புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Monday, April 11, 2011

ஒலிநடனம்

சந்தையின் சந்தடியைத் தனிமையிலும் தனிமையின் சாந்தத்தைச் சந்தையிலும் உணரமுடிந்தவனே ஞானி.
- யாரோ

நடுநிலைப்பள்ளி வகுப்புகளில் சமூகவியல் பாடத்தில் பார்த்திருந்த அவ்விடத்தின் உருவம் மட்டும் என்நினைவில் அழியாமலேயே தங்கிப் போனது. தரையில் படுத்துக் கொண்டு புகைப்படம் எடுப்பவனுக்குக் கம்பீரமாக நிமிர்ந்து நிற்பதுபோல் தோற்றமளிக்கும், அக்கட்டிடத்தின் பெயர் கோல்கும்பா (Gol Gumbaz). ஹைதராபாத்தில் ஒருமுறை கோல்கும்பா என்று நினைத்துப் போய், அதேபோல் உச்சரிக்கப்படும் கோல்கொண்டா (Gol Gonda) என்ற இடத்தின் அறிமுகம் கிடைத்தது. நீண்ட நாட்களாக கோல்கொண்டாவைக் கோல்கும்பா என்று சுட்டியும் திரிந்திருக்கிறேன்.

கர்நாடகாவில் பிஜப்பூரில் (Bijapur) இருக்கிறது; ஏதோவொரு மன்னனின் கல்லறை; என்பனதவிர வேறொன்றும் எனக்குத் தெரிந்திருக்கவுமில்லை. மனதில் புதைந்துபோன உருவமொன்றைத் தரிசித்துவிட வேண்டுமென்ற எதிர்பார்ப்பைத்தவிர வேறேது நோக்கமுமின்றி, உள்ளூர் காலநிலையும் வாழ்க்கையும் வெக்கை வீசிக்கொண்டிருந்த ஒரு பொழுதில், தமிழ் ஆங்கிலம் மட்டுமே தெரிந்த இரண்டுபேர் அடங்கிய குழுவொன்று கோல்கும்பா கிளம்பியது. மூன்றுமணிநேர இருப்பில், வாழ்க்கையில் எதையோ சாதித்துவிட்டதாக எனக்கேற்பட்ட பிரமிப்பை உங்களுடன் பகிர்கிறேன்.

பாமினிப் பேரரசுதான் (Bahmani kingdom) தென்னிந்தியாவில் நிறுவப்பட்ட முதல் சுதந்திர மற்றும் ஒரே ஷியா (Shia) இஸ்லாமியப் பேரரசு. மொகலாயப் பேரரசர் முகமது பின் துக்ளக்கிற்கு எதிராகப் புரட்சிசெய்து அலாவுதீன் ஹாசன் பாஹ்மன் ஷா என்பவரால் 1347ல் உருவாக்கப்பட்டது. தக்காணப் பீடபூமியை (Deccan plateau) ஐம்பெரும் மாநிலங்களாகப் பிரித்து ஆண்டுவந்த பாமினிப் பேரரசின் ஒருமாநிலம்தான் கோல்கும்பா இருக்கும் பிஜப்பூர்; இன்னொன்று ஹைதராபாத்தில் இருக்கும் கோல்கொண்டா! அப்பறம் பீதர் பேரர் அகமத்நகர்.

பாமினிப் பேரரசின் ஆளுநராக இருந்த யூசுப் அதில்ஷா என்பவரால்தான் பிஜப்பூர் நகரம் உண்டாக்கப்பட்டிருக்கிறது. 1490 முதல் அதில்ஷா வம்சத்தின் ஒன்பது அரசர்களால் இந்நகரம் ஆளப்பட்டிருக்கிறது. போர்த்துக்கிசியர்கள், மராட்டியர்கள், மொகலாயர்கள் என்ற பல அச்சுறுத்தல்களுக்குட்பட்ட இப்பேரரசை 1686ல் மொகலாயப் பேரரசர் அவுரங்கசீப் வென்றுபோனார். அதில்ஷா அரசப் பரம்பரையினால் ஆளப்பட்டிருந்த, பதினேழாம் நூற்றாண்டின் பிஜப்பூரைத் தக்காணத்தின் பல்மீரா (Palmyra of Deccan)என்றெல்லாம் புகழ்ந்திருக்கிறார்கள். அதில்ஷா அரசவம்சத்தின் ஏழாவது அரசரான முகமது அதில்ஷாவின் கல்லறைதான் கோல்கும்பா.

பிஜப்பூர் பேருந்து நிலையத்தைக் காலை எட்டு மணியளவில் அடைந்தோம். அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில், இரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கிறது கோல்கும்பா. அனுமதிச்சீட்டு வாங்கிக்கொண்டு, நீண்ட பாதையின் முடிவிலிருக்கும் கோல்கும்பா நோக்கி நடந்தோம். அதற்கு முன்னால் அருங்காட்சியம் ஒன்றும் இருக்கிறது. திட்டப்படி முதலில் கோல்கும்பா.


(கோல்கும்பா பின்னணியில் அருங்காட்சியகம்)

யானை தடவச் சென்றிருந்த குருடர் கதையாய், ஒரு மன்னனின் கல்லறையென்ற ஒற்றைவரித் தகவலுடன் போயிருந்த எங்களுக்கு, பற்பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. பிடறி பின்னங்காலைத் தொட அண்ணாந்து பார்க்கவைக்கும் அந்த நினைவுச் சின்னத்தின் உயரம், கிட்டத்தட்ட 20தள அடுக்குமாடிக் குடியிருப்பிற்குச் சமம். ஒரு கனசதுரப் (cube) பெட்டகத்தின்மேல் வைக்கப்பட்ட குவிமாடத்தின் (dome) அமைப்பு. தென்கதவுதான் பிரதான வாசல். உள்ளே நுழைந்தால், நான்கு சுவர்களைத்தவிர பிடிமானம் வேறேதுமில்லாத ஒரு பிரம்மாண்டமான சதுர அறை; ஒவ்வொரு பக்கமும் 135 அடி நீளம்; சுவர்களின் தடிமன் 10 அடி; உயரம் 110 அடி.

கோல்கும்பாவின் நான்கு மூலைகளிலும் கட்டிடத்தோடு ஒட்டியிருக்கும் கோபுரங்கள். இஸ்லாமிய முறையில் அமைக்கப்படும் மினாரெட் (minaret), சீன முறையில் அமைக்கப்படும் பஹோடா (pagoda) என்ற இரண்டு முறைகளின் கலவை. உட்புறப் படிக்கட்டுகள் மூலம் இணைக்கப்பட்ட எழுதளங்கள். ஏழாவது தளத்தின் வாசல், கனசதுர உச்சியில் (மொட்டைமாடியில்) திறக்கிறது.



(கோல்கும்பாவின் பிரதான தென்வாசல்)

தென்வாசல் வழியே உள்நுழைந்த இரண்டுபேர் அடங்கிய குழு, தென்கிழக்கு கோபுரம் வழியே படியேற ஆரம்பித்தது. படிகளின் உயரம் அதிகமாக இருந்தபடியாலும், இதமான குளிர்க்காற்று சுகமாய் இருந்தபடியாலும், முன்னேறும் பெண்களின் பிட்டத்தை எழுநிலைகளிலும் பின்தொடர்ந்து ரசித்துக் கொண்டிருந்த இன்னொரு குழுவிலிருந்து சற்று விலகியிருக்க நினைத்தபடியாலும் நாங்கள் கனசதுர உச்சியை அடைய கொஞ்சம் அதிகநேரம் எடுத்துக் கொண்டோம். கோபுரத்தின் ஏழாம்தளத்தைவிட்டு மொட்டைமாடிக்கு வந்தால், கண்ணெதிரே பிரம்மாண்டமாக நிற்கிறது குவிமாடம். இரண்டுபேர் நடக்குமளவிற்குக் குவிமாடத்திற்கும் கனசதுர விளிம்பிற்கும் இடையே இடைவெளி இருக்கிறது. இரண்டு சுற்றுகள் சுற்றினோம். முதல்சுற்று கோல்கும்பாவிற்கு மட்டும். இரண்டாம் சுற்று ஊர்ச்சுற்று.

அங்கிருந்து குவிமாடத்தின் அடியில் இருக்கும் ஒரு குறுகிய வாசலை அடைந்தோம். இதுபோல் ஆறுவாசல்கள் இருக்கின்றன. குவிமாடத்தின் அடித்தளத்தைச் சுற்றி மூன்றரை மீட்டர் நீளமுடைய, பால்கனி போன்றதொரு நடைபாதை இருந்தது. அங்கிருந்து கீழே இருக்கும் கனசதுர கீழ்த்தளத்தைப் பார்க்கப்போய், எனக்கிருக்கும் acrophobia கொஞ்சம் விழித்துக் கொள்ள ஓரமாக அமர்ந்துவிட்டேன். என்னைப்போல் பலர், உயர பயத்தில் சுவரைப் பார்த்துக் கொண்டு அமர்த்திருந்தார்கள். ஒரு முதியவர் மிகவும் சிரமப்பட்டு கண்களை அகலப்படுத்தி, கால்களை நீட்டி விரித்து, மூச்சை ஆழப்படுத்தி கொண்டிருந்தார்.

நீங்கள் பயந்துபோவீர்கள் என இதுவரை நான் சொல்லாமல் விட்டதை இப்போது சொல்கிறேன். கோல்கும்பா அருகாமையில் முதன்முதலில் வந்தபோது, அதனுள் இருந்து வித்தியாசமான சத்தங்கள் மிக அதிக வீரியத்துடன் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. வாசலிலிருந்த பலகையில் படித்தபிறகுதான், எவ்வளவு மிகப்பெரிய பொக்கிஷத்தைப் பார்க்க வந்திருக்கிறோம் எனப் புரிந்தது. குவிமாடத்தின் அடியைச் சுற்றி உட்புறமாக இருக்கும், பால்கனி போன்ற இந்த வட்டவடிவ சுற்றுப்பாதைக்கு முணுமுணுக்கும் மாடம் (whispering gallery) என்று பெயர். இதன் எந்தவொரு இடத்திலிருந்தும் எழுப்பப்படும் காகித அளவிலான சத்தம்கூட, அதன் நேரெதிர் முனையில் மிகத்துல்லியமாகக் கேட்கும். மன்னர் மனைவியுடன் இம்முறையில்தான் பேசிக் கொண்டாராம். அதைவிட ஆச்சரியம், எந்தவொரு ஒலியும் 26 வினாடிகளுக்குள் 10 முதல் 12 முறைகள் எதிரொலிக்கப்படுகிறது. நாட்டியக் கலைஞர்கள் கீழ்த்தளத்தில் நடனமாட, இசைக்கலைஞர்கள் இங்கிருந்து இசைக்க..... ராஜவாழ்க்கை! ஏதோவொரு சத்தத்தைச் சுமந்தபடி எப்போதும் நகர்ந்தபடியே இருக்கும் காற்றின் மென்தழுவல், அற்புதமான அனுபவம்!



(முணுமுணுக்கும் மாடம்)

உயர ஒவ்வாமை போனபிறகு, தைரியமாக கீழே குனிந்து பார்த்தேன். கீழ்த்தளத்தில், ஒரு சதுர மேடையில் 7 பேரின் கல்லறைகள். முகமது அதில்ஷா, இரு மனைவிகள், மகன், மகள், மருமகள், நாட்டிய மங்கை ரம்பை. அருங்காட்சியகம் போனோம். புகைக்கும் ஒரு பெண்ணின் புகைப்படம் இருந்தது. அதில்ஷா அரசக்குடும்பத்தின் ஆட்சியாளர்களைத் தவிர, அவர்களின் சகோதர சகோதரிகளின் பெயர்கள் அறியப்படவில்லையென குடும்பமரம் (family tree) சொன்னது. சகோதர்களையும், சகோதரிகளின் கணவர்களையும் கூட அடையாளம் காட்டுகிறது இணையம்.

கோல்கும்பா பற்றிய சாதனைக் குறிப்புகள்:

1. துண்களேதும் கிடையாது. எந்தவொரு பிடிமானமுமின்றி (uninterrupted floor spacing), உலகிலேயே அதிக பரப்பளவை (1693 சதுர மீட்டர்) ஆக்கிரமித்திருக்கும் கட்டிட அதிசயம் கோல்கும்பா.

2. துருக்கியின் ஹாசியா சோஃபியா (Hagia Sophia), வாடிகனின் புனித வளனார் பேராலயம் (Saint Peter's basilica) வரிசையில் கோல்கும்பாவின் குவிமாடம் உலக அளவில் மூன்றாவது பெரியது.

3. 26 வினாடிகளுக்குள் 10 முதல் 12 முறைகள் எதிரொலிகள் தொடர்ச்சி, உலகில் வேறெங்கும் கண்டறியப்படவில்லை.

