புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Thursday, October 17, 2013

மாநகர் இடக்கை விதி

இடது கையின்
பெருவிரல் சுட்டுவிரல் நடுவிரல்
ஆகிய மூன்றையும்
ஒன்றுக்கொன்று நேர்க்குத்தான திசைகளில்
வைத்துக் கொண்டு
போக வேண்டிய திசையைச்
சுட்டுவிரலும்
திருப்பி விடப்பட்ட திசையை
நடுவிரலும்
குறிப்பதாகக் கொண்டால்
போய்ச் சேரும் திசையைப்
பெருவிரல் காட்டும்.

- ஞானசேகர்

Wednesday, October 16, 2013

புறவினத்தார்

மரித்தவனைச்
சிலுவையில் அறைகின்றன‌
கல்லறைகளின் சாதிச் சுவர்கள்.

- ஞானசேகர்

Sunday, October 06, 2013

ஆணுக்கான‌ தீட்டுத்துணிகள்

எந்நாடு போனாலும்
தென்னாடு உடைய சிவனுக்கு
மாதவிலக்குள்ள பெண்கள்
மட்டும் ஆவதே இல்லை
- கனிமொழி 

தாலியறுத்த பெண்ணொருத்தி
தாங்காத் துயரம் கொண்டு
பொட்டு மஞ்சள் குங்குமம்
முடிச்சிட்டு முச்சந்தி இட்டதை

தம்பி நீங்கள் அதைக்
கையால் எடுக்கவும் இல்லை
காலால் மிதிக்கவும் இல்லை
இன்னாருக்கென‌ இட்டதும் இல்லை
போகிற பாதையில்
இந்தக் காலால் எத்திவிட்டு
அந்தக் காலால் தட்டிவிட்டு
கடந்து போன தோசம்
எட்டு மாதமாய் வாட்டுகிறது

தம்பி நீங்கள் அதைக்
கண்ணால் பார்த்தும் செய்யவில்லை
மனதால் அறிந்தும் செய்யவில்லை
நடக்க வேண்டுமென இருந்திருக்கிறது
நடந்து க‌டந்து போய் இருக்கிறீர்கள்

தம்பி உங்களுக்கு
இந்த எட்டு மாதமாய்
தொட்ட காரியம் துலங்காமல் போகிறது
பட்ட காரியம் பஸ்பமாய்ப் போகிறது
சிந்தனை குரங்காய்த் தாவுகிறது
சொந்தம் தாமரைத் தண்ணீராய் நழுவுகிறது
சபையில் பேச்சு எடுபடாமல் போகிறது
பயிருக்குப் பாய்ச்சினால் பதருக்குப் போகிறது
அரசன் போல் மனதிருந்தும்
ஆண்டி போல் மனஸ்தாபம்

தம்பி உங்களுக்கு
உள்ள‌ கண்டம் மூன்று
தலைக்கு வந்தது ஒன்று
தலைப்பாகையோடு போனது
வாகனத்தில் வந்த ஒன்று
வணங்குகிற தெய்வத்தால் போனது
மூன்றாவதாய் ஒன்று மீதமுண்டு
முறித்து விட பரிகாரம் ஒன்றுமுண்டு
மூன்றூற்றியொன்று தட்சணை
பொட்டு மஞ்சள் குங்குமம்
அம்மனுக்கு ஒரு சேலை
கையை மடக்கிவிட்டு
சந்தேகம் ஏதுமெனில் தயங்காமல் கேளு தம்பி.

- ஞானசேகர்

Wednesday, September 25, 2013

காக்கை உகக்கும் பிணம்

அவன் தந்தையும்
இவன் தந்தையும்
யார் ஆகியரோ?
மற்றவன் கோவிலைச்
சேர்ந்தே இடித்தனர்.

அவன் தாயும்
இவன் தாயும்
எம்முறைக் கேளிர்?
மற்றவன் பெண்டிரைச்
சேர்ந்தே வன்புணர்ந்தனர்.

அவனும்
இவனும்
எவ்வழி அறியும்?
மற்றவன் உறுபொருள்
சேர்ந்தே கவர்ந்தனர்.

