புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Sunday, October 04, 2009

வையத் தலைமை கொள்



'வன்முறை எதிர்ப்பு தினம்' என்று பிறந்தநாளை உலகமே மரியாதைப்படுத்தும் அளவிற்கு ஒரு தலைவனைத் தந்த இந்திய நாட்டின் முதல் தேசியக்கட்சி உடைந்துபோன புனே (Pune) நகரில் இருந்து இதை எழுதுகிறேன். பாரதம், இந்திய யூனியன், இந்தியா, ஹிந்துஸ்தான் போன்ற வார்த்தைகளுக்கெல்லாம் உங்களுக்கு அர்த்தம் புரியுமென நினைக்கிறேன். இன்றைய இந்தியா என்ற நாட்டைப் புவியியல் ரீதியில் சொல்ல வேண்டுமானால், பாகிஸ்தானையும் பங்களாதேசத்தையும் கூட்டி இந்திய யூனியனில் இருந்து கழிக்கக் கிடைப்பது. இதே சமன்பாட்டைக் கழித்தல்கள் மட்டுமே வரும்படி எழுதி சிரில் ராட்கிளிப் அவர்கள் கிழித்த கோடுதான் இன்றையதேதிவரை உலகின் மிகப்பெரிய Genocide என்று கருதப்படுகிறது.

காந்தியையும், நேருவையும், அஹிம்சையையும் சாடுபவர்களாக நீங்கள் இருந்தால் உங்களுக்கு அச்சமன்பாடு அமையக் காரணமான நூற்றாண்டுக் காரணிகள் அத்துப்பிடியாகக்கூட இருக்கலாம். ஏனெனில் ஓர் உண்மை நாத்திகன், ஆத்திகனைவிட கடவுளை அதிகம் தெரிந்திருக்க் வேண்டும். சரி என் தலைப்புக்கு வருகிறேன். உங்களுக்கு ஒரு பொது அறிவு கேள்வி. இந்திய யூனியனில் இருந்திராத ஒரு பகுதி இந்தியாவில் இருக்க வாய்ப்பிருக்கிறதா?

இருக்கிறது. 22 ஏக்கர் தீவு. கேள்விப்பட்டதும் பயணத்திட்டம் தயாரானாது. ரோஜாக்களின் நகரம் புனேயில் இருந்து, இந்தியாவில் சிரபுஞ்சிக்கு அடுத்ததாக - தென்னிந்தியாவில் ஈரப்பதமான லோனாவாலா (Lonavala) வழியாக (எஸ்.ராமகிருஷ்ணனின் தேசாந்திரி புத்தகத்தில் ஒரு கதையுண்டு), எனது ஒரு கவிதைக்கு MH - 06 என்ற தலைப்பு தந்த பென் (Pen) என்ற ஊர் வழியாக அலிபாக் (Alibaug) நகரம் வரை பேருந்து பயணம். அங்கிருந்து ராஜ்புரி (Rajpuri) கிராமத்திற்கு ஷேர் ஆட்டோ. பாய்மரப்படகில் மூன்று கிலோ மீட்டர் கடலுக்குள் போனால், ஜன்ஜிரா கோட்டை (Janjira Fort). பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு சுதந்திரத்திற்குப் பின்னால் இந்தியர்களால் நுழையமுடிந்த இடம்.

கடந்த இரண்டு நாட்களாக வெள்ளத்தில் மிதக்கும் ரத்னகிரி (Ratnagiri) என்ற மராட்டிய மாவட்டத்தைப் பற்றி செய்திகளில் நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம். அதன் வடஎல்லையிலுள்ள ராய்காட் (Raigad) மாவட்டத்தின் முருடு (Murud) என்ற கிராம எல்லைக்குட்பட்டது இக்கோட்டை. மேற்படி தகவல்களுக்கு இணையம். மும்பையின் Gate Way of Indiaல் இருந்து அலிபாக் அருகாமை வரை கடல்வழியாககூட செல்லலாம்.


ஜன்ஜிராவை அடைய அரபிக்கடலின்மேல் காற்றின்விசையில் செல்லும் பாய்மரப்படகுகள் உபயோகப்படுத்தப் படுகின்றன. மராத்தி கலந்த ஹிந்தி பேசும் கெய்டைத் தவிர்த்து, கோட்டையின் இடுக்குகளெல்லாம் சுற்றி சமாதிகளையும் வழிபாட்டுத் தலங்களையும் சிதிலமடைந்த சுவர்களையும் சுற்றிப் பார்த்தேன். கோட்டைக்கு நடுவில் 20 மீட்டர் விட்டத்தில் கடலின் உப்பு நீருக்கு நடுவே ஒரு நன்னீர் ஏரியும் இருக்கிறது. இன்னமும் தண்ணீர் இனிப்பாக இருக்கிறது என கெய்டு சொல்ல ஒவ்வொருவரும் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். நன்கு படித்தவர்கள் போல் தோற்றத்தில் இருந்த சிலர் அதை நம்பாமல் நின்றுகொண்டிருந்தனர். நிலத்தடி நீர் தத்துவம் தெரிந்திருந்தால், இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அதுமில்லாமல் மூன்று பக்கம் கடலுக்கு நடுவில் தனுஷ்கோடி ஊர்மக்களோடு நண்பன் கல்வெட்டு பிரேம்குமாருடன் கையாலேயே குழிதோண்டி நல்ல தண்ணீர் குடித்த நான் ஆச்சரியப்படவில்லை.

காற்றின் சீற்றத்திற்கு ஏற்ப மேலும் கீழும் ஏறி இறங்கி வயிறு குலுங்க பாய்மரப்படகு சவாரி நல்ல அனுபவமாக இருந்தாலும், தக்க பாதுகாப்பு இல்லை. கோட்டைக்குள்ளும் ஆங்கிலத்தில் பேசும் சரியான கெய்டுகள் இல்லை. ASIம், சுற்றுலாத்துறையும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டால், கோட்டைக்குள் பிரவேசிக்கும் ஒவ்வொரு உயிரும் நூற்றாண்டுகள் பின்னால்போய், தண்ணீருக்குள் இருந்துகொண்டு மிகப்பெரிய சாம்ராச்சியங்களை மிரட்டிப் பார்த்த தைரியத்தைத் தலைகோதும் உப்புக் காற்றுடன் உணரமுடியும்.

அந்த அனுபவம் எனக்குக் கிடைத்தபோது சத்தம்போட்டு சொன்னேன்:

"காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்;என்றன்
காலருகே வாடா!சற்றே உனை மிதிக்கிறேன்".

Incredible India!

- ஞானசேகர்

Friday, September 25, 2009

கோழை

(Ella Thorp Ellis எழுதிய The Year of My Indian Prince புத்தகம் படித்தபோது பிறந்த கரு இது. இப்போது பிரசவிக்கிறேன்)

சூரியனின் பாதைக்குத் தடை போடாமல், இருபக்கங்களிலும் வரிசையாக வீடுகள் அமைந்த குக்கிராமம் எங்கள் ஊர். கிழக்கு கடைசியில் பஞ்சாயத்து பைப்புக்குப் பக்கத்தில் சுண்ணாம்பு அடிக்கப்பட்ட ஓட்டுவீடுதான் எனது வாழ்விடம். மேற்கு ஆரம்பத்தில் தந்திக் கம்பத்திற்கு அருகில் பனையோலை வேயப்பட்ட கூரைவீடுதான் வசந்தியின் இடம்.

வசந்தி என்னைவிட ஒருவாரம் மூத்தவள். எங்கள் வயதொத்தவர்கள் ஊரில் யாரும் இல்லாததாலோ என்னவோ, இருவரின் வாழ்க்கைகளும் ஒரே பாதையில் பயணித்தன. பக்கத்துக் கிராமத்தின் ஆரம்பப் பள்ளிக்குப் பிறகு, எங்களின் கல்விப்பயணங்களை அருகிலுள்ள ஒரு பேரூராட்சி ஊரின் ஓர் உயர்நிலைப் பள்ளிக்கு இலக்காக்கிக் கொண்டிருந்த காலம் அது.

அந்தப் பேரூராட்சி பள்ளியின் எங்கள் வகுப்பில், முதல் இரண்டு ரேங்குகளை நானும் வசந்தியும் தக்கவைத்துக் கொண்டிருந்தோம். நன்றாகப் படிப்பதாலும், இன்றைய வகுப்புத் தலைவன் - நாளைய மாணவத் தலைவன் என்ற காரணத்தாலும் மாணவர்கள் மத்தியில் எனக்கு மதிப்பிருந்ததெனவும், வசந்திக்கும் சேர்த்தே எனவும் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். குக்கிராமவாசிகள் தங்களூர் பள்ளியில் ஆதிக்கம் செலுத்துவதை உள்ளூரின் சில மாணவர்கள் விரும்பாததையும், அப்பொறாமை உணர்வு புற்றுநோய்க்கட்டி போல் சேகர் - வசந்தி நட்பைக் கொச்சைப்படுத்தி வளர்ந்து கொண்டிருந்தது எனவும் எனக்கு அப்போது தெரியவில்லை.

ஐந்து வருடங்கள் என்னோடு முழங்காலுரச படித்தவளும், முன்றரை வருடங்களாக தினமும் தோளுரச பஸ்ஸில் பயணிப்பவளுமான வசந்தி என்னிலிருந்து சற்றே வித்தியாசப்பட்டவள் என்று அந்த 19ம் தேதியன்றுதான் தெரிந்தது. முதல்நாள் இரவு என்னோடு தந்திக் கம்பத்திற்கடியில் இடதுகால் மடக்கி வலதுகால் நீட்டி குவியதூரமும் கானல்நீரும் படித்துக் கொண்டிருந்தபோது, தண்ணீர் குடிக்கப் போனவள் திரும்பவேயில்லை. புத்தகங்களை அவளின் அம்மா வந்து எடுத்துப் போனாள். நான் சிறுவனா என்று தெரியவில்லை; ஆனால் அன்றிலிருந்து வசந்தி சிறுமியில்லை.

வசந்தி இல்லாத முதல் வாழ்நாள் அது. பஸ்ஸில் சாந்து சட்டியுடன் ஒரு பாட்டி தோள் சாய்ந்தாள். வசந்தியைப்பற்றி வகுப்பாசிரியர் கேட்டது முதல், அன்றைய எல்லாக் கேள்விகளுக்கும் தெரியாதென பதில் சொன்னேன். தமிழாசிரியை சலசலத்தது எல்லாம் இரட்டைக்கிளவியாகவே கேட்டன. இங்கிலிஷ் டீச்சர் கோர்த்தெழுதியதெல்லாம் நேர்மறையும் எதிர்மறையும் சேர்ந்தே திரியும் Cleave ஆகவே தெரிந்தன. நாண்களெல்லாம் இணைகோடுகளாயின. புத்திரனாய் போர்தொடுத்த அவுரங்கசிப்,புத்தமாகி போர்தடுத்த அசோகரானார். ஓர் எலக்ட்ரானுக்காக அலையும் குளோரினுக்கு, ஹீலியத்தின் அஹிம்சை போதித்தேன்.

