புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Sunday, October 30, 2005

தலைப்பில்லாமல்

உங்களில் தவறு செய்யாதவன் முதலில் கல்லெறியட்டும்.
-இயேசு கிறிஸ்து


குழந்தைகள் பசியாற
பயங்காட்டும் வேடங்களில்,
ஆண்மை தொலைத்தவனின்
அராஜக அடக்குமுறைகளில்,
பெண்பித்தன் பதிக்கும்
சொல்லமுடியா காயங்களில்,
பருவம் திறக்கப்படாதவர்கள் செய்யும்
பருவம் மீறிய பரீட்சைகளில்,
பிரம்மச்சாரிகள் சிலரின்
பிரம்மாஸ்திர சோதனைகளில்,
சலித்துப்போன சம்சாரிகளின்
மாற்றம் தேடும் தேடுதல்களில்,

ஆட்டுச் சந்தை நடக்கும் உடைந்த
பிள்ளையார் கோயில் சந்துகளில்,
உடையின் உபயோகம் அறியாமல்,
கெடுக்கப்படும் கொடுமை அறியாமல்,
சுத்தம் சுற்றம் ஏதும் அறியாமல்,
"கொழந்தயக் குடு" என்பது தவிர
வேறு வார்த்தை தெரியாமல்
உடைந்த பிள்ளையார் சிலையுடன்
ஒவ்வொரு நாகரீக ஊரிலும்
வாழ்ந்து வருகிறாள் ஒருத்தி!
-ஞானசேகர்

Friday, October 28, 2005

நிழல் சொல்லும் நிஜங்கள்


சிலிர்த்த சில முடிகள்,
சிமிட்டிய இரு கண்கள்,
எடுப்பற்ற வண்ணப் பின்னணி,
குறைபட்ட ஆடை அலங்காரம்,
பிடித்தவரின் தூரம்,
பிடிக்காதவரின் அருகாமை,
உதடு சொல்லாத சிரிப்பு,
அழகு குறைக்கும் அழுகை,
ஆயுள் குறையும் பயம்,
தொழில்நுட்பக் குறைபாடு
இவற்றுடன் பதிவு செய்யப்படுவதால்
எப்போதும் எடுக்கப்படுவதில்லை
நான் விரும்பியபடி
என்னுடைய புகைப்படம்!
-ஞானசேகர்

Wednesday, October 26, 2005

நிலாக்காதலன்

In the doorway of my heart I hang a board saying, 'It is not a common way'. But Love entered into me and said, 'I can enter anywhere'.

நேற்றிரவு
தூக்கம் கலைத்த
குணா திரைப்படத்தின் முடிவுக்காட்சி....

ஈன்றவளின் இதயம் கேட்ட
இரக்கமில்லாக் காதலி போன்ற
முன்னுதாரணக் கதைகள்....

எப்போதாவது
கனவில் வந்து போகும்
Achilles என்ற கிரேக்க வீரனின்
கணுக்கால் காயங்கள்....

அடிக்கடி அசை போடப்படும்
குழந்தை பாடும் தாலாட்டு....

காதலிக்கும் என் நண்பர்களுக்கு
அய்யாத்துரை முதல்
எட்வர்டு வரை
நான் நீட்டிய பட்டியல்கள்....

இவை அனைத்தும்
என்னை எச்சரித்தும்....
அந்நகரின் வீதிகளில்
அலைந்து திரிகிறேன்...
குரல்கூட குறிக்கப்படாத
அந்த முதல் காதலின்
முகவரிதேடி....
-ஞானசேகர்

Monday, October 24, 2005

பெண்பாவம்

Fathers want their sons to follow their footsteps. Mothers want their daughters to live the life what they missed.

பக்கத்தில் திரும்பிப் பார்க்க
பார்க்க மனமில்லாதவளாய்
ஒரு தாய் படுத்திருக்க
முதல் மூச்சுக்காற்றை
உள்ளிழுக்கக் கஷ்டப்பட்டு
பீறிட்டு அழுது போனாய்!

ஒரு வாரம் கழித்து
மீண்டும் பள்ளி செல்ல
"ஒக்காந்த நீ
எப்ப எந்திருச்ச?" என்று
பயல்கள் கிண்டல் செய்ய
கூனிக் குறுகிப் போனாய்!

மூவேழுக்குள் பெண்களெல்லாம்
பிள்ளைகள் பெற்றிருக்க
முதிர்கன்னி பயம் வந்துவிட
அவசர அவசரமாய்
அதிக விலை கொடுத்து
ஒரு மாப்பிள்ளை கட்டிப் போனாய்!

