புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Sunday, April 17, 2016

பாலித்தீவு - இந்தோனேசியா

இத்தனை நாட்களுக்குள் இத்தனை சின்ன கண்டுபிடிப்புகள், இத்தனை பெரிய கண்டுபிடிப்புகள் என இலக்கு வைத்து தாமஸ் ஆல்வா எடிசனின் சோதனைக் கூடத்தில் வேலை செய்வார்களாம். அதனால் தான் இன்றும் அவர் பெயரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காப்புரிமைகள் இருக்கின்றன. ஏறக்குறைய‌ அதுபோல இலக்குகள் வைத்து பயணிப்பவன் நான். குறிப்பாக முந்தையதை விட ஏதாவது வித்தியாசமாக அடுத்தடுத்த பெரிய பயணங்களை அமைக்கும் பழக்கம் எனக்குண்டு. தென் தமிழ்நாடு, கொங்கன் இரயில்பாதை, ஹம்பி, ஒடிஷா என்று எனது அடுத்தடுத்த பயணங்களில் மொழி உணவு பயண‌நேரம் போன்ற விடயங்களைக் கடினமாக்கிப் பார்த்ததுண்டு. எங்கும் தங்காமல், இரயில்களிலேயே எல்லாம் செய்து, 2014 ஆகஸ்டில் ஒருவாரம் தனியாக இந்தியாவைச் சுற்றி வந்ததுதான் எனது முந்தைய பெரும் பயணம். மொத்தமாக ஏறக்குறைய‌ 6000 ரூபாய் செலவு; அதில் ஏறக்குறைய‌ 3500 ரூபாய் இரயில் கட்டணம். அச்சாதனையை முறியடிக்கும் இன்னொரு பயணத்திட்டம் இந்தியாவிற்குள் வைத்திருக்கிறேன். அதற்குள் ஒரு வெளிநாட்டுப் பயணம் போய் வந்துவிடலாம் என்று பிரதமர் போல் ஆசை வர, நான் தேர்ந்தெடுத்த நாடுகள் எல்லாம், தூரம் பூகம்பம் தீவிரவாதம் உள்நாட்டுக்கலவரம் என ஏதேதோ காரணங்களால் தள்ளிப் போயின. இந்த டிசம்பரில் தான் பாலி போய் வந்த கதையை என் நண்பன் ஒருவன் சொன்னான். பூகம்பம் தீவிரவாதம் தவிர எரிமலை மிரட்டலும் கொண்ட பாலிக்கு இந்த மார்ச்சில் போய் வந்துவிட்டேன்!

பாலி என்றால் இரண்டு விடயங்கள் என் பொது அறிவில் உண்டு. புத்தரின் போதனை மொழி பாலி (Pali). இந்தோனேசியாவில் உள்ள ஒரு தீவு பாலி (Bali). இப்பாலித்தீவு சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம் என்பதே எனக்கு சமீபத்தில் தான் தெரியும். முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு இந்தோனேசியா. பாலியில் பெரும்பாலும் இந்துக்கள். அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலும் ஆஸ்திரேலியர்கள். தமிழ்நாட்டிற்குப் பாண்டிச்சேரி போல், இந்தியாவிற்குக் கோவா போல், ஆஸ்திரேலியர்களுக்குப் பாலி. முஸ்லீம் பெரும்பான்மை நாட்டில் கிறித்தவ பெரும்பான்மை சுற்றுலாப் பயணிகள் வரும் இந்துப் பெரும்பான்மை தீவு! இந்தோனேசியாவின் ருபையா பணமதிப்பு மிகவும் குறைவு. நமது 1 ரூபாய் என்பது  ஏறக்குறைய‌ 200 ருபையா. நம்மூர் 5000 ரூபாய் என்பது 10 இலட்சம் ருபையா.