அவன் சாதியும்
இவன் சாதியும்
தெரிந்த‌பின்
அவன் மலத்தை
இவனைத்
தின்ன வைத்தான்.

- ஞானசேகர்

Tuesday, September 24, 2013

நட்பறிதல்

நமது நட்பும்
உன்னதமாகத் தான் இருந்தது

சாதி பற்றிய‌
உன் வீட்டாரின் விசாரிப்புகளுக்கு
நான் திணறாத வரை.

- ஞானசேகர்

Wednesday, August 28, 2013

அர்த்தநாரியின் வலது நெற்றிக்கண்

யான்நோக்காக் கால் நிலன்நோக்கும் நோக்குங்கால்
தான்நோக்கி மெல்ல சுடும்.

- ஞானசேகர்

Tuesday, August 27, 2013

அகாலம்

ஓடாத என் கடிகாரம்.

ஆற‌ அமர ஓய்வெடுக்கும்
மூன்று ஆரங்களின்
மர்ம வட்டம்.

மணிக்கட்டில் மல்லாந்திருக்கும்
மணிகளற்ற முள் கிரீடம்.

காலனைத் தவிர‌
யாவருக்கும் புதிர் போடும்
60 புள்ளிக் கோலம்.

தேவதையின் ஒளிவட்டம் பொருத்தி
சுழலும் பற்கள் விழுங்கி
முப்பற்களில் இளிக்கும்
குட்டிச் சாத்தான்.

முக்கண்களும் அணைந்து போய்
முக்காலங்களும் திக்குமுக்காடி
முட்டி எட்டிப் பார்க்கும் முக்கு.

நாடியோடு ஒட்டி உறவாடினும்
நாடி நோக்குகையில்
நடித்து
நொடித்து
நாதியற்று உணரச் செய்யும்
கையடக்கச் சூன்யம்.

சுற்றாமலேயே
சுற்றவைக்கும்
சுழி.

கரம்
சிரம்
புறம்
நீட்டும் சகபயணி.

அணிவாரையும்
அணுகுவாரையும்
நோக்குவாரையும்
வாரி விட்டு
வாரை வாறி அணைத்திருக்கும்
மதிமுகவார்.


ஓடாத என் கடிகாரம்.

வருத்தப்பட்டு நான்
சுமக்க வேண்டிய பாரம்.

நாளுக்கு இருமுறை
எனக்கே தெரியாமல்
உண்மையாக இருக்கும்
எனக்கான சத்திய சோதனை.

என்னைப் பட்டினியிட்டு
சுற்றும் பூமியில்
உங்களில் யாருடனோ
நித்தம் நித்தம்
அகநக நட்புறும்
நான் கட்டிவந்த பத்தினி.

அதன் நிகழ்காலம்
என் துர்மரணத்தின் இறந்தகாலமாக
உங்கள் வருங்காலத்தில்
பதிவு செய்யப்படும்
எனப் பயங்காட்டும்
ஒரு மாய எதார்த்தக் கூடு.

உலகத்தீரே!
என்னைப் போலவே
ஓடாத கடிகாரம் உடையவர்
நீங்கள் எனில்
தயைகூர்ந்து சொல்லுங்கள்
நேரம் என்னவென்று.

- ஞானசேகர்

Tuesday, August 13, 2013

எங்கள் காலத்தில்

'காசிக்குப் போனா கருவுண்டாகு மென்பது அந்தக் காலம்
ஊசியப் போட்டா உண்டாகுமென்ப திந்தக் காலம்' என்றார் N.S.கிருஷ்ணன்.
'எளிதில் மணப்பெண் கிடைத்தாள்
ராமராஜனைக்கூட விரும்பி ரசித்தோம்
ஆம்… 
அந்தக் காலம் நன்றாக இருந்தது' என்றார் கவிஞர் மகுடேசுவரன்.
'என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம்' என்று எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் தலையங்கம் எழுதுகிறார். நிகழ்கால ஒழுங்கின்மைகளைக் கடந்த‌கால வார்த்தைகளில் கடந்து போய் விடத் துடிக்கும் ஒரு பாமர மனநிலையில் நான் எழுதியது: 