4. வாடிகனின் புனித வளனார் பேராலயத்தின் குவிமாடம், கோல்கும்பாவைவிட 5மீட்டர் அதிக விட்டமுடையதாக இருந்தாலும், கோல்கும்பாவின் குவிமாடத்தைத் தாங்கியிருக்கும் கனசதுரம் பெரிதென்ற முறையில், உலகிலேயே குவிமாடவடிவ கட்டிடங்களில் அதிகப் பரப்பளவுடைய பெருமையும் கோல்கும்பாவையே சேர்க்கிறது.

5. அரைக்கோளவடிவ குவிமாடத்தைச் சதுர அறைமேலோ, நீள்வட்ட குவிமாடத்தைச் செவ்வக அறைமேலோ பொறுத்த,கோளத்தின் முக்கோணத் துண்டு போன்ற pendative என்ற கட்டுமான அமைப்புகள் பயன்படுகின்றன. வெட்டிக்கொள்ளும் pendativeகள் உலகிலேயே இரண்டு இடங்களில் மட்டும்தான் வெற்றிகரமாக கட்டப்பட்டிருக்கின்றன. இன்னொன்றையும் பார்க்க வேண்டுமானால் ஸ்பெயினிலுள்ள கர்டோபா (Mosque of Cordoba) போகவேண்டும்.


(தரைத்தளத்திலிருந்து குவிமாடத்தின் தோற்றம்; முணுமுணுக்கும் மாடத்தில் மனிதத்தலைகள் தெரிகின்றனவா?)

முணுமுணுக்கும் மாடத்தில் தள்ளாடும் நான்கு பாட்டிகள், எழுதளங்கள் ஏறிவந்து, எதிரொலிகளைக் உணர்ந்ததில் பிறவிப்பயன் அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிப் போனார்கள். அவரவருக்குப் பிடித்த பதங்களைக் கத்திப் பார்த்தார்கள்; கெட்ட வார்த்தைகள், பன்மொழிகளில் I love you, சற்றுமுன் தெரிந்துகொண்ட அழகுப்பெண்பெயர் என எதிரொலி சோதனை செய்துபார்த்தார்கள். எல்லாவற்றையும் நூற்றாண்டுகளாக கேட்டுக்கொண்டு துயில்கின்றன ஏழு உடல்கள். யாரும் இல்லாத பொழுதில் அவர்கள் எழுந்துவந்து, மீயொலியில் பேசிக்கொள்வதாக கற்பனை செய்துகொண்டு விடை பெற்றோம்.

Earphoneல் பாடல் கேட்டுக் கொண்டு, நண்பர்கள் பேசுவதுகூட தெரியாமல், தட்டிகேட்டால் மட்டும் அதை எடுத்துவிட்டு பேசிய ஒரு வாலிபனைப் பார்த்தேன். அவன் ஊர் திரும்பியவுடன் சொல்வதற்கேதேனும் செய்திகள் வைத்திருப்பானா என்பதும் ஓர் ஆச்சரியமே! கேட்க மறுக்கும் மனித இனத்திற்கு இன்னும் சில்லாண்டுகளில் காதில்லாமல் போகுமெனும் பரிணாமக் கூற்றில் ஆச்சரியமேதுமில்லை!

- ஞானசேகர்

Sunday, January 30, 2011

அங்காடி நாய்

செல்வத்தின் உச்சமும்
வறுமையின் எச்சமும்
-வைரமுத்து (பெய்யெனப் பெய்யும் மழை)

மரணப்படுக்கையில் இருப்பவரின்
ஞாபகத்திலாடும்
கடைசி முகங்களில் ஒன்று
ஒரு வேசியினுடையதாகவும்
இருக்கலாம்.
- மகுடேஸ்வரன் (காமக்கடும்புனல்)


(பெண்ணுக்குப் பெயர் வைக்காத பிடிவாதத்துடன் இன்னுமொரு கதை)

இரகுராமன். 12 வருடங்களாக எனது நண்பன். அவனுக்குத் திருமணமாகி ஒருமாதங்கூட முடிந்திருக்கவில்லை. மூணாறு அந்தமான் டார்ஜிலிங் சிம்லா என்று எங்கேயோ இருப்பார்கள் என்ற நினைப்பில் அவனுக்குப் போன் செய்வதைத் தவிர்த்து வந்தேன். சரியாக 25 நாட்கள் கழித்து ஒரு வெள்ளிக்கிழமையில் அவனே அழைத்தான்.

அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் வாசலை அடைந்தபோது இரவு 8 மணி. வாட்ச்மேன் அனுமதிக்கவில்லை. ரகு ஏதோவொரு சன்னலில் இருந்து கையசைத்தபின் அனுமதிக்கப்பட்டேன். அங்கிருந்த கார் கண்ணாடி ஒன்றில் தலைமுடி சரிசெய்து, அவனது தளத்தை அடைந்தபின் அங்கிருந்த வீடுகளில் எதுவென்று தெரியாமல், கதவு திறந்திருந்த ஒரு வீட்டின் அருகில் சென்றேன். ரகுவின் மனைவிபோல் ஒருத்தி சோஃபாவில் சம்மணக்காலிட்டு சின்னத்திரைக் குடும்பவிவகாரங்களைக் கவனித்துக் கொண்டிருந்தாள். ரகுவின் மனைவியேதான். இடதுகைப்பழக்கம். அழைப்புமணி அழுத்த வலதுகை உயர்த்தியபோது பின் வீட்டில் இருந்து ரகு கூப்பிட்டான்.

'டேய் சேகர். இந்த வீடு. என்ன மறந்திட்டியா?'
உள்ளங்கை குவித்து தோளில் தட்டினான்.
'ஓ..... சரியா ஞாபகம் இல்லை. கல்யாணத்துக் முன்னாடி வீடுதேடி அலஞ்ச்சப்ப வந்தது'
கதவை உள்தாழிட்டான்.
'எதிர்வீட்டுப் பொண்ணு எடது கைல ரிமோட் யூஸ் பண்ணிட்டி இருந்துச்சு. ஒன்னோட மனைவியோன்னு கொழம்பிப் போய்ட்டேன்'
'ஞானசேகர்ட்ட புடிச்சதே யானமாதிரி இந்த ஞாபகசக்திதான்'
ஆள்காட்டிவிரலால் என் இடது நெற்றிப்பொட்டில் குத்தினான்.
'அவதான் என் ஒய்ஃப்'.

ஒவ்வொரு அறையாகச் சுற்றிக்காட்டினான். கல்யாணத்திற்கு முன் இருவரின் வாழ்க்கைகளையும் பிரதிபலிக்கும் புகைப்படங்கள் அலமாரிகளையும் மேசைகளையும் நிரப்பியிருந்தன. எனக்கு நன்கு பரிட்சயப்பட்டிருந்த ரகுவின் பழைய புகைப்படங்களை அவன் மனைவியின் புகைப்படங்களுக்கு இடையே பார்க்கும்போது, ரகு எனக்கு மிகவும் வித்தியாசமாகத் தெரிந்தான். இரண்டு தனித்தனி 'என்' விருப்பங்கள், ஓர் 'எங்கள்' விருப்பமாகியிருப்பதை வீடு ரம்மியமாகச் சொல்லியது. எனது அப்போதைய மனநிலையை எப்போதோ அனுபவித்த ஒருவன் சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்து போயின. 'ஆணால் வீட்டைத்தான் உருவாக்க முடியும்; பெண்ணால்தான் குடும்பத்தை உருவாக்க முடியும்'. ரகு அதிர்ஷ்டசாலி.

ஹாலில் போர்வை விரித்து அமர வைத்தான். அவன் மட்டும் லுங்கிக்கு மாறிக்கொண்டான். சாப்பாடு பரிமாறினான். சாப்பிட ஆரம்பித்தோம்.
'எப்டி இருக்கு என் மனைவி சமையல்?'
'நல்லாருக்கு'
நண்பனின் புதுவீட்டில் புதுமனைவியின் அறிமுகம்கூட இல்லாமல் அவள் சாப்பாட்டைச் சாப்பிடுவது என்னவோபோல் இருந்தது.
'ஓன்னோட ஒய்ஃப்?'
கேள்வியின் நீளத்தை வைத்தே புரிந்துகொண்டான்.

'காலையில் எதிர்வீட்டுப் பொண்ணு ஏதோ வந்து சொன்னா. இவளும் இன்னைக்கி நைட்டு மட்டும் அந்தப் பொண்ணுக்குத் தொணையாப் படுத்துக்கிறேன்னா. என்னான்னு கேட்டா பொம்பளைங்க சமாச்சாரம்னு சொல்லமாட்டேன்டா. அந்தப் பொண்ணு ஹஸ்பண்ட் வேற ஊர்ல இல்லை. அந்தப் பொண்ணு தனியா இருக்கும்போல'
சிக்கனின் காலெலும்பில் இருந்து சதையைப் பிய்த்துக் கொண்டிருந்தேன்.
'ஒருவாரமா ஒருவிசயம் என்னெ உறுத்திக்கிட்டு இருக்கு. யாருக்கிட்டயாவது மனசுவிட்டுப் பேசுனா பரவாயில்லன்னு தோணிச்சு. நீதான் அதுக்குச் சரியான ஆளு. அதான் ஒன்னக் கூப்டேன்'
ஒரு குடும்பஸ்தன் தனது பிரச்சனைகளுக்கு, தனியாய்த் திரியும் நட்புக்காரனைத் தூண்டில் புழுவாய் உபயோகிக்கப் போவதுபோலத் தோன்றியது. சாப்பாடு இறங்கவில்லை.

'ஒன்னோட பேரச்சொல்லி மனைவிக்கிட்ட இன்னக்கி ஒருநாள் மட்டும் கெஞ்சிக் கூத்தாடி பெர்மிஷன் வாங்கி வெச்சிருக்கேன் சரக்கடிக்க'
இது வேறயா? எந்தத் தாயாவது தம்புள்ளயக் கெட்டவன்னு ஒத்துக்குவாளா? எந்த மனைவியாவது தம்புருசன விட்டுக்குடுப்பாளா? வீட்டுக்கு வந்த ஒருவனைத் தன் கணவனுடன் மதுவருந்தச் சொல்லிவிட்டு இன்னொருவீட்டில் ஒருபெண் படுத்துக் கொண்டால் என்னைப்பற்றி அவள் எவ்வளவு கீழ்த்தரமான கருத்து வைத்திருப்பாள்! போற்றுவார் போற்றட்டும், புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும், போகட்டும் சேகருக்கே என்று கைகழுவினேன்.

சாப்பிட்ட பாத்திரங்களை அப்புறப்படுத்திவிட்டு குளிர்சாதனப்பெட்டியில் இருந்து 4 பியர் பாட்டில்களை எடுத்து வந்தான்.
'சில செல்போன்கள் தானாகவே ஆன் ஆகிடும். நம்ம பேசுறது வெளி ஆட்களுக்குக் தெரியக்கூடாதுன்னு ஒரு முன்ஜாக்கிரதைதான். போதையில எந்த விசயமும் விட்டுப்போகக்கூடாதுன்னு என்னென்ன பேசணும்னு ஏற்கனவே பாய்ண்ட்ஸ் எடுத்து வெச்சிருக்கேன்'
அவனது இடது பக்கத்தில் ஏதோ எழுதப்பட்டிருந்த வெள்ளை காகிதத்துண்டை வைத்து அதன்மேல் எங்களது செல்போன்களை வைத்தான்.

'ஏதோ முக்கியமான விஷயம், சொல்றதுக்கு நான்தான் சரியான ஆளுன்னு சொன்னியே. சொல்லு, சியர்ஸ்' என்றேன்.
'சியர்ஸ் for ஜெஸ்டினா வாசுதேவன்' என்றான்.
ஒருகனம் திடுக்கிட்டேன். இ-மெய்லில் கல்யாணப் pdf / jpg அனுப்பும் இக்காலத்தில்கூட, நேரில் வந்து என்னை அழைத்த அந்நாளில், இரவு தூங்கும்போது ரகு முனகிய அதேபெயர். மறுநாள் கல்யாணப் பத்திரிக்கை படித்து, அது அவனது வருங்கால மனைவி பெயரில்லை என்று தெரிந்தவுடன், கல்யாண அலைச்சலில் அசதியில் முனகியிருப்பானென்று நானும் சுவாரசியம் காட்டாமல் விட்டுவிட்ட அதேபெயர்! இரண்டு மாதங்களுக்குமுன் பின்னிரவில் ஒருபெண் என் செல்பேசியில் அழைத்து சொன்ன பல பெயர்களின் ஊடே நான் கவனித்த அதேபெயர்! இன்று மூன்றாவது முறையாக கேட்கிறேன்.

