புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Thursday, November 15, 2012

குப்பைக் கோழித் தனிப்போர்

If you talk to God, you are praying; If God talks to you, you have schizophrenia. If the dead talk to you, you are a spiritualist; If you talk to the dead, you are a schizophrenic.
- Thomas Stephen Szasz


மரத்திலே தூங்கையில் வீழ்கின்ற பயம் இன்னும்
பழங்கனவாய் வருகிறது மரபணுவில் பதிவுற்று
- கமல்ஹாசன்


(பெண்ணுக்குப் பெயர் வைக்காத பிடிவாதத்துடன் இன்னுமொரு கதை)

ஓட்டு வாங்கி, ஓட்டு வங்கி, வங்கி ஓட்டை, ஓட்டைப் பிரித்து, ஓட்டை போட்டு, ஓட்டுப் போட்டு எனப் பல பரிமாண‌ங்கள் கொண்ட திருட்டு, எங்கள் ஊரையும் விட்டு வைக்கவில்லை. நகரத்தின் ஒரு மூ ஊ ஊ ஊ லையில் இருக்கும் எங்கள் நகரில் 50+ வீடுகள்; இன்னும் 10 முடியப் போகும் தருவாய்; 5க்கு அடிக்கல் தயார்; இன்றைக்கு இலட்சத்தைப் புதைத்தால் நாளைக்குக் கோடியாய்த் தோண்டலாம் என்ற கனவுகளுடன் எஞ்சிய நிலங்கள். 3 மாதங்களில் 4 வீடுகளில் திருட்டு. அவர்க‌ள் காட்டிய இழப்புக் கணக்கே இரட்டை இலக்க இலட்சங்கள். சட்டசபை ஓட்டுப் போட்டு முடித்த விரலோடு, சாரி, முடித்த கையோடு, சாரி, ஏதோ ஒரு ஓடு, கூடிப் பேசி வயசுப் பையன்களை வைத்து ஒரு குழு உண்டாக்கினார்கள். 8 பேர் அடங்கிய அக்குழுவிற்கு இரவில் எல்லையோரப் பாதுகாப்புப் பணி. எட்டில் நான்தான் நெட்டு குட்டு என்று சட்டு புட்டெனத் தலைவனாக்கி விட்டார்கள்.

இரவு பத்து மணிக்கு மின்சார‌ லைன் மாற்றிய பின் பத்தரை மணி போல் சேது எக்ஸ்ப்ரஸ் கடந்து போகும். அப்போது ட்யூட்டி ஆரம்பிக்க வேண்டும். மயிலாடுதுறை பேஸென்ஜர் அல்லது சூரியன் வந்தவுடன் ட்யூட்டி முடித்துக் கொள்ளலாம். குடுகுடுப்பைக் காரர்களுக்கு அனுமதியில்லை. செல்போன்கள் சத்தம் அனுமதில்லை. பாதுகாப்புப் பணி என்பதற்காக ஏதாவது ஒரு வீட்டிற்குள் நுழைந்து யாரையாவது தரதரவென வெளியே இழுத்து வருவதற்கெல்லாம் அனுமதியில்லை. கூர்க்காவிற்குக் கூட தெரியாமல் கடமையில் கண்ணியமாக இருந்தோம். எல்லோருக்கும் ஒரு டார்ச் லைட்; ஒரு விசில்; தேநீர் தயாரித்துக் கொள்ள தேவையான பொருட்கள். ஒருவன் பார்வை எல்லைக்குள் முன்னே ஒருவனும் பின்னே ஒருவனும் இருக்கும்படி நகர்வலம் வருவோம். ஆரம்ப நாட்களில் எங்களைப் பார்த்து குரைத்த நாய்கள் போகப் போக குரைக்கவுமில்லை கடிக்கவுமில்லை.

சில இரவுகளில் பீர் குடிக்கும் அளவிற்கு இருட்டும் ட்யூட்டியும் பிடித்துப் போய் இருந்தன‌. தூக்கம் வரும்போது திருட்டுக் கதைகள் பகிர்ந்து கொள்வோம். சாமி உண்டியல் திருடி எல்லை தாண்டுவதற்குள் செத்துப் போன கதை. திருடர்களுக்கும் நியாய தர்மங்கள் உண்டென்று, திறந்தே கிடந்தாலும் பீரோவைத் திருப்பி வைத்து உடைத்துத் திருடும் கதை. 'தலீவா, ஒன்னோட வீடுன்னு தெரியாம நொய்ஞ்சிட்டேன் தலீவா' என்று ரஜினிகாந்த் வீட்டில் திருடிய மறுநாள் சரணடைந்த கதை. தாலியைப் பறித்தவனை வீட்டுக்குள் பூட்டிப்போட, அவன் தொட்டில் குழந்தை கழுத்தறுத்த கதை. இது போன்ற சின்னச் சின்ன திருட்டுக் கதைகள் பகிர்ந்து கொள்வோம். சட்டமன்றம் நாடாளுமன்றம் பள்ளி கல்லூரி ஆசிரமம் போன்ற பெரிய பெரிய கதைகள் எல்லாம் பேசுவதில்லை.

திருந்தி விட்டார்களா அல்லது உள்ளாட்சித் தேர்தல்களில் குதிக்கப் போய்விட்டார்களா தெரியவில்லை, நாங்கள் நகர்வலம் வர ஆரம்பித்த நாட்களில் திருடர்கள் யாரும் வரவில்லை. அடிக்கடி இரவில் எழுப்பிவிடும் மின்வெட்டில் மக்கள் விழித்திருந்ததும் திருட்டுக் குறைந்து போனதற்குக் காரணமாக இருக்கலாம். எதுவாக‌ இருந்தாலும் சரி, காகம் அமர‌ பனம்பழம் விழுந்த கதையாய் எங்கள் குழுவிற்கு நற்பெயர் கிடைத்ததில் மகிழ்ச்சி. இதைப் படிக்கும் சிலபேர் இவ்வுவமையில் என்னைக் காகமாய் உருவகித்து கதையின் ஓட்டத்தைக் கெடுப்பது போல், எங்கள் குழுவின் மகிழ்ச்சிக்கும் கெடுதல் வந்தது; வந்தன.

உலகப் புகழ் பெற வேண்டிய எங்கள் குழு ஒரு கிழவியால் முதன்முறை உடைந்தது. அன்னிய சக்திகளின் சதி. அன்னியம் என்றால் இரண்டு மாவட்டங்கள் தூரம். நாமக்கல் மாவட்டத்தில் ஏதோ வயசுப் பெண் ஒருத்தி அம்மை வந்து தாகத்தில் தண்ணீர் கேட்டிருக்கிறாள். அவள் பாட்டி தண்ணீர் கொண்டு வந்து தாகம் தீர்ப்பதற்குள் வயசுப் பெண்ணின் ஆயுசு தீர்ந்து போய்விட்டது. எமன் பட்டியலில் பேத்திக்கு அடுத்து பாட்டி. பாட்டியும் பேத்தியும் ஊரூராகப் போய் இரவில் கண்ணில் படுபவர்களிடம் தண்ணீர் கேட்பார்களாம். பாட்டி மேல் இரக்கப்பட்டோ பேத்தி மேல் கிரக்கப்பட்டோ சொம்பில் தண்ணீர் கொண்டு வந்தால், மறுநாள் காலை சொம்பிலேயே இரத்தம் கறக்கப்பட்டுச் செத்துக் கிடப்பது வழக்கம்.

பல ஊர்களுக்குப் போன இந்நற்செய்தி செய்தித்தாள்களின் இடைய
றாத முயற்சி மூலம் எங்கள் ஊருக்கும் வந்திருந்தது. பல ஊர்களுக்குப் போன பாட்டியும் பேத்தியும் எங்கள் மாவட்டத்திற்குள் நுழைந்ததற்கான அறிகுறிகள் பற்றிய குறுந்தகவல் செய்திகள் கசிந்தவுடன், அஞ்ஞாயிறு இரவு பத்து மணிக்கு மின்சார‌ லைன் மாற்றிய பின் பத்தரை மணி போல் சேது எக்ஸ்ப்ரஸ் கடந்த பிறகும் யாரும் ட்யூட்டிக்கு வரவில்லை. நான் மட்டும் கேள்விக்குறியாய்த் தனியாய் நின்று கொண்டிருந்தேன். மற்ற 7 பேர்களின் வீட்டிற்கே போய் விசாரித்தேன்.
8. 'இஸ்ரோ இன்டர்வியூ இருக்கு. நாளைக்கிக் கெளம்பணும்'
7. 'களவும் கற்று மற'
6. 'விஜய் டீவி நீயா நானா நல்லாப் போய்ட்டு இருக்கு'
5. 'ராத்திரி கண் முழிப்பது ஆந்தையின் தகவமைப்பு'
4. 'மார்கழிப் பனி'
3. 'மத்த எல்லாரும் வந்துட்டாங்களா?'
2. 'திருடனாய்ப் பாத்து திருந்தாம திருட்டு ஒழிஞ்சதா சரித்திரம் இருக்கா?'
1. ?

நான் மட்டும் தான் வேலை இல்லாமல் இருக்கிறேனா? சிங்கப்பூர் விசா வாங்க 25 வயதாகக் காத்திருந்தேன். பின் உலகப் பொருளாதார மந்தநிலை என்ற மாயநிலை மறைய ஒரு வருடம் காத்திருந்தேன். இப்போது விமான டிக்கெட்டிற்காகக் காத்திருக்கும் நேரத்தில் ஊருக்கு நல்லது செய்யலாம் என்று வந்தால், ச்சே. என்னையும் தான் வீட்டில் தடுத்தார்கள். மக்கள் வாய்ப்பு கொடுத்தபின் சபைக்குப் போகாதவன் தலைவனா, என்று வீராப்பாய்ப் பேசிவிட்டு வந்தேன். ஒரு செத்த கிழவிக்குப் பயப்படும் கூட்டத்திற்குத் தலைவனாய் இருப்ப‌தை எண்ணி நொந்து கொண்டேன். திடீரென இரவில் தூங்கச் சொன்னால் எப்படி வரும்? சுடுகாட்டிற்குப் பக்கத்தில் ஆழ்துளை கிணறு போடுபவர்களுடன் பேசிக் கொண்டே அவ்விரவைக் கழித்தேன். தனிமரம் தோப்பில்லை; குழு புதைந்து போனது. குழு புதைந்த மூன்றாம் நாளில் உயிர்த்தும் எழுந்தது. காரணம், இரண்டாம் நாளில் ஒரு திருட்டு. பழையன மறந்து மீண்டும் குழுவின் நற்பெயரை மீட்டெடுத்து கோலோச்சினோம். நூறாண்டு சாதனைகளை ஓராண்டில் செய்யலாம் என்று கணக்குப் போட்டால், ஒரு மாதம் கூட எங்கள் ஆட்சி நிலைக்கவில்லை.

ஸ்காட்லாந்து காவல்துறை அளவிற்கு உலகப் புகழ் பெற வேண்டிய எங்கள் குழு இரண்டாம் முறை உடைந்தது. எல்லா அழிவுகளுக்கும் பாகிஸ்தானைக் காட்டும் இந்தியா போல, அன்னிய சக்தி இம்முறை காரணமல்ல. வளவன் சாரின் மகள். அப்படி இப்படி அங்கொன்றும் இங்கொன்றும் அரசல் புரசலாக காதுவிட்டுக் காது போய்க் கொண்டிருந்த அவ்விசயம், முதலில் எங்கள் குழுவைக் கலைத்துவிட்டு, மாசி அமாவாசை இரவன்று எங்கள் நகர் மக்களில் முக்கிய மனிதர்களை வளவன் சார் வீட்டிற்கு அனுப்பி வைத்தது. நானும் வளவன் சாரும் அப்போது கேரம் போர்டு விளையாடிக் கொண்டு இருந்தோம்.

'சார் மணி 8 ஆச்சு சார். 9 மணி ஆனாலும் செவப்புக் காயினப் போட முடியாதுன்னு நெனக்கிறேன்'
'வெளையாடுடா. கேரம்ல திருடன் போலீஸ் ஆட்டம்னா சும்மாவா?'
கறுப்பு திருடன். வெள்ளை போலீஸ். சிவப்பு கமிஷ்னர். தனியாக‌ போட்ட‌ எந்தக் காயினையும் நடுவில் வைக்க வேண்டும். முதலில் கறுப்புத்தான் போட வேண்டும். அடுத்து வெள்ளை போட்டால் தான் இரண்டையும் எடுத்துக் கொள்ளலாம். சிவப்பு வேண்டும் என்றால், முதலில் கறுப்பு போட்டு அடுத்து வெள்ளை போட்டு கடைசியில் சிவப்பு போட வேண்டும். இந்த அடிப்படை விதிகளிலேயே டப்பா டான்ஸாட வைக்கும் விளையாட்டு இது. இதில் மைனஸ் விழுந்தால் கேட்கவே வேண்டாம்.
'என்ன சார், டார்ச் லைட்டோட யாரோ வர்றாங்க. எங்க அப்பாவும் வர்றாரு சார்'
வந்தவர்கள் விசயத்தை நேரடியாக ஆரம்பிக்காமல், இருட்டில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் விளையாடிக் கொண்டிருப்பதை எல்லாம் விசாரித்தார்கள். மின்வெட்டில் புழுக்கம் தாங்காமல் வந்திருக்கிறார்கள் என நாங்கள் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்தோம்.

'சார் நம்ம ஏரியாவுல பேய் நடமாட்டம் கொஞ்ச நாளாவே இருக்கு'
'காத்துக் கறுப்பா?' என்று கேட்டுக் கொண்டே கறுப்பு போட்டார்.
'ஒரு தடவ இல்ல ரெண்டு தடவ இல்ல, பல தடவ நம்ம ஏரியா மக்களே பாத்து இருக்காங்க'
'வெள்ளடா பாத்துக்க' என்று வெள்ளையும் போட்டு விட்டார்.
'பாத்தவங்க சொல்ற அடையாளத்தப் பாத்தா ஒங்க பொண்ணு மாதிரி தெரியுது சார்'
வளவன் சாருக்குப் பின்னால் இருந்த சிவப்பு, சர்ர்ர்ரென்று முன்னால் வந்து இடப்பக்கக் குழிக்குள் விழப் போவது போல் வே ஏ ஏ ஏ கமாய்ப் போய் தொங்கிக் கொண்டது. இவ்வளவு நேர ஆட்டத்தின் விருவிருப்பான கட்டத்தைக் கண்ட ஆச்சரியம் எதுவும் இல்லாமல் கேரம் போர்டில் இருந்த எங்கள் கவனத்தை விடுவித்துக் கொண்டோம். வந்தவர்கள் மாறி மாறிப் பேசினார்கள்.

