புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Saturday, February 20, 2016

666

அவையில்
அம்மணமாக ஓடினான்

அரண்மனை கட்ட
பிறன்மனை இடித்தான்

போட்டிகள் நடத்தி
பரிசுகள் பெற்றான்

தலைநகர் தகிக்க‌
இசையில் சுகித்தான்

கடவுள் ஒருவனே
அவனே தான் என்றான்

வணங்காதோரை
வாணலியில் வாட்டினான்

பிறமதம் மிதித்தழி
சம்மதம் சொன்னான்

இரவுகள் ஒளிர‌
வனங்கள் எரித்தான்

நகரம் கட்டி
நரகம் காட்டினான்

போதாது இக்குற்றச்சாட்டுகள்

உங்கள் ஆட்சியாளர்கள்
செய்யாத ஒன்றை
அவனிடம் காணும்வரை
தயவுசெய்து நீரோவைப் பழிக்காதீர்கள்.

- ஞானசேகர்

Tuesday, January 19, 2016

தொந்தி சரியச் சுமந்து பெற்றவள்


மேற்கே பலரும்
பிணங்கள் பலதும்
சொந்தமாக்கிக் கொண்டதால்
இனிமேல் அழைக்க வேண்டாம்
'மம்மி' என்று!

மேற்கே ஒருத்தரும்
கிழக்கே ஒருத்தரும்
சொந்தமாக்கிக் கொண்டதால்
இனிமேல் அழைக்க வேண்டாம்
'மாதா' என்று!

வடக்கே ஒருத்தரும்
விலங்குகள் பலரும்
சொந்தமாக்கிக் கொண்டதால்
இனிமேல் அழைக்க வேண்டாம்
'அம்மா' என்று!

வடக்கே ஒருத்தரும்
சாமிகள் சிலதும்
சொந்தமாக்கிக் கொண்டதால்
இனிமேல் அழைக்க வேண்டாம்
'அன்னை' என்று!

நான்கு திசைகளிலும்
நாய்பாடு படுவதால்
இனிமேல் அழைக்க வேண்டாம்
'தாய்' என்று!

மொழி சொல்லித் தந்தவளை
முகம் பார்த்து அழைக்க
மொழி சொல்லும் வார்த்தைகள்
முகம் சுழிக்க வைப்பதால்
மீண்டும் வாய்க்குமா
கருவறை பாஷைகள்?

- ஞானசேகர்

Tuesday, October 13, 2015

முன்னின்ற மெய்திரிதல்

ளகரம் னகரமாகும்
னகரம் ளகரமாகும்

மாயமில்லை மந்திரமில்லை
நன்னூல்விதிப் புணர்ச்சி இல்லை

ஆதாரம் வேண்டுவோர்
ஆதார் அட்டை பாருங்கள்!


Friday, May 15, 2015

விரைவுச் விரிவுச் செய்திகள்

மோடி என்றால்
2014 தேர்தலில்
நரேந்திர மோடி
2009 தேர்தலில்
லலித் மோடி.

நாயுடு என்றால்
மத்திய அரசில்
வெங்கையா நாயுடு.
மாநில அரசில்
சந்திரபாபு நாயுடு.

சவான் என்றால்
மும்பை தாக்குதலுக்குப் பின்
அசோக் சவான்
ஆதர்ஷ் ஊழலுக்குப் பின்
பிருதிவிராஜ் சவான்.

ரெட்டி என்றால்
பணவீக்கத்தில்
ஒய்.வி.ரெட்டி
பணப்பெருக்கத்தில்
ஒய்.எஸ்.ஆர். ஜெகன் மோகன் ரெட்டி.

காந்தி என்றால்
பிரிட்டிஷ் இந்தியாவில்
ஒரேயொரு மகாத்மா
சுதந்திர இந்தியாவில்
பலர் பலர்.

தெண்டுல்கர் என்றால்
விஜய் தெண்டுல்கர் உட்பட‌
இனி எவருமில்லை என்பதுதான்
நமக்கென விரிக்கப்படும் செய்திகள்.

- ஞானசேகர்

Saturday, March 14, 2015

படித்து வாங்காத‌ பட்டம்

நாங்கள்
படித்து எரித்துக் கொள்கிறோம்

நீங்கள்
பிடித்து பொறித்துக் கொள்கிறீர்கள்

சாலைகளின்
தெருக்களின்
பாலங்களின்
பெயர்களில்.

- ஞானசேகர்

Wednesday, March 04, 2015

எதிர்க்கட்சிகள்

ஊரை இர‌ண்டாக்கி
இர‌ண்டாய்க் கிடக்கின்றன‌
தண்டவாளங்கள்.

- ஞானசேகர்

Tuesday, March 03, 2015

ஆளுங்கட்சி

எலக்ச்ச‌ன் நம்பி
எலக்கிப் போட்டோம்.

எலக்ட்ரிக் நம்பி
எல போட முடியல.

- ஞானசேகர்

Monday, March 02, 2015

மஜக பிளஸ் பாஜக‌ மைனஸ் ஜகா

தனித்து நின்றால்
ஒரு பொருளையும்
கூட்டணி சேர்ந்தால்
வேறொரு பொருளையும்
வழங்கி வருதலால்
இலக்கணத்தில்
பொதுமொழியன்ன‌
நம்தேசக் கட்சிகள்.

- ஞானசேகர்

Sunday, March 01, 2015

போக்குவரத்து நெரிசல்

வழிவிடு முருகன் திருக்கோவில்.

- ஞானசேகர்

Saturday, November 22, 2014

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்

அன்று:
-----------
மடைத் தலையில் 
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் 
வாடி இருக்குமாம் கொக்கு

நேற்று முன்னாள்:
------------------------------
மடைத் தலையில் 
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் 
வாடி இருக்குமாம் கொக்கு

நேற்று:
------------
மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் 
வாடி இருக்குமாம் கொக்கு

இன்று:
-----------
மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் 
வாடி இருக்குமாம் கொக்கு

நாளை:
------------
மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் 
வாடி இருக்குமாம் கொக்கு

நாளை மறுநாள்:
---------------------------
மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் 
வாடி இருக்குமாம் கொக்கு

- ஞானசேகர்