புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Tuesday, December 13, 2005

110 கோடி முகமுடையாள்

('முதல் மற்றும் கடைசி வரிகள் 'விதை' என்ற வார்த்தையைக் கொண்டிருக்க வேண்டும்' என்ற கட்டுப்பாட்டுடன் எங்கள் கல்லூரிக் கவிதைப் போட்டியில் நான் எழுதிய கவிதை இது, கொஞ்சம் திருத்தங்களுடன்)

விதைக்க இடம் வாங்கி
இடமே அவனது என்றான்
குத்தகைகாரன்.

குத்தகை நீக்கி
உரிமை மீட்க
மக்களை அனுப்பினால்
என் மார் முட்டி
தலை பாதி
வெட்டிப்போனது ஒன்று;
இடது கை
வெட்டிப் போனது இன்னொன்று.
கூத்தாடி துண்டுபட்டான்
ஊருக்குக் கொண்டாட்டம்!

இருக்கும் மக்கள்
என்னுயிர் எடுப்பதற்குள்
சொத்தைப் பிரித்து
சமரசம் செய்தேன்.

சொத்தின் அளவை
வாயின் அளவே
தீர்மானித்துப் போனது.

இப்போது....

இடது கை
எடுத்துப் போனவன்
தாய்நாடி வருகிறான்.

தலை பாதி
எடுத்தவனின் அடுத்தவன்
தாய்விட்டுப் போகப்பார்கிறான்.

என் இதயத்தில் இடி,
வயிற்றில் விஷவாயு,
வலதுகையில் தீப்பந்தம்,
இடதுகையில் தொழு,
காலில் பித்தவெடிப்பு.

என் கண்ணீர் பசையில்
நனைந்தது வங்கக்கடல்.
என் பாதத்தை விசையில்
கரைத்தது வங்கக்கடல்.

ஐய்யகோ.....

மக்களைப் பிரித்து
மாதவறு செய்தேன்
மரிக்கும் வரையில்
மனம் நொந்து போவேன்.

மக்களைக் கூட்டி
சமரசம் செய்ய
மன்றம் போனால்
உச்சந்தலையில்
விதைக்கிறான் குண்டுகள்!

-ஞானசேகர்

Friday, December 09, 2005

Onychophagia

பழக்கம் என்பது கடினமான மலை; தகர்ப்பதும் கடினம்; தாண்டுவதும் கடினம்.
-மோகன்தாஸ் கரம்சந்த காந்தி

சாகும் நேரத்தில்தான்
மனிதன் வாழக் கற்றுக்கொள்கிறான்.
-யாரோ


"பிதுக்கித் தேடுகிறான்
கடித்துத் துப்புகிறான்
துண்டாக்கி விழுங்குகிறான்
கண்டிப்பவரைக் கண்டிக்கிறான்
அடியை ஆட்டிப் பார்க்கிறான்
நுனியை வெட்டிப் பார்க்கிறான்
முதல் மூட்டுவரை
தோலைக் கிழிக்கிறான்

இரு பத்து ஆண்டுகள்
நகம் கடிக்கும் பழக்கம்
இவனைவிட்டுப் போக
என் நண்பனைக் கொணர்ந்தேன்
கடவுளென உமை நம்பி!"

ஒரே ஒரு முறையென
கெஞ்சிக் கூத்தாடி
எனை இங்கு அமரவிட்டு
மனோதத்துவ மருத்துவரிடம்
என் நகவரலாறு கூறினான்
என்னுயிர் நண்பன்.

கிழட்டு மருத்துவனின்
மொழியற்ற விழிகளின்
ரகசிய அசைவுகளைப்
புரிந்து கொண்டவனாய்த்
தோளில் தட்டிவிட்டு
இருக்கை காலி செய்தான்.

கிழட்டு மருத்துவனின்
ஆங்கில வாயின்
ரகசிய அசைவுகளைப்
புரிந்து கொண்டவனாய்
வலதுகை மூடிவிட்டு
இடதுகை முன் நீட்டினேன்.

ஐந்து விரல்களிலும்
விரலின் உச்சிக்கும்
நகத்தின் உச்சிக்கும்
இடையே இருந்தன
என் வாய் செதுக்கிய
கணவாய்கள்!

"இது ஒன்றும்
கெட்டதல்ல.
தவறென்று வருந்த
பாதிப்பும் மற்றவருக்கல்ல.
குற்ற உணர்வுவர
பாதிப்பு மனதிற்குமல்ல."

