புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Saturday, November 16, 2013

அடிமைகள் பொதுநலச் சங்கம்

The sun never sets on the British Empire because God doesn't trust the English in the dark. 
- Irish Proverb

'வாய்த்த அடிமைகள்
மிகவும் திறமைசாலிகள்
வாய்தான் கொஞ்சம் அதிகம்'
- இங்கிலாந்து அரசக்குடும்பம்

'முன்னாள் அடிமைகள் நாங்கள்
எந்நாளும் அரசர் நீங்கள்'
- காமன்வெல்த் நாடுகள்

- ஞானசேகர்

முதல் அவதாரம்

கவலையறச் செய்யாத கடவுளைக்
கவலையுறச் செய்ய‌
ஆத்திகனாகிறேன்.

- ஞானசேகர்

செம்புலப்பெயனீரார் போல‌

இத்தனை பிரபலம்
இன்னும் பெயரிலி
எக்ஸ் ரே.

- ஞானசேகர்

Friday, October 18, 2013

தனிமனிதம்

I am (have) become Death, the destroyer of worlds.
- Robert Oppenheimer (பகவத் கீதையில் இருந்து)

ஆயுதம் செய்தலால்
தூண்டிவிடக் கருவைச் சீண்டிவிடுதலால்
கருவில் வகை பிரித்தலால்
இயற்கை மீறி பிறத்தலால்
செயற்கையாய்ச் சாதலால்
செத்தும் கெடுத்தலால்
கெடுத்தும் கட்டிக் காத்தலால்

தோண்டி எடுக்கப்படுவதால்
எரித்துப் புதைக்கப்படுவதால்
புதைத்துத் தோண்டப்படுவ‌தால்

அட்டவணையில் அடங்குவதால்
கட்டுக்குள் அடங்காததால்
அந்நியரால் மட்டுமே பிளக்க முடிவதால்
தம்மவரால் தற்கொலை செய்வதால்
பட்டென பற்றிக் கொள்வதால்

அகப்பட்டவரைச் சுட்டெரித்தலால்
தூரக் கிடப்பவர் குளிர்காய்தலால்
தலைமுறைகளைத் துரத்திப் போவதால்
முதலாளிகளுக்கு முக்கியம் ஆதலால்
இந்தியாவில் அபரிதம் ஆதலால்

சிலர் பீடில் வாசிக்க‌
பலர் எரிவதால்
பலர் உயிர்த்தெழ‌
சிலர் சிலுவை சுமப்பதால்

கூடங்குளமோ தர்மபுரியோ
சகலரும் மாயவலைக்குள் சிக்கிக் கொள்வதால்
தனிமம் மனிதம் எரிக்கும்
தோரியம் ஆகுமாம் சாதியும்.

- ஞானசேகர்

Thursday, October 17, 2013

மாநகர் இடக்கை விதி

இடது கையின்
பெருவிரல் சுட்டுவிரல் நடுவிரல்
ஆகிய மூன்றையும்
ஒன்றுக்கொன்று நேர்க்குத்தான திசைகளில்
வைத்துக் கொண்டு
போக வேண்டிய திசையைச்
சுட்டுவிரலும்
திருப்பி விடப்பட்ட திசையை
நடுவிரலும்
குறிப்பதாகக் கொண்டால்
போய்ச் சேரும் திசையைப்
பெருவிரல் காட்டும்.

- ஞானசேகர்

Wednesday, October 16, 2013

புறவினத்தார்

மரித்தவனைச்
சிலுவையில் அறைகின்றன‌
கல்லறைகளின் சாதிச் சுவர்கள்.

- ஞானசேகர்

Sunday, October 06, 2013

ஆணுக்கான‌ தீட்டுத்துணிகள்

எந்நாடு போனாலும்
தென்னாடு உடைய சிவனுக்கு
மாதவிலக்குள்ள பெண்கள்
மட்டும் ஆவதே இல்லை
- கனிமொழி 

தாலியறுத்த பெண்ணொருத்தி
தாங்காத் துயரம் கொண்டு
பொட்டு மஞ்சள் குங்குமம்
முடிச்சிட்டு முச்சந்தி இட்டதை