சாட்சி 1: தமிழ் டீச்சர் பையன். இரண்டாம் காட்சி படம் பார்த்துவிட்டு திரும்புகையில் இரவு ஒரு மணிபோல் ஒரு பெண் தலைவிரி கோலமாய் நின்றிருக்கிறாள். யாரது யாரது என‌க் கேட்டுக் கொண்டே அவள் பின்னாலேயே போயிருக்கிறான். திடீரென மறைந்து போனாள். அவன் நின்ற இடம் சுடுகாடு. தலைதெறிக்க ஓடி வந்து விட்டான்.

சிவனே என்று சுவருக்குச் சேலை கட்டி வைத்தாலும் அவிழ்த்துப் பார்ப்பவன் இவன். தண்ணீர் மேல் சாராயம் என்று எழுதி வைத்தாலே 7 லிட்டர் குடிப்பான்.

சாட்சி 2: அரசுப் பேருந்து நடத்துனர் மனைவி. வளவன் சார் வீட்டிற்குப் பக்கத்து வீடு. இரண்டு வீட்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் இரவில் ஒருநாள் பிம்பம் நகர்வதைப் பார்த்திருக்கிறாள். சன்னலைத் திறந்து பார்த்தால், பாவம், பாதம் இல்லாமல் ஒரு பெண். யாரென்று விசாரித்ததற்கு, அப்பாவைப் பார்க்க வந்திருப்பதாக சொல்லி, வளவன் சார் வீட்டுச் சன்னலில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாளாம். வேளாங்கண்ணி மாதாவிற்கு மாலை போட்டிருந்ததால் அவளை ஒன்றும் செய்யவில்லையாம். இல்லையென்றால்...

கடவுளர்கள் பால் குடிப்பதற்கும் இரத்தக்கண்ணீர் வடிப்பதற்கும் கனவில் வந்து நோட்டீஸ் அடிப்பதற்கும் விளம்பரம் செய்யும் ஆன்மீக மாடல்கள் இவர்கள். இவள் பேசி முடித்த‌வுடன், தன் கண்ணில் பட்டால் பிடாரிக் கோயிலில் கட்டிப்போட்டு விடுவதாக ஒரு ஆண் மாடல் சேர்ந்து கொண்டார்.

சாட்சி 3: நடு ராத்திரியில் எல்லா நாய்களும் வளவன் சார் வீட்டைப் பார்த்துத்தான் குரைக்கின்றன‌. சிறுநீர் கழிக்க வெளியே வந்தபோது, வளவன் சார் வீட்டு வாசல் வழியாக ஒரு பெண் தலைவிரி கோலமாய் நடந்து போனாள்.

நாய்க் குரைப்பதில் கூட பங்கு கேட்கும் விசித்திர உலகம்!

அடுத்தடுத்த சாட்சிகளுக்கு நான் காது கொடுக்கவில்லை. ஸ்ட்ரைக்கரைத் திருப்பித் திருப்பிப் பார்த்து எந்தக் கறுப்பை அடிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். தென்னங்கீற்றுக்கும் ஆன்டெனா கம்பிக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் எல்லாம் சாட்சி சொன்னார்கள். கூர்க்கா என்றொரு இனமுண்டு தனியே அதற்கொரு குணமுண்டு, என்று தெரியாதவர்கள் எல்லாம் வழி மொழிந்தார்கள். இரவில் இயங்கும் உயிரினங்கள் பற்றி தெரியாதவர்கள் எல்லாம் பகலில் கூட நடமாட ப‌யமாய் இருப்பதாய்ச் சொன்னார்கள். ஏற்கனவே திருடர்கள் நடமாட்டம் உள்ள இப்பகுதியில் இதுபோன்ற சப்பை சாட்சிகளைக் கேட்டு நானும் வளவன் சாரும் சிரித்துக் கொண்டோம்.

எங்கள் நக்கலைப் பார்த்து சினமான புது கவுன்சிலர் பிரம்மாஸ்திரம் எடுத்தார். 'இவ்வளவு ஏன் சார். ஓங்க வீட்டுக்கு நேராப் பின்னால ஒரு வீடு கட்டிக்கிட்டு இருக்காங்களே, அஞ்சாறு மாசமா ஒரு வேலையும் நடக்கல. அந்த வீட்டுல ராத்திரி நேரத்துல ஒரு பொண்ணு தலய விரிச்சுப் போட்டுக்கிட்டு ஒக்காந்து இருக்கிறத வெளியூர் சனங்க கூட நெறைய பேரு பாத்து இருக்காங்க‌. நீங்க வயசுல பெரியவரு. இருந்தாலும் எல்லாரோட ந‌ல்லதுக்காக‌ நான் சொல்லித்தான் ஆகணும். அந்தப் பொண்ணு பிட்டுத் துணி இல்லாம முண்டக் கட்டையா...'.
'யோவ்...' என்று எழுந்த நான், அதுவரை பேசியவ‌ர்களை எல்லாம் வயது வித்தியாசம் பார்க்காமல் திட்டி விரட்டிவிட்டு அமர்ந்தேன்.

நானும் வளவன் சாரும் கேரம் போர்டுடன் பேரமைதி.
'சார் யார் ஆட்டம் சார் இப்போ?'
'ஏன்டா இந்த ஆட்டம் ஆடுனே இப்போ?'
'அப்பறம் என்ன சார், சும்மா கேட்டுக்கிட்டு இருக்கச் சொல்றீங்களா?'
'அவங்க வயசு என்ன? ஒன்னோட வயசு என்ன?'
'அறுவதாம் கல்யாணம் முடிச்ச கெழடு ஒன்னு ஒங்கள கைய நீட்டிப் பேசுது சார். அதவிட ஒங்க வயசு அதிகம். ஒண்டிக்கட்டை கேக்க ஆள் இல்லைன்னு நெனச்சிக்...'
'போர்க் கருவிகளுக்கு நம்ம அரசாங்கம் என்ன பேரு வெக்கிது? ராக்கெட்டு வெற்றிகரமாப் போகணும்னு திருப்பதி ஏழுமலையான் கால்லதான் சயின்டிஸ்ட் எல்லாம் விழுவுறான். இளவரசி டயானா செத்து பல வருசம் கழிச்சு அவளப்பத்தி தப்பா ஒரு பேப்பர்ல எழுதுனான். அந்தம்மாவோட பையன் செத்த ஆத்மாவக் குத்தாதீங்கன்னு கெஞ்சுனான். யாராவது கேட்டானுங்க? நீ நாளக்கிச் சிங்கப்பூர் போனாலும் கவுண்டமணி செந்திலக் கூட்டியாந்து நம்மாளுங்க பேய் ஓட்டிக்கிட்டுத்தான் இருப்பானுங்க‌. இந்த மக்கள்ட்ட போய் பெரியார் சிக்மண்ட் பிராய்டுன்னு பேசின்னா வேலக்கி ஆகுமா?'
ஸ்ட்ரைக்கரையே தேய்த்துக் கொண்டிருந்தேன்.
'சரி ஒன்னோட ஆட்டம் இப்ப. ஆடு' என்று பேச்சை முடித்து வைத்தார்.

வளவன் சாரின் மகள். அந்த அக்காவுடன் 3 வருடங்கள் பழகி இருக்கிறேன். என் கையெழுத்தை அழகாக்கியவள். நான் எட்டாவது படிக்கும்போது அவள் கல்லூரி முதலாண்டு. தீயில் கருகி அலறி ஓடி வந்து என் கண் முன்னால் தான் மண்ணில் விழுந்தாள். வாழை இலையில் சுற்றிக் கொண்டுபோய் ஒரு மாதம் மருத்துவப் பயனில்லாமல் இறந்தும் போனாள். அதிர்ச்சியில் எனக்குக் குளிர்க்காய்ச்சல். மோரில் சுட்ட மிளகாயிட்டுக் குடித்தும் குணமாக‌ ஒருவாரம் ஆனது. நினைவு திரும்பி என்னை விசாரித்த அக்காவை எனக்குக் காட்டாமலேயே எரித்தார்கள். என்னையும் வளவன் சாரையும் இணைத்து வைக்க பெரியாரும் அம்பேத்காரும் காந்தியும் பாரதியும் இன்று இருந்தாலும் எங்கள் நட்பின் ஆரம்பப்புள்ளி அவரின் மகள்தான். சுருதியின் இந்த வருடக் கதையையே மறந்து கொண்டிருக்கும் சமூகத்திற்குச் சரிகா காயத்ரி கோகிலவாணி ஹேமலதா பத்மினி விஜயா ரீட்டாமேரி போன்ற கடந்த வருடங்களின் கதைகள் நினைவிருக்க வாய்ப்பில்லை. 15 வருட‌ங்களுக்கு முந்தைய வளவன் சாரின் மகளின் பெயர் சமூகத்தின் பொதுப்புத்தியில் எந்த மூலை?

அன்றிரவு ஏற்பட்ட கெட்ட அனுபவத்திற்கு ஆறுதலாக, கேரம் போர்டில் எதிராளியை வெல்ல வைக்கவே இருவரும் விளையாடி, ஒரு கட்டத்தில் அது புரிந்து போய், மீண்டும் உண்மையாக விளையாடி இறுதியில் வளவன் சார் வென்றார். மணி ஒன்றை நெருங்கிக் கொண்டு இருந்தது. கேரம் போர்டை எடுத்து வைக்கும் போது, இருவரும் அவளின் ஆளுயரத் தாவணிப் புகைப்படத்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்டோம். நான் அவர் வீட்டில் தூங்கும் போது தரையில்தான் படுத்துக் கொள்வேன். விளக்கணைக்கும் முன், சன்னலை மூடும்போது, பிட்டுத் துணியில்லாமல் என கவுன்சிலர் சொன்ன வீட்டைச் சன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தார்.

'சேகர். இங்க வந்து பாரு'
'அட ஏன் சார், அந்தக் கவுன்சிலர் சொன்னான்னு அந்த வீட்டப் போய் பார்த்துகிட்டு இருக்கீங்க'
'சும்மா வந்து பாரு'
பார்த்தேன். ஒரு பெண் வாசலில் தலைமயிரை விரித்துப் போட்டு அமர்ந்திருந்தாள்!
'அமாவாசை இருட்டு. இல்லன்னா நல்லாத் தெரியும். அந்தப் பொண்ணு பிட்டுத் துணி இல்லாம முண்டக் கட்டையா...'
'சார்... எவனாவது எவளையாவது தள்ளிட்டு வந்திருப்பான் சார்'
'இது ரொம்ப நாளா நடக்குது. பக்கத்து இன்ஜினியரிங் காலேஜ் பசங்கதான்'
'இருங்க போய் வெரட்டிட்டு வர்றேன்'
'வெரட்டி? என்னோட மகள் போனா, இன்னொரு வெரைட்டி பேயக் கண்டிப்பா திரும்பவும் உண்டாக்குவானுங்க. ஆசன வாய் முதல் ஆதீன வாயில் வரை நடக்குற இந்தக் கள்ளத்தனக் காமத்துக்கு இடையில போற பெத்த புள்ளைகளையே கொல்ற காலம் இது. நீ போனா மறுநாள் பேப்பருல மூணாவது பக்கதுல ஒன்னோட படம் வரும்'
'சும்மா கண்டுக்காம இருக்கச் சொல்றீங்களா?'
'சும்மா இருந்தா இவ்வளவு தூரம் கண்டுபுடிச்சேன்? நீயும் எனக்கு வேணும், என்னோட மகளும் எனக்கு வேணும். இந்த இரண்டு விசயத்துக்கும் கெடுதல் வராம, வேணும்னா அந்த ரெண்டு பேரையும் அந்த வீட்டுக்கு வராம செய்ய முடியுமான்னு பாரு'
ஓரினத்தை இருந்த இடத்தில் இல்லாமல் செய்ய உலகத் தலைவர்கள் மார்தட்டித் திரியும் காலம் இது. ஸ்காட்லாந்து காவல்துறை அளவிற்கு உலகப் புகழ் பெற வேண்டிய எனக்கு, இரண்டு பேரை விரட்டுவது சப்பை விசயம்.

நாள் 1: அந்த வீட்டுக்குச் சொந்தக்காரரைக் கண்டுபிடித்து, மேல்தளம் ஒட்டின வீட்டை இப்ப‌டி சும்மாப் போடக் கூடாது, சட்டுப்புட்டுன்னு கட்டி முடிக்கச் சொன்னேன். குட்டிச் சுவராப் போவட்டும், ரெண்டு உசிர எடுத்த வீடுன்னார். சிமெண்ட் மூட்டைக்குப் பாதுகாப்பாக‌ படுத்துக்க வந்த ஒரு கிழவன் ஏதோ ஒன்றைப் பார்த்துப் பயந்த மாதிரி பித்தாகிச் செத்தே போனாராம். பொஞ்சாதியும் மர்மமாக‌ செத்துப் போனாள். குறி பார்க்கப் போன இடத்தில் சொன்னார்களாம்: 'யாரோ ஒருத்தன் யாருக்கோ செய்வினை செய்றதுக்கு அந்த வீட்டுல ஒக்காந்து மந்தரம் செஞ்சிட்டுப் போய்ட்டான். தவறி விழுந்த பட்டு நூலு ஒன்னு, ஒவ்வொன்னா காவு வாங்கிக்கிட்டு இருக்கு'. பிறகு பட்டுநூல் முறியச் செய்கிற மந்திரவாதி ஒருவனைக் கூட்டிவந்து சரி செய்துவிட்டாலும், அவர் திரும்பவும் அவ்வீட்டு வேலைகளைத் தொடர்வது போல் தெரியவில்லை.
நாள் 2: பாம்புச் சட்டைகளை அவ்வீட்டில் தூவிவிட்டேன். அவர்கள் சட்டை செய்யவேயில்லை.
நாள் 3: மாலையில் அவ்வீட்டிற்குள் விளக்கேற்றி வைத்தேன். கவனிக்கவும், விளக்கு ஏற்றி ஏற்றி, பிடித்து இல்லை.
நாள் 4: எண்ணெய் காலி. இரவு 2 மணிக்கு அலாரம் வைத்து, ஒரு வாட்சை அவ்வீட்டிற்குள் வைத்தேன்.
நாள் 5: அவர்கள் புத்திசாலித்தனமாக அலாரம் பட்டனை ஆன் செய்து வைத்துவிட்டே போயிருந்தார்கள். பயந்து விட்டார்கள் என வாட்சை அப்படியே இருக்கச் செய்தேன். பச்சை மாட்டுச் சாணி கொஞ்சம் தரையில் கொட்டியும் வைத்தேன்.
நாள் 6: அந்த வாட்சில் இருந்த புது பேட்டரிகள் காணாமல் போய், செல்லாத பேட்டரிகள் போடப்பட்டு இருந்தன. சாணி இருக்கவும் மொட்டை மாடிக்கே போய் நிலா வெளிச்சத்தில், கடவுளர்கள் போல், பால்வீதியில் கிரகங்களின் பிரம்மாண்ட புரள்தல் போல், ச்சே.
நாள் 7: ?