ஆபத்தான காலம் என்று
எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்
பச்சை பிள்ளை போல
மண்டியிட்டு மன்றாடும்
கணவனின் காமத்தை
இயற்கை மீறி தணித்துப் போனாய்!

உயிர் கொடுத்த அப்பா
உயிர் பிரிந்து போய்விட
கஞ்சி ஊத்தா மகனெல்லாம்
சுடுகாடு கடைசிவரை போய்வர
அப்பாவுக்குச் செல்லப்பிள்ளை
முச்சந்தியில் திரும்பிப் போனாய்!

குடிகார புருஷன்
கிணற்றில் தவறி விழுந்து
மூச்சுத்திணறி செத்துப்போக
அமங்கலி பட்டத்துடன்
தம்பி கல்யாணத்துக்குப்
போகாமலே இருந்து போனாய்!

தன் பிள்ளைக்கு
முதல் ஆசிர்வாதம்
அக்கா கையால் என்று
தம்பி கேட்டுக் கொள்ள
வீட்டுக்குத் தூரம் என்று
ஆசிர்வாதம் மறுத்துப் போனாய்!

ஒதுக்கப்பட்டது நீதான்!
நகைக்கப்பட்டது நீதான்!
விற்கப்பட்டது நீதான்!
அடக்கப்பட்டது நீதான்!
மறுக்கப்பட்டது நீதான்!
நசுக்கப்பட்டது நீதான்!

உயிர் சுமக்கப் பெண்ணுக்கு
இயற்கை தரும் அங்கீகாரம்
உன் மகளுக்கும் திறக்கப்பட
ஊர் முழுக்கச் சொல்கிறாயே
நீ கூடவா உணரவில்லை
ஒரு பெண்ணின் சோகம்?
-ஞானசேகர்

Saturday, October 22, 2005

இதுதான் காதலா?

(இந்தியாவில் எல்லோராவிலும் (மஹாராஷ்ட்ரா), சித்தன்னவாசலிலும் (தமிழ்நாடு) மட்டும்தான் சமணர்களின் ஓவியங்கள் உள்ளன. சித்தன்னவாசலில் ஒருகாலத்தில் சமணர்கள் மறைவாய்த் தவம் செய்த குகைகள், இன்றைய நாளில் காதலர்கள் மறைவாய்க் கலவி செய்யும் புகல்கள்)

பல்லாண்டுகள் அழியாமல் இருந்த
சித்தன்னவாசல் ஓவியங்களைப் பார்த்து
நீ அதிசயித்தாய்.
உன்னை அங்கேயே விட்டுவிட்டு
மலையில் அலைந்து
ஓவியங்களில் உபயோகிக்கப்பட்ட
மூலிகைகள் கொண்டு வந்தேன்.
அவற்றை வைத்து நீ
நம் பெயர்களைப்
பாறையில் எழுதினாய்.
சில நாட்கள் கழித்து
மீண்டும் அங்கே வந்தோம்.
பாறையில் நம் பெயர்கள் இல்லை.
சோகத்துடன் கீழிறங்குகையில்
சமணர் படுக்கைகளில்
குத்திக் குதறப்பட்ட
சில காதலர்களின்
அழியாத பெயர்கள் இருந்தன.
என்ன செய்ய?
உண்மைக் காதலுக்கு
உருப்படியான சாட்சிகள் இருப்பதில்லை.
-ஞானசேகர்

Friday, October 21, 2005

காதல்

இவை இரு தலைப்புகளில் எழுதப்பட்ட ஒற்றைக் கவிதைகள். ஒரு தலைப்பு கவிதையின் மேலே, மற்றொன்று 'காதல்'.

சாமியார்
---------
கையில் விலங்குகள்
காலில் பக்தர்கள்!

கனடா (Canada)
------
இங்கு
ஒன்றுமில்லை!

சனிக்கிரகம்
-----------
அர்த்தமற்ற
மூன்று வளையங்கள்!

நகம்
-----
கடித்துத் துப்பினாலும்
சதைதான் வேண்டும்
என்கிற பிடிவாதம்!

ஆண்தேனீ
---------
பெண்ணை விட்டிருந்தேன்
கொட்டிப் பார்த்தது!
பெண்ணைப் பிடித்திருந்தேன்
சுற்றிச் சுற்றி வந்தது!

சுனாமி
------
உள்வாங்கி
வெளிகொடுத்து
உள்வாங்கிப் போனது!

அகராதி
-------
ஒரு வார்த்தைக்குப்
பல அர்த்தங்கள்.
பல வார்த்தைகளுக்கு
ஒரே அர்த்தம்.
உறுவார்த்தை வரும்வரை
உற்ற துணைவன்!

