புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Tuesday, February 10, 2009

இருக்குதடி பாப்பா

ஆறாம் வகுப்பு
சேர்க்கை படிவத்தில்
மகற்குத் தெரியாமல்
தந்தை ஆற்றும் உதவிக்கு
சாதி என்று பெயர்.

- ஞானசேகர்

Friday, February 06, 2009

நீத்தார் மேடு

ஏதோ ஒரு பாதம்
என்றோ சிந்திய
ஒருதுளி ரத்தம்
இன்று ஓர் ஒற்றையடிப்பாதை!
-இரகுமித்ரன் (எனது பல ஒருநாள் நண்பர்களில் ஒருவன்)

மன்னனின் தலைமகனையும், ஓவ்வொர் எகிப்தியரின் தலைமகனையும்,எகிப்தியர்களுடைய கால்நடைகள் ஈன்ற முதல் ஆண் குட்டிகளையும், கன்றுகளையும் கொள்ளை நோய்தாக்கி இறக்கச் செய்வேன்.
- விவிலியம் (பழைய ஏற்பாட்டில் மோசேயிடம் கர்த்தர்)


("நான்" என்ற கதாபாத்திரம் இல்லாத எனது முதல் சிறுகதை இது. பெண் கதாபாத்திரத்திற்குப் பெயர் உள்ள இரண்டாம் சிறுகதையும் கூட. பள்ளத்தைப் பற்றிய மேட்டின் கதையிது. பள்ளத்தில் கிடக்கும் தத்தம் மக்களை மேடேற்ற துடித்த இருவேறு மனிதர்களின் கதையிது. அதில் ஒருவனை, இக்கதையின் கடைசியில் ஒரு மேட்டில் கொண்டுபோய் நிறுத்துகிறேன். அங்கிருந்து நீங்கள் பள்ளத்தைப் பார்க்கும்போது, இன்னொருவனின் கதை உங்கள் மனக்கண்ணில் தொடங்கலாம்; தொடங்க வேண்டும்!)


வேப்பமரங்களின் (44+16)+(8+2)+(7+1)+(2+1)+(1+2)=84 கிளைநுனிகள் ஒடிபட்டன. குளங்களின் pH அளவு பூச்சியத்தை நோக்கி சற்று முன்னேறியது. அவ்வூரின் இரண்டு தெருக்களிலும், ஒரு மருதநில கிராமத்திற்கான அனைத்து நடவடிக்கைகளும் என்றும்போல அன்றும் நடந்துகொண்டிருந்தன. அவ்விரு தெருக்களுக்கு இடையே வில்லின் முதுகுபோல் தரிசுமேடு;அதன் முனைகளில் கட்டப்பட்டு இருந்தன சாதிகள். பல நாட்களாக முறுக்கிக் கொண்டிருக்கிற நாணில் அம்புதான் அம்புடவில்லை.

கீழத்தெரு மக்களைக் கீழோர் என்றும், மேலத்தெரு மக்களை மேலோர் என்றும் மனிதன் பிரித்துக்கொண்டான். என்றோ ஒருநாளில் திசைகளை வைத்து பெயர் சூட்டப்பட்ட அத்தெருக்களின் மேல்-கீழ் வித்தியாசம் தெரியாமல், என்றும்போல அன்றும் கீழத்தெரு மக்களை முதலில் தொட்டுவிட்டு, மேலத்தெருவிற்கு மெதுவாக நகர்ந்துபோனான் சூரியன். அவனுக்கு முன்னால் மூன்று அம்புகள் ஏற்கனவே புறப்பட்டுவிட்டன, விடியலைத் தேடி சூரியனுக்கு எதிர்திசையில்.

கீழத்தெருவைச் சேர்ந்த மூன்று வாலிபர்கள், மேலத்தெருவின் குருசடி அருகே சைக்கிள் ஓட்டிக்கொண்டு வருவதை யாரும் கவனிக்கவில்லை. அதில் ஒருவன் மணி அடிக்கவும், கோலம் போட்டவர் - சாணி சுமந்தவர் - கோவில் திண்ணையில் அமர்ந்திருந்தவர் - தாய்மார்பில் பால் குடித்துக்கொண்டு இருந்த ஒரு குழந்தையைத் தவிர, வீதியோரம் இருந்த அனைவரும் திரும்பிப் பார்த்தனர். கோலம் போட்ட ஒருத்திக்காக அடிக்கப்பட்ட அந்த மணி, அவளைத் திண்ணைக்குத் துரத்தியது. கோவிலுக்கு அருகில், அந்த மூவரையும் மேலத்தெரு இளைஞர்கள் நான்கு பேர் மறித்தனர்.

இத்தனை நாள், தனக்கு முன்னால் செருப்பு போடாத - வேட்டியைத் தூக்கிக் கட்டாத ஒரு கூட்டம், இன்று சைக்கிளில் வந்ததால், வாய்த்தகராறு ஆரம்பித்தது. கூட்டம் அதிகமாவதைக் கண்டு, பாப்பாத்தியின் அய்யா அங்கு ஒடிவந்தார்.

"டேய் டேய் டேய் விடுங்கடா. கோயிலுக்கு முன்னாடி நின்னு பேசுற பேச்சாடா இது. அம்மா அக்கானுட்டு. அவன் சைக்கிள அவன் ஒட்டுறான். ஒங்களுக்கு ஏன்டா இந்தக் கோவம்? அவனுக மூத்தரம் ஆத்தடோ போன என்ன? கொளத்தோட போன என்ன? போயி சோலியப் பாருங்கடா".
"இவங்கள இப்புடியே விட்டா, நம்மல மேச்சிட்டுப் போயிடுவாங்க மாமா. அப்பறம் நம்ம வீட்டுக்குகுள்ளே வெந்தலபாக்கு தட்டோட வந்து பொண்ணு கேப்பானுங்க"
"ஆமாடா, சும்மா சைக்கிள் ஓட்டிக்கிட்டுப் போறவனுக்கு அடியெடுத்து குடுங்க".

மேலத்தெருவில் கொஞ்சம் படித்திருத்த பாப்பாத்தியின் அய்யா, கீழத்தெரு சைக்கிள்காரர்களுக்கு ஆதரவாகத்தான் பேசினார். அவர்மேல் இருசாரரும் வைத்திருந்த மரியாதையில், சொற்கள் மட்டும் மோதிக்கொண்டிருத்தன. அந்த மோதலையும் ஒரே ஒரு அலறல் சொல், முடித்து வைத்தது. அந்த சொல் "யய்ய்ய்யா"; சொன்னவள் பாப்பாத்தி. மொத்த ஊரும் பாப்பாத்தியின் வீடு நோக்கி ஓடியது. அகவிக்கொண்டிருந்த மயில்கள் அமைதியாயின. இந்நிகழ்ச்சிகள் எதிலும் சுவாரசியம் காட்டாமல், சூரியன் நகர்ந்து கொண்டிருந்தான்.

தாயில்லாத பாப்பாத்தி, முதன்முதலில் தாயாகப் போவதற்காகப் போட்ட சத்தம் அது. தன் ஒரே மகளான பாப்பாத்தியின் பேறுகாலத்திற்கு முன்னேற்பாடாக, சுற்றுவட்டாரத்தில் பிரசவத்திற்குப் பிரபலமான நான்கு கிழவிகளை ஒரு மாதமாக வீட்டில் தங்கவைத்துக்கொண்டுருந்தார் அய்யா. நான்கு கிழவிகளாலும் முடியவில்லை; பாப்பாத்தியின் தலச்சம்பிள்ளை இறந்தே பிறந்தது.

சைக்கிள்காரர்கள் மூன்றுபேரும், தங்கள் இயலாமையைக் காட்டிக் கொள்ளாமல், வயலுக்குச் சென்றனர். ஆர்ப்பரித்து ஆரம்பமான மேலத்தெரு அமைதியாய்ப் போனது. ஆளாளுக்கு எதையெதையோ பேசிக்கொண்டு இருந்தார்கள்.

"இருத்தாலும் மாமாவுக்கு இப்படி கர்த்தர் பண்ணக்கூடாதுய்யா. மருமகன் இப்பதான் சைனாகாரன் சுட்டு செத்தாரு; வருஷம் திரும்பல; அதுக்குள்ள இன்னொரு பெரியகாரியம். மாதாதான் காப்பாத்தணும்"
"எந்த நேரம் இந்த **** ** பயலுக சைக்கிள்ல ஏறுனானுகளோ?"
"இனாம் கிராமம் மொறைய சர்க்காரு தடை செஞ்சுருச்சுல்ல. அதான், அவனவனுக்கு வெள்ளாம நெலம் கெடைக்கவும், ரொம்ப ஆடுறானுங்க"

தலச்சம்பிள்ளையை வீட்டின் கொள்ளைப்புறத்தில் புதைத்து ஒரு மரம் நட்டுவைப்பதுதான் வழக்கம். பாப்பாத்தியின் அய்யா அப்படி செய்யவில்லை. தனது வேட்டியை உருவி, பேரனைச் சுற்றினார். யாரையும் துணைக்கு அழைக்காமல், தனியாகவே சென்று தனது பூர்வீக வயலின் ஏதோ ஓர் இடத்தில் புதைத்தார். புதைத்த இடம் தெரியாமல் இருக்க, வயல் முழுவதும், ஒருமுறை உழுதுபோட்டார்.

அய்யா வீடு திரும்பினார். சைக்கிள்காரர்களை எதிர்பார்த்து, சாயங்காலம் இளைஞர்களின் கூட்டம் ஒன்று மேலத்தெருவில் கூடி இருந்தது. அய்யா வீட்டில் நடந்திருந்த துக்ககாரியத்துக்காக, அவர்கள் சைக்கிளைத் தள்ளிக்கொண்டே சென்றார்கள். என்றோ ஒருநாளில் திசைகளை வைத்து பெயர் சூட்டப்பட்ட அத்தெருக்களின் மேல்-கீழ் வித்தியாசம் தெரியாமல், என்றும்போல அன்றும் கீழத்தெரு மக்களை முதலில் விட்டுவிட்டு, மேலத்தெருவிற்கு மெதுவாக நகர்ந்துபோனான் சூரியன்.

மறுமணம் வேண்டாம் என்று தகப்பனோடே தங்கிவிட்டாள் பாப்பாத்தி. இந்த ஆறுமாதங்களுக்குள், கீழத்தெரு மக்களின் சைக்கிள் பயணம், மேலத்தெருவில் அன்றாடமாகிப் போனது. சர்க்கார் தனது தெருவிற்குக் கரண்ட் கொடுத்தபொழுது, கீழத்தெருவிற்கும் வாங்கிக் கொடுத்தார் அய்யா. சைக்கிள், கரண்டு, பள்ளிக்கூடம், மண்ரோடு, பட்டா இப்படி பல விஷயங்களில் கீழத்தெரு மக்களுக்கு உதவிக்கொண்டு இருத்த அய்யாவை, மேலத்தெரு கவனித்துக் கொண்டுதான் இருத்தது. நாண் அப்படியேதான் இருக்கிறது; அம்புகள்தான் மேலதெருவிற்கு இடம்பெயர்ந்துவிட்டன.

தன் வம்சத்திற்கு ஓர் ஆண், ஒரு பெண் என மிச்சமிருத்த பாப்பாத்தி குடும்பத்தில், ஒரு நச்சுப்பாம்பு கடிக்க பாப்பாத்தியும் இறந்துபோனாள். ஒரே வருடத்தில் மூன்று பெரிய காரியங்கள். ஆனால் அந்த பெரிய மனுஷர், அய்யா, மனம் தளரவில்லை. மகளைக் கல்லறையில் புதைத்துவிட்டு வந்த கையோடு, தனது வயலில் ஒரு குண்டை ஒரு கீழத்தெரு குடும்பத்திற்குக் கொடுத்தார்.

சரி எழவு விழுந்த அன்றே பிரச்சனை செய்யக்கூடாது என்று மேலத்தெருவும் விட்டுப்பிடித்தது. பாப்பாத்தி இறந்த மறுநாள் அதிகாலையில், மேலத்தெரு வாலிபன் ஒருவன் தலைதெறிக்க ஓடிவந்தான். அவன் சொல்வதைக் கேட்டு, பாப்பாத்தியின் கல்லறை நோக்கி ஊரே ஓடியது. அய்யாவும் ஓடினார். கூட்டத்தை விலக்கிப் பார்த்தார். அவர் அருகில் போகாமல் இருக்க, சிலபேர் அவர் அருகில் தயாராக இருந்தனர்.

பாப்பாத்தியின் கல்லறை, தலைமாட்டில் தோண்டப்பட்டு இருந்தது. ஒருபக்கம் கழுத்தில் கத்தி குத்துப்பட்டு, ஒரு நரி செத்து கிடந்தது. மறுபக்கம், கையில் கத்தியுடன் வெறித்த விழிகளுடன் மண்ணைப் பார்த்துக்கொண்டு ஒருவன் உட்கார்ந்து இருந்தான். மேலத்தெரு பேச ஆரம்பித்தது.
"பொதச்சதுக்கப்பறம் முள்ளு போட்டிகளா இல்லையாப்பா?"
"பச்சமண்ணு வாசனக்கி நரி தோண்டிருக்கு பாருய்யா!"
"ஆளு புதுசா இருக்கான்; பாக்குறதுக்குக் குடுகுடுப்பன் மாதிரி இருக்கான்"

அருகில் போக எத்தனித்த அய்யாவைத் தடுத்தனர். "கொள்ளி போட்ட ஆளு, மொகத்த திரும்ப பாக்கக் கூடாது மாமா". ஒருவன் அருகில் போய், கல்லறைக்குள் எட்டிப் பார்த்துவிட்டு, முகமெல்லாம் தெரியவில்லை என்றான். அய்யா அருகில் சென்றார். தனி ஆளாகக் கல்லறையை மூடினார். கத்திக்காரனை வீட்டிற்குக் கூட்டிச் சென்றார். முன்னர் இவ்வூருக்கு வந்துகொண்டிருந்த குடுகுடுப்பனின் மகன் என்றும், அவர் இறந்துவிட்டதால் தான் தொழிலுக்கு வந்ததாகவும் சொன்னான். வேறு எதுவும் அவனிடம் கேட்கப்படவில்லை. அவனும் சாயங்காலம் ஊரைவிட்டுப் போய்விட்டான்.

