போரடித்த பொழுதொன்றில்
நாடு வல்லரசாக
கனவொன்று கண்டான்
போர்கள்
வல்லரசுகள் செய்WARகள்
என பேஸ்புக்கில் கண்டான்
போர்கள்
யுத்தங்கள்
ஜனாதிபதி கைப்பொத்தான்கள்
என ஃபார்WARடுகள் பார்த்தான்
போராடி BARராடி
விழுந்தெழுந்து முட்டிவெட்டி கிழித்தொட்டி
கனவை நனவாக்கினான்
அப்துல் கலாம் சிகையை
முடியில்லாத தலைவனின்
உச்சியில் பொருத்தி
ஊரெல்லாம் ஒட்டினான்
'திரையுலகின் நிரந்தர ஜனாதிபதியே!'
– ஞானசேகர்
Tuesday, July 23, 2024
சமரன் 4.0
Wednesday, March 20, 2024
Saturday, September 30, 2023
கூட்டறிவு
அலைபேசிகளில் குனிந்த தலைகள்
நிமிர்ந்து நிற்கிறது
பொத்தான் அழுத்தப்படாத மின்தூக்கி.
- ஞானசேகர்
Saturday, September 16, 2023
Monday, May 08, 2023
அகம் புறம்
கருவறைக்குள் விடாமல்
முன்னிரவில் முறைத்துக் கொண்டு முதுகு காட்டியவளை
வாசலில் நிறுத்திவிட்டு
கருவறை போய் வேண்டி வருவேன்
அவளுக்குள் சிந்தாமல்
முடிச்சிட்டு வைத்த ஆணுறையுடன்.
- ஞானசேகர்
Thursday, January 05, 2023
பல்
கனவுகளின் கதைகளில்
மொத்தமே திரைக்கதைகள் ஆறுதான்
துரத்தப்படுவது
பறப்பது
கீழே விழுவது
உடுத்தியவர்கள் நடுவில் நிர்வாணமாக நிற்பது
தேர்வுகளில் திணறுவது
பல் விழுவது
மற்றவை பலமுறை கண்டிருப்பினும் தோழர்காள்
பல் மட்டும் விழுந்ததேயில்லை கனவுகளில் தோழிகாள்
பொதுவெளி கடற்கரைகளில் விரட்டப்பட்டு
தனியார் நட்சத்திர விடுதிகளில் காசுகட்டி
போதை வாகனமோட்டிகளுக்குத் தப்பி
நீங்கள் வீடுதிரும்பிய புத்தாண்டிரவில்
கனவொன்று கண்டேன்
தமிழ் முதல்தாள் தேர்வு
ஒரிசாவில் தேர்வு மையம்
கேள்விகளெல்லாம் இந்தியில்
திணறுகிறேன்
ஆடைகளை வெட்டி சோதித்து வெளியேற்றுகிறார்கள்
ஆஸ்கார் நாயகிகள் அலங்காரத்துடன்
மழைநீர் வடிகால் பள்ளங்களைப்
பொறுமையாகக் கடக்கும் என்னை
வாகனத்தின் மேலிருந்து
பத்தாவதாகக் குறிபார்க்கிறது ஒரு துப்பாக்கி
கூட்டத்தோடே ஓடுகிறேன்
துரத்துகிறார்கள்
சென்னைக்கு விடுமுறை தந்த புயலொன்று
வழக்கம்போல் திசைமாறி
ஏனோ என்னை மட்டும் தாக்கித் தூக்குகிறது
பறக்கிறேன்
சொந்தமாக விமானமில்லாத எந்நாட்டில்
சொந்தமாக விமானமுள்ள யாரோ
புயலின் கண்ணில் ஏதோ செய்ய
அதை நான் கண்டுவிட
விரட்டுகிறார்கள் ஆகாயத்தில்
கீழே விழுகிறேன்
கரையைக் கடந்து விழுகிறேன்
மாமல்லபுரத்தில் அல்ல
ஒரு மூடப்பட்ட கழிவறையில்
கதவை உடைத்து நுழைகிறார்கள்
நேர்த்தி உடையுடன் சுற்றி நிருபர்கள்
முன்னால் முன்னாள் நடிகையொருத்தி
முன் பொத்தான் திறந்தபடி
நான் மட்டும் நிர்வாணமாக
நெருங்குகிறாள் என் முகம் நோக்கி
நீட்டுகிறாள் மைக்கை என்னிடம்
'சொல்லுங்க!
உரக்க இந்த உலகத்துக்கு!
கனவில் கூட வீழாத
பற்கள் உங்களுடையதென்று!