தமிழ்
-----
தனக்குமுன் மூத்த ஐவர் இருக்க
கல்லும் மண்ணும் இல்லாதபோதே
வாள் செய்துவிட்டு
மெல்ல செத்துக்கொண்டிருக்கும்
"யாதும் ஊரே, யாவரும் கேளிர்"
என்ற திரைகடலோடும் திரவியம்!

பெண்
-----
வரலாறு பார்த்தும்
தானே பட்டும்
இன்னும் திருந்தாத
பலியும் பழியும்
செய்து வரும்
செம்மறி ஆடுகள்!

-ஞானசேகர்

Thursday, October 20, 2005

இடைவேளைக்குப்பின் காட்சியில்லை


எனைத்தவிர வேறொன்றை ரசிக்கவில்லை நீதான்
இவ்வுலகில் எனக்கான பெண்வடிவம் நீதான்

புகழுச்சியில் எனையேற்றி வைத்தவள் நீதான்
அடையாளம் காட்ட அருகிலில்லை நீதான்

என்னைப் பிறர் ரசிக்கச் செய்தவள் நீதான்
உன்னை நான் மறக்கச் செய்யவில்லை நீதான்

என் உயிருக்குச் சாட்சியாய் இருந்தவள் நீதான்
என் காதலுக்குச் சாட்சி சொல்ல மறுத்தவள் நீதான்

நாயகியாய் என் வாழ்வில் வந்தவளும் நீதான்
நாடகத்தில் மறுபாதி வரவில்லை நீதான்

என் கவிதையின் கருவாய் இருந்தவள் நீதான்
என் காவியத்தில் இல்லாத நாயகி நீதான்

கடந்தகால என் கனவை நிரப்பியவள் நீதான்
எதிர்கால என் வாழ்வின் வெற்றிடம் நீதான்

விண்மீனாய் என் வாழ்வை அலங்கரித்தாய் நீதான்
எங்கோ எரிகல்லாய் மறைந்துபோனாய் நீதான்

அன்று என்னைத்தேடி வந்தவளும் நீதான்
இன்று உன்னைத்தேட வைத்தவளும் நீதான்

உன் பேர் சொல்லக் கூசவைத்தாய் நீதான்
உன் பேர்சொல்லிக் கூப்பிட பக்கமில்லை நீதான்

என் பேருக்கேற்றபடி வாழவைத்தாய் நீதான்
உன் பேருக்கேற்றபடி முடித்துக் கொண்டாய் நீதான்

நான் சிரிக்க உடன் சிரித்தவளும் நீதான்
நான் அழுக மௌனமாய் இருப்பவளும் நீதான்

கரைதொடும் நுரைதொட நடுங்கியவள் நீதான்
நீராலே நுரையீரல் நிரப்பிக்கொண்டாய் நீதான்

உன் நாவால் என் வாழ்வைச் செதுக்கியவள் நீதான்
உன் வாய்க்குள்ளே உன் நாவைப் பதுக்கியவள் நீதான்

விரலோடு விரல் கோர்க்க மறுத்தவள் நீதான்
சுருட்டிய விரல் விறிக்க மறந்தவள் நீதான்

விழிதானம் செய்ய என்னைத் தூண்டியவள் நீதான்
சொருகிய விழிகள் திறக்காமல் போனவள் நீதான்

உயிரற்ற உன் உடலைக் காட்டவில்லை நீதான்
என்னுயிரும் நீதான் எனக் காட்டிவிட்டாய் நீதான்

கடற்கரையில் உனைத்தேடி காணவில்லை நான்தான்
ஒருபக்கம் வார்ப்பற்ற செல்லாக்காசும் நான்தான்

-ஞானசேகர்
(சுனாமியில் காதலி தொலைத்த காதலர்களுக்குச் சமர்ப்பணம்)

Tuesday, October 18, 2005

சாகாவரம்

Morality is a matter of money. Poor people cannot afford to have morals. So they have religion.
-Khushwant Singh


கடவுள் செய்தும்,
காதல் செய்தும்,
கடவுள்
காதல் செய்தும்,
கடவுள் காதல் செய்தும்,
காதல்
கடவுள் செய்தும்,
காதல்கடவுள் செய்தும்......
இந்த இரட்டைக் குவியங்களைத்
திருப்திப்படுத்தப் போய்
நீள்வட்டப் பாதையில்
தலைகுனிந்தே சுற்றுகிறது பூமி !
-ஞானசேகர்

Sunday, October 16, 2005

காதலை ஏமாற்று

"போன வருஷம்
இதே திருவிழாவில்தான்
உன் வித்தியாசமான
முகபாவனைகளைப் பார்ப்பதற்காக
வேண்டுமென்றே காணாமல்போய்.....
என்னைத் தேடிய உன் விழிகளைக்
கூட்டத்தில் இருந்து ரசித்தேன்.
அதேபோல் இந்த வருஷமும்....."
என்று மனதில் பேசிக்கொண்டே
அருகில் பார்த்தேன்.
உன்னைக் காணவில்லை!

