புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Tuesday, November 28, 2006

இயற்கை எய்தியது இயற்கைமெதுவாக உலகம்
செத்துக்கொண்டு இருக்கிறது
யாருக்கும் தெரியாமல்!
-யாரோ

வரங்களே சாபங்களானால்
இங்கு
தவங்கள் எதற்காக?
-அறிவுமதி (என நினைக்கிறேன்)

மரம் கேட்டது:
"எங்களில் முடியும்
ஒரு போதிமரம்
ஒரு சிலுவைமரம்.
உங்களால் முடியுமா
ஒரு புத்தனோ
ஓர் இயேசுவோ?"
-யாரோ


மொழி புரியாத மலை.
புரிய வைக்க
250 INRக்கு ஒரு கிழவன்.
போரிஸ் எல்ட்சின் போல்
அவனுக்கு மூன்று விரல்கள்.

நிற்கும் இடமே
மலைத் தொடரின்
உயரமான இடம் என்றான்.
முதுகுக்குப் பின்னால்
ஒரு மவுண்ட் ரஷ்மூர்.

தூரத்துப் பாறைகாட்டி
மிசாரு மசாரு
மிகசாரு என்றான்.
காந்திக்கு இன்னொரு
சத்திய சோதனை.

தற்கொலை முனை என்று
ஒரு ரூபாயைக் கைவிட்டான்.
சில விநாடிகள் கழித்து
சத்தம் கேட்டது
அவனுக்கு மட்டும்.

புண்ணிய நதியின்
பிறப்பிடம் இதுதான் என
காலடியில் காட்டினான்.
சதுர அடி கருப்பைவிட்டு
பிரசவிக்கவில்லை புண்ணியநதி.

4000 அடி பள்ளத்தில்
புண்ணிய நதிகள் ஐந்தில்
இரண்டைக் காட்டினான்.
தண்ணீர் இல்லை.
தடம் இருந்தது.

மற்ற இரண்டு
நதிகள் காட்டினான்
அதே பள்ளத்தில்.
கரை இல்லை.
கட்டடம் இருந்தது.

பக்கத்து அரபைவிட்டு
தூரத்து வங்கம் சேரும்
அந்த ஒற்றை நதியின்
கடைசி உயிர்த்திரவத்தை
அணையின் அடிவயிறு கைது செய்தது.

கோவில் புகுத்தினான்.
ஒரு வாய்க்காலில் இருந்து
தண்ணீர் பெற்றது
ஒரு சிறுகுளம்.
அதன் வெப்பநிலை
0 டிகிரிக்கும் கொஞ்சம் அதிகம்.

சுத்தம் ஏதும் பாராமல்
குளத்துத் தண்ணீரில் சிலர்
குடல் நனைத்தனர்
தலை நனைத்தனர்
வியாதி கழுவினர்
அங்கம் காட்டினர்.

அவ்வாய்க்காலின் பிறப்பிடம் பார்த்தேன்.
ஐந்து வாய்க்கால் தண்ணீர்
சேர்ந்து உருவானது
அந்த ஒற்றை வாய்க்கால்.
ஒவ்வொன்றின் மேலேயும்
புண்ணிய நதிகளின் பெயர்கள்!

-ஞானசேகர்

Wednesday, July 05, 2006

சுயப்பிரசவம்

(டாக்டரான தனது சொந்த அண்ணன் தனக்குப் பிரசவம் பார்த்ததால், சேலையில் தூக்கில் தொங்கினாள் ஒரு தமிழச்சி, போன நூற்றாண்டின் கடைசியில். மகன் பிறக்கப் போகும் நேரம் கெட்ட நேரம் என்று ஜோசியர் சொன்னதற்காக, தன்னைத் தலைகீழாய்த் தொங்கவிட்டு, சில நிமிடங்கள் பிரசவத்தைத் தள்ளிப் போட்டாள் இன்னொரு தமிழச்சி, சங்க காலத்தில் ஒரு சோழ நாட்டில். இவர்கள் இருவரைப் பற்றியும் நான் கருத்துகள் ஏதும் சொல்ல விரும்பவில்லை. ஆனால், கால வித்தியாசங்கள் ஏதும் இல்லாமல், இக்கவிதையில் வருவது போல் நிகழ்ந்து கொண்டிருக்கும் பிரசவங்களுக்கு என் கவிதையால் கருத்து சொல்வேன்)

மூத்தரப் பாவாட
மொழங்காலுக்குச் சுருட்டிக்கிட்டு
மூலையில தூங்குறா
மூணுவயசு மூத்தமக.

குச்சி ஐசு ரெண்டு
அப்பனுக்கு ஆர்டர் போட்டுப்புட்டு
அம்மணமாத் தூங்குறா
நடுவுல சின்னமக.

பொட்டச்சியப் பெக்கப்போற
பொட்டக் கழுதக்கித்
தொணையெல்லாம் ஏதுக்குன்னு
வெசலூரு கெரகாட்டம்
போயிட்டாரு எம்புருஷன்.

ரெண்டு பொட்டகளப்
பெத்துப்போட்ட முண்டச்சின்னு
ஊரெல்லாம் வசவுனாலும்
எங்கப்பன் பொறப்பாரு
மூணாவது மாணிக்கமா
ஆம்பள சிங்கமா
அடுத்ததா ஏன் வவுத்துல.

நடுசாமம் ரெண்டுமணி.
நெஞ்சுல ஒதக்கிறான்
அடிவவுத்த முட்டுறான்
வவுத்துல குத்துறான்
கருவறக் கதவத்
தட்டித்தட்டிப் பாக்குறான்

நாலு உசிர உட்டுப்புட்டு
நடுத்தெரு ஆட்டத்துல
நழுவுந்துணி பாக்கப்போன
புருஷனத்தான் கூப்புடவோ?

தலக்கி எண்ண வெச்சு
பரலோக வழிகாட்ட
பேரப்பய வேணுமின்னு
திண்ணையில தவமிருக்கும்
காலு வெலங்காத
மாமனாரக் கூப்புடவோ?

ஆம்பள வித்து
அழிஞ்சுபோன சிருக்கிவந்து
மருமகளா வாச்சுட்டான்னு
ஊரெல்லாம் ஒப்பாரி
சமயக்கட்டில் படுத்திருக்கும்
மாமியாரக் கூப்பிடவோ?

ரெண்டு உடம்பத் தூக்கிக்கிட்டு
ரெண்டு தெரு தாண்டிப் போயி - இந்த
ரெண்டு மணி நேரத்துல - முன்ன
ரெண்டு பிரசவம் பாத்துப்போன
வெங்கலமண்டாயி கூப்புடவோ?

மனுசப்பயக் கூப்புடவோ - இங்க
உருப்படியா யாருமில்ல.
சாமிகளக் கூப்புட்டவோ - அதுக
வந்ததாவும் சரித்திரமில்ல.
ஒக்காந்து யோசிக்கவோ - இது
தள்ளிப்போடும் காரியமில்ல.
ரெண்டுபுள்ள பெத்துப்புட்டேன் - இப்ப
ஆபத்துக்குப் பாவமில்ல.

கட்டுலுல படுத்தாக்க
ராத்திரி வேளையில
சத்தம் வருதுன்னு
எம்புருஷன் சாச்சுவெச்ச
இரும்புக் கட்டுல
திருப்பிப் போடுறேன்.

எங்காத்த சீர்செஞ்ச
கட்டுலுக்குக் கீழே
பாயில படுத்திருக்குக
என்னோட மகாராணிக ரெண்டும்!
கட்டுலுக்கு மேல
முண்டக்கட்டயா ஒக்காந்துருக்கேன்
எங்காத்தாவோட மகாராணி நானு!

கட்டுலோட ஒருகாலோட
பீச்சாங்காலக் கட்டி
கட்டுலோட மறுகாலோட
சோத்தாங்காலக் கட்டி
கையால முட்டுக் குடுத்து
ஒதட்ட வாய்க்குள்ள வெச்சு
கண்ண உள்ள தள்ளி
ஒம்பதரைமாசப் பொதையல
வெளிய தள்ளுறேன்!

அண்ணன் தம்பிக
இல்லாம பொறந்த நான்
கழுத்து சுத்தி இருந்த
தொப்புள் கொடி பத்தி
கவலப்பட என்ன இருக்கு?

தொப்புளுக்குக் கீழ பாக்குறேன்.
நாசமாப் போச்சு!
திரும்பவும் பொறந்திருச்சு
பாழாப்போன பொட்ட!

பொறந்த மேனியாவாயே
ரெண்டு பேரும் இருக்கோம்
விடியற வரைக்கும்.
கதவத் தொறக்குறேன்
ஒத்தசேல சுத்திக்கிட்டு.
மூலையில ஒக்காந்துட்டேன்
எழவு வீடுபோல.
கொழந்த தொடக்கிறாரு
கெரகாட்டம் பாத்தவரு.

சேல வாய்சொருகி
எட்டி நின்னு பாத்துப்போற
மாமியாரே சொல்லுங்க
"சத்தியமாத் தெரியலையா
ஒங்க மொகம்
ஏன் புள்ள மேல?".

நாற்காலி வண்டியில
பார்வையிட வந்துபோகும்
மாமனாரே சொல்லுங்க
"சத்தியமா கேக்கலையா
கட்டுலப் பாடையாக்கிச்
சவமொன்னு பொறந்த சத்தம்?".

கட்டுலுக்கு மேல ஒண்ணு
கட்டுலுக்குக் கீழ ரெண்டு
மூணுக்கும் நாளக்கி இந்த
முண்டச்சி கெதிதானோ?

கட்டிப் போட்டுத்தான்
கருவறை திறக்கணுமோ?

பிறப்பு வீட்டுலதான்
மயானம் பாக்கணுமோ?

தன் ரத்தம் பொறக்கையில
தன் சதையும் ஆடாம போகணுமோ?

ஆம்பளயா மட்டுமே
அவதாரம் எடுத்துவந்து
அதிசயங்க காட்டிப்போகும்
ஆம்பள சாமிகளே!
பொம்பள நான் கேக்குறேன்
பதில் சொல்ல மாட்டீகளோ?

ஒத்தக் கண்ணுல
கோவம் கொப்பளிக்க
மனுசப் பயலுகளக்
களையெடுக்க வேணுமின்னு
அவதாரம் எடுக்க
அவகாசம் ஏதும் இருக்குதான்னு
தோதிருந்த சொல்லுங்க
ஆம்பள சாமிகளா!

அவசரமா முடிவெடுத்து
அவதாரம் எடுக்கையில
மறந்து தொலச்சிடாதீக.
மூணு பொட்டச்சிக்குத் தம்பியா
ஏன் வவுத்துல பொறந்து பாருங்க!

கடவுளையே வவுத்துல சொமந்தாலும்
சொயமாத்தான் பாத்துக்குவேன்
ஏன் பிரசவம் எனக்கு நான்.
அதுவரைக்கும் நிம்மதியா
செவுத்துல சாஞ்சு நிக்கும்
ஆத்தா தந்த இரும்புக் கட்டில் மட்டும்!

-ஞானசேகர்

Wednesday, June 21, 2006

விவாக ஒப்பந்த விழா அழைப்பிதழ்

தவறாமல் எண்ணுடன்
தவறாமல் இருக்கிறது
அதிகார வசனங்களோடு
சிகரமேறிய மதம்!

என் பயமே மதிலாகி
சொல்லாமல் விட்டுப்போன
நாட்களுக்கு எல்லாம்
பக்குவமாய்ப் பழிவாங்க
ஏளனமாய் என்னை
எதிர்நோக்கும்
கி.பி.யில் ஒரு முகூர்த்த நாள்!

தூரங்களே தூதாகி
சந்தர்ப்பம் காத்திருந்த
நேரங்களுக்கு எல்லாம்
பதறாமல் பழிவாங்க
என்னை ஆவலுடன்
எதிர்நோக்கும்
முகூர்த்த நாளின் நல்ல நேரம்!

அந்தஸ்தின் ஆதரவு
அணுவளவும் இல்லாத
அற்பக் காதலனாய்
கண்காட்சிக் கலைப்பொருளாய்த்
தொட்டுப் பார்க்கிறேன்
ஓரத்துச் சரிகைகள்!

சுத்தத்திற்குப் பெண் வைத்து
பெண்ணைச் சுத்தமாக்காத
திருவளர்ச் செல்விக்கும்
காதலுக்குச் அசமமாகாத ஏட்டறிவுக்கும்
இடையே இடப்பக்கம்
என் எல்லாக் கவிதையின்
கருவின் பெயர்!

ஆணைப் பலமாக்கி
பலத்தைப் பெண்ணில் வைத்த
திருவளர்ச் செல்வனுக்கும்
அயல்கண்ட அயல்நாட்டிற்கும்
இடையே வலப்பக்கம்
உன் எதிர் கால
முன்னெழுத்துக்காரன் பெயர்!

வலப்பக்க மூலையில்
ஒதுங்கிக் கிடக்கும்
உன் தந்தையின் பெயரைத்
தாங்கிப் பிடித்திருக்கும்
வலப்பக்க சாதியும்
இடப்பக்க மதமும்!

மணம் இல்லாதவன்
மணம் முடித்து வைக்க
பெரியோர்கள் ஒப்பத்துடன்
சுற்றமும் நட்பும்
வாழ்த்தி ஆசிர்வதிக்க
கை மாறப் போகிறது
காதலி என்ற உறவு!

மதத்தின் சம்மதம் இல்லாமல்,
சாதியின் சாதகம் இல்லாமல்,
FLAMES விளையாட்டில்கூட
நமக்குள் M இல்லாமல்,
இன்றுவரை காதலைச்
சொல்லாமல் போன
என்னால் இப்போது
முடிந்தது ஒன்றுதான்,

வெறுமையாய்க் கிடந்த
என் இதயத்தில்
நான் கிறுக்கிய என் காதல் போல்
பத்திரிக்கையின் பின்புறம்
ஒருபக்க இக்கவிதை!

-ஞானசேகர்

Friday, May 12, 2006

கடன்பட்டார் நெஞ்சம்

குழந்தைப் பருவத்தில் அதைத் தொலைத்தவர்கள், வயோதிகப் பருவத்தில், குழந்தைத்தனமாக நடந்து கொள்கிறார்கள்.
-யாரோ


(ஒரு குழப்பமான விஷயத்தைப் பற்றி, ஒரு குழப்பமான கதையைத் தெளிவாக எழுதியுள்ளேன்)

வலது கையால் தலையைச் சுற்றி இடது காதைத் தொடுவதை மிகப் பெரிய சவாலாகக் கருதிய வயது அது. அப்போதைக்கு எல்லாம் இருட்டு ஒரு பயமாகவே எனக்குத் தெரிந்ததில்லை. அப்படி ஒரு பயமறியா இளங்கன்று பருவத்தில், ஒரு மே மாதத்தில், ஏதோவொரு நாளின் பின்னிரவில், தனியாக எழுந்திரித்து, சிறுநீர் கழிக்க ரோட்டோரம் வந்தேன். நான் நனைத்துச் சூடாக்கிய இடத்தில் இருந்து, சுமார் 350 கிலோ மீட்டர் தொலைவில், யாரோ ஒரு பெரிய ஆளைக் கொன்றுவிட்டதால், தீவிர தேசபக்தர்கள் சிலபேர், சாலையோரங்களை அடித்து நொறுக்கிக் கொண்டு இருந்தார்கள். சில அடி தூரத்தில் நின்று, பொறுமையாக வேடிக்கை பார்த்துவிட்டு வந்து, பிரஞ்சு புரட்சி அன்று பதினான்காம் லூயி தூங்கினதுபோல், ஒன்றுமே நடக்காததுபோல், நிம்மதியாகத் தூங்கினேன். சமுதாயத்தின் அலங்கோலங்கள் எல்லாரையும் எல்லா நேரங்களிலும் அலைக்கழிப்பதில்லை என்பதற்கு, இப்பின்னிரவு சம்பவம் ஒரு முன்னுதாரணம்.

நானும் அப்பாவும் மறுநாள் காலையில், எதிர் டீக்கடையில் 1 ரூபாய் 20 பைசாவுக்கு இரண்டு டீக்கள் குடித்தோம். சுவிட்சர்லாந்து முதல் பெரும்புதூர் வரை பல ஊர்களைப் பற்றியும், விஸ்வ பிரதாப் சிங் முதல் அமிதாப்பச்சன் வரை பல மனிதர்களைப் பற்றியும் டீக்கடைப் பெருசுகள் பேசிக்கொண்டு இருந்தன. "கால பேப்பரு வந்தாத்தான் எதையுமே கண்டிஷனா சொல்ல முடியும்" என ஒரு பெருசு முடித்து வைத்தது.

