புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Wednesday, September 25, 2013

காக்கை உகக்கும் பிணம்

அவன் தந்தையும்
இவன் தந்தையும்
யார் ஆகியரோ?
மற்றவன் கோவிலைச்
சேர்ந்தே இடித்தனர்.

அவன் தாயும்
இவன் தாயும்
எம்முறைக் கேளிர்?
மற்றவன் பெண்டிரைச்
சேர்ந்தே வன்புணர்ந்தனர்.

அவனும்
இவனும்
எவ்வழி அறியும்?
மற்றவன் உறுபொருள்
சேர்ந்தே கவர்ந்தனர்.

அவன் சாதியும்
இவன் சாதியும்
தெரிந்த‌பின்
அவன் மலத்தை
இவனைத்
தின்ன வைத்தான்.

- ஞானசேகர்

Tuesday, September 24, 2013

நட்பறிதல்

நமது நட்பும்
உன்னதமாகத் தான் இருந்தது

சாதி பற்றிய‌
உன் வீட்டாரின் விசாரிப்புகளுக்கு
நான் திணறாத வரை.

- ஞானசேகர்