வசந்தி இல்லாமல் இரண்டு நாட்களாகத் தனியனாய்ப் படித்துக் கொண்டிருந்த எனக்காக தந்தி மரத்தின் டியூப்லைட் தலைகுனிந்து வருத்தப்பட்டது. தவிர்க்க முயலும் பார்வைச் சந்திப்புடன் என்னை வசந்தி சந்தித்தாள். எச்சலனமும் இல்லாமல் என்தலைமேல் இருந்த பூச்சியைத் தட்டிவிட்டு அதே பழைய இடைவெளியில் இடதுகால் மடக்கி வலதுகால் நீட்டி நடத்தப்பட்ட பாடங்கள் கேட்டாள். ஒற்று மிகும் இடங்கள் பற்றியும், தாலஸ் என்றால் தலைகால் புரியாதது எனவும், ஷாஜகானுக்கு மும்தாஜ் முதல்மனைவி இல்லை எனவும் சொன்னேன். மறுநாள் அதே பஸ்ஸில் ஒரே சீட்டில் அமர்ந்து என்னைச் சிறுவன் என நிரூபித்தாள். அவளும் சிறுமியில்லாமல் இல்லை.

இரண்டு நாட்களை நிமிட நேரத்தில் புரிந்துகொள்ளும் வசந்திக்கே புரியாமல், கண்ணுக்குத் தெரியாமல் அவள் வீட்டினுள் அப்படியொன்று இருப்பது அன்றுவரை யாருக்குமே தெரியாது. படித்துக் கொண்டிருக்கையில் தண்ணீர் குடிக்க எழுந்தவளைப் போனமாதம் இதே தேதியில் தண்ணீர் குடிக்கப்போய் திரும்ப வராததைக் கிண்டல் செய்தேன். முன்பற்கள் கடிந்து, புருவம் சுருக்கி, தலைதாழ்த்தி முறைத்துவிட்டுப் போனாள்.

இன்றும்கூட வசந்தி சீக்கிரம் திரும்பவில்லை. Direct - Indirect Voiceகளை மூடிவிட்டு அவள் வீட்டிற்குச் சென்றேன். நிலைப்படியில் குனிந்து தலைநிமிர்ந்தபோது நான் கண்ட காட்சி என்னை உலுக்கிப் பார்த்தது. சட்டென திரும்பப்போய் நெற்றியில் இடித்துக்கொண்டேன். நான் சிறிதுநேரம் அங்கேயே நின்றும்கூட வசந்தி ஒன்றுமே பேசாததிலிருந்து, எனக்கு அங்கு வேலையில்லை என்று உணர்ந்து கொண்டவனாய்த் தந்திமரத்தடியில் தஞ்சம் கொண்டேன்.

வசந்தி வந்தாள். அதே பழைய இடைவெளியில் சம்மணக் காலிட்டு அமர்ந்தாள். பேரமைதி. ஓர் அந்நிய மொழி வாக்கியங்களை Simple-Compound-Complex எனப் பிரித்துப் போடவும், இடதுபக்கங்கள் எல்லாம் வலதுபக்கங்களுக்குச் சமமென நிரூபித்துக் காட்டவும் சொல்லித்தந்த கல்வி, அறிவு, அது, இது எல்லாமும் சேர்ந்தும்கூட, எனக்குப் பக்கத்தில் இருப்பவளின் தாய் வெற்று மார்புடன் படுத்துக் கிடந்த காரணத்தை நேரிடையாக கேட்கும் பக்குவத்தைத் தந்திருக்கவில்லை.

"அம்மாவுக்கு ஒரு வாரமா ரொம்ப முடியல. திடீர்னு இன்னக்கி இருமல் சாஸ்தியாயிடிச்சு. நெஞ்சு கரிக்குதுன்னு சொல்லி அமர்த்தான்ஜனம் (Amrutanjan) தடவச் சொன்னுச்சு ".
வசந்தி சிறுமியில்லை.
"அப்பா சனிக்கெழம ராத்திரிதான் வருவாரு. நான் அம்மாவ நாளைக்கிப் புதுக்கோட்ட பெரியாஸ்பத்திரி கூட்டிட்டுப் போய்த்து வரேன். லீவு சொல்லிடு. எதுவும் மனசில வெச்சிக்கிடாதே".
நான் சிறுவனில்லை.
"ஸ்கூல்ல யாராவது கேட்டா எனக்கு ஒடம்பு சரியில்லன்னு சொல்லு. அம்மாவப் பத்தி ஏதும் சொல்லாதே".
எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் திரும்பிப் போனாள்.

(வழக்கம்போல் சற்றே இடைவெளி எடுத்துகொண்டு, கொஞ்சம் மனநிலையை மாற்றிக்கொண்டு தொடருங்கள்)

வசந்தி இல்லாத இரண்டாவது 19ம் தேதி அது. இருட்டிய பிறகே வசந்தி தனது தாயுடன் திரும்பினாள். தந்திக்கம்பத்தில் சாய்ந்துகொண்டிருந்த என்னைத் தவிர எல்லாரும் வசந்தி வீட்டில் கூடினார்கள். TB, நெஞ்சுருக்கி, காசம், எலும்புருக்கி, Tuberculosis என்ற வார்த்தைகள் அடங்கிய வாக்கியங்களுடன் பேசி, தனது தாயுடன் யாரும் பழகவேண்டாம் என் சொல்லி அனுப்பிவைத்தாள்.

வசந்தி வந்தாள். அதே பழைய இடைவெளியைவிட இன்னும் கொஞ்சம் தூரத்தில் சம்மணக் காலிட்டு அமர்ந்தாள். அன்றைய பாடம் கேட்டாள். நான் எந்தவொரு சலனமும் காட்டிக்கொள்ளவில்லை. ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விளக்குமென காந்தவியல் சொன்னேன். ஒற்று மிகா இடங்கள் சொன்னேன். ஆசையாய்க் கட்டிய தாஜ்மகாலை ஷாஜகான் தூரப்பார்த்தே இறந்துபோனதைச் சொன்னேன்.

செங்கிப்பட்டி மகாத்மா காந்தி சானடோரியத்தில் மாதாமாதம் பரிசோதனை செய்யப்பட வேண்டுமென வசந்தியின் அம்மாவுக்கு டாக்டர்கள் சொல்லியிருந்தனர். ஒவ்வொரு மாதமும் 19ம் தேதி என்பது வசந்திக்கு எழுதப்படாத விடுமுறை நாளானது. என்னையும் வசந்தியையும் பிடிக்காத மாணவர்கள் உண்மைநிலை தெரியாமல், எல்லா 19யும் முதல் 19தோடு முடிச்சுபோட்டு, வசந்திக்குக் கர்ப்பப்பையில் ஏதோ பிரச்சனையென கதைகட்டிவிட்டார்கள். மாதவிலக்குச் சரியாக வருவதில்லை எனவும், அதைச் சரிசெய்யத்தான் தஞ்சாவூர் பக்கம் ஏதோவொரு லாட்ஜ் டாக்டரிடம் பிரதிமாதம் இன்ன தேதி இன்ன நேரத்திற்குப் போய்வருவதாகவும் வசந்தியின் பெயரில் வதந்தி. இதெல்லாம் எங்களுக்கு அப்போது தெரியாது.

டிசம்பர் 19. மார்கழிப்பனி நோயைத் தீவிரப்படுத்தி இருந்ததால், அன்று சானடோரியம் செல்லவில்லை. வேல்ஸ் என்ற இடம் எங்கு இருக்கிறதென்று கண்டுபிடிப்பதற்காக நண்பன் ஒருவனிடமிருந்து அட்லஸ் புத்தகம் வாங்கி வந்திருந்தேன். நான் இடதுபக்கங்களிலும், வசந்தி வலதுபக்கங்களிலும் இந்தியாவிற்கு வெளியே தேடினோம். ஏதோ உணர்ந்தவளாய்ச் சட்டென வசந்தி வீடு புகுந்தாள்.

"ஐயோ வேல்ஸ் இங்க இருக்கு பாரு". மெய்மறந்து சொன்ன பொழுதில் வசந்தி அருகிலில்லை. உலகம் தூக்கிய அட்லஸ் தூக்கிக்கொண்டு அவள் வீட்டிற்குப் போனேன். நிலைப்படியின் மேல் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தாள். வீட்டை இருள் பூட்டி இருந்தது.

"என்ன ஆச்சு வசந்தி? இங்க பாரு வேல்ஸ். நீ பாத்த பக்கத்துலதான் இருந்துச்சு"
"ஒண்ணுல்ல. ஒண்ணுல்ல. அந்த சன்னல்ல டார்ச் லைட் இருக்கு. கொஞ்சம் எடு"
எடுத்துக் கொடுத்தேன்.
"கத்தி பிளேடு அருவா எல்லாத்தையும் பூட்டி வெச்சேன்"
பின்பக்க மூடி திறந்தாள்.
"மண்ணென்ன வாங்குறத நிப்பாட்டுனேன்"
பேட்டரியைத் திருப்பிப் போட்டாள்.
"பூச்சி மருந்து அரளி வெத சாமானியமா கெடைக்காதுன்னு நெனச்சேன்"
பின்பக்க மூடியை மூடினாள்.

"பனியில நனையிதுன்னு தாவணிய வீட்டுக்குள்ள காயப்போட்டது என்னோட விதியா?"
"என்ன ஆச்சு வசந்தி?"
"தாவணியில என்னப் பாக்கனும்னு சொல்லுவியே. நான் கட்டுன மொத தாவணிப் பாரு"
வீட்டுக்குள் டார்ச் அடித்தாள்.
தாவணி உத்திரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. 'அது' தாவணியில் தொங்கிக்கொண்டிருந்தது. அட்லஸ் நழுவியது. உலக நாடுகள் காலடியில் சிதறின. உதவிக்குக் கூப்பிடக்கூட யாருமில்லை. பஞ்சாயத்து தலைவர் சபரிமலை குருசாமியாகி பதினெட்டாம் வருஷ மலைக்குப் போகும் விஷேசத்திற்கு ஊர் சென்றிருந்தது.

எவ்வளவு நேரம் அழுதோம் எனத் தெரியவில்லை. இந்தியப் பெருங்கடல் நனைந்திருந்தது. கொஞ்சம் தைரியம் வரவழைத்து டார்ச் எடுத்து உள்ளேபோக எத்தனித்தேன். டார்ச்சைப் பிடுங்கினாள். அழுகை பீறிட சொன்னாள்.
"நீ பாக்க வேணாம் சேகரு. ஒத்த சேலமட்டுந்தான் கட்டியிருக்கு".

எந்த வெளிச்சமும் இல்லாமல் அரிவாள்மனையால் தாவணியை நான் அறுக்க, வசந்தி தன் தாயைச் சுமந்து இறக்கினாள். முத்திரக் கவுச்சையும், கட்டில்லாமல் வடிந்திருக்கும் உடல் திரவங்களையும் காலடியின் பிசுபிசுப்பில் உணர்ந்தேன். நடுவீதியில் அமர்ந்து எதையோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஷோடனை செய்து தற்கொலையை மறைத்தாள் வசந்தி. மூன்று மணிநேரம் பிணத்துடன் அமர்ந்திருந்தோம். ஊர் திரும்பியது. நோய் தொற்றும் பயத்தில் யாரும் நெருங்கவில்லை. அதன்பிறகு எல்லா நாட்களும் வசந்தி பள்ளி வந்தாள். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருவதற்குள், ஒரு செருப்புக் கடைக்காரருக்கு இரண்டாம் தாரமாகியிருந்தாள்.