சிங்கப்பூர் ரிடர்ன் செட்டியார் பாட்டி முதல், 7 நாட்கள் வயதாகும் பக்கத்து வீட்டுக் குழந்தைவரை, பெரும்புதூர் அதிர்ந்தது முதல், ரோட்டில் சோடியம் விளக்கு உடைந்து கிடப்பதுவரை பல விஷயங்களைச் சொல்லிமுடித்தார் அப்பா. விளக்குகள் உடைக்கப்பட்டதை நான் பார்த்ததாகச் சொன்னேன். இராத்திரியில் இனிமேல் தனியாக வெளியே வரக்கூடாது என முதல் தடை என்மேல் விதிக்கப்பட்டது. எனது குழந்தைப் பருவம் முடியப் போகிறது என அப்போது எனக்குப் புரியவில்லை.

மூன்று வாரங்கள் கழித்து தேர்தல். தமிழக மக்கள் பெரும்பாலோனோர் அன்று ஓட்டுப் போட படையெடுக்க, சுற்றுவட்டார மக்கள் எல்லாம் எங்கள் கிராமத்தில் இருந்த எங்கள் வீட்டிற்குப் படையெடுத்தனர். முதல் முறையாகக் கையில் மைக் கிடைத்ததால், "அண்ணாத்த ஆடறார்" பாட்டைப் பாடிப்பார்த்தேன். பின்னர் சின்னப் பயல்களுடன் சேர்ந்துகொண்டு, குண்டுமணி பொறுக்கக் கிளம்பிவிட்டேன். சாயங்காலம்போல், என்னைக் கூட்டிவந்து, கட்டிலில் நனைந்து கிடந்த, பாட்டியின் தலையில் எண்ணெய் தடவச் சொன்னார்கள். எதுவும் கேட்காமல், செய்தேன். பலபேருக்கு முன்னால், என் அத்தை என் டவுசரை அவிழ்த்து, வேட்டி கட்டிவிட்டாள். முதன்முறையாக சுற்றி இருப்பவர்களைப் பற்றி கவலைப்பட்டேன். ஆப்பிள் சாப்பிட்ட ஆதாமின் வெட்கம் எனக்கும் அறிமுகமானது.

இரவு எட்டு மணி.
"என்னம்மா கொழம்புல உப்பே இல்ல"
"சரியாத்தானே இருக்கு"
"எம்மா, இந்தக் கீர கசக்குது வேண்டாம்"
"குருஞ்சாக்கீர, ரொம்ப நல்லது, சாப்புடு"
"பாட்டி எங்க?"
அத்தை பதில் சொன்னாள்.
"பாட்டி, அவுங்க அப்பாகிட்ட போயிட்டாங்க"
"அவுங்க அப்பாவும் மண்ணுக்குள்ளதான் இருக்காறா?"

இதுபோல, பல கேள்விகளால் தொல்லை கொடுத்ததால், இயேசுநாதர் முதல் பால்ராஜ் தாத்தா வரை பல கதைகள் சொல்லி, சாவு என்ற ஒற்றை வார்த்தையை விளக்கி முடித்தாள் அத்தை.
"அப்ப, பாட்டி எப்புடி செத்தாங்க?"
அடுப்படியில் பூனை, பானைகளை உருட்டியது.
"பேசாம தூங்கு. பேசுனா, பூன கடிக்கும்"
"அதெல்லாம் கடிக்கட்டும். பாட்டி எப்புடி செத்தாங்க?"
"இந்தப் பூன கடிச்சுதான். இனிமேல் நீ தூங்காட்டினா, ஒன்னையும் கடிக்கும்"
என்னைச் சமாதானப்படுத்த, அத்தை சொன்ன வார்த்தைகள். கடலில் நதி கலந்தால் மாறாத உப்புபோல, பல வருடங்களாக பூனை கடித்து மனிதன் இறப்பதில்லை என்ற உண்மை தெரிந்தும், உண்மை கலந்தாலும் பயம் மாறவில்லை. சமுதாயத்தின் அலங்காரங்கள் எல்லாரையும் எல்லா நேரங்களிலும் அழகு செய்வதில்லை என்பதற்கு, இம்முன்னிரவு சம்பவம் ஒரு முன்னுதாரணம்.

இதெல்லாம் போதாதென்று, அடுத்த வாரத்தில் என் கண்முன்னாலேயே, ஒரு பூனை குறுக்கே ஒடியதால், நிலை தடுமாறிய ஓர் இரு சக்கர வாகனத்தில் இருந்த, ஒரு குடும்பம் லாரியின் அடியில், மனித மூளைகளைக் காட்டிவிட்டு என் கண்முன்னே, பேரப்பிள்ளைகள் எண்ணெய் தடவக்கூட இடம் இல்லாமல், தலை இல்லாமல், உயிர் இல்லாமல் போனார்கள். என்னோடு சேர்ந்து மூன்று பேரின் இரத்தமும் உறைந்திருந்தன.

அன்று இரவு இதைப்பற்றி, நான் எதையும் சொல்லவில்லை. என்க்கு ஒன்றுமே பாதிப்பு இல்லாமல் இருந்தாலும், சிறையில் இருந்த நெப்போலியன் போல, தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டேன். பூனையும், பல் தெரியும் பாட்டியும், கொதிக்கும் எண்ணெய்க் கொப்பறையும் கனவில் வந்து போயின. இரவு என்றாலும், அதிலும் துக்கம் என்றாலும் பயப்பட ஆரம்பித்தேன். பகலில்கூட, இரவின் கனவுகள் தொல்லைபடுத்தின. முதல் நாள் இரவு கனவில் வந்த காட்சிகள், மறுநாள் காலை நினைவில் வந்த முதல் நாளே, முதல்நாள் இரவில் எனது குழந்தைப் பருவம் செத்துப் போனதை என்னால் அவ்வயதில் உணரமுடியவில்லை.

"தூக்கத்தில் தேவதைகளைப் பார்ப்பதால் குழந்தைகள் சிரிக்கிறார்கள்" என்றார் ஒரு கவிஞர். நான் அப்பருவம் கடந்துவிட்டதால், சிரிப்பு தூரமாகியது, கனவிலும், நனவிலும். எனது தலையணையுடன் மரணபயமும், எனது நிழலுடன் பூனையும் பயணிக்க ஆரம்பித்தன. பூமியோடு சேர்ந்து நானும், சூரியனைச் சில முறைகள் சுற்றி வர வர, பூனை பற்றிய பயம் முழுவதும் மறந்து போனது. ஆனால், சாவுபயம் மட்டும் சாகாமல் இருந்தது.

கழுத்தை வெட்டப் போகும்போது, "தாடியை வெட்டிவிடாதீர்கள்" என்ற ஒரு மத போதகரும், சுடப்பட்ட நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும்போது, "உங்களில் யாரும் எதிர்க்கட்சிக்காரர்கள் இல்லையே?" என்று காவலாளிகளிடம் சிரித்துப் பேசிய ரொனால்டு ரீகனும், கொல்லவந்தவர்களையே திட்டிய சே குவாராவும் என்னை ஆச்சரியத்தில் அமுக்கினார்கள். அடுத்த விநாடியில் சாவை வைத்துக் கொண்டு, இவ்வளவு கம்பீரமாக எப்படி இருக்க முடியும்? என்னைப் பார்த்தால் எனக்கே பாவமாக இருந்தது.

ஒருமுறை, எங்கள் ஹாஸ்டலில் ஒரு போட்டி நடந்தது. போட்டி இதுதான்: "பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து ஒரு பாதிரியார் தவறி விழுந்து இறந்துபோனார். அவருடைய ஆவி, 150 ஆண்டுகளாக மொட்டை மாடியில்தான் அலைகிறது. மாடப்புறாக்கள் சத்தம்போட்டு பேசும் ஒரு இரவு முழுவதும் மொட்டை மாடியில் தூங்கினால், ரூபாய் 100 தரப்படும்". நான் ஒருவன் மட்டும் ஒத்துக்கொண்டேன். வெற்றியும் பெற்றேன். பிறகுதான் யோசித்தேன். நேற்று இரவு, சூரியனை இனிமேல் பார்க்க முடியாது என்றுதான் நினைத்து இருந்தேன். ஆனால், இன்று பலபேர் பயந்த ஒரு காரியத்தை நான் மட்டும் செய்து முடித்தேன். அதுவும் இத்தனை நாள், நான் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்த ஒரு விஷயத்தை.

எனக்கு என்னதான் பிரச்சனை? கருங்கடல் போல தனியே இருந்து, தவறான கணிப்புகளால் என்னை நிரப்பிக்கொண்டு இருந்த நான், வளைகுடா போல கொஞ்சம் வெளியே தலை நீட்டி, சமுத்திரங்களை எட்டிப் பார்க்கத் தொடங்கினேன். உலகம் புரியத் தொடங்கியது. எல்லோருக்கும் உண்டு அந்த சாவுபயம் மற்றும் வலிபயம். இத்தனை நாள், தன் காலின் பலம் அறியாமல் சிங்கத்திற்குப் பயந்து ஓடும் ஒட்டகசிவிங்கிபோல், மரணத்திற்குப் பயந்து பல கனவுகளைக் காயப்படுத்திவிட்டேனே என்று சிரித்துக் கொண்டேன். கல்பனா சாவ்லாவும், டயானாவும் ஒரே நாளில் பிறந்ததற்காக, அவர்களைச் சகோதரிகள் என நினைக்கும் ஓர் அப்பாவிச் சிறுவன் போல், நான் வாழ்ந்திருக்கிறேன். பயம் பொதுவெனினும், அது எனக்குள் நுழைந்ததற்கான காரணங்களாக இதுவரை நான் சொன்னவை எல்லாம், தவறென நிரூபிக்கப்பட்ட தேற்றங்கள் போல், வழக்கிழந்து போயின. காகம் அமரப் பனம்பழம் விழுவதில்லைதானே?

குதிரை ரேஸில், தன்னை இன்னொரு குதிரை முந்த முற்படும்போது, வேகமாக ஓடத் தொடங்கும் குதிரை போல, சோதனை என்று ஒன்று இல்லாதவரை தனது பலம், பயம், பலவீனம் இதுதான் என்று யாராலும் தீர்மானமாகச் சொல்ல முடியாது. அப்படி சோதனைகளைத் தேடி வரவழைத்து, பலம் அல்லது பலவீனம் அறிவதில் ஒரு திருப்தி உண்டு. பதில் தெரிய, கேள்விகள் இல்லாமல், தேர்வுகள் மட்டும் எழுதும் சில தேர்வுகளைப் பற்றிதான், இனி.

(சற்றே இடைவெளி எடுத்துக் கொண்டு, மனநிலை மாற்றிவிட்டு, மீண்டும் தொடருங்கள்)

இதேமாதிரி சோதனைகள் எல்லாரும் கண்டிப்பாகச் செய்துகொண்டுதான் இருக்கிறோம். ஆனால், வெளியே சொல்வதில்லை. ரயில்வே மந்திரி ரயிலில் போகும்போது, ஊரே அவரைப் பார்க்க, ரயில் பெட்டிகளை எண்ணிக் கொண்டு இருந்த ஒரு முரட்டு போலீஸ்காரரை நான் பார்த்திருக்கிறேன். மனித இனத்தைச் செய்வாய் கிரகம் முதல் முறை நெருங்கி வந்தபோது, அதைப் பார்ப்பதற்காக 60 நாட்களும், இரவெல்லாம் விழித்து, பகலில் தூங்கிய ஒரு நண்பனையும் நான் பார்த்திருக்கிறேன். மனித தொல்லை அதிகம் என்றும், பெண்கள் தொல்லை அதிகம் என்றும் வீட்டையும், கால நேரங்களையும் மாற்றிக் கொண்டு இருந்த ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் பற்றியும் நான் படித்து இருக்கிறேன்.

சில நாட்களுக்கு முன், என் நண்பன் ஒருவன் எனக்கு போன் செய்தான். நான் கேட்டேன்.
"என்னடா வாயாலதான் பேசுறியா?"
"24 மணிநேரமா, பச்சத் தண்ணிகூட குடிக்கக் கூடாதுன்னு ஒரு வைராக்கியம். இன்னும் 6 மணிநேரம் இருக்கு"
"திடீர்ன்னு ஏன்டா?"
"மேதா பட்கர் இத்தன நாள் உண்ணாவிரதம் இருக்காங்களே, நம்மலால இருக்க முடியுமான்னு ஒரு சின்ன டெஸ்ட். வேல அதிகம் இருக்கதால, 24 மணிநேரம் மட்டும்"
"என்னால 36 மணிநேரம் அப்புடி இருக்க முடியும். அதுக்குமேல முடியும்மான்னு தெரியல. வேணும்முன்னு, இருக்காததால என்னோட சக்தி எனக்குத் தெரியல"
"சும்மா இருக்குறது ரொம்ப ஈஸிடா. பெர்பஸ்ஃபுல்லா இருக்குறப்ப, விரதங்கற ஒரு வார்த்தை மட்டுமே, மூளையில இருக்கும். அதனால, சாப்புடலங்கற ஞாபகமே, இன்னும் பசிய அதிகமாக்கிடும்"
"இப்புடித்தான் அலெக்ஸாண்டர் ஃப்ளமிங் ஒருமுறை என்ன பண்ணாருன்னா...."
"சரி சரி இருக்குற கொஞ்ச சக்தியையும், ஒன்னோட மொக்க போட்டு, வேஸ்டாக்க விரும்பல, போன வெச்சுடு"

போனை மட்டும்தான் என்னால் வைக்க முடிந்தது. இதுபோல் நான் செய்தவைகளை யோசித்துப் பார்க்க, அந்த உரையாடல் ஒரு தூண்டுகோலாகவும் அமைந்து போனது. காந்தி ஜெயந்தி அன்று, மௌன விரதம் இருக்கப் போவதாக முடிவெடுத்து, இரண்டு ஆண்டுகளாக கெட்ட வார்த்தைகளுடன் ஆரம்பமானது எனது அக்டோபர் இரண்டுகள். ஒரு வழியாக அம்முயற்சியைக் கைவிட்டேன். ஆனால், அடுத்த வருடம் ஆச்சரியப்படும் வகையில், எந்த முயற்சியும் எடுக்காமல், அமைதியாகவே செத்துப் போனது எனது அக்டோபர் இரண்டு. அதேபோல், தாமஸ் ஆல்வா எடிசன் இறந்த நாள் அன்று, மின்சாரம் உபயோகிக்காமல் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தால், இரவு 11:30 மணிக்கு NDTVல் செய்தி: "வீரப்பன் சுட்டுக்கொலை". என்ன நடக்கப் போகிறது என ஏங்கும் மனதுடன், எனது அறைக்கதவையும் 12 மணிக்குச் சாத்தியவன் தான். அடுத்தநாள் இரவு 12 மணிக்குத்தான் வெளியே வந்தேன். அக்டோபர் 18 - அந்த ஒருநாள், ஐந்து மெழுகுவர்த்திகளுடன் நான் வாழ்ந்த வாழ்க்கை, ஒரு நல்ல அனுபவம்.

இதுபோன்ற காரியங்கள் பலபேர் முயற்சித்து இருக்கலாம். ஆனால், நான் முயற்சி செய்த ஒரு விபரீதமான காரியமும் உண்டு. எனது அப்புச்சியின் (அப்பாவின் அப்பா) நண்பரான ஒரு தாத்தா எனக்கு நன்கு பழக்கம். 1972ல் பஞ்சம் வந்தபோது, ஊர்க் கிணற்றைத் தூர்வாரப்போய், வெப்பக்காற்று அடித்து, அவரின் இடதுகண்ணின் கருவிழியும், வெள்ளை விழியாய்ப் போனது. அதற்காக மதுரை அரவிந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மதுரை எங்கள் ஊரில் இருந்து தூரம் என்பதால், டாக்டரின் பரிந்துரைப்படி, திருச்சியில் ஒரு டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வார்.

