புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Wednesday, January 31, 2018

தூது

'வைகைக்கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
மன்னன் மனம் வாடுதென்று
மங்கைதனைத் தேடுதென்று
காற்றே! பூங்காற்றே!
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் 
காதோரம் போய் சொல்லு'
என்று 'உயிருள்ளவரை உஷா' திரைப்படத்தில், காற்றைக் காதலன் காதலிக்குத் தூதுவிடுவது போல் டி.ராஜேந்தர் பாட்டு எழுதி இருப்பார். தூது என்று ஒரு தனி சிற்றிலக்கிய வகையே தமிழில் உண்டு.

'ஆடையின்றி வாடையின் மெலிந்து

கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே'
என்று சத்திமுத்தப் புலவர் நாரையைத் தன் மனைவிக்குத் தூது அனுப்புவதைப் பள்ளிக்கூடங்களில் படித்திருப்போம். கிளி கண்ணாடி புகையிலை தமிழ் காக்கை என்று தமிழ் இலக்கியங்கள் தூதுவிட்டிருக்கின்றன. வடமொழியில் கூட தூது உண்டு. காளிதாசர் எழுதிய மேகதூதம் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதில் வரும் ஒரு கதையை உங்களுக்குச் சொல்கிறேன். அதை நீங்கள் பொது வெளியில் அப்பாவித்தனமாக மேற்கோள்காட்டி விடாதீர்கள். பிறகு சாமியார்கள் யாராவது உங்கள் மேல் சோடா பாட்டில் வீச நேரிடும். அதாகப்பட்டது, ரந்திதேவா என்ற அரசன் தினமும் 2000 பசுக்களைக் கொன்று அனைவருக்கும் உணவிட்டதால் நாட்டு மக்களிடம் நற்பெயர் பெற்றிருந்தானாம். அப்படி வெட்டப்பட்ட பசுக்களின் இரத்தம், இன்றைய சம்பல் நதியாக ஓடுகிறதாம். ரந்திதேவனுக்கு மரியாதை செலுத்தச் சொல்லி, காதல் தூதைச் சுமந்து போகும் மேகத்திற்கு யக்சன் ஒருவன் சொல்வதாக, மேகதூதத்தில் சொல்கிறார் காளிதாசர்!

ஆளுகின்ற அரசனுக்கு மேகம் தூது போயிருக்கிறது! மக்களாட்சியில் சினிமாக்காரர்கள் கிரிக்கெட்காரர்கள் சாமியார்கள் பணம் கலவரம் என ஆட்சியாளர்கள் மக்களுக்குத் தூதுவிடுவதுண்டு. ஆனால் நமது ஆட்சியாளர்களைப் பார்த்து நம் கஷ்டங்களைச் சொல்வது மக்களாட்சியில் சாத்தியமில்லை. பஞ்சம் என்றால், மத்திய குழு வந்து, நிவாரணம் சொல்லி, நிதி கைக்கு வரும்போது ஒன்றும் மிஞ்சாது; வெள்ளம் என்றால், சொட்டு நீர் கூட தன்மேல் படாமல் மேற்பார்வையிட்டு போகிறார்கள்; புயல் என்றால், அது ஆப்பிரிக்காவை எல்லாம் கடந்தபின் இருபது நாள் கழித்து வருகிறார்கள்; சுனாமி என்றால் ஹெலிகாப்டர் மட்டும்தான். சரி இப்படி தூது அனுப்பி செய்தி சொன்ன நம் முன்னோர்கள் போல், நம் காலத்து ஆட்சியாளர்களுக்கு எப்படியாவது தூது அனுப்ப முடியுமா என்று ஒருநாள் யோசித்தேன். விளைவு இக்கிறுக்கல்கள்:

(ஓகி) புயல்
குஜராத்திற்கு வராமல்
குமரிக்கு மட்டும் போனதால்
தேர்தலுக்குப் பின் வருகிறோம்
புயலுக்குப் பின்னான அமைதி குலைக்க.


துகில்
ஒபாமா பக்கத்தில்
எட்டு லட்சம் கோட்டு போட்டு
ஒய்யாரமாய் நிற்பது கண்டு
துகில் கலைந்து
நிர்வாணமாய்த் திரும்பியது
காந்தியின் கைத்தறி.


மான்
மான்கள் நாங்கள்
கான்கள் நீங்கி
தூதுகள் போயின்
இராமன்கள் துரத்தும்
கான்கள் கொல்லும்.


தென்றல்

தெற்கில் இருந்து
வீசிய தென்றல்
மன்றத்தில் மன்றாடிவிட்டு
திரும்பியது வடக்கில் இருந்து
இந்தி வாடையாய்.


நெஞ்சு

வெந்து விழுந்து
முறிந்து உருகி
கருகி அடங்கிய‌
குஜராத் முஸ்லிம்கள்.
நின்று சிரித்து
வென்று நடக்கும்
ஐம்பத்தாறு அங்குல கவசம்.