ஒருமணிநேரத் தேடுதலுக்குப்பின்
என் முதுகு பற்றிய நீ,
"இவ்வளவு நேரமாய்
எங்கே போனீங்க?...."
என்று ஏதோ சொல்ல
எத்தனித்தாய்.
உன்னை மார்பில் சாய்த்து
கண்ணீர் துடைத்தபோது
நடிக்கத் தெரியாத
உன் விழிகள் சொல்லின:
"இவளும்
உன்போலத்தான்
ஏமாற்றப் பார்க்கிறாள்!".

தோளில் கைபோட்டுக்கொண்டு
வீடு திரும்புகையில்
வாயில் சொல்லாமல்
மனதில் சொன்னேன்:
"அடுத்த வருஷம்
நாம் முந்திக்கொண்டு
முதலில் காணாமல் போகவேண்டும்!".
-ஞானசேகர்

Friday, October 14, 2005

கோவிந்தா! கோவிந்தா!

தெரிந்த பூமியைப் பார்க்க மறந்ததும்,
தெரியாத கடவுளைத் தேடி அலைந்ததும்தான்
தமிழன் செய்த தவறு!
-வைரமுத்து


"போனா போகட்டும்
கோழிக்குஞ்சுதானே?
'கருடா! கருடா!' என
துதிபாடிய வாயால்
ஏன் இவ்வளவு
கெட்ட வார்த்தைகள்?"

"பருவமழ பொய்ச்சாலும்
கறவமாடு ரெண்டையும் வித்து
கடனக்கொஞ்சம் வாங்கி
நாமுழுக்கக் கால்கடுக்க நின்னு
கண்ணு சிமுட்டுன நேரத்துல
பெருமாளப் பாத்த திருப்(ப)தியெல்லாம்
ஏழுமல தாண்டிப் போச்சுது
களவுபோன வீட்டப் பாத்தப்ப!"
-ஞானசேகர்

Wednesday, October 12, 2005

சரியான தவறுகள்

உங்கள் தலைமுடிமீதுகூட உங்களுக்கு உரிமை இல்லை.
-இயேசு கிறிஸ்து


அம்மாவின் கல்யாணப் புடவையில்
ஆதாமின் ஆப்பிளைக் கட்டி
கண்களை இறுகமூடி
வார்த்தைகள் கவனிக்காமல்
ஏதோ முனகிவிட்டு
உத்திரம் இருக்கும் உத்திரவாதத்தில்
நாற்காலிக்குக்கூட
சுமையாக இருக்க விரும்பாமல்
அதைவிட்டு விலக.....
துள்ளிக் குதித்தேன்
சந்தோஷமா?
யோசிக்க நேரமில்லை..

ஏதோ பார்க்க நினைத்தேன்.
கண்களுக்கு அனுமதி தந்த இமைகள்
பார்வைக்குத் தரவில்லை!
ஏதோ பேச நினைத்தேன்.
நாக்குக்கு அனுமதி தந்த உதடுகள்
வார்த்தைக்குத் தரவில்லை!
நான் செய்வது சரிதானா?
யோசிக்க நினைத்தேன்.
மூளைக்கு அனுமதி தந்த உடம்பு
கழுத்தருகே ஒடிந்துபோன
முதுகெலும்புக்குத் தரவில்லை!

இக்கணம் நான்
பூமிமீதும் இல்லை!
ஆகாயத்திலும் இல்லை!
இரண்யகசிபு போல....
இயேசுநாதர் போல....
இப்படித்தான் நானும்
செத்துப் போனேன்!
-ஞானசேகர்

Sunday, October 02, 2005

இதுவும் காதலா?

(எனது ஒரு சிறு சிறுகதை முயற்சி)

"காதல் யாருக்கும்
ராசியில்லை.
ஆனாலும் யாரும்
விடுவதாயில்லை!"
-யாரோ


"வாழ்ந்துகொண்டே செத்ததுண்டா?
செத்துகொண்டே வாழ்ந்ததுண்டா?
காதலித்துப் பார்!
ஐந்தங்குல தொலைவில் அமிர்தம் இருந்தும்
பட்டினி கிடந்து பழகியதுண்டா?
காதலித்துப் பார்!"
-வைரமுத்து


அக்டோபர் 2, 2003.
இன்றோடு என் தலையில் கிறிஸ்துமா தைலம் தடவி, எனக்குப் பெயர் வைத்து 18 வருடங்கள் ஆயிற்று. பெற்றவர் பல சுதந்திரங்கள் கொடுத்தும், திருச்சியைவிட்டு வெளியே நான் போனதில்லை.

