புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Friday, May 12, 2006

கடன்பட்டார் நெஞ்சம்

குழந்தைப் பருவத்தில் அதைத் தொலைத்தவர்கள், வயோதிகப் பருவத்தில், குழந்தைத்தனமாக நடந்து கொள்கிறார்கள்.
-யாரோ


(ஒரு குழப்பமான விஷயத்தைப் பற்றி, ஒரு குழப்பமான கதையைத் தெளிவாக எழுதியுள்ளேன்)

வலது கையால் தலையைச் சுற்றி இடது காதைத் தொடுவதை மிகப் பெரிய சவாலாகக் கருதிய வயது அது. அப்போதைக்கு எல்லாம் இருட்டு ஒரு பயமாகவே எனக்குத் தெரிந்ததில்லை. அப்படி ஒரு பயமறியா இளங்கன்று பருவத்தில், ஒரு மே மாதத்தில், ஏதோவொரு நாளின் பின்னிரவில், தனியாக எழுந்திரித்து, சிறுநீர் கழிக்க ரோட்டோரம் வந்தேன். நான் நனைத்துச் சூடாக்கிய இடத்தில் இருந்து, சுமார் 350 கிலோ மீட்டர் தொலைவில், யாரோ ஒரு பெரிய ஆளைக் கொன்றுவிட்டதால், தீவிர தேசபக்தர்கள் சிலபேர், சாலையோரங்களை அடித்து நொறுக்கிக் கொண்டு இருந்தார்கள். சில அடி தூரத்தில் நின்று, பொறுமையாக வேடிக்கை பார்த்துவிட்டு வந்து, பிரஞ்சு புரட்சி அன்று பதினான்காம் லூயி தூங்கினதுபோல், ஒன்றுமே நடக்காததுபோல், நிம்மதியாகத் தூங்கினேன். சமுதாயத்தின் அலங்கோலங்கள் எல்லாரையும் எல்லா நேரங்களிலும் அலைக்கழிப்பதில்லை என்பதற்கு, இப்பின்னிரவு சம்பவம் ஒரு முன்னுதாரணம்.

நானும் அப்பாவும் மறுநாள் காலையில், எதிர் டீக்கடையில் 1 ரூபாய் 20 பைசாவுக்கு இரண்டு டீக்கள் குடித்தோம். சுவிட்சர்லாந்து முதல் பெரும்புதூர் வரை பல ஊர்களைப் பற்றியும், விஸ்வ பிரதாப் சிங் முதல் அமிதாப்பச்சன் வரை பல மனிதர்களைப் பற்றியும் டீக்கடைப் பெருசுகள் பேசிக்கொண்டு இருந்தன. "கால பேப்பரு வந்தாத்தான் எதையுமே கண்டிஷனா சொல்ல முடியும்" என ஒரு பெருசு முடித்து வைத்தது.

சிங்கப்பூர் ரிடர்ன் செட்டியார் பாட்டி முதல், 7 நாட்கள் வயதாகும் பக்கத்து வீட்டுக் குழந்தைவரை, பெரும்புதூர் அதிர்ந்தது முதல், ரோட்டில் சோடியம் விளக்கு உடைந்து கிடப்பதுவரை பல விஷயங்களைச் சொல்லிமுடித்தார் அப்பா. விளக்குகள் உடைக்கப்பட்டதை நான் பார்த்ததாகச் சொன்னேன். இராத்திரியில் இனிமேல் தனியாக வெளியே வரக்கூடாது என முதல் தடை என்மேல் விதிக்கப்பட்டது. எனது குழந்தைப் பருவம் முடியப் போகிறது என அப்போது எனக்குப் புரியவில்லை.

