புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Monday, April 18, 2011

அந்தமாகமம்

உலகின் கடைசி மனிதன் தனியாக இருக்கும்போது யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.
- உலகின் மிகச்சிறிய சஸ்பென்ஸ் கதையாக சுஜாதா அவர்கள் சொன்னது

விலக்கப்பட்ட கனியைச்
சாத்தானுக்குத் தந்துவிட்டு
கடவுளைக் களிமண்ணாக்கி
நியாயத்தீர்ப்பு நாளில்
ஓய்வெடுத்துக் கொண்டான்
மனிதன்.

- ஞானசேகர்

அரிவை கூந்தல்

கணினித்திரை தலையேறி
ஒற்றைக்கால் தவமிருந்து
குளிர்சாதன தண்மையில்
CPU இளஞ்சூட்டில்
வதங்கியும் வாடியும்
சருகாய்ப் போயின
மகளிர்தின ரோஜாக்கள்!

- ஞானசேகர்

தேவதூதர்கள்

தன் அழுகை சபிக்கும்
தியானக் கூடங்களை
மூத்திரத்தால் அபிஷேகிக்கின்றன
பால்நாடும் குழந்தைகள்!

- ஞானசேகர்

ரகசியங்களின் பொதி

கனக்கிறது சவம்.

- ஞானசேகர்

Monday, April 11, 2011

ஒலிநடனம்

சந்தையின் சந்தடியைத் தனிமையிலும் தனிமையின் சாந்தத்தைச் சந்தையிலும் உணரமுடிந்தவனே ஞானி.
- யாரோ

நடுநிலைப்பள்ளி வகுப்புகளில் சமூகவியல் பாடத்தில் பார்த்திருந்த அவ்விடத்தின் உருவம் மட்டும் என்நினைவில் அழியாமலேயே தங்கிப் போனது. தரையில் படுத்துக் கொண்டு புகைப்படம் எடுப்பவனுக்குக் கம்பீரமாக நிமிர்ந்து நிற்பதுபோல் தோற்றமளிக்கும், அக்கட்டிடத்தின் பெயர் கோல்கும்பா (Gol Gumbaz). ஹைதராபாத்தில் ஒருமுறை கோல்கும்பா என்று நினைத்துப் போய், அதேபோல் உச்சரிக்கப்படும் கோல்கொண்டா (Gol Gonda) என்ற இடத்தின் அறிமுகம் கிடைத்தது. நீண்ட நாட்களாக கோல்கொண்டாவைக் கோல்கும்பா என்று சுட்டியும் திரிந்திருக்கிறேன்.

கர்நாடகாவில் பிஜப்பூரில் (Bijapur) இருக்கிறது; ஏதோவொரு மன்னனின் கல்லறை; என்பனதவிர வேறொன்றும் எனக்குத் தெரிந்திருக்கவுமில்லை. மனதில் புதைந்துபோன உருவமொன்றைத் தரிசித்துவிட வேண்டுமென்ற எதிர்பார்ப்பைத்தவிர வேறேது நோக்கமுமின்றி, உள்ளூர் காலநிலையும் வாழ்க்கையும் வெக்கை வீசிக்கொண்டிருந்த ஒரு பொழுதில், தமிழ் ஆங்கிலம் மட்டுமே தெரிந்த இரண்டுபேர் அடங்கிய குழுவொன்று கோல்கும்பா கிளம்பியது. மூன்றுமணிநேர இருப்பில், வாழ்க்கையில் எதையோ சாதித்துவிட்டதாக எனக்கேற்பட்ட பிரமிப்பை உங்களுடன் பகிர்கிறேன்.

பாமினிப் பேரரசுதான் (Bahmani kingdom) தென்னிந்தியாவில் நிறுவப்பட்ட முதல் சுதந்திர மற்றும் ஒரே ஷியா (Shia) இஸ்லாமியப் பேரரசு. மொகலாயப் பேரரசர் முகமது பின் துக்ளக்கிற்கு எதிராகப் புரட்சிசெய்து அலாவுதீன் ஹாசன் பாஹ்மன் ஷா என்பவரால் 1347ல் உருவாக்கப்பட்டது. தக்காணப் பீடபூமியை (Deccan plateau) ஐம்பெரும் மாநிலங்களாகப் பிரித்து ஆண்டுவந்த பாமினிப் பேரரசின் ஒருமாநிலம்தான் கோல்கும்பா இருக்கும் பிஜப்பூர்; இன்னொன்று ஹைதராபாத்தில் இருக்கும் கோல்கொண்டா! அப்பறம் பீதர் பேரர் அகமத்நகர்.

