புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Thursday, July 25, 2019

தொல்லுலகில்

அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழையில்
நல்லார் பலரின் மரணங்கள்.

- ஞானசேகர்

Monday, July 22, 2019

கர் வாப்ஸி

மீண்டும் பிறந்து
வா தலைவா

நம்ம சாதியிலேயே!

- ஞானசேகர்

Monday, June 17, 2019

எதைப் பார்த்து வளர்கிறோமோ அதுவே வாழ்க்கையாகிப் போகிறது

டிவியில் கிரிக்கெட்
இடையில் விளம்பரம்
அதில் ஒருவன் டிவி பார்க்கிறான்
தமிழ்ப்பாடல் ஒலிக்கிறது
தலை வலிக்கிறது
ஆன்லைனில் மாத்திரை
10% தள்ளுபடி

- ஞானசேகர்

Wednesday, June 05, 2019

மனதின் குரல்

555
சமர்
சத்யா
திரைப்படங்களின் வில்லன்கள்
மிகவும் ஆபத்தானவர்கள்

நாயகர்களை அவர்கள்
உடலில் உதைப்பதுமில்லை
வெட்டிக் கொல்வதுமில்லை
அண்டி வருவதுமில்லை

சீசரின் மனைவி போல‌
சந்தேகத்திற்கு அப்பால்
இருந்து கொள்கிறார்கள்

நாயகர்கள்
எப்போது சிரிக்க வேண்டும்
எவ்வளவு கண்ணீர் வடிக்க வேண்டும்
யாரைச் சிநேகிக்க வேண்டும்
யார்யாரை வெறுக்க வேண்டும்
எதை நுகர வேண்டும்
எதைப் புசிக்க வேண்டும்
எதைப் புணர‌ வேண்டும்
யாரை அடிக்க வேண்டும்

எந்த வரிசையில்
எத்தனை கொடுத்து
எவ்வளவு நேரம் நிற்க வேண்டும்

யார் கதாநாயகன்
யார் வில்லன்
எல்லாவற்றையும் வில்லன்களே தீர்மானிக்கிறார்கள்
நாயகர்களின் புத்தியில் அமர்ந்தபடி

நம் அன்றாட வாழ்விலும்
அவர்களைக் காணலாம்

மஞ்சள்நிற உடையுடன்
விசில் போடச் சொல்லியபடி

நீலநிறச் சட்டையுடன்
யூடியூப் வீடியோவில் பேசியபடி

பிரதமர் அலுவலகத்தில் இருந்து
ஆல் இந்தியா ரேடியோவில் பேசியபடி

உங்கள் கையடக்கச்
செல்பேசியில் எங்கும் நிறைந்தபடி

- ஞானசேகர்

Tuesday, June 04, 2019

ஆன்டி இண்டியன்

சந்தையின் சந்தடியில்
திருடன் என முதலில் கத்துவது
திருடர்கள் இயல்பு.

- ஞானசேகர்

Sunday, June 02, 2019

தாய்லாந்து

'ஒரு கையில் மதுவும், ஒரு கையில் மாதுவும் இருக்கும்போது என் உயிர் பிரிய வேண்டும். இல்லை என்றால்? இல்லை என்றால், என்ன வாழ்க்கை வாழ்ந்தாய் என்று என்னைப் படைத்த இறைவன் கேட்பான்' என்று கண்ணதாசன் சொல்வார். ஒரு கையில் மதுவும் இன்னொரு கையில் மாதுவும் என்ற கண்ணதாசன் கனவையும், கொஞ்சும் மாதரும் கூட்டுண்ணும் கள்ளும் இச்சகத்தினுள் இன்பங்களன்றோ என்று பாரதி பாடிய போகியின் கனவையும் இந்தியர்களுக்கு மிக அருகில் நனவாக்கிக் காட்டும் தேசம் தாய்லாந்து! நாட்கணக்கில் விரும்பிய பெண்ணை வாடகைக்கு எடுத்து, வேண்டியதை எல்லாம் செய்து கொள்ளும் வசதியும் உண்டு. கடற்கரை, மது, இரவாட்டங்கள், மசாஜ், மாது அல்லது திருநங்கை, இன்னபிற இன்னபிற தான் தாய்லாந்து. எனது பயணம் இவை எல்லாம் அற்றது. அதாவது 'என்ன வாழ்க்கை வாழ்ந்தாய்?' வகை. தாய்லாந்து பற்றி தமிழில் வந்திருக்கும் சில பயணப் புத்தகங்களும், 'தேவதைகளின் தேசம்' என்பது போன்ற தலைப்புகளில் தான் இருக்கின்றன. உள்ளுக்குள் சொல்லப்படும் கருத்துகள் எல்லாம் ஒன்றுதான். 'தேவிடியாக்களின் தேசம்' என்று தலைப்பு வைக்க முடியாது இல்லையா! அறிவுடை மாந்தர் இந்த சாதியில் தான் பிறப்பர், தீவிரவாதிகள் இம்மதத்தில் தான் இருப்பர் என்பது எவ்வளவு அறீவினமோ, அப்படிப்பட்டது தாய்லாந்தைப் பற்றிய இந்தியர்களின் பார்வை!