தம்பி நீங்கள் அதைக்
கையால் எடுக்கவும் இல்லை
காலால் மிதிக்கவும் இல்லை
இன்னாருக்கென‌ இட்டதும் இல்லை
போகிற பாதையில்
இந்தக் காலால் எத்திவிட்டு
அந்தக் காலால் தட்டிவிட்டு
கடந்து போன தோசம்
எட்டு மாதமாய் வாட்டுகிறது

தம்பி நீங்கள் அதைக்
கண்ணால் பார்த்தும் செய்யவில்லை
மனதால் அறிந்தும் செய்யவில்லை
நடக்க வேண்டுமென இருந்திருக்கிறது
நடந்து க‌டந்து போய் இருக்கிறீர்கள்

தம்பி உங்களுக்கு
இந்த எட்டு மாதமாய்
தொட்ட காரியம் துலங்காமல் போகிறது
பட்ட காரியம் பஸ்பமாய்ப் போகிறது
சிந்தனை குரங்காய்த் தாவுகிறது
சொந்தம் தாமரைத் தண்ணீராய் நழுவுகிறது
சபையில் பேச்சு எடுபடாமல் போகிறது
பயிருக்குப் பாய்ச்சினால் பதருக்குப் போகிறது
அரசன் போல் மனதிருந்தும்
ஆண்டி போல் மனஸ்தாபம்

தம்பி உங்களுக்கு
உள்ள‌ கண்டம் மூன்று
தலைக்கு வந்தது ஒன்று
தலைப்பாகையோடு போனது
வாகனத்தில் வந்த ஒன்று
வணங்குகிற தெய்வத்தால் போனது
மூன்றாவதாய் ஒன்று மீதமுண்டு
முறித்து விட பரிகாரம் ஒன்றுமுண்டு
மூன்றூற்றியொன்று தட்சணை
பொட்டு மஞ்சள் குங்குமம்
அம்மனுக்கு ஒரு சேலை
கையை மடக்கிவிட்டு
சந்தேகம் ஏதுமெனில் தயங்காமல் கேளு தம்பி.

- ஞானசேகர்

Wednesday, September 25, 2013

காக்கை உகக்கும் பிணம்

அவன் தந்தையும்
இவன் தந்தையும்
யார் ஆகியரோ?
மற்றவன் கோவிலைச்
சேர்ந்தே இடித்தனர்.

அவன் தாயும்
இவன் தாயும்
எம்முறைக் கேளிர்?
மற்றவன் பெண்டிரைச்
சேர்ந்தே வன்புணர்ந்தனர்.

அவனும்
இவனும்
எவ்வழி அறியும்?
மற்றவன் உறுபொருள்
சேர்ந்தே கவர்ந்தனர்.

அவன் சாதியும்
இவன் சாதியும்
தெரிந்த‌பின்
அவன் மலத்தை
இவனைத்
தின்ன வைத்தான்.

- ஞானசேகர்

Tuesday, September 24, 2013

நட்பறிதல்

நமது நட்பும்
உன்னதமாகத் தான் இருந்தது

சாதி பற்றிய‌
உன் வீட்டாரின் விசாரிப்புகளுக்கு
நான் திணறாத வரை.

- ஞானசேகர்

Wednesday, August 28, 2013

அர்த்தநாரியின் வலது நெற்றிக்கண்

யான்நோக்காக் கால் நிலன்நோக்கும் நோக்குங்கால்
தான்நோக்கி மெல்ல சுடும்.

- ஞானசேகர்

Tuesday, August 27, 2013

அகாலம்

ஓடாத என் கடிகாரம்.

ஆற‌ அமர ஓய்வெடுக்கும்
மூன்று ஆரங்களின்
மர்ம வட்டம்.

மணிக்கட்டில் மல்லாந்திருக்கும்
மணிகளற்ற முள் கிரீடம்.

காலனைத் தவிர‌
யாவருக்கும் புதிர் போடும்
60 புள்ளிக் கோலம்.

தேவதையின் ஒளிவட்டம் பொருத்தி
சுழலும் பற்கள் விழுங்கி
முப்பற்களில் இளிக்கும்
குட்டிச் சாத்தான்.

முக்கண்களும் அணைந்து போய்
முக்காலங்களும் திக்குமுக்காடி
முட்டி எட்டிப் பார்க்கும் முக்கு.

நாடியோடு ஒட்டி உறவாடினும்
நாடி நோக்குகையில்
நடித்து
நொடித்து
நாதியற்று உணரச் செய்யும்
கையடக்கச் சூன்யம்.

