புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Wednesday, March 20, 2024

சிறப்புரை

தக்ஷிண பிரதேச
வடக்கு மாவட்ட
தெற்கு மண்டல
மத்திய மைய
ஒன்றிய பாசறை
செயலாளர்.

- ஞானசேகர்

Saturday, September 30, 2023

கூட்டறிவு

அலைபேசிகளில் குனிந்த தலைகள்
நிமிர்ந்து நிற்கிறது
பொத்தான் அழுத்தப்படாத மின்தூக்கி.

- ஞானசேகர் 

Saturday, September 16, 2023

Monday, May 08, 2023

அகம் புறம்

கருவறைக்குள் விடாமல்
முன்னிரவில் முறைத்துக் கொண்டு முதுகு காட்டியவளை
வாசலில் நிறுத்திவிட்டு
கருவறை போய் வேண்டி வருவேன்
அவளுக்குள் சிந்தாமல்
முடிச்சிட்டு வைத்த ஆணுறையுடன்.

- ஞானசேகர்

Thursday, January 05, 2023

பல்

கனவுகளின் கதைகளில்
மொத்தமே திரைக்கதைகள் ஆறுதான்

துரத்தப்படுவது
பறப்பது
கீழே விழுவது
உடுத்தியவர்கள் நடுவில் நிர்வாணமாக நிற்பது
தேர்வுகளில் திணறுவது
பல் விழுவது

மற்றவை பலமுறை கண்டிருப்பினும் தோழர்காள்
பல் மட்டும் விழுந்ததேயில்லை கனவுகளில் தோழிகாள்

பொதுவெளி கடற்கரைகளில் விரட்டப்பட்டு
தனியார் நட்சத்திர விடுதிகளில் காசுகட்டி
போதை வாகனமோட்டிகளுக்குத் தப்பி
நீங்கள் வீடுதிரும்பிய புத்தாண்டிரவில்
கனவொன்று கண்டேன்

தமிழ் முதல்தாள் தேர்வு
ஒரிசாவில் தேர்வு மையம் 
கேள்விகளெல்லாம் இந்தியில்
திணறுகிறேன்
ஆடைகளை வெட்டி சோதித்து வெளியேற்றுகிறார்கள்

ஆஸ்கார் நாயகிகள் அலங்காரத்துடன்
மழைநீர் வடிகால் பள்ளங்களைப்
பொறுமையாகக் கடக்கும் என்னை
வாகனத்தின் மேலிருந்து
பத்தாவதாகக் குறிபார்க்கிறது ஒரு துப்பாக்கி
கூட்டத்தோடே ஓடுகிறேன்
துரத்துகிறார்கள்

சென்னைக்கு விடுமுறை தந்த புயலொன்று
வழக்கம்போல் திசைமாறி
ஏனோ என்னை மட்டும் தாக்கித் தூக்குகிறது
பறக்கிறேன்

சொந்தமாக விமானமில்லாத எந்நாட்டில்
சொந்தமாக விமானமுள்ள யாரோ
புயலின் கண்ணில் ஏதோ செய்ய
அதை நான் கண்டுவிட
விரட்டுகிறார்கள் ஆகாயத்தில்
கீழே விழுகிறேன்

கரையைக் கடந்து விழுகிறேன்
மாமல்லபுரத்தில் அல்ல 
ஒரு மூடப்பட்ட கழிவறையில்
கதவை உடைத்து நுழைகிறார்கள்
நேர்த்தி உடையுடன் சுற்றி நிருபர்கள்
முன்னால் முன்னாள் நடிகையொருத்தி
முன் பொத்தான் திறந்தபடி

நான் மட்டும் நிர்வாணமாக
நெருங்குகிறாள் என் முகம் நோக்கி
நீட்டுகிறாள் மைக்கை என்னிடம்

'சொல்லுங்க!
உரக்க இந்த உலகத்துக்கு!
கனவில் கூட வீழாத
பற்கள் உங்களுடையதென்று!
அதற்குக் காரணம்
இந்த பேஸ்ட்டுதான் என்று!
ஈ ஈ ஈ ஈ ஈ......'

– ஞானசேகர் 

Wednesday, November 30, 2022

போர்நிறுத்தம்

முன்னோடிய நாயும்
பின்னோடிய புலியும்
தின்னாமலும்
தின்னப்படாமலும்
மூடிய கழிவறை மூலைகளில்.

– ஞானசேகர்

Saturday, October 01, 2022

Man disposes, God proposes

நகராது
ஓடாது
செல்லவே செல்லாதென
அடியேன் உண்டியலிட்ட
பத்து ரூபாய்
ஒற்றை நாணயத்தையும்
சேர்த்தா சாமீ
உனது வசூல் ரெண்டு கோடி?

- ஞானசேகர்

Wednesday, August 31, 2022

கிரகம்

கிழமைகளில்
ஐந்து கோள்கள் காணலாம்

வெறும் கண்களில்
ஆறு கோள்கள் காணலாம்

நல்ல தொலைநோக்கியில் இன்னும்
மூன்று கோள்கள் காணலாம்

அதிலொன்று
கோளே இல்லை என்றும் காணலாம்

ஆனால்
ஒன்பது கோளும் ஒன்றாய்க் காண
பிள்ளையார்ப்பட்டி வர வேண்டும்.

- ஞானசேகர்

Thursday, April 07, 2022

பொருநர் சீர்

அரசு வேலை கிடைத்தால்
உயிரே காணிக்கை என
வேண்டிக் கொண்ட ஒருவன்
மன்னார்குடி பேஸன்சரில் பாய்ந்து
நேர்த்திக் கடன் முடித்ததைச்

சிரசற்று கரும்புகைசூடி
சாபவிமோசனம் பெற்ற
கிங்கணனொருவன்
வேலைக்குத் திரும்பியதாகக்
கொண்டாடினார்கள்.

- ஞானசேகர்

Wednesday, November 24, 2021