வசந்தி இல்லாமல் போனபோதுதான் அவள் என்னிலிருந்து நிறைய வித்தியாசப்பட்டிருக்கிறாள் எனப் புரிந்தது. அவள் இறந்தால் எரிப்பார்கள்; நான் இறந்தால் புதைப்பார்கள். சமூகத்தில் அவள் வினைச்சொல்; நான் பெயர்ச்சொல். வாழ்க்கை என்னைத் தசமப்புள்ளிக்கு இடதுபுறம் பயணிக்கச் சொல்கிறது; அவளை வலதுபுறம் அனுப்புகிறது. சுருக்கமாக என்னை ஆண் என்கிறது; அவளைப் பெண் என்கிறது.

வசந்தியின் தாய்க்குப் பிறகு எனக்குத் தெரிந்து இதே காரணத்திற்காக இதே போல் ஆறுபேர் இறந்துகொண்டார்கள். இந்தியா முழுவதும் இதே காரணத்திற்காக நான்கு லட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் இறக்கிறார்கள். சுதந்திரம் கிடைத்த போது கூட ஏறத்தாழ இதே எண்ணிக்கைதான். பெரியம்மை ஒழித்தோம்; போலியோவைக் காலியாக்கினோம்; விமானமேறி வரும் வியாதிகளைச் செய்தியாக்கி பக்கத்தில் இருமுபவனையும் தும்முபவனையும் மறந்துபோனோம்.

எங்கோ ஒருவன் இருமினால், இன்னொருவன் பதறவேண்டுமென்பதெல்லாம் பாரதியார் பாடலில்தான் என உதாசீனப்படுத்தினால், வரலாறு இன்னொருமுறையும் சிரிக்கும். ஒருவன் காறித் துப்பியதை உதாசீனப்படுத்தியதால் வந்ததுதான் முதல் உலகப் போர்!

- ஞானசேகர்

Sunday, August 23, 2009

மதுரை காந்தி மியூஸியம்

Generations to come will scarce believe that such a one as this walked the earth in flesh and blood.
- Albert Einstein

ஆகஸ்ட் 14, 2009. பாகிஸ்தான் சுதந்திர தினம். இரண்டு கிராமங்களை இலக்காக வைத்து, அதிகாலை 5 மணிக்குத் திருச்சியில் இருந்து பயணத்தை ஆரம்பித்தேன். ஒன்று மதுரையின் தெற்கே உள்ளது; இன்னொன்று வடக்கே. திண்டுக்கலில் இருந்து மதுரை செல்லும் வழியில் பாதியிலேயே இறங்கி, அந்த மலையடிவாரக் கிராமத்தைப் பார்த்துவிட்டு, ஆரப்பாளையம், ஆயிரம் கால் மண்டபம், மீனாட்சி அம்மன் கோவில், திருமலை நாயக்கர் மஹால், இன்னொரு கிராமத்தையும் பார்த்துவிட்டு பெரியார் பேருந்து நிலையம். தந்தி அலுவலகத்திற்கு அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, மாநகராட்சி பெயர்பலகை சொன்ன திசையில் நடந்து அந்த வெள்ளை மாளிகையை அடைந்தேன். காந்தி மியூஸியம்.

விவேக்கும், சுந்தர் சியும் சிறைக்கைதிகளாக வந்து காமெடி செய்வதாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் அதே இடம்தான். ஆனால் எனக்கு அறிமுகம் செய்தது மணா அவர்களின் தமிழகத் தடங்கள் (உயிர்மை பதிப்பகம்) புத்தகம். சுதந்திர இந்தியாவில் காந்தியின் மறைவுக்குப்பின் உருவான முதல் மியூஸியம்.

காந்தியின் தோற்றத்தையே மாற்றிய மதுரை; பாரிஸ்டரை அரைநிர்வாணப் பக்கிரியாக மாற்றிய மதுரை; தாழ்த்தப்பட்டவர்கள் அனுமதிக்கப்படாத மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழையாமல் காந்தி திரும்பிப்போன அதே மதுரை; அரிஜன ஆலயப் பிரவேசம் நடந்தபோது அதே கோவிலுக்குள் காந்தியையும் நுழையவைத்த மாமதுரை. இப்படி காந்தியின் வாழ்வில் முக்கியபங்கு வகித்த மதுரைநகரில், பரிசீலிக்கப்பட்ட ஏழு இடங்களில் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு காந்திக்கான முதல் மியூஸியம் அமைக்கப்பட்டது. இதன்பிறகே போர்பந்தர், ராஜ்கோட், சபர்மதி, தண்டி, வார்தா, நவகாளி போன்ற இடங்களிலும் மியூஸியங்கள் அமைக்கப்பட்டன.

1. மியூஸியம் அமைந்துள்ள தமுக்கம் அரண்மனை பற்றி,

2. கொல்லப்பட்டபோது காந்தி அணிந்திருந்த வேட்டி இரத்தக்கறையுடன்,

3. மூன்று காந்தியக் குரங்குகள். மிசாரு மசாரு மிகசாரு. மஹாராஸ்ட்ராவின் மேற்குத் தொடச்சி மலையில் உயரமான இடமான மஹாபலேஸ்வரில், இயற்கையிலேயே இக்குரங்குகளின் தோற்றத்தில் அமைந்த மூன்று பாறைகள் ஒரு பள்ளத்தாக்கில் உள்ளன.

4. பிப்ரவரி 23, 1946 அன்று தாழ்த்தப்பட்டவர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டபோது, முதல்முறையாக காந்தி அக்கோவிலுக்குள் செல்லும்காட்சி. இப்புகைப்படம் ஆயிரம்கால் மண்டபத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஹிட்லருக்குக் காந்தி எழுதிய கடிதத்தின் நகல், வட்டமேசை மாநாட்டில் காந்தி உடுத்தியிருந்த சால்வை, காந்தியின் அஸ்தி, அவர் படித்த புத்தகங்கள் போன்ற காந்திய அம்சங்கள் ஏராளம். இவற்றைத்தவிர இன்றைய இந்திய தேசியகொடி தோன்றிய வரலாறு, தொற்றுநோய் காலத்திலும் மக்களைத் தொட்டுப்பார்த்த ஒரு மனிதன், பூகம்பப் பூமியின் இடுக்குகளில் பிரயாணித்த ஒரு தலைவன், தலைமையையும் காலணியையும் தூக்கியெறிந்துவிட்டு நாடுமுழுவதும் நடந்துதிரிந்த ஒரு சாமானியன். இந்தியாவில்தான், தமிழ்நாட்டில் காண ஓர் இடம்.

காந்தியின் ரத்தக்கறைபடிந்த கடைசி ஆடை வைக்கப்பட்டிருக்கும், உட்புறம் கருப்பு வர்ணம் பூசப்பட்ட அந்த தனியறையில் வாலிபக் கூட்டமொன்று அடித்த கிண்டல்; நேதாஜியின் புகைப்படத்தைக் கிழித்து கிறுக்கித் திட்டவும் பாராட்டவும் உபயோகப்படுத்தப்பட்ட தமிழ்மொழி. இப்படி சில கெட்ட அனுபவங்கள் கிடைத்தாலும், பிரிட்டிஷ் அரசின் கொடுமைகளைப் பார்த்து வருத்தப்பட்ட ஓர் ஆங்கிலேயக் குடும்பத்தைப் பார்த்த திருப்தியும் கிடைத்தது.

எனக்கு மணா; யாருக்கோ நான் என்ற நம்பிக்கையில்....

- ஞானசேகர்
(சத்திய சோதனையால் மகாத்மா, உங்களில் பலரைப் போலவே)

Thursday, August 20, 2009

தாய்மாமன் கதை

ஆடு கனவுகண்டா
அருவா அறியாது

புழுவெல்லாம் கனவுகண்டா
கொழுவுக்குப் புரியாது

எப்படியோ பிரிவானோம்
இடிவிழுந்த ஓடானோம்

- வைரமுத்து (தோழிமார் கதை - பெய்யெனப் பெய்யும் மழை)


(தனது சகோதரியின் தாயிழந்த பிள்ளைகளுக்காகக் கல்யாணம் தவிர்த்து வாழும் மகாத்மாக்களுக்காக - அங்கிள் மாம்ஸ் காலத்தில்கூட மாமன் சித்தப்பன் வித்தியாசப்படுத்தும் உண்மைத் தமிழர்களுக்காக - பருத்திவீரனின் முடிவுக்குப் பின் சித்தப்புவின் எதிர்காலம் சிந்தித்தவர்களுக்காக,)

வயலோரம் வளந்த மலை
வானரமும் வாழும் மலை
இடுக்கெல்லாம் அடைகட்டி
தேனடையும் குன்னமலை.

குன்னமலை முகத்தில்
வெயில் பொசுக்கும் ஒரு முகட்டில்
ரயில் பாத்த சிறுவயசு
மகனே நெனவிருக்கா?

ஒருகை முட்டுதந்து
அக்காவ நான் நிறுத்த

அஞ்சு வெரலும்
அடுத்தடுத்து கொடுத்துனக்குப்
பால் அழுக நான் நிறுத்த

போலீசுக்குப் பயந்துபோய்
என் அழுக நான் நிறுத்த

எறப்பும் பொறப்பும்
எங் கூடவந்த
சாமத்துக் கார்சவாரி
மருமகனே நெனவிருக்கா?

அம்மா போத்து
நான் படுக்க
பாழாப் போன
கொப்பளமும் தான்வலிக்க
அம்மாவப் போலநீயி
அங்கமெல்லாம் கழுவுனியே
அய்யா நெனவிருக்கா?

காலைக்கடன் தொடச்ச கல்லப்
பொதருக்குள்ள நாமெறிய
கலவிய ரெண்டு பாம்பு
சர்ர்ர்ருன்னு சீறிவர

டவுசர விட்டுப்புட்டு
தல தெறிக்க நீயோட
கைலிய கழட்டிப்புட்டு
காலால நான் பறக்க

செத்தபாம்பு சட்டைதுக்கி
வீராப்பா வீதியில
உலா போனோம் நெனவிருக்கா?

ஒண்ணா திரிஞ்சோம்
ஒரே துண்டில் துயில் கண்டோம்
ஒண்ணாவே இருக்க
ரெண்டுபேரும் யோசிச்சோம்

மகளப் பெத்த
வாழாவெட்டி நாங்கட்டி
மகள நீ கட்டி
மாமன் மருமகனா
ஒரேவீட்டில் வாழச்
சம்மதிச்சோம் நெனவிருக்கா?

பத்தாவது பீசாகி
கல்லொடைக்க நான்போக
வாத்தியார அடிச்சிப்புட்டு
வீட்டவிட்டு நீ ஓட

சோசியஞ் சொன்ன
சாமியெல்லாம் தேடிப்போனேன்
ஏஞ் சாமி நெனவிருக்கா?

தாராபுரம் தாண்டிப்போயி
தாரங்கட்டி நீதிரும்ப
ஆசிர்வாதம் கேக்கயில
ஆயுசுக்கும் மொததடவ
மாமானியே நெனவிருக்கா?

திருமதியக் கூட்டிக்கிட்டு
திருப்பூரு நீபோக
வான்மதியும் புடிக்காம
மதியிழந்து நான்போக

ஓங்குடும்பம் ஓம்புள்ள
ஓம்பொழப்பு ஒன்னோட
எங்கக்கா அவபுள்ள
பழந்நெனப்பு என்னோட.