19 வயதாகியும் வெளியுலக அறிவு இல்லாத என்னை, உலக கஷ்டங்கள் அறியவைக்க எனக்கே தெரியாமல் அப்பா ஒரு திட்டம் போட்டார். "இந்த வருடப் பிறந்தநாளை நான் மட்டும் தனியாக, தஞ்சாவூரில் உள்ள சித்தப்பா குடும்பத்துடன் கொண்டாட வேண்டும்" என்று கூறி என்னை மட்டும் தனியாக அங்கே அனுப்பி, சித்தப்பா குடும்பத்தை இங்கே வரச் செய்து, சில கஷ்டங்கள் நான் படவேண்டும் என்பதே அந்தத் திட்டம். நல்லதொரு விஷப்பரிட்சை! இத்திட்டம் தெரியாமல் நானும் சம்மதித்தேன். முதன்முதலில் தனியாகப் பேருந்தில் பயணம், மலைக்கோட்டை நகரிலிருந்து, தலையாட்டி பொம்மை நகருக்கு. புது பஸ் ஸ்டாண்டில் இருந்து அடுத்த பஸ் எறி, சித்தப்பா வீடு போய்ச் சேர்ந்தேன்.

மாலை 4 மணி. பூட்டிய வீடு. பக்கத்து வீட்டு மாமியை விசாரித்தால், "சாந்தி தியேட்டருக்குப் படத்துக்குப் போகணும்னு சொல்லின்ட்ருந்தா. எதுக்கும் 6 மணிவர வெய்ட் பண்ணு" என பதில் வந்தது. மாடிவீட்டு அக்கா எவ்வளவோ கூப்பிட்டும் அவர்கள் வீட்டில் உட்காராமல், சித்தப்பா வீட்டுத் திண்ணையிலேயே அமர்ந்திருந்தேன். ஆறுமணியும் கைவிட்டது. இருட்டு கை பிடித்தது. பயப்படாமல் 3 மணிநேரம், திண்ணையிலேயே ஓட்டிவிட்டேன். எப்படி வந்தது இவ்வளவு தைரியமும், பொறுமையும்?

வீதியில் நடந்து போவதைப் போல, சில ஆண்களின் சந்தேகப் பார்வைகள் என்னைக் குத்திப்பார்த்தன. தெருமுனையில் நடந்த காந்தி ஜெயந்தி விழாவில் கலந்துவிட்டு, மணி பார்த்தால் 7:30. நேரம் போவதற்குள் வீடு திரும்புவது நல்லது என யாரிடமும் சொல்லாமல் நடக்க ஆரம்பித்தேன். பஸ் ஸ்டாப் வரை சில வாலிபர்கள் எனக்கு பாதுகாப்பாக வந்தனர்.

இரவு 8 மணி. தஞ்சாவூர் புது பஸ் ஸ்டாண்ட். வசந்தபவனில் சாப்பிட்டுவிட்டு, திருச்சி பஸ் நிற்கும் இடத்திற்கு வந்தேன். அது கொஞ்சம் ஓரமான இடம். சாய்ந்துகொள்ள ஒரு தூண் கிடைத்தது. ஏற்கனவே தாமதமாகி விட்டதால் திருச்சி சென்று, வீட்டுக்குப் போன் செய்யலாம் என நினைத்தேன்.

இரவு 8:30 மணி. லேசாகத் தூங்கப் பார்த்த என்னைத் தூண்தான் தாங்கிப் பிடித்திருந்தது. என் பின்னால் இருந்து திடீரென வந்த நான்கு வாலிபர்கள்-அதில் ஒருவன் திண்ணையில் என்னை முறைத்தவன்-என்னை மையமாக வைத்து ஒரு வட்டம் போட ஆரம்பித்தனர்.
"எங்கள்ல யாரப் புடிச்சிருக்கு?"
"இந்த நேரத்துல இப்புடி சுத்துறியே? தொழிலுக்கு வந்தியா?"
"திண்ணையில நல்லா லூக்கு குடுத்த. இப்ப கம்பெனி கொடுக்கிறியா?"
"திருச்சி திருச்சிதான்டா"
இவையெல்லாம் அவர்கள் மையம் நோக்கி வீசிய வார்த்தை அம்புகள்.