அடிக்கடி அவர் வீட்டிற்குச் நான் செல்வதுண்டு. திண்ணை வாழ்க்கை. அரைக்கோளவடிவத் தட்டில் சாப்பாடு. 10 ரூபாய் கொடுத்துவிட்டு, 50 ரூபாய் எனச் சொல்லும் மகன். கடைசியாக எப்போது சாப்பிட்டோம் என்றும், தனது பிள்ளைகளின் பெயரை வரிசையாகக் கூட நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் செய்துவிடும் 70 வயது ஞாபக மறதி. இவற்றை எல்லாம், நடு பாலைவனத்தில் செத்துப் போன முதலாளி அருகில் அமைதியாக அமர்ந்திருக்கும் ஒட்டகம் போல, வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பேன். என்றோ சந்திக்கப் போகும் கண்ணில்லாத வாழ்க்கையை, இன்று நான் நினைத்துப் பார்க்க இவர்தான் காரணம் என்று நான் சொல்ல மாட்டேன்.

ஒருமுறை திருச்சி டாக்டரிடம் இவரை நான் அழைத்துப் போயிருந்தேன். டாக்டர் கேட்டார்.
"என்ன தாத்தா? பேரனா?"
"பேரன் மாதிரிதான் சார்"
"மருத்த ஒழுங்கா ஊத்துறீங்களா?"
"தூங்கப் போறதுக்கு முன்னாடி ஊத்துறேன் சார். ஆனா, இன்னும் அந்த தெர மறக்கிறது மாதிரியே இருக்கு. கண்ணுல இருந்து தொண்டைக்கி எறங்கிக் கசக்குது சார்"
"அது கசந்தா என்ன தாத்தா? உங்களாலதானே ஊரே நல்ல தண்ணீ குடிக்குது"

"சரி சார். இவனக் கொஞ்சம் டெஸ்டு பண்ணூங்க. மூச்சுக்கு முண்ணூறு தடவ சும்மா கண்ணக் கசக்கிக்கிட்டே இருக்கான்"
என் கண்ணோடு அவர் கண்ணை உரசி, சிவப்பு விளக்கெல்லாம் அடித்துப் பார்த்து, டாக்டர் என் கண்ணைப் பரிசோதனை செய்தார்.
"தம்பிக்கி இடது கண்ணுல, இமைகள் சேர்ற எடத்துல, மூக்குக்குப் பக்கத்துல ஒரு சின்ன கொப்பளம் இருக்குது தாத்தா"
இரத்ததானம் செய்யப் போனவனுக்கு, எயிட்ஸ்ன்னு சொன்னமாதிரி இருந்தது.
"அந்தோனியாரே!!!"
"அதனால ஒரு ஆபத்தும் கெடையாது. வயித்துல இருக்குற கொடல்வால் மாதிரி. ஒரு உபயோகமும் கெடையாது. ஆனால் கொடல்வால் வளந்தா தொல்லை. இது வளந்தாலும் தொல்லை கெடையாது"
"பூண்டி மாதாவுக்குக் கண்ணடக்கம் செஞ்சு வெக்கிறதா வேண்டிக்கணும்"
"தம்பி, வேணாமுன்னு நெனச்சா எனக்கிட்ட வா. இத வெட்டி விட்டுடுறேன். ஒரு நாள் கட்டுப்போட்டு, பிரிச்சுட்டா சரியாயிடும்"
டாக்டரின் இவ்வார்த்தைகள், பீரில் போடப்பட்ட ஐஸ்கட்டி போல, என் சிந்தனையில் மிதக்க ஆரம்பித்தன.

கண்ணற்ற வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை மூங்கில் வேகத்தில் என்னுள் வளர்ந்தது. நான்கு வருடங்கள் கழித்து, 500 ரூபாய் பணத்துடன், அதே டாக்டரிடம் போனேன். என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. கண்ணைப் பரிசோதித்துவிட்டு டாக்டர் என்னை ஆச்சரியமாகப் பார்த்தார்.
"நீ.... அந்த Cyclopent தாத்தாவோட ஒருநாள் இங்க வந்திருந்தேல்ல?"
எனக்குப் புரியவில்லை. அவரே தொடர்ந்தார்.
"மருந்துகளோட பழகிப் பழகி மனுஷங்க பேரெல்லாம் மறந்து போச்சு. அந்த..... பூழக்கண்ணு தாத்தா...."
"ஆமா சார். நான் அவன் தான்"
"அவரு எப்புடி இருக்காரு"
"அவரு பூமியில இல்ல சார்"
கொஞ்சம் அமைதி.
"என்ன எப்புடி சார், இத்தன நாள் ஞாபகம் வெசு இருக்கீங்க?"
"Cyclopent மருந்த இதுவரைக்கும் ஏன் சர்வீஸ்ல, ஒருத்தருக்கு மட்டும்தான் எழுதியிருக்கேன். அதனால் அந்த தாத்தாவ மறக்க முடியாது. நீ உள்ள வர்றப்ப, கட்டுப் போட்டுக்கிட்டு ஒருத்தர் வெளிய போனாரே, பாம்படிக்கப் போயி, பாம்பு வாயில இருந்த எச்சம் கண்ணூல விழுந்துருச்சு. அதேமாதிரிதான் நீயும். வித்தியாசமான் கேஸெல்லாம், கண்டிப்பா ஞாபகத்துல இருக்கும்"
எஸ்.ராமகிருஷ்ணனின் "எதையும் ஞாபகப்படுத்தாத முகம், எளிதில் மறந்துபோகும்" என்ற வரிகள் சட்டென ஞாபகத்தில் வந்துபோயின.

ஒரு நர்ஸ், என்னைக் கூட்டிக்கொண்டுபோய், ஒரு கட்டிலில் படுக்க வைத்தாள். கொப்புளம் பார்த்துவிட்டு, என்னை மிகவும் பரிதாபமாகப் பார்த்தாள். எனக்கு ஏதோ அவரசரப்பட்டு தவறான முடிவு எடுத்துவிட்டதுபோல் தோன்றியது. அவள் வெளியேபோய், இன்னும் மூன்று நர்ஸ்களைக் கூட்டுவந்து காட்டினாள். எனது சங்கட்டம் இன்னும் அதிகமாகியது. வெட்டுவதற்கு டாக்டர் சொன்ன நேரம் நெருங்கிவிட்டது.
ஒரு நர்ஸ் என்நெற்றியில் கைவைத்து, தலையை இருக்கிப் பிடித்துக் கொண்டாள். இன்னொருத்தி காலை. இன்னொருத்தி நெஞ்சை. ஒருத்தி ஒரு கண்மருந்துடன் வந்து, ஒரு சொட்டு என் இடக்கண்ணில் விட்டாள். இப்படி ஒரு எரிச்சல் உணர்ச்சியை, அதுவும் கண் போன்ற ஒரு மிருதுவான இடத்தில் உணர்ந்ததே இல்லை. துடிதுடித்துப் போனேன். சில சொட்டுகள் விட்டபிறகு, சொட்டுகள் கண்ணை நோக்கி வருவதை மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. கண்ணைத் தொடுவதை உணரமுடியவில்லை.

டாக்டர் வந்தார். டெட்டால் சோப், கையுறை போன்ற சம்பிரதாயங்களைச் செய்தார். மயிர் கத்தரிப்போன் முன்னிலையில் ஆடு போல, பார்த்துக் கொண்டு இருந்தேன்.
"இப்புடியே இருந்துட்டுப் போகட்டுன்னா, தம்பி, 750 ரூபா செலவுபண்ணி.... கேக்கமாட்டிகிறாரு. லவ் பண்றாரு போல"
என்னைக் கூட்டி வந்த நர்ஸ், சட்டென திருப்பி என்னைப் பார்த்தாள். நான் இல்லையென சைகை செய்தேன். ஒரே ஒரு துளை மட்டும் இருந்த கருப்புத் துணியை என் முகத்தில் போர்த்தினார்கள். அவர் பங்குக்கு டாக்டர் ஐந்து சொட்டு கண்ணில் விட்டார். இப்போது அவள் மட்டும் என் தலைக் கெட்டியாகப் பிடித்து இருந்தாள்.

ஒரு வித்தியாசமான ஆயுதம் என் கண்ணருகில் வந்து, கொப்பளத்தைப் பிடுங்கிப் போனது. வெளிவந்த ரத்தம், கண்ணை மூடியது. ச் ச் ச் ச் ச் சார் சார் என்ற சத்தங்கள் கேட்டன. சில நேரம் எனது ரத்தமே எனக்காக, கண்ணீர் சுரப்பியின் வேலை பார்த்தது. கண்ணீர் சுரப்பி கண்ணீர்விட்டதை, தொண்டையின் ஆழத்தில் உணரமுடிந்தது. ஒரு மெழுகுவர்த்தியில் சூடேற்றப்பட்ட, ஒரு கம்பியால், காயத்தில் சூடுபோடப்பட்டது. கண்ணில் உணர்ச்சியே இல்லை. இப்போதுதான், நான் இவ்வளவுகாலம் எதிர்பாத்தது நடந்தது. ஒரு கண்ணைச் சுற்றி, டாக்டர் கட்டுப் போட்டார்.
"இந்தாப்பா, ஒன்னோட கண்வால்"
உள்ளங்கையில் ஒழித்துக் கொண்டேன்.
"இதவெச்சு என்ன செய்யப் போறீங்க?"
பதிலே சொல்லாமல் எழுந்திரித்தேன்.
"நாளைக்கி வந்து கட்ட அவுத்துட்டுப் போங்க"

சூரிய ஒளியை வாங்கிக் கொள்ள, பாவம், எனது வலது கண் மட்டும், இது கண்ணின் துணை இல்லாமல் கஷ்டப்பட்டது. சட்டென நிழல் நோக்கி, பார்வை திருப்பினேன். வாசல்படியில் அவள் நின்றுகொண்டு இருந்தாள். திரும்பி நடக்க ஆரம்பித்தேன். ரோட்டில் நின்ற காரில் இடதுகால் முட்டியது. ரோட்டைக் கிராஸ் பண்ண, 180 டிகிரி திரும்ப வேண்டி இருந்தது. வலதுகண்ணின் பாவையின் விட்டம், சில மைக்ரோ மீட்டர்கள் அதிகமாயின. தனியே ரோட்டில் நடந்து போகும் என்னை எல்லோரும் வித்தியாசமாய்ப் பார்த்தார்கள். ஒரு குழந்தை என்னைப் பார்த்து அழுதது. எதைப்பற்றியும் நான் கவலைப்படவில்லை. ஏனெனில், நான் புரிந்துகொள்ள நினைத்தவை எல்லாம், அளவுக்கு அதிகமாய்ப் புரிந்து போயின.

நான் எதிர்பார்க்காத ஒன்றையும் என்னால் உணரமுடிந்தது. தனியாகப் போராடும் வலது கண்ணின் அசைவுகளுக்கு ஈடாக, கட்டுகளுக்கு உள்ளே இருந்துகொண்டு, ஆடி ஓடிக்கொண்டு இருக்கும் இடது கண்ணின் அசைவுகள். காட்சிக்கு வராமல், எந்த உபயோகமும் இல்லாமல் வெட்டியாக அசையும் இடது கண்ணால் என்ன பயன்? கட்டின் கட்டுமானம் புரியாத யாருக்கும், இடது கண்ணின் உன்னதம் புரியப் போவதில்லை, சேகர் எழுதிய இந்தக் கதையைப் போலவே!

-ஞானசேகர்

Monday, April 03, 2006

செல்லாத சாட்சிகள்

('இது ஒரு கற்பனை கதை' என்று 90% உண்மை சொல்ல நான் விரும்பவில்லை. எது கற்பனை, எது நிஷம் என பங்கு போடும் பொறுப்பைப் படிப்பவர்களுக்கே விட்டுவிடுகிறேன். 22 வயதில் எனக்கு சம்மந்தம் இல்லாத இரு துறைகளைப் பற்றி இப்படி எழுதும் அளவிற்கு என்னைப் பாதித்த லியோனர்டோ டா வின்ஸி, அடால்ஃப் ஹிட்லர், இன்னும் பல வரலாற்று பாத்திரங்களுக்கும், அய்யாத்துரை என பெயர் மாற்றப்பட்ட கதாபாத்திரத்திற்கும், இக்கதையில் சொல்லப்படாத நான் சந்தித்த இன்னபிற அய்யாத்துரைகளுக்கும் இதோ என் வழியே ஓர் அறிமுகம்)

"செகந்திராபாத்ல தமிழ் ஆளுகளும் இருக்காங்க, கொஞ்சம் கெட்ட வார்த்தகள நிறுத்திக்கலாமுன்னு நெனக்கிறேன்".
இரண்டு கிலோமீட்டர் நடைபாதை பேச்சுகளில், இப்படி ஒரு வாக்கியத்தைச் சொல்லி, ராமின் அருள்வாக்கை நிறுத்தச் சொன்னேன்.
"இங்க மட்டும் ஒழுங்கா என்னா? குடும்பத்தோட குத்துப்படம் பாக்கிறவங்கடா இவங்க. நான் வார்த்தையில சொன்னா ஒடனே கோபம் வருமே" என அருள்வாக்கு தொடர்ந்தது.
"சரி சரி. அவள எங்க வரச்சொல்லி இருக்க?"
"அவளா? அவன்டா. அவன் Paradise பக்கத்துல நிப்பான். அதுக்கப்பறம்தான் அவளுகள பாக்கணும்"
"எனக்கு 9 மணிக்கு பெங்களூருக்குப் பஸ். இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கு. அதுக்குல்ல, ஒரு ஒயின் ஷாப்புக்குள்ள......"
"சரி வா. இன்னும் சின்னப்புள்ளயாவே இரு"

பார் போகும் வழியில் ஒரு அழகான பெண், அதுவும் சேலையில், ஒரு கோவிலுக்குள் புகுந்தாள்.
"டேய் ராம், கோயிலுக்குப் போயிட்டு, அப்பறம் பாருக்குப் போவம்டா"
"ஒரு நல்ல காரியத்துக்குப் போறப்ப, கோயிலு கீயிலுன்ன்னுட்டு, போசாம வாடா"

"ஒனக்கு என்னா?"
"Haywards 5000"
"இன்னும் சின்னப்புள்ளயாவே இரு"
"பையா Haywaards 5000 ஒக்கடி, Signature ஒக்கடி. படாஃபட் தீஸ்கோ" என ஆர்டர் செய்தான்.
"டேய் சேகரு, குடும்பன்னா இப்புடி ஒத்துமையா இருக்கணும்"
"எங்கடா?"
"பின்னாடி பாரு. ஒண்ணா ஒக்காந்து தண்ணி அடிக்கிறாங்க"

அவன் கொஞ்சம் போதை அடைந்தவுடன், கிருஷ்ண பரமாத்மா போல தருணம் பார்த்து கேட்க ஆரம்பித்தேன்.
"எவளோ ஒருத்தி ஒன்ன காதலிச்சுட்டு, ஒரு US மாப்புள கெடைக்கவும், ஒன்ன கலட்டி விட்டுட்டு போயிட்டா. அது அவ தப்புதான். அதுக்காக அவ பொறந்தநாளு, மொத மொதல்ல பாத்தநாளு இப்புடி எது வந்தாலும், தண்ணி அடிக்கிற"
நிமிர்ந்து என்னையும், என் பாட்டிலயும் பார்த்தான்.
"தண்ணி அடிக்கிறதுல ஒண்ணும் தப்புல்ல. ஆனா, இந்த ரெண்டு நாளுல மட்டும் பொம்பளக சமாச்சாரம் வெச்சுக்கிறியே, அது தப்புடா"
"நாலு வருஷம் அவள காதலிச்சப்ப, என்ன மாதிரி காதல் ஒலகத்துலேயே கெடையாதுன்னு பெருமையா திரிஞ்சேன். அவள ஒரு நாளுகூட தப்பான எண்ணத்துல பாத்தது இல்ல தெரியுமா? ஆனா, கொஞ்சம் ஆடம்பர வாழ்க்க கெடைக்கவும், என்னத் தூக்கி எரிஞ்சிட்டுப் போனாளே, அவளுக்கிட்ட போய் இந்தக் கதயெல்லாம் சொல்லு"

"இன்னும் கொஞ்ச நாளுல்ல ஒனக்குன்னு ஒரு கல்யாணம் நடக்கும். இதெல்லாம் நீ, ஒன்னக் கட்டிக்கப் போறவளுக்குப் பண்ணுற துரோகம். காந்தி சொன்ன மாதிரி, அட்லீஸ்ட் ஒரு பக்கமாவது உண்ம இல்லாட்டின்னா, குடும்ப வாழ்க்க வேஸ்ட்டு"
"கட்டிக்கப் போறவளா? போதைல இருந்தாலும் ஒண்ணு சொல்றேன் கேப்பியா? No educated men should expect his bride to be a virgin. The vice-versa is also as true as that of Sun rising at East. That's the mentality of me and அவ US புருஷன், my dear"
"டேய் ராம், தமிழ்ல பேசுடா. சுத்தி இருக்குறவங்க எல்லாம் ஒருமாதிரி பாக்குறாங்க"
"நீதான் தமிழ்ல பேசாதேன்ன. இப்ப பேசச் சொல்லுற. என்னடா ஒரு பீருக்கே இப்படி ஒளருறே? எந்த மொழியில சொன்னாலும் சரி, எந்த எடத்துல சொன்னாலும் சரி, உண்ம உண்மதான்"
"போத இருக்கே, எப்பா பொல்லாததுடா சாமி. காதலிச்சவளையே நடத்த கெட்டவன்னு சொல்ல வெக்குது"
"அவளால ஒரு ஊர எல்லாம் எரிக்க முடியாது சாமி. அப்ப ....." பயங்கரமாய்ச் சிரித்தான்.
"சரி சரி பேசுனது போதும். சீக்கிரம் முடி. ஆச நாயகிகள் காத்துக்கிட்டு இருப்பாங்க"

அவனைப் Paradise வாசலில் கொண்டுபோய் விட்டேன். ஓர் ஆள் வந்து அவனிடம் கைகுலுக்கினான்.
"இவருமா?" எனத் தமிழிலேயே கேட்டான்.
"இல்ல. நான் சும்மாதான்....."
"சும்மான்னா?"
"இல்ல சார். இவன் நம்ம ஃப்ரண்டு. ஒன்னுக்கடிக்கவே ஆயிரந்தடவ ஆரயுவான். இவனப்போயி.... டேய் சேகரு நீ கெளம்புடா"
"இவரையும் நமக்கு அறிமுகப்படுத்தி வெச்சா, ஆத்துர அவசரத்துக்கு ஒதவி பண்ணிக்கலாமுல"
"ஒரு ஒதவியும் வேணா. நான் கெளம்புறேன்" என்ற வாக்கியத்துடன் முடித்துவிட்டு, பெங்களூரை நோக்கித் திரும்பினேன்.