மேகம்
எப்போதாவது இந்தியாவிற்கு வந்துபோகும்
அயல்நாட்டு விமானப் பயணங்களில்
போராட்டங்கள் போல்
திரண்டு திரிவதால்
கர் வாப்சி செய்து
திருப்பி அனுப்பப்பட்டன‌
கைலாசத்திற்கும்
வைகுண்டத்திற்கும்
கருந்தோல் மேகங்கள்.

-  ஞானசேகர்

Monday, January 29, 2018

சாணக்கியன் in Digital (H)India

வாஜ்பாய்க்கு மகிழ்ச்சி
சாதுக்கள் எப்போதும்
சாதுவாய் இருப்பது
- வைரமுத்து

Based on true events.....

பத்து இலட்சம் செலவு செய்
தெர்மோகோல் ஆடை செய்
ஆவி ஆகாது வைகையாறு மூடு
மங்குனி மந்திரி மதுரையில் என்பார்கள்

ஒன்றரை கிலோமீட்டர் சேலை நெய்
கோதாவரி மூடச் செய்
ஆற்றைத் தாயே என்று சொல்லிவை
கோதாவரி காத்த கோமகன் என்பார்கள்


குரங்கு மனிதனானதை யாரும் கண்டிலர்
டார்வின் சொன்னது பொய்யெனச் சொல்
அறிவியல் அறியா அமைச்சர் என்பார்கள்

யானைத்தலை மனித முண்டத்தில் ஒட்டிய அற்புதம்
அகில இந்திய அறிவியல் மாநாட்டில் சொல்
அகில உலக மாநாடுகளுக்கும் உன்னையே அழைப்பார்கள்


ஊருக்கு வெளியே மகிளா பவன் கட்டு
மாதவிலக்கானவளை அங்கு போய் தங்கச் சொல்
காட்டுமிராண்டிகள் காலத்தில் கர்நாடகம் என்பார்கள்

ஒற்றை நாடென்று ஒரே வரியில் சொல் (GST)
பெண்மையே தெய்வீகக் காட்சியடா என்று முழங்கு
பெண்ணின் நாப்கினுக்கு விலையேற்றி தூரமாக்கலாம்


கடல்நீரின் உப்பு நீக்கி நன்னீராக்கு
லிட்டர் குடிநீர் பத்து ரூபாய்க்கு விற்கச் சொல்
டாஸ்மாக் மூடிவிட்டு மறுவேலை பார் என்பார்கள்

ஏதோ நீர் பிடித்து பாட்டிலில் நிரப்பு
தபாலில் கங்காஜல் என்று சொல்
தபால்துறை தழைப்பது காண்பாய்


வாரிசையோ உறவையோ சிபாரிசு செய்
ஓய்வுபெறும் தோட்டிகளுக்குச் சட்டம் செய்
மலத்தில் மூழ்குகிறது மராட்டியம் என்பார்கள்

கடவுளுக்குச் செய்யும் தொழிலென்று சொல்
சுத்தமாய் இருக்க வரிகள் விதி
தோட்டியும் தோட்டியாகவே இருக்கக் காண்பாய்


சுரபி நந்தினி காம‌தேனு வேதங்களில் இல்லை
பசுவுக்கென்று தனியே கடவுளோ கோவிலோ இல்லை
உன் புராணமே உன் பசுவின் வாய் தீட்டு என்கிறது
என் மாட்டை நான் தின்றால் உனக்கென்ன என்பார்கள்

இப்படி வசமாக மாட்டிக் கொண்ட‌ சமயங்களில்
காசுவாங்கி மிஷனரிகள் சதியென்று சொல்
கேட்டவனைப் பாகிஸ்தான் போகச் சொல்
ஓர் இஸ்லாமியனையோ தலித்தையோ தூக்கிலிடு


தாய்மொழி கட்டாயமாக்கு
கிணற்றுத் தவளைக் கல்விமுறை என்பார்கள்

சமஸ்கிருதம் தேவபாஷை என்று பரப்பு
இதோ படிக்கிறோம் இந்தி என்பார்கள்


அரசு செலவில் இரட்டை இலை கட்டு
பறக்கும் குதிரையென‌ மறுதலிக்கச் செய்வார்கள்

ஊர் கூட்டித் தேரிழுத்து மசூதி இடி
கோவில் கட்ட ஓட்டுப் போடுவார்கள்


ஏழை வீட்டில் குறியிட்டு வை
யூதன் வீட்டில் நாசி வைத்த குறி என்பார்கள்

உலர்பனி விலைக்கு வாங்கி இல்லாத சாமி செய்
கோமகன் ஆட்சியைச் சொர்க்கம் என்பார்கள்


இமயக்கல் கங்கைவழி வந்து கண்ணகி சிலையானது கிடக்கட்டும்
கங்கைக் கரையில் வள்ளுவனுக்குச் சிலை வைத்து முக்காடிடு