'யார்டா அது?' வெகு இயல்பாகக் கேட்டுக் கொண்டே பியர் ஒரு மடக்கு.
'தேவ்டியா' வெகு இயல்பாகச் சொல்லிக் கொண்டே பியர் மடக் மடக் மடக்.
எனக்குப் புரையேறியது.
'பாத்து மெதுவா. என்ன ஏறிடுச்சா?'
'Asian flush. அத விடு. நீ சொன்னது புரியல'
'ஜெஸ்டினா வாசுதேவன்னு ஒரு பிராஸ்ட்டிடியூட்'
'ஜெஸ்டினா?' இழுத்தேன்.
'வாசுதேவன்' முடித்தான்.
'ஜெஸ்டினாவும் வாசுதேவனும் சேத்தா?'
'ஆமாடா. புணர்ச்சி விதி பேசுறப்ப, நேர்நிரை புளிமான்னு கேக்காதா ப்ளீஸ்'
சதுரங்கத்தில் Stalemate என்றொரு நிலையுண்டு. அது புரியாதவர்கள் என்னுடைய இப்போதைய நிலையைப் பாருங்கள்.

'சேகர், நான் ஒரு பொண்ணோட படுத்திருக்கேன்னா நம்புவியா?'
வந்ததில் இருந்தே சென்சார் செய்யப்பட வேண்டிய வார்த்தைகளையே ரகு உபயோகப்படுத்துவது எனக்கு அசௌகரியமாக இருந்தது.
'கண்டிப்பா. ஏன்னா நீ கல்யாணம் ஆனவன். இதுல நம்புறதுக்கு ஒண்ணுமில்ல'
'I mean கல்யாணத்துக்கு முன்னாடி'
அந்நொடி வரை அவனை ஜெஸ்டினா என்ற பெண்ணுடன் சேர்த்து சந்தேகிக்க எனக்கு தோன்றியிருக்கவில்லை. ரகு அப்படிப்பட்டவன் இல்லை. அதெல்லாம் எப்படா செய்தாய் என்ற நோக்கில் பார்த்தேன்.

'சின்ன சபலம். அப்டி என்னதான் இருக்குன்னு பாத்துடலாம்னு தோணிச்சு'
No objection Your Honour நிலை எனக்கு.
'இன்டர்நெட்ல தட்டுனா 1000 சைட்ஸ். லெட்சம் பேர். டெய்லி நியூஸ் பேப்பர்லே Classifieds பகுதியில Escortsன்னு ஒரு Columnமே வருது. அப்டி இப்டி ஜெஸ்டினாவப் புடிச்சேன்'
Yes proceed என்று நான் சொல்லவேயில்லை.
'ஜஸ்ட் ஒரு நைட். ஆறுமணிநேரம். அதுலயும் ரெண்டுமணிநேரம் தூங்கிட்டேன். அகரமும் னகரமும் அதுமட்டுந்தான்'


வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த என் கண்களுக்குமுன் கை அசைத்துக் காட்டினான்.
'என்னடா நான் பண்ணது தப்பா?'
'மாட்டிக்காத வரைக்கும் யாரும் தப்பே இல்ல'
ஏதோ பேச வேண்டும் என்பதற்காகப் பேசினேன். அதிர்ச்சியில் பேசியதால் முதல் வார்த்தை தொண்டைக்குள் மாட்டிக் கொண்டு குரல் தடுமாறியது. நிமிர்ந்து பார்த்தான்.
'ஒனக்குத்தான் சொன்னேன்'
யாருக்கோ சொன்னதுபோல் குனிந்து கொண்டான்.
'வாய்ப்புக் கெடைக்காத வரைக்கும் எவனும் நல்லவனும் இல்ல. எனக்கு நானே சொல்லிக்கிறேன்' என்றேன்.
'டயலாக்லாம் நல்லாத்தான் இருக்கு'
'உயிர் பிழிஞ்சு சொல்றதெல்லாம் யாரும் கண்டுக்கிறதே இல்ல. யாரோ சொன்னதைச் சொன்னா ஆஹா ஓகோன்னு பாராட்டுக்கள்'
'ஓ சுட்டதா? Customerரத் திருப்திப் படுத்துற மாதிரி நீதான் மசாலா சேத்துச் சொல்லணும்'
'கஸ்டமர் ஸேடிஸ்ஃபேக்ஷன்தான் முக்கியம்னா ஒரு விபச்சாரிக்கும்..... ஓ...... சாரி.... சாரி... தப்பான உதாரணம்'
'பரவாயில்ல சொல்லு'
'ஜெஸ்டினாவப் பத்தி பேசுறப்ப இப்படி ஒரு வார்த்த சொன்னது தப்புதான். In fact அதக்கூட நான் சொல்லல. நடிகர் சிவக்குமார்ன்னு நெனக்கிறேன். Any how, sorry'.
'ஓகே. இனிமே அப்டி சொல்லாதே. கால் கேர்ள்னு சொல்லு'

விபச்சாரி வேசி அவ்சாரி தேவடியாள் என்ற பதங்களை வெறுப்புக்குள்ளான எப்பெண்ணின்மீதும் தொடுக்கலாம் என்ற இச்சமூகத்தில், உபயோகப்படுத்தபட்ட ஆணுறையென பெண்ணை மிதிக்கும் கீழ்த்தர ஆண்கள் பட்டியலில் ரகுவும் சேர்ந்துவிட்டானோ எனப் பயம் வந்தது. இதுதான் சரியான தருணம், தொடு கணையை!
'சரிடா. அந்த so called கால் கேர்ள்னால இப்ப என்ன? ஏதாவது மஞ்ச நோட்டீஸ் வியாதி கியாதி?'
முதன்முதலாகச் சிரித்துக் காட்டினான். நானும் சிரித்து வைத்தேன்.
'அந்த ஜெஸ்டினா வாசுதேவன் இப்ப என்னோட எதிர்வீட்டுக்காரன் பொண்டாட்டி'
பாதிப்பாட்டிலை ஒரே மடக்கில் குடித்தான். எனக்குக் குடித்ததெல்லாம் பாதியாக இறங்கிப் போனது. இதுக்கு மேலயும் Stalemate புரியாதவர்களுக்கு ஒரு Checkmate.

(வழக்கம்போல் சற்றே இடைவெளி எடுத்துகொண்டு, கொஞ்சம் மனநிலையை மாற்றிக்கொண்டு தொடருங்கள்)

சுவர்க்கடிகாரத்தின் வினாடிமுள் மட்டும் சத்தம் போட்டுக் கொண்டே அடிமேல் அடி வைத்துக்கொண்டிருந்தது. இருவருமே அடுத்த அடி எடுத்துவைக்க முன்வராமல் அவரவர் பாத்திரங்களில் கவனம் செலுத்துவதுபோல் பாவனை செய்துகொண்டிருந்தோம். அமைதியைக் கலைக்கும் நோக்கில் எழுந்துபோய் சிறுநீர் கழித்துவிட்டு முகம்கழுவி வந்தேன். முழங்கையால் முட்டுக் கொடுத்து பின்னால் சாய்ந்து அமர்ந்திருந்தான். அவன் கண்கள் என்னை நேரே நோக்கின. நான் ரெடி நீ ரெடியா மாதிரி அவன் தோற்றம்.

'அந்தப் பொண்ணுக்குத் தொணையாத்தான் ஒன்னோட மனைவி?'
'யெஸ்'
தலையை முன்பின் ஆட்டிக்கொண்டே, 'ஸ்' ஐ ரொம்ப அழுத்தினான்.
'அந்த வீட்டுல வேற யாருமில்லையா?'
'புருஷன் மட்டும். சைதாப்பேட்டையில ஸ்வீட் ஸ்டால் வெச்சிருக்கான்'
'எத்தன நாளா இந்த வீட்ல இருக்காங்க?'
'எங்க கல்யாணத்துக்கு ஒருவாரத்துக்கு முன்னாடித்தான் அவங்க கல்யாணம். நான் இங்க வந்து மூணுவாரம் ஆகுது. அவங்க அதுக்கு முன்னாடியே வந்துட்டாங்க'
'அந்தப் பொண்ணு blackmail ஏதாவது....?'
'என்னெ அடையாளம் தெரிஞ்சுக்கிட்டாளான்னு கன்ஃபார்மா தெரியல'
'நீ மட்டும் எப்டி அவதான்னு கன்ஃபார்மா சொல்றே?'
நிமிர்ந்து உட்கார்ந்தான்.
'முதல் வெட்கம். முதல் முத்தம். முதல் நிர்வாணம். இப்படி என்னோட பல முதல்கள். கடைசி வரைக்கும் மறக்க முடியாது'
'அதுவும் சரிதான். ஆனா ஒலகத்துல ஒரே மாதிரி பலபேர் முக ஒற்றுமை இருக்க வாய்ப்பிருக்கு இல்லையா?'
'சிங்கப்பல்லு தெத்துப்பல்லு'
'100 வருசத்துக்கு முன்னாடி வங்காளத்துல வாழ்ந்த ரவீந்திரநாத் தாகூருக்கும், கர்நாடகா அனில் கும்ளேக்கும் இளவயதில் ஒரேமாதியான முகத்தோற்றத்தோட வெச்சது இயற்கையோட ஒரு விந்தைனா, nothing unusual in தெத்துப்பல்லு also. Its all about your false memory'
'Agreed. பணத்த கையால எண்ற ஸ்டைல், தரையில கால மடக்கி ஓட்கார்ற மொறை, வெறிச்சுப் பாத்துட்டு படபடன்னு சிமுட்ற கண்ணிமைகள். இந்த மூணு வாரத்துல இப்டி நெறைய ஒற்றுமைகள் கவனிச்சேன். இதுக்குமேல என்ன வேணும்? பச்சையா சொல்லனும்னா, அவ மாரு சைஸ் அப்புடியே.....'
காதுகளுக்கு மட்டும் ஏன் தானாகவே மூடிக்கொள்ளும் சக்தியில்லை?

ஏதோ ஓரூரில் சட்டவிரோதமான மதுபானநடன விடுதியொன்றில் தமிழன் ஒருவன், 10 வயது மூத்த தமிழ்ப்பெண்ணொருத்தியின் மார்புக்காம்புகளையும் புட்டத்தையும் வருடிக்கொண்டிருந்தபோது, அவளுக்கும் தனது இறந்துபோன தாயின் பெயரென்று தெரிந்தவுடன், முகம்கவிழ்ந்து ஓடிவந்து தேம்பி அழுதபோது,
'பெண்ணின் மார்பென்பது
அயல்நாட்டில் காமக்குறி
தமிழ்நாட்டில் தாய்மை'
என்று எங்கள் நண்பன் சேரலாதன் சொன்னதை, உணர்வுப்பூர்வமான உதாரணமாகச் சொன்ன அதே ரகு, இன்று இப்படிப் பேசுவதை என்னால் சீரணிக்க முடியவில்லை.

'சரிடா. ரெண்டு பேருமே ஒரே ஆளாவே இருக்கட்டும். ஒரு ஆம்பள அவள மனைவியா ஏத்துக்கிட்டான்ல? ஒனக்கு என்ன பிரச்சன?'
'அதான் சந்தேகமே. இவளப்பத்தி எல்லாமே தெரிஞ்சுதான் கல்யாணம் நடந்துச்சான்னு எனக்கு டவுட்டு. அவ கல்யாணமே ஒரு கொளறுபடி கேசு'
'என்னாச்சு?'
'முகூர்த்த நேரத்துல மாப்ள சிங்கப்பூர்ல இருந்து வல்லன்னு, கொழுந்தன் தாலிகட்டி, பின்ன மாப்ள வந்து, மொதத் தாலியப் பிரிச்சுப்புட்டு மறுதாலி'
தாலியெல்லாம் ஊருக்காக; பொண்ணோட மனசவிட வேற வேலியில்லன்னு ரகுவே சொல்லியிருக்கான்னு நான் இப்ப சொன்னா எடுபடாது.பொதுவாக, தான் விருப்பப்பட்ட பெண்ணை இன்னொருவன் கட்டிப்போனால், இல்லாததும் பொல்லாததுமாக அப்பெண்ணைப் பற்றி பரப்பிவிடுவதுதான் தொன்றுதொட்டு வரும் பாரம்பரியம். பிடிக்காத ஒருபெண் பிடித்து செய்த விசயங்களைத் தனக்குப் பிடிக்காமல் ரகு புலம்புவதுதான் எனக்குப் பிடிபடவில்லை. மொத்தத்தில் பண்பாட்டைத் தொலைத்துவிட்டு கலாச்சாரத்தைக் குறைசொல்லிக் கொண்டிருக்கிறான் ரகு. ரகு மட்டுமல்ல, இது ஒரு சமூகத்தின் புலம்பல். நமக்குப் போதிக்கப்பட்டவைகள் அப்படி!