மூன்று வாரங்கள் கழித்து தேர்தல். தமிழக மக்கள் பெரும்பாலோனோர் அன்று ஓட்டுப் போட படையெடுக்க, சுற்றுவட்டார மக்கள் எல்லாம் எங்கள் கிராமத்தில் இருந்த எங்கள் வீட்டிற்குப் படையெடுத்தனர். முதல் முறையாகக் கையில் மைக் கிடைத்ததால், "அண்ணாத்த ஆடறார்" பாட்டைப் பாடிப்பார்த்தேன். பின்னர் சின்னப் பயல்களுடன் சேர்ந்துகொண்டு, குண்டுமணி பொறுக்கக் கிளம்பிவிட்டேன். சாயங்காலம்போல், என்னைக் கூட்டிவந்து, கட்டிலில் நனைந்து கிடந்த, பாட்டியின் தலையில் எண்ணெய் தடவச் சொன்னார்கள். எதுவும் கேட்காமல், செய்தேன். பலபேருக்கு முன்னால், என் அத்தை என் டவுசரை அவிழ்த்து, வேட்டி கட்டிவிட்டாள். முதன்முறையாக சுற்றி இருப்பவர்களைப் பற்றி கவலைப்பட்டேன். ஆப்பிள் சாப்பிட்ட ஆதாமின் வெட்கம் எனக்கும் அறிமுகமானது.

இரவு எட்டு மணி.
"என்னம்மா கொழம்புல உப்பே இல்ல"
"சரியாத்தானே இருக்கு"
"எம்மா, இந்தக் கீர கசக்குது வேண்டாம்"
"குருஞ்சாக்கீர, ரொம்ப நல்லது, சாப்புடு"
"பாட்டி எங்க?"
அத்தை பதில் சொன்னாள்.
"பாட்டி, அவுங்க அப்பாகிட்ட போயிட்டாங்க"
"அவுங்க அப்பாவும் மண்ணுக்குள்ளதான் இருக்காறா?"

இதுபோல, பல கேள்விகளால் தொல்லை கொடுத்ததால், இயேசுநாதர் முதல் பால்ராஜ் தாத்தா வரை பல கதைகள் சொல்லி, சாவு என்ற ஒற்றை வார்த்தையை விளக்கி முடித்தாள் அத்தை.
"அப்ப, பாட்டி எப்புடி செத்தாங்க?"
அடுப்படியில் பூனை, பானைகளை உருட்டியது.
"பேசாம தூங்கு. பேசுனா, பூன கடிக்கும்"
"அதெல்லாம் கடிக்கட்டும். பாட்டி எப்புடி செத்தாங்க?"
"இந்தப் பூன கடிச்சுதான். இனிமேல் நீ தூங்காட்டினா, ஒன்னையும் கடிக்கும்"
என்னைச் சமாதானப்படுத்த, அத்தை சொன்ன வார்த்தைகள். கடலில் நதி கலந்தால் மாறாத உப்புபோல, பல வருடங்களாக பூனை கடித்து மனிதன் இறப்பதில்லை என்ற உண்மை தெரிந்தும், உண்மை கலந்தாலும் பயம் மாறவில்லை. சமுதாயத்தின் அலங்காரங்கள் எல்லாரையும் எல்லா நேரங்களிலும் அழகு செய்வதில்லை என்பதற்கு, இம்முன்னிரவு சம்பவம் ஒரு முன்னுதாரணம்.

இதெல்லாம் போதாதென்று, அடுத்த வாரத்தில் என் கண்முன்னாலேயே, ஒரு பூனை குறுக்கே ஒடியதால், நிலை தடுமாறிய ஓர் இரு சக்கர வாகனத்தில் இருந்த, ஒரு குடும்பம் லாரியின் அடியில், மனித மூளைகளைக் காட்டிவிட்டு என் கண்முன்னே, பேரப்பிள்ளைகள் எண்ணெய் தடவக்கூட இடம் இல்லாமல், தலை இல்லாமல், உயிர் இல்லாமல் போனார்கள். என்னோடு சேர்ந்து மூன்று பேரின் இரத்தமும் உறைந்திருந்தன.

