புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Thursday, November 15, 2012

குப்பைக் கோழித் தனிப்போர்

If you talk to God, you are praying; If God talks to you, you have schizophrenia. If the dead talk to you, you are a spiritualist; If you talk to the dead, you are a schizophrenic.
- Thomas Stephen Szasz


மரத்திலே தூங்கையில் வீழ்கின்ற பயம் இன்னும்
பழங்கனவாய் வருகிறது மரபணுவில் பதிவுற்று
- கமல்ஹாசன்


(பெண்ணுக்குப் பெயர் வைக்காத பிடிவாதத்துடன் இன்னுமொரு கதை)

ஓட்டு வாங்கி, ஓட்டு வங்கி, வங்கி ஓட்டை, ஓட்டைப் பிரித்து, ஓட்டை போட்டு, ஓட்டுப் போட்டு எனப் பல பரிமாண‌ங்கள் கொண்ட திருட்டு, எங்கள் ஊரையும் விட்டு வைக்கவில்லை. நகரத்தின் ஒரு மூ ஊ ஊ ஊ லையில் இருக்கும் எங்கள் நகரில் 50+ வீடுகள்; இன்னும் 10 முடியப் போகும் தருவாய்; 5க்கு அடிக்கல் தயார்; இன்றைக்கு இலட்சத்தைப் புதைத்தால் நாளைக்குக் கோடியாய்த் தோண்டலாம் என்ற கனவுகளுடன் எஞ்சிய நிலங்கள். 3 மாதங்களில் 4 வீடுகளில் திருட்டு. அவர்க‌ள் காட்டிய இழப்புக் கணக்கே இரட்டை இலக்க இலட்சங்கள். சட்டசபை ஓட்டுப் போட்டு முடித்த விரலோடு, சாரி, முடித்த கையோடு, சாரி, ஏதோ ஒரு ஓடு, கூடிப் பேசி வயசுப் பையன்களை வைத்து ஒரு குழு உண்டாக்கினார்கள். 8 பேர் அடங்கிய அக்குழுவிற்கு இரவில் எல்லையோரப் பாதுகாப்புப் பணி. எட்டில் நான்தான் நெட்டு குட்டு என்று சட்டு புட்டெனத் தலைவனாக்கி விட்டார்கள்.

இரவு பத்து மணிக்கு மின்சார‌ லைன் மாற்றிய பின் பத்தரை மணி போல் சேது எக்ஸ்ப்ரஸ் கடந்து போகும். அப்போது ட்யூட்டி ஆரம்பிக்க வேண்டும். மயிலாடுதுறை பேஸென்ஜர் அல்லது சூரியன் வந்தவுடன் ட்யூட்டி முடித்துக் கொள்ளலாம். குடுகுடுப்பைக் காரர்களுக்கு அனுமதியில்லை. செல்போன்கள் சத்தம் அனுமதில்லை. பாதுகாப்புப் பணி என்பதற்காக ஏதாவது ஒரு வீட்டிற்குள் நுழைந்து யாரையாவது தரதரவென வெளியே இழுத்து வருவதற்கெல்லாம் அனுமதியில்லை. கூர்க்காவிற்குக் கூட தெரியாமல் கடமையில் கண்ணியமாக இருந்தோம். எல்லோருக்கும் ஒரு டார்ச் லைட்; ஒரு விசில்; தேநீர் தயாரித்துக் கொள்ள தேவையான பொருட்கள். ஒருவன் பார்வை எல்லைக்குள் முன்னே ஒருவனும் பின்னே ஒருவனும் இருக்கும்படி நகர்வலம் வருவோம். ஆரம்ப நாட்களில் எங்களைப் பார்த்து குரைத்த நாய்கள் போகப் போக குரைக்கவுமில்லை கடிக்கவுமில்லை.