விவசாயிகள் அம்மணமாய்ப் போராடட்டும்
நிர்வாணச் சாமியாரைச் சட்டசபைக்குக் கூப்பிடு

கீழடி கிடக்கட்டும்
தாஜ்மகாலுக்குக் கீழ் சிவன்கோவில் மீட்டெடு


கேள்விகள் கேட்கப்படும் முன்
தவறான பதில்கள் பரப்பிவிடு
சொல்லும் ஒவ்வொரு பொய்யிலும்
கொஞ்சம் உண்மை தெளி
செய்யும் ஒவ்வொரு செயலிலும்
கொஞ்சம் மதம் தூவு.

- ஞானசேகர்
(சந்தத்திற்காக இக்கவிதையில் ஒருவரி 'சதுரங்க வேட்டை' திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்டது)

Wednesday, January 24, 2018

சாதிக்காளைகள்

இன்னின்னார் காளை என்பது
இன்னின்ன சாதிக்காரன்
அடக்கக்கூடாது என்பதற்கும் தான்.

- ஞானசேகர்

Monday, January 22, 2018

யாத்திராகமம்

போக்குவரத்து நெரிசலில்
நட்ட நடுவில் மாட்டிக் கொண்ட‌
வாகனத்தில் வாசித்தேன்
'என் சமூகம்
உனக்கு முன்பாகச் செல்லும்'.

- ஞானசேகர்

Saturday, January 20, 2018

சங்கறுக்கும் நக்கீரனோ?

(எதனையும் அதனதன் இயற்பெயரால் அழைப்பதே ஞானத்தின் ஆரம்பம் என்கிறது ஒரு சீனத்துப் பழமொழி. சில நேரங்களில் இயற்பெய‌ர்கள் மதச்சாயல் கொண்டிருப்பதுண்டு. அதனால் அந்த இயற்பெயர்களைச் சொல்லி, எளிதாக‌ மக்களிடையே வெறுப்பை விதைப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் ஆட்சி மன்றத்தில் இருப்பவர்கள் என்பதும், அவர்களின் இலக்கிற்கு இத்தேசத்தின் அப்பாவி மக்கள் பலியாகி விடுகிறார்கள் என்பதும் நமக்கான சாபம் என்பேன்)

எட்விகி அண்டோனியா அல்பினா மையினோ
என்றே மேடைகளில் முழங்கினார்கள்
அரசியலுக்கு வந்த‌ சோனியா காந்தியை!

ஜேம்ஸ் மைக்கேல் லிண்டோ
என்றே நீட்டிச் சொன்னார்கள்
கேட்ட நேரத்தில் தேர்தலை அனுமதிக்காத ஆணையரை!

ஜோசப் விஜய்
என்று மெர்சலாக்கினார்கள்
ஒரு திரைப்பட நடிகரை!

திலீப் குமார்
என்று திரும்பி வரச் சொன்னார்கள்
ஏ ஆர் இரகுமானை!

அப்துல் ஹமீது என்றார்கள்
மனுஷ்யபுத்திரனை!

நீளும் பட்டியலில் இன்று
விக்டர் ஜேம்ஸ் என்று பரப்பிவிடுகிறார்கள்
வைரமுத்துவை!

நாளை
இக்கவிதை எழுதியவன்!

நாளை மறுநாள்
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று
பாகிஸ்தானையும் சேர்த்துச் சொன்ன‌
கணியன் பூங்குன்றன்!

- ஞானசேகர்

Thursday, January 18, 2018

சுடப்படும் வெண்சங்கு

பாருங்கள் இந்தப்
பகுத்தறிவுப் பகலவன் யோக்கியதை!
வீட்டை விட்டு ஓடிப் போனவனை
முதலில் தேடி இருக்கிறார்கள் தாசிகளின் வீட்டில்!

அவர் உரக்கப் பேசிக் கொண்டிருந்தார்
சாமிகளை எதிர்த்த ஈரோடு இராமசாமியைத் திட்டியும்
சாமிகளைச் சொல்லி காந்தியைக் கொன்றவர்களைப் பாராட்டியும்!

நீங்களும் அவரைச் சந்திக்க நேர்ந்தால்
தயவுசெய்து ஞாபகப்படுத்துங்கள்:

தாசிகள் வீடெல்லாம் தேடினார்கள்
பெரியார் அங்கில்லை
காசிக்குப் போயிருந்தார்

காந்தியைக் கொல்லப் போன ஒருவன்
காரியம் முடிந்தவுடன்
காசிக்குப் போகவில்லை
தாசி வீட்டில் பிடிபட்டான் என்று.

- ஞானசேகர்