அதற்குக் காரணம்
இந்த பேஸ்ட்டுதான் என்று!
ஈ ஈ ஈ ஈ ஈ......'
– ஞானசேகர்
Wednesday, November 30, 2022
போர்நிறுத்தம்
முன்னோடிய நாயும்
பின்னோடிய புலியும்
தின்னாமலும்
தின்னப்படாமலும்
மூடிய கழிவறை மூலைகளில்.
– ஞானசேகர்
Saturday, October 01, 2022
Man disposes, God proposes
நகராது
ஓடாது
செல்லவே செல்லாதென
அடியேன் உண்டியலிட்ட
பத்து ரூபாய்
ஒற்றை நாணயத்தையும்
சேர்த்தா சாமீ
உனது வசூல் ரெண்டு கோடி?
- ஞானசேகர்
Wednesday, August 31, 2022
கிரகம்
கிழமைகளில்
ஐந்து கோள்கள் காணலாம்
வெறும் கண்களில்
ஆறு கோள்கள் காணலாம்
நல்ல தொலைநோக்கியில் இன்னும்
மூன்று கோள்கள் காணலாம்
அதிலொன்று
கோளே இல்லை என்றும் காணலாம்
ஆனால்
ஒன்பது கோளும் ஒன்றாய்க் காண
பிள்ளையார்ப்பட்டி வர வேண்டும்.
- ஞானசேகர்
Thursday, April 07, 2022
பொருநர் சீர்
அரசு வேலை கிடைத்தால்
உயிரே காணிக்கை என
வேண்டிக் கொண்ட ஒருவன்
மன்னார்குடி பேஸன்சரில் பாய்ந்து
நேர்த்திக் கடன் முடித்ததைச்
சிரசற்று கரும்புகைசூடி
சாபவிமோசனம் பெற்ற
கிங்கணனொருவன்
வேலைக்குத் திரும்பியதாகக்
கொண்டாடினார்கள்.
- ஞானசேகர்
Wednesday, November 24, 2021
Thursday, February 25, 2021
Monday, February 01, 2021
Thursday, January 28, 2021
மண்டி
காத்மண்டு நிறுவன பொருட்கள்
நியூசிலாந்தில் திட்டமிடப்பட்டு
வியட்நாமில் வடிவமைக்கப்பட்டு
ஆஸ்திரேலியாவில் அமோகமாக விற்பனையாவது
பல நேபாளிகளுக்குத் தெரியாது.
- ஞானசேகர்
Saturday, May 30, 2020
மலர்ந்தே தீரும்
லிப்யதே ந ஸ பாபேந பத்மபத்ரமிவாம்பஸா
- பகவத் கீதை 5:10
தாங்கும் திரள்களில்
தப்பி மேலேறும்
அசட்டுத் துளிகளை
உச்சியில் நிறுத்தி
எல்லையெல்லாம் உருட்டித் தாலாட்டி
நாடி நரம்பெல்லாம் தழுவி முறுக்கி
மின்னும் பல நிறங்களாய் ஒளியூட்டி
பரிசுத்த வடிவமாய்க் காட்டி பரப்பி
கசடெல்லாம் அவற்றோடு ஒட்டி ஒட்டி
காற்றலை மோதிச்
சாயும் சமயத்தில்
கோளவுரு கசட்டுத் துளிகளை
அலங்கோலமாய் மீண்டும்
திரளுக்குள் தள்ளுமாம் தாமரை!
- ஞானசேகர்
Thursday, May 28, 2020
திரைமறைவுப்பிம்பம்
சில்க் சுமிதா
என ஆரம்பித்தது திரைப்படம்
என முடிந்தது கவிதை!
- ஞானசேகர்
Tuesday, May 26, 2020
ஜான்ஸி ராணியும் ரசியா சுல்தானாவும்
என்ற பெயர்ப்பலகைக்காக
குப்தாவின் செய்தி ஊடகங்களில் வந்தது
& Sons காலத்தில்
பெண்களை மதிக்கும் குப்தாவை
அனேகர் likeகினர்
அனேகர் shareரினர்
அனேகர் commentடினர்
புகழ் பெற்ற குப்தா
வியாபாரம் பெருக்கினார்
Gupta & Daughters செய்திகளில்
குப்தாவின் மகன் பற்றிய
கவலை யாருக்குமில்லை
மகன் இருந்தானா?
இறந்தானா?
மூளைச்சாவடைந்தானா?
திரும்பி வந்தானா?
திருமணம் செய்தானா?
கவுரவமாக வாழ்ந்தானா?
கவுரவக் கொலையானானா?