அன்று இரவு இதைப்பற்றி, நான் எதையும் சொல்லவில்லை. என்க்கு ஒன்றுமே பாதிப்பு இல்லாமல் இருந்தாலும், சிறையில் இருந்த நெப்போலியன் போல, தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டேன். பூனையும், பல் தெரியும் பாட்டியும், கொதிக்கும் எண்ணெய்க் கொப்பறையும் கனவில் வந்து போயின. இரவு என்றாலும், அதிலும் துக்கம் என்றாலும் பயப்பட ஆரம்பித்தேன். பகலில்கூட, இரவின் கனவுகள் தொல்லைபடுத்தின. முதல் நாள் இரவு கனவில் வந்த காட்சிகள், மறுநாள் காலை நினைவில் வந்த முதல் நாளே, முதல்நாள் இரவில் எனது குழந்தைப் பருவம் செத்துப் போனதை என்னால் அவ்வயதில் உணரமுடியவில்லை.

"தூக்கத்தில் தேவதைகளைப் பார்ப்பதால் குழந்தைகள் சிரிக்கிறார்கள்" என்றார் ஒரு கவிஞர். நான் அப்பருவம் கடந்துவிட்டதால், சிரிப்பு தூரமாகியது, கனவிலும், நனவிலும். எனது தலையணையுடன் மரணபயமும், எனது நிழலுடன் பூனையும் பயணிக்க ஆரம்பித்தன. பூமியோடு சேர்ந்து நானும், சூரியனைச் சில முறைகள் சுற்றி வர வர, பூனை பற்றிய பயம் முழுவதும் மறந்து போனது. ஆனால், சாவுபயம் மட்டும் சாகாமல் இருந்தது.

கழுத்தை வெட்டப் போகும்போது, "தாடியை வெட்டிவிடாதீர்கள்" என்ற ஒரு மத போதகரும், சுடப்பட்ட நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும்போது, "உங்களில் யாரும் எதிர்க்கட்சிக்காரர்கள் இல்லையே?" என்று காவலாளிகளிடம் சிரித்துப் பேசிய ரொனால்டு ரீகனும், கொல்லவந்தவர்களையே திட்டிய சே குவாராவும் என்னை ஆச்சரியத்தில் அமுக்கினார்கள். அடுத்த விநாடியில் சாவை வைத்துக் கொண்டு, இவ்வளவு கம்பீரமாக எப்படி இருக்க முடியும்? என்னைப் பார்த்தால் எனக்கே பாவமாக இருந்தது.

ஒருமுறை, எங்கள் ஹாஸ்டலில் ஒரு போட்டி நடந்தது. போட்டி இதுதான்: "பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து ஒரு பாதிரியார் தவறி விழுந்து இறந்துபோனார். அவருடைய ஆவி, 150 ஆண்டுகளாக மொட்டை மாடியில்தான் அலைகிறது. மாடப்புறாக்கள் சத்தம்போட்டு பேசும் ஒரு இரவு முழுவதும் மொட்டை மாடியில் தூங்கினால், ரூபாய் 100 தரப்படும்". நான் ஒருவன் மட்டும் ஒத்துக்கொண்டேன். வெற்றியும் பெற்றேன். பிறகுதான் யோசித்தேன். நேற்று இரவு, சூரியனை இனிமேல் பார்க்க முடியாது என்றுதான் நினைத்து இருந்தேன். ஆனால், இன்று பலபேர் பயந்த ஒரு காரியத்தை நான் மட்டும் செய்து முடித்தேன். அதுவும் இத்தனை நாள், நான் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்த ஒரு விஷயத்தை.

எனக்கு என்னதான் பிரச்சனை? கருங்கடல் போல தனியே இருந்து, தவறான கணிப்புகளால் என்னை நிரப்பிக்கொண்டு இருந்த நான், வளைகுடா போல கொஞ்சம் வெளியே தலை நீட்டி, சமுத்திரங்களை எட்டிப் பார்க்கத் தொடங்கினேன். உலகம் புரியத் தொடங்கியது. எல்லோருக்கும் உண்டு அந்த சாவுபயம் மற்றும் வலிபயம். இத்தனை நாள், தன் காலின் பலம் அறியாமல் சிங்கத்திற்குப் பயந்து ஓடும் ஒட்டகசிவிங்கிபோல், மரணத்திற்குப் பயந்து பல கனவுகளைக் காயப்படுத்திவிட்டேனே என்று சிரித்துக் கொண்டேன். கல்பனா சாவ்லாவும், டயானாவும் ஒரே நாளில் பிறந்ததற்காக, அவர்களைச் சகோதரிகள் என நினைக்கும் ஓர் அப்பாவிச் சிறுவன் போல், நான் வாழ்ந்திருக்கிறேன். பயம் பொதுவெனினும், அது எனக்குள் நுழைந்ததற்கான காரணங்களாக இதுவரை நான் சொன்னவை எல்லாம், தவறென நிரூபிக்கப்பட்ட தேற்றங்கள் போல், வழக்கிழந்து போயின. காகம் அமரப் பனம்பழம் விழுவதில்லைதானே?