'ஓகே. அவளப்பத்தி எல்லாம் தெரிஞ்சுதான் கல்யாணம் நடந்துச்சுன்னு வெச்சுக்க. இப்பவும் ஒனக்கு ஏதாவது பிரச்சனையாடா?'
'லிஃப்ட் படிக்கட்டு பார்க்கிங் ஏரியா கடைத்தெரு எங்க பாத்தாலும் சிரிக்கிறா. என் மனைவியோட உடன்பிறவா மக்க மாதிரி கூடவே திரியுறா'
'அவனவன் பக்கத்து வீட்டுப் பொண்ணு கடைக்கண் பார்வை கெடைக்கலையேன்னு மலையளவு ஏங்குறான். நீ ஏன்டா இப்புடி? வேலைக்குப் போகாத பக்கத்து வீட்டுப் பொம்பளங்க பேசிக்கிறதெல்லாம் சகஜம்டா'
'அவங்க புருஷன் பொண்டாட்டி ஒரு சினிமாவுக்குப் போனா எங்களையும் கூப்புட்றா'
'கோழிலருந்து முட்ட வந்துச்சு'
'அவங்க ஊட்டி பிக்னிக் போறதுக்கு நாங்களும் வரணுமாம்'
'முட்டைலருந்து கோழி வந்துச்சு'
'அவளோட ஒவ்வொரு நடவடிக்கையும் பார்வையும் சிரிப்பும் என்னெ காட்டிக் கொடுத்துருமோன்னு பயமா இருக்கு. இப்புடி பயந்து பயந்தே என்னையே நானே காட்டிக் கொடுத்துக்குவேனோன்னு வேற பயமா இருக்கு. வாழ்க்கையத் தொடங்க வேண்டிய நேரத்துல இப்புடி பூச்சாண்டி காட்றா'
'மனைவிக்கு ஜெஸ்டினா விஷயம் தெரியாது?'
'No. Never by my mouth'
'சூப்பர். இவ்வளவு நேரம் பேசுனதுக்கு ஒரு நல்ல கேள்வி, ஒரு நல்ல பதில்'.

'என் ஒய்ஃபோட நீ பேசினதில்ல. அவ அப்பாவிடா, வெகுளிடா. கண்மூடித்தனமா என்னெ நம்புறா. நம்பியே இருக்கா. அவளுக்கும் ஒரு காதல் அப்புடி இப்புடின்னு ஏதாவது இருந்திருந்தா என்னோட கதையையும் சொல்லி மைனஸ் இன்ட்டு மைனஸ் கிவ்ஸ் பிளஸ், அப்புடின்னு சின்னவீடு ஹீரோயின் மாதிரி அவ வாயாலையே இன்னொரு பொம்பளையப் பாக்கச் சொல்ற ஒரு கேவலமான புருசனா என்னால வாழமுடியும். Company of womenன்னு குஷ்வந்த் சிங் புத்தகத்துல படிச்சப்ப சிரிக்கவெச்ச முதலிரவு, என்னோட வாழ்க்கையில அதே மாதிரி ஒரு பொண்டாட்டியோட நடக்குறப்ப சிரிக்கமுடியல. அவள ஏமாத்துற மாதிரி என்னெ நானே ஏமாத்திக்கிற மாதிரி தெரியுது. I feel guilty before her innocence'. ரகுவின் கண்களில் முண்டியடித்துக் கொண்டு நீர்த்துளிகள் நின்று கொண்டிருந்தன.

கல்யாணம் என்பது உயர்ந்து வளர்ந்த கோட்டை. வெளியே இருப்பவர்கள் உள்ளேபோகத் துடிக்கிறார்கள். உள்ளே இருப்பவர்கள் வெளியேற முடியாமல் துடிக்கிறார்கள். இப்படிப்பட்ட வார்த்தை ஜாலங்கள் எல்லாம் உண்மையோ என்று தோன்றியது. மோகப்பித்து முப்பதுநாள் காலக்கட்டத்திற்குள்ளேயே புத்திப்பித்து பிடித்தவன்போல் பேசுகிறான். டென்னிஸில் மட்டும் லவ் பூச்சியமாக இருக்கட்டும், தனது இல்லறத்தில் வேண்டாமெனத் தவிக்கிறான் ரகு.

'எவனெவனோ என்னென்னமோ பண்றான். நான் தப்பேதும் செய்யல. ஜெஸ்டினா விருப்பத்தோடத்தான் பண்ணினேன். I paid too'
பெண்ணை ஆக்கிரமிக்கும் எல்லாரும் சொல்லும் பண்டைகால தர்க்கம். ஆதித்தொழில் என்று சேர்த்துச் சொல்லாமல் விட்டுவிட்டான். இப்போது ரகு எழுந்துபோய் சிறுநீர் கழித்துவிட்டு முகம்கழுவி வந்தான்.

'மணி 11 :45. Let me bury this topic with this day. ஒன்ன மாதிரி ஏதோ ஒரு குழந்தையத் தூக்கி, அதுக்கிட்ட பிரச்சனைகளைச் சொல்லி அழுது, குழந்தையோட பல முகபாவங்களப் பாத்து, அதுல அமைதிதேடுற பக்குவம் எனக்குக் கெடையாது. பாவங்களைக் காதுகொடுத்து கேக்குற சாமியும் எங்கள்ல கெடையாது. ஆனா இன்னொரு மனுசன்ட தன் மனப்பாரத்தை வெளிப்படையா சொல்லும்போது மனசு லேசாகிடும்னு எனக்குப் பலமான நம்பிக்கை இருக்கு. இதுவரைக்கும் எங்க அண்ணன் செத்ததப் பத்தி ஒனக்கிட்ட மட்டும்தான் சொல்லியிருக்கேன். 11 வருசத்துக்கு முன்ன அதக் கேட்ட நீ, இப்பவும் கேப்பங்கிற நம்பிக்கையில்தான் ஓங்கிட்ட சொன்னேன்'.
ரகுவின் அண்ணனின் ஞாபகத்தில் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. டக்கென்று இடதுபக்கம் திருப்பி சட்டைக்காலரில் தொடைத்துக் கொண்டேன். அவனும் அழுதுவிட்டான்.

தூங்கும்போது சொன்னான்.
'I feel completely free now. இந்த நொடியில இருந்து ஜெஸ்டினா வாசுதேவன்னு யாரையும் எனக்குத் தெரியாது. ஒருவேள என் மனைவிக்குத் தெரிய வந்தா, அவளச் சமாளிக்கிற பெரும்பொறுப்பு என் நண்பன் சேகருடையது'
'கன்ஃபார்மா அந்தப் பொண்ணுதான்னு தெரியாம நீயே ஒரு பிரச்சனைய உண்டாக்கிக்கிற. அதனால பல பயங்கள்; பல கேள்விகள்; எல்லாத்துக்கும் ஒங்கிட்டே தெளிவான பதில்களும் இருக்கு. இதெல்லாம் பாக்குறப்ப கெல்வின் கார்டரோட தற்கொலைக் குறிப்புதான் ஞாபகம் வருது'
'என்னடா அது?'
'சரியான வாக்கியம் ஞாபகம் இல்ல. நெட்ல பாத்துக்க'
தேடினான்.
'ஸ்பெல்லிங்?'
'Kelvin Carter'
'ok'.

அதைப் படித்துவிட்டு வெள்ளைக்காகிதக் குறிப்புகள் எல்லாம் சொல்லப்பட்டுவிட்டனவா என்று சரிபார்த்தான். ஒருவிசயம் விட்டுப்போய்விட்டதென என்னை எழுப்பினான்.
'அதான் பொதைக்கப் போறேன்னு சொன்னியே, திரும்ப ஏன்டா எழுப்புற?'
அவன் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு தூங்கிப்போன அவ்விசயம், எனது எல்லா செல்களையும் எழுப்பிவிட்டு அதன்பிறகு தூங்கவிடவேயில்லை.
'அன்னைக்கி ஜெஸ்டினா கெளம்புறப்ப என்னோட மொபைல் நம்பர் கேட்டா. எனக்குப் பயம். எனக்கு மனப்பாடமா தெரிஞ்ச ஒன்னோட நம்பர சொல்லிட்டேன். தூக்கத்துல எழுப்பிக் கேட்டாலும் சொல்லுவோம்ல. ஹா ஹா ஹா ஹா'
சரியான ஆள் என்று அவன் என்னைச் சொன்னதன் அர்த்தம் அப்போதுதான் உறைத்தது.

ரகு தூங்கிவிட்டான். இருட்டுக்குள் ஆந்தைபோல் விழித்திருந்தேன். ஜெஸ்டினா வாசுதேவன் என்ற பெயரை இரண்டாம் முறை நான் கேட்டிருந்த நிகழ்ச்சி நினைவில் வந்தது. அந்நிகழ்ச்சியுடன் ரகுவைச் சம்மந்தப்படுத்தி பார்க்கும் அளவிற்கு, அவ்வளவு நேரம் ரகு என்னிலிருந்து தூரப்பட்டுவிடவில்லை. இப்போது கட்டாயம் சந்தேகப்பட வேண்டிய தருணம்.

இரண்டு மாதங்களுக்கு முன் பின்னிரவு மூன்று மணிக்கு ஒரு பெண்குரல் என் செல்பேசியில் அழைத்தது.
'சார் இது ஒங்க செல்போனா இருந்தா தொடர்ந்து கேளுங்க. இல்ல கட் பண்ணிடுங்க'
நடுங்கும் குரல். மதுவாடை குரலிலேயே வீசியது.
'ஒங்களை எனக்குத் தெரியாது. ஒங்களுக்கு என்னெ தெரிய வாய்ப்பிருக்கு. ஐஸ்வர்யா, அர்ச்சனா, சுகப்ப்ரியா, ஜமுனா, ...... ஜெஸ்டினா வாசுதேவன், ..... இந்த 15 பேர்கள்ல ஏதாவது ஒரு பேர்ல நான் ஒங்கள சந்திச்சிருக்கலாம்.....'
எழுதிவைத்துப் படிக்கிறாள். அவள் சொல்ல வரும் விஷயம் சரியான ஆளுக்குத்தான் போய்ச் சேரவேண்டும் என்பதில், அவளின் வார்த்தைகள் படுகவனமாய் இருந்தன. தள்ளாடும் குரல் தள்ளாடாத நோக்கம். என்னிடமிருந்து ஒரு பதிலும் எதிர்பார்க்கவில்லை. இரண்டு நிமிடங்கள் வாசித்துவிட்டு கட் செய்துவிட்டாள். யாரோ விளையாட்டுத்தனமாக wrong number என்று நினைத்து, வழக்கம் போல் Call Logஐச் சுத்தமாக Delete செய்துவிட்டு தூங்கிவிட்டேன்.

காலையில் விழித்தவுடன்தான் எனக்கு விசயத்தின் வீரியம் புரிந்தது. எனக்குத் தெரிந்த ஒரு மனநல ஆலோசனை மையத்தைத் தொடர்பு கொண்டேன்.
'அந்தப் பொண்ணு இன்னும் ஒரு ரெண்டு வாரத்துல கல்யாணம் செய்யப்போதாம் மேடம். அதுக்குள்ளே, தலையே வெடிச்சுரும் போல இருக்காம். கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்ல மொத பிளாட்பார்ம்ல நாளைக்கி நிக்குமாம். பணம் தரத் தயார்னு சொன்னிச்சு மேடம்'
அவளைக் கண்டுபிடித்து, கவுன்சிலிங் செய்தார்கள். அவள் கதையை மேடம் சொன்னபோது பயமாக இருந்தது.
'கப்பல் மாலுமிகள் தரைக்கு அடியில் விபச்சாரம் செய்த மண். பெயர் மறைத்து வாழும் ஜெஸ்டினா வாசுதேவன்கள், சமுதாயத்துல இயல்பா வாழணும்னு நெனச்சா அவர்களின் பழைய பெயர்களை ஞாபகப்படுத்த பல்லாயிரம் பேர் இருக்கிறார்கள்' என்றார் மேடம்.