நாளும் நழுவிடுச்சு
நரம்பெல்லாம் சுண்டிருச்சு
உன் தோளேறி தேர்பாக்க
மகன்கூட வளந்திருச்சு

வயலோரம் வளந்த மலை
வானரமும் வாழ்ந்த மலை
டவுன்காரன் வீடுகட்ட
லாரியேறிப் போயிருச்சு!

- ஞானசேகர்
(அம்மா என்று இருமுறை சொல்லி மாமா என்ற வார்த்தையைப் பழகியவன், உங்களில் பலரைப் போல)

Thursday, August 06, 2009

உறுபசி

இதே இடத்தில்
மகனை இழந்தவள்
தூக்கியெறிந்த தேங்காய்ப்பழம்
திரும்பி வந்தது
அடுத்த அலையில்.

- ஞானசேகர்

Monday, August 03, 2009

பெய்யெனப் பெய்யாத மழை

கடிதம் போட்டு
திருடன் வந்தான்
அனுப்புநர்: மாப்பிள்ளை.
- யாரோ

கோட்டு போட்ட மாப்பிள்ளைக்கு
ரேட்டு கொஞ்சம் சாஸ்தியின்னா
இதுக்குப் பேரு என்ன?
ஆண் விபச்சாரம்.
- ABCD திரைப்படத்தில் பாரதியின் அறிமுகப் பாடல்


சொர்க்கத்தின் மனுமகன்
தொழுகிறாள்
ரொக்கத்தின் மணமகன்
தழுவாதவள்.

- ஞானசேகர்

Friday, July 31, 2009

சேவல் கூவிய பொழுது

அதிகாலையொன்றில்
அடிவயிறு வலிக்க
உயிர்போக அலறி
வியர்த்துக் கொட்டி
வெந்தயம் மென்னு
தொப்புளில் சுண்ணாம்புதடவி
காளீஸ்வரி
கருப்பு கலரில்
வலியடங்கி
கைலி சுருட்டி
மீண்டும் துங்கிப்போன
அந்த நிமிடங்கள்
நான் வயசுக்குவந்த
தருணமாக இருக்கலாம்.

- ஞானசேகர்

Wednesday, July 29, 2009

அணையும்யா நெருப்பு

காதல், சிகரெட் போல. உதட்டில் வைத்து ஆயிரம் முத்தம். கடைசியில் காலில் போட்டு ஒரே மிதி.
- யாரோ


பற்ற வைத்தேன்
பார்த்துவிட்டாள்
அணைத்து விட்டேன்.

- ஞானசேகர்

உலகியற்றியான்

தாழ்வாரம் இல்லை
தனக்கொரு வீடில்லை
தேவாரம் எதற்கடி?
- யாரோ


கல்லினுள் வாழும் தேரைக்கும்
கருப்பை உயிருக்கும்
சோறு போட்டு
விதர்பா விவசாயியைத்
தூக்கில் போட்டவன்.

- ஞானசேகர்

Saturday, July 18, 2009

ஒத்திகை

பரிட்சயமில்லாதவர்கள்
சந்தித்துக் கொண்டதொரு கூட்டத்தில்
எனக்கு முன்னால்
அறிமுகம் செய்தவனின்
முகம்கூட நினைவில்லை.

- ஞானசேகர்

Saturday, June 27, 2009

திசைதொலைக்கும் கடலோடிகள்

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.
- வள்ளுவம்


அமர்ந்த உடனேயே தூங்குவதற்குத் தயாரானேன். டிக்கட் எடுக்க வேண்டும். கடைசி நிறுத்தத்திற்கு டிக்கட் கேட்டு ஒரு தீர்மானம் கொண்டுவந்தேன். பஸ்ஸக் கடத்தப்போறதா சந்தேகப்பட்ட நடத்துனர் அதிகம்பேச, இருக்கையில் இருந்து ஓட்டுனர் எழுந்திரிக்க, தூக்கமயக்கத்தில் சகபயணிகள் எதிர்க்க, வெளிநடப்பு செய்தேன். இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலையில், என்னை இறக்கிவிட வேற நல்ல இடமே கெடைக்கலையா? பழக்கப்படாத பாதை; சுற்றி இருள்; கடந்து செல்லும் வாகனங்களின் ஹாரன் சத்தம்கூட எரிச்சலூட்டும் தனிமை; அதிகாலை இரண்டுமணியின் மார்கழிக்குளிர்.

வெகுநேரமாக ஒருசிந்தனையும் இல்லாமல் ஒரு பாலத்தின் சுவரில் நான் அமர்ந்திருந்தபோது, சாலையின் மறுபுறம் முட்புதர்களுக்கு இடையே ஒரு சிறு விளக்கொளி. அருகில் சென்றபோதுதான் தெரிந்தது, அது ஒரு கல்லறை. சிலுவைகளை எண்ணினேன். சத்தம்போட்டு "இருவத்தி ஆறு" எனக் கத்தினேன். சரிசொல்லிப் போனது ஒரு லாரியின் ஹாரன்.

ஏதோ பாட்டு முனகினேன். அரிப்பாரைத் தாங்கும் நிலம் என்னையும் தாங்கிக்கொண்டு இருந்தது. சிறுநீரின் சத்தத்தில் இரட்டைக்கிளவி பார்க்கும் அளவிற்குத் தனிமை. அதையும் கலைத்தது இன்னொரு கிளவி. தடதட கடகட சலசல. சரியாக கேட்கவில்லை. நீர் முடித்து, கண்காதுகள் துரிதப்படுத்தினேன். கடகட தான். கல் எறியப்பட்ட சத்தம். மீண்டும் கடகட. கடகட. கடகட. கற்கள் வரும் திசை நோக்கி நடந்தேன். அது ஒரு குழி. பத்துக்குப் பத்து நீளஅகலம் இருக்கும். ஆழமெல்லாம் இருள்மூடிக் கிடந்தது. இரண்டடி வரை கொஞ்சம் சுவர்மட்டும் தெரிந்தது.

யாரென்று கேட்டேன். கல் வந்தது. யாரது. கல். அமைதியாக நின்றேன். கல். எல்லாக் கற்களும் நான் நிற்கும் இடத்தின், எதிர்ப்பக்க வலதுமூலையில் இருந்து வந்தன. கல். இருகைகளின் விரல் நுனிகளில் சட்டென்று ஆரம்பித்து, ஜிவ்வென்று மேலேறி, காதுகளுக்கு அருகில் சில்லென்று சிலிர்த்துவிட்டு, நடுமண்டையின் உச்சியில் பட்டென்று தாக்கியது ஒரு மின்சாரம். பின்னங்கால்கள் பிடறியில் அடிபடாமல் ஓடி, நுரையீரல் கேட்டுக்கொண்டதற்கிணங்க நின்றேன். எதிரில் சிமிட்டிக்கொண்டிருந்தது ஒரு கிராமம். மெதுவேகமாக நடந்தோடினேன்.

மராட்டிய மாநிலம் சனிசிங்னாபூருக்குள் நுழைந்துவிட்ட ஒரு பிரமை. பூட்டப்படாத வீடுகள். யாரும் இல் உள் இல்லை. ஆறுதல் பரிசாகச் சற்று தூரத்தில் மனிதக்குரல்கள். ஆங்காங்கே கிறிஸ்மஸ் ஸ்டார் கட்டப்பட்ட வீடுகள்; இரண்டு நாட்களுக்குமுன் நினைவுநாள் அனுசரிக்கப்பட்ட எம்ஜிஆர் நிழற்படம். அஞ்சாமை என்ற திராவிடர் உடைமையைத் தூக்கிக்கொண்டு நகர்ந்தேன். கடந்துபோனபிறகு நாயொன்றுக்கு மனதார நன்றி சொன்னேன். மொத்த ஊரும் அச்சிறுகோவிலில் கிறிஸ்மஸ் கொண்டாடிக்கொண்டு இருந்தது.

ஊரின் மொத்தப் பேச்சுரிமையையும் சிறைவைத்துப் பேசினேன்: "எம்பேரு சேகர். வழிதவறி பஸ்ஸவிட்டு எறங்கிட்டேன். ரோட்டுப் பக்கத்துல ஒரு கல்லறை இருந்துச்சு; அது பக்கத்துல ஒரு பள்ளங்க; அதுக்குள்ள இருந்து கல்லா வருது; பயந்து உடியாந்துட்டேன்".

யாருமே பேசவில்லை. ஒரு பதினைந்து ஆண்கள் என்னைத் தனியாக ஒருவீட்டுக்குக் கூட்டிவந்து, முகம்கழுவச் சொன்னார்கள். இரண்டு நாட்களுக்குமுன் நினைவுநாள் அனுசரிக்கப்பட்ட தந்தை பெரியாரின் படம் அவ்வீட்டில் இருந்தது. தொட்டி நீருக்குள் தலையைவிட்டு கண்களை நன்றாகத் திறந்து பார்த்து, தலைதுவட்டினேன். எனக்குக் கதை சொன்னார்கள்.

"அதுவந்து தம்பி, போனமாசம் கல்லறத் திருநா அன்னிக்கி வெங்காய வெடி வெடிக்க, கல்லற பக்கத்துல ஒரு சின்ன குழி வெட்டுனோம். ஒக்காந்த மனியமா மூணு எலும்புக்கூடுக தம்பி"
"நாங்களும் சுத்துவட்டாரமல்லாம் விசாரிச்சுப் பாத்தோம். ஒண்ணும் தண்டுப்படல. ஊர் பெரிய மனுசங்க எல்லாம் அவுங்கவுங்க வகையறாவுல ஒக்காரவெச்சு பொதக்கிற வழக்கமில்லனு அடிச்சு சொல்லிட்டாங்க"
"மதுர பக்கத்துல செல வடநாட்டுக்காரங்க இருக்காங்க. அவங்களுக்குள்ளயும் இப்டியாப்பட்ட சடங்கு கெடையாதாம். மண்ணுவேற கெட்டி மண்ணா இருந்ததால எங்களாலையும் ஒருமுடிவுக்கு வரமுடியல"
"இப்ப போலீசுதான் ஒன்ற ஆளுமட்டத்துக்குப் பள்ளந்தோண்டி விசாரிச்சுகிட்டு இருக்குது". பலவிசயங்கள் சொன்னார்கள்.

"அப்பவே மதுரயில குறிசொல்றவன் ஒருத்தன் சொன்னான். ஒரு இருவது அறிகுறிகள் இருக்காம். அது எல்லாம் நடந்து முடிஞ்சவொடனேயே ஒலகம் அழிஞ்சிடுமாம். இரும்பு பறக்குமாம்; செவுரு பேசுமாம். பிளைட்டு பறக்குதா? பஞ்சாயத்து டிவி பேசுதா?"
"அந்தப் பிளைட்டையும் கடத்திட்டிப் போயிடுறாய்ங்க. அதையும் டிவிதான் சொல்லுது. இன்னும் அஞ்சே நாளுதான்; ரெண்டாயிரத்துல ஒலகம் அழியிறது நிச்சயம்".

இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814, சம்மந்தமில்லாத ஒரு கிராமத்திற்குள் புகுந்துவிட்டதாக உணர்ந்தேன். கந்தகார் என்ற ஏதோ ஓரூரில் இதே நேரத்தில் அந்த விமானத்திற்குள் 200க்கு மேற்பட்ட பணயக்கைதிகள். அவர்களுக்கும் எனக்கும் பெரிய வித்தியாசமில்லை. பயணத்தால் கைதிகள். உச்சந்தலை மின்சாரத்தை அணைத்துவிட்டு, இயல்பாகப் பேச ஆரம்பித்தேன்.

"பெரியார் படமெல்லாம் வெச்சு இருக்குறதுனால கேக்குறேன். ஒண்ணுமே பண்ணாம, ஒரு கல்லு நகருமுன்னு நம்புறிங்களா? ஏம்மேல கல்லெறிய எந்தப் பேய்ப்பிசாசுக்கும் தைரியம் கெடையாதுன்னு நம்புறவன் நான். நாளைக்கிக் காலையில அந்தக் குழிக்குள்ள ஒரு பொணமிருந்தா, கொன்னது பேயில்ல. நீங்களும் நானும்தான்".

சபரிமலைக்கு மாலைபோட்டிருந்தவரின் மகன் ஒருவன். பெரியார் படவீட்டின் ஒரு மகன். கோவில்பிள்ள கடைசிமகன். விருந்தாளியாக வந்த ஒருவர். நான்கு பேர் தயாரானார்கள். ஆளுக்கொரு டார்ச் லைட். ஒற்றை ஏணியுடன் ஐந்துபேர் குழிநோக்கிக் குவிந்தோம்.

குழிக்குக் கொஞ்சம் தூரத்திலேயே நின்றுகொண்டு, எனக்கு நடந்ததை விளக்கினேன்.
"நான் வடக்கால நின்னேன். தெக்கால மூலையில இருந்துதான் கல்லு வந்திச்சு. ஒண்ணரை ஆளுமட்டம் ஆழம்னா, கண்டிப்பா ஆளு படுத்துக்கிட்டோ இல்ல ஒக்காந்துகிட்டோ இருக்கணும். ஏந் நெஞ்சு மட்டத்துக்குக் கல்லு போச்சு. நின்னுக்கிட்டு எறிஞ்சிருந்தா கண்டிப்பா கையசைவு தெரிஞ்சிருக்கும். படுத்திக்கிட்டலாம் இவ்வளவு ஒயரத்துக்கு எறியமுடியாது. அப்படியே எறிஞ்சாலும், ஒடம்பு அசையுற சத்தம் கேக்கும்". எல்லாரும் ஒருமனதாக ஒத்துக்கொண்டார்கள்.

"குழிக்குள்ள இருந்து பிட்டு சத்தம் வரல. நான் கொரல் கொடுத்தும்கூட கல்லுமட்டும்தான் வந்திச்சு. ஊமையாவோ இல்ல வாய் கட்டி இருந்தாவோ, கத்த முயற்சி பண்ணியிருக்கலாம். இல்லாட்டி ஒடம்ப தேச்சு சத்தம் உண்டாக்கி இருக்கலாம். அதுனால நான் என்ன சந்தேகப்படுறேன்னா, தென்மேற்கு மூலையில ஒரு உயிர் ஒக்காந்து இருக்கு; அது சத்தம் போடுற நெலமையில இல்ல. ஆனா சத்தமில்லாம கல் எறியறதுதான் புடிபடல".

ஐந்து மூளைகள் யோசித்தும், ஒரு முடிவும் இல்லை. என்ன வேண்டுமானாலும் இருக்கலாம்; நடக்கலாம்; இல்லாமலும் போகலாம். திட்டம் தயாரானது. மூன்றுபேர் ஆளுக்கொரு திசையில் படுத்துக்கொண்டு, குழியின் எதிர்ப்பக்கம் தெரியும்வரை ஊர்ந்து முன்னேறினார்கள். நானும், இன்னொரு நண்பனும், வடக்குப்பக்கமும் மிச்சம். திட்டமிட்டபடி, இப்போதைக்கு அவ்வுயிரின் தோராய இடம் கண்டுபிடிக்க வேண்டும். எனது முதல் அனுபவத்தை மீண்டும் உண்டாக்கும் முயற்சி அது.

இருவத்தி ஆறு. தேவையில்லை என்றாலும், அவசரத்துக்காக சர்சர் எனும் இரட்டைக்கிளவி. பேதமை நிறைந்தது என் வாழ்வு அதில் பேதையும் வரைந்தது சில கோ.... அதோ கடகட! வடக்குப்பக்கம் சென்று நின்றேன். யாரது. கல். கல். கல். திரும்பிவந்துவிட்டேன். கல் ல் ல் ல். கல் ல். தெற்குப்பக்க வலதுமூலையில், அதாவது தென்மேற்கு மூலையில் ஓர் உயிர் இருப்பது உறுதியானது. எதிர்பார்த்தபடியே நடந்ததால், திட்டமும் மறுபரிசீலனை இல்லாமல் தொடர்ந்தது.

வடக்குப்பக்கம் ஊர்ந்தேபோய், என்னுடம்பு குழிக்குள் முடிந்தமட்டும் தெரியாமல், என் பார்வையைத் தென்மேற்கு மூலையில் நிறுத்திவைத்தேன். தெற்குப்பக்க நண்பனும் அதே செய்தான். திட்டமிட்டபடி அவன் சட்டென டார்ச்சை ஆன்செய்து, தெற்குப்பக்க ஆழத்தில் வெளிச்சம் காட்டினான். பார்த்துவிட்டேன். உச்சந்தலை மின்சாரம் உடம்பெல்லாம் பாய்ந்து துக்கிவாரிப்போட்டது எனக்கு.

ஆரம்பித்த இடத்திலிலேயே மீண்டும் கூடினோம். எனக்கு வார்த்தைகள் தடுமாறின.
"ஒரு பொண்ணு ஒக்காந்துருக்குங்க"
"பொண்ணா?"
"நம்ம வயசிருக்கும் போல தெரியுது. தாவணி. கண் முழிச்சிருக்கு. தலைய மேலத் தூக்கி வடக்கப் பாத்து ஒக்காந்திருக்கு".

புதுத்திட்டம் தயாரானது. நான்குபேர் திசைக்கொரு பக்கம் படுத்துக் கொண்டோம். நான் திரும்பவும் வடக்கு. எனக்குப் பின்னால் இன்னொரு நண்பன் சற்று தூரத்தில் நின்றுகொண்டான். கிழக்குப்பக்க நண்பன் டார்ச்சை ஆன்செய்து, தெற்குப்பக்கச் சுவரில் இருந்து ஓரடி இடைவெளிவிட்டு, மேற்குச் சுவரில் வெளிச்சம் காட்டினான். என் இடதுகை சைகைப்படி, கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்தைக் கீழிறக்கினான்.

அவள் பார்வைமட்டம் வந்தவுடன் நிறுத்த சைகை காட்டினேன். அவள்மேல் வெளிச்சம்படாமல், நான்மட்டும் அவளைப் பார்ப்பதற்கான ஏற்பாடு. புத்தம்புது தாவணி. தலைக்கு மல்லிகைப்பூ வைத்திருக்க வேண்டும். இரண்டின் மணங்களையும் என்னால் உணர முடிந்தது. கண்கள் அகல விரிந்திருந்தன. மேலும் கீழும் ஏறி இறங்கின. மூச்சுவிடும் வேகம் அப்படி இருக்கலாம். திட்டமிட்டபடியே, ஆளாளுக்கு எதிர்ச்சுவர்களில் வெளிச்சம் செய்தோம். அவளைத்தவிர யாருமே இல்லை.

மீண்டும் கூடினோம். நன்கு உடையணிந்த ஒரு பெண், வேறுயாரும் இல்லாத குழிக்குள் நகராமல் இருப்பது இன்னும் மர்மமாகத்தான் பட்டது. அவளுடன் பேசமுடிவெடுத்து மீண்டும் பழைய நிலைகளுக்குத் திரும்பினோம். பழையபடி கிழக்குநண்பன், அவள் பார்வை மட்டத்தில் ஒளிநிறுத்தினான். நான் பேசினேன்.

"நாங்க ஒங்களக் காப்பாத்தத்தான் வந்துருக்கோம். நான் கேள்வி கேக்குறேன். ஆமான்னா கண்ண சிமுட்டுங்க. இல்லன்னா ஒண்ணும் செய்ய வேண்டாம். தமிழா?"
முதல் அடியே நல்ல அடிதான். கண்ணடித்தாள்.
"நாங்க குழிக்குள்ள எறங்கி ஒங்களக் காப்பாத்தலாமா?"
அடி சறுக்கியது. அதாவது ஆம், இல்லை என்ற இருபதில்களைத் தவிர வேறொரு பதில் சொன்னாள். கண்களைக் கீழ்நோக்கிச் சுழற்றிக் காட்டினாள். என் சைகைப்படி கிழக்குநண்பன் கீழிறக்கித் தரையில் அடித்தான். சடாலென தெற்குநண்பன் குழியைவிட்டு நகர்ந்தான்; எங்களையும் வரச்சொல்லி சைகை செய்தான்.

"என்னாச்சு?"
"அந்தப் பொண்ணு 'உடும'ன்னு சின்னச்சின்ன கல்லாலயே எழுதி இருக்குடா. உள்ள உடும்பு இருக்குமோ?". இறுதித்திட்டம் தயாரானது. பழைய நிலைகளில் ஒரு சின்ன மாற்றம். தெற்கு நண்பனும், எனக்குப் பின்னால் நின்ற நண்பனும் வடமேற்கு மூலைக்கு வந்தார்கள்.
"குழிக்குள்ள உடும்பு இருக்கா?" அவளிடம் கேட்டேன்.

எரியத்துடிக்கும் மெழுகுவர்த்தி, கழுத்தறுபட்ட கோழி, சூடுபட்ட குழந்தை, எல்லாவற்றையும் ஞாபகப்படுத்திப் படபடத்தன அந்தப் பட்டாம்பூச்சி இமைகள். நாடுகடத்தப்பட்டவன் தனதுமொழி கேட்டுத் திரும்பும் ஒரு பரபரப்பு. தென்னைமரத்தில் காய்பறிப்பவன் முதலில் பார்க்கும் ஆழிப்பேரலை தரும் மரணபயம். நீண்டநாள் நீரருந்தா பாலைவனப் பயணி, தண்ணீர் குடிக்கும் ஒருவனின் தொண்டையைப் பார்க்கும் எதிர்பார்ப்பு. எல்லாவற்றையும் ஒருசேரக் காட்டின அந்த சோடிப் பட்டாம்பூச்சி விழிகள்.

திட்டப்படி, வடமேற்கு சந்திப்பில் மேலும் கீழும் வெளிச்சம்போட்டுப் பார்த்துவிட்டு, அப்பகுதியில் உடும்பில்லாததை உறுதிசெய்தோம்.
"கவலப்படாதீங்க. எங்கள்ட்ட ஏணி இருக்கு. இப்ப ஒங்க காலடியில ஏணிய வெக்கிறோம். எங்கள்ல ஒருத்தர் ஏணியில மல்லாக்கப் படுத்திருப்பாரு. ஒண்ணுமில்ல, ஏணிய நல்லா வெச்சதுக்கப்பறம் ஒங்க மொழங்க்கைய அவரு புடிச்சிக்கிவாரு. நீங்க ஒண்ணுமே பண்ணத் தேவையில்ல; ஒங்க ஒடம்ப மட்டும் ஏணிக்கு மேலயே வெச்சுக்குங்க. அப்பறம் எல்லாமே நாங்க பாத்துக்குறோம்".