அய்யாவுக்குத்தான் இப்பொழுது யாருமே இல்லை. நின்றுபோன சந்ததியின் கடைசி சாட்சியாக, தினமும் தனது மகளின் கல்லறையில் உட்கார்ந்துகொண்டு தனியாக பேசிக்கொண்டு இருப்பார். தனது அய்யா, ஆயா (அம்மா), செத்தேபிறந்த தனது அண்ணன், மனைவி, மகள் எல்லாருடனும் அய்யா இப்படிதான் பேசிக்கொண்டு இருக்கிறார்.

கொஞ்சம் என் கூடவே நீங்களும் சத்தம் போடாம வாங்க. அவர் பக்கத்துல போய் கொஞ்சநேரம் நிற்போம். "இந்தா தெரியுறது மேலத்தெரு. இந்த மேட்ட தாண்டி அந்தப்பக்கம் போனா கீழத்தெரு. ஒருகாலத்துல சண்டை போட இருந்த இந்த ரெண்டு ஊர்களையும் அய்யாதான் சமாதானமா வெச்சிக்கிட்டு இருக்காரு. இனிமே சண்ட வரவும் வாய்ப்பில்ல. இந்த ஊர்களுக்கு எடையில இருக்க இந்த மேட்ட, வருங்காலத்துல கவர்மெண்டு தூத்துப்புட்டு ரோடுகூட போடலாம். அப்ப ஊர்காரங்க சம்மததோட இந்தக் கல்லறையும் எடம் மாத்தப்படலாம். அதெல்லாம் நடக்கறப்ப, பாப்பாத்தி கல்லறைக்குள்ள, அவ தலக்கிப் பக்கத்துல ஒரு நைத்துபோன துணி இருக்கலாம். அதுக்குள்ள அவளோட தலச்சம்பிள்ளையோட மண்டஓடு இருக்கலாம். அத வெச்சவன தடுக்கப் போனதுக்காக, ஒருவன் அந்த எடத்துல கழுத்துல கத்தி குத்துப்பட்டு செத்துப்போய் இருக்கலாம்".

நாணில்லாமல் ஒரு வில்!

- ஞானசேகர்
(என் தாய்க்குத் தலைமகன்)

Tuesday, September 09, 2008

மனிதக்கோயில்

மதமென்னும் மதமோயட்டும் - வைரமுத்து

This world would never be at peace until the last Priest is strangled by the entrails of the last King - George Bernard Shaw


(என்றைக்கு நான்கு பேர் ஒருவனின் எழுத்தைப் படிக்கிறார்களோ, எதைச் சொல்லவேண்டும் எதைச் சொல்லக்கூடாது என்ற மிகப்பெரிய பொறுப்பு அவனுக்கு அன்றுமுதல் வந்துவிடுகிறது. அப்பொறுப்புள்ள ஒரு மனிதனாக, எந்தக் காலத்திலும் இறந்து தொலைக்காத ஒரு கருவை உங்கள் முன் வைக்கிறேன். எல்லா விஷயங்களையும் உள்ளது உள்ளபடி சொல்ல, எனது பெரும்பொறுப்பு என்னை அனுமதிக்கவில்லை. அதனால், இக்கவிதையின் தலைப்பு, கவிதைக்குள் வரும் இடத்தில் மட்டும், அதை ஆங்கிலப்படுத்திப் படிக்கவும்)

காலம்: அடுத்த கவிதையில் உள்ளவர்கள் இறப்பதற்கு முன் 15 ஆண்டுகள்

பசிக்கு அழுகும்
பச்சைக் குழந்தை.
ஆண்பெண் வித்தியாசம்
பின்னிரவில் அறிமுகமான
புதுமணத் தம்பதிகள்.
இடப்பக்கம் வளர்த்தவர்கள்
வலப்பக்கம் வளர்ப்பவர்கள்.

இந்நேரத்தில்
பாசம் பார்த்தால்
ஒரே இடத்தில்
918 பேர் விஷம் குடித்து
வரலாறு படைக்க முடியமா என்ன?

காலம்: போன மற்றும் அடுத்த கவிதைகளில் இறந்தவர்களுக்கு இடைப்பட்ட காலம்

ஒற்றை மயிரிழையில்
3 கிலோகிராம்
சுமக்கும் அற்புத மனிதன்!
சுமக்கும் பூமியைச்
சொற்பமாய் மிதித்து
துப்பாக்கிக் குழலுக்குள்
53 கிராமங்கள்!

சுட்டுச் செத்தால்
சொர்க்கம் கிட்டும்
அற்ப நம்பிக்கை!

அப்படியே ஆவதானாலும்
கைப்பிடி களிமண்
ஒருவனின் விலாவெலும்பு
கடவுளுக்குக் காலவிரயம்!

காலம்: போன கவிதையில் உள்ளவர்கள் இறந்தபின் ஓர் ஆண்டு

நொடிக்கு ஒருமுறை
15 மில்லியன் செல்கள்
அழித்து போகும்
அற்புத மனித உடலை
அனலுக்கு அர்ப்பணித்தனர்
அற்பமாய் 48 பேர்!

அடுத்த பிறவியில்
அற்புத வாழ்வை
அடையும் நம்பிக்கை!

அப்படியே அடைந்தாலும்
அவ்வுடலுக்கும்
100 டிரில்லியன் அற்புதங்கள்
நொடிக்கொருமுறை 15 மில்லியன்!

காலம்: ஒரிசா முதல் காஸா வரை பூமியை எப்படி சுற்றினாலும் மதம் நம்மைச் சுற்றும் காலம்

கோயிலுக்குள் மனிதனோ
மனிதனுக்குள் கோயிலோ
கும்பிடத் தவறில்லை
மனிதக்கோயில்கள்
மறுபடியும் தோன்றாதவரை!

சொர்க்கம் காட்டுவது
கடவுள் காட்டுவது
என்பதெல்லாம் பழைய கதைகள்!
நீயே சொர்க்கம்
நீயே கடவுள்
என்பதுதான் புத்திலக்கியம்!

இப்போதெல்லாம்
உயிருக்கு உத்திரவாதம்
பெரும்பாலும் இருப்பதாகப்படுகிறது.
உறுபொருள்
கன்னிமை
காலம்
சுயமரியாதை
ஆறாம் அறிவு
இவை பத்திரம்!

-ஞானசேகர்

Friday, September 05, 2008

ஆண்சிசுக்கொலை

எனது சுதந்திர எல்லைக்குள் எனது உரிமைகளின் எல்லையை மீறாமல் இதோ கடவுளுக்கான எனது இலக்கணக்குறிப்பு. இது நமக்கான இலக்கணக்குறிப்பு என ஏற்றுக்கொள்ளப்படும்போது, ஆயிரக்கணக்கான ஆண்களின் மூலம் தொலைந்துபோன தலைமுறைகளின் மதமற்ற ஆதரவு நமக்குண்டு.

காலம்: கிறிஸ்து பிறப்பிற்கு முன் 3ம் ஆண்டு, கிறிஸ்து பிறந்தபின் 33ம் நாள்

(இரண்டு மாதக்குழந்தை முதன்முதலாய்ப் பேச முடியாமல் அழுத வார்த்தைகள் இவை. மறு பிறப்பென்று ஒன்று இருக்குமெனில், நம்மில் ஒருவரின் குரலாகக்கூட இது இருந்திருக்கலாம்)

மார் முட்டி
பால் குடிக்கிறேன்
வெடுக்கென பிடுங்குகிறான்
மன்னனின் படைவீரன்.

கச்சை கழட்டி
பாலினம் பார்க்கிறான்
பொக்கை வாயில்
சிரிப்பைப் பார்க்கிறான்.

துள்ளிக் குதிக்குமுடல்
செஞ்சூடு உணர்கிறான்
கட்டற்று ஊற்றும்
சிறுநீர் உணர்கிறான்.

எல்லாருக்கும்
கழுத்தில் கீறினான்
எனக்கு மட்டும்
குறியில் கீறினான்.

கண்ணில் நீர் நிற்க,
வாயில் பால் நிற்க,
குறியில் குருதி நிற்க,
எனக்கான சந்ததி நிற்க,
தாயின் இதயம் நிற்க
அவன் நடக்கலானான்
அடுத்த ஆண்குறிதேடி.

ஆண்டு ஆயிரம்
காலம் ஓடியது.
ஆண்டு நூறு
போர் ஓடியது.
வயிற்றுக்கடுப்பில்
மலம் ஓடியது.
நூறு ஆயிரம்
உயிர் ஓடியது.

மக்கள் காக்க
கடவுள் வந்ததாய்
மதம் வந்தது.
மதம் காக்க
ஆண்டு நூறாய்ப்
போர் வந்தது.

ஆணாய் மட்டுமே
பிறப்பவன் கடவுளா?
ஆணாய்ப் பிறந்ததற்காக
கத்திமுனையில் கொல்லப்பட்டு
கடவுள் எனப்பட்டவனையும் காத்த
நாங்கள் கடவுளா?

அறிவு ஆறெனில்
கடவுள் யாரென
கட்டாயம் கண்டிருப்பீர்கள்!

-ஞானசேகர்

Saturday, March 29, 2008

ஹோமோசெப்பியன்ஸ்

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
- திருவள்ளுவர்

இனி
மிருகநேயம் என்றொரு
வார்த்தை தேவைப்படலாம்
- பிரேம்குமார்


(வழக்கம்போல் ஒருதேதி - ஓர் இடம்- பெயரில்லாத ஒரு பெண் கதாபாத்திரம் - இவற்றுடன் இன்னொரு கதை. அர்த்தத்தையே மாற்றிவிடும் அளவிற்கு எழுத்துப்பிழைகள் எதுவும் இக்கதையில் இல்லை)

இன்னக்கி தைமாசம் ரெண்டாந் தேதி. மாட்டுப் பொங்க. எனக்கு தெரிஞ்சி மாட்டுப்பொங்க அன்னக்கெ மாட்டுவேடிக்க நடக்குறது சோசன் அண்ணனோட அக்கா ஊர்ல மட்டுந்தான். வருசக்கடேசில மாசிபோயி பங்குனிமாசம் மாடுவுட்ற ஊரெல்லாங்கூட இருக்கு. ஆனா மொத நாளே மாட்டுவேடிக்கை பாக்குறதுங்குறது ஒரு தனிசொகங்க. மாட்டுவேடிக்கங்கறது உசுருல கலந்துபோயிட்ட ஒண்ணு. பொங்கலுக்கு ரிலீஸான ரஜினிபடமானாலும் சரி, செத்துப்போன ஊர்ப்பெருசானாலும் சரி, வயசுக்குவந்த மொறப்பொண்ணானாலும் - எல்லாம் தை மூணாந்தேதிதான். மாட்டுவேடிக்க டிவியில பாக்குறவங்களுக்கு அது ஒரு கொடுரமாத்தான் தெரியும். எனக்கும் மொத ரெண்டு வருசம் பாக்குறப்ப அதே நெனப்புதான். அப்பறம் பழகிடுச்சி.

மார்கழி மாசமே மாட்டுவேடிக்க நடக்கப்போறதுக்கு ஒத்திக பாக்க ஆரம்பிச்சிடுவாங்க. நாயித்துகெழம நாயித்துக்கெழம ஒரு அரமணிநேரத்துக்குச் சும்மா சாத்ரப்புக்கு ஒரு ரெண்டு மாட்ட விட்டு எறிப் பாப்பாக. பொதுவா மாடு ஓட்டிக்கிட்டு வர்ற ஆளு, தொணையாளு ரெண்டு பேத்தோடத்தான் வருவாப்புள்ள. மால, கயிறு, கொம்பு ஜோடன, பெயிண்ட்டு, கலருபொடி இவ்வளவுதான் மாட்டுக்குன்னு செலவு ஆகும். ஆனா தொணையாளுக்கு ஆகுற செலவுல இன்னொரு மாடே வாங்கிடலாம். காலச்சாப்பாடு, சாராயம், மத்தியானச் சாப்பாடு, கைக்காசு. இருந்தாலும் தலச்சம்புள்ள பெத்த தம்பதிக மாதிரி, நம்மாளு நம்பிக்கைய தளரவிடாம ஒவ்வொரு வருசமும் கூட்டணியத் தொடருவாப்புள்ள.

எல்லா வருசமும், சோசன் வீட்டுக்குப் போயி வண்டியில அவரக் கூட்டிக்கிட்டுத்தான் வேடிக்க பாக்கப் போறது. சோசனோட போகலன்னா எங்க வீட்டுல விட மாட்டாக. தொணயாளு இல்லன்னா சோசன அவரு பொண்டாட்டி விடாது. ஆமாங்க, சோசன் கல்யாணம் ஆனவரு. அவருல பாதி வயசுதான் எனக்கு. ஓடிக்கிட்டு இருந்த ஒராளுதண்டி பாம்பு வாலப் புடிச்சி, வரப்புல அடிச்செ கொன்னாரு. அதுல இருந்து சோசன் என்ற அர்ச்சுனனுக்கு, சேகர் என்ற கிருஷ்ணன் தான் தைமாசம் ரெண்டாம் தேதியன்னக்கி டிரைவரு.நான் வார் டவுசரு போட்டுருந்த காலத்துல, சோசன் அண்ணனும் ஒரு மொரட்டு பாச்சமாடு வச்சுருந்தாரு. அந்த மாட்டுக்குச் சினிமா சான்ஸெல்லாம் வந்துச்சு. சேரன் பாண்டியன் படத்துக்குத்தான். மாட்டக் கொல்லுற சீனமட்டும் எடுக்காத, என் மாடு கண்டிஷனா நடிக்குமுன்னு ஒரே பேச்சா சொல்லிடாரு. அப்புடி வளத்த மாட்ட, வெவசாயமுல்லாம் பாக்கமாட்டேன்னுட்டு சிங்கப்பூரு போறதுக்கு அந்தக்காலத்துலேயே 5 ரூவாக்கி வித்துட்டாரு. போன ஆறே மாசத்துல, ஏஜெண்டு பண்ணுல பிராடுல, சிங்கப்பூரு கவர்மண்டு சோசனோட சேத்து பத்துபேத்த திருப்பி அனுப்பிருச்சு.