தூங்கவே முடியாமல் அதிகாலை ஐந்து மணியளவில், ரகுவிடம் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பிவிட்டேன். வாட்ச்மேன் தடுக்கவில்லை. 11 மணியளவில் ரகு போன் செய்தான்.
'ரகு, பச்சையா சொல்லணும்னா இடது மாருக்குக் கீழ மச்சம்; அப்பெண்டிசைடிஸ் தழும்பு. டீசண்டா சொல்லணும்னா ஒன்னோட எதிர் வீட்டுப் பொண்ணுக்குக் கண்டிப்பா வலது கண்ல மச்சம் இருக்காது'
ரகு பேசவேயில்லை.
கட் செய்துவிட்டு நேரில் வந்தான்.
'நீ எப்டிடா சேகர்?'
'இதுல என்னாடா ஆச்சர்யம் ரகு. நீ பிம்ப்ட (pimp) ஒரு 6000 ரூவா கொடுத்துட்டு, ரெண்டு பேர்டயும் என் நம்பர வேற கொடுத்துட்டு வந்திருக்க. அந்தக் காசு எங்க எங்கெல்லாம் போனுச்சோ? ஏதோ ஒரு மார்க்கெட்டுல வெடிக்கிற குண்டுல ஒன்னோட பங்களிப்பு கூட இருக்கலாம். ஒருவேள அந்தப் பொண்ணு இறந்துபோய் என்னையும் சந்தேகத்துல விசாரிச்சிருக்கலாம். இல்ல, வாடிக்கையாளரே இல்லாதப்ப என்னக் கேட்டிருக்கலாம். இப்புடி நெறைய options'
'சாரிடா. வார்த்தையால கொல்லாதடா'
'போடா வீட்டுக்குப் போ. ஜெஸ்டினா வாசுதேவன்னு ஒருத்தி இருப்பாளோன்னு அரைகொறை மனசோட வாழாத. இப்ப திருப்தியா? அப்படி ஒருத்தி இல்லவே இல்ல. சந்தோசமா வீட்டுக்குப் போடா'
'உண்மையிலேயே கோவம் இல்லையே?'
'ஒனக்கிட்ட கோவப்படாம வேற யாருக்கிட்ட கோவப்பட முடியும்?'
'உண்மையிலேயே கோவம் இல்லையே?'
'இல்ல நம்பு'
'எப்புடி நம்புறது?'
'ஆஊன்னா நெட்டுல தேடுவியே. போய்த் தேடு. அப்பத் தெரியும் எனக்குக் கோவம் இல்லன்னு. உலகத்திலேயே சின்ன உயில் என்னன்னு போய்த் தேடு'
போய்விட்டான்.

ரகுவின் கதை போல், சமூகத்தில் இதுபோன்ற பல பிரச்சனைகள் வெள்ளிக்கிழமை இரவு ஆரம்பித்து சனிக்கிழமை மதியம் முடிந்துவிடுவதில்லை. ஒருவேளை ஜெஸ்டினா வாசுதேவன் என்றொருத்தியை ரகுவின் மனதில் இருந்து நீக்கமுடியாமல் போயிருந்தால், எதிர் வீட்டுப் பெண் ரகுவால் கொல்லப்பட்டிருக்கலாம். ஒருவேளை ஜெஸ்டினா விஷயம் மனைவிக்குத் தெரிய வந்தால், அவளும் நானும் கொல்லப்படலாம். ரகுவும் தற்கொலை செய்து கொள்ளலாம். மறுநாள் தினசரியில் என்னையும் ரகுவின் மனைவியையும் கள்ளக்காதலர்களாகச் சித்தரித்து, ரகுவின் திருமணத்தில் நாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் கருப்பு வெள்ளையில் மூன்றாம் பக்கத்தில் வரலாம். மீனவர்கள் தமிழகத்திலும் தமிழர்கள் ஈழத்திலும் கொல்லப்படுவது போல வாடிக்கையாகிப் போன இதுபோன்ற செய்திகளில் சுவாரசியம் காட்டாமல், சப்புக்கொட்டிவிட்டு ஜெஸ்டினா வாசுதேவன்களை உண்டாக்கும் அடுத்தகட்ட நடவடிக்கையில் சமூகம் மும்மரமாக இருக்கலாம்.

ரகுவிடம் இருந்து குறுந்தகவல். உலகின் மிகச் சிறிய உயிலைக் கண்டுபிடித்து விட்டான்.

All to wife - எல்லாம் மனைவிக்கே!

- ஞானசேகர்

Tuesday, March 23, 2010

அந்த 52 வினாடிகள்

முனியாண்டி விலாஸைப்
போன்றதுதான் இந்தியாவும்

முனியாண்டி எவரென்பதும்
இந்தியா எதுவென்பதும்
யாருக்கும் தெரியாது.
- யுகபாரதி (தெப்பக்கட்டை நூலிலிருந்து)


அலறும் அலைபேசியை
அவசரமாக அடக்கி
அழப்போகும் குழந்தையை
அதட்டி வாய்மூடி
ஒட்டிவந்த காதலைத்
தட்டி உதறிவிட்டு
ஒத்திசைக்காத அடுத்தவனை
அஃறிணை வசைசெய்து
இருட்டறையில் அனிச்சையாய்
விறைத்து நிற்கும் நமக்கெல்லாம்
தேசபக்தியை நிரூபிக்க
ஒரு சந்தர்ப்பம்!

சிரமசைத்து
கரமாட்டி
கண்மூடி
அமர்ந்து
நடந்து
பாடி
இசைத்து
நகைத்து
திரை நிழலாடுபவர்க்கெல்லாம்
தொழில் நிமித்தம்
ஒரு சந்திப்பு!

- ஞானசேகர்

Tuesday, March 09, 2010

ஆதிசேசன் படுக்கை


பணக்கார சாமி
விஐபி வரிசைகளில்
உண்டியல் சேர்கிறது
முழங்கு முரசுடைச் செல்வம்!

யார் பெற்ற தெங்கம்பழம்
இந்த உள்ளூர் சாமிகள்?

- ஞானசேகர்

Sunday, February 14, 2010

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போது

'மரத்துக்கு அடியில் யாரும் இல்லாத போதுதான் தென்னை மட்டையைக்கூட கடவுள் கீழே விழவைக்கிறார்'. இப்படி ஒரு பழமொழி உண்டு. தென்னைமட்டைக்கே இப்படி ஒரு நம்பிக்கை என்றால், அண்டவெளியில் இருந்து திடீரென விழும் விண்கற்களுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சகமனிதன் உண்டாக்கிய அணுவாயுதங்களுக்கிடையே வாழும் மக்களுக்கு, வலிக்காமல் சாகடிக்கத் தெரிந்த இயற்கையின் இந்த யுத்திகள் எல்லாம் சொற்பம்! அப்படியொரு விண்கல்லின் தாக்குதலால் உண்டான ஏரி ஒன்று, மகாராஷ்டிராவில் இருப்பதாகக் கேள்விப்பட்டு பயணிக்கத் தயாரானேன். புனே (Pune) - அவுரங்காபாத் (Aurangabad) - ஜால்னா (Jalna) - லோனார் (Lonar) கிராமம் - Lonar crater lake.

பேருந்து நிலையத்தில் இருந்து எந்த ஒரு சிரமமும் இல்லாமல் ஏரியைச் சென்றடைய பெயர்ப்பலகைகள் இருந்தன. விண்கல் உண்டாக்கிய பள்ளத்தின் மாபெரும் கரையின், உடைந்தோ அல்லது அரிக்கப்பட்டோ சிதிலமடைந்திருந்த ஒரு பகுதியில் பெயர்ப்பலகைகள் கொண்டுபோய்ச் சேர்த்தன. சிவன், ஹனுமான், பிள்ளையார் உருவம் தாங்கிய சில இந்துமதக் கோவில்கள் இருந்தன. அதற்கு அடுத்தபடியாக என்ன மதம் என்று ஊகிக்க முடியாதபடி சிலமடைந்திருத்த இன்னொரு கோவில். சிவன் கோவிலின் நேரெதிர்புறமுள்ள மலையிலிருந்து எடுக்கப்பட்ட அக்கோவிலின் புகைப்படம்:

சிவன் கோவில் வாசலில் ஒரு நீருற்று இருந்தது. உள்ளூர்மக்கள் சிலபேர் அதிலிருத்து குடிநீர் எடுத்துச் சென்றனர். அவ்விடத்திற்கு வரும் மக்கள் எல்லாரும் அந்நீரில் குளித்தனர். அந்நீரில் குளிப்பதற்காகவே மக்கள் பலபேர் வந்தனர். குளிப்பவர்களின் ஈர அங்கங்களைப் பார்ப்பதற்காக சிலபேர் உயரமான இடங்களில் நின்றிருந்தனர். நீரூற்றின் பிறப்பிடம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும், ஓர் ஆராய்ச்சியாளர் அதனுள் நுழைத்த கம்பி முடிவற்றுப் போய்க்கொண்டே இருந்தது எனவும் விசாரித்ததில் தெரிந்தன. சிவன் கோவிலுக்கு இடமிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்:

சிவன் கோவிலில் இருந்து ஏரியின் புகைப்படம்:

சிவன் கோவிலிலிருந்து நீரின் பாதையில் ஏரியை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். இந்த நீருடன், ஒரு குகை நீரும், இன்னொரு சிறுகோவிலிலிருந்து வடியும் நீரும் சேர்ந்து ஒரே நீராக ஏரியை நோக்கிப் போயின. கரடுமுரடான பாதையையும், மரஞ்செடிகளையும், விளைநிலங்களையும் தாண்டி ஏரியை அடைந்தோம். நட்சத்திரங்களில் இருந்து வந்த நீரென மக்கள் நம்பும் அந்த ஏரி, கரைகளில் பாசிபடர்ந்திருந்தது. ஒரு பேரரக்கனின் இரத்தத்தை நீராகவும், சதையை உப்பாகவும் கொண்டிருப்பதாகப் சொல்லப்படும் அந்த ஏரி, பல பறவைகளைத் தாங்கிக் கொண்டிருந்தது. ஏரியைச் சுற்றி, விண்கல் உண்டாக்கிய பெருங்கரைவரை முடிந்தவரையில் அகழப்பட்டிருந்த விவசாயநிலங்கள்!

ஏரிக்கரையோரம் விவசாயம் செய்து கொண்டிருந்த மக்களிடம் பேசினோம். விவசாய நிலங்களின் மொத்த பரப்பு 25 ஏக்கர். 10 பேர்களுக்குச் சொந்தமான நிலங்கள். அவர்கள் சொன்ன ஆச்சரியமான விசயம் என்னவென்றால், சிவன் கோவில் நீருடன் சேர்ந்துவரும் மொத்த தண்ணீரையும் 10 நாட்களுக்கு ஒருவர் என்றமுறையில் விவசாயத்திற்கு உபயோகித்துவிடுவார்களாம். அப்படியென்றால் ஏரித்தண்ணீர்? விவசாய நிலங்களின் கசிவுநீர் (Seepage water) ஏரியை அடைகிறது என்பது எனது கருத்து. ஏரிநீர் மனித உபயோகங்களுக்கு உகர்ந்ததல்ல எனவும், சில தோல்வியாதிகள் குணமடைய சிலபேர் அதில் குளிப்பதாகவும் சொன்னார்கள். நீரில் மிதக்கும் சில கற்கள் ஏரிக்கரையோரம் உண்டென்றும், அவை நட்சத்திரங்களில் இருந்து வந்ததென்றும் சொன்னார்கள்.


இணையத்தில் கிடைத்த சில அறிவியல் பூர்வமான தகவல்கள் உங்களின் வாசிப்பிற்கு:

1. உலகின் முன்றாவது பெரிய விண்கல் பள்ளம் (crater).

2. 90000 km/h வேகத்தில் பயணித்த 2 மில்லியன் டன் நிறையும் 60மீட்டர் அகலமுள்ள விண்கல் மோதி, பாசால்ட் பாறைகளின் மேல் உண்டான ஒரே ஏரி.

3. வயது 52000க்கு மேல்.

4. இன்றைய தேதியில் செயற்கையாக உருவாக்க 6 மெகா டன் அணுகுண்டு தேவை.

5. பள்ளத்தின் விட்டம் 1.8 km. பள்ளத்தின் வாயிற்குக்கீழ் 137 மீட்டர் ஆழத்திற்குக்கீழ் இருக்கும் ஏரியின் சராசரி விட்டம் 1.2 km. ஏரியின் ஆழம் 150 மீட்டர்.

6. ஏரியின் மையநீர் காரத்தன்மையும் (ph 11), அதைச் சுற்றி நன்னீரும் (ph 7) என இரண்டு மாறுபட்ட அடுக்குகள் உண்டு. இவ்விரண்டு அடுக்களிலும் வாழும் உயிரினங்களும் மாறுபடுகின்றன.

7. ஏரிக்கு நீர் தரும் சிவன்கோவில் ஊற்றுக் கூட்டணிகளும், மழைநீரும் நன்நீர் உடையவை. மையநீரீன் காரத்தன்மையின் ஆதிமூலம் இதுவரை மர்மம்.

8. பள்ளத்தின் கரையின் சாய்வு (slope) 75 டிகிரி.

9. பள்ளத்தின் சரிவுகளில் ஒவ்வொரு குறிப்பிட்ட தொலைவுக்குத் தேக்கு, புளியம் என ஒரு குறிப்பிட்ட மரங்களின் வரிசை இருக்குமெனப் படித்தேன். தேக்கு மரங்களை வெட்டுபவர்களைப் பார்த்தேன். ஆனால் மரங்களின் அப்படியொரு ஒழுங்கு வரிசையைக் காணமுடியவில்லை.