பாமினிப் பேரரசின் ஆளுநராக இருந்த யூசுப் அதில்ஷா என்பவரால்தான் பிஜப்பூர் நகரம் உண்டாக்கப்பட்டிருக்கிறது. 1490 முதல் அதில்ஷா வம்சத்தின் ஒன்பது அரசர்களால் இந்நகரம் ஆளப்பட்டிருக்கிறது. போர்த்துக்கிசியர்கள், மராட்டியர்கள், மொகலாயர்கள் என்ற பல அச்சுறுத்தல்களுக்குட்பட்ட இப்பேரரசை 1686ல் மொகலாயப் பேரரசர் அவுரங்கசீப் வென்றுபோனார். அதில்ஷா அரசப் பரம்பரையினால் ஆளப்பட்டிருந்த, பதினேழாம் நூற்றாண்டின் பிஜப்பூரைத் தக்காணத்தின் பல்மீரா (Palmyra of Deccan)என்றெல்லாம் புகழ்ந்திருக்கிறார்கள். அதில்ஷா அரசவம்சத்தின் ஏழாவது அரசரான முகமது அதில்ஷாவின் கல்லறைதான் கோல்கும்பா.

பிஜப்பூர் பேருந்து நிலையத்தைக் காலை எட்டு மணியளவில் அடைந்தோம். அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில், இரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கிறது கோல்கும்பா. அனுமதிச்சீட்டு வாங்கிக்கொண்டு, நீண்ட பாதையின் முடிவிலிருக்கும் கோல்கும்பா நோக்கி நடந்தோம். அதற்கு முன்னால் அருங்காட்சியம் ஒன்றும் இருக்கிறது. திட்டப்படி முதலில் கோல்கும்பா.


(கோல்கும்பா பின்னணியில் அருங்காட்சியகம்)

யானை தடவச் சென்றிருந்த குருடர் கதையாய், ஒரு மன்னனின் கல்லறையென்ற ஒற்றைவரித் தகவலுடன் போயிருந்த எங்களுக்கு, பற்பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. பிடறி பின்னங்காலைத் தொட அண்ணாந்து பார்க்கவைக்கும் அந்த நினைவுச் சின்னத்தின் உயரம், கிட்டத்தட்ட 20தள அடுக்குமாடிக் குடியிருப்பிற்குச் சமம். ஒரு கனசதுரப் (cube) பெட்டகத்தின்மேல் வைக்கப்பட்ட குவிமாடத்தின் (dome) அமைப்பு. தென்கதவுதான் பிரதான வாசல். உள்ளே நுழைந்தால், நான்கு சுவர்களைத்தவிர பிடிமானம் வேறேதுமில்லாத ஒரு பிரம்மாண்டமான சதுர அறை; ஒவ்வொரு பக்கமும் 135 அடி நீளம்; சுவர்களின் தடிமன் 10 அடி; உயரம் 110 அடி.

கோல்கும்பாவின் நான்கு மூலைகளிலும் கட்டிடத்தோடு ஒட்டியிருக்கும் கோபுரங்கள். இஸ்லாமிய முறையில் அமைக்கப்படும் மினாரெட் (minaret), சீன முறையில் அமைக்கப்படும் பஹோடா (pagoda) என்ற இரண்டு முறைகளின் கலவை. உட்புறப் படிக்கட்டுகள் மூலம் இணைக்கப்பட்ட எழுதளங்கள். ஏழாவது தளத்தின் வாசல், கனசதுர உச்சியில் (மொட்டைமாடியில்) திறக்கிறது.



(கோல்கும்பாவின் பிரதான தென்வாசல்)