சுற்றாமலேயே
சுற்றவைக்கும்
சுழி.

கரம்
சிரம்
புறம்
நீட்டும் சகபயணி.

அணிவாரையும்
அணுகுவாரையும்
நோக்குவாரையும்
வாரி விட்டு
வாரை வாறி அணைத்திருக்கும்
மதிமுகவார்.


ஓடாத என் கடிகாரம்.

வருத்தப்பட்டு நான்
சுமக்க வேண்டிய பாரம்.

நாளுக்கு இருமுறை
எனக்கே தெரியாமல்
உண்மையாக இருக்கும்
எனக்கான சத்திய சோதனை.

என்னைப் பட்டினியிட்டு
சுற்றும் பூமியில்
உங்களில் யாருடனோ
நித்தம் நித்தம்
அகநக நட்புறும்
நான் கட்டிவந்த பத்தினி.

அதன் நிகழ்காலம்
என் துர்மரணத்தின் இறந்தகாலமாக
உங்கள் வருங்காலத்தில்
பதிவு செய்யப்படும்
எனப் பயங்காட்டும்
ஒரு மாய எதார்த்தக் கூடு.

உலகத்தீரே!
என்னைப் போலவே
ஓடாத கடிகாரம் உடையவர்
நீங்கள் எனில்
தயைகூர்ந்து சொல்லுங்கள்
நேரம் என்னவென்று.

- ஞானசேகர்

Tuesday, August 13, 2013

எங்கள் காலத்தில்

'காசிக்குப் போனா கருவுண்டாகு மென்பது அந்தக் காலம்
ஊசியப் போட்டா உண்டாகுமென்ப திந்தக் காலம்' என்றார் N.S.கிருஷ்ணன்.
'எளிதில் மணப்பெண் கிடைத்தாள்
ராமராஜனைக்கூட விரும்பி ரசித்தோம்
ஆம்… 
அந்தக் காலம் நன்றாக இருந்தது' என்றார் கவிஞர் மகுடேசுவரன்.
'என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம்' என்று எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் தலையங்கம் எழுதுகிறார். நிகழ்கால ஒழுங்கின்மைகளைக் கடந்த‌கால வார்த்தைகளில் கடந்து போய் விடத் துடிக்கும் ஒரு பாமர மனநிலையில் நான் எழுதியது: 


கவிதையோ கதையோ பெரிதெனில்
தொடர்ந்து படிக்கலாமா
முதல் வரியிலேயே தீர்மானித்தோம்
முதல்நாளே Download செய்தோம்
கடைசிநாளில் Recharge செய்தோம்
Favourite Song Dedicate செய்தோம்
Invest செய்தோம்
Likeகினோம்
Customer caரிடம் கத்தினோம்
'வந்து'
'பாத்தீங்கன்னா'
'இப்ப என்ன சொல்ல வர்றேன்னா'
'you know'
'என்னோட point of viewல‌'
என வாக்கியங்கள் நிரப்பினோம்
புட்டம் தெரிய‌ பேன்ட் போட்டோம்
வாழ்த்துக்கள் தேடி தவமிருந்தோம்
கூட்டத்தில் தேசியகீதம் 
பிரமாதமாகப் பாடினோம்
முகநூல் நட்பது நட்பென்றோம்
ஆம்புலன்ஸ் முந்தினோம்
ஒலிம்பிக்ஸ் பிந்தினோம்

பொச்சு வலிக்காமல்
கோழிகள் முட்டையிட்டன‌
நியாயவிலைக் கடைகள் இருந்தன‌
மட்டைப்பந்து மைதானம்
அமெரிக்கத் தூதரக‌ம்
வாசல்களில் வரிசைகள் நின்றன‌

குலதெய்வங்கள் குற்றுயிராய்க் கிடந்தன‌
ந‌டிக‌ர்க‌ள் பாலில் குளித்த‌ன‌ர்
ந‌டிகைக‌ளுக்குக் கோவில்க‌ள் இருந்த‌ன‌
நாத்திகர்கள்
கோவில் நுழையப் போராடினர்
ஆத்திகர்கள்
மசூதி இடித்தனர்