கொஞ்சம் தயங்கி யோசித்த பிறகு, தன் முழங்கையைத் தொடும் அனுமதியை முகம் தெரியாத ஓர் ஆணுக்குத் தந்தாள். புத்தம் புது தாவணியுடன், கசங்காத மல்லிகையுடன் ஏணிமேல் படுக்கவைத்தே ஊர்கொண்டுவந்து சேர்த்தோம்.

ஞாயிற்றுக் கிழமை என்பதால் அதிகாலையிலேயே கிறிஸ்தவக் குடும்பங்கள் பக்கத்து ஊர் பெரிய கோவிலுக்குப் பூசைக்குச் செல்லத் தயாரானார்கள். நானும் பஸ் ஸ்டாண்ட் வரை உடன் சென்றேன்.
"நீங்க எந்த ஊரு தம்பி?"
வசமாக மாட்டிக்கொள்ளாமல் இருக்க, கைவசம் இருந்த ஒருபதில் சொன்னேன்.
"நான் ஒரு மதத்தோட குரு. ஊர் ஊராப் போயி மக்களோடப் பழகி அவங்கள நெறிப்படுத்துறதுதான் எங்களோட வேல. எங்களப் பத்திய உண்மைகள யாருக்கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு எங்க மடத்தோட கட்டளை. தெரிஞ்சா மக்களால சகஜமா பழகமுடியாதுள்ள. நான் ஒங்க ஊரவிட்டுப் போறதுனால சொன்னேன்".

வருகிற சனிக்கிழமை, கன்னியாக்குமரியில கடல் நடுவுல திருவள்ளுவருக்குச் சிலை திறக்கப்படப் போவதாகவும், மாமா வரச்சொன்னதாகவும் ஒரு சிறுமி சொல்லிக்கொண்டு வந்தாள்.
"அன்னக்கி எல்லாரும் கடலுக்குள்ள இருப்பமோ, மண்ணுக்குள்ள இருப்பமோ, இல்ல நெருப்புக்குள்ள இருப்பமோ யாருக்குத் திரியும்?". சிரித்தேன்.
கடைசி நிறுத்தத்திற்கு டிக்கட் தரும் ஒரு பேருந்தில் ஏறிக்கொண்டேன். கடந்த ஆறுமணிநேரத்தில் நடந்த பெரும்பாலான விசயங்கள் எனக்குப் புரியவில்லை.
"பகலில் அவள்பார்த்த உடும்பு, உண்மையிலேயே அந்த நேரத்திலும் குழிக்குள் இருந்ததா?"
"இந்த ஊர் கிறிஸ்மஸ்க்கு மறுநாள், அதுவும் ராத்திரி 3 மணிக்கு ஏன் கிறிஸ்மஸ் கொண்டாடுகிறது?"
"வடக்கப் போகுமுனு ஏறுனா இந்தப் பஸ் ஏன் தெக்கப் போகுது?".

எப்படியோ வீடுவந்து சேர்ந்தேன். வெள்ளிக்கிழமை, IC 814 மீட்கப்பட்டது. சனிக்கிழமை கடல் நடுவில் எழுந்து நின்று தமிழ்மக்களைப் பார்த்தார் வள்ளுவர். நியூஸிலாந்தில் ஏதோ ஒரு தீவில் சூரியன் முதல்கதிரை கைதுசெய்ய சில பேர் போயிருந்தனர். சோழமன்னனின் தாயொருத்தியைப் போல் சிலபேர், பிரசவத்தைக் காலந்தள்ளி நிகழ்த்திக் கொண்டார்கள். மண்ணுக்குள், கடலுக்குள், நெருப்புக்குள் நான் எங்கும் போகவில்லை; வீட்டில்தான் இருந்தேன். ஒண்ணுமே இல்லாததில் இருந்து வந்த இந்த உலகம், ஒண்ணுமே இல்லாமல் போகாமல் இருக்க, நான் ஒண்ணுமே செய்யாமல் இருந்தேன்.

நாலுகால் பாய்ச்சலில் ஓடிய காலம், அந்தப் பட்டாம்பூச்சி விழிகளைச் சானூரப்பட்டி சானடோரியத்தில் சந்திக்கும் வாய்ப்பும் தந்தது. பெயர்கூட தெரியாத அவளிடம் அறிமுகப்படுத்திக்கொள்ள விரும்பாமல், விலகிப்போய்விட்டேன். சில நாட்களுக்கு முன், பிறவியிலேயே பார்வை இல்லாத இருவர் மணந்துகொண்ட ஒரு திருமணத்திற்கு அழைக்கப்படாமல் சென்றிருந்தேன். மணப்பெண்ணருகில் நின்றுகொண்டிருந்த பட்டாம்பூச்சியிடம் என்னை அறிமுகப்படுத்தி, மணமக்களிடமும் அறிமுகப்படுத்திக் கொண்டேன். சிறகடித்த கண்கள் அழுதுகாட்டின.

அவள் பணிபுரியும் பள்ளிக்கூடத்திற்கு ஒருமுறை கூட்டிப் போனாள். குளத்துக்கரையில் கருவேலங்காட்டுக்குள் அந்த ஓட்டுப் பள்ளிக்கூடம். சுற்றி 3 கிலோமீட்டருக்கு வீடே கிடையாது. பெற்றோர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ இல்லாத குழந்தைகளுக்கான பள்ளி அது. யாரோ ஒரு பையனைக் கூட்டிவரச் சொல்லிவிட்டு, என்னை அவள் அறைக்கு அழைத்துப் போனாள்.
"நான் அந்தப் பள்ளத்துக்குள்ள எப்படி வந்தேன்னு கேக்காமலேயே போய்ட்டீங்களே! அன்னக்கி கிறிஸ்மஸ்சுக்காக எங்க அக்காவீட்டுக்குப் போனப்பதான் அப்டி விழுந்திட்டேன். அடுத்த வெள்ளிகிழம ராத்திரி, ஓலகம் அழியப்போற பயத்துல குடிச்சுகுடிச்சே எங்க மாமாவும் தவறிட்டாரு. ஒருபயலப் பெத்துப் போட்டுட்டு அதே ராத்திரி அக்காவும் போய்டா".
எனது கண்கள் சிமிட்டப்படவில்லை. "என்னங்க அம்மா?" என்று கேட்டுக் கொண்டே ஒரு சிறுவன் அறையினுள் நுழைந்தான்.
"என்ன ஆச்சரியமாப் பாக்குறீங்க? அக்கா பையன்தான். ஸ்கூல் லீவுநாள் அன்னக்கி மட்டும் அம்மான்னு கூப்புடுவான். இவன் பொறந்த நேரம், பக்கத்து ஊரு கோயில்ல மணியடிச்சுச்சு. புதுவருசம்ல". இந்த நூற்றாண்டின் முதல் தமிழ்க்குழந்தை என்வலதுகரம் பிடித்துக்கொண்டு பக்கத்தில் அமர்ந்தான்.

- ஞானசேகர்

(இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)

Wednesday, June 10, 2009

துருத்தி

வாசலில் போடப்பட்டிருக்கும் பால்பையை எடுத்துப்போய் அம்மாவிடமும், செய்தித்தாளை அப்பாவிடமும் கொடுக்க குழந்தைக்கு யார் கற்றுக் கொடுத்தார்கள்.
- வெண்ணிலா (நெருப்பு மலர்கள், ஞாநி)

இங்குதான் இவள்
தனியாக
உறங்குகிறாள்.
- யாரோ சொன்னதாக, பால்வினை தொழிலாளி பற்றி, வைரமுத்து சொன்னது


அது நடப்பதுமில்லை
அது விழிப்பதுமில்லை
அது புசிப்பதுமில்லை
அது பிரசவிப்பதுமில்லை

அது அதுவாகவே இருப்பதுமில்லை
அதாவது
அது 24 * 7 அது இல்லை.

வாரமொருநாள்
நள்ளிரவில் ஒருமணிநேரம்
அது அவளாகும்.

அவள் என்றால்
முழுவதும் அவள் இல்லை
மூச்சு மட்டும் விடுவாள்.

என்றோ ஒருநாள்
இதுபோதும் என
நிறுத்திக்கொண்ட
சராசரி வாழையுயர
ஆலத்தின் அடியில்
ஒரு மண்மேட்டின்
ஆழத்தில் அது இருக்கும்.

உலகம் படைத்த கடவுளின்
ஏழாம் நாள் ஓய்வின்
உதாசீனம் அவள்.

உண்மையிலேயே
அதுவா? இல்லை அவளா?
யாருக்கும் தெளிவில்லை.
தெளியாத பலகதைகள்.

குறுநில மன்னனின்
காமவேட்டைக்குத் தப்புகையில்
யானைவேட்டை குழியில்
விழுந்து இருக்கலாம்.

ஆஸ்த்மா நோய்கள்
அறியப்படாத காலத்தில்
பெரும்பாடுபட்டு
இறந்து இருக்கலாம்.

எது என்னவாக
இருந்ததால் என்ன?
அது அவள்தான் என
நள்ளிரவு பெண்கள் கூட்டம்
அந்த மூச்சுவிடும்
கல்லறை சுற்றி.

அதோ
அது அவளாகிறாள்.
அவள் அதுவாவதற்குள்
வேண்டுதல்கள் கூறியபடி
ஆங்காங்கே சிலர்.

ஒருமணி நேரத்தில்
அவளும் அதுவானது.

சிவந்த கண்களின் கறைகளை
முந்தானையின் கரைகள் துடைக்கின்றன.

குத்துப்பட்ட மார்புகள்
சரியாக மூடப்படுகின்றன.

கடைபோன சிறார்கள்
தேடப்படுகிறார்கள்.

நனைந்த ஆணுறைகள்
கருவேலமரத்தில் பூக்கின்றன.

பெருமூச்சு விட்டபடி
அவர்கள் புறப்படுகிறார்கள்.
அவர்களின் அடுத்த
இரவு எப்படியோ?

பீடியில் இருந்து
சிகரெட் மாறிய ஒருவன்
ஒருத்தியின் மர்ம உறுப்பில்
தூபம் செய்யலாம்.

சாமிக்கு மாலைபோட்ட
ஆசாமி ஒருவன்
நிர்வாணமாய் நிற்கச்செய்து
பார்வையால் குத்தலாம்.

மனைவி ஒருத்தியின் கள்ளக்காதலால்
வரதட்சணை வழக்கில்
பத்தாவது முறை ஒருவன்
தலைநகரம் செல்லலாம்.

கேஸ் அடுப்பு திறந்து வைத்து
மருமகளைப் பூட்டிவைது
திருப்தியாக மாமியார் ஒருத்தி
திருப்பதி போகலாம்.

இதே நேரத்தில்
வீட்டில் தனியே இருக்கும் மகள்
பூப்பெய்தி இருக்கலாம்.
போனவாரம்வரை
மொட்டைக் கிள்ளிய
பக்கத்துவீட்டு அண்ணா
அந்தப் பூவையும் பறித்திருக்கலாம்.

ஏதோ ஒரு திருப்தியில்
அவர்கள் போகிறார்கள்.
ஏதோ ஒரு நம்பிக்கையில்
மீண்டும் வருவார்கள்.