மூன்றுபேர் சில எழுதமுடியாத வார்த்தைகள் பேச, ஒருவன் மட்டும் ஒரு பாட்டிலுடன் என்னை நெருங்கினான். திடீரென சம்மந்தமே இல்லாமல் கருப்புச் சட்டையுடன் ஒருவன் வேகமாக வட்டத்தைத் துளைத்து வந்தான். அவனின் இடதுகை என் தோள்மேல்
இருப்பதுபோல், என் தாடை நகரவிடாமல் பிடித்தது. அவனின் வலதுகை என் தலை கோதுவதுபோல், என் தலையை அமுக்கியது. "என்ன கவிதா ரொம்ப நேரமா வெய்ட் பண்றியா? நீடாமங்கலம் வரைக்கும் போயிருந்தேன். அதான் லேட்டு. அப்பறம் நாளைக்கு........." என ஏதோ பேசிக்கொண்டே, வட்டத்தைத் துளைத்துக் கொண்டு என்னை ஒரு டீக்கடைநோக்கி இழுத்து வந்தான். "நான் கவிதா இல்ல. என்ன விடுங்க" என கத்தப் பார்த்தால் அவன் பிடிகள் பேச்சைத் தடுத்தன.

ரெண்டு டீ சொல்லிவிட்டு, தொடர்ந்து சம்மந்தமில்லாமல் பேசிக்கொண்டு இருந்தான். நான்கு பேரும் எங்கள் அருகே சம்பந்தமில்லாததுபோல் வந்து நின்றனர். பிடி தளர்த்தி டீ கொடுத்தான். ஒரு திருச்சி பஸ் வந்து நின்றது. அவன் கைகள் என் கையைப் பிடித்திருந்ததால் நான் நகரவில்லை. பஸ் போய்விட்டது. நால்வரும் தலை சொறிந்து தலை மறைந்து போயினர். வீட்டுக்குப் போன் செய்ய அனுமதி தந்து பிடி தளர்த்தினான். என்னைப் பற்றி ஏதும் கேட்காமல், என்னைத் திட்டாமல், யாரையோ பார்த்துவிட்டு வந்தாக ஏதோ விரக்தியாகப் பேசினான், துளிகூட சிரிப்பில்லாமல். ஒரு திருச்சி பஸ் போனது. நான் நகராமல் நின்றுகொண்டிருந்தேன். போன்பூத் அருகில் வேளங்கண்ணியில் இருந்து திருச்சி செல்லும் குடும்பம் ஒன்றைப் பார்த்தேன். "இவர்களுடன் போய்க் கொள்கிறேன்" என்றேன். என் ஊர்கூடக் கேட்காமல் நடைகட்டி அவனும் இருட்டில் மறைந்து போனான்.

இரவு 9 மணி. ஒரு தனியார் பேருந்தில் அந்தக் குடும்பத்துடன் ஏறினேன். படிக்கட்டை ஒட்டிய சீட்டில் ஜன்னலோரத்தில் அவன் மட்டும் தனியாக அமர்ந்திருந்தான். என்ன ஒரு co-incidence? அவன் அருகில் அமர்ந்தேன். ஜன்னல் வழியாக எதையோ பார்த்துக் கொண்டிருந்தவன், ஒரு வினாடி என் பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டு, மீண்டும் ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டான். நானே முன்வந்து முதன்முதலில் என் குரலை அவனுக்கு அறிமுகப்படுத்தினேன்.
"ரொம்ப தேங்ஸ்"
"கிருஷ்ணா! கிருஷ்ணா!ன்னு கத்துனா கிருஷ்ணன் வரவேமாட்டாரு. இதுக்கெல்லாம் இன்னொரு ஆள எதிர்பார்க்காம, நீங்களே...."
"உங்க பேர் என்ன?"
மறந்துபோனது போல ரொம்ப யோசிச்சு,
"சேகர்"
என் பெயர் கேட்கப்படவில்லை.
"ஊர்?"
திரும்ப அமைதி. பிறகு
"புதுக்கோட்டை"
"புதுக்கோட்டைன்னா?"
திரும்ப அமைதி. பிறகு
"ராணி ஆஸ்பத்திரி பக்கத்துல"
"புதுக்கோட்டைக்கு டேரக்ட் பஸ் இருக்குறப்ப, ஏன் சுத்திப் போறீங்க?"
பதிலே இல்லை. மீண்டும் ஜன்னல் பக்கம்.
கடைசி சீட்டில் இருந்து ஒருவன் எழுந்துவந்து என் முகம் பார்த்துவிட்டு எனக்குப் பின்னால் அமர்ந்தான். இவன் கருவேள மரங்களை ரசித்துக்கொண்டு இருந்தான். தூங்க ஆரம்பித்தேன். சில நேரங்களில் அவன் தோள் சாய்ந்தேன். NIT (REC) தாண்டியபிறகு விழித்துப்
பார்த்தால், அவன் அருகில் இல்லை.