மதராஸ் மாகாணம் தமிழ்நாடாகி
பின் சென்னை ஆனது
த‌மிழ்நாடு
சென்னையின் ஸ்கோர் கேட்ட‌து
சென்னைக்கும் தமிழ்நாட்டிற்கும்
16 மின்நேரம் வித்தியாசம் இருந்தது

ஆணுறுப்பின் மேல்தோல்
உயிர் தீர்மானித்தது
பெண்ணின் முகம் உயிரைத்
திராவ‌கம் தீர்மானித்தது

குறிஞ்சி ரிசார்ட் ஆனது
முல்லை தீம் பார்க் ஆனது
மருதம் அபார்ட்மென்ட் ஆனது
நெய்தல் பிக்னிக் பார்க் ஆனது
பாலைச் சாலையில் ஊற்றிப் போராடினர்

கடனட்டை கௌரவம் தந்தது
பச்சையட்டை பெருமை சேர்த்தது
உதட்டு முத்தம் U பெற்றது
கன்னித்தீவு
இரண்டாம் பக்கத்தில் எப்போதும் இருந்தது
கச்சத்தீவு 
இந்தியா பக்கத்தில் எப்போதோ இருந்தது
திருவள்ளுவர் சாதிவரை
விக்கிபீடியா சொன்னது
சிதம்பர ரகசியம் 
கடைசியாகச் சொல்லப்பட்டது

பிராய்லர் கோழிகளுக்கும்
பள்ளிக் கூடங்களுக்கும்
நாமக்கல் புகழ் பெற்றிருந்தது
விபி சிங் இறந்தது பலருக்குத் தெரியாது
இந்திரா முனை இருந்தது
தபால் பெட்டி இருந்தது

முதல்வர்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதினர்
ஒரே மதிப்பெண்ணில்
ஓராயிரம் மாணவர்கள் இருந்தனர்
பெண்கள் பெரும்பாலும்
சாய்பாபாவை வணங்கினர்
கோட்டைக்குப் போக‌ பலர்
கோடம்பாக்கம் போயினர்
விபச்சாரத்தைச் சட்டமாக்க‌
நுகர்வோர் போராடினர்
ஜனங்க‌ளிடம் வென்றவர்கள்
ஜனாதிபதிக்குச்
செல்லாத ஓட்டுப் போட்டனர்
ஆகஸ்ட் மாதங்களில்
அன்னா ஹசாரே வந்து போனார்

நம்பிக்கைகள் தீர்ப்பெழுதின‌
அர்ச்சகர் முதல் ஆளுநர் வரை
குறுந்தகடுகள் சுற்றின‌
நிருபர்களின் செருப்புகள்
செய்திகளில் வந்தன‌
விவாகங்கள் சில இருந்ததால்
விவாகரத்துகள் பல இருந்தன‌
பிறந்தவுடன் வங்கிக்கணக்கு
இறந்தபின்னும் ஓட்டுரிமை கிடைத்தன‌

இயேசு பிறக்கவில்லை
உலகம் அழியவில்லை
கைக்கிளை வழக்கில் இல்லை
ஆசிரியர்கள் பெரும்பாலும்
தேர்வில் தேறவில்லை
சச்சினும் ரமணனும்
ஓய்வுபெறவில்லை
23 ரூபாய் இருந்தால்
ஏழை இல்லை
வெள்ளியில் கிடைத்தது
ஞாயிறு சனியில் வந்தால் 
சுதந்திரம் இனிக்கவில்லை
கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்ட நந்தனார்
கருவறைக்குள் அனுமதிக்கப்படவில்லை

108 ஆம்புலன்ஸ் திட்டம்
மத்திய அரசா?
மாநில அரசா? 
சேதுவைப் பாரதி
தோண்டச் சொன்னாரா?
மூடச் சொன்னாரா?
இராஜீவ் காந்தியைக் கொன்றது யார்?
நாடாளுமன்றத்தைத் தாக்கியது யார்?
உண்மையிலேயே அது திரிஷாவா?
சொப்பனசுந்தரியை யாரு வெச்சிருக்கா?
எங்களுக்கும் தெரியவில்லை

சிறுநீரகங்கள் விற்றோம்
சந்திப் பிழைகள் சகித்துக் கொண்டோம்
மரபுப் பிழைகள் மறந்து போனோம்
வாழ்த்த வயதில்லாமல் வணங்கினோம்
நேரு பரம்பரையைக்
காந்தி வாரிசுகள் என நம்பினோம்
தேசிய மொழி
இந்தி என நம்ப வைத்தோம்
மருத்துவ‌ர்களிடம் பெயர் மறைத்து
கேள்விகள் கேட்டோம்
இந்தியர் ஆளா நாட்டில்
ஈழ ஆதரவு கேட்டோம்

கவிதையோ கதையோ பெரிதெனில்
நேராக கடைசி வரிகளைப் படித்தோம்.