நிலநடுக்கோட்டிற்கு மிக அருகில் இருப்பதால் எப்போதும் வெயில். பாலியின் தலைநகர் டென்பசார் (Denpasar). எப்போதாவது சீறும் இரண்டு எரிமலைகள். தீவைச் சூழ்ந்திருக்கும் மாசுபடாத கடல். தீவிற்குள் பசுமையாக இருக்கும் இயற்கை. நம்மூரில் எங்கு திரும்பினாலும் டீக்கடைகள் போல், பாலி முழுவதும் கோவில்கள் மற்றும் காட்சியகங்கள். பாலியின் இந்துக் கோவில்கள் பற்றி ஒரு தனிக் கட்டுரையே எழுதலாம். பெரும்பாலும் அக்கோவில்களைக் காணப்போகும் பயணிகள் ஒருவகை; அவர்கள் பெரும்பாலும் பிராமணர்கள். தேனிலவு பயணம் போகும் தம்பதிகள் இன்னொரு வகை. கடல்நீர் சாகச விளையாட்டுகள் செய்யப் போகும் பயணிகள் ஒருவகை. மலையேற்றம் போகும் பயணிகள் இன்னொரு வகை. இவை எதிலும் சேராத வகை எனது பயணம்.

ஈஸ்டர் விடுமுறையைத் தேர்ந்தெடுத்து மார்ச் 25 முதல் 31 வரை பாலி பயணத்திற்கு ஒதுக்கினேன். மார்ச் 25 முன்னிரவில் திருச்சியில் விமானம் ஏறி சிங்கப்பூர் வழியே அன்று மாலை பாலி அடைவது. மார்ச் 26 27 28 29 30 என ஐந்து பகல் இரவுகள் சுற்ற வேண்டியது. மார்ச் 31 காலையில் பாலியில் விமானம் ஏறி சிங்கப்பூர் வழியே அன்று இரவு திருச்சி அடைவது. மார்ச் 31 காலை உணவு இந்தோனேசியாவில், மதிய உணவு சிங்கப்பூரில், இராவுணவு இந்தியாவில். இதுதான் திட்டம். விமான பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்வதற்குச் சில மாதங்களுக்கு முன், பாலிக்கு அருகில் இருக்கும் ஜாவா தீவில் ஓர் எரிமலை சீறி, விமானப் போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்பட்ட செய்தி படித்தேன். பயணச்சீட்டுகள் எடுத்தபின், நான் புறப்படப் போகும் சில நாட்களுக்கு முன் இந்தியப் பெருங்கடலில் இந்தோனேசியாவிற்கு அருகில் பூகம்பம் ஏற்பட்டு சுனாமி எச்சரிக்கை தரப்பட்டது. நான் புறப்பட்ட வாரத்தில், பெல்ஜியத்தில் புருஸ்ஸெல்ஸ் நகரில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட இடங்களில் பாலியும் ஒன்று. நான் அதற்கு முன் சிங்கப்பூரும் போனதில்லை; நிலநடுக்கோட்டைத் தாண்டியதும் இல்லை.

இராமாயண மகாபாரதக் கதைகளை அரங்கேற்றும் பல நடனங்கள் பாலியில் பிரபலம். தினமும் ஒரு நடனம் காணத் திட்டம் வைத்திருந்தேன். 9 திசைக் கோவில்களால் பாலி பாதுகாக்கப் படுவதாக அம்மக்கள் நம்புகிறார்கள். அவைகளை என் பட்டியலில் சேர்த்தேன். இறந்தவர்களின் உடலை அப்படியே ஒரு புனித மரத்தடியில் விட்டு விட்டுச் செல்லும் ஒரு டெர்ர்ர்ரர் கிராமம் உட்பட சில கிராமங்களும் என் பட்டியலில் உண்டு. மற்றும் சில கடற்கரைகளையும் சேர்த்துக் கொண்டேன். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று இப்படி 93 விடயங்கள் 5 நாட்களில் பார்க்க வேண்டுமென‌ தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன். அதில் சில விடயங்கள் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் மட்டும் தான் பார்க்க முடியும். ஒரு திரைப்படம் பார்க்கக் கூட திட்டம் வைத்திருந்தேன். எதிர்பாராத விதமாக என்றாவது எங்காவது திட்டம் செயல்படுத்த முடியவில்லை என்றால், எப்படி மாற்றி அமைப்பது என்ற திட்டமும் என் சமயோசிதப் புத்திக்குள் இருந்தது.