நான் மட்டும் தான் வேலை இல்லாமல் இருக்கிறேனா? உலகம் படைத்த கடவுள் கூட‌ ஏழாம் நாள் ஓய்வு எடுத்தார். உலகப் புகழ் வேண்டி இப்படியே தினந்தினம் புதிது புதிதாய் ஏதாவது யுத்திகள் செய்து கொண்டிருந்தால் ஓய்வு என்பதே இல்லாமல் போய்விடும். போதும்டா சாமி என்று வழக்கம்போல் வளவன் சாரிடம் தஞ்சம் புகுந்து கேரம் போர்டு ஆரம்பித்தோம். திரும்பவும் திருடன் போலீஸ். வழக்கம் போல் ஒரு கறுப்புடன் வெள்ளையைச் சேர்த்து விரட்ட மிகவும் தடுமாறிக் கொண்டிருந்தேன். கலவியில் ஓட்டித் திரியும் இரு நாய்களைச் சிறுவர்கள் கல்லால் அடித்துக் கொண்டே வீதியில் ஓடிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் இருந்து ஏதாவது புது யுத்தி கிடைக்குமா அல்லது அவர்களாவது எடுத்த காரியத்தில் வென்றார்களா என்று ஆவலுடன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே விளையாடியதில், நான் அடித்த ஸ்ட்ரைக்கர் சர்ர்ர்ரென்று முன்னால் வந்து இடப்பக்கக் குழிக்குள் தொங்கப் போவது போல் மெ எ எ எ துவாய்ப் போய் குழிக்குள், ச்சே, திரும்பவும் மைனஸ்.

- ஞானசேகர்

Saturday, November 03, 2012

தாகமுள்


யமுனாவுக்கு எப்போதும் இருக்கும்
ஒரே வருத்தம்
ஜானகிராமன்
யமுனாவுக்கு
வேறு பெயர் வைத்திருக்கலாம் என்பதுதான்
- மனுஷ்ய புத்திரன் ('யமுனாவின் வருத்தம்' கவிதையிலிருந்து)

நதியின் தேடல் கடைசியில் கடல் காண்பது 
உயிரின் தேடல் கடைசியில் உனைக் காண்பது 
- வைரமுத்து

யமுனா.

ஆற்றின் பெயரைக் கொண்டிருப்பதும்
நீரோடும் ஆறுகளைப் பார்த்திராததும்
ஆறுகளை நேசிக்கப்
போதுமான காரணங்களாய் இருந்தன.

கடல் சேர்வதில்லை யமுனா
என்று தெரிய வந்த நாளில்
யமுனாவைத் தவிர‌
வேறெந்த ஆற்றையும்
முதலில் பார்க்கக் கூடாதென
முடிவெடுத்துக் கொண்டாள்.

படங்களில் பார்த்த‌
ஆறுகளின் பிரம்மாண்டத்தைக்
கற்பனையின்
முழு ஆழத்திற்கும் மூழ்கிப்போய்
கரைபுரளச் செய்வாள்.

நிரம்பித் தளும்பும்
நீள்வட்டக் குளங்களின்
முடிவற்ற நீளமுள்ள‌
செவ்வகப் பரிணாமம்
ஆறுகளென முடிவுக்கு வந்தாள்.

பார்க்கும் குள‌ங்களெல்லாம் நின்னைப்
பார்க்குமின்பம் தோன்றுதையே
என்று கண்ணில் படும்
குளங்களை எல்லாம்
ஆறுகளின் பெயரிட்டுக் கொள்வாள்.

யமுனாவைத்
தன‌க்கு மட்டுமே வைத்துக் கொண்டாள்.

ஒரே சாலையில்
முன்னே பயணிக்கையில்
நைலுக்கும் தபதிக்கும் இடையேயும்
பின்னே பயணிக்கையில்
நர்மதாவுக்கும் கங்கைக்கும் இடையேயும்
வைகையை எளிதாக‌
வைத்துவிட முடிந்தது அவளால்.

தேசிய கீதத்தில்
சிந்துவை நீக்கச் சொன்னபோது
அமேசானுக்கும் கோதாவரிக்கும் இடையே
பத்திரமாகப் பாயவிட்டாள்.

பருவம் திறந்து
தூரமான நாட்களிலும்
தனது ஆறுகளைக் கரையேற்றி
தன்னுடனேயே வைத்துக் கொண்டாள்.

யமுனாவின் ஆறுகளில்
குத்தகை இல்லை
நிபுணர்கள் இல்லை
மன்றங்கள் இல்லை
அணைகள் இல்லை
IPCயும் TMCயும்
அறவே இல்லை.

யமுனாவின் ஆறுகளில்
யமுனாவிற்கும் உரிமையில்லை.

யமுனாவின் மகாநதி
வான்மழை வேண்டி
வாய் பிளந்த நாளில்
வாயடைத்துப் போனாள்.

யமுனாவின் கூவத்தில்
புறவழிச் சாலைகள்
புகைகக்கிப் போன நாளில்
மூச்சுத் திணறிப் போனாள்.

யமுனாவின் அமராவதியைக்
கனரக வாகனங்கள்
அள்ளிப் போன நாளில்
கொஞ்சம் செத்துப் போனாள்.

யமுனாவின் நொய்ய‌லில்
சதுர அடிப் பாத்தி கட்டி
காங்கிரீட் முளைத்த நாளில்
பாதி செத்துப் போனாள்.

யமுனாவின் காவேரியில்
பள்ளி வாகனம் கவிழ்ந்த நாளில்
ஏழு பேரில் ஒருத்தியாக‌
முழுவதும் செத்துப் போனாள்.

தாமரை இலைகளினிடையே
மூழ்கிக் கொண்டே
யமுனா கத்தினாள்
'விட்டுடு காவேரி! விட்டுடு காவேரி!'.

வேடிக்கை மனிதர்களினிடையே
யாரோவோர் உள்ளூர்ச் சிறுமி
கரையிலிருந்து கத்தினாள்
'விட்டுடு யமுனா! விட்டுடு யமுனா!'.

- ஞானசேகர்

பெயராதல்


வைரமுத்து பிறப்பான்னு
வயித்தில்நீ சுமந்ததில்ல
வயித்தில்நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிருச்சு
- வைரமுத்து

தூக்கத்திலேயே
குதிரை ஓட்டினாலும்
பாட்டி கூப்பிட முடியாததால்
அலெக்ஸாண்டர் ஆகவில்லை

நாட்டுச் சரக்கே
நயமென்று
தாத்தா சொல்ல‌
நெப்போலியன் ஆகவில்லை

குருமடத்தில் இருந்து
ஓடிப் போனதால்
பாதிரியார் சொல்லி
ஸ்டாலின் ஆகவில்லை

ஏற்கனவே ஊருக்குள்
ஒரு செல்வம்
மூக்கு ஒழுகத் திரிந்ததால்
தமிழ்ச்செல்வன் ஆகவில்லை

லெனின் ஆவது பற்றி
யாருமே பரிசீலிக்கவில்லை

அதனால்
சார்லஸ் ஆகவில்லை
இதனால்
ஜேம்ஸ் ஆகவில்லை
எதனாலோ
எட்வர்ட் ஆகவில்லை

ஊருக்குள் முதல்
சேகர் ஆகிப்போனேன்

சேகர் ஆனபின்
ஊருக்குள் யாருமே
சேகர் ஆகவில்லை.

- ஞானசேகர்

Saturday, October 13, 2012

42 பிரம்மச்சாரிகள்

உயிர் ம வில் ஆறும், தபநவில் ஐந்தும் கவசவில் நாலும், 
யவ்வில் ஒன்றும், ஆகும் நெடில், நொ,து ஆம் குறில் 
இரண்டோடு ஓர் எழுத்து இயல்பதம் ஆறேழ் சிறப்பின 
- நன்னூல் 

தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது 
தாதிதூ தொத்தித்த தூததே-தாதொத்த 
துத்திதத் தாதே துதித்துத்தேத் தொத்தீது 
தித்தித்த தோதித் திதி
- காளமேகப் புலவர்

ஓரெழுத்து ஒருமொழி பற்றி எழுத்தாளர் பெருமாள்முருகன் அவர்களின் கட்டுரை ஒன்றைச் சமீபத்தில் படித்தேன். நன்னூல் வரையறுக்கும் அந்த‌ 42 எழுத்துகளும் மனதில் பதிந்து போயின. முதன்முறையாக‌ சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்றிருந்தபோது வீரமா முனிவரின் சதுரகராதி கண்ணில்பட்டது. படிக்கும் போது அங்குமிங்கும் வழக்கமாக சிதறிப் போகும் மனதில் இருந்து திடீரென ஒரு சிந்தனை உதித்தது. காளமேகப் புலவர் பாடிய தகர வரிசைக் கவிதையும் நினைவில் வந்தது. அந்த 42 எழுத்துகளை மட்டும் பயன்படுத்தும் வார்த்தைகளைத் தேடினேன். விளைவு இக்கவிதைகள். பிழை இருப்பின் சொல்லுங்கள். கண்டிப்பாகச் சந்திகளைத் தவிர்த்து விட்டதால், வலிமிகாது படியுங்கள்.
என்னைத் தூண்டிய சுட்டிகள்:
1. ஓரெழுத்து ஒருமொழி பற்றி எழுத்தாளர் பெருமாள்முருகன்
2. நன்னூல் பா 128

இராமர் பாலம்
-------------
தேவை சீமூதை சீதை
பூதை தேவை
தீ தீவை
தீநா பாதை
சாது சேவை
சேது காதை.

சாமியார்
--------
மாது மீது சாயாது
பாவை பூவை கோதாது
காது மீதே ஊதாது
பைசா நைசா வௌவாது
சீமை போகாது
கைதாகாது
தீது யாது ஏது
ஓது சாது

தோசை
-------
கோவை கோதை
கைமை தூவை
கையை பூவை
தீவை மாவை
துவை துவை
சாதா தேவை

பத்தும் செய்யும்
---------------
நாசா பைசா
கோவா கோவை
வைகை கை வை
யாதுமே சேவை
காசே தேவை

மது
---
தீது தூதை
போதை பாதை
நாயா பேயா
சாயாதேயா

பிரளயத்தின் கடைசி நாள்
-----------------------
நாதா தேவா
தாதா தேவா
தாதை தேவா
தாதைதாதை தேவா
மூதாதை தேவா
வாவா தேவா

காவா தீமை
கூவா கூகை
சேதா மைமா
நோகா நோவா

பேதை பாதை
ஐமை பைமை 
ஊமை ஊதை
வாகை தீவை
காவா தேவா
சாவா தேவா
வாவா தேவா

- ஞானசேகர்

Sunday, September 02, 2012

விளம்பரங்கள்


பிறப்பு
இறப்பு
இடையில் புகைப்படம்
இவ்வளவுதான் வாழ்க்கை.
-------------------------------
செத்தவனுட‌ன்
செத்துக் கிடக்கிறது
தமிழ்.
-------------------------------                   
வீட்டுக்குள்ளே பெண்ணைப்
பூட்டி வைப்போம் என்ற‌
சந்தை மனிதர் தலை நிமிர‌
பிரம்மாண்டமாய் நிற்கிறாள்
மஞ்சள் நீராட்டு விழா
பாரதி.
-------------------------------
விடிய விடிய‌
விளம்பரம் கேட்டு
விடிந்து பார்த்தால்
சீதைக்கு ராமன்
சித்தப்பன்.
-------------------------------
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇச் சுவர்.

- ஞானசேகர்

Saturday, June 30, 2012

மக்களால் மக்களுக்காக மக்களே

அந்தப்புரங்களில்
இடஒதுக்கீடு செய்தது
முடியாட்சி.

ஆட்சிமன்றங்களில்
இடஒதுக்கீடு செய்கிறது
மக்களாட்சி.

- ஞானசேகர்

கணித்தான் பூங்குன்றன்


வாசலில் எனக்கு
சார் சொல்லி
வணக்கம் வைக்கும்
செக்யூரிட்டியும்

ஏசி அறையில்
நான் பெயர் சொல்லி
கை குலுக்கும்
மேலதிகாரியும்

என்னைவிட
த்துவது மூத்தர்கள்.


சிறியோரை இகழ்தலும் இலமே
பெரியோரை வியத்தல் அதனினும் இலமே.

ஞானசேகர்

சந்தை


எதையும்
எவரிடமும்
எப்படியும்
விற்றுவிட‌
சொல்லித்தரும் புத்தக‌ம்
விற்கப் படாமல் கிடக்கிறது.