10. ஒரேயொருமுறை இவ்வேரி வற்றியதாகவும் மின்னும் படிகங்கள் தென்பட்டதாகவும் தகவல் உண்டு.

தாய்நீரில் சோப்பென்ற நச்சு கலத்தல், காக்கும் வனம் அழிக்கப்படுதல், விவசாயம் என்ற பெயரில் முகம் கிழிக்கப்படுதல் என்று கொல்லப்படும் இந்த ஏரியைக் குரங்கு, பாம்பு, மொழி, தூரம் எல்லாத் தடைகளையும் தாண்டிப் பார்த்துவிட்டேன்.

'52000க்கு முன் ஓர் 26' என்ற அற்ப சந்தோசம் தேடும் சொற்ப ஆயுள் கொண்ட சாதாரண மனிதன்!

- ஞானசேகர்

Wednesday, January 13, 2010

வட்டத்துள் குவியங்கள்

(எழுமகளிர், ஆறறிவு என்ற எல்லைகளுக்குள் அனுமதிக்கப்படாத இருவரின் தீண்டப்படாத எல்லை பற்றிய சிறுகுறிப்பிது)

இவ்வுலகில்
நீ யாரோ ஒருத்தி.
யாரோ ஒருவனுக்கு
நீதான் உலகம்.
- யாரோ


புலம் பெயரும்
ஓர் அகதியின் வலியுடன்
ஈன்று புறந்தள்ளி
தலைக்கடன் முடித்ததில்
தவறேது மில்லையென
அம்மா சொல்வாள்.

உரக்குழியில் தலைபுகுத்தி
கால்பிடித்துத் தலைகீழாக்கி
இடவலம் சுற்றிச்சுற்றி
ஒரு குயவனின் நேர்த்தியுடன்
கபாலம் குழைத்ததில்
சறுக்கலெல்லாம் சாமானியம்
சாமிமேல சத்தியம்
சட்டையில்லாப் பாட்டி சொல்வாள்.

வழியில் நின்ன முனி
கவட்டிக்குள்ள நடந்ததால
வயுத்துப் புள்ளய வாட்டிருச்சு
அகலாது அஞ்சு வருசம்;
அப்பிக மாசம் அம்மாவாச
ஐநூத்தியொண்ணு பரிகாரம்;
மின்சாரம் தொட்ட அதிர்வோடு
பவுர்ணமிபொட்டு சோசியக்காரி சொன்னாள்.

நரம்புக்குள் சிக்கல்
மூளைக்குள் மறியல்
உலகமே நிர்வாணம்
சாகும்வரை குழந்தை
சங்கிலிக்குள் வட்டம்;
உணர்ச்சியின்றி உண்மையை
இழவு சொல்லும் தொனியுடன்
பட்டணத்து டாக்டர் சொன்னார்.

என் அம்மணத்து உரோமங்கள்
மனிதரெல்லாம் விமர்சிக்க,
என்னுறுப்பின் மேல்தோல் வரை
சோப்புபோட்டு சுத்தம் செய்து,
பொட்டுவைத்து கண்ணாடிகாட்டி
சாமி ஒருத்தன் இருக்கானென
கதை அக்கா சொல்வாள்.

ஊனப்பட்ட இயற்கை போல்
பருவம் மறைத்து
பட்டம்விட்ட புத்தன் போல்
ஆசை விடுத்து
நூலைவிட்ட பட்டம் போல்
காலம் மறுத்து
என் சங்கிலியில்
அக்காவையும் கட்டிப்போடும்
விதியின் பேடித்தனம்
நிறுத்தும்படி யார் சொல்வார்?

- ஞானசேகர்
(பெண் பிரம்மச்சாரிகளுக்குச் சமர்ப்பணம்)

Sunday, October 04, 2009

வையத் தலைமை கொள்



'வன்முறை எதிர்ப்பு தினம்' என்று பிறந்தநாளை உலகமே மரியாதைப்படுத்தும் அளவிற்கு ஒரு தலைவனைத் தந்த இந்திய நாட்டின் முதல் தேசியக்கட்சி உடைந்துபோன புனே (Pune) நகரில் இருந்து இதை எழுதுகிறேன். பாரதம், இந்திய யூனியன், இந்தியா, ஹிந்துஸ்தான் போன்ற வார்த்தைகளுக்கெல்லாம் உங்களுக்கு அர்த்தம் புரியுமென நினைக்கிறேன். இன்றைய இந்தியா என்ற நாட்டைப் புவியியல் ரீதியில் சொல்ல வேண்டுமானால், பாகிஸ்தானையும் பங்களாதேசத்தையும் கூட்டி இந்திய யூனியனில் இருந்து கழிக்கக் கிடைப்பது. இதே சமன்பாட்டைக் கழித்தல்கள் மட்டுமே வரும்படி எழுதி சிரில் ராட்கிளிப் அவர்கள் கிழித்த கோடுதான் இன்றையதேதிவரை உலகின் மிகப்பெரிய Genocide என்று கருதப்படுகிறது.

காந்தியையும், நேருவையும், அஹிம்சையையும் சாடுபவர்களாக நீங்கள் இருந்தால் உங்களுக்கு அச்சமன்பாடு அமையக் காரணமான நூற்றாண்டுக் காரணிகள் அத்துப்பிடியாகக்கூட இருக்கலாம். ஏனெனில் ஓர் உண்மை நாத்திகன், ஆத்திகனைவிட கடவுளை அதிகம் தெரிந்திருக்க் வேண்டும். சரி என் தலைப்புக்கு வருகிறேன். உங்களுக்கு ஒரு பொது அறிவு கேள்வி. இந்திய யூனியனில் இருந்திராத ஒரு பகுதி இந்தியாவில் இருக்க வாய்ப்பிருக்கிறதா?

இருக்கிறது. 22 ஏக்கர் தீவு. கேள்விப்பட்டதும் பயணத்திட்டம் தயாரானாது. ரோஜாக்களின் நகரம் புனேயில் இருந்து, இந்தியாவில் சிரபுஞ்சிக்கு அடுத்ததாக - தென்னிந்தியாவில் ஈரப்பதமான லோனாவாலா (Lonavala) வழியாக (எஸ்.ராமகிருஷ்ணனின் தேசாந்திரி புத்தகத்தில் ஒரு கதையுண்டு), எனது ஒரு கவிதைக்கு MH - 06 என்ற தலைப்பு தந்த பென் (Pen) என்ற ஊர் வழியாக அலிபாக் (Alibaug) நகரம் வரை பேருந்து பயணம். அங்கிருந்து ராஜ்புரி (Rajpuri) கிராமத்திற்கு ஷேர் ஆட்டோ. பாய்மரப்படகில் மூன்று கிலோ மீட்டர் கடலுக்குள் போனால், ஜன்ஜிரா கோட்டை (Janjira Fort). பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு சுதந்திரத்திற்குப் பின்னால் இந்தியர்களால் நுழையமுடிந்த இடம்.

கடந்த இரண்டு நாட்களாக வெள்ளத்தில் மிதக்கும் ரத்னகிரி (Ratnagiri) என்ற மராட்டிய மாவட்டத்தைப் பற்றி செய்திகளில் நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம். அதன் வடஎல்லையிலுள்ள ராய்காட் (Raigad) மாவட்டத்தின் முருடு (Murud) என்ற கிராம எல்லைக்குட்பட்டது இக்கோட்டை. மேற்படி தகவல்களுக்கு இணையம். மும்பையின் Gate Way of Indiaல் இருந்து அலிபாக் அருகாமை வரை கடல்வழியாககூட செல்லலாம்.


ஜன்ஜிராவை அடைய அரபிக்கடலின்மேல் காற்றின்விசையில் செல்லும் பாய்மரப்படகுகள் உபயோகப்படுத்தப் படுகின்றன. மராத்தி கலந்த ஹிந்தி பேசும் கெய்டைத் தவிர்த்து, கோட்டையின் இடுக்குகளெல்லாம் சுற்றி சமாதிகளையும் வழிபாட்டுத் தலங்களையும் சிதிலமடைந்த சுவர்களையும் சுற்றிப் பார்த்தேன். கோட்டைக்கு நடுவில் 20 மீட்டர் விட்டத்தில் கடலின் உப்பு நீருக்கு நடுவே ஒரு நன்னீர் ஏரியும் இருக்கிறது. இன்னமும் தண்ணீர் இனிப்பாக இருக்கிறது என கெய்டு சொல்ல ஒவ்வொருவரும் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். நன்கு படித்தவர்கள் போல் தோற்றத்தில் இருந்த சிலர் அதை நம்பாமல் நின்றுகொண்டிருந்தனர். நிலத்தடி நீர் தத்துவம் தெரிந்திருந்தால், இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அதுமில்லாமல் மூன்று பக்கம் கடலுக்கு நடுவில் தனுஷ்கோடி ஊர்மக்களோடு நண்பன் கல்வெட்டு பிரேம்குமாருடன் கையாலேயே குழிதோண்டி நல்ல தண்ணீர் குடித்த நான் ஆச்சரியப்படவில்லை.

காற்றின் சீற்றத்திற்கு ஏற்ப மேலும் கீழும் ஏறி இறங்கி வயிறு குலுங்க பாய்மரப்படகு சவாரி நல்ல அனுபவமாக இருந்தாலும், தக்க பாதுகாப்பு இல்லை. கோட்டைக்குள்ளும் ஆங்கிலத்தில் பேசும் சரியான கெய்டுகள் இல்லை. ASIம், சுற்றுலாத்துறையும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டால், கோட்டைக்குள் பிரவேசிக்கும் ஒவ்வொரு உயிரும் நூற்றாண்டுகள் பின்னால்போய், தண்ணீருக்குள் இருந்துகொண்டு மிகப்பெரிய சாம்ராச்சியங்களை மிரட்டிப் பார்த்த தைரியத்தைத் தலைகோதும் உப்புக் காற்றுடன் உணரமுடியும்.

அந்த அனுபவம் எனக்குக் கிடைத்தபோது சத்தம்போட்டு சொன்னேன்:

"காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்;என்றன்
காலருகே வாடா!சற்றே உனை மிதிக்கிறேன்".

Incredible India!

- ஞானசேகர்

Friday, September 25, 2009

கோழை

(Ella Thorp Ellis எழுதிய The Year of My Indian Prince புத்தகம் படித்தபோது பிறந்த கரு இது. இப்போது பிரசவிக்கிறேன்)

சூரியனின் பாதைக்குத் தடை போடாமல், இருபக்கங்களிலும் வரிசையாக வீடுகள் அமைந்த குக்கிராமம் எங்கள் ஊர். கிழக்கு கடைசியில் பஞ்சாயத்து பைப்புக்குப் பக்கத்தில் சுண்ணாம்பு அடிக்கப்பட்ட ஓட்டுவீடுதான் எனது வாழ்விடம். மேற்கு ஆரம்பத்தில் தந்திக் கம்பத்திற்கு அருகில் பனையோலை வேயப்பட்ட கூரைவீடுதான் வசந்தியின் இடம்.

வசந்தி என்னைவிட ஒருவாரம் மூத்தவள். எங்கள் வயதொத்தவர்கள் ஊரில் யாரும் இல்லாததாலோ என்னவோ, இருவரின் வாழ்க்கைகளும் ஒரே பாதையில் பயணித்தன. பக்கத்துக் கிராமத்தின் ஆரம்பப் பள்ளிக்குப் பிறகு, எங்களின் கல்விப்பயணங்களை அருகிலுள்ள ஒரு பேரூராட்சி ஊரின் ஓர் உயர்நிலைப் பள்ளிக்கு இலக்காக்கிக் கொண்டிருந்த காலம் அது.

அந்தப் பேரூராட்சி பள்ளியின் எங்கள் வகுப்பில், முதல் இரண்டு ரேங்குகளை நானும் வசந்தியும் தக்கவைத்துக் கொண்டிருந்தோம். நன்றாகப் படிப்பதாலும், இன்றைய வகுப்புத் தலைவன் - நாளைய மாணவத் தலைவன் என்ற காரணத்தாலும் மாணவர்கள் மத்தியில் எனக்கு மதிப்பிருந்ததெனவும், வசந்திக்கும் சேர்த்தே எனவும் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். குக்கிராமவாசிகள் தங்களூர் பள்ளியில் ஆதிக்கம் செலுத்துவதை உள்ளூரின் சில மாணவர்கள் விரும்பாததையும், அப்பொறாமை உணர்வு புற்றுநோய்க்கட்டி போல் சேகர் - வசந்தி நட்பைக் கொச்சைப்படுத்தி வளர்ந்து கொண்டிருந்தது எனவும் எனக்கு அப்போது தெரியவில்லை.

