு சீனத்துப் பழமொழி. சில நேரங்களில் இயற்பெய‌ர்கள் மதச்சாயல் கொண்டிருப்பதுண்டு. அதனால் அந்த இயற்பெயர்களைச் சொல்லி, எளிதாக‌ மக்களிடையே வெறுப்பை விதைப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் ஆட்சி மன்றத்தில் இருப்பவர்கள் என்பதும், அவர்களின் இலக்கிற்கு இத்தேசத்தின் அப்பாவி மக்கள் பலியாகி விடுகிறார்கள் என்பதும் நமக்கான சாபம் என்பேன்)

எட்விகி அண்டோனியா அல்பினா மையினோ
என்றே மேடைகளில் முழங்கினார்கள்
அரசியலுக்கு வந்த‌ சோனியா காந்தியை!

ஜேம்ஸ் மைக்கேல் லிண்டோ
என்றே நீட்டிச் சொன்னார்கள்
கேட்ட நேரத்தில் தேர்தலை அனுமதிக்காத ஆணையரை!

ஜோசப் விஜய்
என்று மெர்சலாக்கினார்கள்
ஒரு திரைப்பட நடிகரை!

திலீப் குமார்
என்று திரும்பி வரச் சொன்னார்கள்
ஏ ஆர் இரகுமானை!

அப்துல் ஹமீது என்றார்கள்
மனுஷ்யபுத்திரனை!

நீளும் பட்டியலில் இன்று
விக்டர் ஜேம்ஸ் என்று பரப்பிவிடுகிறார்கள்
வைரமுத்துவை!

நாளை
இக்கவிதை எழுதியவன்!

நாளை மறுநாள்
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று
பாகிஸ்தானையும் சேர்த்துச் சொன்ன‌
கணியன் பூங்குன்றன்!

- ஞானசேகர்

Thursday, January 18, 2018

சுடப்படும் வெண்சங்கு

பாருங்கள் இந்தப்
பகுத்தறிவுப் பகலவன் யோக்கியதை!
வீட்டை விட்டு ஓடிப் போனவனை
முதலில் தேடி இருக்கிறார்கள் தாசிகளின் வீட்டில்!

அவர் உரக்கப் பேசிக் கொண்டிருந்தார்
சாமிகளை எதிர்த்த ஈரோடு இராமசாமியைத் திட்டியும்
சாமிகளைச் சொல்லி காந்தியைக் கொன்றவர்களைப் பாராட்டியும்!

நீங்களும் அவரைச் சந்திக்க நேர்ந்தால்
தயவுசெய்து ஞாபகப்படுத்துங்கள்:

தாசிகள் வீடெல்லாம் தேடினார்கள்
பெரியார் அங்கில்லை
காசிக்குப் போயிருந்தார்

காந்தியைக் கொல்லப் போன ஒருவன்
காரியம் முடிந்தவுடன்
காசிக்குப் போகவில்லை
தாசி வீட்டில் பிடிபட்டான் என்று.

- ஞானசேகர்