- ஞானசேகர்

Monday, May 21, 2012

மனிதன் இணைத்ததை இறைவன் பிரிக்காதிருக்கட்டும்



'எதா இருந்தாலும் இங்கெ சொல்லுங்கைய்யா. சும்மா வீட்டு வாசல்லெ நின்னுக்குட்டு காலு காலு கீலு கீலு வாலு வாலுன்னு... பத்து இருவது பேரு கூட்டமா வந்துட்டா இந்த ஊருக் காரங்க்யெ பயந்து போயிருவாய்ங்க‌ன்னு நெனச்சீங்களோ?'
'அய்யா நீங்க தப்பா நெனச்சீட்டிங்க. அந்தாளு களுக்கும் எங்களுக்கும் தான் தகராறே. வேணும்னே நாங்க வந்த கார்லேயே வந்து பிரச்சனை பண்றானுங்க'
'ஓ ஓ ஓ நீங்க ரெண்டு கோஷ்டியா? ஏன்யா நேரா எங்க ஊருக்குள்ள வந்து நேரா ஏன் வீட்டு வாசல்ல நின்னு காச்சுப் பூச்சுன்னு கத்துறீங்க? நீங்க வந்த அதே கார்லதான் ஏன் பெரிய பொண்ணும் வந்து எறங்கினுச்சு. அதுக்கிட்ட என்னா ஏதுன்னு பேசறதுக் குளியும் திடுதிடுப்புன்னு இப்படி வந்து நிக்கிறீங்களேய்யா'
'அய்யா நாங்க பொறந்தப்பட்டி. அந்தா செவப்புத் துண்டுப் போட்டு நிக்கிறானே தாயிலி... அவன் புகுந்தப்பட்டி. சனியன்... சொந்த மாமன் மகனாப் போயிட்டானேன்னு ஒரே அக்காவே இந்தாளுக்குக் கட்டிவெச்சு இன்னும் வருசந் திரும்பல... அதுக்குள்ள இந்தத் தொடெ ந‌டுங்கிக் கூ...'
'அத்தோட நிறுத்துடா... மச்சான்னுகூட பாக்க மாட்டேன்'
'இன்னும் என்னாடா மச்சான் மாப்புள்ளன்னு பொசக்கெட்ட தாயிலி'
'கட்டியாரு'
'நெக்கியாரு'
'ஏய் ஏய் ஏய் நிறுத்துங்கப்பா நிறுத்துங்கப்பா. ஒங்க சண்டயெ போடனும்னு தான் கவர்மண்டு கார் ஏறி டிக்கட்டு வாங்கி வந்திகளா? போங்கப்பா. போயி வேற ஊருல அடிச்சுக்குங்க. ஏதோ நாங்க அந்த மகமாயி புண்ணியத்துல நல்லா இருக்கோம். எங்க ஊர் எல்லையிலெ சண்டெ போடாதீங்க‌ப்பா. அப்பிடியே அடுத்த காருல திரும்பிப் போயிருங்க'
'அது எப்புடிங்க வெறுங் கையோட போக முடியும். பொணங்கிட்டு வந்த எங்க அக்கா ஒங்க வீட்லதானே இருக்கு. அதக் கூப்புடுங்க. நான் கூட்டிட்டு திரும்பிப் பாக்காம போறேன்'
'கட்டுனவன் நான் இருப்புறப்ப ராசா மாதிரி கூட்டிட்டுப் போவாராம். மானங்கெட்ட மலங்காட்டு ராசுக்கோலு'
'கொம்ம்மாலெ...'
'கொக்காலெ...'
'கொப்பனெ...'
'கொப்புச்சியெ'
'அடடடடா ஒரு ஆளு மட்டும் பேசுங்கப்பா. சும்மா ஆளாளுக்குக் காட்டுக் கத்துக் கத்தாதீங்க‌. நீங்க நிக்கிறது எங்க மண்ணு. எங்க ஊரு மக்களுக்கு மொதல்ல‌ மரியாதெ குடுங்க. ஏன் வயசுக்கு மரியாதெ குடுங்க. சும்மா வாயிலெ வந்த கெட்டக் கெட்டப் பேச்சப் பேசிக்கிட்டு...'
'நீங்க அக்காவக் கூப்புடுங்க. நான் செவனேன்னு நடெயெக் கட்றேன்'
'யாரு ஒங்க அக்கா? என்னெக் கேக்குறெ?'
'எல்லாம் நல்லா விசாரிச்சுட்டுத் தான் வந்துருக்கோம். நாலு நாளா அக்கா ஒங்க வீட்டுலதான் இருக்கு. வரச் சொல்லுங்க'
'ஓ... அந்தப் பொண்ணா... அது வந்ததுல இருந்து வாயேத் தொறக்கலப்பா. அது சொல்லி இருந்தா நானே கொண்டாந்து விட்டுருப்பேன்'
'மொதல்லக் கூப்புடுங்க. வெக்கமே இல்லாம செல மானங்கெட்ட தொன்னெ நக்கிங்க கட்டிக் குடுத்துப்புட்டு திருப்பிக் கேக்குறானுங்க. ஊரு ஒலகத்துல நடக்காத அதிசயக் கதெயா...'
'அட இருங்கப்பா. அந்தப் புள்ளயவேக் கேப்போம். ஏன்டிச் சின்னவ‌ளே... அந்தப் பொண்ணக் கூட்டியா. அப்டியே இன்னும் அஞ்சாறுப் பொம்பளெ யாளுங்களையும் சேத்துக் கூட்டியா'
'நீங்க பெரிய மனுசனுக்கு அடையாளம். முன்னப் பின்னத் தெரியலன்னாலும் பொம்பளைய மதிக்கிறீங்க. கட்டிக் கிட்டவ மேல கைய நீட்றவன்லாம் சூர‌ப்புலியா?'
'சாடெப் பேசி ஏன் பொறுமையச் சோதிக்காதெ. ஏம் புள்ளக்கித் தாய்மாமன் இல்லாட்டின்னாலும் பரவால்லேன்ன்னு துண்டம் போட்டு...'
'கொப்புறானே இப்ப சும்மா இருக்கீங்களா இல்லையாப்பா? அந்தப் பொண்ணு வர்ற வரைக்கும் கொஞ்சம் வாயப் பத்தரமா வெச்சிக்கிட்டு இருங்க. மகமாயி புண்ணியமாப் போகும். ஒங்க ஊருகாடு பக்கம்லாம் என்னா வெள்ளாமெ பண்றீங்கெ? மழத்தண்ணி யல்லாம் எப்புடி?'
'போகம் போகமா வெளச்சல் பார்த்து குருதுலெ கொட்டி வெக்கிற அளவுக்கு நெலம்லாம் எங்கெ சனங்களுக்கு இல்லங்க. நான் கல்லுப் ப‌ட்டறெ. அந்தாளு கொல்லுப் பட்டறெ. இரும்படிக்கிறப் புத்தித்தான் பொம்பளைய இப்புடி அடிக்குது'
'நீ மட்டும் என்னடா... கல்லுப் பட்டறெ வைரக்கல்லு மாறியா பளபளன்னு கட்டிக் குடுத்தே... நிறுத்துறா... நான் பேண்டுக்கிட்டுத் திங்கிறவன்னா, நீ அதத் தொட்டுக்கிட்டுத் திங்கிறவன். குசுவக் குண்டி இல்லாத பொச்சுக் காஞ்ச நாயி பெருசா பெரிய மனுசன் மாதிரி நாயம் தர்மம் பேச வந்துட்டான்...'
'பேள்ற கெழ‌வி கூட ஒன்னப் பாத்தா எந்திரிக்காது. ஒன்னோட சம்மந்தம் பண்ணேன் பாரு...'
'கட்டியத் தின்னி'
'சாண்டெயக் குடிக்கி'
'மொளக்காத்தெத் தின்னி'
'அய்யய்யய்யயே ஒங்கெ கச்சேரிய நிறுத்துங்கப்பா. அந்தப் பொண்ணே வந்திருச்சு. அதுக்கிட்டேயே கேப்போம். நீ இங்கெ வாம்மா. ஒன்னும் பயப்படாதெ. நான் ஓன் அப்பன் மாதிரி. தெகிரியமா சபையில நடுவுல நில்லும்மா. எங்க ஏன் வீட்டுக்காரி? எங்கடி அவ? நீயும் இந்தப் பொண்ணுக் கூட நில்லுடி. பயப்புடுது'
'வேற என்னங்க பேச்சு வேண்டியக் கெடக்குது. வவுத்துல எம் புள்ள இருக்கு. ப்பேயாம என்னோட அனுப்புங்க'
'அதுக்காக பூவெச் சரஞ்சரமாக் கெட்டி கொரங்குக்கிட்ட கொடுக்குறதா? புள்ளெ பொறந்த ஒடனேயே தாய்விட்டுச் சீதனமா அரளி வெதையும் கொண்டாந்து கொன்னுப் புடுவேன்'
'தூத்த்தெரி. என்னக் கொடுமயா இது? பொறந்தவனும் கட்னவனும் சேந்து ஒரு பொம்பளப் புள்ளையெ இப்புடியா கண் கலங்க வெக்கிறது? இவள இங்கேயே பொதச்சிரலாம்னு ரெண்டு பேரும் கெங்கணங்கட்டி வந்து இருக்கீங்களா? நீ அழுகாதம்மா. கண்ணத் தொடச்சிக்க. நாங்கல்லாம் இருக்கம்லே. நாந்தான் ஓன் அப்பன் மாதிரின்னு சொன்னேல்லே. இங்க பாருங்கப்பா... நடந்தது என்னான்னு முழுசாக் கேட்டு இதுக்கெல்லாம் ஒரு முடிவெடுப்போம். தெரிஞ்சோ தெரியாமலோ ஒங்கப் பொண்ணு எங்க ஊருக்கு வந்திடுச்சு. இப்ப‌...'
'அனுமாரு வாலு மாதிரி இனிமேயும் இழுக்க வேணா. புருசன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும். எங்க ஊரு பெரிய மனுசங்கள வெச்சு நாங்க பாத்துக்குறோம். என்னோட அனுப்புங்க'
'பாத்தீங்களா... பெரிய மனுசன் நீங்க எங்களுக்கு ஒதவுனும்னு எவ்ளோ அமைதியாப் பேசிக்கிட்டு இருக்கீங்க... வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னே பேசிக்கிட்டுத் திரிஞ்சா ஏன் அக்கா சொச்சக் காலத்தெ எப்புடிங்க ஓட்டுறது?'
'அதத்தான் நான் சொல்றேன். ஏன் பொறுமையச் சோதிக்காதிங்க. அந்தப் புள்ளயே பேசட்டும். நீ தெய்ரியமா என்ன நடந்துச்சுன்னு சொல்லும்மா. பொறவு என்ன பண்றது பேசி முடிவெடுப்போம். அதுமுட்டும் மைத்தவங்க எல்லாம் கம்மெய்யா இருங்கப்பா'
'நீ பயப்படாம சொல்லுக்கா'
'சொல்லுடி'
'சொல்லும்மா'
'சொல்லுக்கா'
'அட இப்புடியே பேசாம இருந்தா என்னம்மா அர்த்தம்? என்ன ஓம் புருசன் சோறு போட மாட்டேங்கிறானா?'
'இல்லங்க'
'அப்பறம் என்ன பொடவ சட்டத் துணிமணி வாங்கித் தர மாட்டேங்கிறானா?'
'இல்லங்க'
'நகெ நெட்டு கேக்குறானா?'
'இல்லங்க'
'அட என்னம்மா நீ... கூத்தியா ஏதாவது...'
'இல்லங்க'
'கையெக் கிழிச்சு விட்டதெ சொல்லுக்கா'
'நீங்க எல்லாம் செத்த சும்மா இருக்கீங்களா... நான் தான் கேட்டுக்கிட்டு இருக்கேன்லே... என்னம்மா... ஓம் புருசன் கை கிழியிற அளவுக்கு அடிக்கிற ஆளா?'
'ஆமாங்க'
'அடிக்கிறதுதான் பிரச்சனையா. ஏம்பா...'
'அதுகூட பரவாயில்லங்க, குடிகாரக் குப்பேங்க‌'
'குடியா? போச்சுடா... அப்ப ஏம் பொன்டாட்டிக் கூட என்னெ விட்டு ஓடிப் போக வேண்டியதுதான். ஒலகத்துல எந்த ஆம்பளத்தான் குடிக்கலே...'
'போதெ கண்ணு முன்னு தெரியாம ஏர்ற வரைக்கும் குடிக்கிறாரு. அடுப்பெரிக்க சீமண்ணெ இல்லாட்டி கவுச்செயெ அப்புடியே பச்சயாச் சாப்புடுறாரு. குடலு என்னாத்துக்கு ஆகுறது மாமான்னா கைலெ கெடைக்கிற கட்டெயெ எடுத்து அடிக்கிறாரு'
'நீ அழுகாதம்மா. ஏம்பா... நீயே சொல்லு. இதுல்லாம் சரிதானா? நம்ம கூடப் பொறந்த அக்கா தங்கச்சியா இருந்தா இப்புடி எல்லாம் அடிப்ப‌மா?'
'பெத்தத் தாயெக் கூட நான் பாத்ததில்லங்கெ. திட்டுவா பேசாம இருப்பா அப்பல்லாம் ஒன்னும் தெரியல. பொம்பள விட்டுட்டு ஓடிப் போனா என்னா அவமானமின்னு இப்பத் தெரியுது. எனக்கு நல்லது கெட்டது சொல்லிக் குடுக்க யாரும் இல்ல. மன்னிச்சிருங்க'
'ஒன்னோட மன்னிப்புல பொட்ட நாயி குசுவ. சிவாசி கணேசன் தோத்துப் புடுவாரு. என்னா நடிப்புப் பாருங்க. எனக்கும் எங்கக்காளுக்கும் வெவரம் தெரியறதுக்கு முன்னாடியே எங்கப்பன் தவறிப் போய்ட்டாரு. அதுக்காக யாரும் எங்களுக்கு நல்லது கெட்டது சொல்லித் தரலையா என்னா...'
'இப்புடியே பேசிக்கிட்டு இருந்தா இந்தக் காரும் போய்ட்டு அடுத்த காரு வந்துடும். அவருதான் தெரியாமப் பண்ணிட்டேன்னு சொல்றாப்லே இல்லே... அவரோட அனுப்பி வெய்ப்பா. நீங்க கும்புடுற ஏசு சாமி யார் யாரையோ மன்னிக்கச் சொல்றாரு. சொந்த அக்கா புருசன மன்னிக்க மாட்டியா?'
'ஒங்களுக்குத் தெரியாதுங்க. எங்க அக்கா காணாமப் போனதும் ஏதோ நாந்தான் ஒழிச்சு வெச்சிருக்கது மாறி ஊருக்குள்ள வந்து ரகளெ பண்ணி தாயப்புள்ளகெ முன்னாடி அசிங்கப் படுத்திப் புட்டான் இந்த மூத்தரக் குடிக்கிப்பய'
'ஏன்டா நீ மட்டும் அக்காளக் கொன்னுப் புட்டேன்னு சொந்த மாம்மேன்னு கூடப் பாக்காம போலீசுல புகார் பண்ணப் போனீயா இல்லையா'
'அப்பறம் நீ பண்ண சங்கதிக்கு ஒன்னெச் சப்பரத்துல‌ வெச்சு இழுக்கச் சொல்றியா?'
'அடமழ‌யெக் கொஞ்சம் நிப்பாட்டுங்கப்பா'
'ஏம் பொன்டாட்டி மட்டும் என்னோட வரலென்னா ஏன் வாய்க்குள்ள அடுத்துப் போறது அரளி வெதையாத் தான் இருக்கும்'
'மகராசனா அதெச் செய்யி மொதல்லே. ஒனக்கு ரொம்பப் புண்ணியமாப் போகும். சொந்தக்காரன் கடமெக்கிக்கி மொதக் கோடித்துணி தாய் வீட்டுல இருந்து நானே கொண்டார்றேன்'
'அட நீயென்னாப்பா. பொறந்தவ தாலியறுக்க இப்புடி மிசாரிட்டியா இருக்கே?'
'அப்புடி பண்றானுங்க இந்த ஆளு'
'ரெண்டு பேரும் நல்லாக் கேட்டுங்கங்க. போன வெள்ளிக் கெழமெ ராத்திரி இந்தப் பொண்ணு தனியாப் பஸ் ஸ்டாண்டுல பித்தாப் பித்தான்னு முழிச்சிட்டு நின்னுச்சு. ஏன் சம்சாரம்தான் பாத்துப்புட்டு வீட்டுக்குக் கூட்டியாந்தா. எங்களுக்கு இருக்குற அக்கறை கூட ஒங்களுக்கு இல்லையப்பா'
'அந்த கர்த்தராப் பாத்து ஒங்க மாதிரி நல்லவங்களே அனுப்பி இருக்காரு'
'வந்ததில இருந்து ஒரு வார்த்த பேசலே. உம்முன்னுதான் இருக்கு. நீங்க சொல்லித் தான் இப்பக் கதயே தெரியுது. வீட்டு வேலை யெல்லாம் அதுவே நல்லாப் பாக்குது. மாட்டுக்குத் தவுடு காட்ற‌து சாணி அள்றது களெ பறிக்கிறதுன்னு வேலை யெல்லாம் கண் மாதிரி செய்யுது. இந்தாருப்பா கூடப் பொறந்தவனே... பெரிய மனுசன் நான் சொல்றேன். நான் ஒனக்கு இந்தப் பொண்ணுக்கும் அப்பா மாறி. கேப்பியா'
'சொல்லுங்கையா. எங்க அக்காவெ நாலு நாளு பாத்துக் கிட்டதுக்கு நன்றிக் கடனாப் போகட்டும்'
'ஆனது ஆகிப் போச்சு. பொண்ணப் பெத்துட்டோம். இன்னும் ஆயிரம் சண்டே ஆயிரம் சடங்கு ஆயிரம் நல்லது கெட்டது பாத்துத்தான் ஆகணும். நாம அடங்கிப் போனத்தான் எல்லாத்துக்கும் நல்லது. ஒங்கச் சாமிக சங்கதி எப்புடின்னு எனக்குத் தெரியலெ. பொம்பள வீட்ட விட்டுப் போனதுனாலத் தான் வெட்டுக் குத்து அடிதடின்னுப் போயி எங்கள்ல பலச் சாமி. அதெல்லாம் நமக்கெதுக்கு? நமக்கு இருக்குற ஒரு உசுர நிம்மதியா வாழ்ந்துப் புட்டு மண்ணுக்குக் கொடுப்போம்கிறேன்'
'அது சரிப்பட்டு வராதுங்க‌. பங்காளிப் பையன் ஒருத்தர் டவுன்ல எட்டாவது படிக்கிறாப்ல. கோர்ட்டு கேசுன்னு போனா சுலூவா ரெண்டு பேரையும் பிரிச்சு ஆயுசுக்கும் தொல்லெ இல்லாம கையெழுத்துப் போட்டுக் குடுத்துடுவாங்களாம். கையில பஸ்சோ வாயில குஸ்சோ ஏதோ ஒரு பேரு இங்கிலீசுல'
'அம்மான்னே என்னான்னு தெரியாத‌ ஒன்னோட மாமனும் அப்பான்னே என்னான்னு தெரியாத ஒன்னோட அக்காவும் ஒருத்தொருக் கொருத்தர் மாத்தி மாத்தி அப்பாவும் அம்மாவும் சந்தோசமா வாழணும். பொறக்கப் போற கொழந்தக் காகவாது கொஞ்சம் அனுசரிச்சுப் போங்க'
'சரிங்கையா இந்த ஒரு தாட்டி ஒங்க நல்ல மனுசுக்காகக் கேக்குறேன். இன்னொரு தடவெ இந்தாளு இப்புடிப் பண்ணுனானுன்னா மக்ஞா நாளே கல்லறையில பாலு ஊத்துறது மாதிரிப் பண்ணிப்புடுவேன் ஆமா'
'நீ ஏதும் திரும்பி எதுத்துப் பேசாதப்பா. அப்பறம் இன்னிக்குள்ள இது முடியாது'
'ஏன் பொன்டாட்டி மொதல்ல பெக்குறது ஆம்பளப் புள்ளன்னா ஒங்கப் பேருதான்யா. பொம்பளப் புள்ளன்னா ஒங்க சம்சாரம் பேரு. மாதா மேல சத்தியம்'
'பத்தாது பத்தாது. மாமென் மச்சான் ரெண்டு பேரும் தோள்ல கை போட்டு சமாதானம் ஆகிக்கிடுங்க. ஆன் அப்புடித்தான். இத விட்டுட்டுப் பீயிக் கலையிற பன்னி மாறி எலும்புக் கலையிற நாய் மாறி சண்டெப் போடுறீங்களே'
'மச்சான்'
'மாப்புளே'
'கொம்ம்மாலெ...'
'கொக்காலெ...'
'கொப்பனெ...'
'கொப்புச்சியெ'
'இந்தாப் பாரும்மா பெரியவங்க யாரும் இருந்துருந்தா நல்லது கெட்டது சொல்லி அனுசரிச்சுப் போகச் சொல்லி இருப்பாங்க. அதான் சின்னப் புள்ளயாட்டம் வெடுக்குன்னு உடியாந்துட்டே. இங்காரு ஒன்னும் தெரியாமப் புள்ளப் பூச்சி மாறி நிக்கிறாளே ஏம் பொன்டாட்டி... அவ தோசக் கரண்டில தோசையத் திருப்பிப் போட்டத விட என்னெத் திருப்பி போட்டது தான் அதிகம். கொணம் இருக்க எடத்துல தாம்மா கோவமும் இருக்கும். கல்யாணக் காட்சின்னா ஆம்பளப் பொம்பளக்குள்ள அப்டி இப்டி இருக்கத்தான் செய்யும். நாமதான் ஊரு நாட்டு நடப்புக் கேத்தாமாறி பாத்து நடந்துக் கிடணும். இல்லாட்டி ஏட்டிக்குப் பூட்டியா எதுப் பண்ணிப் புட்டாலும் டக்குன்னு ஒரு கல்லெ வெச்சு சாமின்னு சொல்லிப் புடுவானுங்க‌. பொம்பள மேல பெத்த புள்ளங்கதான் வெளிக்கிப் போகனும். நீப்பாட்டுல சாமியாகிப் போயிட்டியன்னா காக்கா குருவின்னு தலமேல வெளிக்கிப் போகும். கவலப் படாமப் போயி புருசனோட சந்தோசமா இருமா. தெரிஞ்சோ தெரியாமலோ எங்களுக்கு ஒன்னே ரொம்ப புடிச்சுப் போச்சு. ஏன் ஆயிசு இருக்கந் தட்டியும் ஏன் மகளுக்குண்டான எல்லாச் சடங்கும் ஒனக்கும் நானே செய்யிறேன். புள்ளப் பொறந்தோடனே இந்தத் தாத்தாவையும் கூப்புடும்ம்மா. திரும்பத் திரும்பச் சின்னப் புள்ள மாறி அழுவாதே'
'எங்க சாதி என்னா... கொலம் என்னான்னே தெரியாம இப்படி ஒரு வார்த்தையெச் சொல்றீங்களே. நீங்க நல்லா இருக்கணும்யா'
'சாதி பேதின்னுட்டு... நாமல்லாம் மனுசனுங்கம்மா. ஒங்கக் கதையில ஏன் பெரிய பொண்ண மறந்தே போயிட்டேன். நீங்க எல்லாரும் இருந்து கோழி அடிச்சுச் சாப்டுப் போகலாம் வாங்க. எங்கடி பெரிய பாப்பா? காரெ விட்டு நேரா விருட்டுன்னு வீட்டுக்குள்ள போனா...'
'பஞ்சாயத்தா?'
'ஆமாடா பெரியவளே. என்னடா நீ மட்டும் தனியா வந்திருக்கே? மாப்புள்ள வல்லையா?'
'இல்லப்பா'
'டவுன்ல கூட்டாளிகப் பாத்துட்டு கடேசி கார்ல வருவாரா? நீங்க உள்ள போங்க. நம்ம வீடுதான். இங்கே சுத்துறது எல்லாம் நம்மக் கோழிங்க தான். நல்லா ஒங்களுக்குப் புடிச்சக் கோழியாப் பாத்துப் புடிங்க‌'
'இல்லப்பா. சென்னையிலேயே தான் இருக்காரு'
'நீ மட்டும் தனியாவாம்மா வந்தே? ஏதாவது பிரச்சனையா? அந்தக் கெடாப்புல இருக்குறது அடக்கோழி. அதெ விட்ருங்க‌'
'ஆவடியில இருந்து கிண்டிக்கு வீடு மாத்த மாட்டாராம். ஆவடியிலேயே அம்மா காலடியிலேயே கெடப்பாராம். கூட்டுக் குடும்பம் நான்சென்ஸ். அம்மா மடியிலேயே இருக்குறவனுங்க எல்லாம் எதுக்குக் கல்யாணம் பண்ணிக்கணும்'
'அப்பாவுக்கு ஒன்னும் வெளங்களம்மா'
'அதாம்பா ஒரேடியா அப்ளை பண்ணலான்னு முடிவு பண்ணிட்டேன்'
'சப்ப‌ளையா? சோடியாத் திரியறதுகளே விட்டுருங்கப்பா'
'அப்ளைனா கோர்ட்ல கேஸ்சு'
'எதுக்குடா பெரியவளே'?'
'டைவர்ஸ்'