சோசன் வீட்ல இல்ல. அந்த அக்கா, எனக்கு டீ போட்டு கொடுத்தாங்க. மாட்டுமடி, அடுப்படி, ஏன் வயிறு இப்புடி எங்கையும் தண்ணியத் தொடாம பாலு பாழ போச்சு. மாட்டுக்காரா ஆளும், தொணையாளுகளும் தண்ணிப்போடுல இன்னக்கிப் பண்ணப்போற கூத்த நெனச்சி சிரிச்சிக்கிட்டு இருந்தேன். நேரந்தான் போகுது சோசனக் காணாம். கீழத்தெரு தம்பிராசோட பசுமாடு ஒண்ணு செனையா இருக்காம். குட்டி தல பொறண்டு வலியில துடிக்கிதுன்னு வெள்ளனா விடியக்காலையில போனவரு இன்னும் வல்லையாம். வண்டிய எடுத்துக்கிட்டு தம்பிராசு வீட்டுக்கே போயிட்டேன்.

மாடு தரையில படுத்து இருக்கு. வாயிக்குள்ள சோசன் கையி. பின்னங்காலு ரெண்டும் தம்பிராசு கையி. முன்னங்காலு ரெண்டும் இன்னொரு ஆளு கை. இருங்க இருங்க. கொஞ்சம் இருங்க. அந்த மாட்டோட கண்ண நீங்க பாக்ககலல்ல. கொஞ்சம் இருங்க. சோசன் மாட்டோட கழுத்த, என்ன புடிக்க சொல்றாரு.

(கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்டு, சற்றே மனநிலை மாற்றிவிட்டு மீண்டும் தொடருங்கள்)

எல்லா ஊருலயும் பொறக்குற வழியும், பொறுக்குற வலியும் ஒண்ணுதாங்க. பாஷ மாறலாம்; படைப்பாளி மாறலாம்; ஜீவராசி மாறலாம்; காயீனப் பெத்த பொண்ணுல இருந்து, வருசப்பொறப்புக்கு டைம் வெச்சு பெத்துக்குற பொண்ணுவரைக்கும் வலிங்கிறது ஒண்ணுதான். கள்ளிக்காட்டு இதிகாசத்துல வைரமுத்து சொல்லாததையா நான் புதுசா சொல்லப் போறேன். வேடிக்கலுக்கு நேரமாச்சு.

"சோசா, ஒனக்கு வேற தனியா சொல்லணுமா? வேடிக்கலுக்கு நேரமாச்சுயா. ரொம்ப சாப்புடாதையா, அப்பறம் மத்தியானம் கரிச்சோறு எறங்காது".
மாட்டு வேடிக்கலுக்குப் போற புருஷனுக்கு பொண்டாட்டி, சொல்ற அதே பாரம்பரிய டயலாக்க இந்த அக்கா வருசாவருசம் ஒலிபரப்பிறும். ஒரு பிரசவத்தின் காரணமாக அவ்வொலிபரப்பு இரண்டு மணிநேரங்கள் தாமதமாகியது. என்னைத்தவிர வேறு யாரும் தடங்கலுக்கு வருந்தியதாகத் தெரியவில்லை.
"அந்தச் சட்டய வெய்ங்க. நேத்துதான் தொவச்சேன். வேடிக்க முடிஞ்சோடன நேரா பொழுது சாயிறதுக்குள்ள வீடுவந்து சேந்துடுங்க. சேகரு, ஒன்ன நம்பிதான் அனுப்புறேன். மந்தைக்குள்ள போகாதீக. கண்டது கடையத தின்னு வயித்த கெடுத்துக்காதீக". ஒவ்வொரு பித்தானுக்கும் ஒரு அட்வைஸ்.
"யக்கா, நாங்க என்ன சின்னபுள்ளயா. சீக்கரம் அனுப்புக்கா"
"இவரு பையில பத்தாயரம் ரூவா வெச்சுருக்காரு. இவரு அக்கா வீடு போன ஒடன, அவங்ககிட்ட அத மறந்துடாம கொடுக்கச் சொல்லு"
"யோவ், ஏன்யா கும்பல்ல பணமெல்லாம் எடுத்துக்கிட்டு?"
"விட்றா சேகரு. இவ சொன்னா கேக்க மாட்டா"

ஒருவழியா கெழம்பியாச்சு. இப்புடி நாங்க போன ஒடனயே, பதுனோரு மணி பஸ்ஸீக்குப் பொம்பள ஆளுகளோட சோசன் பொண்டாட்டியும் வந்துடும். அதே நெனப்புலதான், நானும் ஒண்ணும் சொல்லிக்காம போனேன். ஆனா,....

ஆனா,"யோவ், வண்டிய ஏன்யா அடப்பங்கொளத்துக்குள்ள விட்ற. சாராயமா? கிழிஞ்சது. கீழு கீழப்பா கீழ விட்டு ராயப்பாங்குற கதயா, இன்னிக்கி வேடிக்க பாத்தது மாதிரிதான்". கர்ணனப் பாடினவங்களும், அடப்பங்கொளத்துக்குக்குள்ள போனவங்களும் வெறுங்கையா திரும்பினதுல்ல. சோசனும் அதுக்குத் தப்பல. இந்த வருசம் கொஞ்ச அதிகந்தான். ஆலமரத்திடில ஒக்காந்து, ஒரே மடக்குல எல்லாத்துலயும் முடிச்சுட்டாரு.
"ஒரு பொண்டாட்டி எப்ப வீட்டுக்குத் தூரமுன்னு தெரியாதவன் ஒரு புருசனா? சின்னப் பையனா இருந்தாலும், நீயே ஞாயம் சொல்லுடா சேகரு"
ஏதோ ஒரு விபரீதத்த அடப்பங்கொளத்து வெடிச்ச சகதில வெதக்கிறது புரிஞ்சது. சில நேரங்கள்ல உண்மையான சாட்சிகள மறக்கிறதே உத்தமுன்னு, செல்லாத சாட்சிகள்ன்னு ஊருக்கே கத சொன்னவன் நானு. வாயத் தொறப்பனா? மூச்.

"வேடிக்கலுக்கு வரமாட்டாளாம். கேட்டா வீட்டுக்குத் தூரமாம். எங்க அக்கா மூஞ்சில முழிக்க மாட்டாளாம்; நானும் முழிக்கக்கூடாதாம். நேத்து வந்தவடா இவ. எச்சிப்பாலு சொந்தத்தப் பிரிக்கிறதுக்கு இவ யாருடா?"
சோசனுக்குத் தலகாலு தெரியல. எனக்குத் தலகாலு புரியல. ஊசிப்போன கடலைய விரும்பிச் சாப்டேன்.
"சொல்றா சேகரு? பொண்டாட்டி எப்ப வீட்டுக்குத் தூரமுன்னு தெரியாதவன் ஒரு புருசனா"
தப்பிக்க வழி கெடச்ச மாதிரி, அந்த வழியா வேடிக்க மாட்ட ஓட்டிக்கிட்டு போயிக்கிட்டு இருந்த, சின்னதம்பியப் பார்த்து கத்தினேன்.
"என்னண்ணெ, இந்த வருஷம் எவ்ளொ பந்தயம்?"
"ஐனூறு ரூவா. கொம்புல முடிஞ்சிருக்கேன். எந்தக் கொம்பன் எடுக்குறான்னு பாப்போம்"
"பாப்போம்டா கெம்புளி". சோசன் ஏந்திருச்சாச்சு. வண்டிய ஒர்ர்ரே தட்டு, சோசன் அக்கா வீட்டு வாசப்படில தட்டிக்கி முன்னாடிதான் நிப்பாட்டுனேன். நாலு வயசு பேரன் தட்டியத் தொறந்தான். கறிக்கொளம்பு வாசனை, தட்டிய திரும்ப சாத்திடுச்சு. வண்டிய வீட்டு ஓரத்துல வழக்கம்போல நிப்பாட்டிட்டு, திரும்பிப் பாத்தா, சோசன் இன்னும் வெளியவே நின்னுக்குட்டு இருக்காரு. சோசனுக்கு நேராத்தான், அவரு அக்கா குடும்பம் முழுசுமே பொணய ஓட்டிக்கிட்டு இருந்துச்சு. யாரும் சோசனக் கண்டுக்கல. செல சொந்தக்காரங்க, சோசன போயி கூப்புட்டாக. அவரு அசஞ்ச பாடில்ல. செல மாதிரி நிக்கிறாரு.

(கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்டு, சற்றே மனநிலை மாற்றிவிட்டு மீண்டும் தொடருங்கள்)

தரயெல்லாம் சோதன போடுறவ மாதிரி, மண்ணப் பாத்துக்கிட்டே சோசனுக்கிட்ட போனா அக்கா. தட்டியத் தொறந்தா.
"உள்ள வா சோசா"
"நான் வர்றது இருக்கட்டுங்க்கா. நீங்க கேட்ட பணத்தக் கொண்டாந்து இருக்கேன். ஏன் மாட்டக் குடுத்துடுங்க. பாத்து ரெண்டு நாளாச்சு"
"மொதல்ல உள்ள வா. திருவிழா கூட்டமுல்லாம் ரோட்டுல வரப்போக இருக்கு. சாப்டுட்டு பொறுமையாப் பேசுவோம்"
"வாயில்லா சீவன...."
"என்னா சோசப்பு. வம்புழுக்க வந்துருக்கியா?" இதுதாங்க அக்கா புருசன் - சோசன் மாமா. பொணய ஓட்டிக்கிட்டு இருந்தவரு, சட்டுனு மாட்ட விட்டுட்டு, சோசனப் பாத்தாரு. அவரு பையன், மாட்டுக்கயிறு தரையில விழுறதுக்குள்ள, அதப் புடிச்சு பொணயலத் தொடந்து ஓட்டுனாரு.கண்ணசைவுக்கு வேல பாக்குறது ரெண்டு ஆம்பள சிங்கக்குட்டிகளப் பெத்து இருக்குறதுனால, எல்லாப் பிரச்சனைக்கும் ஒரு சல்லிவேரு இவருதான். ஒரு பொம்பள சிங்கக்குட்டியும் இருக்கு. அதுக்குக் கல்யாணமாயி, ஒரு சிங்கக்குட்டி முக்கா தயாரிப்புல இருக்கு.

"சோசா..." மருதூரு பெருசு ஞாயம் சொல்ல
த ருச்சுச்சு.
ள் தி
ளா ந்
டி ஏ
ச்சே. என்ன மட்டமான சரக்குய்யா இது? வாய் இந்த நாத்தம் நாறுது.
"சோசா, மாமாவும் அக்காவும் எல்லா விசயத்தையும் ஏற்கனவே எனக்கிட்ட சொல்லிட்டாக. நல்ல நாளும் பெரிய நாளுமா, அதப்பத்தி இப்பப் பேச வேணாம். வேடிக்க முடியட்டும். ரெண்டு பெரிய மனுசங்கள வெச்சு ஞாயம் பேசுவோம்"
"இந்த ஆளுக்கிட்ட என்ன மாமா ஞாயம் பேச வேண்டி இருக்கு"
"இந்த ஆளு". இந்த வார்த்தக்கிப் பலவெதமான பின்விளைவுகள். அக்கா மண்பரிசோதனையை விட்டுவிட்டு, சோசனைப் பார்த்தாள். நல்லவேள! அவளுக்கும் ரெண்டு கண்ணுதான். நெத்தில பொட்டுமட்டும்தான் இருந்துச்சு. அக்காவிட்ட வேலைய மாமா தொடர்ந்தார். வேறென்ன? மண்பரிசோதனை. பொணய ஓட்டுற மகன், ஒரு மாட்டை ஓங்கி அடித்தான். இன்னொரு மகன் எழுந்திரிக்கையில், கட்டில் கம்பியில் மாட்டி, கைலி கிழிந்தது. பாம்ப்புக்கறி திங்கிற ஊர்ல வாக்கப்பட்டா, நடுமுண்டம் எனக்குத்தான்னு எனக்கு லேச ஒறக்க ஆரம்பிச்சிச்சு. தட்டிக்கி வெளில வண்டியோட வந்தேன். சோசனுக்குப் பின்னாடி, லேசா அவரப் புடிச்சிக்கிட்டு நின்னேன்.

"சோசா, ஓன் பக்கமே ஞாயம் இருக்குறதா வெச்சுக்குவோம். பொண்ணக் குடுத்துருக்கியல்ல? நீதான் பணிஞ்சு போகனும்" மருதூரு பெருசு.
"எத்தன வருசம் மாமா பணிஞ்சு போறது? பொண்ணக் கட்டி குடுத்துருக்கோம்; தாய்மாமன் இல்லாத எனக்கு தாய்மாமன் மொற எடுத்து சீரெல்லாம் செஞ்சாரு. அதுக்காக எத்தனநாளுதான் பணிஞ்சு போறது?"
சோசன் தோளப் புடிச்சு சட்டென ஏன் பக்கம் திருப்புனேன். யாருக்குமே அடங்காத மாடு, தொத்த எசமானுக்கு மடங்குற மாதிரி, சோசனுக்கு ஒறக்கிற மாதிரி எனக்குப் பேசத் தெரியும். சோசனத் தனியாக் கூட்டிக்கிட்டுபோய் அமைதிப்படுத்துனேன். என்ன சொன்னேன்னு எல்லாம் கேக்காதீங்க?