தென்வாசல் வழியே உள்நுழைந்த இரண்டுபேர் அடங்கிய குழு, தென்கிழக்கு கோபுரம் வழியே படியேற ஆரம்பித்தது. படிகளின் உயரம் அதிகமாக இருந்தபடியாலும், இதமான குளிர்க்காற்று சுகமாய் இருந்தபடியாலும், முன்னேறும் பெண்களின் பிட்டத்தை எழுநிலைகளிலும் பின்தொடர்ந்து ரசித்துக் கொண்டிருந்த இன்னொரு குழுவிலிருந்து சற்று விலகியிருக்க நினைத்தபடியாலும் நாங்கள் கனசதுர உச்சியை அடைய கொஞ்சம் அதிகநேரம் எடுத்துக் கொண்டோம். கோபுரத்தின் ஏழாம்தளத்தைவிட்டு மொட்டைமாடிக்கு வந்தால், கண்ணெதிரே பிரம்மாண்டமாக நிற்கிறது குவிமாடம். இரண்டுபேர் நடக்குமளவிற்குக் குவிமாடத்திற்கும் கனசதுர விளிம்பிற்கும் இடையே இடைவெளி இருக்கிறது. இரண்டு சுற்றுகள் சுற்றினோம். முதல்சுற்று கோல்கும்பாவிற்கு மட்டும். இரண்டாம் சுற்று ஊர்ச்சுற்று.

அங்கிருந்து குவிமாடத்தின் அடியில் இருக்கும் ஒரு குறுகிய வாசலை அடைந்தோம். இதுபோல் ஆறுவாசல்கள் இருக்கின்றன. குவிமாடத்தின் அடித்தளத்தைச் சுற்றி மூன்றரை மீட்டர் நீளமுடைய, பால்கனி போன்றதொரு நடைபாதை இருந்தது. அங்கிருந்து கீழே இருக்கும் கனசதுர கீழ்த்தளத்தைப் பார்க்கப்போய், எனக்கிருக்கும் acrophobia கொஞ்சம் விழித்துக் கொள்ள ஓரமாக அமர்ந்துவிட்டேன். என்னைப்போல் பலர், உயர பயத்தில் சுவரைப் பார்த்துக் கொண்டு அமர்த்திருந்தார்கள். ஒரு முதியவர் மிகவும் சிரமப்பட்டு கண்களை அகலப்படுத்தி, கால்களை நீட்டி விரித்து, மூச்சை ஆழப்படுத்தி கொண்டிருந்தார்.

நீங்கள் பயந்துபோவீர்கள் என இதுவரை நான் சொல்லாமல் விட்டதை இப்போது சொல்கிறேன். கோல்கும்பா அருகாமையில் முதன்முதலில் வந்தபோது, அதனுள் இருந்து வித்தியாசமான சத்தங்கள் மிக அதிக வீரியத்துடன் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. வாசலிலிருந்த பலகையில் படித்தபிறகுதான், எவ்வளவு மிகப்பெரிய பொக்கிஷத்தைப் பார்க்க வந்திருக்கிறோம் எனப் புரிந்தது. குவிமாடத்தின் அடியைச் சுற்றி உட்புறமாக இருக்கும், பால்கனி போன்ற இந்த வட்டவடிவ சுற்றுப்பாதைக்கு முணுமுணுக்கும் மாடம் (whispering gallery) என்று பெயர். இதன் எந்தவொரு இடத்திலிருந்தும் எழுப்பப்படும் காகித அளவிலான சத்தம்கூட, அதன் நேரெதிர் முனையில் மிகத்துல்லியமாகக் கேட்கும். மன்னர் மனைவியுடன் இம்முறையில்தான் பேசிக் கொண்டாராம். அதைவிட ஆச்சரியம், எந்தவொரு ஒலியும் 26 வினாடிகளுக்குள் 10 முதல் 12 முறைகள் எதிரொலிக்கப்படுகிறது. நாட்டியக் கலைஞர்கள் கீழ்த்தளத்தில் நடனமாட, இசைக்கலைஞர்கள் இங்கிருந்து இசைக்க..... ராஜவாழ்க்கை! ஏதோவொரு சத்தத்தைச் சுமந்தபடி எப்போதும் நகர்ந்தபடியே இருக்கும் காற்றின் மென்தழுவல், அற்புதமான அனுபவம்!



(முணுமுணுக்கும் மாடம்)

உயர ஒவ்வாமை போனபிறகு, தைரியமாக கீழே குனிந்து பார்த்தேன். கீழ்த்தளத்தில், ஒரு சதுர மேடையில் 7 பேரின் கல்லறைகள். முகமது அதில்ஷா, இரு மனைவிகள், மகன், மகள், மருமகள், நாட்டிய மங்கை ரம்பை. அருங்காட்சியகம் போனோம். புகைக்கும் ஒரு பெண்ணின் புகைப்படம் இருந்தது. அதில்ஷா அரசக்குடும்பத்தின் ஆட்சியாளர்களைத் தவிர, அவர்களின் சகோதர சகோதரிகளின் பெயர்கள் அறியப்படவில்லையென குடும்பமரம் (family tree) சொன்னது. சகோதர்களையும், சகோதரிகளின் கணவர்களையும் கூட அடையாளம் காட்டுகிறது இணையம்.