பிரிந்த (பிறந்த அல்ல‌) நாள் ஒன்றில் தோழி ஒருத்தி எனக்கு மூன்று ஆங்கிலப் புத்தகங்கள் பரிசளித்தாள். அதில் ஒன்று தாய்லாந்து சுற்றுலா புத்தகம். தூக்கம் இல்லாமல் புரண்டு புரண்டு படுத்த இரவுகளில், பலமுறை அப்புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தேன். எந்த இடமும் என்னை ஈர்க்கவில்லை. கபாலி படமெல்லாம் வந்துபோன பிறகு, ஒரு சென்னை புத்தகத் திருவிழாவில், இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுக்கு அடிமையாக தாய்லாந்தில் இரயில்பாதை அமைக்கப் போன மலேசியத் தமிழர்கள் பற்றி இரு புத்தகங்கள் கண்டேன். ஒன்றை வாங்கி வந்து படித்தால் (சயாம் - பர்மா மரண இரயில்பாதை: மறக்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு by சீ. அருண்), தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இவ்வளவு பெரிய கொடுமைகள் எப்படி இத்தனை நாள் எனக்குத் தெரியாமல் போனது? இவ்விரண்டு புத்தகங்களையும் சேர்த்து, இன்னும் கொஞ்சம் இணையத்திலும் தேடி தாய்லாந்து பயணம் அமைத்துக் கொண்டேன். http://thulasidhalam.blogspot.com/ ல் மாரியம்மன் கோவில் பற்றி தெரிந்து கொண்டேன். https://www.solobackpacker.com/ ல் சதூர்ச்சக் சந்தை பற்றி தெரிந்து கொண்டேன். தேடுகிறவன் தான் கண்டடைகிறான் என்பதற்கேற்ப, தாய்லாந்தின் அதீத வெளிச்சத்தில் மங்கிப் போன சுகோதாய் நகரம், என் தேடல்களில் வந்தது.

மொத்தம் ஒன்பது பகல்கள். எட்டு இரவுகள். நான்கு இரவுகளில் ஓரிடத்தில் தங்காமல் இரயில்களில் பயணித்துக் கொண்டேன். நான்கு தொலைதூர இரயில்கள். நான்கு குறுந்தூர இரயில்கள். இரண்டு வாடகை சைக்கிள்கள். பேருந்து, ஆற்றுப் படகு, கால்வாய்ப் படகு, பறக்கும் இரயில், பாதாள இரயில் போன்றவற்றில் பயணித்தவற்றை எண்ணிக் கொள்ளவில்லை. கார் மற்றும் டாக்சிகளைப் பயன்படுத்தவே இல்லை. இயல்பிற்கு அதிகமாகவே நடந்திருக்கிறேன். ஏழு ஊர்கள். அதில் ஓர் ஊரில் ஒரேயொரு இந்தியத் தெலுங்குப் பயணியைக் கண்டேன். நான்கு ஊர்களில் இந்தியர்களையே கண்டிலேன். என்னுடன் பயணிக்க நான் எடுத்து சென்ற புத்தகம் - வால்காவிலிருந்து கங்கை வரை.