அடுத்த வாரம், ராம் பெங்களூர் வந்திருந்தான். போன வாரம் என்ன நடந்தது என ஆர்வத்துடன் கேட்டேன்.
"அத ஏன்டா கேக்குற" என சலித்துக் கொண்டான்.
"ஏன்டா என்னாச்சு?"
"அவன் காட்டுனது எல்லாம் கெழவிகடா. புதுசா கேட்டேன்"
"எப்புடிடா தெலுங்கு தெரியாம, இப்புடி எல்லாம் கேட்டு வாங்குற?"
"எதுக்கு இருக்குது, நம்ம தேசிய மொழி ஹிந்தி?"
"....."
"அப்பறம் நம்ம நேரம் சரியில்லன்னு, கெழவிகள்ளேயே ஒரு சின்ன கெழவியாப் புடிச்சுட்டுப் போனேன்"
"Something is better than nothing"
"Nothing. அவ கெட்டக் கேட்டுக்கு என்னா தெரியும்மா கேட்டா? இந்தப் பேச்சு பேசுறியே, க்யா து விர்ஜின் ஹே?"
"தமிழ்ல பேசுடா"
"இப்ப தமிழா? நீ ஒருத்தன்டா, அடிக்கடி மொழிய மாத்தச் சொல்லி, உயிர வாங்குற. புதுசா கேக்குறியே, மொதல்ல நீ புதுசான்னு அர்த்தம்" என சொல்லிவிட்டு கீழே குனிந்து கொண்டான்.
கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டேன்.

மறுநாள் அவன் பஸ் ஏறும்போது கேட்டேன்,
"ராம், க்யா து விர்ஜின் ஹே?"
சில விநாடிகள் அதிர்ச்சியானவன், என் தோள்மீது ஒரு கை போட்டுவிட்டு, நாயகன் கமலஹாசன் ரேஞ்சுக்குச் சொன்னான்.
"தெரியலையப்பா..."
குணா கமலஹாசன் பாணியில் வானம் பார்த்து சொன்னான்.
"ச்ச்ச்சீசீசீ மனுஷங்க. மனிதர் உணர்ந்து கொள்ள முடியாத,..... அதையும் தாண்டிப் புனிதமானவன், புனிதமானவன்"
ஹேராம் கமலஹாசன் பாணியில், என் கண்களை உற்றுப் பார்த்து சொன்னான்.
"தன் நாட்டுப் பொம்மனாட்டீங்க ஒடம்ப எதிராளி நாட்டு அதிகாரிகளுக்குத் தீனியாகப் போட்டு. ராணுவ ரகசியங்களைக் கொள்ளையடிக்கிறாளே, அவா பண்றது கேவளமான காரியமான்னு நீ கேக்குற. அது, ஒரு நாட்டக் காப்பாத்த வேண்டிய பொறுப்புமிக்க அதிகாரியா இருந்து பாத்தாத்தான் புரியும். அவா அவா தொழில அவா அவா சரியா செய்றப்ப, சிலதுகள் அவாளத் தப்பாப் பேசித் திரியறதுகள்"
அன்பே சிவம் கமலஹாசன் பாணியில், என் பார்வையின் திசையிலேயே அவன் பார்வையை வைத்து, கீழ்த்தாடையை ஆட்டிக்கொண்டே சொன்னான்.
"முன்ன பின்ன தெரியாத ஒரு மனுஷனோட காட்டுத்தனமான வெறிய, தன்மேல வாங்கிக்கிட்டு, அவனச் சுத்தமா அனுப்பி வெக்கிறாளே, that is what the answer for you, Sekar. செவப்புதான் எனக்குப் புடிச்ச கலரு"
"மொத்ததுல சாட்சிகள வெச்சு ஒரு மனுஷன எட போடாத" என்றான்.
"அதனாலதான், சமூகத் தொண்டு செய்றதா போட்டோ காட்டுறவனவிட, போர், பூகம்பம், கலவரம் எது நடந்தாலும் கொதிச்சுப் போறவங்களவிட, நீ எனக்கு ரொம்ப பழக்கம்"
"That's my Sekar. Ok. I take off."

வீட்டில் A.C. இருந்தால்தான், இந்தியா வருவேன் என அவனின் பழைய காதலி, அவள் பெற்றோருக்குக் கட்டளை போட்டாளாம். திருமணம், இல்லாவிட்டால் தற்கொலை என இவனின் பெற்றோர் மிரட்டல் போட்டனர். இவனும் திருமணம் என்ற A/Cஐ Minimum Balance இல்லாமலேயெ ஏற்றுக்கொண்டான். ஏதோ குற்ற உணர்ச்சியில் நண்பர்கள் எவரையும் அவன் அழைக்கவில்லை, என்னையும் தான்.

நான் அவன்மேல் கொண்ட கோபத்தினாலும், காரணம் தெரியாத என் மேல் அவன் நினைத்த ஒரு காரணத்தினாலும் இருவரின் நட்பும் தண்டவாளங்களாயின, இருக்கும் இடம் தெரிந்தும், நெருங்க முயற்சி செய்யாமல்.

(சற்றே இடைவெளி எடுத்துக்கொண்டு, கொஞ்சம் மனநிலையை மாற்றிக் கொண்டு மீண்டும் தொடருங்கள்)

சுனாமி என்ற வார்த்தை, பெரும்பாலான தமிழர்களுக்கு அறிமுகமாகி, சரியாக மூன்று மாதங்கள் கழித்து, ரயிலில் ராமேஷ்வரத்திற்குப் பயணம் செய்தேன்.

துங்கிக் கொண்டு இருந்த நான், காரைக்குடியில் கருவாட்டு வாடையில் எழுப்பப்பட்டேன். கருவாட்டுப் பெண், எனக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தாள்.
"எங்கங்க ஆச்சி பயணம்?" எனக் கேட்டேன்.
"ராமேசுவரங்க தம்பி. நீங்க வேணும்முன்னா தூங்குங்க. பாம்பன் பாலம் வந்தோடன நான் எழுப்பிவிடுறேன்"
"இந்தக் கருவாட்டு நாத்தத்துல எங்க தூங்குறது?" என நினைத்துக் கொண்டு, ஜன்னலில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.
"சுனாமி அக்கோய். இங்க எடம் இருக்கு வா" என ஒரு பெண் குரல் கடைசி சீட்டில் இருந்து அவளைக் கூப்பிட்டது.
"நல்லதாப் போச்சு. தம்பி, கூட இங்கேயே இருக்கட்டும். நான் பின்னாடி ஒக்காந்துக்கிறேன்"
"ஒங்க பேரு சுனாமியா?"
"அந்த சிருக்கிக கிண்டலுக்குக் கூப்புடுறாளுக. நீங்க நல்லா கால நீட்டிக்கங்க"

சுனாமி அக்காவின் கருவாட்டு நாற்றமே பரவாயில்லை, அவள் பேச்சில் ஒரு பயலும் தூங்க முடியவில்லை. எனது ஐம்புலன்களில் காதும், மூக்கும் சுனாமி அக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தன.
"ராமேஷ்வரத்துல சுனாமி வந்துச்சா?" கண்டிப்பாக இந்தக் குரலுக்குச் சொந்தக்காரிக்கும் என் வயதுதான் இருக்க முடியும். சரியான வசீகரக் குரல்.
"அது எப்புடி ராமநாதரு இருக்குறப்ப, அங்க ஒன்னும் நடக்காதுல்ல" சுனாமி அக்கா சொன்னாள்.
"அந்த ராமநாதரு ஏன், நாப்பது வருஷத்துக்கு முன்னாடி, தனுஷ்கோடியக் காப்பாத்தல?"
எழுந்திரித்து உட்கார்ந்தேன்.
"அது பொசக்காத்துல. சுனாமில பாருங்க, எத்தனையோ சனங்க செத்தாங்க. ராமேசுவரத்துல ஒண்ணூமே நடக்கல. சாமியோட சக்தி"

அவள் குரலின் தாலாட்டில், எனது மூக்கு தூங்கிவிட்டது. காது, அவளின் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. அவள் சொன்னாள்,
"சிலோன்ல ஆயிரக்கணக்குல மக்கள, சுனாமில கொன்னுதான், தன் கோயிலக் காப்பாத்தணும்னா, அப்புடி ஒரு சாமியே தேவயில்லங்க"
எனது கண்களும், நாக்கும் சட்டென விழித்துக் கொண்டன, அவளைப் பார்க்கவும், பேசவும். நான்கு புலன்கள் அவள் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. அவளை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். நல்ல வேலை, நான் தூங்கிப் போயிருக்கவில்லை. கருவாடு எழுப்பி இருக்காவிட்டால், இப்படி ஒரு அழகான, அறிவான பெண்ணைப் பார்த்திருக்க முடியாது.

"சுனாமி அக்கா, சுனாமிக்கும், சாமிக்கும் சம்மந்தமே கெடையாது. ராமேஸ்வரம் தப்பிச்சதுக்குப் பூமியோட அமைப்புதான் காரணம். ராமநாதரு பாட்டுக்கு, பதினஞ்சு தீர்க்த்கங்கள வெச்சுக்கிட்டு பொழப்ப ஓட்டிக்கிட்டு இருக்காரு. அவரு பேர நாம ஏன் இப்புடி கெடுக்கணும்?" என அறிவாளிபோல் காட்டிக் கொண்டேன்.
"இந்தப் படிச்சவங்களே இப்புடித்தான்" என சுனாமி அக்கா எழுந்து போய்விட்டாள்.
"நீங்க ஒக்காருங்க சார். நாம பேசிக்கிட்டு இருப்போம்"
ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாமலேயே, பாம்பன் பாலம், இந்திரா காந்தி, பாக் ஜலசந்தி, பெர்முடாஸ் முக்கோணம், மரைன் டெப்த், சூயஸ் கால்வாய், நாசர் அப்துல்லா, சிவாஜி கணேசன், பிரமிடு, ஜில்லெட்டி, நாராயணமூர்த்தி, தாய்லாந்து, தியான்மென் ஸ்கொயர், வாட்டர்கேட் என நான்கு மணி நேரத்தில் பல விஷயங்கள் பேசி முடித்தோம். இது போன்ற விஷயங்கள் பற்றிக் கவலைப்படும் பெண்களே அபூர்வம். இவள் அவற்றைப் பற்றி விவாதித்தது, எனக்கு மிகவும் ஆச்சர்யம்.

பக்கத்தில் படுத்து இருந்த ஒரு குழந்தை சிணுங்கியது. அதைக் கவனிக்க திரும்பினாள். எட்டு போல் அவள் உடம்பை முறுக்க, இதுவரை இருந்த நான்கு புலன்களுடன் சேர்த்து, தோலும் அவள் கட்டுப்பாட்டிற்கு வந்தது. சட்டென சுதாரித்துக் கொண்டேன். இவளைவிடச் சிறந்த ஒருத்தி, எனக்குப் பொறுத்தமாய்க் கிடைக்க வாய்ப்பில்லை என முடிவே எடுத்துவிட்டேன். நான் சம்மதம் கேட்க நிமிர்ந்தேன். அதற்குள் அந்தக் குழந்தை எழுந்தே கேட்டுவிட்டது.
"அம்மா, உச்சா வருது"
"ஒங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!??!?!?!?!?"
"ரெண்டு கொழந்தங்க, சார். கொஞ்சம் இருங்க. இவள ஒண்ணுக்குப் போக விட்டுட்டு வந்துட்றேன்"

படிக்கட்டில் வந்து நின்று கொண்டேன். அவள் குழந்தையத் தூங்க வைத்துவிட்டு, என் அருகில் வந்தாள்.
"என்ன சார், இங்க வந்துட்டிங்க?"
"சரியான நேரத்துக்குத்தான் வந்திருக்கீங்க. பாம்பன் பாலம் பாருங்க"
"இன்னும் கொஞ்சம் லெஃப்ட் சைடு தள்ளி நின்னுங்க சார். நானும் நல்லா நின்னுக்கிறேன்"
தூரத்தில் தெரியும், கலங்கரை விளக்கத்தைப் பார்த்துவிட்டு சொன்னாள்,
"இந்த எடம், மனுசன் கண்ணுல படாமலேயே இருந்திருக்கலாம்"
"நீயும்தான், என் கண்ணில்" என நினைத்துக் கொண்டேன்.
"சரி சார். ஊர் வரப்போகுது. ஏன் வீட்டுக்காரரப்போய் எழுப்பிட்டு வர்றேன்"

வீட்டுக்காரரை அழைத்து, அறிமுகப்படுத்த வந்தாள். தோளில் ஒரு ஆண் குழந்தையுடன் நின்ற அவள் கணவனின் அறிமுகம்கூட எனக்குத் தேவைப்படாமல் போய்விட்டது. சிலநேர ஆறுதல்களுக்குப்பின், நானே கேட்டேன்,
"ஏன்டா ராம், என்ன ஓன் கல்யாணத்துக்குக் கூப்புடல. இந்த அழகான தேவதையப் பாத்துடுவோம்னா?"
"அது இல்லடா, கொஞ்சம் பேமிலி பிரச்சன. நீ என்ன இந்தப்பக்கம்"
"நான் ஒரு ஊருக்கு வருறதுக்கு எல்லாம் காரணமா வேணும்"
"இன்னும் சின்னப்புள்ளயாவே இரு"

கோயில் வந்தவுடன், ரூம் எடுத்துவிட்டு நான் சொன்னேன்,
"நீங்க குடும்பத்தோட, வந்திருக்கீங்க. நான் எதுக்குக் குறுக்கால? நான் கெளம்புறேன்"
"டேய் ஒன்ன யாருடா தொல்லைன்னா. இன்னக்கிப்பூரா எங்களோடத்தான் இருக்க"
"இல்லடா, சாட்சிகள வெச்சு யாரையும் எட போடாத"
"ஏன் டயலாக் எனக்கேவா? ஒரு கல்யாணம் பண்ணி வெச்சா எல்லாம் சரியாயிடும்"
"ஏன் டயலாக் எனக்கேவா?" என்றேன்.
"இன்னும் கல்யாணம் ஆகலையா? ச்சே, கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன். ஒங்கக் கூட்டாளிக்குப் பாருங்க, ரெண்டு கொழந்தங்க" என்றாள்.
ராம், அவள் தலையில் ஒரு கொட்டு வைத்தான்.
"விடிஞ்சவுடனே அப்துல் கலாம் வீட்டுக்குப் போயிட்டு, அவரு அண்ணனப் பாத்து, கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்துட்டு, அப்பறம் நம்ம ஏரியாவுக்கு எல்லாம் போய்ட்டு, சாயந்தரம் ஒரு அஞ்சு மணியப் போல, ரூமுல வந்து பாக்குறேன்" எனச் சொல்லி, கிளம்பிவிட்டேன்.