கவிதையோ கதையோ பெரிதெனில்
தொடர்ந்து படிக்கலாமா
முதல் வரியிலேயே தீர்மானித்தோம்
முதல்நாளே Download செய்தோம்
கடைசிநாளில் Recharge செய்தோம்
Favourite Song Dedicate செய்தோம்
Invest செய்தோம்
Likeகினோம்
Customer caரிடம் கத்தினோம்
'வந்து'
'பாத்தீங்கன்னா'
'இப்ப என்ன சொல்ல வர்றேன்னா'
'you know'
'என்னோட point of viewல‌'
என வாக்கியங்கள் நிரப்பினோம்
புட்டம் தெரிய‌ பேன்ட் போட்டோம்
வாழ்த்துக்கள் தேடி தவமிருந்தோம்
கூட்டத்தில் தேசியகீதம் 
பிரமாதமாகப் பாடினோம்
முகநூல் நட்பது நட்பென்றோம்
ஆம்புலன்ஸ் முந்தினோம்
ஒலிம்பிக்ஸ் பிந்தினோம்

பொச்சு வலிக்காமல்
கோழிகள் முட்டையிட்டன‌
நியாயவிலைக் கடைகள் இருந்தன‌
மட்டைப்பந்து மைதானம்
அமெரிக்கத் தூதரக‌ம்
வாசல்களில் வரிசைகள் நின்றன‌

குலதெய்வங்கள் குற்றுயிராய்க் கிடந்தன‌
ந‌டிக‌ர்க‌ள் பாலில் குளித்த‌ன‌ர்
ந‌டிகைக‌ளுக்குக் கோவில்க‌ள் இருந்த‌ன‌
நாத்திகர்கள்
கோவில் நுழையப் போராடினர்
ஆத்திகர்கள்
மசூதி இடித்தனர்

மதராஸ் மாகாணம் தமிழ்நாடாகி
பின் சென்னை ஆனது
த‌மிழ்நாடு
சென்னையின் ஸ்கோர் கேட்ட‌து
சென்னைக்கும் தமிழ்நாட்டிற்கும்
16 மின்நேரம் வித்தியாசம் இருந்தது

ஆணுறுப்பின் மேல்தோல்
உயிர் தீர்மானித்தது
பெண்ணின் முகம் உயிரைத்
திராவ‌கம் தீர்மானித்தது

குறிஞ்சி ரிசார்ட் ஆனது
முல்லை தீம் பார்க் ஆனது
மருதம் அபார்ட்மென்ட் ஆனது
நெய்தல் பிக்னிக் பார்க் ஆனது
பாலைச் சாலையில் ஊற்றிப் போராடினர்

கடனட்டை கௌரவம் தந்தது
பச்சையட்டை பெருமை சேர்த்தது
உதட்டு முத்தம் U பெற்றது
கன்னித்தீவு
இரண்டாம் பக்கத்தில் எப்போதும் இருந்தது
கச்சத்தீவு 
இந்தியா பக்கத்தில் எப்போதோ இருந்தது
திருவள்ளுவர் சாதிவரை
விக்கிபீடியா சொன்னது
சிதம்பர ரகசியம் 
கடைசியாகச் சொல்லப்பட்டது

பிராய்லர் கோழிகளுக்கும்
பள்ளிக் கூடங்களுக்கும்
நாமக்கல் புகழ் பெற்றிருந்தது
விபி சிங் இறந்தது பலருக்குத் தெரியாது
இந்திரா முனை இருந்தது
தபால் பெட்டி இருந்தது

முதல்வர்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதினர்
ஒரே மதிப்பெண்ணில்
ஓராயிரம் மாணவர்கள் இருந்தனர்
பெண்கள் பெரும்பாலும்
சாய்பாபாவை வணங்கினர்
கோட்டைக்குப் போக‌ பலர்
கோடம்பாக்கம் போயினர்
விபச்சாரத்தைச் சட்டமாக்க‌
நுகர்வோர் போராடினர்
ஜனங்க‌ளிடம் வென்றவர்கள்
ஜனாதிபதிக்குச்
செல்லாத ஓட்டுப் போட்டனர்
ஆகஸ்ட் மாதங்களில்
அன்னா ஹசாரே வந்து போனார்