குதிரை ரேஸில், தன்னை இன்னொரு குதிரை முந்த முற்படும்போது, வேகமாக ஓடத் தொடங்கும் குதிரை போல, சோதனை என்று ஒன்று இல்லாதவரை தனது பலம், பயம், பலவீனம் இதுதான் என்று யாராலும் தீர்மானமாகச் சொல்ல முடியாது. அப்படி சோதனைகளைத் தேடி வரவழைத்து, பலம் அல்லது பலவீனம் அறிவதில் ஒரு திருப்தி உண்டு. பதில் தெரிய, கேள்விகள் இல்லாமல், தேர்வுகள் மட்டும் எழுதும் சில தேர்வுகளைப் பற்றிதான், இனி.

(சற்றே இடைவெளி எடுத்துக் கொண்டு, மனநிலை மாற்றிவிட்டு, மீண்டும் தொடருங்கள்)

இதேமாதிரி சோதனைகள் எல்லாரும் கண்டிப்பாகச் செய்துகொண்டுதான் இருக்கிறோம். ஆனால், வெளியே சொல்வதில்லை. ரயில்வே மந்திரி ரயிலில் போகும்போது, ஊரே அவரைப் பார்க்க, ரயில் பெட்டிகளை எண்ணிக் கொண்டு இருந்த ஒரு முரட்டு போலீஸ்காரரை நான் பார்த்திருக்கிறேன். மனித இனத்தைச் செய்வாய் கிரகம் முதல் முறை நெருங்கி வந்தபோது, அதைப் பார்ப்பதற்காக 60 நாட்களும், இரவெல்லாம் விழித்து, பகலில் தூங்கிய ஒரு நண்பனையும் நான் பார்த்திருக்கிறேன். மனித தொல்லை அதிகம் என்றும், பெண்கள் தொல்லை அதிகம் என்றும் வீட்டையும், கால நேரங்களையும் மாற்றிக் கொண்டு இருந்த ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் பற்றியும் நான் படித்து இருக்கிறேன்.

சில நாட்களுக்கு முன், என் நண்பன் ஒருவன் எனக்கு போன் செய்தான். நான் கேட்டேன்.
"என்னடா வாயாலதான் பேசுறியா?"
"24 மணிநேரமா, பச்சத் தண்ணிகூட குடிக்கக் கூடாதுன்னு ஒரு வைராக்கியம். இன்னும் 6 மணிநேரம் இருக்கு"
"திடீர்ன்னு ஏன்டா?"
"மேதா பட்கர் இத்தன நாள் உண்ணாவிரதம் இருக்காங்களே, நம்மலால இருக்க முடியுமான்னு ஒரு சின்ன டெஸ்ட். வேல அதிகம் இருக்கதால, 24 மணிநேரம் மட்டும்"
"என்னால 36 மணிநேரம் அப்புடி இருக்க முடியும். அதுக்குமேல முடியும்மான்னு தெரியல. வேணும்முன்னு, இருக்காததால என்னோட சக்தி எனக்குத் தெரியல"
"சும்மா இருக்குறது ரொம்ப ஈஸிடா. பெர்பஸ்ஃபுல்லா இருக்குறப்ப, விரதங்கற ஒரு வார்த்தை மட்டுமே, மூளையில இருக்கும். அதனால, சாப்புடலங்கற ஞாபகமே, இன்னும் பசிய அதிகமாக்கிடும்"
"இப்புடித்தான் அலெக்ஸாண்டர் ஃப்ளமிங் ஒருமுறை என்ன பண்ணாருன்னா...."
"சரி சரி இருக்குற கொஞ்ச சக்தியையும், ஒன்னோட மொக்க போட்டு, வேஸ்டாக்க விரும்பல, போன வெச்சுடு"