"இவன நம்பமுடியாது. இவன் கையில ஒரு கொழந்தையக் குடுத்துவுடு" என்றான்.
என் கையில் இரண்டு வயது பெண் குழந்தையைக் கொடுத்துவிட்டு,
"அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடுங்க. நாஸ்டர்டாமஸ் கத கொஞ்சம் மிச்சம் இருக்கு. அதப் பேசணும்"
அவர்களின் நம்பிக்கை என் நாவடைத்தது. குழந்தையுடன் பயணம் தொடர்ந்தேன்.

(சற்றே இடைவெளி எடுத்துக்கொண்டு, கொஞ்சம் மனநிலையை மாற்றிக் கொண்டு மீண்டும் தொடருங்கள்)

மூன்றன்சத்திரம். ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் தார்ச்சாலை முடிவடையும் இடம் அது. நண்பகல் வர இன்னும் ஒரு மணிநேரம் இருந்தது. நானும் அப்பெண்குழந்தையும் சாப்பிட அமர்ந்தோம். அடுத்த பஸ்ஸில், ராம் குடும்பத்தின் மூன்று பேரும் எதார்த்தமாக அங்கு வந்தார்கள். நான் சொன்னேன்,
"கல்யாணத்துக்கு அப்பறம் மாறிட்டியோன்னு நெனச்சேன். பரவாயில்ல பழச ஞாபகம் வெச்சு இங்க எல்லாம் வர்றியே"
"இல்லடா சேகர், கல்யாணத்துக்கு அப்பறம் நான் ரொம்பவே மாறிட்டேன். இங்கவரைக்கும்தான் வருவேன். சுழலுக்கெல்லாம் வல்லடா"
"என்னங்க, பாப்பா அடம்புடிச்சாளா" எனக் கேட்டாள்.
"பாப்பா அடம் பண்ணாமத்தான் இருந்தது. இவருதான் அடம் பண்ணுறாரு. என்னோட ஒரு எடத்துக்கு வரமாட்டாராம்"
"சரி. அவரோட ஒரு பாகம் நான் வர்றேன்"
"சரிடா இவளக் கூட்டிட்டுப் போ"
"டேய் 36 கிலோ மீட்டர் நடக்கணும்டா"
"சரிடா நான் இங்கேயே இருக்கேன்"
"நான் ஒரு அர்த்தத்துல கேட்டா, இவன் ஒரு அர்த்தத்துல பதில் சொல்றான்" என நினைத்துக் கொண்டேன்.
"சரிடா, இவங்களும் என்னோட வரட்டும். பாப்பாவையும் கூட்டிட்டுப் போறேன்"
அவன், இன்னொரு குழந்தையைத் தூக்கிக்கொண்டு நிழல் நோக்கி நடந்தான்.

"கொஞ்சம் இருங்க. ஒரு மணிநேரமா, ஒரு ஆளுக்காக வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன். இன்னும் கொஞ்ச நேரம் பாத்துட்டுப் போயிடுவோம்"
திரும்ப பல விஷயங்கள் பேசிக்கொண்டு இருந்தோம். நான்கு புலங்கள் மீண்டும் அடம்பிடித்தன.
"டேய் அய்யாத்துரை. வாடா. நல்லா இருக்கியா?"
"கண்ணாடி போட்ட அண்ணே வல்லையா"
"அவருக்குக் கொஞ்சம் வேல இருக்காம். அதுனால் வல்ல. சரிங்க நீங்க இவங்கிட்ட பேசிக்கிட்டு இருங்க. நான் இந்தா வந்துடுறேன்"
வேண்டுமென்றே ஐந்து நிமிடம் அவர்கள் இருவரையும் பேசவைத்துவிட்டு, திரும்பவும் வந்தேன்.
"சரிங்க ஏந்திரிங்க. நடப்போம். சரி போய்ட்டு வர்றோம் அய்யாத்துரை"
"இவுங்க யாருன்னே. ஒங்க பொண்டாட்டியா?"
நான் திணறினேன். அவள் பதில் சொன்னாள்,
"ஆமாம் தம்பி. நாங்க கெளம்புறோம்"
அடம்பிடித்துக் கொண்டு இருந்த நான்கு புலன்களும், ஒருசேர அவள்வசம் போய் சேர்ந்தன.

ஐந்து கிலோமீட்டர் வரை பொதுவிஷயங்கள் பேசினோம்.
"இங்க ஒரு மரத்தோட அடிவேர் கெடக்குதுல, கன்னத்தில் முத்தமிட்டால் படத்துல நெஞ்சில் சில்சில்சில் பாட்டுல இது வருமுங்க. நல்லா சுத்திப் பாத்துட்டு தோணுறத சொல்லுங்க"
"சேகர், ஆமை மாதிரி இருக்குதுங்க"
"அதாங்க மணிரத்னம்"
இப்படி ஒரு தனிமை கிடைக்கவும், என் சிந்தனைகள் மாறின.
"ஏங்க பொண்டாட்டிதான்னு அய்யாத்துரைக்கிட்ட பொய் சொன்னீங்க?"
"நான் தான் எல்லாத்தையும் பேசியே கொழப்புவேன். இவனுக்குப் பத்து வயசு இருக்குமா? இந்த வயசுலேயே இப்புடி கொழப்புறான். அதான் இவன சமாளிக்க வேற வழி தெரியல. சில நேரங்கள்ல உண்மைகள மறைக்கிறதே நல்லதுங்க"
"That's what I want from you to experience in stead of to know. அதுக்காகத்தான், இவன ஒங்கக்கிட்ட விட்டுட்டு நான் எழுந்திரிச்சுப் போயிட்டேன். ஒரு பத்து வயசுப் பையனோட இவ்வளவு பெரிய கொழப்பத்துக்குக் காரணம், நம்மள மாதிரி பெரியவங்கதான். ஏதோ ஒங்கக்கிட்ட சொல்லணும்னு தோணிச்சு"
"I am really proud that my husband has a great friend like you."

"நீங்க ஒரு நண்பன் கொழந்தங்க நல்லா இருக்கணும்கிற நோக்கத்துல சொன்ன இந்த விஷயத்த, அவரு மொத ராத்திரியிலேயே சொல்லிட்டாரு. நீங்க க்யா து விர்ஜின் ஹே சொல்லி கிண்டல் பண்ணுனது உட்பட...."
கஷ்டப்பட்டு வளர்த்த மகன் லாட்ஜில் மாட்டினது போல், எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.
"சாரிங்க நான் அய்யாத்துரைய அறிமுகபடுத்தி இருக்கக் கூடாது. ஆனா ராம் ரொம்ப நல்லவங்க"
"அதுவும் எனக்குத் தெரியுங்க. ஆனா இதேமாதிரி ஒரு பொண்ணு பண்ணுனா நீங்க ஒத்துக்குவீங்களா?"
"நடந்தத மறந்திருவோம். ராமுக்குத்தான் நல்ல தொண நீங்க இருக்கீங்க. இனிமே நடக்கப் போவத மட்டும் பாருங்க"

நீண்ட அமைதி. எதுவும் பேசாமல், நிழலுக்காக பக்கத்தில் இருந்த அனுமன் கோவிலுக்குள் நுழைந்தோம். அனுமனுக்கு முன்னால் பாப்பாவைத் தூங்கவைத்தேன். அமைதி தொடர்ந்தது.
"சேகர், உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும், சாமிக்கிப் பின்னாடி வாங்க"
என் இரு கைகளையும் சேர்த்துப் பிடித்தாள்.
"ரொம்ப நாளா இந்த விஷயத்த ராமுக்கிட்ட சொல்லலாமுன்னு நெனச்சேன். ஆனா மனச்சாட்சி எடம் கொடுக்கல. ராமுக்கு ஒரே ஒருதடவ துரோகம் பண்ணிட்டேன். பாப் பாப் பாப்பா அவரோட கொழந்த இல்ல"
ராம் வாழ்க்கையில் என்ன நடக்கக் கூடாது என நினத்தேனோ அது நடந்தேவிட்டது.
அவள் என் புறங்கைகளை அழுதே நனைத்துக்கொண்டு இருந்தாள்.
"ஒருவேள, ராம் ஒங்ககிட்ட அவனப்பத்தி சொல்லாம இருந்துருந்தா, இப்புடி அவனுக்குத் துரோகம் பண்ணி இருப்பீங்களா?"
"தற்கொல பண்ணியிருப்பேன்"
"இப்ப ஏன் நீங்க தற்கொல பண்ணிக்கலே. மாத்தி மாத்தி பழி வாங்கிக்க இது என்னங்க குடும்பமா? இல்லை வேறெனங்க? நீங்க எல்லாம் ஏங்க கொழந்த பெத்துக்கிறீங்க?"

பயங்கரமாக அழுதாள். ஐம்புலங்களும் அவள்வசம் போயின. முதல்முறையாக அடிவயிறு அடங்க மறுத்தது; நடுமூளையில் அட்ரினல் பெருக்கெடுத்தது; இதயத்திற்கும், நுரையீரலுக்கும் உள்ள இடைவளியைத் தெளிவாக உணர முடிந்தது.
"இந்த ரகசியத்த ராம்கிட்ட சொல்லாம, மூணாவது ஒரு ஆளுக்கிட்ட சொல்லி ரெண்டாவது தடவையா ராமுக்குத் துரோகம் பண்ணிட்டீங்க. மூணாவது தடவ அவனுக்குத் துரோகம் பண்ண நான் ஒங்களக் கூப்புட்டா ஒத்துக்குவீங்களா?"

மெதுவாக நிமிர்ந்து, என் கண்கள் பார்க்கத் தைரியம் வரவழைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி சொன்னாள்.
"அதனாலதான், ஒங்கக்கிட்ட சொன்னேன். ராமின் ஒரு பாதி என்னோட உணர்வுகள, இன்னொரு பாதி ஒங்களாலதான் புரிஞ்சுக்க முடியும்"
வழக்கம்போல், நான் ஒரு அர்த்தத்தில் சொல்ல, அவள் ஒரு அர்த்ததில் புரிந்து கொண்டாள்.
அவள் இடது தோளில் கைவைத்தேன். பாப்பா சிணுங்கினாள். அனுமன் என்னைப் பார்த்து சந்தோஷப்பட்டார். பாப்பாவைத் தூக்கிக்கொண்டு நாங்கள் நடக்க ஆரம்பித்தோம்.
"ரொம்ப வெயில் அடிக்கிதுங்க. பாப்பாவுக்குத் தாங்காது. கொஞ்சம் நில்லுங்க" என்று சொல்லி பாப்பாவை இறக்கிவிட்டாள். அவளுக்கு நேர் எதிரே நின்று அவளைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். மாராப்பை விலக்கி, பாப்பாவைத் தூக்கி, சேலையற்ற மார்பில் அணைத்துக் கொண்டாள்.

"சேகர், இந்த முந்தானைய எடுத்து, அப்புடியே பாப்பாவோட சுத்தி, பின்பக்கம் ஜாக்கெட்டுல சொறுகுங்க"
அவள் சொன்னதைச் செய்தேன். அட்ரினல் தூங்கப் போனது; இதயமும், நுரையீரலும் வேலைக்குத் திரும்பின.
"என்ன ஒண்ணுமே பேசாம வர்றீங்க. இன்னக்கித்தான் ஒரு மிகப்பெரிய பாரத்த எறக்கி வெச்சது மாதிரி இருக்கு" என்றாள்.
"ஒரு பாரத்த எறக்கி வெச்சு, என்னையும் துரோகம் பண்ண நெனக்க வெச்சீங்க. ஒரு பாரத்த ஏத்தி வெச்சு, நானும் ஒரு துரோகம் செய்யாமத் தடுத்துட்டீங்க. புரியலல்ல. சில விஷயங்களத் தெரிஞ்சுக்காம இருக்குறதே நல்லது, அய்யாத்துரைக்கி நீங்க இப்புடித்தான் சொன்னீங்க"

கடற்கரை மணலில் அமர்ந்து, ராமின் குடும்பத்துடன் பேசிக்கொண்டு இருந்தோம். பாப்பா ராமிடம் சொன்னாள்.
"அங்கிள் எனக்கும் ரைம்ஸ் சொல்லிக் குடுத்தாரே"
"சொல்லு பாப்போம்"
"அன்பும் அடனும் உய்த்தான் பன்பும் பனும் அது"
எல்லோரும் சிரித்தோம்.
"இப்ப நான் சொல்றத அங்கிளுக்கிட்ட சொல்லு"
ஏதோ காதில் சொன்னான்.
பாப்பா என்னிடம் சொன்னாள்,
"க்யா து விர்ஜின் ஹே?"
என்ன அர்த்தத்தில் கேட்கிறான் எனப் புரியாமல், "டேய் என்னாடா இப்புடி?"
"சும்மாதான்டா"
"பாப்பா, வாழ்க்கையில ஹிந்தியே கத்துக்காத. ஏன்னா வாழ்க்கையில சில விஷயங்கள் தெரிஞ்சுக்காம இருக்குறதே நல்லது" எனச் சொல்லிக் கொண்டே, பாப்பா கன்னத்தில் முத்தமிட்டு, அவளைப் பார்த்தேன். சிரித்துக் கொண்டே தலையாட்டினாள். இந்த நம்பிக்கை போதும் ராமின் வாழ்க்கையில் இனி பிரச்சனை இல்லை. நம்பிக்கை என்பது எல்லா கடவுள்களை மட்டுமல்ல, எல்லா உறவுகளையும் வாழவைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

"சரி பாப்பாவுக்குப் பதில் சொல்லுங்க" என்றாள் அவள்.
"ஒரு நாள் முழுக்க ஒங்ககூட இருந்துருக்கேன். இன்னும் ஒங்க பேர் எனக்குத் தெரியாதுங்க"
"பேச்ச மாத்தாதீங்க. பதிலச் சொல்லுங்க"
"சரி ஒங்க பேரு எனக்குத் தெரியாமலே இருக்கட்டும். சில விஷயங்கள் தெரியாமலே இருக்குறது நல்லது, நாஸ்டர்டாமஸ் போல,,,,"
"சரி சரி பதில்"
"பதில்..... நான்...... இல்லங்க"
ராம் சொன்னான். "இன்னும் சின்னப்புள்ளயாவே இரு"
ஓர் பெரிய அலை, எனக்குச் சாரலால் பன்னீர் தெளித்தது.

-ஞானசேகர்

Thursday, March 30, 2006

வைரமுத்து பாணியில் ஒரு 'தூரத்துத் தமிழன்'

(தமிழ் நாட்டில் இல்லாத எல்லாருக்காகவும்)

இங்கு வந்து பார்


உன்னைச் சுற்றி
புகைமண்டலம் தோன்றும்

ஹிந்தி அர்த்தப்படும்
தாய்மொழி தூரப்படும்

பிரபஞ்ச நீளம்
விளங்கும்

கை, எழுத்தை
மறந்து போகும்

ஆட்டோக்காரன்
தெய்வமாவான்

உன் பிம்பம் பார்ப்பதே
ஆபூர்வம் ஆகும்

கண்ணிரண்டும்
பற்றாக்குறை ஆகும்

சாம்பார் இனிக்கும்
மீன் புளிக்கும்
தண்ணீர் மணக்கும்

திங்கள்
ராகு காலமாகும்
வெள்ளி
சுப முகூர்த்தமாகும்


இங்கு வந்து பார்


திசைகள் மறப்பாய்

தாய்மாமன் மகள் கூட
உன்னை மதிக்க மாட்டாள்
'தாங்க முடியவில்லை
பெண்கள் தொல்லை' என
நண்பரை நம்ப வைப்பாய்

குஷ்பூ சொன்னால்
உண்மை என்பாய்
காதல் எல்லாம்
பொய் என்பாய்

பைக் இருந்தால்
பிகரும் அட்டு என்பாய்
நடராஜன் நண்பன் என்றால்
அட்டும் பிகர் என்பாய்

இந்த கிரெடிட் கார்ட்,
இந்த ஸ்போர்ட்ஸ் ஷீ,
இந்த கேர்ள் ஃப்ரண்ட்
எல்லாம்
தலைமுறை கவுரவிக்கும்
ஏற்பாடுகள் என்பாய்


இங்கு வந்து பார்


வியர்வை
கானல் நீராகும்
வாழ்க்கை
சோலையாகும்
உறைவிடமோ
பாலைவனமாகும்

பரோடிட்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
அட்ரினல்
காவிரியாய்
வறண்டு போகும்
பர்ஸ் மட்டும்
சகாராவாகும்
தேவைகள்
சமுத்திரமாகும்

பிறகு
திராட்சைத் துளிக்குள்
சமுத்திரம் நிரம்பும்


இங்கு வந்து பார்


இம்சையின் அஹிம்சையை
அடைந்ததுண்டா?