- ஞானசேகர்

Tuesday, July 09, 2013

உண்மை விசுவாசி

(அகப்பாடலைப் புறப்பாடல் ஆக்கியமைக்கு அடியேனை அம்மூவனார் மன்னிப்பாராக‌)

தாய் உடன்று அலைக்கும் காலையும் வாய்விட்டு
அம்மா என்னுங் குழவி போல
இன்னா செயினும் இனிதுதலை யளிப்பினும்
நின் வரைப்பினன் இத்தொண்டன்
தன் உறு விழுமங் கலைஞரும் உளரே.

- ஞானசேகர்

Wednesday, July 03, 2013

சோழப் பரம்பரையில் ஒரு MLA

எங்கும் இல்லை
என் மூதாதையின் பெயர்
நீ எழுதிய வரலாறு.
- கவிஞர் மகுடேசுவரன் ('மண்ணே மலர்ந்து மணக்கிறது' நூலிலிருந்து)


ஆண்ட பெருமை மீட்கக்
கூடும் பரம்பரைகளின்
வாசல்களுக்கு வெளியே
இராமனுக்காக ஆண்ட
சோடிப் பாதுகைகளின்
பரம்பரைப் பாதுகைகள்.

‍- ஞானசேகர்

Saturday, June 22, 2013

விளையாட்டுச் செய்திகள்

மும்பை
வந்தது
பாகிஸ்தான்.

டெல்லியைச்
சமன் செய்தது
சென்னை.

இலங்கையுடன்
மோதுகிறது
இந்தியா.

- ஞானசேகர்

Sunday, June 09, 2013

கருவிழந்த க(வி)தை

கருவிழந்தான்புரம்
கருவியானது
கருவிழந்தும்
கருவிழக்காமலும்.

- ஞானசேகர்

Thursday, June 06, 2013

ங‌

(குஷ்வந்த் சிங் வரிகளைத் தமிழ்ப்படுத்த எடுத்த முயற்சியில் இப்படி வந்திருக்கிறது)

நில்


சாய்
நோக்கு
கவனி
படு
மூடு

குனி
பிடி
தடு
தாங்கு
தொங்கு


நெளி
வளை
தள்ளு
தளர்
இளகு
முட்டு
மோது
அண்டு
அலை
ஆடு
இழு
வீழ்
அமர்

விலகு
அடங்கு
கிட‌

மிதி
மீள்
எழு
திற‌
நிமிர்

தன்பால் செய்தால்
யோகா
எதிர்பால் உடன் செய்தால்
யோகம்தான்

- ஞானசேகர்

Tuesday, June 04, 2013

சுழன்றும் it moves

'And yet it moves'  
தெய்வ நிந்தனைப் பழி
வாழ்நாள் சிறைத் தண்டனை
குற்றவாளிக் கூண்டில் உழந்து
கலிலியோ வெளியேறியபோது

பதினாறு நூற்றாண்டுகளைச் 

சுழன்றிருந்தது வள்ளுவனின்
'சுழன்றும் ஏர்ப்பின்ன துல
ம்'.

- ஞானசேகர்

Monday, June 03, 2013

மணற்கல்வி

ஆச்சரியம்

வள்ளுவன் காலத்தில்
ஊறி இருக்கின்றன

தொட்டனைத்து மணற்கேணியும்
கற்றனைத்து அறிவும். 


- ஞானசேகர்

Friday, May 17, 2013

ஜென்மப்பாவம்

தலைமுறைகளாய்த்
தொடரும் பாவங்களைக்
கழுவி சுத்தமாக்குகிறது
ஞானஸ்நானம்

மதத்தைத் தவிர.

- ஞானசேகர்

Friday, May 10, 2013

மாகதர் போகதர்


குழலினிது யாழினிது என்பர் மானாட
மயிலாட‌ பாரா தவர்.