- ஞானசேகர்

Wednesday, March 21, 2012

பாம்பின் கால்


சமூகத்துடன் சேர்ந்து வாழத் தெரியாத ஒன்று, மிருகமாக இருக்க வேண்டும்; இல்லை கடவுளாக இருக்க வேண்டும்.
- அரிஸ்டாடில்

Now here are these two unaccountable freaks; they came in together, they must go out together.
- Mark Twain

நான் சொல்வனவற்றுள்
பாதி பொருளற்றவை தான்.
ஆனால்
மறு பாதி
உங்களைச்
சரியாகச் சென்றடையத்தான்
நான் அவற்றைச் சொல்கிறேன்.
- கலீல் கிப்ரான்

(இங்கு இவர்களுக்கு இப்படி நடந்த‌தாக நான் செல்வதேதும் அங்கு அவர்களுக்கு அப்படி நடந்திருந்தால் அது தற்செயலே)

Kozhikode. இந்தியாவைக் கடல்வழி தேடிய ஐரோப்பியர்கள் முதலில் கரை தொட்ட கப்பாடு என்ற‌ இடத்திற்கு மிக அருகில் இருக்கும் நகரம் கோழிக்கோடு. ஆங்கிலத்தில் Calicut. தமிழில் கள்ளிக்கோட்டை. உச்சரிக்கத் திண‌றிய ஆங்கிலேயர்கள் Cawnporeஐக் Kanpurஆக மாற்றியதில் ஆரம்பமானது, இந்த Cயில் இருந்து Kக்குக் கட்சித் தாவ‌ல். Conjeevaram Kanchipuram ஆனது. Cஐ ஆதியில் வைத்திருக்கும் கம்யூனிசம் ஆதிக்கம் செலுத்தும் இடங்களில் கூட, Calicut Kozhikode ஆனது; Calcutta Kolkata ஆனது; Cochin Kochi ஆனது. கோழிக்கோடு இரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் புட்டு சாப்பிட்டவுடன் இது போன்ற சிந்தனைகள் தோன்றின‌. இயற்கையும் இது போன்ற இரட்டைகளைப் படைத்துக் கொண்டு, தன்னைத் தானே தகவமைத்துக் கொள்கிறது. அகலாது அணுகாது சேர்ந்தொழுக வைக்கும் கிரகங்களின் குவியங்கள் முதல் நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இக்கதையுங்கூட‌.