ஐந்து வருடங்கள் என்னோடு முழங்காலுரச படித்தவளும், முன்றரை வருடங்களாக தினமும் தோளுரச பஸ்ஸில் பயணிப்பவளுமான வசந்தி என்னிலிருந்து சற்றே வித்தியாசப்பட்டவள் என்று அந்த 19ம் தேதியன்றுதான் தெரிந்தது. முதல்நாள் இரவு என்னோடு தந்திக் கம்பத்திற்கடியில் இடதுகால் மடக்கி வலதுகால் நீட்டி குவியதூரமும் கானல்நீரும் படித்துக் கொண்டிருந்தபோது, தண்ணீர் குடிக்கப் போனவள் திரும்பவேயில்லை. புத்தகங்களை அவளின் அம்மா வந்து எடுத்துப் போனாள். நான் சிறுவனா என்று தெரியவில்லை; ஆனால் அன்றிலிருந்து வசந்தி சிறுமியில்லை.

வசந்தி இல்லாத முதல் வாழ்நாள் அது. பஸ்ஸில் சாந்து சட்டியுடன் ஒரு பாட்டி தோள் சாய்ந்தாள். வசந்தியைப்பற்றி வகுப்பாசிரியர் கேட்டது முதல், அன்றைய எல்லாக் கேள்விகளுக்கும் தெரியாதென பதில் சொன்னேன். தமிழாசிரியை சலசலத்தது எல்லாம் இரட்டைக்கிளவியாகவே கேட்டன. இங்கிலிஷ் டீச்சர் கோர்த்தெழுதியதெல்லாம் நேர்மறையும் எதிர்மறையும் சேர்ந்தே திரியும் Cleave ஆகவே தெரிந்தன. நாண்களெல்லாம் இணைகோடுகளாயின. புத்திரனாய் போர்தொடுத்த அவுரங்கசிப்,புத்தமாகி போர்தடுத்த அசோகரானார். ஓர் எலக்ட்ரானுக்காக அலையும் குளோரினுக்கு, ஹீலியத்தின் அஹிம்சை போதித்தேன்.

வசந்தி இல்லாமல் இரண்டு நாட்களாகத் தனியனாய்ப் படித்துக் கொண்டிருந்த எனக்காக தந்தி மரத்தின் டியூப்லைட் தலைகுனிந்து வருத்தப்பட்டது. தவிர்க்க முயலும் பார்வைச் சந்திப்புடன் என்னை வசந்தி சந்தித்தாள். எச்சலனமும் இல்லாமல் என்தலைமேல் இருந்த பூச்சியைத் தட்டிவிட்டு அதே பழைய இடைவெளியில் இடதுகால் மடக்கி வலதுகால் நீட்டி நடத்தப்பட்ட பாடங்கள் கேட்டாள். ஒற்று மிகும் இடங்கள் பற்றியும், தாலஸ் என்றால் தலைகால் புரியாதது எனவும், ஷாஜகானுக்கு மும்தாஜ் முதல்மனைவி இல்லை எனவும் சொன்னேன். மறுநாள் அதே பஸ்ஸில் ஒரே சீட்டில் அமர்ந்து என்னைச் சிறுவன் என நிரூபித்தாள். அவளும் சிறுமியில்லாமல் இல்லை.

இரண்டு நாட்களை நிமிட நேரத்தில் புரிந்துகொள்ளும் வசந்திக்கே புரியாமல், கண்ணுக்குத் தெரியாமல் அவள் வீட்டினுள் அப்படியொன்று இருப்பது அன்றுவரை யாருக்குமே தெரியாது. படித்துக் கொண்டிருக்கையில் தண்ணீர் குடிக்க எழுந்தவளைப் போனமாதம் இதே தேதியில் தண்ணீர் குடிக்கப்போய் திரும்ப வராததைக் கிண்டல் செய்தேன். முன்பற்கள் கடிந்து, புருவம் சுருக்கி, தலைதாழ்த்தி முறைத்துவிட்டுப் போனாள்.

இன்றும்கூட வசந்தி சீக்கிரம் திரும்பவில்லை. Direct - Indirect Voiceகளை மூடிவிட்டு அவள் வீட்டிற்குச் சென்றேன். நிலைப்படியில் குனிந்து தலைநிமிர்ந்தபோது நான் கண்ட காட்சி என்னை உலுக்கிப் பார்த்தது. சட்டென திரும்பப்போய் நெற்றியில் இடித்துக்கொண்டேன். நான் சிறிதுநேரம் அங்கேயே நின்றும்கூட வசந்தி ஒன்றுமே பேசாததிலிருந்து, எனக்கு அங்கு வேலையில்லை என்று உணர்ந்து கொண்டவனாய்த் தந்திமரத்தடியில் தஞ்சம் கொண்டேன்.

வசந்தி வந்தாள். அதே பழைய இடைவெளியில் சம்மணக் காலிட்டு அமர்ந்தாள். பேரமைதி. ஓர் அந்நிய மொழி வாக்கியங்களை Simple-Compound-Complex எனப் பிரித்துப் போடவும், இடதுபக்கங்கள் எல்லாம் வலதுபக்கங்களுக்குச் சமமென நிரூபித்துக் காட்டவும் சொல்லித்தந்த கல்வி, அறிவு, அது, இது எல்லாமும் சேர்ந்தும்கூட, எனக்குப் பக்கத்தில் இருப்பவளின் தாய் வெற்று மார்புடன் படுத்துக் கிடந்த காரணத்தை நேரிடையாக கேட்கும் பக்குவத்தைத் தந்திருக்கவில்லை.

"அம்மாவுக்கு ஒரு வாரமா ரொம்ப முடியல. திடீர்னு இன்னக்கி இருமல் சாஸ்தியாயிடிச்சு. நெஞ்சு கரிக்குதுன்னு சொல்லி அமர்த்தான்ஜனம் (Amrutanjan) தடவச் சொன்னுச்சு ".
வசந்தி சிறுமியில்லை.
"அப்பா சனிக்கெழம ராத்திரிதான் வருவாரு. நான் அம்மாவ நாளைக்கிப் புதுக்கோட்ட பெரியாஸ்பத்திரி கூட்டிட்டுப் போய்த்து வரேன். லீவு சொல்லிடு. எதுவும் மனசில வெச்சிக்கிடாதே".
நான் சிறுவனில்லை.
"ஸ்கூல்ல யாராவது கேட்டா எனக்கு ஒடம்பு சரியில்லன்னு சொல்லு. அம்மாவப் பத்தி ஏதும் சொல்லாதே".
எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் திரும்பிப் போனாள்.

(வழக்கம்போல் சற்றே இடைவெளி எடுத்துகொண்டு, கொஞ்சம் மனநிலையை மாற்றிக்கொண்டு தொடருங்கள்)

வசந்தி இல்லாத இரண்டாவது 19ம் தேதி அது. இருட்டிய பிறகே வசந்தி தனது தாயுடன் திரும்பினாள். தந்திக்கம்பத்தில் சாய்ந்துகொண்டிருந்த என்னைத் தவிர எல்லாரும் வசந்தி வீட்டில் கூடினார்கள். TB, நெஞ்சுருக்கி, காசம், எலும்புருக்கி, Tuberculosis என்ற வார்த்தைகள் அடங்கிய வாக்கியங்களுடன் பேசி, தனது தாயுடன் யாரும் பழகவேண்டாம் என் சொல்லி அனுப்பிவைத்தாள்.

வசந்தி வந்தாள். அதே பழைய இடைவெளியைவிட இன்னும் கொஞ்சம் தூரத்தில் சம்மணக் காலிட்டு அமர்ந்தாள். அன்றைய பாடம் கேட்டாள். நான் எந்தவொரு சலனமும் காட்டிக்கொள்ளவில்லை. ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விளக்குமென காந்தவியல் சொன்னேன். ஒற்று மிகா இடங்கள் சொன்னேன். ஆசையாய்க் கட்டிய தாஜ்மகாலை ஷாஜகான் தூரப்பார்த்தே இறந்துபோனதைச் சொன்னேன்.

செங்கிப்பட்டி மகாத்மா காந்தி சானடோரியத்தில் மாதாமாதம் பரிசோதனை செய்யப்பட வேண்டுமென வசந்தியின் அம்மாவுக்கு டாக்டர்கள் சொல்லியிருந்தனர். ஒவ்வொரு மாதமும் 19ம் தேதி என்பது வசந்திக்கு எழுதப்படாத விடுமுறை நாளானது. என்னையும் வசந்தியையும் பிடிக்காத மாணவர்கள் உண்மைநிலை தெரியாமல், எல்லா 19யும் முதல் 19தோடு முடிச்சுபோட்டு, வசந்திக்குக் கர்ப்பப்பையில் ஏதோ பிரச்சனையென கதைகட்டிவிட்டார்கள். மாதவிலக்குச் சரியாக வருவதில்லை எனவும், அதைச் சரிசெய்யத்தான் தஞ்சாவூர் பக்கம் ஏதோவொரு லாட்ஜ் டாக்டரிடம் பிரதிமாதம் இன்ன தேதி இன்ன நேரத்திற்குப் போய்வருவதாகவும் வசந்தியின் பெயரில் வதந்தி. இதெல்லாம் எங்களுக்கு அப்போது தெரியாது.

டிசம்பர் 19. மார்கழிப்பனி நோயைத் தீவிரப்படுத்தி இருந்ததால், அன்று சானடோரியம் செல்லவில்லை. வேல்ஸ் என்ற இடம் எங்கு இருக்கிறதென்று கண்டுபிடிப்பதற்காக நண்பன் ஒருவனிடமிருந்து அட்லஸ் புத்தகம் வாங்கி வந்திருந்தேன். நான் இடதுபக்கங்களிலும், வசந்தி வலதுபக்கங்களிலும் இந்தியாவிற்கு வெளியே தேடினோம். ஏதோ உணர்ந்தவளாய்ச் சட்டென வசந்தி வீடு புகுந்தாள்.

"ஐயோ வேல்ஸ் இங்க இருக்கு பாரு". மெய்மறந்து சொன்ன பொழுதில் வசந்தி அருகிலில்லை. உலகம் தூக்கிய அட்லஸ் தூக்கிக்கொண்டு அவள் வீட்டிற்குப் போனேன். நிலைப்படியின் மேல் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தாள். வீட்டை இருள் பூட்டி இருந்தது.

"என்ன ஆச்சு வசந்தி? இங்க பாரு வேல்ஸ். நீ பாத்த பக்கத்துலதான் இருந்துச்சு"
"ஒண்ணுல்ல. ஒண்ணுல்ல. அந்த சன்னல்ல டார்ச் லைட் இருக்கு. கொஞ்சம் எடு"
எடுத்துக் கொடுத்தேன்.
"கத்தி பிளேடு அருவா எல்லாத்தையும் பூட்டி வெச்சேன்"
பின்பக்க மூடி திறந்தாள்.
"மண்ணென்ன வாங்குறத நிப்பாட்டுனேன்"
பேட்டரியைத் திருப்பிப் போட்டாள்.
"பூச்சி மருந்து அரளி வெத சாமானியமா கெடைக்காதுன்னு நெனச்சேன்"
பின்பக்க மூடியை மூடினாள்.

"பனியில நனையிதுன்னு தாவணிய வீட்டுக்குள்ள காயப்போட்டது என்னோட விதியா?"
"என்ன ஆச்சு வசந்தி?"
"தாவணியில என்னப் பாக்கனும்னு சொல்லுவியே. நான் கட்டுன மொத தாவணிப் பாரு"
வீட்டுக்குள் டார்ச் அடித்தாள்.
தாவணி உத்திரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. 'அது' தாவணியில் தொங்கிக்கொண்டிருந்தது. அட்லஸ் நழுவியது. உலக நாடுகள் காலடியில் சிதறின. உதவிக்குக் கூப்பிடக்கூட யாருமில்லை. பஞ்சாயத்து தலைவர் சபரிமலை குருசாமியாகி பதினெட்டாம் வருஷ மலைக்குப் போகும் விஷேசத்திற்கு ஊர் சென்றிருந்தது.

எவ்வளவு நேரம் அழுதோம் எனத் தெரியவில்லை. இந்தியப் பெருங்கடல் நனைந்திருந்தது. கொஞ்சம் தைரியம் வரவழைத்து டார்ச் எடுத்து உள்ளேபோக எத்தனித்தேன். டார்ச்சைப் பிடுங்கினாள். அழுகை பீறிட சொன்னாள்.
"நீ பாக்க வேணாம் சேகரு. ஒத்த சேலமட்டுந்தான் கட்டியிருக்கு".