சில இரவுகளில் பீர் குடிக்கும் அளவிற்கு இருட்டும் ட்யூட்டியும் பிடித்துப் போய் இருந்தன‌. தூக்கம் வரும்போது திருட்டுக் கதைகள் பகிர்ந்து கொள்வோம். சாமி உண்டியல் திருடி எல்லை தாண்டுவதற்குள் செத்துப் போன கதை. திருடர்களுக்கும் நியாய தர்மங்கள் உண்டென்று, திறந்தே கிடந்தாலும் பீரோவைத் திருப்பி வைத்து உடைத்துத் திருடும் கதை. 'தலீவா, ஒன்னோட வீடுன்னு தெரியாம நொய்ஞ்சிட்டேன் தலீவா' என்று ரஜினிகாந்த் வீட்டில் திருடிய மறுநாள் சரணடைந்த கதை. தாலியைப் பறித்தவனை வீட்டுக்குள் பூட்டிப்போட, அவன் தொட்டில் குழந்தை கழுத்தறுத்த கதை. இது போன்ற சின்னச் சின்ன திருட்டுக் கதைகள் பகிர்ந்து கொள்வோம். சட்டமன்றம் நாடாளுமன்றம் பள்ளி கல்லூரி ஆசிரமம் போன்ற பெரிய பெரிய கதைகள் எல்லாம் பேசுவதில்லை.

திருந்தி விட்டார்களா அல்லது உள்ளாட்சித் தேர்தல்களில் குதிக்கப் போய்விட்டார்களா தெரியவில்லை, நாங்கள் நகர்வலம் வர ஆரம்பித்த நாட்களில் திருடர்கள் யாரும் வரவில்லை. அடிக்கடி இரவில் எழுப்பிவிடும் மின்வெட்டில் மக்கள் விழித்திருந்ததும் திருட்டுக் குறைந்து போனதற்குக் காரணமாக இருக்கலாம். எதுவாக‌ இருந்தாலும் சரி, காகம் அமர‌ பனம்பழம் விழுந்த கதையாய் எங்கள் குழுவிற்கு நற்பெயர் கிடைத்ததில் மகிழ்ச்சி. இதைப் படிக்கும் சிலபேர் இவ்வுவமையில் என்னைக் காகமாய் உருவகித்து கதையின் ஓட்டத்தைக் கெடுப்பது போல், எங்கள் குழுவின் மகிழ்ச்சிக்கும் கெடுதல் வந்தது; வந்தன.

உலகப் புகழ் பெற வேண்டிய எங்கள் குழு ஒரு கிழவியால் முதன்முறை உடைந்தது. அன்னிய சக்திகளின் சதி. அன்னியம் என்றால் இரண்டு மாவட்டங்கள் தூரம். நாமக்கல் மாவட்டத்தில் ஏதோ வயசுப் பெண் ஒருத்தி அம்மை வந்து தாகத்தில் தண்ணீர் கேட்டிருக்கிறாள். அவள் பாட்டி தண்ணீர் கொண்டு வந்து தாகம் தீர்ப்பதற்குள் வயசுப் பெண்ணின் ஆயுசு தீர்ந்து போய்விட்டது. எமன் பட்டியலில் பேத்திக்கு அடுத்து பாட்டி. பாட்டியும் பேத்தியும் ஊரூராகப் போய் இரவில் கண்ணில் படுபவர்களிடம் தண்ணீர் கேட்பார்களாம். பாட்டி மேல் இரக்கப்பட்டோ பேத்தி மேல் கிரக்கப்பட்டோ சொம்பில் தண்ணீர் கொண்டு வந்தால், மறுநாள் காலை சொம்பிலேயே இரத்தம் கறக்கப்பட்டுச் செத்துக் கிடப்பது வழக்கம்.