குறைந்தபட்சம்
குப்தாவின் மறுமணங்களுக்காவது
குப்தாவின் மகன் துண்டுதலாய் இருந்தானா?
ஊடகங்கள் சொல்லவில்லை
உண்மையில்
குப்தாவைக் கொண்டாடும்
நமக்கான செய்திகளில்
குப்தாவின் மகள்கள் பற்றிய
கேள்விகளும் யாருக்கும் இல்லை
எத்தனை மகள்கள் என்பதைவிட
குப்தாவைப் போலவே
குப்தாவின் மகள்களுக்கும் பெயர்களேயில்லை
எனவே
குப்தாவைக் குப்தா
நீக்கும் செய்தி தவிர
குப்தாவைப் பற்றி
வேறொன்றும் என்னை வசீகரிப்பதில்லை
குப்தாவைக் குப்தா
நீக்கும் நாளில்
குப்தாவைப் போலவே
குப்தாவின் மகள்களுக்கும்
பெயர்கள் கிடைக்கும் என்பதால்
ஒரு மகனுக்காக அவர் காத்திருக்கத்
தேவையில்லை என்பதால்
குப்தாவைக் குப்தா
நீக்கும் செய்திக்காக
நாமும் காத்திருப்போம்
குப்தாவின் மகள்களைப் போலவே!
- ஞானசேகர்
Sunday, May 24, 2020
அந்த இடத்தில்
ஒரு தகப்பன்
தாவணி மகளைத்
தொட மாட்டான்
தகப்பனான கதாநாயகன் சினமாக
கருத்து சொன்ன
உதவி இயக்குனன் வேலையிழந்தான்
அந்த இடத்தில்
தொட்ட திரைப்படம்
பெரும் வெற்றி பெற்றது
உதவி இயக்குனன்
இயக்குனன் ஆனான்
கதாநாயகன் ஆனான்
அந்த இடத்தில்
கதாநாயகியைத் தானே தொடும்
காட்சியும் வைத்து
பெரும் வெற்றி பெற்றான்
அந்த இடத்தில்
வெற்றி தொடும் கதாநாயகர்கள்
காலங்காலமாக வந்து கொண்டிருக்கிறார்கள்
அந்த இடத்தில்
இருந்த கதாநாயகிகள்
காலங்காலமாக தொலைந்து போகிறார்கள்
- ஞானசேகர்
Friday, May 22, 2020
குந்தியிருந்த இடம்
இதயத்தை ஒத்திருந்தது
அமர்ந்தெழுந்த இடத்தில்
கடற்கரையில் பதிந்த தடம்.
- ஞானசேகர்
Sunday, April 19, 2020
வீடு வாடகைக்கு: Strictly vegetarian only
- விவிலியம் (யாத்திராகமம் 11:6,7)
புறவினத்தாரின் வீடுகளும்
நம்மைப் போலவே இருப்பதால்
அடையாளம் தெரியவில்லை என்றார்கள்
கொள்ளை நோயின் தூதர்கள்.
'இது என் கட்டளை
இதுவே அடையாளம்
நம் இனத்தார் வீடுகளில்
வரும் ஞாயிற்றுக் கிழமை கரவொலி'
வாழ்த்துச் சொல்லி அனுப்பினார்
கொள்ளை நோயின் கடவுள்.
எதிரொலி குழப்பிவிட்டதாக
முறையிட்டார்கள்
கொள்ளை நோயின் தூதர்கள்.
'இது என் கட்டளை
இதுவே அடையாளம்
நம் இனத்தார் வீடுகளில்
வரும் ஞாயிற்றுக் கிழமை தீபவொளி'
வாழ்த்துச் சொல்லி அனுப்பினார்
கொள்ளை நோயின் கடவுள்.
புறவினத்தார் சிலரும் ஏற்றிவிட்டதாக
முறையிட்டார்கள்
கொள்ளை நோயின் தூதர்கள்.
'இனி கட்டளையும் இல்லை
இதுவரையானது அடையாளமும் இல்லை.
செய்யச் சொல்வதைச் செய்யாததும்
செய்யச் சொல்லாததைச் செய்வதும்
புறவினத்தார் புத்தி.
வரும் ஞாயிற்றுக் கிழமை
தீபவொளியோ கரவொலியோ இருக்கும் வீடுகள்
புறவினத்தார் வீடுகள்
இதுவே அடையாளம்'
வாழ்த்துச் சொல்லி அனுப்பினார்
கொள்ளை நோயின் கடவுள்.
துல்லியமான பட்டியலுடன் திரும்பினார்கள்
கொள்ளை நோயின் தூதர்கள்.
– ஞானசேகர்