"யாரையோ பார்த்ததாக என்னிடம் விரக்தியாகச் சொன்னானே. என்ன சோகமோ? இப்படி உதவி செய்த இவருக்கு, அவர் சொன்ன சோகம் கேட்காமல் போய்விட்டோமே" என நினைத்துக்கொண்டே வீடுவந்து சேர்ந்தேன். அப்பாவும், சித்தப்பாவும் வெற்றிபெற்று
விட்டதாகப் பெருமிதப்பட்டனர். நடந்தது ஏதும் சொல்லாமல், அவன் ஞாபகமாய் இருந்தேன். தூக்கம் வராத அந்த இரவில் நான் யோசித்தபோது, என்னை உலகம் அறியச்செய்ய அப்பா போட்ட திட்டம், என் உலகமே அவன் தான் என்ற அளவுக்குக் கொண்டுபோய்விட்டது. சாது நான் மிரண்டு போனேன். மறுநாளே புறப்பட்டேன் அவன் இடம் தேடி. ப்ரண்டு வீட்டுக்கு என்று அப்பாவிடம் பொய். புதுக்கோட்டை ராணி ஆஸ்பத்திரி வீதியெங்கும் அலைந்தேன். அப்படி ஒருவன் இல்லை. அவன் கண்டிப்பாக என்னைச் சமாளிக்கத்தான் ஏதோ ஒரு இடத்தைச் சொல்லியிருக்க வேண்டும். இவ்வீதி பொய்யாகலாம். தூண் பொய்யல்ல. தஞ்சாவூர் புறப்பட்டேன். தூணில் வெகுநேரம் சாய்ந்து நின்றுவிட்டு வீடு திரும்பினேன். ஒவ்வொருமுறை சித்தப்பா வீட்டிற்குச் செல்லும்போதும், அவன் ஞாபகம்
அதிகமாய் வரும்போதும் தூணைக் கண்டிப்பாகச் சந்திப்பேன். நிறையமுறை தூண் சாய மட்டுமே சென்றுவிட்டு, சித்தப்பா வீட்டுக்குச் செல்லாமல் வந்ததுண்டு.

"இது காதலா?" என்னைக் கேட்டேன். நான் பதில் இல்லாமல் இருந்தேன். "தந்தையைத் தவிர என்னை அதிகம் பாதித்த ஆண் அவன்மட்டும்தான். இன்னும் உலகுடன் பழகிப் பார்த்தால் வெகு ஆண்களைச் சந்திக்கக் கூடும். இவனும் மறக்கப்படுவான்" என்றேன்
நான். "அவன் மறக்கப்படக்கூடிய ஆள் இல்லை" என்று பதில் சொன்னேன். "முகவரி இல்லாமல் தேடுவது, பெயரில்லாமல் தேடுவது, தூணைத் தேடுவது எல்லாம் ஏற்றுக்கொள்ளத்தக்கதா? பைத்தியக்காரத்தனம் இல்லையா?" எனக் கேட்டேன் நான். "சில நேரங்களில் இதயத்தைச் சமாதானப்படுத்துவதைவிட மூளைக்கு அடிமையாவதே உத்தமம்" எனச் சொல்லி வாதத்தை முடித்தேன். அவனும், தூணும் என்னுடைய முதல் ரகசியங்களாகத் தொடர ஆரம்பித்தன.

அக்டோபர் 2, 2004.
இன்று எனக்கு இருபதாவது பிறந்தநாள். தஞ்சாவூருக்குக் கிழம்பினேன். சித்தப்பா வீட்டுக்கு அல்ல. தூணுக்கு. இது ஏழாவது முறை என்று நினைக்கிறேன். மூன்று மணிநேரம் பொழுது ஓடிவிட்டது. வீடு திரும்பினேன். கோயிலுக்குக் கிழம்பினோம். அம்மா அப்பா முன்னாடியே கிழம்பி போய்விட்டனர். நான் புடவை கட்டிக்கொண்டு இருந்தேன். கொஞ்சம் தனியாக இருந்த எங்கள் வீட்டுக் கதவை யாரோ தட்டினர். கதவைத் திறக்காமல்,
"யாரது?"
"தண்ணி"
புடவை கட்டி முடித்துவிட்டு, செம்பு தேடினேன். அவசரத்தில் பாட்டி காலத்து செம்புதான் கிடைத்தது. முகம் பார்க்காமல் சொம்பைக் கொடுத்தேன். முகம் பார்த்திருந்தால் சொம்பின் கதி? அது அவனேதான். என்னை அடையாளம் கண்டுகொண்டான். சிரிக்க வந்தவன், சிரிப்பு அடக்கி தாகம் நினைத்து, குடிக்க ஆரம்பித்தான்.
"ஏன் புதுக்கோட்டைன்னு பொய் சொன்னீங்க?"
".........."
"பேராவது உண்மையா? சேகர்தானே?"
".........."
"இன்னைக்கு எனக்கு உண்மை வேணும்"
"தண்ணி"
"உள்ள வாங்க. எங்க வீடுதான்."
"போங்க வர்றேன்"