பல ஊர்களுக்குப் போன இந்நற்செய்தி செய்தித்தாள்களின் இடைய
றாத முயற்சி மூலம் எங்கள் ஊருக்கும் வந்திருந்தது. பல ஊர்களுக்குப் போன பாட்டியும் பேத்தியும் எங்கள் மாவட்டத்திற்குள் நுழைந்ததற்கான அறிகுறிகள் பற்றிய குறுந்தகவல் செய்திகள் கசிந்தவுடன், அஞ்ஞாயிறு இரவு பத்து மணிக்கு மின்சார‌ லைன் மாற்றிய பின் பத்தரை மணி போல் சேது எக்ஸ்ப்ரஸ் கடந்த பிறகும் யாரும் ட்யூட்டிக்கு வரவில்லை. நான் மட்டும் கேள்விக்குறியாய்த் தனியாய் நின்று கொண்டிருந்தேன். மற்ற 7 பேர்களின் வீட்டிற்கே போய் விசாரித்தேன்.
8. 'இஸ்ரோ இன்டர்வியூ இருக்கு. நாளைக்கிக் கெளம்பணும்'
7. 'களவும் கற்று மற'
6. 'விஜய் டீவி நீயா நானா நல்லாப் போய்ட்டு இருக்கு'
5. 'ராத்திரி கண் முழிப்பது ஆந்தையின் தகவமைப்பு'
4. 'மார்கழிப் பனி'
3. 'மத்த எல்லாரும் வந்துட்டாங்களா?'
2. 'திருடனாய்ப் பாத்து திருந்தாம திருட்டு ஒழிஞ்சதா சரித்திரம் இருக்கா?'
1. ?

நான் மட்டும் தான் வேலை இல்லாமல் இருக்கிறேனா? சிங்கப்பூர் விசா வாங்க 25 வயதாகக் காத்திருந்தேன். பின் உலகப் பொருளாதார மந்தநிலை என்ற மாயநிலை மறைய ஒரு வருடம் காத்திருந்தேன். இப்போது விமான டிக்கெட்டிற்காகக் காத்திருக்கும் நேரத்தில் ஊருக்கு நல்லது செய்யலாம் என்று வந்தால், ச்சே. என்னையும் தான் வீட்டில் தடுத்தார்கள். மக்கள் வாய்ப்பு கொடுத்தபின் சபைக்குப் போகாதவன் தலைவனா, என்று வீராப்பாய்ப் பேசிவிட்டு வந்தேன். ஒரு செத்த கிழவிக்குப் பயப்படும் கூட்டத்திற்குத் தலைவனாய் இருப்ப‌தை எண்ணி நொந்து கொண்டேன். திடீரென இரவில் தூங்கச் சொன்னால் எப்படி வரும்? சுடுகாட்டிற்குப் பக்கத்தில் ஆழ்துளை கிணறு போடுபவர்களுடன் பேசிக் கொண்டே அவ்விரவைக் கழித்தேன். தனிமரம் தோப்பில்லை; குழு புதைந்து போனது. குழு புதைந்த மூன்றாம் நாளில் உயிர்த்தும் எழுந்தது. காரணம், இரண்டாம் நாளில் ஒரு திருட்டு. பழையன மறந்து மீண்டும் குழுவின் நற்பெயரை மீட்டெடுத்து கோலோச்சினோம். நூறாண்டு சாதனைகளை ஓராண்டில் செய்யலாம் என்று கணக்குப் போட்டால், ஒரு மாதம் கூட எங்கள் ஆட்சி நிலைக்கவில்லை.

ஸ்காட்லாந்து காவல்துறை அளவிற்கு உலகப் புகழ் பெற வேண்டிய எங்கள் குழு இரண்டாம் முறை உடைந்தது. எல்லா அழிவுகளுக்கும் பாகிஸ்தானைக் காட்டும் இந்தியா போல, அன்னிய சக்தி இம்முறை காரணமல்ல. வளவன் சாரின் மகள். அப்படி இப்படி அங்கொன்றும் இங்கொன்றும் அரசல் புரசலாக காதுவிட்டுக் காது போய்க் கொண்டிருந்த அவ்விசயம், முதலில் எங்கள் குழுவைக் கலைத்துவிட்டு, மாசி அமாவாசை இரவன்று எங்கள் நகர் மக்களில் முக்கிய மனிதர்களை வளவன் சார் வீட்டிற்கு அனுப்பி வைத்தது. நானும் வளவன் சாரும் அப்போது கேரம் போர்டு விளையாடிக் கொண்டு இருந்தோம்.