சிரிக்கின்ற துக்கம்
அறிந்ததுண்டா?

உன்னையே உனக்குத்
தேடத் தெரியுமா?

பத்தும் செய்ய
பணம் இருந்தும்
பட்டினி கிடந்து
பழகியதுண்டா?


இங்கு வந்து பார்


புலன்களை வருத்த
புலம் பெயர வேண்டுமே

அதற்காக வேணும்

ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகநானூறு சொல்லாத
அர்த்தங்கள் விளங்குமே

அதற்காக வேணும்

அமிர்தம் என்பது
பாற்கடலில் இல்லை
அம்மா வைக்கும்
புளி ரசம்
உண்மை புரியுமே

அதற்காக வேணும்

இருக்கும் இடத்தில்
அகதியாய் உணர்ந்தாலும்,
சொந்த ஊரில்
அரசனாய் தெரிவாயே

அதற்காக வேணும்

ஓடி மறைந்தது
திரை கடலில் என்றாலும்
திரவியத்துடன்
திரும்புவாயே

அதற்காக வேணும்


இங்கு வந்து பார்


உன் பிம்பத்திற்கும் சேர்த்து
வாடகை கட்டினாலும்

ஒளி ஆண்டு வேகத்தில்
உறவுகள்
விலகி ஓடினாலும்

பாலைவன மழையாய்ப்
பைசாக்கள்
மாயமானாலும்

பறந்து வருவதற்குள்
பிடித்த சொந்தங்கள்
சாம்பலாகிப் போனாலும்

வேர்கள் ஊன்றிவிட்டு
விழுது பிடித்து திரும்புகையில்
சொல்லாத காதலி
தாயாகிப் போயிருந்தாலும்

நிலை மாறாத காகிதம்
பணமாய் மாறுவதில்லை


இங்கு வந்து பார்


கூட்டுப் புழுவோ,
பட்டுப் பூச்சியோ
இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம்


இங்கு வந்து பார்


-ஞானசேகர்

Tuesday, February 28, 2006

பிப்ரவரி மாதம்

காலத்தாயின்
குறைபிரசவக் குழந்தை
பிப்ரவரி மாதம்.
-யாரோ

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனோடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றோடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றோடு செவியே
ஐந்து அறிவதுவே அவற்றோடு கண்ணே
ஆறு அறிவதுவே அவற்றோடு மனனே
-தொல்காப்பியர்


எங்கள் கல்லூரியில் என் நண்பன் ஒருவன், ஒரு கவிதையில் எழுதியிருந்தான்: "விதவை என்பவள் கணவனின் மரணச் சின்னம்". ஆனால், வாழ்க்கைத்துணை என்பவன் (என்பவள்) தன் எதிர்கால வாழ்வைக் கட்டித்தரச் சம்மதித்த ஒரு ஒப்பந்தக்காரன். அவனே வாழ்க்கையின் சொந்தக்காரன் என்பது அறிவீனம். ஒப்பந்தம் முறிந்து போனால், மறு ஒப்பந்தம் தேடுவதோ அல்லது ஒப்பந்தத்தொகை மிச்சம் என்று தானே மிச்சத்தையும் கட்டிமுடிப்பதோதான் புத்திசாலித்தனம். பெற்ற தாய்தந்தை இறந்தாலே சிலநாளில் மறந்து போகும் அற்ப ஜீவன்கள் நாம். இன்னொரு ஜீவனின் இறப்பில் தன் பிறப்பை அர்த்தமற்றதாக்குவது அறிவீனம்.

கைம்பெண்களை மறுமணம் செய்துகொள்ளத் தயாரானவர்கள் உள்ள இதே சமுதாயத்தில் தான், அவர்களின் ஒவ்வொரு செயல்களிலும் குற்றம் கண்டுபிடிப்பவர்களும் உள்ளனர் என்பதும் உண்மைதான். ஒரு கைம்பெண்ணின் மனநிலைகளையும், அவளுக்கு நிகழ்த்தப்படும் கொடுமைகளையும் நான் எழுத்து வடிவில் சொல்லப்போனால், கண்டிப்பாக முழுமை கிடைக்காது என்பது எனது எண்ணம். ஏனெனில், நமக்குத் தெரிந்த சோகங்களைவிட வெளிக்காட்டிக் கொள்ளாத சோகங்களே அதிகம் என்பது பல இழப்புகளைப் போல இதற்கும் பொருந்தும். எனக்குத் தெரிந்த ஒருத்தியின் மேலோட்டமான கதையிது.

போன நூற்றாண்டின் கடைசியில், என் தாத்தா இறந்த அன்று நடந்த நிகழ்சி இது. உயிரற்ற தாத்தாவின் அருகில், கொஞ்சம் உயிருள்ள பாட்டியும் அமர்ந்திருந்தாள். தாத்தாவைப் போல, பாட்டிக்கும் மாலை போடப்பட்டு இருந்தது. பாட்டியின் தம்பி, பாட்டியின் காலைப் பிடித்துக் கொண்டு பயங்கரமாக அழுதார். சிலபேர் உணர்ச்சி வசப்பட்டு அழுதுவிட்டார்கள்; சிலபேர் அழுகையை வரவழைத்துக் கொண்டார்கள்.

"அழுதது போதும் அவரத் தூக்குங்கையா? அடுத்து மருமகன் காத்துக்கிட்டுருக்காரு" என்று ஒரு சத்தம். அது வந்த திசை நோக்கித் திரும்பிப் பார்த்தேன். பாட்டிக்குப் பின்னால், தலை முழுக்க வெள்ளை முடிகளுடன், கருத்த தோலுடன் ஒரு கிழவி நின்றுகொண்டு இருந்தாள். (இந்தக் கிழவியை 'அவள்' என்று இனிமேல் குறிப்பிடுகிறேன்; புரிந்து கொள்ளுங்கள்)

கூட்டம் முழுவதும் சோகத்தை வரவழைத்துக் கொண்டு அமர்ந்திருக்க, அவள் மட்டும் கொஞ்சம் விதிவிலக்காகத் தெரிந்தாள். அமைதியாக அமர்ந்திருந்த பாட்டியின் தலை பின்னால் சாயும்படி மல்லிகைப்பூவையும், நெற்றியை மறைக்கும்படி மிகப்பெரிய பொட்டையும் வைத்தாள். பாட்டி மறுக்கவே,
"இனிமே எப்ப வெக்க போற கடேசிவாட்டிதானே. வெச்சுக்க" என்ற சமாதானத்துடன் அலங்காரம் செய்தாள். தாத்தாவைக் கல்லறைக்குத் தூக்கிச் செல்லும்போது, வழக்கம்போல, பெண்கள் அனுமதிக்கப் படவில்லை.

அன்று இரவு, அவளைப் பற்றி அம்மாவிடம் விசாரித்தேன். "அவ பாட்டியின் சின்ன வயசு கூட்டாளி. கல்யாணமாகி ஒரே மாசத்துல வயுத்துல ஒரு பயலக் கொடுத்துட்டு, புருஷன் தவறிப் போயிட்டாரு. அன்னையிலருந்து ஊருல எவளோட புருஷன் செத்தாலும், இவதான் முன்னால வந்து எல்லா வேலையும் செய்வா. இவளுக்கு எல்லாமே இவ மகந்தான். இப்பதான் அவனுக்குக் கல்யாணம் நடந்துச்சு" என்று சுருக்கமாக ஞாபகம் வைத்துக் கொண்டேன், வாழ்க்கையில் சுகம் என்பதைப் பெரும்பாலும் அறியாத அவளின் வாழ்க்கை பற்றி. அந்தக் காலத்தில் இருந்தே இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்து வரும் இவள் எனக்கு ஒரு பெரிய அதிசயமாகவே தெரிந்தாள்.

"மூன்றாம் குழி மூடும் வரை மூத்த பேரன் வெளி இடங்களுக்குச் செல்லக் கூடாது" என்ற கட்டுப்பாட்டின்படி, நான் அங்கேயே மூன்று நாட்கள் இருக்க வேண்டி இருந்தது. அந்த மூன்று நாட்களும் அவளிடமே நேரடியாகப் பேசி, நன்கு பழகி இருந்தேன். கடைசி நாள் இரவு, தாத்தா அன்புடன் வளர்த்த கோழிகள் எல்லாம் சமைக்கப்பட்டன. எல்லாருக்கும் சாப்பாடு பரிமாறப்பட்டது. பாட்டியும், அவளும் கூட்டத்தில் காணவில்லை. சாப்பாட்டை அப்படியே வைத்துவிட்டு, வெளியே வந்து பார்த்தேன். தாத்தா இறந்த குடிசையில் அவர்கள் இருவரும் தனித்தனி இலைகளில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.

"பாட்டி இங்கே ஏன் ஒக்காந்து இருக்க? உள்ள வா"
"இல்லடா தம்பி, பாட்டி இங்கேயே சாப்புடட்டும்"
நானும் ஓரளவு நிலைமையைப் புரிந்து கொண்டேன்.
"நானும் இங்கேயே சாப்புடுறேன்"
அதற்குள் என்னைத் தேடி சிலர் வந்துவிட்டனர்.
"சேகரு, என்ன பாதியோட ஏந்திரிச்சு வந்திட்ட? உள்ள வா"
"இல்ல இவன் கேக்கமாட்டான். அவன் எலய இங்க கொண்டாங்க" என்று பாட்டி சொல்லி, தலை குனியும் போது, பாட்டியின் இலையில் இருந்து ஒரு கவலம் என் வாயில் இருந்தது. பாட்டி வெள்ளை சோற்றை எனக்காத் தனியே ஒதுக்கி வைத்தாள். நான் எச்சில் சோற்றை மீண்டும் எடுத்தேன்.

"இது எச்சிடா. அத சாப்புடு"
"நான் சின்ன வயசுல, ஒன்னுக்குப் போன சோத்தெல்லாம் நீயும், ஓம் புருஷனும் தின்னீகல்ல. இப்ப நான் ஏன் பாட்டி எச்சியத் திங்கக்கூடாதா?"
பாட்டி அழுதுவிட்டாள். நானும்தான். சிலநேர சமாதானங்களுக்குப் பிறகு, அவளைப் பார்த்தேன். ஒன்றுமே நடக்காததுபோல், சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள்.
"ஒங்களுக்கு அழுகையே வராதா?"
"நான் எதுக்கு அழுகணும்?"
என்னிடம் பதில் இல்லை.

மறுநாள் கிழம்பும்போது அவளைப் பார்த்து,
"நான் ஒங்க வீட்டுக்கு ஒரு நாளு வந்தா, எனக்குச் சோறு போடுவீங்களா?"
"நீங்களா? எங்க வீட்டுக்கு எல்லாம் வருவீங்களா?"
"வரக்கூடாதுன்னா சொல்லுங்க, வல்ல்"
"அதெல்லாம் இல்ல தம்பி, எப்ப வாரீங்க?"
"இப்ப இல்ல. இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்"

(வழக்கம்போல், சற்றே இடைவெளி எடுத்துக் கொண்டு மீண்டும் தொடருங்கள்)

போன நூற்றாண்டின் கடைசி ஆண்டில் பிப்ரவரி மாதம் இறுதியில், நான் அவளது ஊருக்குச் சென்றிருந்தேன். சேரன் திரைப்படங்கள் எடுக்கச் சிறந்த ஊர் அது. அவள் என்னை எதிர்பார்க்கவில்லை. மிகவும் சந்தோஷப்பட்டாள். மகனும், மருமகளும் அறிமுகமாயினர். ஒன்பது மாத கர்ப்பிணியான மருமகளை ஒரு கிழவி பரிசோதித்துக் கொண்டு இருந்தாள். அவள் எனக்காக சிறப்பு சமையல் செய்ய, சாமான்கள் வாங்க வெளியே போனாள். அவள் மகன் கேட்டார்,
"என்ன தம்பி படிக்கிறீங்க?"
"இன்ஜினியருக்குப் படிக்கிறேன்"
"கம்பியூட்டரு எல்லாம் படிப்பீகலா?"
"ம், படிப்போம்"
"அதுல பொட்டப் புள்ளகல பாக்காமலே லவ்வு பண்றாய்கலாமுல்ல"
"அதெல்லாம் தெரிமுமா உங்களுக்கு?"
"இல்ல ஒரு படத்துல பாத்தேன். நீங்க பாத்துப் படிங்க தம்பி. பொட்ட புள்ளக அப்புடித்தான்..." என்று அவர் முடிப்பதற்குள், அவர் மனைவி பிரசவ வலியில் துடித்தாள். அவள் பதறிப்போய் எங்கிருந்தோ ஓடிவந்தாள். சில கிழவிகள் கூடினர். ஒரு கிழவி சுடுதண்ணியில் பாதங்களைத் தேய்த்துவிட்டாள். பெருசுகள் அடிக்கடி வந்து நலம் விசார்த்துவிட்டு போயின. இவ்வளவு நெருக்கடியிலும் அவள் எனக்காக சமையல் செய்து முடித்து இருந்தாள். நீண்ட நாளைக்குப் பிறகு தனது வீட்டில் சிறப்பு சமையல் என்று எனக்கு முருங்கைக்காய் சாம்பார் பரிமாறினாள். சிறப்பு சமையலே இதுவென்றால், என்னால் கற்பனை செய்ய முடியவில்லை.

புளிப்பு அதிகமான சாப்பாடு எனக்குப் புதிது என்பதால், கொஞ்சம் கஷ்டப்பட்டேன். சமாளிப்பதற்காக பேச ஆரம்பித்தேன்.
"நீங்க என்ன வேல பாக்குறீங்க?"
"அருந்ததியப் பாக்குறதுக்காக மட்டும் எப்பையாவது எங்களுக்கு ஆர்டர் வரும். அத நம்பி வயித்தக் கழுவ முடியாது. அதனால, அப்ப அப்ப,,,,, புரியுதுங்களா?"
"ம் ம் ம் சொல்லுங்க"
"அதனால் அப்ப அப்ப மலையில கல்லு ஒடச்சி காலத்த ஓட்டிக்கிட்டு இருக்குறோம்"
"நீ மொதல்ல சாப்புடுப்பா. அப்பறம் பேசிக்கலாம்"
இடையிடையே பிரசவ வலியில் அவள் துடித்தாள்.
"இவ ஒருத்தி ஒன்பது மாசத்துலயே இந்தக் கத்து கத்துறா"

பிரசவ வலியில் அவள் இருப்பதால், இரவு முழுக்க தூங்காமல் பல விஷயங்கள் பேசிக்கொண்டு இருந்தோம். இரவு மூன்று மணியளவில் பிப்ரவரியின் கடைசி நாள் பிறந்து சில மணி நேரத்தில், ஒரு பெண் குழந்தை பிறந்தது. யார் முகத்திலும் சந்தோஷம் இல்லை. காரணம் கேட்டேன். அவள் சொன்னாள்.
"கொழந்த கொற மாசத்துல பொறந்திருக்கு. அதான் பயமா இருக்கு"
"அதுக்கு ஏன் பயப்படுறீங்க. இன்னைக்கி நாள் இருக்கே இது ரொம்ப வித்தியாசமான நாள். பிப்ரவரி மாசம் 29ம் தேதி. நாலு வருசத்துக்கு ஒரு மொறதான் வரும். பிப்ரவரி மாசத்தைக் கடவுளோட கொறப்பிரசவத்துல பொறந்த கொழந்தன்னு சொல்லுவாங்க. இந்த நாள்லதான்..." என்று நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, யாருக்கும் புரியவில்லை எனப் புரிந்தது.

பேச்சை மாற்றினேன். "நியூட்டன்னு ஒரு பெரிய அறிவாளி இருந்தாரு. அவரும் கொறமாசத்துலதான் பொறந்தாரு. எல்லாரும் அவரு ஆறு மாசத்துல செத்துருவாருன்னு சொன்னாக. ஆனா அவருதான், அதிக நாளு இந்த ஒலகத்துல வாழ்ந்த விஞ்ஞானி. அது மாதிரி இவளும் ஒரு நாள் மிகப்பெரிய ஆள வந்து, என்னென்ன செய்யப் போறா பாருங்க?". இப்போதும் புரியவில்லை. முயற்சியைக் கைவிட்டுவிட்டேன்.