மே 17 ஒட்டிய நாட்களில் மெரினா கடற்கரையில் கருப்புச் சட்டையுடன் சென்றால் தமிழ்நாட்டில் எப்படி அரசுக்கு எதிராக அர்த்தம் உள்ளதோ, அதே போல் தாய்லாந்தில் இருக்கும் அரசுக்கு எதிரான சில நிறங்கள் பற்றிய தகவல்களை, இணையத்தில் இன்றுவரை நான் படித்தறியாத அந்நிறங்கள் பற்றி எனது பயணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் நண்பன் குமரன் சொன்னான். இரயில்களில் கழிவறையில் தண்ணீர் பீச்ச, கைகளில் அழுத்துவதற்குப் பதிலாக கால்களில் அழுத்துவது போல் அமைத்திருப்பது சுகாதாரமான யோசனை. சில இரயில்களின் சன்னல்கள் மேலிருந்து கீழ் நோக்கித் திறப்பது போல் அமைத்திருப்பது புரியவில்லை. 750 ஸ்பேர் பார்ட்ஸில் ஓடாத நம்மூர் லாரிகள், முன்னால் தொங்கும் எலுமிச்சம் பழத்தில் ஓடுவது போல, தாய்லாந்தில் சில‌ லாரிகளுக்குப் பின் செம்மறியாட்டு விதைப்பை போல் ஒன்றைக் கட்டி இருக்கிறார்கள். அரண்மனைக்கு எதிரில் ஒரு ரோட்டுக் கடையில் போளி நன்றாக இருக்கும். மேற்குக் கரையில் இருக்கும் புத்த கோவிலில் யானை மேல் அமர்ந்திருக்கும் உருவம், சாட்சாத் இந்திரன் தான். சுராசக் மெட்ரோ நிலையத்திற்கு அருகில் தமிழ்ச் சாப்பாடு கிடைக்கும். நாம் டாக் நகரத்திற்கு எப்படி செல்வது? ஆற்றுப் படகு போக்குவரத்தில் வெளிநாட்டவர்களிடம் எப்படி கொள்ளையடிக்கிறார்கள்? இப்படி உங்களுக்குத் தேவையில்லாத தகவல்களைச் சொல்லி பதிவை நீட்டப் போவதில்லை. தேவைப்பட்டால் என்னிடம் கேட்கலாம். சில அனுபவங்கள் மட்டும் சொல்கிறேன்.

1. தாய்லாந்தில் முதல் நாள். கொடிய வெயில். நான் செல்ல வேண்டிய இரயில் எட்டு மணிக்குத் தான். நான்கு மணிக்கே இரயில் நிலையம் வந்துவிட்டேன். ஒரு மூதாட்டி தனியாக அமர்ந்திருந்த ஓர் இருக்கையில் நானும் அமர்ந்து கொஞ்சம் தூங்கிவிட்டேன். விழித்த பிறகு அம்மூதாட்டி ஏதோ சொன்னாள். புரியவில்லை. மற்றவர்களும் என்னை அடிக்கடி பார்த்துக் கொண்டார்கள். குழப்பத்துடன் எழுந்து போய், சிறுநீர் கழித்துவிட்டு, வேறொரு இருக்கையில் அமர்ந்தேன். அப்போது தான், நான் முன்னர் அமர்ந்திருந்த இருக்கையின் மேலிருந்த பலகையைக் கவனித்தேன். அது புத்தத் துறவிகளுக்கான இருக்கை. அப்போது ஒரு துறவியும் அங்கு அமர்ந்திருந்தார். தெரியாமல் செய்த தவறுக்காக அதிகம் யோசிக்காமல், கையில் இருந்த புத்தகத்தைத் தொடர்ந்து படித்தேன். இரயில் நிலையங்களில் ஆறு மணிக்குத் தேசிய கீதம் ஒலிபரப்பும் வழக்கம் தாய்லாந்தில் உண்டு. அன்றும் ஒலிபரப்பினார்கள். தாய்லாந்து மக்களுடன் நானும் எழுந்து நின்றேன். புரியாத கீதம் என்றாலும், சக மனிதனின் நம்பிக்கைக்கு மரியாதை கொடுக்க பெரியார் சொல்லி இருக்கிறார். எல்லாரும் எழுந்து நின்றோம், அந்தத் தனி இருக்கையில் அமர்ந்திருந்த‌ துறவி தவிர. தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவர்கள் துறவிகள்!