நம்பிக்கைகள் தீர்ப்பெழுதின‌
அர்ச்சகர் முதல் ஆளுநர் வரை
குறுந்தகடுகள் சுற்றின‌
நிருபர்களின் செருப்புகள்
செய்திகளில் வந்தன‌
விவாகங்கள் சில இருந்ததால்
விவாகரத்துகள் பல இருந்தன‌
பிறந்தவுடன் வங்கிக்கணக்கு
இறந்தபின்னும் ஓட்டுரிமை கிடைத்தன‌

இயேசு பிறக்கவில்லை
உலகம் அழியவில்லை
கைக்கிளை வழக்கில் இல்லை
ஆசிரியர்கள் பெரும்பாலும்
தேர்வில் தேறவில்லை
சச்சினும் ரமணனும்
ஓய்வுபெறவில்லை
23 ரூபாய் இருந்தால்
ஏழை இல்லை
வெள்ளியில் கிடைத்தது
ஞாயிறு சனியில் வந்தால் 
சுதந்திரம் இனிக்கவில்லை
கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்ட நந்தனார்
கருவறைக்குள் அனுமதிக்கப்படவில்லை

108 ஆம்புலன்ஸ் திட்டம்
மத்திய அரசா?
மாநில அரசா? 
சேதுவைப் பாரதி
தோண்டச் சொன்னாரா?
மூடச் சொன்னாரா?
இராஜீவ் காந்தியைக் கொன்றது யார்?
நாடாளுமன்றத்தைத் தாக்கியது யார்?
உண்மையிலேயே அது திரிஷாவா?
சொப்பனசுந்தரியை யாரு வெச்சிருக்கா?
எங்களுக்கும் தெரியவில்லை

சிறுநீரகங்கள் விற்றோம்
சந்திப் பிழைகள் சகித்துக் கொண்டோம்
மரபுப் பிழைகள் மறந்து போனோம்
வாழ்த்த வயதில்லாமல் வணங்கினோம்
நேரு பரம்பரையைக்
காந்தி வாரிசுகள் என நம்பினோம்
தேசிய மொழி
இந்தி என நம்ப வைத்தோம்
மருத்துவ‌ர்களிடம் பெயர் மறைத்து
கேள்விகள் கேட்டோம்
இந்தியர் ஆளா நாட்டில்
ஈழ ஆதரவு கேட்டோம்

கவிதையோ கதையோ பெரிதெனில்
நேராக கடைசி வரிகளைப் படித்தோம்.

- ஞானசேகர்

Tuesday, July 09, 2013

உண்மை விசுவாசி

(அகப்பாடலைப் புறப்பாடல் ஆக்கியமைக்கு அடியேனை அம்மூவனார் மன்னிப்பாராக‌)

தாய் உடன்று அலைக்கும் காலையும் வாய்விட்டு
அம்மா என்னுங் குழவி போல
இன்னா செயினும் இனிதுதலை யளிப்பினும்
நின் வரைப்பினன் இத்தொண்டன்
தன் உறு விழுமங் கலைஞரும் உளரே.

- ஞானசேகர்

Wednesday, July 03, 2013

சோழப் பரம்பரையில் ஒரு MLA

எங்கும் இல்லை
என் மூதாதையின் பெயர்
நீ எழுதிய வரலாறு.
- கவிஞர் மகுடேசுவரன் ('மண்ணே மலர்ந்து மணக்கிறது' நூலிலிருந்து)


ஆண்ட பெருமை மீட்கக்
கூடும் பரம்பரைகளின்
வாசல்களுக்கு வெளியே
இராமனுக்காக ஆண்ட
சோடிப் பாதுகைகளின்
பரம்பரைப் பாதுகைகள்.

‍- ஞானசேகர்