"சரி மருதூரு மாமா. நல்ல நாளும் பெரிய நாளுமா, ஞாயம் பேச வேண்டாம். வேடிக்க முடிஞ்ச கையோட, இதெ எடத்துல பஞ்சாயம் பண்ணாம நான் போறதில்ல"
"நானே பண்ணி வெக்கிறேன்யா. இந்தாம்மா, ரெண்டு தம்பிக்கும் எல போடு"
"நீங்க இதுல தலயிட வேண்டாம் மாமா. சொந்தங்கெறதே சொதப்பல்ன்னு ஏன் ஒடன்பெறப்பு எனக்கு கத்துக் கொடுத்துருச்சு. இதெ ஊர்ல இருந்து, ஒடயாத்தெருல ஒரு பெரிய மனுசன், வெள்ளாளத்தெருல ஒரு பெரிய மனுசன், குடியானத்தெருவுல ஒரு பெரிய மனுசன் நீங்களே கூட்டிக்கிட்டு வாங்க. ஞாயம் பேசுவோம்".

சோசன் சொன்னதுக்கு யாருமே சரின்னு சொல்லல. ஆனா, அதுதான் முடிவுன்னு நாங்க ரெண்டு பேரும் வண்டிய எடுத்துக்கிட்டு, மந்தக்கிப் போய்ட்டோம். ரெண்டு மணிக்கு மொத தொழு தொறக்குறது. ஒரு மணிக்கெல்லாம் சனங்களும், போலீஸும், ஐஸ்காரனும் கூட ஆரம்பிச்சாச்சு. வண்டிய ஏதோ ஒரு வீட்டு வாசப்படில நிப்பாட்டிட்டு, மந்தைக் கடலில் இரு மழைத்துளிகள் கலந்தன. அதுல ஒண்ணு அமிலமழை.

(கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்டு, சற்றே மனநிலை மாற்றிவிட்டு மீண்டும் தொடருங்கள்)

நாங்க ரெண்டுபேரும் வேடிக்கலுக்குன்னே தனிசட்டயும், கைலியும் வெச்சிருப்போம். அந்த ஒருநாள் மட்டும்தான் அதப் போடுறது. தொழு தொறக்குறதுக்கு, அரமணி நேரத்துக்கு முன்னாடியே, மொத தொழுவோட வாசல்ல மொத ஆளா நிப்போம். அடப்பாவிகளா, அவுத்துவிட்ட மாடு, மொதல்ல ஒங்களத் தாண்டித்தானே போகணும். குத்திக்கித்தித் தொலக்காது? இப்படியெல்லாம் எங்களப் பாக்குறவங்க பயப்படலாம். எங்களுக்குப் பயங்கெடையாது. வளத்தியான வாத்தியாரு வகுப்புல மொத பெஞ்சு பய தூங்குறது மாதிரி, வெளில வர்ற மாடு தொணையாளுக தொந்தரவுல இருந்து தப்பிசோம்டான்னு நேராத்தான் ஓடும். அப்புடி போற எல்லா மாட்டயும் தொட்டுப் பாக்குறது. செல சமயம் மாடு எங்கள நெருங்குனா, தென்னாப்பிரிக்காவுல குதிரங்களுக்குக் காந்தி செஞ்ச அதெ டெக்னிக்குதான்; கீழ படுத்துக்க வேண்டியது. இதுமாதிரி பல விஷயம் இருக்குதுங்க. ஜீவரசிகளுக்குப் பயந்துபோய், வீட்டுல அடஞ்சு கெடக்காம, மந்தையில வந்து நின்னுபாத்தா, காலா ஏன் கவட்டிக்கிக் கீழ வாடா, இப்புடி தைரியமா சொல்லலாம். இதத்தவர எங்க எங்க தாவணி போட்ட தீபாவளி நிக்கிதுன்னு பாத்து வெச்சுக்கிறது. ஒவ்வொரு மாட்டையும் தட்டிவிட்டுட்டு, ஒரு சிரிப்பு சிரிக்கிறது. தொழு மாறுரப்ப, துண்ட உருவி தலக்கிமேல சுத்துறது. தீபாவளி ஐஸ் வாங்குனா, நாங்களும் வாங்குறது. வேணும்னே மைக்குகாரங்கிட்ட போயி, பத்துரூவா குடுத்து, ராமராஜன் ரசிகர் மன்றமுன்னு சொல்லச் சொல்றது.

இது எதுவுமே இந்த வருசம் நாங்க பண்ணல. மடியில கணம், வழியில பயம். 10000 ரூவா. ரெண்டு மணில இருந்து, அஞ்சு மணிவர ஒரு கோயிலு கோபுரத்து சாமிமேல ஒக்காந்துகிட்டு, மாடு பாத்தோம். மந்தக்குள்ள நின்ன குடிகாரப் புருசன, ஒரு பொம்பள அடிச்சு இழுத்து வந்துச்சு. மந்தைக்குள் ஒரு பெண் என நாங்கள் வெட்கப்பட்டோம். போன வருசம் கைலியோட மாடு புடிச்சவன் ஒருத்தன், புதுப் பொண்டாட்டியோட கொடக்கிக் கீழ பஞ்சாயத்து ஆபீஸ் மொட்ட மாடில நின்னான். அடக்கியவன் அடக்கப்பட்டான் என நாங்கள் சிரித்தோம். ஒருவருக்கு மாடு முட்டி, குடல் சரிந்தது. நாங்கள் வருத்தப்பட்டோம். மூன்று யுகங்கள் சோகமாக முடிந்தன.

சோசன் அக்கா வீட்டுக்குத் திருப்புனோம். கட்டில்ல நாலஞ்சு கெழடுக. ரெண்டு காப்பி சாப்புட்டுச்சு. ரெண்டு எற்கனவே சரக்கு சாப்புட்ட சாயல். யாரும் சோசனை வாயால் அழைக்கவில்லை. மண்ணப் பாத்துக்கிட்டே கைகூப்பினார்கள். சோசனும். பஞ்சாயத்து ஆரம்பமானது. சோசப் என்ற மீசை வைத்த ஆண், சேகர் என்ற மீசை வழித்த ஆண். மற்ற எல்லா ஆண்களுக்கும் அமர இருக்கை இருந்தது. என்ன பிரச்சனை என்று எனக்குப் புடிபடவே இல்ல. ஆனா சோசனுக்கு யாருமே ஞாயம் பேசவில்லை என்று மட்டும் புரிந்தது. ஒரு பாக்யராஜ் படத்தில் வருவதுபோல், முடிவு எடுக்கப்பட்ட ஒரு விவாதம் அது. பஞ்சாயம் புரியாததாலா, அங்கிட்டும் இங்கிட்டும் பிராக்கு பாத்துக்கிட்டு இருந்தேன். சண்டைக்கு நடுவே, போதிமரம்போல ஓர் அழகான காட்சி கண்ணில் பட்டது. அழகான தமிழிலேயே சொல்கிறேன்.

சோசப்பின் அக்காவின் மூத்த பையனுக்கு இரண்டு பிள்ளைகள்; இளையவனுக்கு ஒன்று. மூன்றும் மாடிப்படியின் கடைசி படிக்கட்டில் நின்றுகொண்டிருந்தன. கீழ் படிக்கட்டில் அமர்ந்துகொண்டு அக்காபேரப்பிள்ளைகளையும், பஞ்சாயத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள். மூத்தவனின் மூத்த மகனை, இளையவனின் மகன் மாடிப் படிகளில் தள்ளிவிட்டான். யார் தள்ளியது என்று நான்கு பேருக்குத்தான் தெரியும். எனக்கு, சோசப்பின் அக்காவுக்கு, மற்ற இரண்டு குழந்தைகளுக்கு. என்னாச்சு என்று சில மைக்ரோ வினாடிகள் வித்தியாசத்தில் வெவ்வேறு வாய்களில் இருந்து வார்த்தை வந்து, பிறகு பஞ்சாயத்து தொடர்ந்தது. மூத்த மருமகள் யார் தள்ளியதென்று விசாரித்தாள். சோசப்பின் அக்கா, மூத்தவனின் இரண்டாவது மகனென்று சொன்னாள். எனக்குத் தூக்குவாரி போட்டது. அக்குழந்தை எவ்வளவோ மறுத்தும், அடி தவிர்க்கப்படவில்லை.


இவ்வளவு நேரம் அமைதியாகவும், பித்துக்குளி போல சிரித்துக்கொண்டும் இருந்த சேகர் நேராய் சோசப்பின் அக்காவிடம் சென்றேன். அவளுக்கு மட்டும் கேட்கும்படி, "சின்னப்புள்ளகிட்ட ஓரவஞ்சன காட்டுறியே, என்ன மாதிரி பொம்பள நீ? ச்ச்சீ" வந்துவிட்டேன். அவள் என்னிடம் வந்து தண்ணீர் கொடுப்பதுபோல் சொன்னாள், "புருசனும் தம்பியும் அடிச்சிக்கையில நான் அமைதியா இருக்கேன். இதே மாதிரி நான் அமைதியா இருந்திருந்தா நாளக்கி ஏன் மகனுங்க ரெண்டுபேரும் அடிச்சிக்க இந்தமாடிப்படியே காரணமா இருக்கலாம்". தனது தவறுகளுக்கும், ஒருசார்புக்கும், விருப்பு வெறுப்புகளுக்கும் மனிதன் கொடுக்கும் நியாயத்தீர்ப்பு மற்றவர்களுக்குச் சுறுக் என்றால், அந்த மற்றவர்களும் அவன் சார்பு. இந்நிகழ்வை இப்படி மறுப்பதா? இல்லை, ஒரு பெண்ணின் பிறந்த வீடு - புகுந்த வீடு இருதலைக்கொள்ளி எறும்பு வாழ்க்கை என்று ஏற்பதா? சீரணிப்பதற்குள், வீட்டுக்குத் தூரமுன்னு சொன்ன சோசப்பின் மனைவி வந்துவிட்டாள்.

அவள் யாரைப்பற்றியும் கவலைப்படவில்லை,
"வேடிக்கலுக்குப் போன மனுசன் இருட்டியும் வீடு வல்லான்னா, ஒண்டியா இருக்குற பொம்பள என்னய்யா நெனப்பா?"
"நீ எதுக்கு வந்த? நம்ம மாட்டத்தான் திரும்பக் கேட்டுக்கிட்டு இருக்கேன்"
"என்ன பேச்சு வேண்டிக்கெடக்குது. பத்தாயர ரூவாய மூஞ்சில வீசிட்டு மாட்ட மகாராசன் மாதிரி ஓட்டிக்கிட்டு வரவேண்டியதுதானே?"
"இந்தாம்மா, சபைக்கி மரியாத குடு" மருதூரு பெருசு.
"நீயெல்லாம் பெரிய மனுசங்களாய்யா? ஒங்களுக்கு எல்லாம் மகளுக இருக்கா இல்லையா?"
த்தூ என்று துப்பினாள். சோசனின் மாமாவுக்கு ஒரு ஸ்பெஷல் துப்பு. சோசனின் மாமா என்ற பெரிய மனுசனுக்கும், 10000 ரூவாய்க்குமான கதையை அவள் சொன்னாள். அப்படியே அவள் சொன்னால் குழப்பும். நான் சொல்கிறேன்.

(கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்டு, சற்றே மனநிலை மாற்றிவிட்டு மீண்டும் தொடருங்கள்)

ஒரு அஞ்சாறு தலமொறைக்கி முன்னாடி ரெண்டு குடும்பம் குடியேறி, இன்னக்கி ஒரு பத்து தலக்கட்டு இருக்குற ஊருதான் சோசன் ஊரு. அந்த ஊருல பொறந்த கொழந்தங்க எல்லாத்துக்கும், தாய் தகப்பன் வயல்ல எறங்கி வெள்ளாம பாக்குறப்ப, தொட்டில்ல தூங்குறதுக்குத் தாய்மடியா இருக்குறது ஒரு மரம். குரும்ப மரம். அந்த சுத்துவட்டாரத்துல வேற எங்கயும் கெடையாது. சோசனோட கெணத்து மேட்டுல இருக்கு. அது நடவுநேரம். பக்கத்து வயக்காரங்காரங்க எல்லாம் கடல போட்டு இருந்ததால, மத்தியானச் சாப்பாட்டுக்கு வேற யாரும் குரும்ப மரத்தடியில கூடல. சோசனும் சோசன் பொண்டாட்டியும் மட்டும், ரெண்டு நாளக்கி முன்னாடி பாம்புகடிபட்ட ரஞ்சிதத்தப் பத்தி பேசிக்கிட்டு இருந்தாக.