'சார் மணி 8 ஆச்சு சார். 9 மணி ஆனாலும் செவப்புக் காயினப் போட முடியாதுன்னு நெனக்கிறேன்'
'வெளையாடுடா. கேரம்ல திருடன் போலீஸ் ஆட்டம்னா சும்மாவா?'
கறுப்பு திருடன். வெள்ளை போலீஸ். சிவப்பு கமிஷ்னர். தனியாக‌ போட்ட‌ எந்தக் காயினையும் நடுவில் வைக்க வேண்டும். முதலில் கறுப்புத்தான் போட வேண்டும். அடுத்து வெள்ளை போட்டால் தான் இரண்டையும் எடுத்துக் கொள்ளலாம். சிவப்பு வேண்டும் என்றால், முதலில் கறுப்பு போட்டு அடுத்து வெள்ளை போட்டு கடைசியில் சிவப்பு போட வேண்டும். இந்த அடிப்படை விதிகளிலேயே டப்பா டான்ஸாட வைக்கும் விளையாட்டு இது. இதில் மைனஸ் விழுந்தால் கேட்கவே வேண்டாம்.
'என்ன சார், டார்ச் லைட்டோட யாரோ வர்றாங்க. எங்க அப்பாவும் வர்றாரு சார்'
வந்தவர்கள் விசயத்தை நேரடியாக ஆரம்பிக்காமல், இருட்டில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் விளையாடிக் கொண்டிருப்பதை எல்லாம் விசாரித்தார்கள். மின்வெட்டில் புழுக்கம் தாங்காமல் வந்திருக்கிறார்கள் என நாங்கள் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்தோம்.

'சார் நம்ம ஏரியாவுல பேய் நடமாட்டம் கொஞ்ச நாளாவே இருக்கு'
'காத்துக் கறுப்பா?' என்று கேட்டுக் கொண்டே கறுப்பு போட்டார்.
'ஒரு தடவ இல்ல ரெண்டு தடவ இல்ல, பல தடவ நம்ம ஏரியா மக்களே பாத்து இருக்காங்க'
'வெள்ளடா பாத்துக்க' என்று வெள்ளையும் போட்டு விட்டார்.
'பாத்தவங்க சொல்ற அடையாளத்தப் பாத்தா ஒங்க பொண்ணு மாதிரி தெரியுது சார்'
வளவன் சாருக்குப் பின்னால் இருந்த சிவப்பு, சர்ர்ர்ரென்று முன்னால் வந்து இடப்பக்கக் குழிக்குள் விழப் போவது போல் வே ஏ ஏ ஏ கமாய்ப் போய் தொங்கிக் கொண்டது. இவ்வளவு நேர ஆட்டத்தின் விருவிருப்பான கட்டத்தைக் கண்ட ஆச்சரியம் எதுவும் இல்லாமல் கேரம் போர்டில் இருந்த எங்கள் கவனத்தை விடுவித்துக் கொண்டோம். வந்தவர்கள் மாறி மாறிப் பேசினார்கள்.

சாட்சி 1: தமிழ் டீச்சர் பையன். இரண்டாம் காட்சி படம் பார்த்துவிட்டு திரும்புகையில் இரவு ஒரு மணிபோல் ஒரு பெண் தலைவிரி கோலமாய் நின்றிருக்கிறாள். யாரது யாரது என‌க் கேட்டுக் கொண்டே அவள் பின்னாலேயே போயிருக்கிறான். திடீரென மறைந்து போனாள். அவன் நின்ற இடம் சுடுகாடு. தலைதெறிக்க ஓடி வந்து விட்டான்.

சிவனே என்று சுவருக்குச் சேலை கட்டி வைத்தாலும் அவிழ்த்துப் பார்ப்பவன் இவன். தண்ணீர் மேல் சாராயம் என்று எழுதி வைத்தாலே 7 லிட்டர் குடிப்பான்.