எந்த வெளிச்சமும் இல்லாமல் அரிவாள்மனையால் தாவணியை நான் அறுக்க, வசந்தி தன் தாயைச் சுமந்து இறக்கினாள். முத்திரக் கவுச்சையும், கட்டில்லாமல் வடிந்திருக்கும் உடல் திரவங்களையும் காலடியின் பிசுபிசுப்பில் உணர்ந்தேன். நடுவீதியில் அமர்ந்து எதையோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஷோடனை செய்து தற்கொலையை மறைத்தாள் வசந்தி. மூன்று மணிநேரம் பிணத்துடன் அமர்ந்திருந்தோம். ஊர் திரும்பியது. நோய் தொற்றும் பயத்தில் யாரும் நெருங்கவில்லை. அதன்பிறகு எல்லா நாட்களும் வசந்தி பள்ளி வந்தாள். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருவதற்குள், ஒரு செருப்புக் கடைக்காரருக்கு இரண்டாம் தாரமாகியிருந்தாள்.

வசந்தி இல்லாமல் போனபோதுதான் அவள் என்னிலிருந்து நிறைய வித்தியாசப்பட்டிருக்கிறாள் எனப் புரிந்தது. அவள் இறந்தால் எரிப்பார்கள்; நான் இறந்தால் புதைப்பார்கள். சமூகத்தில் அவள் வினைச்சொல்; நான் பெயர்ச்சொல். வாழ்க்கை என்னைத் தசமப்புள்ளிக்கு இடதுபுறம் பயணிக்கச் சொல்கிறது; அவளை வலதுபுறம் அனுப்புகிறது. சுருக்கமாக என்னை ஆண் என்கிறது; அவளைப் பெண் என்கிறது.

வசந்தியின் தாய்க்குப் பிறகு எனக்குத் தெரிந்து இதே காரணத்திற்காக இதே போல் ஆறுபேர் இறந்துகொண்டார்கள். இந்தியா முழுவதும் இதே காரணத்திற்காக நான்கு லட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் இறக்கிறார்கள். சுதந்திரம் கிடைத்த போது கூட ஏறத்தாழ இதே எண்ணிக்கைதான். பெரியம்மை ஒழித்தோம்; போலியோவைக் காலியாக்கினோம்; விமானமேறி வரும் வியாதிகளைச் செய்தியாக்கி பக்கத்தில் இருமுபவனையும் தும்முபவனையும் மறந்துபோனோம்.

எங்கோ ஒருவன் இருமினால், இன்னொருவன் பதறவேண்டுமென்பதெல்லாம் பாரதியார் பாடலில்தான் என உதாசீனப்படுத்தினால், வரலாறு இன்னொருமுறையும் சிரிக்கும். ஒருவன் காறித் துப்பியதை உதாசீனப்படுத்தியதால் வந்ததுதான் முதல் உலகப் போர்!

- ஞானசேகர்

Sunday, August 23, 2009

மதுரை காந்தி மியூஸியம்

Generations to come will scarce believe that such a one as this walked the earth in flesh and blood.
- Albert Einstein

ஆகஸ்ட் 14, 2009. பாகிஸ்தான் சுதந்திர தினம். இரண்டு கிராமங்களை இலக்காக வைத்து, அதிகாலை 5 மணிக்குத் திருச்சியில் இருந்து பயணத்தை ஆரம்பித்தேன். ஒன்று மதுரையின் தெற்கே உள்ளது; இன்னொன்று வடக்கே. திண்டுக்கலில் இருந்து மதுரை செல்லும் வழியில் பாதியிலேயே இறங்கி, அந்த மலையடிவாரக் கிராமத்தைப் பார்த்துவிட்டு, ஆரப்பாளையம், ஆயிரம் கால் மண்டபம், மீனாட்சி அம்மன் கோவில், திருமலை நாயக்கர் மஹால், இன்னொரு கிராமத்தையும் பார்த்துவிட்டு பெரியார் பேருந்து நிலையம். தந்தி அலுவலகத்திற்கு அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, மாநகராட்சி பெயர்பலகை சொன்ன திசையில் நடந்து அந்த வெள்ளை மாளிகையை அடைந்தேன். காந்தி மியூஸியம்.

விவேக்கும், சுந்தர் சியும் சிறைக்கைதிகளாக வந்து காமெடி செய்வதாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் அதே இடம்தான். ஆனால் எனக்கு அறிமுகம் செய்தது மணா அவர்களின் தமிழகத் தடங்கள் (உயிர்மை பதிப்பகம்) புத்தகம். சுதந்திர இந்தியாவில் காந்தியின் மறைவுக்குப்பின் உருவான முதல் மியூஸியம்.

காந்தியின் தோற்றத்தையே மாற்றிய மதுரை; பாரிஸ்டரை அரைநிர்வாணப் பக்கிரியாக மாற்றிய மதுரை; தாழ்த்தப்பட்டவர்கள் அனுமதிக்கப்படாத மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழையாமல் காந்தி திரும்பிப்போன அதே மதுரை; அரிஜன ஆலயப் பிரவேசம் நடந்தபோது அதே கோவிலுக்குள் காந்தியையும் நுழையவைத்த மாமதுரை. இப்படி காந்தியின் வாழ்வில் முக்கியபங்கு வகித்த மதுரைநகரில், பரிசீலிக்கப்பட்ட ஏழு இடங்களில் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு காந்திக்கான முதல் மியூஸியம் அமைக்கப்பட்டது. இதன்பிறகே போர்பந்தர், ராஜ்கோட், சபர்மதி, தண்டி, வார்தா, நவகாளி போன்ற இடங்களிலும் மியூஸியங்கள் அமைக்கப்பட்டன.

1. மியூஸியம் அமைந்துள்ள தமுக்கம் அரண்மனை பற்றி,

2. கொல்லப்பட்டபோது காந்தி அணிந்திருந்த வேட்டி இரத்தக்கறையுடன்,

3. மூன்று காந்தியக் குரங்குகள். மிசாரு மசாரு மிகசாரு. மஹாராஸ்ட்ராவின் மேற்குத் தொடச்சி மலையில் உயரமான இடமான மஹாபலேஸ்வரில், இயற்கையிலேயே இக்குரங்குகளின் தோற்றத்தில் அமைந்த மூன்று பாறைகள் ஒரு பள்ளத்தாக்கில் உள்ளன.

4. பிப்ரவரி 23, 1946 அன்று தாழ்த்தப்பட்டவர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டபோது, முதல்முறையாக காந்தி அக்கோவிலுக்குள் செல்லும்காட்சி. இப்புகைப்படம் ஆயிரம்கால் மண்டபத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஹிட்லருக்குக் காந்தி எழுதிய கடிதத்தின் நகல், வட்டமேசை மாநாட்டில் காந்தி உடுத்தியிருந்த சால்வை, காந்தியின் அஸ்தி, அவர் படித்த புத்தகங்கள் போன்ற காந்திய அம்சங்கள் ஏராளம். இவற்றைத்தவிர இன்றைய இந்திய தேசியகொடி தோன்றிய வரலாறு, தொற்றுநோய் காலத்திலும் மக்களைத் தொட்டுப்பார்த்த ஒரு மனிதன், பூகம்பப் பூமியின் இடுக்குகளில் பிரயாணித்த ஒரு தலைவன், தலைமையையும் காலணியையும் தூக்கியெறிந்துவிட்டு நாடுமுழுவதும் நடந்துதிரிந்த ஒரு சாமானியன். இந்தியாவில்தான், தமிழ்நாட்டில் காண ஓர் இடம்.

காந்தியின் ரத்தக்கறைபடிந்த கடைசி ஆடை வைக்கப்பட்டிருக்கும், உட்புறம் கருப்பு வர்ணம் பூசப்பட்ட அந்த தனியறையில் வாலிபக் கூட்டமொன்று அடித்த கிண்டல்; நேதாஜியின் புகைப்படத்தைக் கிழித்து கிறுக்கித் திட்டவும் பாராட்டவும் உபயோகப்படுத்தப்பட்ட தமிழ்மொழி. இப்படி சில கெட்ட அனுபவங்கள் கிடைத்தாலும், பிரிட்டிஷ் அரசின் கொடுமைகளைப் பார்த்து வருத்தப்பட்ட ஓர் ஆங்கிலேயக் குடும்பத்தைப் பார்த்த திருப்தியும் கிடைத்தது.

எனக்கு மணா; யாருக்கோ நான் என்ற நம்பிக்கையில்....

- ஞானசேகர்
(சத்திய சோதனையால் மகாத்மா, உங்களில் பலரைப் போலவே)

Thursday, August 20, 2009

தாய்மாமன் கதை

ஆடு கனவுகண்டா
அருவா அறியாது

புழுவெல்லாம் கனவுகண்டா
கொழுவுக்குப் புரியாது

எப்படியோ பிரிவானோம்
இடிவிழுந்த ஓடானோம்

- வைரமுத்து (தோழிமார் கதை - பெய்யெனப் பெய்யும் மழை)


(தனது சகோதரியின் தாயிழந்த பிள்ளைகளுக்காகக் கல்யாணம் தவிர்த்து வாழும் மகாத்மாக்களுக்காக - அங்கிள் மாம்ஸ் காலத்தில்கூட மாமன் சித்தப்பன் வித்தியாசப்படுத்தும் உண்மைத் தமிழர்களுக்காக - பருத்திவீரனின் முடிவுக்குப் பின் சித்தப்புவின் எதிர்காலம் சிந்தித்தவர்களுக்காக,)

வயலோரம் வளந்த மலை
வானரமும் வாழும் மலை
இடுக்கெல்லாம் அடைகட்டி
தேனடையும் குன்னமலை.

குன்னமலை முகத்தில்
வெயில் பொசுக்கும் ஒரு முகட்டில்
ரயில் பாத்த சிறுவயசு
மகனே நெனவிருக்கா?

ஒருகை முட்டுதந்து
அக்காவ நான் நிறுத்த

அஞ்சு வெரலும்
அடுத்தடுத்து கொடுத்துனக்குப்
பால் அழுக நான் நிறுத்த

போலீசுக்குப் பயந்துபோய்
என் அழுக நான் நிறுத்த

எறப்பும் பொறப்பும்
எங் கூடவந்த
சாமத்துக் கார்சவாரி
மருமகனே நெனவிருக்கா?

அம்மா போத்து
நான் படுக்க
பாழாப் போன
கொப்பளமும் தான்வலிக்க
அம்மாவப் போலநீயி
அங்கமெல்லாம் கழுவுனியே
அய்யா நெனவிருக்கா?

காலைக்கடன் தொடச்ச கல்லப்
பொதருக்குள்ள நாமெறிய
கலவிய ரெண்டு பாம்பு
சர்ர்ர்ருன்னு சீறிவர

டவுசர விட்டுப்புட்டு
தல தெறிக்க நீயோட
கைலிய கழட்டிப்புட்டு
காலால நான் பறக்க

செத்தபாம்பு சட்டைதுக்கி
வீராப்பா வீதியில
உலா போனோம் நெனவிருக்கா?

ஒண்ணா திரிஞ்சோம்
ஒரே துண்டில் துயில் கண்டோம்
ஒண்ணாவே இருக்க
ரெண்டுபேரும் யோசிச்சோம்

மகளப் பெத்த
வாழாவெட்டி நாங்கட்டி
மகள நீ கட்டி
மாமன் மருமகனா
ஒரேவீட்டில் வாழச்
சம்மதிச்சோம் நெனவிருக்கா?

பத்தாவது பீசாகி
கல்லொடைக்க நான்போக
வாத்தியார அடிச்சிப்புட்டு
வீட்டவிட்டு நீ ஓட

சோசியஞ் சொன்ன
சாமியெல்லாம் தேடிப்போனேன்
ஏஞ் சாமி நெனவிருக்கா?

தாராபுரம் தாண்டிப்போயி
தாரங்கட்டி நீதிரும்ப
ஆசிர்வாதம் கேக்கயில
ஆயுசுக்கும் மொததடவ
மாமானியே நெனவிருக்கா?

திருமதியக் கூட்டிக்கிட்டு
திருப்பூரு நீபோக
வான்மதியும் புடிக்காம
மதியிழந்து நான்போக

ஓங்குடும்பம் ஓம்புள்ள
ஓம்பொழப்பு ஒன்னோட
எங்கக்கா அவபுள்ள
பழந்நெனப்பு என்னோட.

நாளும் நழுவிடுச்சு
நரம்பெல்லாம் சுண்டிருச்சு
உன் தோளேறி தேர்பாக்க
மகன்கூட வளந்திருச்சு

வயலோரம் வளந்த மலை
வானரமும் வாழ்ந்த மலை
டவுன்காரன் வீடுகட்ட
லாரியேறிப் போயிருச்சு!

- ஞானசேகர்
(அம்மா என்று இருமுறை சொல்லி மாமா என்ற வார்த்தையைப் பழகியவன், உங்களில் பலரைப் போல)