"ரஞ்சிதம் புருசன ஆடுதின்னாபால ஒடிச்சிட்டு வரச்சொல்லி வைத்தியரு சொல்லி இருக்காரு. அந்தக் குடிகார முண்ட, ஆடுதின்னு மிச்சமிருக்குற பாலைன்னு போயி விசாரிச்சு இருக்கான்"
கருவாட்டு இடைவெளி.
"ஊரு பெருசு ஒண்ணு, தமிழே மறக்குற அளவுக்கு குடிச்சிருக்கான்னு அவனுக்கு வெளக்கம் ஒண்ணு சொன்னுச்சாம். அது ஆடுதின்னுன பாலை இல்ல. ஆடுதின்னாபாலை. அப்புடின்னா, ஆடு திங்காததுன்னு அர்த்தம்"
பழயசோறு இடைவெளி.
"கடைசியில வெறுங்கையோட வந்த அவனப்பாத்து, வைத்தியரு சொன்னாராம்: அட குடிக்காரக் குப்பா, ஆடு கடிச்சதுமில்ல; கடிக்காததுமில்ல. அது ஒரு தனி மூலிகடா. அப்புடின்னாராம்"
"அட சண்டாலா. பொண்டாட்டியக் கொல்லப்பாத்தான் பாருங்க"
"ரஞ்சிதம் வீடுதிரும்புறப்ப வைத்தியரு சொன்னாராம்: ஓம் புசனுக்கிட்ட ஒரு வேல தர்றதும், எலக்ட்ரிக்க நம்பி எல போட்றதும் ஒண்ணுதான். தெளிவா இருந்தாத்தான் உண்டு. இல்லன்னா, மைசூர் பாக்கு வாங்க, மைசூரே போயிருவாப்புள்ள".
சோசன் மனைவிக்குப் பொறையேர்ற அளவுக்குச் சிரிப்பு. வயக்காட்டுத் தனிமையில், சோசனும் சேர்ந்து சிரிச்சாரு. தனிமை என்ற நிலைமை அவசரமாக விடைபெற்றுக் கொண்டது.
"குடுத்த காசத் திருப்பித் தரத் வக்கில்ல. என்ன சல்லாபம் வேண்டிக் கெடக்கு?" சோசனின் அக்கா புருசன்.
மாமா என்ற உறவிடம் இருந்து முதல்முறையாக கரடுமுரடான வார்த்தைகள், அறிமுகம்கூட இல்லாமல். இருவரும் நிதானமாக சுதாரித்தார்கள்.
"என்ன மாமா வந்ததும் வராததுமா காசுப்பத்தி பேசுறீங்க"
"தோள்ல தூக்கிவளத்த புள்ள நல்லா இருக்கட்டுமேன்னுதான், அன்னக்கி நீ சிங்கப்பூரு போகனும்னு கேட்ட ஒடனேயெ, 10000 ரூவா குடுத்தேன். அத வச்சி பொழக்கத் தெரியல. ஒன்ன எப்புடி நம்புறது?"
"மாமா, ஒங்களுக்கு அவசரமா பணம் தேவன்னா, இன்னும் ரெண்டு நாளக்குள்ள தந்துடுறேன்"
எதுவும் பேசாமல், தென்னமரத்தடியில் கட்டி இருந்த ரெண்டு ஒழவு மாடுகளைப் பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்..
"பணத்தக் குடுத்துட்டு மாட்ட வாங்கிக்க"
"மாமா இது ஞாயம் இல்ல மாமா"
"எனக்கு ஞாயம் சொல்லித் தர்றியா?"
அதுக்கப்பறம் சோசன் பேசவில்லை. சோசனின் மனைவி பேச்சை நிறுத்தவில்லை.
"அப்பா அப்பா மாட்ட விட்டுருங்க. எங்க தலய வீட்ட வயல எதையாவது அடமானம் வெச்சு சாயந்தரத்துக்குள்ள ..."
"ரெண்டு நாள்ல பொங்க வர்து தெரியுமுல்ல"
ஊரார் பார்க்கும் கோலம், உடையவன் பார்க்காத கோலத்தைச் சோசனின் மனைவி சோசனுக்குக் காட்டினாள். தங்கத்தாலியக் கலட்டி, சோசனின் மாமா காலடியில் வைத்தாள். சோசன் மனதால் செத்தார். ஊதாரி புருசனைவிட மாடே மேல்.

சைக்கிளின் பின்னால் மாடுகளைக் கட்டிக்கொண்டு 15 கிமீ தொலைவில் இருக்கும் தனது ஊருக்குச் சோசனின் மாமா, எதையும் கண்டுகொள்ளாமல் புறப்பட்டு போய்விட்டார். அடிக்கடி சோசன் வீட்டுக்கு வந்து பழக்கப்பட்ட ஆள் என்பதால், அடம்பிடிக்காமல் மாடுகளும் பின்சென்றன.

மதிய ஒழவு இல்லாம, பொழுது கருக்குற வரைக்கும், குரும்ப மரத்துக்குக் கீழ வழக்கம்போல அழுகை சத்தம். ஆனால், அந்த பிற்பகலில் மட்டும் அழுகைகளுக்குச் சொந்தமானவர்கள் குழந்தைகள் அல்ல. மறுநாள் காலை குரும்பமரம் அழுதது. யாருக்கும் கேட்கவில்லை. அந்த அழுகையின் விலை 10000 ரூவா.

சோசபின் மாமா திடீரென மாடுகளைக் கண்வைத்து பிடித்துக்கொண்டு போனதன் காரணம் - அந்த மாடுகள் இப்போது எங்கே - இப்போது நடக்கும் பஞ்சாயத்தில் சோசப்பிற்கு நியாயம் கிடைக்குமா - சோசப்பின் அக்கா தலையிட்டால் சுமூகமாகும் இப்பிரச்சினையில் அவள் மௌனமாய் இருப்பதேன் - இப்படி நான் நினைத்துக்கொண்டு இருக்கும்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் சோசப் 10000 ரூபாயை அவர் மாமாமேல் வீசி எறிந்தார்.
"நாளக்கிக் காலையில ஏன் செவக்காட்டுல நடவு. கண்மாதிரி என்னோட ரெண்டு மாடுகளும், காலையில் ஆறுமணிக்கி அங்க இருக்கணும். சேகரு வண்டிய எட்ற"
மூன்றுபேரும் வெளியேறினோம்.

நானும் சோசன் வீட்டிலேயே தங்கிவிட்டேன். சோசன் சொன்னபடியே மாடுகள் வந்துசேர்ந்தன. மூத்தமகன், சைக்கிளில் கொண்டுவந்து விட்டுப்போனார். சோசனுக்கு மாமன் பயந்துவிட்டார்; நெசம் ஜெயிக்கும்; அவனும் ஒரு வெவசாயிதானே; அவனுக்கும் ஒரு பொம்பளப்புள்ள இருக்குல்ல. இப்படி பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நான் நினைத்த ஒரே காரணம், "சோசனின் அக்கா பேசி இருப்பாள்".

மாடுகள் வந்ததில் பெருமகிழ்ச்சி; பச்சைமிளகாய் பூத்திருப்பதில் மகிழ்ச்சி; இன்றைக்குக் காலை கரண்ட் வந்ததில் மகிழ்ச்சி; செவ்வெளநீர் மரம் குருத்துவிட்டதில் மகிழ்ச்சி; கெட்ட ரத்த சம்மந்தம் ஒன்றை வெட்டிவிட்டதில் மகிழ்ச்சி. இப்படி சின்னச்சின்ன விசயங்களுக்கு எல்லாம் சோசப் சந்தோசப்பட்டார். எல்லாம் சரிதான். மத்தியானச் சோற்றுக்குக் பந்தல்தந்த - குழந்தைகளைத் தாயைவிட அதிகநேரம் தாலாட்டிய - மழை பயிர்களின் மூச்சடைத்தபோதும், வெயில் பயிர்களின் வேர்நுனி பிளந்தபோதும் மக்களுக்குக் குடைபிடித்த குரும்பைமரம் இன்று இல்லை.

மனிதன் சந்தோசத்திலும், துயரத்திலும், ஆத்திரத்திலும் மரங்களின் மேலும், மிருகங்களின் மேலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி பீடுநடை போட்டுக் கொள்ளலாம். தக்கன பிழைத்தல் மட்டும் பரிணாமம் என்பதில்லை.

-ஞானசேகர்

Saturday, October 20, 2007

ஒரு வாசகத்திற்கும் உருகான்

(Santhara என்று ராஜஸ்தானில் சில மாதங்களுக்கு முன்னர் பிரபலமாகப் பேசப்பட்ட, ஆங்கில Euthanasia வை இதுவரை நெதர்லாந்தைத் தவிர வேறு எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. தமிழில் கருணைக்கொலை என்ற இச்சித்தாந்தத்தை அஹிம்சைக்காரர் மோகன்தாஸ் காந்தி அவர்களே அங்கீகரித்திருக்கிறார்! "இனிமேல் இவன் தேறமாட்டான்" என்ற அவநம்பிக்கையில் தூக்குத்தண்டனைகளை ஆதரிக்கும் நாடுகள்கூட, "இனிமேல் இவன் தேறமாட்டான்" என்ற நம்பிக்கை வார்த்தைகளைக் கருணைக்கொலை யாசிப்பவர்களுக்குத் தருவதில்லை. நாகரீகத் தொட்டிலில் இப்போது ஆடிக்கொண்டிருக்கும் இச்சிறுபிரச்சனைப் பற்றி நான் கருத்துகள் ஏதும் சொல்ல விரும்பவில்லை. ஆனால்,,,)

தன்மை:
-------
சங்கூதி நீர்வெழாவி
சாஞ்சாராம் பண்டாரம்
வெடி விடி
போட்ட காலங்க
கண்ணோட சேந்து
பாழாப் போச்சு

நுனியில நூலுகட்டி
பொடனியில முட்டுகுடுத்து
காதுல சொருகின
கண்ணாடியுங் கூட
ஆடுற உசிருபோல
நெலச்ச பாடில்ல

உள்ளங்கை எடுத்து
கமுக்கட்டி சொருகி
யாருக்குந் தெரியாம
நான் எழுப்பும் சத்தங்க
காதோட விழாம
கேக்காம போச்சு

ஒண்ணுக்குப் போகவே
தொணையாளு கேட்டுப்பாத்தேன்
வெரல்தண்டி மொளக்குச்சி
யாருக்கிட்ட கேப்பேன்?
கண்ணில்லா சென்மம்
கர்த்தரே ஏனய்யா?

அடங்கி இருந்தா
ஆயிரங்காலமுன்னு
நல்லதக் கேட்டு
வாழ்ந்த நாராயஞ்சாதி
நாஞ் சொன்னாப்புல
அருந்த நோனி நானு.

முன்னிலை:
----------
ஒருமுறை ஜென்மப்பாவங்கள் கழுவப்பட்டு
எழுமுறை நோயில் பூசிய
இவரின் பிணிகள் எல்லாம்
லாசரைப் போல
பூரண குணமடைந்து
பரலோகப் பிதாவில்
நித்திய ஜீவனை அடையும்படிக்குப்
பரிசுத்த ஆவியின் துணையோடு
எல்லாம்வல்ல பரமபிதாவிடம்
பிரார்த்திப்போம். ஆமென்.

படர்கை:
-------
வேதனை கரைக்கும்
நெற்றியில் கிறிஸ்துமா தைலம்
வயிற்றில் தீர்த்தம்
இது ஆன்மீகம்.

கல்லையும் கரைக்கும்
வயிற்றில் HCl
இது அறிவியல்.

இருக்கப்போற காலம்
இல்லாமலே இருக்கலாம்
இப்படி இக்காலம் ஆனபின்பு
அடங்கி இருக்கவும் வேணாம்
ஆயிரங்காலமும் வேணாம்.

அறிவியல் ஆன்மீகம்
யாருக்கும் தெரியாம சேத்தாச்சு
இது ரகசியம்.

சாஞ்சாரு பண்டாரம்.
நீர் வெழாவினாங்க.
சங்கூதுனாங்க.
ஊரே சொன்னது
"மண்ணுக்குப் போகையிலையும்
மண்ணாச விடல".

நோர மூடிக்கிட்டு
அமைதியா யோசிச்சேன்
"என் மண்ணாச தீத்துவெக்க
எனக்காக ஒரு உசுரு வேணும்",,,

-ஞானசேகர்
(என்றுமே முன்னிலைக்கு வராமல், என்றோ ஒருநாள் தன்மையாகப் போகும், இன்றைய படர்கை)

Friday, July 27, 2007

செத்தாலும் வேணாம் செவ்வாக்கெழம

"ஐயோ போய்விட்டாரே" என்று சவப்பெட்டி செய்பவன்கூட வருந்தும் அளவிற்கு வாழ்வதே வாழ்க்கை.
- சாமுவேல் கிளமென்ஸ் (மார்க் ட்வைன்)

கொடுப்பதற்கு இனிப்பு இல்லாவிட்டால், இனிப்பாகப் பேசுங்கள்.
-மேற்கத்திய பழமொழி


"மண்ணெண்ணையவிட சீக்கரமா சீனி தீந்துபோயிடுது சீனம்மா"

"ரேஷன்ல சீனி கொஞ்சம் அதிகமா போட்டா தேவல போலருக்கு"

"எங்க வீட்டுல மட்டும் வித்தியாசமா எலிகிலி, எறும்புகிறும்பு ஏதாவது இருக்கான்னு தெரியல செல்லக்கண்ணு அக்கா"

இதுபோன்ற வசனங்களை அம்மா பேசும்போதெல்லாம், ஒன்றுமே தெரியாதவன்போல் அமைதியாக அமர்ந்திருப்பேன். ஒருநாள் கடையில் இருந்து சீனி மடித்து வாங்கி வந்தபோது, கையில் கொட்டியதை வாயில் போட்டு பார்த்தேன். நாக்கின் இனிப்புச்ச் சுவை அரும்புகளின் அதிஉன்னத அருமை அன்றுதான் புரிந்தது. அன்றில் இருந்து, அடுப்படியில் அடுத்த சில கணங்களுக்கு யாரும்வர வாய்ப்பில்லை என்று தோன்றும் போதெல்லாம், சீனிடப்பா கதவு தட்டப்படும்; அரும்புகள் வாசல் திறக்கப்படும். நடுராத்திரியில் விழிப்பு வரும்போதெல்லாம் அரும்புகள் வாசல் திறந்த கதைகள் ஏராளம்.

வீட்டில் யாரும் இல்லாதபோது, சீனியை வாயில் போட்டு, கண்ணாடி முன்னால் நின்றுகொண்டு, கன்னம் குறுக்கி, உதடு குவித்து, நாக்கிற்கும் மேல் அன்னத்திற்கும் இடையில் சீனியைவைத்து இழுக்கும்போது, கண்ணாடி முன்னால் நின்றாலும் தானாகவே கண்கள் மூடுமே, அந்த ஒரு தருணத்தை மூன்று ஆண்டுகள் அப்ப அப்ப அனுபவித்து இருக்கிறேன். சுட வைத்த சீனியின் சுவைக்காகவே, தேங்காய் மிட்டாய் போடும் ஒரு பாட்டியைப் பழக்கம் செய்து, விடுமுறை நாட்களில் தேங்காய் மிட்டாய் போடும்போது எல்லா வேலைகளும் பார்ப்பேன். கடைசியாக சட்டத்தைவைத்து, மிட்டாய்களை அறுத்துவிட்டு, சுடச்சுட சில துண்டுகள். 'பச்சை நிறமே' பாடலை மட்டும் நான் எழுதி இருந்தால், சீனி கரைந்த அடுத்த சில நிமிடங்களில் நாக்கின் நிறத்தைச் சிவப்பிற்கு எழுதியிருப்பேன்.