சாட்சி 2: அரசுப் பேருந்து நடத்துனர் மனைவி. வளவன் சார் வீட்டிற்குப் பக்கத்து வீடு. இரண்டு வீட்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் இரவில் ஒருநாள் பிம்பம் நகர்வதைப் பார்த்திருக்கிறாள். சன்னலைத் திறந்து பார்த்தால், பாவம், பாதம் இல்லாமல் ஒரு பெண். யாரென்று விசாரித்ததற்கு, அப்பாவைப் பார்க்க வந்திருப்பதாக சொல்லி, வளவன் சார் வீட்டுச் சன்னலில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாளாம். வேளாங்கண்ணி மாதாவிற்கு மாலை போட்டிருந்ததால் அவளை ஒன்றும் செய்யவில்லையாம். இல்லையென்றால்...

கடவுளர்கள் பால் குடிப்பதற்கும் இரத்தக்கண்ணீர் வடிப்பதற்கும் கனவில் வந்து நோட்டீஸ் அடிப்பதற்கும் விளம்பரம் செய்யும் ஆன்மீக மாடல்கள் இவர்கள். இவள் பேசி முடித்த‌வுடன், தன் கண்ணில் பட்டால் பிடாரிக் கோயிலில் கட்டிப்போட்டு விடுவதாக ஒரு ஆண் மாடல் சேர்ந்து கொண்டார்.

சாட்சி 3: நடு ராத்திரியில் எல்லா நாய்களும் வளவன் சார் வீட்டைப் பார்த்துத்தான் குரைக்கின்றன‌. சிறுநீர் கழிக்க வெளியே வந்தபோது, வளவன் சார் வீட்டு வாசல் வழியாக ஒரு பெண் தலைவிரி கோலமாய் நடந்து போனாள்.

நாய்க் குரைப்பதில் கூட பங்கு கேட்கும் விசித்திர உலகம்!

அடுத்தடுத்த சாட்சிகளுக்கு நான் காது கொடுக்கவில்லை. ஸ்ட்ரைக்கரைத் திருப்பித் திருப்பிப் பார்த்து எந்தக் கறுப்பை அடிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். தென்னங்கீற்றுக்கும் ஆன்டெனா கம்பிக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் எல்லாம் சாட்சி சொன்னார்கள். கூர்க்கா என்றொரு இனமுண்டு தனியே அதற்கொரு குணமுண்டு, என்று தெரியாதவர்கள் எல்லாம் வழி மொழிந்தார்கள். இரவில் இயங்கும் உயிரினங்கள் பற்றி தெரியாதவர்கள் எல்லாம் பகலில் கூட நடமாட ப‌யமாய் இருப்பதாய்ச் சொன்னார்கள். ஏற்கனவே திருடர்கள் நடமாட்டம் உள்ள இப்பகுதியில் இதுபோன்ற சப்பை சாட்சிகளைக் கேட்டு நானும் வளவன் சாரும் சிரித்துக் கொண்டோம்.

எங்கள் நக்கலைப் பார்த்து சினமான புது கவுன்சிலர் பிரம்மாஸ்திரம் எடுத்தார். 'இவ்வளவு ஏன் சார். ஓங்க வீட்டுக்கு நேராப் பின்னால ஒரு வீடு கட்டிக்கிட்டு இருக்காங்களே, அஞ்சாறு மாசமா ஒரு வேலையும் நடக்கல. அந்த வீட்டுல ராத்திரி நேரத்துல ஒரு பொண்ணு தலய விரிச்சுப் போட்டுக்கிட்டு ஒக்காந்து இருக்கிறத வெளியூர் சனங்க கூட நெறைய பேரு பாத்து இருக்காங்க‌. நீங்க வயசுல பெரியவரு. இருந்தாலும் எல்லாரோட ந‌ல்லதுக்காக‌ நான் சொல்லித்தான் ஆகணும். அந்தப் பொண்ணு பிட்டுத் துணி இல்லாம முண்டக் கட்டையா...'.
'யோவ்...' என்று எழுந்த நான், அதுவரை பேசியவ‌ர்களை எல்லாம் வயது வித்தியாசம் பார்க்காமல் திட்டி விரட்டிவிட்டு அமர்ந்தேன்.