சாலையில் ஆங்காங்கே Sekar என்ற வார்த்தை அடிக்கடி தென்பட்டது. Sekar என்றால் அவர்கள் மொழியில் 'மலர்' என்று கார் ஓட்டுனர் சொன்னார். ஒரு பெண்ணை எதிர்பார்த்து எனக்காகக் காத்திருந்ததாகவும் சிரித்தார்; சிரித்தோம். Shekhar என்று உச்சரிக்கும் என் தேசத்தவர்களையே கண்டு கடுப்பான எனக்கு, அயல் நாட்டவர் என் பெயரைச் சரியாக உச்சரிப்பதில் மகிழ்ச்சி. பாலி போய் இறங்கியவுடன், முதல் வேலையாக மறுநாள் திட்டத்தைக் கார் ஓட்டுனரிடம் சொன்னேன். 93ம் வாய்ப்பில்லை என்று அவரிடம் பேசியதில் இருந்தே தெரிந்துவிட்டது. பாலியின் இயற்கை மற்றும் சாலை அமைப்புகள் அப்படி. 9 திசைக் கோவில்கள் அம்மக்களில் பலருக்குத் தெரியவில்லை என்பதே எனக்குத் தாமதமாகத் தெரிந்தது. வாய் பேச முடியாதவர்கள் அதிகம் பிறப்பதால், தனக்கென ஒரு சைகை மொழியைக் கொண்டிருக்கும் ஒரு விநோதக் கிராமமும் பாலியில் உண்டு. அதுவும் நிறைய பேருக்குத் தெரியாததால் என் பட்டியலில் இருந்து வேண்டா மனதுடன் நீக்க வேண்டியதாயிற்று. டெர்ர்ர்ரர் கிராமத்திற்கு ஓட்டுனரே வர விரும்பாததால், அதையும் நீக்கியாயிற்று. பல கோவில்களையும், சில கிராமங்களையும், சில கடற்கரைகளையும் நீக்கி உடனே ஒரு திட்டம் செய்து, அடுத்த மூன்று நாட்களுக்கான‌ திட்டத்தைச் சொன்னேன். கார் ஓட்டுனர் ஏற்றுக் கொண்டார்.

கோவில்களில் உள்ள கட்டிட அமைப்புகள் எல்லாம் சீனவகை. கோவிலுக்குள் தெய்வச் சிலைகள் இல்லாமல், கோவிலுக்கு வெளியே சிலைகள் வைத்திருக்கிறார்கள். கோவில் வாசலில் கோபுரம் போல் ஓர் அமைப்பு. கங்கை நீர் புனிதத்திற்கு எல்லாம் புனிதம் என நம்புகிறார்கள். கங்கை நீரை இந்தியாவில் இருந்து கொணர்ந்துதான் இன்றும் சில பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள். இந்தியாவில் இருந்து வருபவர்கள் எல்லாம் இந்துக்கள் என நம்புகிறார்கள். பிரம்மா விஷ்ணு சிவன் என்ற மூன்று முக்கிய தெய்வங்கள் இருந்தாலும், கிறித்தவ மதம் போல் மூவொருதேவன் கொள்கை (trinity). அதாவது பாலியில் ஏறக்குறைய‌ உருவ வழிபாடு அற்ற ஒரேகடவுள் கொள்கை கொண்ட இந்துமதம்! மாதவிலக்கான பெண்களுக்குக் கோவிலுக்குள் அனுமதியில்லை. பசு புனிதம். முக்கிய விழாக்களில் பன்றியைப் பலியிட்டு, முழுதாக வேகவைத்து (Babi Guling), பகிர்ந்து உண்கிறார்கள். இராமாயணம் மகாபாரதம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். புத்தமதம் சீனாவில் இருந்து வந்திருக்கிறது. நான்கு சாதிகள் உண்டு. தீண்டாமை இருப்பது போல் தெரிகிறது. சுத்தசைவம் இல்லை என நினைக்கிறேன். இறந்தவர்களை எரிக்கிறார்கள். இத்தகவல்களை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால், கிமு முதலாம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்த இந்துமதம் பாலியில் இருக்கிறது.