எனது சீனிகாண்டத்திற்கும் ஒரு பெரிய கண்டம் வந்தது. அன்று இரவு, இல்லை இல்லை அன்றிற்கு அடுத்த நாள் அதிகாலை, மூன்று மணியளவில் சேது எக்ஸ்பிரஸ் சத்தத்தில் விழித்துக் கொண்டேன். வழக்கம்போல் அடுப்படி. வழக்கம்போல் பச்சைநிற சீனிடப்பா. மஞ்சள்நிற ஸ்பூன். வெள்ளைநிற சீனி. சிவப்புநிற நாக்கு. எல்லாமே கருப்புநிற இருட்டில் எனக்கு அத்துப்பிடி. ஆனால் வித்தியாசமாக ஒன்று ஸ்பூனிற்கு இடையில் பிடிபட்டது. அது ஒரு காகிதம். டவுசர் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, படுத்துக் கொண்டேன்.

விடிந்து பார்த்தால், அக்காகிதத்தை வைத்திருப்பவருக்கு அம்பது ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தரச்சொல்லி மன்மோகன்சிங் கையெழுத்து போட்டிருந்தார். 'ஐம்பது ரூபாய்' என்ற தமிழ் வார்த்தைகளுக்குப் பாராளுமன்றக் கொடி முகம் திருப்பிக்கொண்டிருந்தது. சீனியில் சுட்ட பணம், சீனி வாடை இருக்கிறதா என மூக்கில் வைத்துப் பார்த்தேன். சீனிகாண்டமே ஒரு திருட்டுப் புராணம் என்று உணர்த்தாத 10 வயது, பத்தும் செய்யும் ஐம்பது என்று அப்போது உணர்த்தவில்லை. பத்தோடு ஒன்று பதினொன்றாக அந்த ஐம்பது ரூபாயையும் வைத்துக்கொண்டு பள்ளிக்கூடம் போய்விட்டேன். ஆனால் பணத்தை என்ன செய்ய வேண்டும் என்றோ, எடுத்த இடத்தில் வைக்கலாம் என்றோ, பத்து எனக்குப் பரிந்துரைக்கவில்லை.

வீடு திரும்புகையில், காலையில் பார்த்த சாலை, சுவடே இல்லாமல், அதாவது நடக்கவே வழியில்லாமல் மாறியிருந்தது. சாலையின் குறுக்கே ஒரு பந்தல். அதைத்தாண்டி சாலையோரத்தில், ராட்டினம். சில தற்காலிக கடைகள். உலகமே சுற்றிவரும் பணம், என்னையும் ராட்டினத்தில் சுற்றவைத்தது. ராட்டினக்காரன் மீதியாக நான்கு காகிதங்கள் கொடுத்தான். நான்கிலும் மீண்டும் மன்மோகன் சிங். ஆனால், நான்கிலும் 'பத்து ரூபாய்' என்ற தமிழ் வார்த்தைகளைக் கண்டாமிருகம் ஒன்று முகர்ந்து பார்த்தது. நான் முகரவில்லை. ஒரு காகிதம் வைத்து நான்கு காகிதம் சம்பாதித்துவிட்டாலும், ஒன்றை வைத்தே ஒன்றும் தெரியாமல் இருந்த நான் நான்கை வைத்து என்ன செய்யப் போகிறேன் என்று தெரியாமல் இருந்தேன்.

வீட்டிற்கு நான் வந்ததும், பானவகைகளில் எனக்குப் பிடித்த கொள்ளுரசம் தயாரானது. குடித்து முடித்தவுடன், அருகில் இருந்த பக்கத்துவீட்டு யாமினி என்னைக் கேட்டாள்:
"சேகரு, சீனிடப்பாவுல இருந்த அம்பது ரூவாய எடுத்தியாடா?"
எனது மூளை, முதன்முதலில் பதறாமல் ஒரு பொய் சொல்ல, எனது கற்பனைவளத்தைத் திறந்து வைத்தது.
"நானா? சீனிடப்பாவ தொட்டதே இல்ல. நாம ரெண்டுபேரும்தானே காலையில எழுந்திருச்ச ஒடனேயே கேரம்போர்டு வெளையாண்டம்?"
மூளை என்னைத் தட்டிக்கொடுப்பதற்குள், அம்மா என் கன்னத்தைத் தட்டியாயிற்று.
"பொய் பேசிறியாடா?"
பளிச்சென்று என்னைச் சுவர் பக்கம் இழுத்து, யாமினி என்னை முதுகுக்குப் பின்னால் வைத்துக் கொண்டாள்.
"நீ ஒதுங்கு யாமினி" என்று அம்மா சொல்லும்போது, என் கன்னத்தை யாமினி தேய்த்துவிட்டுக்கொண்டு இருந்தாள்.
"ரொம்ப செல்லம் கொடுத்து...."
"இப்பவே இப்புடின்னா, இன்னும் சொச்ச காலத்துக்கு...."
"அப்பா வரட்டும்...."
"ஸ்கூல்ல இதுதான் சொல்லித்தாராங்களா?...."
என வாக்கியங்கள் ஆரம்பித்தன. பிறகு அம்மா காபி தயார் செய்தாள்.
யாமினி கேட்டாள்:
"உண்மையச் சொன்னா அம்மா அடிக்க மாட்டாங்கடா? சொல்லு? அப்பறம் கேரம்போர்டு வெளையாட எங்க வீட்டுக்குள்ள விடமாட்டேன்"
சீனிடப்பா திறக்கும் சத்தம் கேட்டது.
"இன்னும் மங்குனி மாதிரி இருக்கான் பாத்தியா? உண்மைய ஒத்துக்கிற வரைக்கும் சோறு கெடையாது"
காபி குடிக்காமல், சீனிடப்பாவை எடுத்துவந்து அவர்கள் முன்னால், சீனிதின்ன ஆரம்பித்தேன். யாரும் ஒன்றும் சொல்லவில்லை.
"ரொம்ப தின்னாத. பல்லு போயிடும்" என்று வெடுக்கென்று டப்பாவை யாமினி எடுத்துக்கொண்டாள்.

எழுந்திரித்து நேராக மாடிக்குப் போய்விட்டேன். அப்பா வருவதற்குள் ஒரு சூரியனும், மூன்று ரயில்களும் மறைந்து போயிருந்தன. கீழே நின்றுகொண்டு, Little Hearts பிஸ்கெட்டைக் காட்டி அப்பா கூப்பிட்டார். அவரின் இன்னொரு கையில் இருக்கும் Lion Dates சிங்கத்தின் கம்பீரத்துடன் நான் மேலேயே நின்றுகொண்டு இருந்தேன். விடுமுறையில் என்னை அழைத்துச் செல்ல அம்மாச்சியும் வந்திருந்தாள். கொஞ்சநேரம் கழித்து, மாடிக்கு அப்பா வந்தார். ஒரு குடத்துத் தண்ணிரை ஊற்றிவிட்டு,
"அனல் போனதுக்கப்பறம் இங்கேயே படுத்துக்க. பயம், பசி ரெண்டுல எது வந்தாலும் வீட்டுக்கு வா. கதவு தெறந்துதான் இருக்கும். நான் அடிக்க மாட்டேன். பயப்படாதே"
ஒரு பாய். இரண்டு போர்வைகள். ஒரு டார்ச் லைட். Little Hearts. Lion Dates.

அப்போது இருந்த மனநிலையில் வானத்து நட்சத்திரங்களையோ, டைல்ஸ்களையோ எண்ணிக்கை செய்ய தோன்றவில்லை. சீனி விசயத்தில் மாட்டிக்கொள்ளவில்லை என பெருமைப்பட்டேன். ஆனால், இத்தனைநாள் தின்ன சீனியால், பல்லில் ஏதாவது கிருமி வந்திருக்குமோ என புதுப்பயம் வந்தது? அடுத்த வருடத்திற்குள் பல்லெல்லாம் கொட்டி, செத்துவிடுவேனோ எனவும் தோன்றியது. "இங்கே இருந்து அடிவாங்குறதுக்குப் பதிலா சாகப்போற வரைக்கும் எங்கையாவது போயி சந்தோசமா இருக்கலாம்" என நான்கு காகிதங்களும் ஒருசேர சொல்லின. காலம் அது, இன்னும் சில மணிநேரங்களில் பங்குனி முடிந்து சித்திரை ஆரம்பிக்கப் போகிறது. சேகர் நான், பள்ளிச் சீருடையுடன் வீட்டுமாடியை விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தேன். வாழ்க்கை அது, சீனிகாண்டத்தில் இருந்து பெயர் வைக்கப்படாத அடுத்த காண்டத்திற்கு நடக்க ஆரம்பித்தது.

(வழக்கம்போல் சற்றே இடைவெளி எடுத்துகொண்டு, கொஞ்சம் மனநிலையை மாற்றிக்கொண்டு தொடருங்கள்)

நன்கு பழக்கப்பட்ட பள்ளிகூடப் பாதையிலேயே நடக்க ஆரம்பித்தேன். பகலில் அமர்க்களப்படுத்திய ராட்டினம், அமைதியாக நின்று கொண்டிருந்தது. ஏதோ ஒரு தமிழ் ஆண்டின் பிறப்பை முன்னிட்டு, ஏதோ ஒரு குழுவினரின் பாட்டுக்கச்சேரி மேடையில் நடந்து கொண்டிருந்தது. நடுராத்திரியில் சுறுசுறுப்பாக எல்லாரும் அமர்ந்து பார்த்துகொண்டிருந்தார்கள். ஒருவர் மேடையில் ஏறி, அம்பது ரூபாய் பரிசளித்தார். சுக்குக்காபி குடித்தேன். ஆடும் ரசிகர்களுடன் நானும் ஆடினேன். அடுத்தநாள், இல்லை இல்லை இன்று ரிலீஸாகும் புதுப்படத்தின் முதல் காட்சியை நேற்று பார்த்துவிட்டு, போதையுடன்வந்த பரமரசிகர்களுடன் சேர்ந்து சந்தோசமாக ஆடினேன். ஒரு நான்கு மணியைப்போல் சட்டையைக் கழட்டி தலைமாட்டில் வைத்துக்கொண்டு, கட்டடமணலில் தூங்கினேன். ஒரு ஐந்து மணியளவில் ஒரு கை என்னைத்தட்டி எழுப்பியது.
"என்ன தம்பி இந்த ஊரா?"
"இல்ல இல்ல". தூக்கத்திலும் தெளிவாகச் சொன்னேன்.
என் முழியைப் பார்த்தே கண்டுபிடித்துவிட்டார். அவர் வேறு கேள்வி கேட்டிருந்தால், வேறு பதில் சொல்லி இருப்பேன். "என்ன? வீட்டவிட்டு ஓடியாந்துட்டியா?" என்று கேட்டதால், "ஆமா" என்று ஏனோ சொல்லிவிட்டேன்.

"சரி வா. டீயக் குடி" நடக்க ஆரம்பித்தார்.
சட்டையக் காணவில்லை. சொல்ல மறந்துவிட்டேன். சுக்குக்காபி குடித்துவிட்டு, மீதிபணத்தைச் சட்டையில்தான் வைத்திருந்தேன். அப்படியே வீட்டிற்குப் போகலாமா என்று தோன்றியது. அப்பெரியவர் கையசைத்துக் கூப்பிட்டார்.
"சட்ட போடாம ஓடி வர்ற அளவுக்கு என்னடாப்பா கோவம்"
வார் டவுசருடன் நின்ற என்னிடம் கேட்டார்.
"காசுகீசு எதாவது வெச்சிருக்கியா?"
"பயங்கரக் கோவக்காரன் போலருக்கே"
"சரி அடுத்து எங்க போறதா உத்தேசம்"
அவர் கேட்ட ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் சரியென்று பதில் சொன்னேன். அது,
"பேசாம என்னோட வந்துட்றியா?"
என்னை யாரென்றே தெரியாமல் ஏறத்தாழ முந்நூறு நாட்கள் வயிற்றில் சுமந்த தாயைப் பற்றி கவலைப்படாமல், யாரென்றே தெரியாத ஒரு கிழவனின் பின்னால், அவன் தந்த பச்சை துண்டைப் போர்த்திக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.

செங்கோல் வாடகை சைக்கிள் கடை. அடையாளம் தெரியாதென சைக்கிள் தரமறுத்தவரிடம், ஏதோ சொல்லி கேரியர் வைத்த சைக்கிள் வாங்கினார். சைக்கிளில் பின்னால் அமர்ந்து கொண்டேன். வயதுக்கு மீறிய வேகத்தில் சைக்கிள் ஓட்டினார்.
"சைக்கிள் ஓட்டத் தெரியுமா?"
"தெரியாது"
"எத்தனாவது படிக்கிற?"
"நேத்துதான் அஞ்சாவதுல கடசி பரிச்ச எழுதுனேன்"
"எதுக்காக வீட்டவிட்டு ஓடியாந்தே?"
"அந்தப் பேச்ச விடுங்க. இப்ப எங்க போறீங்க?"
"எங்க போறம்னே தெரியாம போற ஒருத்தருக்காக, தெரிஞ்ச ஒருத்தரப் பாக்கப் போறேன்"
நிஜமாக நான் அர்த்தம் கேட்கவில்லை. எனக்குப் புரியக் கூடதென்று வேண்டுமென்றே சொன்ன பதிலது.