2. For Country, Religions, Monarchy and People என்பதுதான் தாய்லாந்து அரசின் கொள்கை. வரிசையைக் கவனிக்கவும். மக்கள் கடைசி. தாய்லாந்தில் மன்னர், புத்தர், துறவிகளுக்கு மரியாதை அதிகம். நான் சென்ற நேரத்தில் தான் அடுத்த மன்னர் முடி சூட்டிக் கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. மறுவாரம் இன்னொரு திருமணம் செய்து கொண்டு முடி சூட்டிக் கொண்டார். முடி சூட்டிய நாளில் பேருந்து, நகர்ப்புற இரயில்களில் இலவசமாக பயணிக்க முடிந்ததாக அன்று அங்கு இருந்த ஒரு நண்பன் சொன்னான். நான் வாசித்துக் கொண்டிருந்த ஒரு புத்தகத்தைத் தாய்லாந்து போவதற்குச் சில வாரங்களுக்கு முன்னர் பாதியிலேயே நிறுத்திக் கொண்டேன். அப்புத்தகத்தில் வரும் ஆட்சியாளனின் பல போக்குகளில் நமது காவி பிரதமர்தான் அடிக்கடி நினைவில் வந்து போனார். அத்தாக்கம் தாய்லாந்து மன்னர் மேல் வந்து, எனது பயணத்தில் இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக அப்படி ஒரு முடிவு. அப்புத்தகம் பற்றி புத்தகம் தளத்தில் விரிவாகப் பேசலாம்.

3. இரட்டைகிளவிகள் உலகமெங்கும் இரட்டை அர்ததங்களுக்கே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, குபுகுபு என்றால் இந்தோனேசியாவிலும், பூம்பூம் என்றால் தாய்லாந்திலும் கசமுசா; அதாவது கில்மா = மேட்டர். அதனால் இரட்டைக்கிளவிகளை நான் தவிர்ப்பதுண்டு. தாய்லாந்தில் train, rail, railway, station, gate, entrace போன்ற வார்த்தைகள் அவர்களுக்குப் புரியவே இல்லை. சிக்குபுக்கு, கூக்கூ என்று நம்மூரில் சொல்லி புரிய வைக்கலாம். ஒரு நல்லுள்ளம் எவ்வளவு தடுமாறியது என்று புரிகிறதா?

4. ஓர் அனுபவம் என்னை இப்படி ஒரு சிறுகதையை தொடங்க வைத்தது:
தாய்நாடு போல் இருந்தாலும், அது என் தாய்நாடு இல்லை. மலை நகரத்தில் அக்கோவில் இருந்தாலும், அது சபரிமலை இல்லை. அக்கோவில் சாமியும் அமர்ந்திருந்தாலும், அச்சாமி அய்யப்பன் இல்லை. அச்சாமிக்கும் சரணம் சொன்னாலும் அச்சாமி அய்யப்பனே இல்லை. அச்சாமி இல்லாமல் அய்யப்பனும் இல்லை.

மனிதத்திரளில் பாதியான பெண்ணைக் கோவிலுக்குள் அனுப்பச் சொல்லி நானும் இப்படி ஒரு சிறுகதை எழுத வேண்டுமா? இதுவரை சொன்னவைகள் போதாதா?
'சொற்குருக்கள் ஆனதும் சோதிமேனி ஆனதும்,
மெய்க்குருக்கள் ஆனதும் வேணபூசை செய்வதும்,
சற்குருக்கள் ஆனதும் சாத்திரங்கள் சொல்வதும்,
செய்க்குருக்கள் ஆனதும் திரண்டுருண்ட  தூமையே'
என்று அக்கால சிவவாக்கியம் சொல்கிறது.
'தீட்டென்பவனை
நாப்கின் கழற்றி
அவன் வாயில் அடி
நினைவிற்கு வரட்டும்
அவன் பிறப்பு'
என்று தற்கால புதுக்கவிதை சொல்கிறது. மையல், சமையல் அறைகளை விட்டு பெண்கள் வெளிவந்து தமக்கானதைத் தானே பெற்றுக் கொள்ளாத வரை, எங்கோவொரு மலையுச்சியில் இருக்கும் ஒரு சாமியை வைத்து, டெல்லியில் இருந்தும் கூட‌ யார் வேண்டுமானாலும் அரசியல் செய்ய முடியும்!

5. தாய்லாந்தில் இருந்து தாய்நாட்டிற்குத் திரும்பும்போது, விமான நிலையத்தில் என் பாஸ்போர்ட்டைப் பரிசோதித்த இமிக்கிரேஷன் காவல் அதிகாரி கிண்டலாகக் கேட்டார்: 'From India? hmm hmm பூம் பூம்  ha?' . தன் நாட்டுப் பெண்களை ஒரு நாடு வேசிகளாகப் பயன்படுத்துவதில் அவர்களுக்கு என்ன பெருமை என்று தெரியவில்லை!