"தாயுமானசாமி கைவிடல. அவங்கிட்ட ராணி ஆஸ்பத்திரி வீதியில தேடினது முதல், எழுமுறை தூண் சாய்ந்தது வரை சொல்லி, ஏன் எனக்கு இப்படி ஒரு பைத்தியக்காரத்தனமான வாழ்க்கை உன் விஷயத்தில் மட்டும்? இன்னக்குக் காலையில் கூட தூணுக்கு வந்தேன். கரக்டா இன்னொட நாம பாத்து ஒரு வருஷம் ஆகுது. ஓன் பேருல வேற யாரையுமே நான் பாத்ததில்ல. நீ வந்தால் மட்டும்தான் நான் சரியாக முடியும். நீ இல்லாமலே உன்னைப் பற்றி ஒரு வருடம் நினைத்திருந்தேன். நீ மட்டும் வந்துவிட்டால்?". இன்னும் ஏதேதோ பேச, கேட்க வேண்டும் என சொம்பை நிரப்பிக்கொண்டு ஓடிவந்தேன். வீட்டுக்குள் அவன் வரவேயில்லை. வாசலிலும் இல்லை. அவன் நின்ற இடத்தில் சோனா தியேட்டர் டிக்கட் மட்டும் கிடந்தது.

நான்கு பேரால் ஏமாற்றப்படாமல் காப்பாற்றப்பட்ட நான், ஒருவனால் அவனுக்கே தெரியாமல் அடிக்கடி ஏமாற்றப்பட்டேன். மீண்டும் எனது பைத்தியக்காரத்தனம் தொடர்ந்தது, இப்போது அதிக வீச்சில், இன்னும் நம்பிக்கையுடன்.

அக்டோபர் 2, 2005.
இன்று எனக்கு இருபத்தி ஒன்றாவது பிறந்தநாள். போலந்தின் மன்னர் ஜானுக்கு அடுத்து, ஒரே தேதியில் பிறந்து, பெயர் சூட்டப்பட்டு, இறந்து, வாழ்க்கைத்துணை சந்தித்து, திருமணம் செய்துபோனது நானாகத்தான் இருக்கும். ஆம், பெற்றோரின் கட்டாயப்படி கல்யாணமும், என் விருப்பப்படி ஒரு தஞ்சாவூர் மாப்பிள்ளையும் என் திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டனர். கல்யாணம் தஞ்சாவூரில். முதலிரவு திருச்சியில்.

இரவு 9 மணி. கல்யாணம் முடிந்துவிட்டது. முதலிரவுக்குப் பாட்டியின் செம்பை வலைவீசி தேடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்தநாள் முடிய இன்னும் மூன்று மணிநேரம் இருக்கிறது. நான் மட்டும் மணமாலையுடன், கழுத்து நகைகளுடன், இறந்தகாலத்தை இறக்கவிட மனமில்லாமல், எதிர்காலத்தை எதிர்கொள்ள முடியாமல், ஏதோ ஒரு நம்பிக்கையில், தஞ்சாவூர் புது பஸ் ஸ்டாண்டில் அந்த ஒற்றைத்தூணில் சாய்ந்துகொண்டு நிற்கிறேன்.

திருச்சி தனியார் பஸ் ஒன்று என்னைக் கடந்து போய்க்கொண்டு இருக்கிறது. டீக்கடையில் T.ராஜேந்தரின் "வாசமில்லா மலரிது" என்ற பாடல் பாடிக்கொண்டு இருக்கிறது. "என்ன சுகம் கண்டாய் இன்றுவரை தொடர்ந்து உனக்கேன் ஆசை?" என்ற வரிகள் எனக்கு நன்றாகவே கேட்டன. அதை
நான் என்னிடம் கேட்டுக் கொள்ளவில்லை. ஏனெனில் நான் செய்வது வார்த்தைகளில், எழுத்துகளில் சிக்காத மனுவல்லாத தர்மம்!

அக்டோபர் 2, 2006: ?யா? இல்லை !யா? இல்லை .யா?

-(இக்கதையில் வரும் நான் என்ற வார்த்தை, என்னைக் குறிக்காததால், இவ்விடத்தில் என் பெயர் போடவில்லை)

"நாம் நமக்கே தெரியாமல், எதிர்பார்க்க முடியாத வகையில், யாரோ ஒருவரால் உன்னிப்பாக அன்பு செய்யப்படுகிறோம்"
-ஞானசேகர்