ஒற்றைச் சிம்னி விளக்கொளியுடன் ஒரு கிராமத்து டீக்கடை தயாராக இருந்தது. சூரியனின் மங்கலான வெளிச்சம் மட்டும், இன்னும் தூங்குபவர்களைப் பார்வையிட்டது. சைக்கிளைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, "இந்தா வர்றேன்" என்று டீயுடன் என்னைக் கைவிட்டார். மீண்டும் சைக்கிள் பயணம்.
"இதெல்லாம் ஒரு காலத்துல பெரிய கொளமா இருந்துச்சு. சர்க்காரு ஆரஸ்பதி எல்லாம் நட்டுச்சு. இப்ப பாத்தா பொட்டக்காடா கெடக்குது. கா....லம்"
அவர் ஊரைப்பற்றிக் கேட்டால், மீண்டும் என்னைப் பற்றி ஆரம்பிப்பார் என ஒன்றும் பேசவில்லை.
"வழிப்பறி, கொலையெல்லாம் ரொம்ப நடக்குதுன்னு சர்க்காரே மரத்த வெட்டிடிச்சு. ஒனக்கிட்ட சொல்லக் கூடாத பல கெட்ட காரியங்களும் இங்கதான்"

ஒற்றைச் சிம்னி விளக்கொளியுடன் அடுத்த கிராமத்து டீக்கடை தயாராக இருந்தது. அந்த ஊரிலும் சைக்கிளைப் பாதுகாத்துக் கொண்டு, ஒரு டீ. அடுத்து ஒரு வயல்காட்டு வழியே சைக்கிளைத் தள்ளிகொண்டே, அடுத்த ஊர். அங்கே சிம்னியை விரட்ட சூரியன் தயாராகிக்கொண்டு இருந்தான். அடுத்த டீ சைக்கிளுடன்.

சைக்கிள் பயணம். பொறுமையை முழுவதும் இழந்தவனாய்,
"என்னங்க ஒவ்வொரு ஊராப் போயி, என்னமட்டும் விட்டுப்புட்டு ஊருக்குள்ள போயிட்டு திரும்ப வர்றீங்க?"
"ஒனக்குப் புரியாது தம்பி"
"சொல்லுங்க. இல்ல எறங்கி ஓடிடுவேன்"
சைக்கிளை நிறுத்திவிட்டு சொன்னார்.
"நான் கேதம் சொல்லி போயிக்கிட்டு இருக்கேன்"
புரியாமல் விழித்தேன்.
"ஒருத்தர் எறந்து போனதுக்கு எழவு சொல்லிப் போறேன்"
யாரோ ஒருவரின் சாவுக்கு நானும் இறக்கப்பட்டேன்.
"நீங்க என்னத் தொட்டு டீ கொடுத்தீங்க. ஒங்க போர்வைய நான் போத்தி இருக்கேன். தீட்டுதானே?"
"என்னத் தொட்டா தீட்டு இல்ல. ஒனக்கு சொன்னாலும் புரியாது"
"அப்ப எழவு சொல்றது எப்புடின்னு எனக்கும் காட்டுங்க"
சந்தோசமிகுதியில் சட்டென வெளிவந்தான், சூரியன்.

(வழக்கம்போல் சற்றே இடைவெளி எடுத்துகொண்டு, கொஞ்சம் மனநிலையை மாற்றிக்கொண்டு தொடருங்கள்)

டீக்கடையைத் தாண்டி சைக்கிளுடன் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தோம்.
"என்ன ஊசி? ஏதாவுது பெரிய காரியமா?" கோவணத்துடன் ஒரு பெருசு கருவேள மரத்தின் பின்னிருந்து கேட்டார்.
"இல்ல சின்ராசு. வேற வெசயமா"
"ஊசியா?"
"ஏன் பேருதான்"

வழியில் ஓர் ஆள் முண்டாசுடன், போர்வையைச் சுற்றிக்கொண்டு வந்துகொண்டு இருந்தார்.
"கட்டக்கலப்ப வீடு எதுங்க?"
"யாரு?"
"கட்டக்கலப்ப"
"அப்புடி யாரும் இல்லேங்கலே... நெசப் பேரே அதானா?"
"அவர கட்டக்கலப்பந்தான் கூப்புட்றது. தெக்கிச் சீமையில பொண்ணெடுத்தாரு"
"நான்கூடத்தான் தெக்கிச் சீமையில பொண்ணெடுத்தேன். என்ன சங்கதியா பக்கணும்?"
"ட்ராக்டரவிட்டு உழுவ மாட்டேன்னு, கலப்பயிலேயே உழுவுவாரே அவருயா"
"என்னய்யா இது? எனக்குத் தெரியாமா?"
"நீ எத்தன வருசமாய்யா இந்த ஊர்ல இருக்க?"
"பொறந்ததுல இருந்து இங்கதான் இருக்கேன்"
"கட்டக்கலப்பயத் தெரியாது?"
"எனக்குத் தெரியாம இங்க ஒன்னுமே நடக்காது"

விருட்டென்று சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார். ஒரு வீட்டின் முன்னால் வாசல் தெளிக்கும் ஒரு பெண்ணை அடையாளம் கண்டு கொண்டவராய்,
"ஏம்மா? இதுதான் கட்டக்கலப்ப வீடா?"
"ஆமாங்க? என்ன விசயம்? டேய் ஆங்ஞான கூப்புடுடா"
"இல்ல செங்களூரு காயங்கோட்டையாரு தவறிப்போயிட்டாரு"
கட்டக்கலப்ப பதறினார்.
"போனவாரந்தான்யா பாத்தேன். மகளுக்கு ஒரு நல்ல எடமா பாக்கச் சொன்னாரு"
"சரிங்க. நான் செல்லுகுடி வேற போகணும்"
சைக்கிள் எடுக்கையில் பக்கத்துவீட்டு எளசு கேட்டது: "எங்களுக்குன்னு எதாவது தனி எழவு சொல்லி வருவாகலா? இல்ல இது ஊருக்கின்னு சொன்னதா?"
"சொல்லாம போகுற சாவுக்குக் கூப்புடாமப் போறதே உத்தமங்க"
சைக்கிள் பறந்தது.

போகும் வழியில். எழவு சொல்லிப் போகும்போது தெரியாத ஒரு ஆளை எப்படி கண்டுபிடிப்பது என சொல்லிக்கொண்டு வந்தார். அவரின் துணையில்லாமல், திம்மியம்பட்டி என்ற ஊரில் துப்பாக்கிக்காரர் வீட்டைக் கண்டுபிடித்து எழவு சொன்னேன். தட்டிக் கொடுத்தார்.
"இப்ப நீயும்தான் எழவு சொன்னே. நீ திட்டா?" என்று அவர் கேட்டிருக்கலாம். இல்லை.
இப்படி ஒரு ஏழெட்டு ஊர்கள். பசி தெரியவில்லை. வெயில் தெரியவில்லை. சைக்கிளில் போகும்போது, சுருங்கி விரியும் அவர் முதுகைப் பார்த்துக் கொண்டும், நடந்து போகும்போது, கட்டை விரலாலும், அதற்கடுத்த விரலாலும் நிலத்தை நன்கு அழுத்தி இருகோடுகள் போட்டுச் செல்லும் அவரின் பாதங்களை ரசித்தவாறும் சென்றேன். வேகமாக நடக்க என் கால்கள் பழகின.

எல்லா ஊர்களும் முடிந்தபிறகு, திரும்பும் வழியில் ஒரு சவுக்குக் காட்டுக்குள் புகுந்து கள் குடித்தார். எனக்கு இளநீர். என்னைப் பார்த்ததில் இருந்து தேக்கி வைத்ததோ என்னவோ, கண்களில் நீருடன் பேச ஆரம்பித்தார். சிறுவயதில் தந்தையை இழந்த அவர், தாயுடன் பஞ்சம் பிழைக்க கண்டி, மலேசியா என்று கடல்தாண்டிபோய், தாயும் இறந்தவுடன் சொந்த ஊர் திரும்பி இருக்கிறார். ஒண்டிக்கட்டையான இவர் யார் என்னா வேலை கொடுத்தாலும் செய்திருக்கிறார். நல்லதோ கெட்டதோ, எல்லா காரியத்தையும் எல்லாருக்கும் இவர்தான். இப்படியே அம்பது வருட வாழ்க்கையில், யார் யாருக்குச் சொந்தம், எங்கே எப்படி போகணும் என்ற பலவிஷயங்கள் இவருக்கு அத்துப்பிடி. உதாரணமாக, ஒரு பெருங்கெழடு இறந்தபோது, அவரது தாய்வீட்டுப் பூர்வீகம் இவரைத்தவிர வேறு யாருக்கும் தெரியவில்லை. தூரத்து ஊர்களுக்கு எழவு சொல்வதும், இன்னபிற வேலைகளும் இவர் வேலைகள். சுருக்கமா சொன்னால், தரைவழி கொலம்பஸ்.

அவர் பேசியதில் இரண்டு வாக்கியங்கள் என்பசுமரத்தில் ஆணியடித்தன.
"என் ஆதி வேற. என் சாதி வேற. இருந்தாலும் ஏன் எழவு சொல்றேன்னா, பணம் சம்புடிக்கத் தெரிஞ்ச மனுசனுக்கு, பாசத்த சம்புடிக்கத் தெரியல. என்னால பாசமோ, பணமோ தேடமுடியாம போச்சு. எவனும் பொண்ணுகூடத் தரல. ஒருத்தனோட கடைசி பாசத்த ஒருத்தனுக்குக் காட்டச் சொல்ற இந்தவேலைய வருத்தப்பட்டு நான் பாரம் சொமக்கல"
"ஒனக்கும் எனக்கும் ஒரே வித்தியாசம்தான். நான் பெத்தவளக் காப்பாத்த ஊரவிட்டுப் போனேன். நீ...."

செங்கோல் வாடகை சைக்கிள் கடை. சைக்கிள்விட்ட பிறகு, பந்தலைக் காணவில்லை; ராட்டினம் தரையில் கழட்டிக் கிடந்தது. இன்னும் அவருக்குப் பஸ் வர அரைமணிநேரம் இருந்தது. வார் டவுசருடன் பேசாமல் அமர்ந்திருந்தேன். டீ. பஸ். வீடு திரும்பினேன்.

வீடு பூட்டி இருந்தது. தொடியில் காய்ந்துகொண்டிருந்த ஒரு சட்டையை மாட்டிகொண்டு யாமினி வீட்டுக்குப் போனேன்.
"எங்கடா போனே?"
"அம்மா எங்க?"
"காலையில ஒரு ஆறு மணி இருக்கும்டா. ஒங்க சின்ன அம்மாச்சி இறந்து போயிட்டாங்கன்னு எழவு வந்திச்சி. ஒங்க அம்மாவும், அம்மாச்சியும்.... எப்பா அப்புடி ஒரு அழுகடா. அழுதுக்கிட்டே ஒடினாங்க. ஒங்க அம்மா அழுது நான் இன்னிக்குத்தான்டா பாத்தேன்"
நான் பார்த்ததே இல்லை.
"ஒங்க அப்பாவும் சைக்கிள எடுத்துக்கிட்டு பின்னாடியே போயிட்டாரு. இந்தா வீட்டுச்சாவி. எங்க வீட்டுலேயே பத்தரமா இருக்கச் சொன்னாரு. இன்னிக்கி முழுக்க ஒனக்கு எங்கவிட்டூ தயிர்சாதம்தான்" என்றாள் யாமினி.

அன்று இரவே அப்பாவும், அடுத்தநாள் மதியம் அம்மாவும் திரும்பிவிட்டார்கள். ஒரு உயிரின் பிரிவு, நான் பிரியப் பார்த்ததை மொத்தமாக மறைத்துவிட்டது. சீனிகதையும், எழவுகதையும் யாருக்கும் தெரியாமல் வைத்து, காலம் என்னை வைத்து விளையாடிய கதை, வெளியே எதுவும் சொல்லாமல் மனதிற்குள்ளே திட்டங்கள் போட்டு, தக்க நேரத்தில் செயலால் வெளிப்படுத்தும் அதிஉன்னத தத்துவத்தை, ஊசி என்ற கிழவன் மூலம் கற்றுக்கொடுத்துவிட்டது.

மீண்டும் யாமினி வீட்டில் கேரம்போர்டு. இரண்டு நாட்கள் கழித்து, சோகம் கொஞ்சம் விலக அம்மா என்னிடம் பேசினாள்:
"சேகரு, இந்தா அம்பது ரூவா. பத்து மணியப் போல யாமினி ரேஷன் கடக்கிப் போவா. அவளோட நீயும் போயி, சீனி வாங்கிட்டு வந்துடு. சீனிடப்பாவுல முக்காவாசி வரும். சின்னப்பயன்னு ஏமாத்திடுவாங்க. பாத்து
யாமினி, இவனக் கொஞ்சம் பாத்துக்க. இன்னக்கிச் சின்னம்மாவுக்குப் பாலு. சாயந்தரம் வந்துட்றேன்"
அதே மன்மோகன் சிங். ஐம்பது ரூபாய். சீனிடப்பா. சேகர். ஆனால் ஏதோ சொல்லமுடியாத் ஒரு மிகப் பெரிய வித்தியாசம்.

அந்த ஏப்ரல் 14, என்னைவிட்டுப் போய் 14 வருடங்கள் ஆகிவிட்டது. மன்மோகன் சிங், ரங்கராஜன், பிமால் ஜலான், ஒய்.வி.ரெட்டி என்று பலபேர் கையெழுத்துப் போட்டு பரிந்துரைக்கும் காகிதங்களும், நானே கையெழுத்துப் போட்டு பரிந்துரை செய்துகொள்ளும் கார்டுகளும் என்னிடம் நிறைய இருந்தாலும், ராட்டினத்தில் கீழிறங்கும்போது வயிற்றில் தோன்றும் அந்த சுகம் எனக்கு மறந்துபோய்விட்டது; யாரோ ஒருவன் என்னை ஒரு பகல் முழுவதும் சுமந்துகொண்டு, பசி-கவலை-அறியாமை எதுவும் தெரியாமல் டீக்கடைகளில் கற்றுக்கொடுத்த வாழ்க்கை மறக்கும்போது நானிருக்க மாட்டேன்.

நாம் சொல்லாமல் செல்லும்போது, அழையாமல் வரப்போகும் உறவுகளுக்காக அலைவோம்.