இடதுகை பெற்றுக்கொண்டு
வலதுகை கொடுத்தேன்.

கிழட்டு மருத்துவன்
மூக்குக் கண்ணாடியைக்
காதில் நிறுத்தினான்.
புருவம் நெருக்கிப்
பார்வை விரித்தான்.
இருக்கையின்
உச்சிக்கு வந்தான்.
உச்சியைத் தாண்டி
அடிவரை போனது
நான் செதுக்கிய கணவாய்!

"எப்போதிலிருந்து
இந்தப் பழக்கம்?"

"முதலில் தொட்ட மண்ணைத்
தட்ட முயன்றதில் இருந்து"

"தவறென்று
தோன்றவில்லையா?"

"தவறென்று வருந்த
பாதிப்பு மற்றவருக்கல்ல"

"எம்மாதிரி நேரங்களில்
இம்மாதிரி செய்கிறாய்?"

"மூச்சைக் கவனிப்பது
முடியாத காரியம்"

"உள்ளத்துக் கோபங்கள்
வெளிக்காட்ட முடியாதவர்கள்
வடிகால்கள் பல தேடுவர்.
கைப்படும் பொருளைக்
குத்திக் கிழிப்பர்.
வாயில்லாப் பிராணியைப்
பேசச்சொல்லி அடிப்பர்.
கிடைப்பவர் மேல்
கோபமிறக்கி வைப்பர்.
இப்படி பல வடிகால்கள்.

உன் வடிகால் உத்தமமே.
யோசனைகள் சில
கூறுகிறேன்.
உனக்குப் பிடித்ததைப்
பின்பற்று போதும்.
உனக்காக இல்லாவிடினும்
உன்நல விரும்பிகளுக்காக"

தலையாட்ட நானொன்றும்
தஞ்சாவூர் பொம்மையில்லை.

"வாயிற்கு விரல் போனால்
பிடித்த மிட்டாய் சாப்பிடு"

"ஒரே வாயில்
மூவித வேலைகள் செய்ய
மூவித பற்கள் இருக்க
இரு வேலைகள் செய்வது
எனக்கொன்றும் சவாலில்லை"

"வடிகாலை மாற்று.
வாயிற்கு விரல் போனால்
எழுதுகோல் எடுத்து
பிடித்த பாடல் எழுது"

"மறுகை
பூப்பறிக்கப் போவதில்லை"

"நகத்தைக் கடித்தால்
கழிவைச் சுவைப்பதாய்க்
கற்பனை செய்துகொள்"

"கோக் குடிக்கிறேன்
கழிவெல்லாம் காசுக்கு"

வெகுநேரம் யோசித்த
கிழட்டு மருத்துவனுக்கு
நானொரு யொசனை சொன்னேன்.

"மருதாணியோ
நகப்பூச்சோ போட்டு
நகத்தை அழகு செய்தால்?"

"இது நல்ல சிகிச்சை!"

"ரோசாதான் கிள்ளுப்படும்.
கொழுத்த கன்னம்தான்
கிள்ளப்படும்.
எண்ணை நகரம்தான்
போர் தொடுக்கப்படும்.
அழகு முகம்தான்
காதலிக்கப்படும்.
அழகு பொருட்களில்
வன்முறை செய்வதே
மானிடன் புத்தி!"

கிழட்டு மருத்துவனின்
அனுபவத்தை
அவமானப்படுத்திவிட்டு
தொடர்ந்து கடிக்கலானேன்
என் கைநகங்களை!

தவறென எதிர்த்தவர்கள்
விதண்டா வாதத்தில்
அடி பணிந்தார்கள்.

நியாயம் பேசியவர்கள்
நான் சொன்ன தர்மத்தைப்
பேசாமல் ஏற்றார்கள்.

சிகிச்சை செய்ய வந்தவர்கள்
தொற்றிவிடுமென
பயந்து ஒதுங்கினார்கள்.

ஆனால்,
நான் உயிர்கொடுத்த
எனது சந்ததிகளில்
இதே பழக்கம்
முளைவிடத் தொடங்கும்போது
அனிச்சையாய்த் தட்டிவிட
நீளும் என் கரங்கள்..........
அறைந்ததுபோல்
சொல்லிப் போகின்றன......

இச்சை இதுவென
உணர்ந்து திரியும் நான்
வாழ்வுதேடும் அகதி!

இச்சை இதுவென
உணராமல் போனால்
வாழமறந்த அடிமை!

-ஞானசேகர்