அதுவாகவோ இதுவாகவோ
உயிர் மதிக்கப்படாமல்
வாழ்ந்துவிட்டு
அவளாகவோ இவளாகவோ
திரும்பி வந்து
அவள் மூச்சு கேட்கும்வரை
அவளும் அதுவாகவே இருக்கும்.

மீண்டும்
அடுத்த வாரம்
சந்திக்கும்!

- ஞானசேகர்

Monday, May 11, 2009

முதல்காலை


எல்லா பெண்களை போலவே அவளும் இனி தன் உடல் தன்னுடையதில்லை என்று ஒத்துக் கொண்டவளை போல அவன் இச்சையின் போக்கில் தன்னை ஒப்படைத்துக் கொள்ள துவங்கினாள்.
- எஸ்.ராமகிருஷ்ணன்



நேற்று வாங்கிய
முதல் எழுத்தைக்
கிடைக்கும் பொருளெல்லாம்
கிறுக்கிப் பார்க்கிறாள்
பெயர் மட்டும்
எழுதத் தெரிந்தவள்.

சீரா கேட்டிக சீருன்னு
ஆயி அப்பன்மேல
சீறு சீறுன்னு சீறுறான்
இராவோடு rawவா
முதல் எழுத்தறிவித்தவன்.

- ஞானசேகர்

Sunday, May 10, 2009

கால்காசு

சகமனிதன் ஒருவனைக்
குனிய வைத்து
செருப்பெடுக்கச் செய்வதில்
ஆரம்பமாகிறது
கோயில் புகுந்து
தெய்வநிலை தேடல்.

-ஞானசேகர்

Wednesday, April 15, 2009

MH - 06

முப்பத்தி மூன்றுகூட
பெற முடியாத
நூற்றுக்கு நூறு
மதிப்'பெண்'.
- யாரோ


மேல்மூடி இருக்கும்; வெண்மைக் குயிர்தரும்
திரவம் சுமக்கும்; அழுது புறந்தள்ளும்;
கத்திப்பதம் காணும்; நெஞ்சில் சுமக்கும்
ஆங்கிலப் பென்னன்ன பருவப்பெண்.

- ஞானசேகர்

Friday, March 20, 2009

கெரகம் புடிச்சவன்

சுற்றுகளை
எண்ணிக் கொண்டே
சாமிகளை மறந்துவிட்டேன்.

-ஞானசேகர்

Sunday, March 15, 2009

தழல்வீரம்

திருடர் வாசல் திறவுகோல் இருக்கும்
இருவகை குற்றஞ் செய்யும் - பலமறியா
சீசேம் குகையின் அடிமையும் ஒன்றே
வாக்குச்சாவடி வரிசையும் ஒன்றே.

-ஞானசேகர்

Wednesday, February 25, 2009

ஐம்பொறி ஆட்சிகொள்

மறைத்தேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.


அச்சம் தவிர்த்தான்
ஆண்மை தவறினான்
இளைத்து இகழப்பட்டான்.

-ஞானசேகர்

Wednesday, February 18, 2009

பிற(ழ்)ந்தவை

(தனது வயிற்றில்தான் கடவுள் பிறக்கப் போகிறார் என்று தெரிந்திருந்தும் கூட, ஒவ்வொரு குழந்தையும் கொல்லப்படும்போது, சொட்டுக் கண்ணீராவது விட்டிருப்பாள் கடவுளின் தாய். அப்பேற்பட்ட தாய் - சேய் உறவு துண்டிக்கப்படும்போது சேய் பேசுவதாய் இக்கவிதை)


திரையரங்கின் முக்கிய காட்சிகளில்
அழுது சத்தம் போட்டு
உன்னை வெளியே கூட்டிவர
நானிருக்கப் போவதில்லை
என் தடித்த உதடு தொட்டுப்பார்!

எனக்கு பசி எடுக்கும்
உனது சங்கட சந்தர்ப்பங்களில்
உன் மார்திறந்து பால்குடிக்க
நானிருக்கப் போவதில்லை
தொப்புள்கொடி தொட்டுப்பார்!

மாதக் கணக்கில்
நாள் தவறாமல்
தடுப்பூசி வரிசைகளில்
உன்னை நிற்கவைக்க
நானிருக்கப் போவதில்லை
உச்சந்தலையின் இளகிய கபாலம்
முகர்ந்து பார்!

என் பால்குடி மறக்கவைக்க
ஒரு வீட்டில் என்னையும்
ஒரு வீட்டில் உன்னையும்
சிறைபிடித்து தவிக்கவைக்க
நானிருக்கப் போவதில்லை
என் துடிக்காத மார்பை
ஒருமுறை தொட்டுப்பார்!

தாத்தாவைப் போல உயரமா
அப்பாவைப் போல கோபமா
உன்னைப் போல மாநிறமா
ரசித்து வளர்ந்துகாட்ட
நானிருக்கப் போவதில்லை
என் உள்ளங்கை தொட்டுப் பார்!

உணவு கழிவு காற்று
இரத்தம் சதை உயிர்
எல்லாம் என்னுடன்
கருமூடி பத்து மாதம்
பகிர்ந்து கொண்டவளே
புழுதி மண்மூட தயாராகிறேன்
மூடிய கண்கள் திறந்து
ஒருமுறை என்னைப் பார்!

ஒரு தாய்மாமன்
ஒரு குறவன்
எனக்கான ஊர்வலம் தயாராகிறது
நான்குபேர் கூட இல்லாமல்!

எனக்கே எனக்கான
சான்றிதழ் தயாராகிறது
என் பெயர் கூட இல்லாமல்!

நீ கண்விழிக்கும்போது
என்னைப் பற்றிய
தகவல்கள் சொல்லப்படும்.
நீ அழுது முடிக்கும்போது
ஏதாவது ஒரு குரல்
சோகமாகச் சொல்லும்
நான் வானம் நோக்கி பி(இ)றந்ததை!

- ஞானசேகர்

Thursday, February 12, 2009

*கெ ள ரி*

அந்தப் புதுமணப்பையனின்
புது பைக்கில் இருந்த
புது மனைவியின் பெயரைச்
சரியாகத்தான் படித்தேன்
டௌரி என்று.

- ஞானசேகர்

Tuesday, February 10, 2009

இருக்குதடி பாப்பா

ஆறாம் வகுப்பு
சேர்க்கை படிவத்தில்
மகற்குத் தெரியாமல்
தந்தை ஆற்றும் உதவிக்கு
சாதி என்று பெயர்.

- ஞானசேகர்

Friday, February 06, 2009

நீத்தார் மேடு

ஏதோ ஒரு பாதம்
என்றோ சிந்திய
ஒருதுளி ரத்தம்
இன்று ஓர் ஒற்றையடிப்பாதை!
-இரகுமித்ரன் (எனது பல ஒருநாள் நண்பர்களில் ஒருவன்)

மன்னனின் தலைமகனையும், ஓவ்வொர் எகிப்தியரின் தலைமகனையும்,எகிப்தியர்களுடைய கால்நடைகள் ஈன்ற முதல் ஆண் குட்டிகளையும், கன்றுகளையும் கொள்ளை நோய்தாக்கி இறக்கச் செய்வேன்.
- விவிலியம் (பழைய ஏற்பாட்டில் மோசேயிடம் கர்த்தர்)


("நான்" என்ற கதாபாத்திரம் இல்லாத எனது முதல் சிறுகதை இது. பெண் கதாபாத்திரத்திற்குப் பெயர் உள்ள இரண்டாம் சிறுகதையும் கூட. பள்ளத்தைப் பற்றிய மேட்டின் கதையிது. பள்ளத்தில் கிடக்கும் தத்தம் மக்களை மேடேற்ற துடித்த இருவேறு மனிதர்களின் கதையிது. அதில் ஒருவனை, இக்கதையின் கடைசியில் ஒரு மேட்டில் கொண்டுபோய் நிறுத்துகிறேன். அங்கிருந்து நீங்கள் பள்ளத்தைப் பார்க்கும்போது, இன்னொருவனின் கதை உங்கள் மனக்கண்ணில் தொடங்கலாம்; தொடங்க வேண்டும்!)


வேப்பமரங்களின் (44+16)+(8+2)+(7+1)+(2+1)+(1+2)=84 கிளைநுனிகள் ஒடிபட்டன. குளங்களின் pH அளவு பூச்சியத்தை நோக்கி சற்று முன்னேறியது. அவ்வூரின் இரண்டு தெருக்களிலும், ஒரு மருதநில கிராமத்திற்கான அனைத்து நடவடிக்கைகளும் என்றும்போல அன்றும் நடந்துகொண்டிருந்தன. அவ்விரு தெருக்களுக்கு இடையே வில்லின் முதுகுபோல் தரிசுமேடு;அதன் முனைகளில் கட்டப்பட்டு இருந்தன சாதிகள். பல நாட்களாக முறுக்கிக் கொண்டிருக்கிற நாணில் அம்புதான் அம்புடவில்லை.

கீழத்தெரு மக்களைக் கீழோர் என்றும், மேலத்தெரு மக்களை மேலோர் என்றும் மனிதன் பிரித்துக்கொண்டான். என்றோ ஒருநாளில் திசைகளை வைத்து பெயர் சூட்டப்பட்ட அத்தெருக்களின் மேல்-கீழ் வித்தியாசம் தெரியாமல், என்றும்போல அன்றும் கீழத்தெரு மக்களை முதலில் தொட்டுவிட்டு, மேலத்தெருவிற்கு மெதுவாக நகர்ந்துபோனான் சூரியன். அவனுக்கு முன்னால் மூன்று அம்புகள் ஏற்கனவே புறப்பட்டுவிட்டன, விடியலைத் தேடி சூரியனுக்கு எதிர்திசையில்.

கீழத்தெருவைச் சேர்ந்த மூன்று வாலிபர்கள், மேலத்தெருவின் குருசடி அருகே சைக்கிள் ஓட்டிக்கொண்டு வருவதை யாரும் கவனிக்கவில்லை. அதில் ஒருவன் மணி அடிக்கவும், கோலம் போட்டவர் - சாணி சுமந்தவர் - கோவில் திண்ணையில் அமர்ந்திருந்தவர் - தாய்மார்பில் பால் குடித்துக்கொண்டு இருந்த ஒரு குழந்தையைத் தவிர, வீதியோரம் இருந்த அனைவரும் திரும்பிப் பார்த்தனர். கோலம் போட்ட ஒருத்திக்காக அடிக்கப்பட்ட அந்த மணி, அவளைத் திண்ணைக்குத் துரத்தியது. கோவிலுக்கு அருகில், அந்த மூவரையும் மேலத்தெரு இளைஞர்கள் நான்கு பேர் மறித்தனர்.

இத்தனை நாள், தனக்கு முன்னால் செருப்பு போடாத - வேட்டியைத் தூக்கிக் கட்டாத ஒரு கூட்டம், இன்று சைக்கிளில் வந்ததால், வாய்த்தகராறு ஆரம்பித்தது. கூட்டம் அதிகமாவதைக் கண்டு, பாப்பாத்தியின் அய்யா அங்கு ஒடிவந்தார்.