-ஞானசேகர்

Tuesday, November 28, 2006

இயற்கை எய்தியது இயற்கை



மெதுவாக உலகம்
செத்துக்கொண்டு இருக்கிறது
யாருக்கும் தெரியாமல்!
-யாரோ

வரங்களே சாபங்களானால்
இங்கு
தவங்கள் எதற்காக?
-அறிவுமதி (என நினைக்கிறேன்)

மரம் கேட்டது:
"எங்களில் முடியும்
ஒரு போதிமரம்
ஒரு சிலுவைமரம்.
உங்களால் முடியுமா
ஒரு புத்தனோ
ஓர் இயேசுவோ?"
-யாரோ


மொழி புரியாத மலை.
புரிய வைக்க
250 INRக்கு ஒரு கிழவன்.
போரிஸ் எல்ட்சின் போல்
அவனுக்கு மூன்று விரல்கள்.

நிற்கும் இடமே
மலைத் தொடரின்
உயரமான இடம் என்றான்.
முதுகுக்குப் பின்னால்
ஒரு மவுண்ட் ரஷ்மூர்.

தூரத்துப் பாறைகாட்டி
மிசாரு மசாரு
மிகசாரு என்றான்.
காந்திக்கு இன்னொரு
சத்திய சோதனை.

தற்கொலை முனை என்று
ஒரு ரூபாயைக் கைவிட்டான்.
சில விநாடிகள் கழித்து
சத்தம் கேட்டது
அவனுக்கு மட்டும்.

புண்ணிய நதியின்
பிறப்பிடம் இதுதான் என
காலடியில் காட்டினான்.
சதுர அடி கருப்பைவிட்டு
பிரசவிக்கவில்லை புண்ணியநதி.

4000 அடி பள்ளத்தில்
புண்ணிய நதிகள் ஐந்தில்
இரண்டைக் காட்டினான்.
தண்ணீர் இல்லை.
தடம் இருந்தது.

மற்ற இரண்டு
நதிகள் காட்டினான்
அதே பள்ளத்தில்.
கரை இல்லை.
கட்டடம் இருந்தது.

பக்கத்து அரபைவிட்டு
தூரத்து வங்கம் சேரும்
அந்த ஒற்றை நதியின்
கடைசி உயிர்த்திரவத்தை
அணையின் அடிவயிறு கைது செய்தது.

கோவில் புகுத்தினான்.
ஒரு வாய்க்காலில் இருந்து
தண்ணீர் பெற்றது
ஒரு சிறுகுளம்.
அதன் வெப்பநிலை
0 டிகிரிக்கும் கொஞ்சம் அதிகம்.

சுத்தம் ஏதும் பாராமல்
குளத்துத் தண்ணீரில் சிலர்
குடல் நனைத்தனர்
தலை நனைத்தனர்
வியாதி கழுவினர்
அங்கம் காட்டினர்.

அவ்வாய்க்காலின் பிறப்பிடம் பார்த்தேன்.
ஐந்து வாய்க்கால் தண்ணீர்
சேர்ந்து உருவானது
அந்த ஒற்றை வாய்க்கால்.
ஒவ்வொன்றின் மேலேயும்
புண்ணிய நதிகளின் பெயர்கள்!

-ஞானசேகர்

Wednesday, July 05, 2006

சுயப்பிரசவம்

(டாக்டரான தனது சொந்த அண்ணன் தனக்குப் பிரசவம் பார்த்ததால், சேலையில் தூக்கில் தொங்கினாள் ஒரு தமிழச்சி, போன நூற்றாண்டின் கடைசியில். மகன் பிறக்கப் போகும் நேரம் கெட்ட நேரம் என்று ஜோசியர் சொன்னதற்காக, தன்னைத் தலைகீழாய்த் தொங்கவிட்டு, சில நிமிடங்கள் பிரசவத்தைத் தள்ளிப் போட்டாள் இன்னொரு தமிழச்சி, சங்க காலத்தில் ஒரு சோழ நாட்டில். இவர்கள் இருவரைப் பற்றியும் நான் கருத்துகள் ஏதும் சொல்ல விரும்பவில்லை. ஆனால், கால வித்தியாசங்கள் ஏதும் இல்லாமல், இக்கவிதையில் வருவது போல் நிகழ்ந்து கொண்டிருக்கும் பிரசவங்களுக்கு என் கவிதையால் கருத்து சொல்வேன்)

மூத்தரப் பாவாட
மொழங்காலுக்குச் சுருட்டிக்கிட்டு
மூலையில தூங்குறா
மூணுவயசு மூத்தமக.

குச்சி ஐசு ரெண்டு
அப்பனுக்கு ஆர்டர் போட்டுப்புட்டு
அம்மணமாத் தூங்குறா
நடுவுல சின்னமக.

பொட்டச்சியப் பெக்கப்போற
பொட்டக் கழுதக்கித்
தொணையெல்லாம் ஏதுக்குன்னு
வெசலூரு கெரகாட்டம்
போயிட்டாரு எம்புருஷன்.

ரெண்டு பொட்டகளப்
பெத்துப்போட்ட முண்டச்சின்னு
ஊரெல்லாம் வசவுனாலும்
எங்கப்பன் பொறப்பாரு
மூணாவது மாணிக்கமா
ஆம்பள சிங்கமா
அடுத்ததா ஏன் வவுத்துல.

நடுசாமம் ரெண்டுமணி.
நெஞ்சுல ஒதக்கிறான்
அடிவவுத்த முட்டுறான்
வவுத்துல குத்துறான்
கருவறக் கதவத்
தட்டித்தட்டிப் பாக்குறான்

நாலு உசிர உட்டுப்புட்டு
நடுத்தெரு ஆட்டத்துல
நழுவுந்துணி பாக்கப்போன
புருஷனத்தான் கூப்புடவோ?

தலக்கி எண்ண வெச்சு
பரலோக வழிகாட்ட
பேரப்பய வேணுமின்னு
திண்ணையில தவமிருக்கும்
காலு வெலங்காத
மாமனாரக் கூப்புடவோ?

ஆம்பள வித்து
அழிஞ்சுபோன சிருக்கிவந்து
மருமகளா வாச்சுட்டான்னு
ஊரெல்லாம் ஒப்பாரி
சமயக்கட்டில் படுத்திருக்கும்
மாமியாரக் கூப்பிடவோ?

ரெண்டு உடம்பத் தூக்கிக்கிட்டு
ரெண்டு தெரு தாண்டிப் போயி - இந்த
ரெண்டு மணி நேரத்துல - முன்ன
ரெண்டு பிரசவம் பாத்துப்போன
வெங்கலமண்டாயி கூப்புடவோ?

மனுசப்பயக் கூப்புடவோ - இங்க
உருப்படியா யாருமில்ல.
சாமிகளக் கூப்புட்டவோ - அதுக
வந்ததாவும் சரித்திரமில்ல.
ஒக்காந்து யோசிக்கவோ - இது
தள்ளிப்போடும் காரியமில்ல.
ரெண்டுபுள்ள பெத்துப்புட்டேன் - இப்ப
ஆபத்துக்குப் பாவமில்ல.

கட்டுலுல படுத்தாக்க
ராத்திரி வேளையில
சத்தம் வருதுன்னு
எம்புருஷன் சாச்சுவெச்ச
இரும்புக் கட்டுல
திருப்பிப் போடுறேன்.

எங்காத்த சீர்செஞ்ச
கட்டுலுக்குக் கீழே
பாயில படுத்திருக்குக
என்னோட மகாராணிக ரெண்டும்!
கட்டுலுக்கு மேல
முண்டக்கட்டயா ஒக்காந்துருக்கேன்
எங்காத்தாவோட மகாராணி நானு!

கட்டுலோட ஒருகாலோட
பீச்சாங்காலக் கட்டி
கட்டுலோட மறுகாலோட
சோத்தாங்காலக் கட்டி
கையால முட்டுக் குடுத்து
ஒதட்ட வாய்க்குள்ள வெச்சு
கண்ண உள்ள தள்ளி
ஒம்பதரைமாசப் பொதையல
வெளிய தள்ளுறேன்!

அண்ணன் தம்பிக
இல்லாம பொறந்த நான்
கழுத்து சுத்தி இருந்த
தொப்புள் கொடி பத்தி
கவலப்பட என்ன இருக்கு?

தொப்புளுக்குக் கீழ பாக்குறேன்.
நாசமாப் போச்சு!
திரும்பவும் பொறந்திருச்சு
பாழாப்போன பொட்ட!

பொறந்த மேனியாவாயே
ரெண்டு பேரும் இருக்கோம்
விடியற வரைக்கும்.
கதவத் தொறக்குறேன்
ஒத்தசேல சுத்திக்கிட்டு.
மூலையில ஒக்காந்துட்டேன்
எழவு வீடுபோல.
கொழந்த தொடக்கிறாரு
கெரகாட்டம் பாத்தவரு.

சேல வாய்சொருகி
எட்டி நின்னு பாத்துப்போற
மாமியாரே சொல்லுங்க
"சத்தியமாத் தெரியலையா
ஒங்க மொகம்
ஏன் புள்ள மேல?".

நாற்காலி வண்டியில
பார்வையிட வந்துபோகும்
மாமனாரே சொல்லுங்க
"சத்தியமா கேக்கலையா
கட்டுலப் பாடையாக்கிச்
சவமொன்னு பொறந்த சத்தம்?".

கட்டுலுக்கு மேல ஒண்ணு
கட்டுலுக்குக் கீழ ரெண்டு
மூணுக்கும் நாளக்கி இந்த
முண்டச்சி கெதிதானோ?

கட்டிப் போட்டுத்தான்
கருவறை திறக்கணுமோ?

பிறப்பு வீட்டுலதான்
மயானம் பாக்கணுமோ?

தன் ரத்தம் பொறக்கையில
தன் சதையும் ஆடாம போகணுமோ?

ஆம்பளயா மட்டுமே
அவதாரம் எடுத்துவந்து
அதிசயங்க காட்டிப்போகும்
ஆம்பள சாமிகளே!
பொம்பள நான் கேக்குறேன்
பதில் சொல்ல மாட்டீகளோ?

ஒத்தக் கண்ணுல
கோவம் கொப்பளிக்க
மனுசப் பயலுகளக்
களையெடுக்க வேணுமின்னு
அவதாரம் எடுக்க
அவகாசம் ஏதும் இருக்குதான்னு
தோதிருந்த சொல்லுங்க
ஆம்பள சாமிகளா!

அவசரமா முடிவெடுத்து
அவதாரம் எடுக்கையில
மறந்து தொலச்சிடாதீக.
மூணு பொட்டச்சிக்குத் தம்பியா
ஏன் வவுத்துல பொறந்து பாருங்க!

கடவுளையே வவுத்துல சொமந்தாலும்
சொயமாத்தான் பாத்துக்குவேன்
ஏன் பிரசவம் எனக்கு நான்.
அதுவரைக்கும் நிம்மதியா
செவுத்துல சாஞ்சு நிக்கும்
ஆத்தா தந்த இரும்புக் கட்டில் மட்டும்!

-ஞானசேகர்

Wednesday, June 21, 2006

விவாக ஒப்பந்த விழா அழைப்பிதழ்

தவறாமல் எண்ணுடன்
தவறாமல் இருக்கிறது
அதிகார வசனங்களோடு
சிகரமேறிய மதம்!

என் பயமே மதிலாகி
சொல்லாமல் விட்டுப்போன
நாட்களுக்கு எல்லாம்
பக்குவமாய்ப் பழிவாங்க
ஏளனமாய் என்னை
எதிர்நோக்கும்
கி.பி.யில் ஒரு முகூர்த்த நாள்!

தூரங்களே தூதாகி
சந்தர்ப்பம் காத்திருந்த
நேரங்களுக்கு எல்லாம்
பதறாமல் பழிவாங்க
என்னை ஆவலுடன்
எதிர்நோக்கும்
முகூர்த்த நாளின் நல்ல நேரம்!

அந்தஸ்தின் ஆதரவு
அணுவளவும் இல்லாத
அற்பக் காதலனாய்
கண்காட்சிக் கலைப்பொருளாய்த்
தொட்டுப் பார்க்கிறேன்
ஓரத்துச் சரிகைகள்!

சுத்தத்திற்குப் பெண் வைத்து
பெண்ணைச் சுத்தமாக்காத
திருவளர்ச் செல்விக்கும்
காதலுக்குச் அசமமாகாத ஏட்டறிவுக்கும்
இடையே இடப்பக்கம்
என் எல்லாக் கவிதையின்
கருவின் பெயர்!

ஆணைப் பலமாக்கி
பலத்தைப் பெண்ணில் வைத்த
திருவளர்ச் செல்வனுக்கும்
அயல்கண்ட அயல்நாட்டிற்கும்
இடையே வலப்பக்கம்
உன் எதிர் கால
முன்னெழுத்துக்காரன் பெயர்!

வலப்பக்க மூலையில்
ஒதுங்கிக் கிடக்கும்
உன் தந்தையின் பெயரைத்
தாங்கிப் பிடித்திருக்கும்
வலப்பக்க சாதியும்
இடப்பக்க மதமும்!

மணம் இல்லாதவன்
மணம் முடித்து வைக்க
பெரியோர்கள் ஒப்பத்துடன்
சுற்றமும் நட்பும்
வாழ்த்தி ஆசிர்வதிக்க
கை மாறப் போகிறது
காதலி என்ற உறவு!

மதத்தின் சம்மதம் இல்லாமல்,
சாதியின் சாதகம் இல்லாமல்,
FLAMES விளையாட்டில்கூட
நமக்குள் M இல்லாமல்,
இன்றுவரை காதலைச்
சொல்லாமல் போன
என்னால் இப்போது
முடிந்தது ஒன்றுதான்,

வெறுமையாய்க் கிடந்த
என் இதயத்தில்
நான் கிறுக்கிய என் காதல் போல்
பத்திரிக்கையின் பின்புறம்
ஒருபக்க இக்கவிதை!

-ஞானசேகர்