ஒரு மனிதனின் வாழ்க்கையை எந்த அளவுக்குத் துல்லியமாகப் பதிவு செய்ய முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஒவ்வொரு வருடமாக‌ ஒவ்வொரு நாளும் எங்கு இருந்தார் என்ன செய்தார் என்று துல்லியமாக. ஒன்று அந்த மனிதர் தினமும் டைரி எழுதியிருக்க‌ வேண்டும், அல்லது அதை இன்னொருவர் செய்து கொண்டிருக்க‌ வேண்டும், அல்லது ஒரே மாதிரி வாழ்க்கையைத் திரும்பத் திரும்ப வாழ்ந்திருக்க வேண்டும். இம்மூன்றும் தனித்தனியே இல்லாமல் இம்மூன்றும் மொத்தமாக இப்படி இருந்தால் எப்படி இருக்கும்? 366 தனித்தனி ஊர்கள் ஒரு மனிதன் தத்தம் ஊர்களில் 50 வருடங்களாக வாழ்ந்துபோன ஒரே மாதிரியான வாழ்க்கையை ஒவ்வொரு ஊராக ஒவ்வொரு தேதியாகக் கதை சொன்னால் எப்படி இருக்கும்? அதுவும் இயேசுவின் கதை போல் தெரிந்த‌ நான்கு சீடர்கள் சொன்ன நான்கு வெவ்வேறான பதிப்புகள் போல் அல்லாமல், படிப்பறிவு அதிகம் இல்லாத சாதாரண மனிதர்கள் தங்கள் நினைவில் இருந்து சொல்லும் ஒரே பதிப்பாக இருந்தால் எப்படி இருக்கும்? புரியவில்லையா?

இதை வைத்துக் கொள்ளுங்கள். இது 2008ம் ஆண்டு டைரி. இது என்னுடைய சுயசரிதை அல்ல. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வாழ்ந்த சொற்ப நாட்களைக் கூட இன்னும் வாழாதவன் நான். உருப்படியாகச் செய்வதற்கு ஒரு வேலையும் இல்லாதவர்கள் காதலிக்கிறார்கள், உருப்படியாக ஒரு வேலையும் செய்யாதவர்கள் சுயசரிதை எழுதுகிறார்கள் என்பவன் நான். ஒவ்வொரு தேதிக்கும் ஒரு முழுப் பக்கம் கொண்ட டைரி இது. எல்லாப் பக்கங்களிலும் அம்மனிதனின் கதைக் குறிப்புகளை எனக்கு மட்டும் புரியும்படி எழுதி இருக்கிறேன். ஒவ்வொரு தேதியிலும் ஓர் ஊரின் பெயர் இருக்கும். ஒவ்வொரு தேதியிலும் குறைந்தபட்சம்‌, கதை சொன்ன‌ ஓர் ஆளின் சில தகவல்களும் இருக்கும். புரியவில்லையா?

உதாரணத்திற்கு ஏதாவது சில‌ பக்கங்களைத் திறந்து ஊரின் பெயர்களை மட்டும் படியுங்கள். டிசம்பர் 16 நல்லறிக்கை. நவம்பர் 9 கொணலை. ஆகஸ்ட் 8 சிறுகமணி. மே 21 பொசுக்கனி. ஏப்ரல் 12 ஆலங்காயம். தமிழ்த் தேதிகளில் கதை சொல்லலாம் என நினைத்தேன். பரவாயில்லை. நான் சொல்லவரும் அந்த மனிதர் 50 வருடங்களுக்கு மேலாக‌ ஏப்ரல் 12ந் தேதி அன்று இன்றைய இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆலங்காயம் என்ற ஊரில் மட்டும் தான் இருந்திருக்கிறார். எந்த வருட‌ம் என்ன செய்தார் என்று அந்த‌ ஊர்மக்களுக்குத் தெரியும். இதே மாதிரி டைரியில் உள்ள ஒவ்வொரு தேதிக்கும் அந்த‌ந்த‌ ஊர்க‌ள். அந்த‌ 366 ஊர்க‌ளுக்கும் அவ‌ருக்கும் எந்த‌ச் ச‌ம்ம‌ந்த‌மும் கிடையாது. அந்த‌ 366 ஊர்க‌ளுக்கும் அவ‌ர் மூல‌ம் ச‌ம்ம‌ந்த‌ம் உண்டு என்ப‌து என‌க்கு ம‌ட்டும்தான் முழுமையாக‌த் தெரியும். புரியவில்லையா?

பார்த்தவர்கள் அவருக்கு வைத்த பெயர் ஊமையன். நான் வைத்த‌ பெயர் ஊமைச் சோசியன். மீண்டும் ஏதாவது ஒரு பக்கத்தைத் திறந்து முழுதும் படியுங்கள். ஆகஸ்ட் 6 - திமிரி - பராசரன் (1945) - பால் குறைக்கும் இடை. இரண்டாம் உலக யுத்தத்தில் ஜப்பானில் முதல் குண்டு விழுந்த நாளில் திருமணம் ஆனதாக பராசரன் சொல்வார். எப்போதாவது திமிரி கிராமத்திற்கு வந்துபோகும் ஊமைச் சோசியன் அன்றும் வந்திருக்கிறார். வாய்ப் பேச வராது. காது கேட்காது. தோட்டத்தில் இருந்த பராசரனிற்கு ஊமைச் சோசியன் ஏதேதோ வரைந்தும் எழுதியும் காட்டி இருக்கிறார். மொகஞ்சதாரோவில் வேலை பார்த்த‌ பராசரன் அந்தக் கிறுக்கல்களை ஒரு பொருட்டாக பாராமல் போனார். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையில் எல்லை க‌டப்பவர்கள் மேல் நட‌ந்த கொடுமைகள், நாடு திரும்பிக் கொண்டு இருந்த பராசரனின் குடும்பத்தையும் விட்டுவிடவில்லை. அவரின் இரண்டு மாதக் கைக்குழந்தை குடித்த பாலில் விசம் கல‌ந்திருந்தது. அண்ணனும் தம்பியும் இறந்த பிறகும் உயிரோடு இருக்கும் அக்குழந்தையின் உயரம் இன்று வரை மூன்றரை அடி. பராசரனுக்கு ஊமைச் சோசியன் கிறுக்கியதாக நான் ஊகித்தது - பால் குறைக்கும் இடை. இதை ஊமைச் சோசியன் கிறுக்கிய படத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள், புரியும்.

அபூர்வ சகோதரர்கள் அப்பு கதை போல் இருந்தாலும், ஊமைச் சோசியன் கிறுக்கியதை இதுவரை பராசரன் சம்மந்தப் பட்டவ‌ர்கள் புரிந்து கொண்டதில்லை. தனது திருமணத்தைப் பற்றி நினைவுகூறும் போதெல்லாம் ஊமைச் சோசியனுடன் விளையாடிக் கொண்டிருந்ததையும் மறக்காமல் சொல்லி இருக்கிறார். இதேபோல்தான் எல்லா ஊர்களும். வருடத்திற்கு ஒருமுறை தங்கள் ஊரில் வாழ்ந்துபோன ஒருவரை 366 ஊர்கள் எந்த நிலையிலும் சந்தேகிக்கவில்லை என்பது மிகப்பெரிய ஆச்சரியம். ஊமைச் சோசியனின் கிறுக்கல்களைத் தங்கள் எதிர்காலத்தில் எதிர்பார்க்கவோ அல்லது இறந்தகால‌த்துடன் சம்மந்தப்படுத்திப் பார்க்கவோ யாருக்குமே தோன்றியிருக்கவில்லை. ஊமைச் சோசியன் ஒவ்வொரு வருடமும் ஒரே தேதியில் வந்து போனதையே ஒரு சில வருடங்கள் கழித்துத்தான் கவனித்து இருக்கிறார்கள். இந்த வினோத வாடிக்கையை ஒரு கிறுக்கனிடம் ஏன் கேட்க வேண்டும் என யாருமே கேட்காமல் வெறுமனே அவரை வேடிக்கை பார்த்துப் போனதும் வினோதமே.

பிப்ரவரி 19 - பாச்சல் - கந்தபலவேசம் (1976) - மூப்பு இணையும் இடம். ஜீலை 28 - கூடாரம் - தையல்நாயகி (1983) - தோல் பிரிக்கும் மந்தை. இப்படி பல உதாரணங்கள். ஆனாலும் இந்தக் கணிக்கும் சக்திக்காக ஊமைச் சோசியனை நான் ஆச்சரியப் பட்டதில்லை. ஏன் என்றால் எனக்கு நாஸ்டர்டாமஸ் தெரியும். 400 வருடங்களுக்கு முன்னால், உலகில் நடக்கப் போகும் முக்கிய நிகழ்வுகளைக் கணித்துச் சொன்னவர். இன்றுவரை அவருக்கு அச்சக்தி எப்படி வந்ததென்று யாருக்குமே தெரியாது. டம்ளரில் தண்ணீரை ஊற்றி வைத்தால், தேவதூத‌ர் ஒருவர் அதில் படம் காட்டுவதாகச் சொல்வார். அவரை முதன்முதலில் பிரபலமாக்கிய சம்பவம் உங்களுக்குத் தெரியுமா? ஓர் அரசனின் ஏழு ஆண் குழந்தைகளும் அரசாளும் என்றார். சந்தோசத்தில் மூழ்கிப் போனான் அரசன். அதே போல் ஏழு குழந்தைகளும் தனித்தனியே அரசாண்டன, உடன்பிறந்தவர்களைக் கொன்றுவிட்டு. அதே மாதிரி ஊமைச் சோசியனும் நெற்குப்பை என்ற‌ ஊரில் செய்திருக்கிறார். கொஞ்ச‌ம் பொறுங்க‌ள். த‌மிழ்நாட்டு வ‌ரைப‌ட‌த்தை வைத்து உங்க‌ளுக்குப் புரிகிற‌ மாதிரி சொல்கிறேன்.

நெற்குப்பை நெற்குப்பை நெற்குப்பை... இதோ இருக்கிறது. 1 2 3... 38. 38 என்றால் பிப்ரவரி 7. பிப்ரவரி 7 அன்று டைரியில் என்ன இருக்கிறது என்று பாருங்கள். பிப்ரவரி 7 - நெற்குப்பை - போதும்பொண்ணு (1974) - பத்தும் செய்யும் ஆறு. நெற்குப்பையில் 1974 பிப்ரவரி 7 அன்று போதும்பொண்ணு என்ற‌ 3 மாதக் குழந்தைக்கு, ஊமைச் சோசியன் கிறுக்கியதாக நான் ஊகித்தது. 5 மூத்தவர்கள் பிழைக்காமல் 6வதாக தப்பிப் பிழைத்தவள். 20 வயதுக்குள் அவளுக்குப் 10 திருமணங்கள். கன்னி கழிவதற்குள் கட்டியவன் எல்லாம் காலி. 11வதாக‌ ஒருவன் தைரியமாக முன்வந்தும் அவள் விதியோடு விளையாட விரும்பாமல் கன்னியாகவே இருந்து கொண்டிருக்கிறாள். தன்னைத் தானே தீண்டத் தகாதவளாக ஒதுக்கிக் கொண்டு வாழும் அவளை ஒருமுறை சந்தித்தேன். பட்ட காலிலே படும் என்ற இயற்கையின் இந்த வினோதமான‌ அற்ப கொள்கைக்குச் சாட்சியாய் இன்னும் நிற்கிறாள். ஒருச்சாமி ரெண்டுச்சாமி மூணுச்சாமி, இந்த ஆறுச்சாமியின் கதைகூட கிட்டத்தட்ட நாஸ்டர்டாமஸ் சொன்ன அரசன் கதை மாதிரி தான்.

நடந்த நிக‌ழ்ச்சிகளை நாஸ்டர்டாமஸ் சொன்னவற்றுடன் ஒப்பிட்டுப் புரிந்து கொண்டார்கள். அதைத்தான் ஊமைச் சோசியன் விசயத்திலும் நான் செய்து கொண்டு இருக்கிறேன். இவர் சம்மந்தப்பட்ட ஆட்களிடமே நேரடியாகக் கிறுக்கி இருக்கிறார்; படிக்கத் தெரிந்தவர்களுக்கு எழுதியும் காட்டியிருக்கிறார். நாஸ்டர்டாமஸின் கவிதைகள் யாருக்கானவை என்று முன்கூட்டியே தெரிவதில்லை. 366 கிராமங்கள் என தன் எல்லையை இவரே தேர்ந்தெடுத்துக் கொண்டார். அவர் அப்படியல்ல. நாஸ்டர்டாமஸ் தன் கல்லறையைத் தோண்டப் போகிறவர்களின் முடிவைக் கூட சொல்லி இருக்கிறார். ஊமைச் சோசியன் பற்றி ஒரு குறிப்பு கூட கிடையாது. அது மட்டுமில்லாமல், இவர் எல்லா நாட்களிலும் எல்லா ஊர்களிலும் கிறுக்கி இருக்கவில்லை. குறைந்தபட்சம் ஊருக்கு ஒருவர் வீதம், கிறுக்கப் பட்டவர்களின் வாழ்க்கையை மொத்தமாகக் கேட்டு, கிறுக்கல்களைச் சரியான இடத்தில் பொருத்தி வைத்திருக்கிறேன். கிறுக்கப் பட்டவர்கள் எவருக்கும் இந்த ஆச்சரியம் தெரியவே தெரியாது. அவர்களுக்குள்ளும் ஊர்களுக்குள்ளும் எந்த ஒற்றுமையும் கிடையாது. கூட்டிக் கழித்துப் பார்க்கையில் நாஸ்டர்டாமஸ் என்பவ‌ரின் உள்ளூர் வடிவமே ஊமைச் சோசியன் என்பதால் கணிக்கும் திறனும் ஆச்சரியப் படுத்தவில்லை. ஞாபகசக்திக்காகவும் பிரமித்தது இல்லை. அவரிடம் இருந்த இன்னொரு திறமைக்காகத் தான் நான் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டு இருக்கிறேன். புரியவில்லையா?

தமிழ்நாட்டு வரைபடத்தில் ஊமைச் சோசியனின் 366 ஊர்களைக் காட்டுகிறேன். உங்களுக்கே புரியும். ஜனவரி 1 மால்வாய். 2 மணவாசி. 3 தோகூர். 4 எசனை. 5 அண்டமி. 6 பேலுக்குறிச்சி. 7 ஏனாதி. 8 ஆலக்குமுனை... இப்போது புரிகிறதா அவரின் திட்டமிட்ட பாதை? அடுத்தடுத்த ஊர்கள் சம தொலைவில் இருக்கின்றன. ஒரு முழுப் பெண்ணை மூன்றே கோடுகளில் வரைந்த எம் எஃப் ஹீஸைன் போல், சம அளவுள்ள 366 அல்லது 365 கோட்டுத் துண்டுகளைப் பறவைப் பார்வையில் இணைத்தது போல், ஒரு மூடப்பட்ட ஒழுங்கான அந்த‌ உருவத்தைத் தனது பயணத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் உருவாக்கிய ஊமைச் சோசியனை ஒரு சாதாரண நாடோடியாக‌ மட்டும் என்னால் பார்க்க முடியவில்லை. பூகோளத்தை ஒரு புதிராக அணுகிய‌ அந்த ஊமைச் சோசியன் ஒரு நடமாடும் மர்மம்.