நானும் வளவன் சாரும் கேரம் போர்டுடன் பேரமைதி.
'சார் யார் ஆட்டம் சார் இப்போ?'
'ஏன்டா இந்த ஆட்டம் ஆடுனே இப்போ?'
'அப்பறம் என்ன சார், சும்மா கேட்டுக்கிட்டு இருக்கச் சொல்றீங்களா?'
'அவங்க வயசு என்ன? ஒன்னோட வயசு என்ன?'
'அறுவதாம் கல்யாணம் முடிச்ச கெழடு ஒன்னு ஒங்கள கைய நீட்டிப் பேசுது சார். அதவிட ஒங்க வயசு அதிகம். ஒண்டிக்கட்டை கேக்க ஆள் இல்லைன்னு நெனச்சிக்...'
'போர்க் கருவிகளுக்கு நம்ம அரசாங்கம் என்ன பேரு வெக்கிது? ராக்கெட்டு வெற்றிகரமாப் போகணும்னு திருப்பதி ஏழுமலையான் கால்லதான் சயின்டிஸ்ட் எல்லாம் விழுவுறான். இளவரசி டயானா செத்து பல வருசம் கழிச்சு அவளப்பத்தி தப்பா ஒரு பேப்பர்ல எழுதுனான். அந்தம்மாவோட பையன் செத்த ஆத்மாவக் குத்தாதீங்கன்னு கெஞ்சுனான். யாராவது கேட்டானுங்க? நீ நாளக்கிச் சிங்கப்பூர் போனாலும் கவுண்டமணி செந்திலக் கூட்டியாந்து நம்மாளுங்க பேய் ஓட்டிக்கிட்டுத்தான் இருப்பானுங்க‌. இந்த மக்கள்ட்ட போய் பெரியார் சிக்மண்ட் பிராய்டுன்னு பேசின்னா வேலக்கி ஆகுமா?'
ஸ்ட்ரைக்கரையே தேய்த்துக் கொண்டிருந்தேன்.
'சரி ஒன்னோட ஆட்டம் இப்ப. ஆடு' என்று பேச்சை முடித்து வைத்தார்.

வளவன் சாரின் மகள். அந்த அக்காவுடன் 3 வருடங்கள் பழகி இருக்கிறேன். என் கையெழுத்தை அழகாக்கியவள். நான் எட்டாவது படிக்கும்போது அவள் கல்லூரி முதலாண்டு. தீயில் கருகி அலறி ஓடி வந்து என் கண் முன்னால் தான் மண்ணில் விழுந்தாள். வாழை இலையில் சுற்றிக் கொண்டுபோய் ஒரு மாதம் மருத்துவப் பயனில்லாமல் இறந்தும் போனாள். அதிர்ச்சியில் எனக்குக் குளிர்க்காய்ச்சல். மோரில் சுட்ட மிளகாயிட்டுக் குடித்தும் குணமாக‌ ஒருவாரம் ஆனது. நினைவு திரும்பி என்னை விசாரித்த அக்காவை எனக்குக் காட்டாமலேயே எரித்தார்கள். என்னையும் வளவன் சாரையும் இணைத்து வைக்க பெரியாரும் அம்பேத்காரும் காந்தியும் பாரதியும் இன்று இருந்தாலும் எங்கள் நட்பின் ஆரம்பப்புள்ளி அவரின் மகள்தான். சுருதியின் இந்த வருடக் கதையையே மறந்து கொண்டிருக்கும் சமூகத்திற்குச் சரிகா காயத்ரி கோகிலவாணி ஹேமலதா பத்மினி விஜயா ரீட்டாமேரி போன்ற கடந்த வருடங்களின் கதைகள் நினைவிருக்க வாய்ப்பில்லை. 15 வருட‌ங்களுக்கு முந்தைய வளவன் சாரின் மகளின் பெயர் சமூகத்தின் பொதுப்புத்தியில் எந்த மூலை?

