புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Saturday, May 30, 2020

மலர்ந்தே தீரும்

ப்ரஹ்மண்யாதாய கர்மாணி ஸங்கம் த்யக்த்வா கரோதி ய:।
லிப்யதே ந ஸ பாபேந பத்மபத்ரமிவாம்பஸா
‍- பகவத் கீதை 5:10

தாங்கும் திரள்களில்
தப்பி மேலேறும்
அசட்டுத் துளிகளை
உச்சியில் நிறுத்தி
எல்லையெல்லாம் உருட்டித் தாலாட்டி
நாடி நரம்பெல்லாம் தழுவி முறுக்கி
மின்னும் பல நிறங்களாய் ஒளியூட்டி
பரிசுத்த வடிவமாய்க் காட்டி பரப்பி
கசடெல்லாம் அவற்றோடு ஒட்டி ஒட்டி
காற்றலை மோதிச்
சாயும் சமயத்தில்
கோளவுரு கசட்டுத் துளிகளை
அலங்கோலமாய் மீண்டும்
திரளுக்குள் தள்ளுமாம் தாமரை!

-‍ ஞானசேகர்

Thursday, May 28, 2020

திரைமறைவுப்பிம்பம்

கௌரவத் தோற்றத்தில்
சில்க் சுமிதா

என ஆரம்பித்தது திரைப்படம்

என முடிந்தது கவிதை!

-‍ ஞானசேகர்

Tuesday, May 26, 2020

ஜான்ஸி ராணியும் ரசியா சுல்தானாவும்

Gupta & Daughters
என்ற பெயர்ப்பலகைக்காக‌
குப்தாவின் செய்தி ஊடகங்களில் வந்தது

& Sons காலத்தில்
பெண்களை மதிக்கும் குப்தாவை
அனேகர் likeகினர்
அனேகர் shareரினர்
அனேகர் commentடினர்
புகழ் பெற்ற குப்தா
வியாபாரம் பெருக்கினார்

Gupta & Daughters செய்திகளில்
குப்தாவின் மகன் பற்றிய
கவலை யாருக்குமில்லை
மகன் இருந்தானா?
இறந்தானா?
மூளைச்சாவடைந்தானா?
திரும்பி வந்தானா?
திருமணம் செய்தானா?
கவுரவமாக வாழ்ந்தானா?
கவுரவக் கொலையானானா?
குறைந்தபட்சம்
குப்தாவின் மறுமணங்களுக்காவது
குப்தாவின் மகன் துண்டுதலாய் இருந்தானா?
ஊடகங்கள் சொல்லவில்லை

உண்மையில்
குப்தாவைக் கொண்டாடும்
நமக்கான‌ செய்திகளில்
குப்தாவின் மகள்கள் பற்றிய‌
கேள்விகளும் யாருக்கும் இல்லை
எத்தனை மகள்கள் என்பதைவிட‌
குப்தாவைப் போலவே
குப்தாவின் மகள்களுக்கும் பெயர்களேயில்லை

எனவே
குப்தாவைக் குப்தா
நீக்கும் செய்தி தவிர‌
குப்தாவைப் பற்றி
வேறொன்றும் என்னை வசீகரிப்பதில்லை

குப்தாவைக் குப்தா
நீக்கும் நாளில்
குப்தாவைப் போலவே
குப்தாவின் மகள்களுக்கும்
பெயர்கள் கிடைக்கும் என்பதால்
ஒரு மகனுக்காக அவர் காத்திருக்கத்
தேவையில்லை என்பதால்
குப்தாவைக் குப்தா
நீக்கும் செய்திக்காக‌
நாமும் காத்திருப்போம்
குப்தாவின் மகள்களைப் போலவே!

- ஞானசேகர்

Sunday, May 24, 2020

அந்த இடத்தில்

அந்த இடத்தில்
ஒரு தகப்பன்
தாவணி மகளைத்
தொட மாட்டான்

தகப்பனான கதாநாயகன் சினமாக‌
கருத்து சொன்ன‌
உதவி இயக்குனன் வேலையிழந்தான்

அந்த இடத்தில்
தொட்ட திரைப்படம்
பெரும் வெற்றி பெற்றது

உதவி இயக்குனன்
இயக்குனன் ஆனான்
கதாநாயகன் ஆனான்
அந்த இடத்தில்
கதாநாயகியைத் தானே தொடும்
காட்சியும் வைத்து
பெரும் வெற்றி பெற்றான்

அந்த இடத்தில்
வெற்றி தொடும் கதாநாயகர்கள்
காலங்காலமாக வந்து கொண்டிருக்கிறார்கள்

அந்த இடத்தில்
இருந்த‌ கதாநாயகிகள்
காலங்காலமாக தொலைந்து போகிறார்கள்

- ஞானசேகர்

Friday, May 22, 2020

குந்தியிருந்த இடம்

காதல் சின்னமான‌
இதயத்தை ஒத்திருந்தது
அமர்ந்தெழுந்த இடத்தில்
கடற்கரையில் பதிந்த தடம்.

- ஞானசேகர்