- ஞானசேகர்

Thursday, May 09, 2013

எல்லாம் நிறைவேறியதும்

எல்லாம் நிறைவேறியதும்

ஒருநாள் ஓய்வெடுக்கிறார்
கடவுள்
 
சிலுவையில் உயிர்விடுகிறார்
இயேசு
 
ஏவாளைவிட்டு விலகிப் படுக்கிறார்
ஆதாம்.

- ஞானசேகர்

Sunday, May 05, 2013

புணர்ச்சி


படைத்தல்
காத்தல்
அழித்தல்
மறைத்தல்
அருள்தல்
ஐந்தொழில் செய்வதால்
ஆகுமாம் இறைவன்.

- ஞானசேகர்

Saturday, May 04, 2013

சித்தார்த்தன் பார்க்காத ஐந்தாவது காட்சி


அழகு யுவதிகளின்
ஆபரணங்கள் அகற்றி
ஆடைகள் அவிழ்த்து
அந்தரங்கங்கள் தொட்டு
உடலோடு உரசி
சிகை கோதி
அணைத்து
விளக்கணைத்து
விரசமின்றி விறுவிறுவென‌
நள்ளிரவில் வீடேகிறான்
நகைக்கடை ஊழியன்.

- ஞானசேகர்

Friday, May 03, 2013

பின்ன்ன்ன்ன்னிட்ட்ட்ட்ட்டடா


தனியறை ஒன்றில்
ஒருவன்
ஒருத்தியின்
அந்த இடங்களை
அப்படித் தொட்டால்
நல்ல பயாலஜி.

தொலைக்காட்சி நடனங்களில்
ஒருவன்
ஒருத்தியின்
அந்த இடங்களை
அப்படித் தொட்டால்
நல்ல கெமிஸ்ட்ரி.

- ஞானசேகர்

Wednesday, May 01, 2013

Non-stop கொண்டாட்டம்

'டெல்லி பேருந்தில்
ஒரு பெண்ணை
ஆறு பேர் உந்த‌'
என்றார் கவிஞர்.

பலமாகக் கைத்தட்டியது
கவியரங்கக் கூட்டம்.

ஆதரவு சொல்லுக்காகவா
அல்லது பொருளுக்காகவா
எனது குழப்பத்தினூடே
வந்து விழுந்து கொண்டிருக்கின்றன‌
சொற்களும்
பொருள்களும்
கைத்தட்டல்களும்
குழப்பங்களும்.

- ஞானசேகர்

Saturday, April 27, 2013

கையறுநிலை


அழகு யுவதிகளின் அங்கங்களை
நினைவுகளின் அடுக்குகளில்
அவசர அவசரமாகத் 
தேடித் தேடி
ஏதொன்றும் கிட்டாமல் சலித்துப் போய்
தவியாய்த் தவித்துப் போய்
அடங்காமை ஆரிருள் உய்த்துப் போய்
உச்சத்திற்கும் உச்சிக்கும் இடையே
சூரியன் கிட்டாத சூரியகாந்தியாய்
நாணி நிலன்நோக்கி
நிர்கதியாய் நிற்கும் தருணம்.


- ஞானசேகர்

Thursday, April 25, 2013

ஓட்டுக்கட்சி மக்களாட்சி


போல் போன்று போல
இருப்பதால்
மற்றும்
போல போன்று போல்
இருப்பதால்
போல் போன்று போல‌
வைக்கலாம்
அல்லது
போல போன்று போல்
வைக்கலாம்.


போல் போன்று போல‌
வைத்தால்
அல்லது
போல போன்று போல்
வைத்தால்
போல் போன்று போல‌
குழப்பலாம்
மற்றும்
போல போன்று போல்
குழப்பலாம்.


போல் போல போன்று
இல்லாதிருப்பதால்
மற்றும்
போல போல் போன்று
இல்லாதிருப்பதால்
போல் போல போன்று
வைக்கலாம்
அல்லது
போல போல் போன்று
வைக்கலாம்.

போல் போல போன்று
ஆகிப் போனால்
அல்லது
போல‌ போல் போன்று
ஆகிப் போனால்
மீண்டும்
போல் போன்று போல
இருப்பதால்
மற்றும்
போல போன்று போல்
இருப்பதால்
......
......
......

- ஞானசேகர்