அன்றிரவு ஏற்பட்ட கெட்ட அனுபவத்திற்கு ஆறுதலாக, கேரம் போர்டில் எதிராளியை வெல்ல வைக்கவே இருவரும் விளையாடி, ஒரு கட்டத்தில் அது புரிந்து போய், மீண்டும் உண்மையாக விளையாடி இறுதியில் வளவன் சார் வென்றார். மணி ஒன்றை நெருங்கிக் கொண்டு இருந்தது. கேரம் போர்டை எடுத்து வைக்கும் போது, இருவரும் அவளின் ஆளுயரத் தாவணிப் புகைப்படத்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்டோம். நான் அவர் வீட்டில் தூங்கும் போது தரையில்தான் படுத்துக் கொள்வேன். விளக்கணைக்கும் முன், சன்னலை மூடும்போது, பிட்டுத் துணியில்லாமல் என கவுன்சிலர் சொன்ன வீட்டைச் சன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தார்.

'சேகர். இங்க வந்து பாரு'
'அட ஏன் சார், அந்தக் கவுன்சிலர் சொன்னான்னு அந்த வீட்டப் போய் பார்த்துகிட்டு இருக்கீங்க'
'சும்மா வந்து பாரு'
பார்த்தேன். ஒரு பெண் வாசலில் தலைமயிரை விரித்துப் போட்டு அமர்ந்திருந்தாள்!
'அமாவாசை இருட்டு. இல்லன்னா நல்லாத் தெரியும். அந்தப் பொண்ணு பிட்டுத் துணி இல்லாம முண்டக் கட்டையா...'
'சார்... எவனாவது எவளையாவது தள்ளிட்டு வந்திருப்பான் சார்'
'இது ரொம்ப நாளா நடக்குது. பக்கத்து இன்ஜினியரிங் காலேஜ் பசங்கதான்'
'இருங்க போய் வெரட்டிட்டு வர்றேன்'
'வெரட்டி? என்னோட மகள் போனா, இன்னொரு வெரைட்டி பேயக் கண்டிப்பா திரும்பவும் உண்டாக்குவானுங்க. ஆசன வாய் முதல் ஆதீன வாயில் வரை நடக்குற இந்தக் கள்ளத்தனக் காமத்துக்கு இடையில போற பெத்த புள்ளைகளையே கொல்ற காலம் இது. நீ போனா மறுநாள் பேப்பருல மூணாவது பக்கதுல ஒன்னோட படம் வரும்'
'சும்மா கண்டுக்காம இருக்கச் சொல்றீங்களா?'
'சும்மா இருந்தா இவ்வளவு தூரம் கண்டுபுடிச்சேன்? நீயும் எனக்கு வேணும், என்னோட மகளும் எனக்கு வேணும். இந்த இரண்டு விசயத்துக்கும் கெடுதல் வராம, வேணும்னா அந்த ரெண்டு பேரையும் அந்த வீட்டுக்கு வராம செய்ய முடியுமான்னு பாரு'
ஓரினத்தை இருந்த இடத்தில் இல்லாமல் செய்ய உலகத் தலைவர்கள் மார்தட்டித் திரியும் காலம் இது. ஸ்காட்லாந்து காவல்துறை அளவிற்கு உலகப் புகழ் பெற வேண்டிய எனக்கு, இரண்டு பேரை விரட்டுவது சப்பை விசயம்.