நான் எடுத்த புகைப்படங்கள்:

https://photos.app.goo.gl/ffTAgneQWwG9ppMk6

https://photos.app.goo.gl/ThQA4XMWf6kQSxfA9

https://photos.app.goo.gl/ByiZMTqXaLMWNNsk6

https://photos.app.goo.gl/6PJRN1EQmiCBHVB78

https://photos.app.goo.gl/3BPCfgdCjcNS1NMm9

https://photos.app.goo.gl/PExxJPtzJLFHgbje7

https://photos.app.goo.gl/KZ2PdQafYiwQkJQV8

https://photos.app.goo.gl/eqktgU4nF16sa4zJ9

https://photos.app.goo.gl/7ARvqSQWMPmkLzFR8

https://photos.app.goo.gl/Qcavp6YMBG7KaMKf7

https://photos.app.goo.gl/fWX6gquDu6KNA49u7

https://photos.app.goo.gl/XS8eNHnzD2teY9ML7

https://photos.app.goo.gl/Bcn2wBzy7s9HyGVa9

https://photos.app.goo.gl/hCkpJ7jxBxhJcVc78

https://photos.app.goo.gl/BU3LgdzJGkY2zciJA

https://photos.app.goo.gl/Vcqxuod8K1TkjJZL6

https://photos.app.goo.gl/298psDXKW3hnJ2eu7

https://photos.app.goo.gl/ARPD6LsQ4ErRdfXe8

https://photos.app.goo.gl/WqSWk1vihiTUUDB16

https://photos.app.goo.gl/b9kYRGsT977YhCP79

https://photos.app.goo.gl/mkF6KG4JkVaXKnUo7

https://photos.app.goo.gl/gW6nHNTyGLjmZ1SM7

https://photos.app.goo.gl/Rv831GSXv11kGiieA

https://photos.app.goo.gl/HNBgcrpG3aN1nL4g6

https://photos.app.goo.gl/naaW6t2GgdPSV7gA6

https://photos.app.goo.gl/DYgicP5R9qGXoceMA

https://photos.app.goo.gl/JQkQNw6C6JobL2Kz5

https://photos.app.goo.gl/xt4v2VtdyB6dKfvC9

https://photos.app.goo.gl/BPEpEBCFqYHgoQJT6

https://photos.app.goo.gl/bdQ3Er7wfrCBCBCEA

https://photos.app.goo.gl/KhUbrq1Fwm4YGqTM6

https://photos.app.goo.gl/1qpdove6kVzo1iEz5

https://photos.app.goo.gl/DXpL2EYuDi7BH45w6

https://photos.app.goo.gl/VYtoRtDBfDuavAPb9

https://photos.app.goo.gl/8QS35G9Dpu9zgZWs5

https://photos.app.goo.gl/dt4pjtc3w4Un3N9t8

https://photos.app.goo.gl/3MVBMBtMgTxwkww19

https://photos.app.goo.gl/6AzYaLT5YjfmSN3RA

https://photos.app.goo.gl/iRv22VuAQ2pTMnbCA

https://photos.app.goo.gl/74WNqrHYc5HBtXJz8

https://photos.app.goo.gl/CDH1MThmAG1FdcEF9

எனது ஒவ்வொரு பயணத்தையும் முன்னதை விட கொஞ்சம் கடினமாக அமைத்துப் பார்ப்பவன் நான். இரவுகளில் தங்காமல் இரயில்களில் பயணித்ததும், பாஸ்போர்டை அடமானமாக வைத்து வாக்கி-டாக்கி போன்ற பாதுகாப்பு சாதனங்களுடன் காட்டிற்குள் தனியாகப் பயணித்ததும், மிக நீண்ட நாட்கள் ஓர் அந்நிய தேசத்தில் தனியனாய்த் திரிந்தும் இத்தாய்லாந்து பயணத்தில் அமைந்தன. உயர்சாதி இந்துக்களைத் தவிர மற்றவர்கள் இயல்பாகச் சுற்றித் திரிய முடியாத அரசு இருப்பதால் இந்தியப் பயணங்களைக் கொஞ்ச காலம் நிறுத்தி வைத்து, இதைவிடக் கடினமான அடுத்த அயல்நாட்டுப் பயணத்துடன் விரைவில் சந்திக்கிறேன்.

- ஞானசேகர்

Tuesday, January 08, 2019

ஆண்டவர்

கோயம்புத்தூர் பொன்ராசை விட‌
எல்லாம் தெரிந்தவர் பிக் பாஸ்.

எங்கு அரிக்கிறது விருமாண்டிக்கு
என்பதும் கூட.

– ஞானசேகர்