காலத்தின் அசுர ஓட்டத்தில் என்னால், ஈடு கொடுக்க முடியாமல், எப்போதாவது அவளை ரோட்டில் பார்த்தால் குடும்பத்தை நலம் விசாரிப்பதோடு எங்கள் பழக்கம் இருந்து வந்தது. இரண்டு இரண்டுகளும், இரண்டு பூச்சியங்களும் சேரும் வருங்காலத்தில் ஓர் ஆண்டைப் பற்றி இந்தியர்கள் கனவு கண்டுகொண்டு இருக்க, இரண்டு இரண்டுகளும், இரண்டு பூச்சியங்களும் சேரும் இறந்த காலத்தில் ஓர் ஆண்டில் மீண்டும் அந்த சேரன் படத்து ஊருக்குச் சென்றேன், சிலபல தின்பண்டங்கள் வாங்கிக் கொண்டு.

(வழக்கம்போல், சற்றே இடைவெளி எடுத்துக் கொண்டு மீண்டும் தொடருங்கள்)

அவள் வீடு கொஞ்சம் பழுதடைந்து இருந்தது. வீட்டின் முன் ஒரு குழந்தை சிரித்துக் கொண்டே படுத்திருந்தது. அதன் அருகில் அவள் அமர்ந்திருந்தாள். என்னைப் பார்த்தவுடன், மிகவும் பரவசமானாள். கிழிந்த பாயில் அமர்த்தப்பட்டேன். மீண்டும் அவள் முருங்கைக்காய் வாங்கப் புறப்பட்டாள். நான் குழந்தையிடம் விளையாட்டு காட்டிக்கொண்டு இருந்தேன். என்னை அது சிரிப்பால் அடித்தது. ஆரஞ்சு பழத்தை உரித்துக் கொடுத்தேன். அது சிரித்துக் கொண்டே, வாங்கவில்லை. நான் ஊட்டிவிட்டேன். உண்டது.

அவள் வந்து அடுப்படி புகுந்தாள்.
"என்ன? என்னோடல்லாம் பேசக்கூடாதுன்னு பேத்திக்கிட்ட சொல்லி இருக்கீங்களா? ஆரஞ்சு பழம் குடுத்தா வாங்கவே மாட்டேங்குது"
"கையி இருந்தாத் தானே வங்குறதுக்கு"
"ஒனக்கு எப்பவுமே தமாசுதான். இது கையி இல்லாம வேற என்ன?"
"அதப் புடிச்சுப் பாரு" என்று சொல்லிக் கொண்டே வெளியே வந்தாள்.
கையைப் பிடித்துப் பார்த்தேன். ஜில்லென்று இருந்தது. விட்டேன். தொப்பென்று விழுந்தது. நடப்பதை என்னால் உணரமுடியவில்லை.
"காலையும் புடிச்சுப் பாரு"
செய்து பார்த்தேன். அதே நிலைமைதான்.

கழனித் தண்ணீரை வெளியே ஊற்றிவிட்டு, மீண்டும் அடுப்படி புகுந்தாள். சில மணிநேரங்கள் இதயம் தாறுமாறாய் எனக்குத் துடித்தது.
"வெண்டக்கா பொடுசா போடட்டுமா? இல்ல...."
"எப்புடியாவது போடு"
சில காய்கறிகளுடனும், அரிவாள் மனையுடனும் என் அருகில் அமர்ந்தாள்.
"நீதான் சொன்னே. யாரோ ஒரு பெரிய மனுசன் இதேமாதிரி பொறந்து, பிற்காலத்துல பெரிய ஆளானாருன்னு. அவரு பணக்கார வீட்டுல பொறந்துருப்பாரு. இது இந்த ஈனச்சிருக்கி வீட்டுலல்ல பொறந்திருக்கு"
குழந்தை அழுதது.
"என்னாடி என்னப் பெத்த மகராணி" எனக் கொஞ்சிக் கொண்டே ஆரஞ்சுப்பழம் கொடுத்தாள்.
"ஆஸ்பத்திரியில காட்டுனீங்களா?"
"எல்லா வெளக்கமாறுந்தான் செஞ்சோம். ஒன்னும் வேளைக்கி ஆகல. இது ரொம்ப நாளைக்குத் தாங்காதுன்னு சொல்லிட்டாக"
"இவுக அம்மா-அப்பா யாரையும் காணோம். வேலக்கிப் போயிட்டாகலா?"
"இவ இப்புடி இருக்குறது தெரிஞ்சதும் இவ ஆயி, பொறந்த வீட்டுக்குப் போனவதான். திரும்பவே இல்ல. ஒன்ற வருஷம் ஆச்சு"
"இவுக அப்பா"
"நம்ம மைனரா? அவரும் பொன்டாட்டி முந்தானையப் புடிச்சிக்கிடே போய் மாமியாரு வீட்டுல குடுத்தனம் ஆயிட்டாரு"
"அப்ப இத்தன நாளு?"
"நாங்க ரெண்டு பேரும்தான் இந்த வீட்டுல ஒன்டிக்கட்டையா இருக்கோம்"
"ஓன் வாழ்க்கையில சந்தோஷம்னே ஒன்னு கெடையாதா? ஏன் கடவுள் ஒன்ன மட்டும் இப்புடி?"
"கர்த்தர் என்னா பண்ணுவாரு? ஏதோ அவரு கிருபையில இவ மொதல்லயே போயிட்டா, இவளத் தூக்கிப் போட்டுட்டு, நிம்மதியா நானும் போயிடுவேன்"
குழந்தை அழுதது.
"இல்லடி ராஜாத்தி நீ சாகமாட்டடி"
தாமதிக்காமல் நான் சொன்னேன்: "நீயும்தான்"
"..........."
"ஏன் கல்யாணத்துக்குத் தாலி எடுத்துக் குடுக்காம நீ சாக மாட்டே"
என்னை அவள் வெறித்துப் பார்த்தாள். நானே தொடர்ந்தேன்.
"அங்கி மட்டும் வெள்ளயா போட்ட ஒரு சாமியார், இல்லாட்டி புரியாம திட்டிக்கிட்டே குடுமி வெச்ச ஒரு ஆளு, இப்புடி யாராவது எடுத்துக் கொடுக்குற தாலியவிட, ஒன்னமாதிரி ஒரு ஆளு எடுத்துக் கொடுக்குற தாலியக் கட்டினாத்தான், வாழ்க்கைன்னா என்னான்னு கட்டிக்கப் போறவளுக்குத் தெரியும்".
கண்களில் இருந்து வழியும் கண்ணீர்த் துளிகளை அவள் தடுக்க முயலவில்லை. முதல் முறையாக அவளை அழவைத்தேன். அசிங்கமாகக் கருதப்படும் அழுகையைப் புனிதமாக்கிய பெருமிதத்துடன் சிலமணிநேரங்கள் அங்கே இருந்துவிட்டு திரும்பினேன்.

இந்த சேகர், இக்கதையின் சுவாரஸ்யம் கருதிகூட, இறக்கவிட விரும்பாத அந்தக் குழந்தையை, காலம் தனது சுவாரஸ்யம் கருதி எடுத்துக் கொண்டது. அந்த நான்கறிவு மனிதக்குழந்தை, தனது மூன்றாவது வயதில், தனது முதல் பிறந்த நாளைக்கூட எதிர்கொள்ள முடியாமல், தனது பூலோக வாழ்க்கையை மூன்றடிக்குள் அடக்கிக் கொண்டது, வாழும் போதும், வாழ்ந்த பிறகும்.

பிப்ரவரி மாதத்தில் எப்போதாவது வரும் 29ம் தேதி, அம்மாதத்தை முழுமை செய்வது போலத் தோன்றினாலும், 29 என்பது கூட முழுமை கிடையாது. அவளும் பிப்ரவரி போலத்தான். திருமணம், தாம்பத்யம், குழந்தைப்பேறு, பேரக்குழந்தை என அவள் வாழ்வில் சந்தோஷம் வருவதுபோல் அறிகுறி இருந்தாலும், அவள் வாழ்க்கையில் என்றுமே சந்தோஷம் என்பது முழுமை கிடையாது. பிப்ரவரி மாதத்திற்கு Month of Sacrifice என்ற பெயருமுண்டு. Sacrifice என்றால் பலி, தியாகம் என்று இரு அர்த்தங்கள் உண்டு. அவள் வாழ்க்கை பலியா? தியாகமா? இரண்டுமா?

காலம் அனுமதி தந்தால், பிப்ரவரி போன்ற அவள் வாழ்க்கையில், அடுத்து வரப்போகும் 29, எனது திருமணம். ஆனால், அதுவும் நிரந்தரம் இல்லை என்பதே அமைதியான உண்மை.

-ஞானசேகர்

Wednesday, February 08, 2006

ஏதேனும் ஒன்றனுக்கு விடையளி

இருக்கா?
இல்லையா?

உண்மையா?
பொய்யா?

நம்புவதா?
வேண்டாமா?

இடப்பக்கமா?
வலப்பக்கமா?

மேலே வைக்குமா?
கீழே தள்ளுமா?

143ஆ?
144ஆ?

ஏகாதிபத்தியமா?
கம்யூனிஸமா?

மதி வளர்ப்பதா?
மதி குறைப்பதா?

ஒன்று போதுமா?
உபரி தேவையா?

வரம் தருமா?
சாபமிடுமா?

இலவசமா?
கூலி தேவையா?

இடிப்பதா?
கட்டுவதா?

ஒருமுறை போதுமா?
பலமுறை வேண்டுமா?

சுற்றம் காக்குமா?
முற்றும் போக்குமா?

தலைமுடி காக்குமா?
முகமுடி தருமா?

பிழைத்திருத்தமா?
பிழை திருத்துமா?

முடிவுண்டா?
முடி உண்டா?

வரலாறு சொல்லவா?
எதிர்காலம் கேட்கவா?

ரகசியம் சொல்லவா?
அம்பலம் ஆக்கவா?

முத்தம் செய்யவா?
அலகு குத்தவா?

தொடலாமா?
கூடாதா?

மதம் பார்க்குமா?
சாதி பார்க்குமா?

பட்டினி போடுமா?
வயிறு நிரப்புமா?

கேட்டால் தருமா?
தட்டினால் திறக்குமா?
தேடினால் கிடைக்குமா?

.....
.....
.....
இன்னும்
பதிலேயில்லை
பல கேள்விகளுக்கு.....
இருந்தும்
தொடர்கின்றன.....
பல கடவுள்களும்,
சில காதல்களும்.....

-ஞானசேகர்

Friday, January 20, 2006

மனித சாயலில் ஒரு மனிதன்


தீர்க்கதரிசனங்கள் சொன்னாலும்,
மனிதர் வியக்க
புதுமைகள் பல செய்தாலும்,
வானதூதரின் மொழிகளில் பேசினாலும்
அன்பு எனக்கில்லையேல்
எனக்கு ஒன்றுமில்லை.
-விவிலியம்

மனிதரோடு மௌனவிரதமிரு
ஜீவராசிகளோடு பேசு
ஏழாம் அறிவுக்கு ஏற்று மனிதரை!
ஓரிடத்தில் இராதே
ஒருநாள் இடுகாடு
ஒருநாள் பன்றிக்கொட்டகை
-வைரமுத்து


"கடல் தாயின் சீற்றத்தில் சென்ற வருடம் இதே நாளில் பலியான பக்தர்களுக்கும், வியாபாரிகளுக்கும், சகோதர சகோதரிகளுக்கும் கண்ணீர் அஞ்சலி" என்று துணியில் எழுதப்பட்ட வாசகம் என்னை வரவேற்றது. சரியாக 362 நாட்கள் கழித்து, வங்கக்கடலின் இந்தக் கரைக்கு வந்திருந்தேன். நான் பார்த்த உலகில் எனக்கு மிகவும் பிடித்த இடம். அது வேளாங்கண்ணி கடற்கரை.

பேருந்தைவிட்டு இறங்கி கடல் நோக்கி நடந்தேன். அந்த ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கண்ணில்பட்ட மனிதர்களை விரல்விட்டு எண்ணியிருக்க முடியும். ஓர் ஊருக்குள் அப்படி ஒரு தனிமை. கடற்கரை வந்துவிட்டது. கண்முன்னே படுத்திருந்தது வங்கக்கடல். ஒன்பது புயல்கள் தொடர்ந்து தாக்கியதால், வங்கக்கடல் கொஞ்சம் கோபமாகவே இருந்தது. கடற்கரையில் வடக்கும், தெற்குமாக உட்கார நல்ல இடம்தேடி அலைந்தேன். ஓரத்தில் நின்ற படகுகளில் கருப்புக் கொடிகள். ஆங்காங்கே மணல்மேடு கட்டி, ஒரு கிறிஸ்தவர்களின் புனித நகரத்தில், அவரவர் மதத்திற்கு ஏற்ப, சிலபேர் மௌனமாய்க் கைகட்டி நின்றுகொண்டு இருந்தார்கள். அவர்களிடம் நான் பார்த்தவரை அழுகை இல்லை. நான் சென்றமுறை வந்தபோது, நானும் சேர்ந்து தீமூட்டிய, அந்த ஒதுக்குப்புறமான இடத்தில் சிறிதுநேரம் நின்றுவிட்டு கடல் திரும்பினேன்.

பார்வையைக் கடல்மேல் விரித்து வைத்துவிட்டு, சிந்தனையை இறந்தகாலத்தில் மூடிவைத்தேன். ஒருமுறை நான் அமர்ந்திருக்கும் இதே இடத்தில் நான் குளித்துக்கொண்டு இருந்தபோது, என் செருப்புகளில் ஒன்றைக் கடல் எடுத்துக் கொண்டது. "கடல் ஒன்றும் சில பணக்காரர்கள் போல் இல்லை, சம்பாதித்தைத் தானே வைத்துக்கொள்ள. கொஞ்சநேரம் நின்றால் செருப்பு திரும்ப வரும்" என்ற நம்பிகையில், சில நேரம் கரையில் தேடிப் பார்த்தேன். தோல்விதான். ஒற்றைச் செருப்பு எதற்கு என்று அதைக் கடலில் வீசினேன். அடுத்த அலையில் பழைய செருப்பு வந்தது. புத்தியைச் செருப்பால் அடித்துவிட்டு, கொஞ்சநேரம் நின்றேன். மீண்டும் ஏமாற்றம். திரும்ப இந்த செருப்பையும் வீசிவிட்டு, அறைக்குத் திரும்பியபோது பழைய செருப்பு கரையில் கிடந்தது. இப்போது நான் அதை எடுக்கவில்லை.

இதேபோல் மலையாளப் பெண்ணொருத்தியின் நனைந்த உடம்பில் மறைபிரதேசங்கள் பார்த்தது, டவுசருக்குள் நண்டு புகுந்து திண்டாடியது, வெள்ளைக்காரியிடம் ஆங்கிலம் பேசுவதுபோல் கையைத் தடவிப்பார்த்தது என சிறுவயதில் நான் செய்த குறும்புகள் சிந்தனையில் வந்துபோயின. நான் மட்டும் சிரித்துக் கொண்டிருந்தேன். மற்றவர்கள் மயானத்தில் இருந்து திரும்புபவர்களின் அமைதியுடன் இருந்தனர்.

சூரியன் முகத்தில் வீசியபோதுதான் தெரிந்தது, விடிந்துவிட்டதென்று. சாப்பிட்டுவர கோயிலுக்கு அருகிலுள்ள அந்தக் கடைக்குச் சென்றேன். கூப்பன் கொடுத்துவிட்டு, காத்திருந்தபோதுதான், இதே இருக்கையில்தான் நான் சென்றமுறை வந்தபோதும் அமர்ந்திருந்தேன் என ஞாபகம் வந்தது. அப்போது, ஈரோட்டிலோ, மதுரையிலோ, அல்லது கடலூரிலோ இருந்து வந்திருந்த புளிசாதம் சாப்பிட்டேன். இப்போது இருபது ரூபாய்க்கு வாங்கிய தோசையை விழுங்க என் தொண்டை திறக்கவில்லை. அப்படியே வைத்துவிட்டு மீண்டும் கடல் நோக்கிப் பாய்ந்தேன்.