9 திசைக் கோவில்களில் மையக் கோவிலுக்குச் சுற்றுலாப் பயணிகள் யாருமே வருவதில்லை என்பதே அங்கு போய்தான் எனக்குத் தெரிந்தது. என் திட்டத்தில் இல்லாத ஒன்றையும் காணும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. பாலியில் மரண இறுதி ஊர்வலங்கள் மிக விமரிசையாகச் செய்யப்படுவதால், மிகப் பிரபலம் என இணையத்தில் படித்திருந்தேன். ஓர் அரசக் குடும்பத்து ஊர்வலத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. Nyepi day என்றழைக்கப்படும் முழு அமைதி நாள், பாலிக்கே உரித்தான கலாச்சாரம். அந்நாள் முழுவதும் யாரும் யாருடனும் பேசுவதில்லை. மொத்தத் தீவும் வேலை செய்வதில்லை. விமான நிலையம் கூட மூடப்படும். மேலும் தகவல்களை இணையத்தில் படித்துப் பாருங்கள். சமீபத்தில் முடிந்து போயிருந்த அந்நாளுக்கான போஸ்டர்களைச் சாலைகளில் என்னால் காண முடிந்தது.

93 திட்டம் போட்டு 48 விடயங்கள் செய்து முடித்தேன். இணையத்தில் ஒரு நடனத்திற்கான முகவரி தவறாக இருந்ததால் ஏற்பட்ட குழப்பம் மட்டும் இருந்திருக்காவிடில், 50 விடயங்கள் செய்திருப்பேன். இணையத்தில் படித்தவரை இதுதான் அதிகபட்சம்! எனது மற்ற பயணங்களைப் போல பாலியில் ஒருநாள் தவிர மற்ற எல்லா நாட்களிலும் மதிய உணவு கிடையாது. கார் ஓட்டுனரே எனது திட்டத்தைப் பாராட்டினார் என்றால் பாருங்கள்! பல்லாண்டுகள் கார் ஓட்டும் அவருக்கே, சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லாத‌ இரண்டு இடங்களை அறிமுகப்படுத்தி வைத்தேன். மலையேற்றம், சாகச விளையாட்டுகள் எனது திட்டத்தில் இல்லாததால் 5 நாட்கள் போதும். அவையும் வேண்டும் என்றால் கண்டிப்பாக ஒரு வாரம் வேண்டும். மேற்கு வடமேற்கு வடக்கு வடகிழக்கு கிழக்குப் பகுதிகளுக்கு அதிகமாகச் சுற்றுலாப் பயணிகள் செல்வதில்லை. அங்கும் இயற்கை கன்னி கழியாத சில நல்ல இடங்கள் உள. மக்களும் நன்கு உதவுகிறார்கள்.

ஆல்பங்களை ஒரே இடத்தில் பார்க்கும் வசதி கூகுளில் இப்போது இல்லை என நினைக்கிறேன். எனது பாலி ஆல்பங்களை இச்சுட்டியில் நீங்கள் காணலாம். மொத்தம் 41 ஆல்பங்கள். (Ctrl+F) Bali என்ற வார்த்தையைத் தேடுங்கள். ஆல்பங்களின் பெயர்களிலேயே தேதியும் இருப்பதால், கிட்டத்தட்ட எனது பயண பாதையை இந்த ஆல்பங்கள் சொல்லும். பின்னாளில் செல்ல விரும்புபவர்களுக்கு அவை உதவும் என நம்புகிறேன்.

https://plus.google.com/103740705199337696353

- ஞானசேகர்