(வழக்கம்போல் சற்றே இடைவெளி எடுத்துகொண்டு, கொஞ்சம் மனநிலையை மாற்றிக்கொண்டு தொடருங்கள்)

இன்று மார்ச் 21, 2012. உலகம் முழுக்க இரவும் பகலும் சமமாய் இருக்கும் வருடத்தின் இரண்டு நாட்களில் இன்றும் ஒன்று. மார்ச் 21க்கு டைரி என்ன சொல்கிறது? மார்ச் 21 - பொன்னிரை - இரஞ்சிதம் (1945) - தலை சாயும் பேடைகள். ஆபிரகாமின் கொள்ளுப் பேரன் ஜோசப்பின் கனவில் வந்ததுபோல் சில வைக்கோல் கட்டுகளை நிமிர்த்தி வைத்தும் சாய்த்து வைத்தும் ஏதோ ஊமைச் சோசியன் கிறுக்கியதாக இரஞ்சிதம் பாட்டி சொல்வாள். இரஞ்சிதத்தின் நான்கு பெண்களுக்கும் தலைப் பிள்ளைகள் இறந்தே பிறந்தன. மகள்களைப் போல ஆகிவிடுமோ என மகனின் முதல் பிள்ளையைப் பயத்தோடு எதிர்பார்த்தனர். அவன் சாகவில்லை. சாதலின் எதிர்பார்த்தல்களுடன் வாழவந்த‌ அவன் இப்போது உங்களுக்குக் கதை சொல்லிக் கொண்டு இருக்கிறான்.

அத்தைகள் அனைவருக்கும் ஒரே மாதிரி நடந்த‌ சோகத்திற்கு, பழங்கதை பேசுபவர்கள் எல்லாரும் பரிதாபப் படுவார்கள். ஊமைச் சோசியனைப் பற்றி ஊரில் பேச்சு வரும்போது எல்லாம், தலை சாயும் பேடைகள் என்று எழுதியதையும், வைக்கோல் கட்டுகளைக் கிறுக்கியதையும் பாட்டியும் தாத்தாவும் சொல்வார்க‌ள். இந்தத் தனித்தனி சம்பவங்களை ஏனோ சம்மந்தப்படுத்தி, முதல் முறையாக அடுத்த மார்ச் 21க்கு ஊமைச் சோசியன் வரவை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தேன். கடந்த 4 வருடங்களாக அவர் வருவதில்லை என எனக்கு பிறகுதான் தெரிந்தது. தகப்பனில் இருந்து மகள்கள் மூலம் மூத்த பேரன்களுக்குப் பரவும் Rh காரணி பற்றி பின்னாளில் தெரியவர, அத்தைகளின் பொதுவான சோகத்திற்குப் பகுத்தறிவு கொடுத்து ஒதுக்கி வைத்தேன். அவை எப்படி 20 வருடங்களுக்கு முன் அவரால் 100% துல்லியமாக நிகழ்தகவு 1 எனச் சொல்ல முடிந்தது என்றும் நான் மேற்கொண்டு யோசிக்கவில்லை.

மார்ச் 20 விலந்தை, மார்ச் 22 சங்கொடி என்று எங்கள் ஊருக்கு எதிரெதிர் திசையில் உள்ள இரண்டு ஊர்களுக்கும் அவர் போய் இருக்கிறார் என்று தெரிய வந்தபோதுதான் எனக்குக் கொஞ்சம் சந்தேகம் வந்தது. அக்கம் பக்கத்தில் இன்னும் சில ஊர்களை விசாரிக்கையில், சங்கிலிபோல் ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் ஊர். படிப்பு வேலைகளுக்கு இடையே நேரமும் பணமும் ஒதுக்கி ஊமைச் சோசியனைத் தேட ஆரம்பித்தேன். 2006 2007 என‌ இர‌ண்டு முழு வ‌ருட‌ங்க‌ள் செல‌வ‌ழித்து இந்த‌ டைரியின் த‌க‌வ‌ல்க‌ளைச் சேக‌ரித்தேன். எதிர்பார்த்த‌ப‌டியே 366 த‌னித்த‌னி ஊர்கள் அந்த மனிதன் வருடந்தோறும் போய் இருக்கிறார். என் இல‌க்குப்ப‌டி குறைந்த‌து ஊருக்கு ஒரு த‌க‌வ‌ல் சேக‌ரித்தேன். தகவல்களை ஒழுங்குபடுத்தி இந்த டைரிக்கு மாற்றி, தமிழ்நாட்டு வரைபடத்தில் அவ்வூர்களைப் பார்த்த போது தான், அவை சம தூரத்தில் இருப்பது தெரிந்தது. பறவைப் பார்வையில் ஓர் ஒழுங்கான உருவத்தை உருவாக்கிய ஊமைச் சோசியனின் பாதை பிரமிக்க வைத்தது.

நாஸ்டர்டாம்ஸ் இறந்தபோது அவரின் சவப்பெட்டியில் எதிர்காலத் தேதி ஒன்றைப் பொறிக்கச் சொன்னாராம். அவரின் புகழ் பரவி, அவர் மண்டை ஓட்டில் ஒயின் குடித்தால் அவரின் சக்தி கிடைக்குமென வதந்தி பரவ இரண்டு பேர் கல்லறையைத் தோண்டப் போய், அன்றைய தேதி சவப்பெட்டியில் எழுதி இருந்ததாம். பயந்து ஓடிப் போனவர்கள், கல்லறை திரும்பவும் மூடப்படும்முன் இறந்து போனார்கள். ஊமைச் சோசியனைத் தேடும் எனக்கும் இக்கதை தெரியும். கடவுள்களைக் கூட பூமிக்குக் கொண்டு வருவதற்கும் அடையாளம் காட்டுவதற்கும் சாதாரண மனிதர்கள் பிரத்யேகமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டதைத்தான் உலகின் பெரும்பாலான மதங்கள் சொல்கின்றன. ஊமைச் சோசியன் என்ற ஒருவரை உலகிற்கு அடையாளம் காட்டுவதற்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டவன் நான் என நினைத்துக் கொண்டேன். ஒலிம்பிக் தீபம் போல் யாருக்கும் எளிதில் கிடைக்காத காரியம் இது. இப்போது என் கையில். அணைக்கும் வரை அல்லது இன்னொருவன் கையில் ஒப்படைக்கும் வரை நான் தான் ஓடவேண்டும்.

மைக்கேல் லோலிடொ என்பவருக்கு மனிதக்குடல் ஜீரணிக்க முடியாத பொருட்க‌ள் தான் தினசரி உணவு. ஓர் ஆகாய விமானத்தை இரண்டு ஆண்டுகள் சாப்பிட்டு வியக்க வைத்தவர். அவருடைய அந்த வித்தியாசமான திறமைக்குக் காரணமாக அவர் பிறந்த நேரத்தைக் கூறுவார்கள். 1950 ஜூன் 15. 20ம் நூற்றாண்டின் மைய நாள். அவர் பிறந்த நேரம் 20ம் நூற்றாண்டின் மைய நேரம். இதுபோல ஊமைச் சோசியனுக்கும் தேதிகளுக்கும் கண்டிப்பாக ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாக ஆழமாக நம்பினேன். நான் முதலில் சந்தேகித்த ஊர் உஞ்சினி. பிப்ரவரி 28 மேவணி. பிப்ரவரி 29 உஞ்சினி. மார்ச் 1 வாங்கல். மார்ச் 2 மடிகை. பறவைப் பார்வையில் பார்த்தால் இந்த நான்கு ஊர்களும் சாய்சதுர முனைகள். மேவணி உஞ்சினி வாங்கல் இவை மூன்றும் ஒரு சமபக்க முக்கோண முனைகள். உஞ்சினி வாங்கல் மடிகை இவை மூன்றும் ஒரு சமபக்க முக்கோண முனைகள். நான்கு வருடங்களுக்கு ஒருமுறை உஞ்சினி போய் இருக்கிறார். காலத்தைத் தமிழில் பின்பற்றும் மக்களை ஆங்கிலத்தில் தேடிப்போன ஊமைச் சோசியன் அதிகமாகக் குழப்பினார். அப்படி என்னதான் அங்கு இருக்கிறது? திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு வாரம் சுற்றினேன். உருப்படியாக ஒன்றும் கிடைக்கவில்லை. அந்த ஊர்களும் மனிதர்களும் மற்ற ஊர்களில் இருந்து அப்படி ஒன்றும் பெரிதாக வித்தியாசப் படவில்லை.

எல்லா சராசரி மனிதர்களும்தான் கழுவ மறந்த‌ சாப்பாட்டுத் தட்டைப் பார்த்து வருத்தப் படுகிறார்கள். அலெக்ஸாண்டர் பிளெமிங் என்ற ஓர் அசராசரி மனிதனால் மட்டும்தான் வருத்தத்தையும் மீறி சந்தோசமாக பெனிசிலின் கண்டுபிடிக்க முடிகிறது. எல்லா சராசரி மனிதர்களும்தான் கொல்லப்படுவது போல் கண்ட கனவில் இருந்து திடுக்கிட்டு எழுந்து சிறுநீர் கழித்துவிட்டு தூங்கிப் போகிறார்கள். ஓர் அசாசரியால் மட்டும்தான் கொல்லவந்த ஆயுதத்தில் இருந்து தையலூசி கண்டுபிடிக்க முடிகிறது. எல்லா சராசரி மனிதர்களும்தான் எட்டி உதைக்கப் படுகிறார்கள். ஓர் அசராசரியால் மட்டும்தான் குண்டடி படும்வரை ஓடிஓடி போராடி மகாத்மா ஆக முடிகிறது. நான் சராசரியும் இல்லை. அசராசரியும் இல்லை. சராசரி ஆழம் கணக்குப் போட்டு ஆற்றைக் கடக்கப்போய், சராசரிக்கு அதிகமான ஆழத்தில் மூழ்கப் போகும் அபாயத்தில் இருக்கும், சராசரிக்கும் அசராசரிக்கும் இடைப்பட்ட ஒரு பெயரிப்படாத பாதி மிதவை நிலையில் இருப்பவன் நான்.

அந்தரத்தில் பறப்பது, இறந்தவர்களுடன் பேசுவது போன்ற அசாதாரண செயல்களைச் செய்த டேனியல் டங்ளஸ் ஹோம் என்ற மனிதர் இருந்தார். இறந்து போன அவரின் நண்பன் எட்வினை வைத்துத் தான் அவற்றைச் செய்வதாகச் டேனியல் சொன்னார். அது போல ஊமைச் சோசியனுக்குப் பின்னாலும் யாரும் இருப்பார்களோ? ரைட் சகோதரர்கள் போல் கூட்டணி செயலோ? கிராமங்களைக் கடக்கும் போது இடையில் இருக்கும் சுடுகாடுகளில் குடுகுடுப்பைக்காரர்கள் போல் இறந்தவர்களிடம் கதை கேட்பாரோ? பல விதங்க‌ளில் யோசித்து இருக்கிறேன். ஊமைச் சோசியன் பிடிபடவே இல்லை.

எனது டைரிக் குறிப்புகளும், தமிழ்நாட்டு வரைபடத்தில் 367 கோடுகளில் நான் வரைந்திருக்கும் உருவமும், விதவிதமான மனிதர்களிடம் பேசக் கற்றுக் கொண்ட அனுபவமும், அவர்களின் முழுக் கதை கேட்ட அறிவும் வீண் போலத் தோன்றின‌. 1000 ஆண்டுகள் தாண்டியும் விழாது என மக்கள் நம்பும் தஞ்சை பெரிய கோவில் நிழலில் அமர்ந்திருந்த போது, விழாமல் ஆடும் தலையாட்டிப் பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தையைப் பார்த்து, திடீரென ஒரு சிந்தனை தோன்ற, தமிழ்நாட்டு வரைபடத்தை எடுத்து, 366 கோடுகள் வழியே வெறிகொண்டு கிழித்தேன். அவ்வுருவம் கொண்ட தமிழ்நாட்டுத் துண்டை மட்டும் வெட்டி எடுத்து, பேனா முனையில் நிறுத்த முடியுமா என்று பார்த்தேன். நின்றது அவ்வுருவம்! பேனா முனையில் நின்றது அவ்வுருவம்! நம்புக்குறிச்சி என்ற ஊரில் இருந்தது பேனா முனை. எனது டைரியில் இல்லாத ஊர்.

இன்றைய கரூர் மாவட்டத்தில் இருக்கும் நம்புக்குறிச்சி போனேன். ஊமைச் சோசியனைக் கடைசியாகப் பார்த்தவர்கள் சொன்ன அடையாளத்துடன் ஒரு மனிதரைப் பார்த்தேன். வாய்ப் பேச வரவில்லை. காது கேட்கவில்லை. விசக்கடி மருத்துவராக இருப்பதால் அந்த ஊரைவிட்டு வெளியூர் போகாதவர் என்று கேள்விப்பட்டவுடன் எனது கடைசி நம்பிக்கையும் நொறுங்கிப் போனது. எனது மன ஆறுதலுக்காக ஊமைச் சோசியனின் மொத்தக் கதையையும் அவரிடம் சைகை மொழியில் சொன்னேன். எந்த ஆறுதல் பேச்சும் எதிர்பாராமல் கிளம்பத் தயாரான என்னிடம் சில கேள்விகள் கேட்டார். ஊமைச் சோசியனுக்கு உண்மையிலேயே வாய்ப் பேச வராதா? காது கேட்காதா? என்னிடம் பதில் இல்லை. கோமல் என்ற ஊரில் சில வருடங்களுக்கு முன், தொடர் கொலைகள் செய்துவரும் குரங்கு மனிதன் என்று பயந்து, தன்னைப் போல் தோற்றமுடைய‌, மனநிலை பாதிக்கப் பட்டவர் போல இருந்த ஒருவரை ஊர்மக்கள் சேர்ந்து கொன்ற நிகழ்ச்சியை, ஒரு பழைய‌ செய்தித்தாளில் காட்டினார். டைரிப்படி அன்று ஊமைச் சோசியன் எட்டுக்கால்பட்டியில் இருந்திருக்கிறார். ஊமைச் சோசியன் என்ற ஒரு மர்மத்தைத் தேடிப் போனால் ஒவ்வொரு முறையும் இன்னொரு மர்மத்தின் அறிமுகத்துடன் திரும்பினேன்.

இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள பல்வேறு உயிரினங்களுக்கு இடையே நடக்கும் போராட்டத்தில், தன‌க்கென சில இனங்களை மட்டும் தேர்ந்தெடுத்து பாதுகாத்து தகவமைத்து, தன் இருப்பைத் தக்க வைத்துக் கொள்கிறது இயற்கை. தனது 20 ஆண்டுகள் ஆராய்ச்சியில் சார்லஸ் டார்வின் கண்டுபிடித்த இப்பரிணாமத் தத்துவத்தை, ஆல்ப்ரெட் ருசெல் வாலஸ் என்பவர் அப்படியே அச்சு பிசகாமல் வெளியிட பதறிப் போனார் டார்வின். இரண்டு பேரும் ஒரே விசயத்தைத் தனித்தனியே பல ஆண்டுகள் செய்து கொண்டிருந்ததைப் பார்த்து சிரித்துக் கொண்டார்கள். வாலஸ் பெருந்தன்மையுடன் விலகிக் கொள்ள பரிணாமத்தின் தந்தையாக நிலைத்தார் டார்வின். ஊமைச் சோசியனை என்னைப் போலவே வேறு யாராவது இப்படித் தேடிக் கொண்டிருப்பார்கள் என நானும் நீண்ட காலம் நம்பினேன்.

என்னையும் பதறிப் போகச் செய்யும்படி ஒரு சிறுகதை படித்தேன். ஒரு குடும்பத்தில் ஆண் இரட்டையர்கள் மட்டுமே பிறக்கிறார்கள். இளையவர்கள் மட்டுமே தலைமுறை தளைக்கச் செய்கிறார்கள். இளையவர்கள் எப்போதும் வாய்ப் பேச இயலாதவர்களாகவும் காது கேட்காதவர்களாகவும் பிறக்கிறார்கள். அக்குறைகள் இல்லாத மூத்தவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பின் வீட்டை விட்டு வெளியேறி அக்குறைகளுடன் நாடோடிகளாக‌ வாழ்கிறார்கள். முடிவற்ற அக்கதையை எனது ஊமைச் சோசியன் கதையுடன் ஆங்காங்கே இணைத்தால் ஒரு முழுமையான கதை கிடைத்தது. அக்கதாசிரியனைக் கண்டுபிடித்தேன்.

ஓர் உண்மை மனிதன் கதை என்றான். எனது பங்குக் கதை பற்றி எதுவும் சொல்லாமல் அவன் பங்குக் கதை பற்றி தெரிந்து கொள்ள எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. நான் எப்படி எனது குறிப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தயாரில்லையோ, அது போலவே அவனும் இருந்தான். வேறு வழியே இல்லாமல் எனது குறிப்புகளில் இருந்து சில சொன்னேன். ஊமைச் சோசியன் வரும் நாட்களில் அவ்வூர்களில் மழை பெய்ததில்லை; கெட்ட காரியமோ நல்ல காரியமோ நடந்ததில்லை; எல்லோரும் ஊரில் இருந்திருக்கிறார்கள். அவனது குறிப்புகளில் இல்லாத குறிப்புகள் இவையென அவன் பதறிப் போனான். எனது டைரிக் குறிப்புகள் அத்தனையும் சொன்னேன். அவனது சிறுகதையின் பின்புலம் சொன்னான்.

ஊமைச் சோசியன் நிமித்தம் ஓடப்போய் அவரையும் தாண்டி நாங்கள் நீண்ட தூரம் ஓடிவந்து விட்டோம். கோழிக்கோடு இரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் புட்டு சாப்பிட்டவுடன் தோன்றிய‌ C-K சிந்தனைக்குப் பின், நான் உங்களிடம் இதுவரை சொன்னவை எல்லாம், அவன் என்னிடம் சொன்ன அவனது டைரிக் குறிப்புகள். எனது சிறுகதையின் பின்புலக் குறிப்புகளைக் கேட்டபின் அவன் பெருந்தன்மையுடன் தோள் கொடுத்தான். அப்போது நான் டார்வின்; அவன் வாலஸ். ஓடிக் கொண்டிருக்கிறோம். இப்போது நாங்கள் ரைட் சகோதரர்கள். இன்னும் ஓடுவோம். முதலில் இறப்பவன் எட்வின்; இன்னொருவன் டேனியல். இறந்த பின்னும் நாங்கள் நாஸ்டர்டாமஸ். அதன்பிறகு எங்களைத் தேடப் போகிறவர்களுக்கு நாங்கள் விட்டுச் செல்லும் குறிப்புகளே இதுவரை நீங்கள் படித்தவை!

- ஞானசேகர்

Wednesday, February 22, 2012

ஒழியும் ஒழியும்

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
டிவியின் கண்ணே யுள.

- ஞானசேகர்

இல்லையேல் சாதல்

காதலர்களிடம் கேட்டார்க‌ள்:

கொடிதினும் கொடிதெது?
மரணம்
பிரித்து விடுவதால்.

அதனினும் கொடிது?
கட்டணக் கழிவறை
காசு வாங்கிப் பிரித்து விடுவதால்.

- ஞானசேகர்

Sunday, February 19, 2012

எல்லோர்க்கும் பெய்யும் மழை

பிரசாத வரிசை நிழலில்
சமைத்துக் கொண்டிருக்கிறான்
பிளாட்பாரவாசி.

- ஞானசேகர்

Friday, February 10, 2012

ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்

அழகான பெண்கள்
குழுமி இருந்த‌
புகைப்படத்தில்
முந்திக் கொண்டு
அவசர அவசரமாக‌
அறிமுகப் படுத்துகிறான்
நான் பார்த்திராத‌
அவன் புது மனைவியை.

‍- ஞானசேகர்

இரகசிய உருவகம்

ஒரு முறை
நான் ஓடையிடம்
கடலைப் பற்றிச் சொன்னேன்.
அது என்னை
ஒரு கற்பனாவாதியாக
நினைத்துக் கொண்டது.
ஒருமுறை
நான் கடலிடம்
ஓடையைப் பற்றிச் சொன்னேன்
அது என்னை
ஒரு குறுகிய புத்திக்காரனாக
நினைத்துக் கொண்டது.
- கலீல் கிப்ரான்

இரகசியங்கள் சொல்கையில்
நான் மிகவும் தடுமாறுகிறேன்

சில சமயங்களில்
உள்ளது உள்ளபடியே சொல்லப் போய்
ஓர் இரகசியத்திற்கான மரியாதை
சிறிதும் இன்றி
எளிதாக மறுக்கப்பட்டு விடுகின்றன‌

சில சமயங்களில்
இதெல்லாம் இரகசியமே இல்லை என்று
இரகசியங்களுக்கான எனது எல்லைக் கோடுகள்
மறு பரிசீலனை செய்யப்படுகின்றன‌

சில சமயங்களில்
தக்க காலத்தில் சொல்லப் படவில்லை என‌
மன்ற நடுவில் என்னைக் கூண்டில் ஏற்றி
விவாதிக்கப் படுகின்றன‌

சில சமயங்களில்
இரகசியங்களுக்கான மரியாதையுடன்
அங்கீகரிக்கப்பட்ட‌ பின்னும்
சாட்சி சொல்ல நான் அழைக்கையில்
மறுதலிக்கப் படுகின்றன‌


உண்மையிலேயே
இரகசியங்கள் சொல்கையில்
நான் மிகவும் தடுமாறுகிறேன்


அவற்றைப் பத்திரப் படுத்தும்
இன்னோர் இடத்தைத் தேடுவதை விட‌
அவற்றைச் சொல்வதற்கான‌
சொற்களின் தேடுதலில்
அதிக கவனம் செலுத்துகிறேன்
அதிக காலம் செலுத்துகிறேன்

பிரத்யேகச் சொற்களில்
இரகசியங்களை உருவகப் படுத்தும்போது
உவமேயத்தைப் பல உவமானங்களால்
நன்கு சுற்றிப் பத்திரப் படுத்துகிறேன்

எனது உவமேயத்தைப் போலவே
எனது உவமானங்களையும்
இரகசியங்களால் அலங்காரப் படுத்துகிறேன்

அவை ஒவ்வொன்றாய்
அவிழ்க்கப் படும்போது
உவமேயத்தின் மர்மத்தைக் கூட்டுவதில்
மிகுந்த கவனமாய் இருக்கிறேன்

கேட்கும் காதுகளின்
நம்பகத்தன்மைக்கு ஏற்ப‌
எனது உவமானங்களையும்
மாற்றி அமைக்கிறேன்

இரத்தம் சிவப்பானாலும்
மாற்றுகையில் தேவைப்படும்
பிரிவைப் போல்
பிறத்தியாரின் உவமானங்கள் குறித்தான‌
மறைநூல் போதனைகளை
ஆராய்கிறான் ஆத்திகன்

இல்லாத கடவுள் போல்
என் உவமானத்திலும்
உவமேயத்தின் இருப்பைச்
சந்தேகிக்கிறான் நாத்திகன்

பிரம்மச்சாரி அறையின்
விந்துக் கறை போல்
இலைமறை காய்கள் அதிகம்
எதிர்பார்க்கிறான் இல‌க்கிய‌வாதி

விவிலியம் கீதை குரான்
எல்லாமே ஒன்றுதான்
அவை போல் எனது உவமானங்களும்
என்கிறான் படிக்காதவன்

தேர்வுக்கு இல்லாத பகுதிகள் போல்
குறித்துக் கொள்ள மறுக்கிறான் படிப்பாளி

செல்லாக் காசு போல்
விட்டெறிகிறான் காரியவாதி


உண்மையிலேயே
இரகசியங்கள் சொல்கையில்
நான் மிகவும் தடுமாறுகிறேன்


உவமானங்களால்
சுற்றிச் சுற்றியே
பல சமயங்களில்
உவமேயங்களை
மறந்து விடுகிறேன்

ஆடையென உவமான‌ங்களை
அவிழ்த்துக் கொண்டு
என்னுடனேயே புதைக்கிறது
உவமேயங்களை உலகம்

உவமேயங்களைப்
புரிந்து கொள்ளாமல்
உவமானங்களில்
பூரித்துப் போகும் உலகம்
ஆடையற்றுத் தெரிகிறது
சவக்குழியில் இருந்து பார்க்கையில்!

- ஞானசேகர்

Sunday, February 05, 2012

மிகப்பெரிய குடியரசு நாடு

வெள்ளையனிடம் இருந்து வாங்கி
கொள்ளையனிடம் கொடுத்து விட்டோம்.
‍- யாரோ


(குடியரசு தினத்தன்று கண்ணில்பட்ட சில காட்சிகளின் பாதிப்பில் எழுதியது)

வேற்றுமையில் ஒற்றுமை என்பது
மதுவிலக்கு நாட்களுக்கான‌
மது தக்க வைத்தல்.

தேசப்பற்று என்பது
ஆட்சி விமர்சித்து
வரிசையில் முந்தல்.

தியாகம் என்பது
யானை விலைபோகும் கழுதையின்
குதிரைத் தள்ளுபடி வரிசையில் நிற்றல்.

சுதந்திரம் என்பது
விளம்பரப் பலகை
சாலையில் வைத்தல்.

சகோதரத்துவம் என்பது
நிதியிட்டவர்கள் பெயர்க‌ளுடன்
பட்டம் சூட்டி புகைப்படமிடல்.

ச‌ம‌த்துவ‌ம் என்ப‌து
மூவ‌ர்ண‌க் கொடியை அறுச‌ம‌க் கூறுக‌ளாக‌
அலைய‌டிக்க‌ வைத்த‌ல்.

நீதி என்பது
இரண்டாம் ஐந்தாம் அலைகளில்
அசோகச் சக்கரமிடல்.

சுயராச்சியம் என்பது
மூன்றாம் நான்காம் அலைக‌ளுக்கு இடையில்
க‌ட‌வுள் ப‌ட‌மிட‌ல்.

ச‌ம‌ய‌ச்சார்பின்மை என்பது
கடவுள் முகத்தில்
தலைவன் முகம் புதைத்தல்.

குடியரசு என்பது
ஆகஸ்ட் 15 ஜனவரி 26
இரண்டில் ஏதோ ஒன்று எனல்.

- ஞானசேகர்

Friday, January 13, 2012

26.12.2004 - ஆழிப்பேரலை

(5.5.2006 அன்று நண்பன் கல்வெட்டு பிரேம்குமாருக்காக எழுதியது)

சாவுக்குப் பயப்படாமல்
வாழ்ந்தவனின் வாழ்க்கையைச்
சாகடித்துப் போன
இயற்கையின் படுகொலை!

சாவுக்குப் பயந்தே
வாழ்ந்தவனின் வாழ்க்கையை
வாழவைத்துப் போன
இயற்கையின் தடுப்பு மருந்து!

சாவுக்கும் வேலையில்லை
கலியுலகான் வாழ்க்கையைச்
சந்தோஷங்களில் புதைத்துப்போன
இயற்கையின் எதார்த்தம்!

சாவுக்குக் காலமில்லை
கவலையற்றவன் வாழ்க்கையை
சற்றே நிறுத்தி நகரவைத்த
இயற்கையின் சிறுவிபத்து!

சாவுக்குத் தேதிகுறித்து
முடிவறியா வாழ்க்கையைக்
கூட்டிக் கழித்துக் கட்டம் போட்ட
இயற்கையின் இருபத்தியாறு!

சாவுக்குத் தயாராகும்
மூன்றாம் கோளின் வாழ்க்கையை
அடியில் ஆட்டிவைத்த
இயற்கையின் அறுவைச்சிகிச்சை!

- ஞானசேகர்