நாள் 1: அந்த வீட்டுக்குச் சொந்தக்காரரைக் கண்டுபிடித்து, மேல்தளம் ஒட்டின வீட்டை இப்ப‌டி சும்மாப் போடக் கூடாது, சட்டுப்புட்டுன்னு கட்டி முடிக்கச் சொன்னேன். குட்டிச் சுவராப் போவட்டும், ரெண்டு உசிர எடுத்த வீடுன்னார். சிமெண்ட் மூட்டைக்குப் பாதுகாப்பாக‌ படுத்துக்க வந்த ஒரு கிழவன் ஏதோ ஒன்றைப் பார்த்துப் பயந்த மாதிரி பித்தாகிச் செத்தே போனாராம். பொஞ்சாதியும் மர்மமாக‌ செத்துப் போனாள். குறி பார்க்கப் போன இடத்தில் சொன்னார்களாம்: 'யாரோ ஒருத்தன் யாருக்கோ செய்வினை செய்றதுக்கு அந்த வீட்டுல ஒக்காந்து மந்தரம் செஞ்சிட்டுப் போய்ட்டான். தவறி விழுந்த பட்டு நூலு ஒன்னு, ஒவ்வொன்னா காவு வாங்கிக்கிட்டு இருக்கு'. பிறகு பட்டுநூல் முறியச் செய்கிற மந்திரவாதி ஒருவனைக் கூட்டிவந்து சரி செய்துவிட்டாலும், அவர் திரும்பவும் அவ்வீட்டு வேலைகளைத் தொடர்வது போல் தெரியவில்லை.
நாள் 2: பாம்புச் சட்டைகளை அவ்வீட்டில் தூவிவிட்டேன். அவர்கள் சட்டை செய்யவேயில்லை.
நாள் 3: மாலையில் அவ்வீட்டிற்குள் விளக்கேற்றி வைத்தேன். கவனிக்கவும், விளக்கு ஏற்றி ஏற்றி, பிடித்து இல்லை.
நாள் 4: எண்ணெய் காலி. இரவு 2 மணிக்கு அலாரம் வைத்து, ஒரு வாட்சை அவ்வீட்டிற்குள் வைத்தேன்.
நாள் 5: அவர்கள் புத்திசாலித்தனமாக அலாரம் பட்டனை ஆன் செய்து வைத்துவிட்டே போயிருந்தார்கள். பயந்து விட்டார்கள் என வாட்சை அப்படியே இருக்கச் செய்தேன். பச்சை மாட்டுச் சாணி கொஞ்சம் தரையில் கொட்டியும் வைத்தேன்.
நாள் 6: அந்த வாட்சில் இருந்த புது பேட்டரிகள் காணாமல் போய், செல்லாத பேட்டரிகள் போடப்பட்டு இருந்தன. சாணி இருக்கவும் மொட்டை மாடிக்கே போய் நிலா வெளிச்சத்தில், கடவுளர்கள் போல், பால்வீதியில் கிரகங்களின் பிரம்மாண்ட புரள்தல் போல், ச்சே.
நாள் 7: ?

நான் மட்டும் தான் வேலை இல்லாமல் இருக்கிறேனா? உலகம் படைத்த கடவுள் கூட‌ ஏழாம் நாள் ஓய்வு எடுத்தார். உலகப் புகழ் வேண்டி இப்படியே தினந்தினம் புதிது புதிதாய் ஏதாவது யுத்திகள் செய்து கொண்டிருந்தால் ஓய்வு என்பதே இல்லாமல் போய்விடும். போதும்டா சாமி என்று வழக்கம்போல் வளவன் சாரிடம் தஞ்சம் புகுந்து கேரம் போர்டு ஆரம்பித்தோம். திரும்பவும் திருடன் போலீஸ். வழக்கம் போல் ஒரு கறுப்புடன் வெள்ளையைச் சேர்த்து விரட்ட மிகவும் தடுமாறிக் கொண்டிருந்தேன். கலவியில் ஓட்டித் திரியும் இரு நாய்களைச் சிறுவர்கள் கல்லால் அடித்துக் கொண்டே வீதியில் ஓடிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் இருந்து ஏதாவது புது யுத்தி கிடைக்குமா அல்லது அவர்களாவது எடுத்த காரியத்தில் வென்றார்களா என்று ஆவலுடன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே விளையாடியதில், நான் அடித்த ஸ்ட்ரைக்கர் சர்ர்ர்ரென்று முன்னால் வந்து இடப்பக்கக் குழிக்குள் தொங்கப் போவது போல் மெ எ எ எ துவாய்ப் போய் குழிக்குள், ச்சே, திரும்பவும் மைனஸ்.

- ஞானசேகர்

1 comment:

J S Gnanasekar said...

புத்தகம்: வேப்பெண்ணெய்க் கலயம்
ஆசிரியர்: பெருமாள் முருகன்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

இச்சிறுகதைத் தொகுப்பில் உள்ள 'தனித்தமிழில் சொன்னால் புணர்வறை' என்ற கதையையும் படித்துப் பாருங்கள்.

‍- ஞானசேகர்