குச்சி ஐஸ் வாங்கும்போது, ஒரு பெண் தன் துணையின் தோளில் சாய்ந்துகொண்டு சொன்னது எனக்குக் கேட்டது: "எப்படித் தான் இந்த சனங்க பயப்படாமக் குளிக்குதுகளோ? சுனாமி கினாமி வந்தாத் தெரியும்". துணை அவள் கன்னத்தைத் தட்டிக் கொடுத்தது.

இம்முறை கொஞ்சம் அதிகமாக மனித நடமாட்டம் இருந்தது. இருந்தும் நூறைத்தாண்ட வாய்ப்பில்லை. இம்முறை தெற்கு பக்கம் சென்று தனியே அமர்ந்தேன். அங்கே என்னைப்போல் பலபேர் காரணமே இல்லாமல் தனித்தனியே நின்றுகொண்டு இருந்தனர். நான்
கடைசியாக அமர்ந்தேன். இப்போது ஒரு சிந்தனையும் இல்லாமல் சும்மா அமர்ந்திருந்தேன். சில மணிநேரங்கள் போயிருந்தன.

சில வாலிபர்கள் என் எதிரே நடந்து போய்கொண்டு இருந்தனர். அதில் ஒருவன் ஒவ்வொரு அலையையும் துரத்திக் கொண்டே தொடாமல் நடந்துகொண்டு இருந்தான். திடீரென ஓர் அவசர அலை அவன் முயற்சி கலைத்து, அவன் கால் நனைத்துப் போனது. அவன் அந்த
அலையைக் கோபமாய்ப் பார்த்தான். அவர்களில் ஒருவன் சிரித்துவிட்டு சொன்னான்: "இதுக்கே இப்புடியா? இந்த தென்னமரத்த ஒரு அல சாச்ச்சுது பாரு. சுதாரிக்கிறதுக்குள்ள வேலிக்குள்ள கெடந்தேன்டா மாப்புள்ள. இன்னும் இந்த தென்னமரமும் எந்திரிக்கல,..........". அவர்களும், அவர்களில் பேச்சும் மெல்லமாய் மறைந்து போயின.

காலில்படும் தண்ணீர், நழுவி ஓடிய செருப்பு, யாக்கை தாங்கும் இருக்கை இப்படி பேசாத உயிரிலிகளால் இயற்கை, மனிதனுக்குச் சொல்லும் பாடங்கள் எத்தனையோ? இப்படி யோசித்துக்கொண்டே இருக்கும்போது, என்னை அடுத்த பாடத்திற்கு இயற்கை
தயார்படுத்திக்கொண்டு இருப்பதை அறியாதவனாய்த் தெற்குப்பக்கம் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

தெற்குப்பக்கம் என் பார்வையில் நீண்ட நேரமாகத் தெரிந்தவை வங்கக்கடலும், அதில் கலக்கும் ஆறும், சில சவுக்கு மரங்களும். திடீரென ஒரு மனிதன். சிறுபிள்ளைகள் பார்த்தால், பைத்தியம் என்று சொல்லும் அளவுக்குத் தோற்றம். கரையின், மேட்டில் இடது
காலையும், இறக்கத்தில் வலதுகாலையும் வைத்து வடக்குநோக்கி நடந்து வந்தான். அவன் என்னைப் பார்க்கவில்லை. என்னை அவன் கடந்து போய்விட்டான். மீண்டும் சில மணிநேரங்கள் கடல் சிந்தனையில் மூழ்கினேன்.

எட்டுமணிநேரம் ஆகிவிட்டது. வீட்டுக்குத் திரும்ப எண்ணி நடக்க ஆரம்பித்து வடக்குக் கரைக்கு வந்தேன். இவ்வளவு நேரம் யாருடனும் பேசாமல், கட்டுப்பாடுகள் இன்றி சுதந்திரமாய்ச் சுற்றித் திரிந்தேன். ஆனால், என் அபிமான வங்கக்கடலின் ஒரு துளியில்கூட நான் நனைவுபடவில்லை. அதற்குச் சில காரணங்களும் உண்டு.

ஒருமுறை வங்கக்கடலில் கன்னியாக்குமரியில் குளித்தபோது, மூன்று பாலிதீன் பைகள்போட்டு நான் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த 1500 ரூபாய் நனைந்தது மட்டும் இல்லாமல், கடலோடு கலக்கப் பார்த்தது. அதேபோல், வங்கக்கடலில் தனுஷ்கோடியில் நான் தாவிக் குதித்தபோது, தண்ணீருக்கடியில் என் நெஞ்சுக்கும், மூழ்கி இருந்த ஒரு திடப்பொருளுக்கும், இடையே இருந்த இடைவெளி சில அங்குலங்கள் மட்டுமே. அந்த திடப்பொருள், 1964ல் வந்த புயலில் கடல் விழுங்கிய ஒரு ரயில் சென்ற தண்டவாளத்தின் கூறிய முனை. அதனால் நான் தனியாக கடலுக்கு வந்தால், குளிப்பதில்லை.

சரி கால் நனைத்து செல்லலாம் என செருப்பைக் கழற்றி வைத்துவிட்டு, கடலில் இறங்கினேன். நான் வந்தநேரம் பெரிய அலைகளே இல்லை. தொடை நனையும் வரை கரையேறுவதில்லை என நின்றுகொண்டு இருந்தேன். இப்போது என்னைச் சுற்றி மனிதர்கள்
கடலில் நனைந்துகொண்டு இருந்தனர். என் வலப்பக்கத்தில் என் வயது பெண்ணொருத்தியின் இச்சைப்பாகங்கள் மிகையாய்த் தெரிந்தன. நான் ரசிக்கவில்லை. தொடுவானம் பார்த்துக்கொண்டு இருந்தேன். கரையில் இருக்கும் செருப்பை ஒருமுறை பார்த்துக் கொண்டேன். புது மனைவியின் இடுப்பில் கைவைத்து, கடலின் மடியில் கால்வைக்கப் பணிக்கும் ஒரு கணவன், என் இடப்பக்கம் இருந்தனர். பெருமூச்சு மட்டுமே விடமுடிந்தது.

(சிறிது இடைவேளை எடுத்துக் கொண்டு, சற்றே மனநிலை மாற்றிக்கொண்டு தொடருங்கள்)

திடீரென என்னையும், எனக்குப் பின்னும் பார்த்துக் கொண்டே சுற்றிக் கடலில் இருந்தவர்கள் விலக ஆரம்பித்தனர். எனக்கு ஒன்றும் விளங்வில்லை. செருப்பு பத்திரமா எனத் திரும்பினேன். இரண்டடி இடைவெளியில் எனக்குப் பின் நான் முதலில் பார்த்த அந்த மனிதன் நின்றுகொண்டு இருந்தான். அவனின் சட்டையும், வேட்டியும், ஒரு பையும் கரையில் என் செருப்புக்குப் பக்கத்தில் கிடந்தன. இவன் கோவணத்துடன் நின்றுகொண்டு இருந்தான். ஏன் எல்லோரும் விலகுகிறார்கள் என எனக்குப் புரியவில்லை. மீண்டும் கடல் குடித்தேன்.

அவன் எனக்கு முன்னே வந்து குளிக்க ஆரம்பித்தான். அவன் உடல் அசைவுகள் வித்தியாசமாய் இருப்பதை இப்போதுதான் கவனித்தேன். அவன் மேட்டில் ஒருகாலும், இறக்கத்தில் ஒருகாலும் வைத்து நடந்து வந்தது கிறுக்குத்தனமல்ல. அவனது வயிற்றில் வலதுபக்கம் பக்கவாட்டில் ஒரு கட்டி இருந்தது, ஓர் ஊதப்பட்ட பலூனின் அளவில். என் கண்ணால் அக்கட்டியின் ஆழம் பார்த்துக்கொண்டு இருந்தேன். தற்செயலாய்த் திரும்பியவன், என்னைப் பார்த்து சிரித்தான். என்னில் சலனமில்லை. இடப்பக்கத்துக்கும், முன்பக்கத்துக்கும் இடையில் 45 டிகிரியில் அவன் இடதுகையைக் கீழே கொண்டுபோய் கடலில் விழுந்தான். அலை அவன் தலை நனைத்தது. சிரிப்புடன் எழுந்தான். யாரும் அவன் சிரிப்பை அங்கீகரிக்கவில்லை, நானும்தான்.

சில விநாடிகள் குளித்துவிட்டு கரையேறினான். என்மேல் ஒரு சிரிப்பைத் தெளித்துவிட்டுப் போனான். "யார்ரா இவன்? சம்மந்தமே இல்லாமல் சிரிக்கிறான்?" என நான் நினைத்தபோது, ஓரலை என் தொடை நனைத்தது. சரி தொடை நனைந்துவிட்டது. கிளம்பலாமா? கடலில் இறங்கினால் எனக்கு அதிகாலை தூக்கம் போல மீண்டுவர மனம் வராது. நின்றுகொண்டே இருந்தேன்.

திரும்பி செருப்பைப் பார்த்தேன். பக்கத்தில் அவன் சட்டை மாட்டிவிட்டு, வேட்டிக்கு மாறிக்கொண்டு இருந்தான். மீண்டும் என் பார்வை கடலில் மூழ்கப் போனது. என் முதுகருகில் தண்ணிரில் நடக்கும் சத்தம் கேட்டு திரும்பினேன். அவன் வேட்டியைக் கட்டாமல் வந்துகொண்டு இருந்தான். அவன் நிர்வாணத்தைக் கஷ்டப்பட்டு இடதுகையால் கூடியவரை மறைத்தான். நான் அவன் நிர்வாணத்தைப் பார்ப்பதை அவன் கண்டுகொள்ளவில்லை. அவன் சைகையால் என்னைக் கரைக்கு அழைத்தான். நானும் போனேன்.

அவனின் கோவணம் தரையில் கிடந்தது. அதைக் காட்டி, என்னை எடுக்கச் சொன்னான். நானும் எடுத்தேன். இப்போது அவன் செய்த சைகை, எனக்குப் புரியவில்லை. "நீங்க ஊமையா? பேசமாட்டீங்களா?" எனக் கேட்டேன். அவன் இப்போது மேலும் கீழும் தலையாட்டி, சிரித்துக்கொண்டே காட்டிய முகபாவனை, சாகும்வரை எனக்கு மறக்க
வாய்ப்பில்லை. அந்தப் பாவனைக்கு "சரியா கண்டுபுடுச்சுட்டீங்க. நான் ஊமையேதான்" என
அர்த்தம். அந்தப் பாவனையோடே, என் தோள் தொட வந்தவன் ஏதோ ஒரு தாழ்வு மனப்பான்மையுடன் விலகிக் கொண்டான்.

"சரி இத என்ன செய்யனும்" என என் கையில் இருந்த அவன் கோவணத்தைக் காட்டிக் கேட்டேன். அவன் தன் இடதுகையை எடுத்து, வலதுகைமேல் தட்டினான். பின் பின்பக்கம் திரும்பி, தன் பையைக் காட்டி, தூக்குவதுபோல் சைகை செய்து, வடக்கு நோக்கிப்
போவதுபோல் சைகை செய்தான். நான் அவனது வலதுகையைப் பிடித்துப் பார்த்தேன். அது வேலை செய்வதில்லை. இவனுக்கு எல்லாமே இடப்பக்கம்தான் என்று இப்போது விளங்கியது.

நான் கடலுக்குள் இறங்கினேன். அவனது கோவணத்தை நன்றாகப் தண்ணீரில் நனைத்துவிட்டு, பிழிந்து அவனிடம் கொடுக்க வந்தேன். அவன் என்னைப் பார்த்துவிட்டு வானத்தைப் பார்த்தான். ஏதோ சொல்ல முயன்று, கத்தினான். எனக்கு அது புரிந்தது. அதன்
அர்த்தம் இங்கு வேண்டாம். படிப்பவர் வேறுமாதிரி புரிந்துகொண்டால், கரு மாறிவிடும். இப்போது கோவணத்தை வாங்கிவிட்டு, என் தோள் தொட்டான். "வேறெதும் செய்யனுமா?" எனக் கேட்டேன். அவன் முதலில் செய்த-எனக்குப் புரியாத-அதே சைகையை மீண்டும்
வேகமாகச் செய்தான். இப்போதுதான் எனக்கு அர்த்தம் புரிந்தது. சிரித்துக் கொண்டேன். அர்த்தம் இதுவே: "எனக்கு வலது கை விலங்காது. குனியவும் முடியாது. இக்கொவணத்தை வலதுகையில் வைத்தால், நான் இடதுகையில் பையை எடுத்துக் கொண்டு ஊருக்குக்
கிழம்புவேன்".

அவன் என்னைப் பார்த்துக் கைகூப்பிவிட்டு, வடக்கே நடக்க ஆரம்பித்தான். நானும் பின் தொடந்தேன். அவன் சொந்த ஊரைக் கேட்டேன். தென் திசை காட்டினான். நான் ஊர் அறிய முயற்சிக்கவில்லை. போகும் இடம் கேட்டேன். வடதிசை காட்டி, பலமாகச் சிரித்தான். ஓர்
பெரிய அலை வந்தது. இவன் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு, இடதுகையை முன்நீட்டினான், அலையை நிற்கச்சொல்லி. அலை அவனுக்குப் பின்னால் ஓடி, மீண்டும் அவன் முன் வந்தது. ஏதோ கடலைப் போரிட்டு வென்றவன் போல், கடலைப் பார்த்து நக்கலாய்ச் சிரித்தான். இப்போதுதான் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. கேட்டேவிட்டேன். "சுனாமி வந்தபோது, நீங்க எங்க இருந்தீங்க?". சைகையே இல்லை. அவன் முகபாவனை கடுமையாக மாறியது. சற்றே நின்றுவிட்டு, பின்னால் ஏன் வருகிறேன் என என்னைக் கேட்டான்.

என்னிடம் பதில் இல்லை. அவன் அதை எதிர்பார்க்கவும் இல்லை. தன் பயணம் தொடர்ந்தான். அவன் என் பார்வையில் இருந்து மறையும்வரை அங்கேயே நின்றுவிட்டு, மீண்டும் பழைய இடத்துக்குத் திரும்ப நடக்க ஆரம்பித்தேன், வெறும் கால்களுடன். அவனது
காலடிதடங்களில், அவனுக்கு எதிர் திசையில் என் பயணம். என் பயணம் என் செருப்பில் முடிந்தது. அவனது பயணம்?

இப்போது கரையில் அமர்ந்து யோசித்தேன்: "சிறுவயது குறும்புகளை நினைத்து தனியாக சிரித்துக்கொண்டு இருந்தால், அதன் பெயர் நினைவுகள். தன்னையும், தன்னைச் சார்ந்தவைகளையும் சுருட்டிக்கொண்ட கடலை, காலால் மிதித்து சிரித்துக்கொண்டால் அதன் பெயர் கிறுக்குத்தனம். செய்யும் செயல் ஒன்றாயினும் செய்பவனைப் பொறுத்து அர்த்தம் சொல்வதுதான் அனுபவமா-நடைமுறையா? மிருகக்காட்சி சாலையில் ஒரு மனிதக்குரங்கைச் சிரிக்கவைக்க சிரித்துக்காட்டும் நாம், சகமனிதன் சிரிப்பையே அங்கீகரிக்க முடியாத ஒரு வாழ்க்கையில் ஒளிந்திருக்கிறோம். குழந்தைகளிடம் குழந்தையாகவே மாறிவிடும் நாம், ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவனிடமோ-ஒரு கிழவனிடமோ-தனக்கு அடிமை என நினைக்கும் மனைவி போன்ற உறவுகளிடமோ- நம் ஆதிக்கம் காட்டுவதே மனிதனின் சராசரி வாழ்க்கை என்றால், ஆறாம் அறிவில்தான் ஏதோ பிரச்சனை. இதுபோன்ற நிகழ்வுகளால் பெறுவது ஒன்றும் ஏழாம் அறிவு அல்ல, ஆறாம் அறிவின் உண்மைவடிவம்".

மறுநாள், திருச்சியில் ஒரு பிரபல தனியார் மருத்துவமனைக்குச் சென்று இருந்தேன். மருத்துவரைச் சந்தித்துவிட்டு திரும்புகையில், என் செருப்பு காணாமல் போயிருந்தது. இம்முறை தாமதிக்காமல், ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, வீடு திரும்பினேன். ஏனெனில், செருப்பு திரும்பிவர எடுத்தது ஒன்றும் கடல் அல்ல.

-ஞானசேகர்
(சாயலில் மனிதன்)