கோல்கும்பா பற்றிய சாதனைக் குறிப்புகள்:

1. துண்களேதும் கிடையாது. எந்தவொரு பிடிமானமுமின்றி (uninterrupted floor spacing), உலகிலேயே அதிக பரப்பளவை (1693 சதுர மீட்டர்) ஆக்கிரமித்திருக்கும் கட்டிட அதிசயம் கோல்கும்பா.

2. துருக்கியின் ஹாசியா சோஃபியா (Hagia Sophia), வாடிகனின் புனித வளனார் பேராலயம் (Saint Peter's basilica) வரிசையில் கோல்கும்பாவின் குவிமாடம் உலக அளவில் மூன்றாவது பெரியது.

3. 26 வினாடிகளுக்குள் 10 முதல் 12 முறைகள் எதிரொலிகள் தொடர்ச்சி, உலகில் வேறெங்கும் கண்டறியப்படவில்லை.

4. வாடிகனின் புனித வளனார் பேராலயத்தின் குவிமாடம், கோல்கும்பாவைவிட 5மீட்டர் அதிக விட்டமுடையதாக இருந்தாலும், கோல்கும்பாவின் குவிமாடத்தைத் தாங்கியிருக்கும் கனசதுரம் பெரிதென்ற முறையில், உலகிலேயே குவிமாடவடிவ கட்டிடங்களில் அதிகப் பரப்பளவுடைய பெருமையும் கோல்கும்பாவையே சேர்க்கிறது.

5. அரைக்கோளவடிவ குவிமாடத்தைச் சதுர அறைமேலோ, நீள்வட்ட குவிமாடத்தைச் செவ்வக அறைமேலோ பொறுத்த,கோளத்தின் முக்கோணத் துண்டு போன்ற pendative என்ற கட்டுமான அமைப்புகள் பயன்படுகின்றன. வெட்டிக்கொள்ளும் pendativeகள் உலகிலேயே இரண்டு இடங்களில் மட்டும்தான் வெற்றிகரமாக கட்டப்பட்டிருக்கின்றன. இன்னொன்றையும் பார்க்க வேண்டுமானால் ஸ்பெயினிலுள்ள கர்டோபா (Mosque of Cordoba) போகவேண்டும்.


(தரைத்தளத்திலிருந்து குவிமாடத்தின் தோற்றம்; முணுமுணுக்கும் மாடத்தில் மனிதத்தலைகள் தெரிகின்றனவா?)

முணுமுணுக்கும் மாடத்தில் தள்ளாடும் நான்கு பாட்டிகள், எழுதளங்கள் ஏறிவந்து, எதிரொலிகளைக் உணர்ந்ததில் பிறவிப்பயன் அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிப் போனார்கள். அவரவருக்குப் பிடித்த பதங்களைக் கத்திப் பார்த்தார்கள்; கெட்ட வார்த்தைகள், பன்மொழிகளில் I love you, சற்றுமுன் தெரிந்துகொண்ட அழகுப்பெண்பெயர் என எதிரொலி சோதனை செய்துபார்த்தார்கள். எல்லாவற்றையும் நூற்றாண்டுகளாக கேட்டுக்கொண்டு துயில்கின்றன ஏழு உடல்கள். யாரும் இல்லாத பொழுதில் அவர்கள் எழுந்துவந்து, மீயொலியில் பேசிக்கொள்வதாக கற்பனை செய்துகொண்டு விடை பெற்றோம்.

Earphoneல் பாடல் கேட்டுக் கொண்டு, நண்பர்கள் பேசுவதுகூட தெரியாமல், தட்டிகேட்டால் மட்டும் அதை எடுத்துவிட்டு பேசிய ஒரு வாலிபனைப் பார்த்தேன். அவன் ஊர் திரும்பியவுடன் சொல்வதற்கேதேனும் செய்திகள் வைத்திருப்பானா என்பதும் ஓர் ஆச்சரியமே! கேட்க மறுக்கும் மனித இனத்திற்கு இன்னும் சில்லாண்டுகளில் காதில்லாமல் போகுமெனும் பரிணாமக் கூற்றில் ஆச்சரியமேதுமில்லை!

- ஞானசேகர்