புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Monday, May 20, 2013

அரசு + மது = உம்மைத்தொகை

பாதயாத்திரைப் பக்தர்களுடன்
பகவான் தானும் நடப்பதாக‌
தண்ணீர்ப் பந்தல் வைக்கிறார்கள்
பாதையோரப் பக்தர்கள்.

பாதையோரப் பக்தனாக‌
பகவான் தாகம் தீர்ப்பதாக‌
தண்ணீர்ப் பந்தல் நுழைகிறார்கள்
பாதயாத்திரைப் பக்தர்கள்.

- ஞான‌சேகர்

Friday, May 17, 2013

ஜென்மப்பாவம்

தலைமுறைகளாய்த்
தொடரும் பாவங்களைக்
கழுவி சுத்தமாக்குகிறது
ஞானஸ்நானம்

மதத்தைத் தவிர.

- ஞானசேகர்

Friday, May 10, 2013

மாகதர் போகதர்


குழலினிது யாழினிது என்பர் மானாட
மயிலாட‌ பாரா தவர்.

- ஞானசேகர்

Thursday, May 09, 2013

எல்லாம் நிறைவேறியதும்

எல்லாம் நிறைவேறியதும்

ஒருநாள் ஓய்வெடுக்கிறார்
கடவுள்
 
சிலுவையில் உயிர்விடுகிறார்
இயேசு
 
ஏவாளைவிட்டு விலகிப் படுக்கிறார்
ஆதாம்.

- ஞானசேகர்

Sunday, May 05, 2013

புணர்ச்சி


படைத்தல்
காத்தல்
அழித்தல்
மறைத்தல்
அருள்தல்
ஐந்தொழில் செய்வதால்
ஆகுமாம் இறைவன்.

- ஞானசேகர்

Saturday, May 04, 2013

சித்தார்த்தன் பார்க்காத ஐந்தாவது காட்சி


அழகு யுவதிகளின்
ஆபரணங்கள் அகற்றி
ஆடைகள் அவிழ்த்து
அந்தரங்கங்கள் தொட்டு
உடலோடு உரசி
சிகை கோதி
அணைத்து
விளக்கணைத்து
விரசமின்றி விறுவிறுவென‌
நள்ளிரவில் வீடேகிறான்
நகைக்கடை ஊழியன்.

- ஞானசேகர்

Friday, May 03, 2013

பின்ன்ன்ன்ன்னிட்ட்ட்ட்ட்டடா


தனியறை ஒன்றில்
ஒருவன்
ஒருத்தியின்
அந்த இடங்களை
அப்படித் தொட்டால்
நல்ல பயாலஜி.

தொலைக்காட்சி நடனங்களில்
ஒருவன்
ஒருத்தியின்
அந்த இடங்களை
அப்படித் தொட்டால்
நல்ல கெமிஸ்ட்ரி.

- ஞானசேகர்

Wednesday, May 01, 2013

Non-stop கொண்டாட்டம்

'டெல்லி பேருந்தில்
ஒரு பெண்ணை
ஆறு பேர் உந்த‌'
என்றார் கவிஞர்.

பலமாகக் கைத்தட்டியது
கவியரங்கக் கூட்டம்.

ஆதரவு சொல்லுக்காகவா
அல்லது பொருளுக்காகவா
எனது குழப்பத்தினூடே
வந்து விழுந்து கொண்டிருக்கின்றன‌
சொற்களும்
பொருள்களும்
கைத்தட்டல்களும்
குழப்பங்களும்.

- ஞானசேகர்