"டேய் டேய் டேய் விடுங்கடா. கோயிலுக்கு முன்னாடி நின்னு பேசுற பேச்சாடா இது. அம்மா அக்கானுட்டு. அவன் சைக்கிள அவன் ஒட்டுறான். ஒங்களுக்கு ஏன்டா இந்தக் கோவம்? அவனுக மூத்தரம் ஆத்தடோ போன என்ன? கொளத்தோட போன என்ன? போயி சோலியப் பாருங்கடா".
"இவங்கள இப்புடியே விட்டா, நம்மல மேச்சிட்டுப் போயிடுவாங்க மாமா. அப்பறம் நம்ம வீட்டுக்குகுள்ளே வெந்தலபாக்கு தட்டோட வந்து பொண்ணு கேப்பானுங்க"
"ஆமாடா, சும்மா சைக்கிள் ஓட்டிக்கிட்டுப் போறவனுக்கு அடியெடுத்து குடுங்க".

மேலத்தெருவில் கொஞ்சம் படித்திருத்த பாப்பாத்தியின் அய்யா, கீழத்தெரு சைக்கிள்காரர்களுக்கு ஆதரவாகத்தான் பேசினார். அவர்மேல் இருசாரரும் வைத்திருந்த மரியாதையில், சொற்கள் மட்டும் மோதிக்கொண்டிருத்தன. அந்த மோதலையும் ஒரே ஒரு அலறல் சொல், முடித்து வைத்தது. அந்த சொல் "யய்ய்ய்யா"; சொன்னவள் பாப்பாத்தி. மொத்த ஊரும் பாப்பாத்தியின் வீடு நோக்கி ஓடியது. அகவிக்கொண்டிருந்த மயில்கள் அமைதியாயின. இந்நிகழ்ச்சிகள் எதிலும் சுவாரசியம் காட்டாமல், சூரியன் நகர்ந்து கொண்டிருந்தான்.

தாயில்லாத பாப்பாத்தி, முதன்முதலில் தாயாகப் போவதற்காகப் போட்ட சத்தம் அது. தன் ஒரே மகளான பாப்பாத்தியின் பேறுகாலத்திற்கு முன்னேற்பாடாக, சுற்றுவட்டாரத்தில் பிரசவத்திற்குப் பிரபலமான நான்கு கிழவிகளை ஒரு மாதமாக வீட்டில் தங்கவைத்துக்கொண்டுருந்தார் அய்யா. நான்கு கிழவிகளாலும் முடியவில்லை; பாப்பாத்தியின் தலச்சம்பிள்ளை இறந்தே பிறந்தது.

சைக்கிள்காரர்கள் மூன்றுபேரும், தங்கள் இயலாமையைக் காட்டிக் கொள்ளாமல், வயலுக்குச் சென்றனர். ஆர்ப்பரித்து ஆரம்பமான மேலத்தெரு அமைதியாய்ப் போனது. ஆளாளுக்கு எதையெதையோ பேசிக்கொண்டு இருந்தார்கள்.

"இருத்தாலும் மாமாவுக்கு இப்படி கர்த்தர் பண்ணக்கூடாதுய்யா. மருமகன் இப்பதான் சைனாகாரன் சுட்டு செத்தாரு; வருஷம் திரும்பல; அதுக்குள்ள இன்னொரு பெரியகாரியம். மாதாதான் காப்பாத்தணும்"
"எந்த நேரம் இந்த **** ** பயலுக சைக்கிள்ல ஏறுனானுகளோ?"
"இனாம் கிராமம் மொறைய சர்க்காரு தடை செஞ்சுருச்சுல்ல. அதான், அவனவனுக்கு வெள்ளாம நெலம் கெடைக்கவும், ரொம்ப ஆடுறானுங்க"

தலச்சம்பிள்ளையை வீட்டின் கொள்ளைப்புறத்தில் புதைத்து ஒரு மரம் நட்டுவைப்பதுதான் வழக்கம். பாப்பாத்தியின் அய்யா அப்படி செய்யவில்லை. தனது வேட்டியை உருவி, பேரனைச் சுற்றினார். யாரையும் துணைக்கு அழைக்காமல், தனியாகவே சென்று தனது பூர்வீக வயலின் ஏதோ ஓர் இடத்தில் புதைத்தார். புதைத்த இடம் தெரியாமல் இருக்க, வயல் முழுவதும், ஒருமுறை உழுதுபோட்டார்.

அய்யா வீடு திரும்பினார். சைக்கிள்காரர்களை எதிர்பார்த்து, சாயங்காலம் இளைஞர்களின் கூட்டம் ஒன்று மேலத்தெருவில் கூடி இருந்தது. அய்யா வீட்டில் நடந்திருந்த துக்ககாரியத்துக்காக, அவர்கள் சைக்கிளைத் தள்ளிக்கொண்டே சென்றார்கள். என்றோ ஒருநாளில் திசைகளை வைத்து பெயர் சூட்டப்பட்ட அத்தெருக்களின் மேல்-கீழ் வித்தியாசம் தெரியாமல், என்றும்போல அன்றும் கீழத்தெரு மக்களை முதலில் விட்டுவிட்டு, மேலத்தெருவிற்கு மெதுவாக நகர்ந்துபோனான் சூரியன்.

மறுமணம் வேண்டாம் என்று தகப்பனோடே தங்கிவிட்டாள் பாப்பாத்தி. இந்த ஆறுமாதங்களுக்குள், கீழத்தெரு மக்களின் சைக்கிள் பயணம், மேலத்தெருவில் அன்றாடமாகிப் போனது. சர்க்கார் தனது தெருவிற்குக் கரண்ட் கொடுத்தபொழுது, கீழத்தெருவிற்கும் வாங்கிக் கொடுத்தார் அய்யா. சைக்கிள், கரண்டு, பள்ளிக்கூடம், மண்ரோடு, பட்டா இப்படி பல விஷயங்களில் கீழத்தெரு மக்களுக்கு உதவிக்கொண்டு இருத்த அய்யாவை, மேலத்தெரு கவனித்துக் கொண்டுதான் இருத்தது. நாண் அப்படியேதான் இருக்கிறது; அம்புகள்தான் மேலதெருவிற்கு இடம்பெயர்ந்துவிட்டன.

தன் வம்சத்திற்கு ஓர் ஆண், ஒரு பெண் என மிச்சமிருத்த பாப்பாத்தி குடும்பத்தில், ஒரு நச்சுப்பாம்பு கடிக்க பாப்பாத்தியும் இறந்துபோனாள். ஒரே வருடத்தில் மூன்று பெரிய காரியங்கள். ஆனால் அந்த பெரிய மனுஷர், அய்யா, மனம் தளரவில்லை. மகளைக் கல்லறையில் புதைத்துவிட்டு வந்த கையோடு, தனது வயலில் ஒரு குண்டை ஒரு கீழத்தெரு குடும்பத்திற்குக் கொடுத்தார்.

சரி எழவு விழுந்த அன்றே பிரச்சனை செய்யக்கூடாது என்று மேலத்தெருவும் விட்டுப்பிடித்தது. பாப்பாத்தி இறந்த மறுநாள் அதிகாலையில், மேலத்தெரு வாலிபன் ஒருவன் தலைதெறிக்க ஓடிவந்தான். அவன் சொல்வதைக் கேட்டு, பாப்பாத்தியின் கல்லறை நோக்கி ஊரே ஓடியது. அய்யாவும் ஓடினார். கூட்டத்தை விலக்கிப் பார்த்தார். அவர் அருகில் போகாமல் இருக்க, சிலபேர் அவர் அருகில் தயாராக இருந்தனர்.

பாப்பாத்தியின் கல்லறை, தலைமாட்டில் தோண்டப்பட்டு இருந்தது. ஒருபக்கம் கழுத்தில் கத்தி குத்துப்பட்டு, ஒரு நரி செத்து கிடந்தது. மறுபக்கம், கையில் கத்தியுடன் வெறித்த விழிகளுடன் மண்ணைப் பார்த்துக்கொண்டு ஒருவன் உட்கார்ந்து இருந்தான். மேலத்தெரு பேச ஆரம்பித்தது.
"பொதச்சதுக்கப்பறம் முள்ளு போட்டிகளா இல்லையாப்பா?"
"பச்சமண்ணு வாசனக்கி நரி தோண்டிருக்கு பாருய்யா!"
"ஆளு புதுசா இருக்கான்; பாக்குறதுக்குக் குடுகுடுப்பன் மாதிரி இருக்கான்"

அருகில் போக எத்தனித்த அய்யாவைத் தடுத்தனர். "கொள்ளி போட்ட ஆளு, மொகத்த திரும்ப பாக்கக் கூடாது மாமா". ஒருவன் அருகில் போய், கல்லறைக்குள் எட்டிப் பார்த்துவிட்டு, முகமெல்லாம் தெரியவில்லை என்றான். அய்யா அருகில் சென்றார். தனி ஆளாகக் கல்லறையை மூடினார். கத்திக்காரனை வீட்டிற்குக் கூட்டிச் சென்றார். முன்னர் இவ்வூருக்கு வந்துகொண்டிருந்த குடுகுடுப்பனின் மகன் என்றும், அவர் இறந்துவிட்டதால் தான் தொழிலுக்கு வந்ததாகவும் சொன்னான். வேறு எதுவும் அவனிடம் கேட்கப்படவில்லை. அவனும் சாயங்காலம் ஊரைவிட்டுப் போய்விட்டான்.

அய்யாவுக்குத்தான் இப்பொழுது யாருமே இல்லை. நின்றுபோன சந்ததியின் கடைசி சாட்சியாக, தினமும் தனது மகளின் கல்லறையில் உட்கார்ந்துகொண்டு தனியாக பேசிக்கொண்டு இருப்பார். தனது அய்யா, ஆயா (அம்மா), செத்தேபிறந்த தனது அண்ணன், மனைவி, மகள் எல்லாருடனும் அய்யா இப்படிதான் பேசிக்கொண்டு இருக்கிறார்.

கொஞ்சம் என் கூடவே நீங்களும் சத்தம் போடாம வாங்க. அவர் பக்கத்துல போய் கொஞ்சநேரம் நிற்போம். "இந்தா தெரியுறது மேலத்தெரு. இந்த மேட்ட தாண்டி அந்தப்பக்கம் போனா கீழத்தெரு. ஒருகாலத்துல சண்டை போட இருந்த இந்த ரெண்டு ஊர்களையும் அய்யாதான் சமாதானமா வெச்சிக்கிட்டு இருக்காரு. இனிமே சண்ட வரவும் வாய்ப்பில்ல. இந்த ஊர்களுக்கு எடையில இருக்க இந்த மேட்ட, வருங்காலத்துல கவர்மெண்டு தூத்துப்புட்டு ரோடுகூட போடலாம். அப்ப ஊர்காரங்க சம்மததோட இந்தக் கல்லறையும் எடம் மாத்தப்படலாம். அதெல்லாம் நடக்கறப்ப, பாப்பாத்தி கல்லறைக்குள்ள, அவ தலக்கிப் பக்கத்துல ஒரு நைத்துபோன துணி இருக்கலாம். அதுக்குள்ள அவளோட தலச்சம்பிள்ளையோட மண்டஓடு இருக்கலாம். அத வெச்சவன தடுக்கப் போனதுக்காக, ஒருவன் அந்த எடத்துல கழுத்துல கத்தி குத்துப்பட்டு செத்துப்போய் இருக்கலாம்".

நாணில்லாமல் ஒரு வில்!

- ஞானசேகர்
(என் தாய்க்குத் தலைமகன்)