போனை மட்டும்தான் என்னால் வைக்க முடிந்தது. இதுபோல் நான் செய்தவைகளை யோசித்துப் பார்க்க, அந்த உரையாடல் ஒரு தூண்டுகோலாகவும் அமைந்து போனது. காந்தி ஜெயந்தி அன்று, மௌன விரதம் இருக்கப் போவதாக முடிவெடுத்து, இரண்டு ஆண்டுகளாக கெட்ட வார்த்தைகளுடன் ஆரம்பமானது எனது அக்டோபர் இரண்டுகள். ஒரு வழியாக அம்முயற்சியைக் கைவிட்டேன். ஆனால், அடுத்த வருடம் ஆச்சரியப்படும் வகையில், எந்த முயற்சியும் எடுக்காமல், அமைதியாகவே செத்துப் போனது எனது அக்டோபர் இரண்டு. அதேபோல், தாமஸ் ஆல்வா எடிசன் இறந்த நாள் அன்று, மின்சாரம் உபயோகிக்காமல் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தால், இரவு 11:30 மணிக்கு NDTVல் செய்தி: "வீரப்பன் சுட்டுக்கொலை". என்ன நடக்கப் போகிறது என ஏங்கும் மனதுடன், எனது அறைக்கதவையும் 12 மணிக்குச் சாத்தியவன் தான். அடுத்தநாள் இரவு 12 மணிக்குத்தான் வெளியே வந்தேன். அக்டோபர் 18 - அந்த ஒருநாள், ஐந்து மெழுகுவர்த்திகளுடன் நான் வாழ்ந்த வாழ்க்கை, ஒரு நல்ல அனுபவம்.

இதுபோன்ற காரியங்கள் பலபேர் முயற்சித்து இருக்கலாம். ஆனால், நான் முயற்சி செய்த ஒரு விபரீதமான காரியமும் உண்டு. எனது அப்புச்சியின் (அப்பாவின் அப்பா) நண்பரான ஒரு தாத்தா எனக்கு நன்கு பழக்கம். 1972ல் பஞ்சம் வந்தபோது, ஊர்க் கிணற்றைத் தூர்வாரப்போய், வெப்பக்காற்று அடித்து, அவரின் இடதுகண்ணின் கருவிழியும், வெள்ளை விழியாய்ப் போனது. அதற்காக மதுரை அரவிந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மதுரை எங்கள் ஊரில் இருந்து தூரம் என்பதால், டாக்டரின் பரிந்துரைப்படி, திருச்சியில் ஒரு டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வார்.

அடிக்கடி அவர் வீட்டிற்குச் நான் செல்வதுண்டு. திண்ணை வாழ்க்கை. அரைக்கோளவடிவத் தட்டில் சாப்பாடு. 10 ரூபாய் கொடுத்துவிட்டு, 50 ரூபாய் எனச் சொல்லும் மகன். கடைசியாக எப்போது சாப்பிட்டோம் என்றும், தனது பிள்ளைகளின் பெயரை வரிசையாகக் கூட நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் செய்துவிடும் 70 வயது ஞாபக மறதி. இவற்றை எல்லாம், நடு பாலைவனத்தில் செத்துப் போன முதலாளி அருகில் அமைதியாக அமர்ந்திருக்கும் ஒட்டகம் போல, வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பேன். என்றோ சந்திக்கப் போகும் கண்ணில்லாத வாழ்க்கையை, இன்று நான் நினைத்துப் பார்க்க இவர்தான் காரணம் என்று நான் சொல்ல மாட்டேன்.

ஒருமுறை திருச்சி டாக்டரிடம் இவரை நான் அழைத்துப் போயிருந்தேன். டாக்டர் கேட்டார்.
"என்ன தாத்தா? பேரனா?"
"பேரன் மாதிரிதான் சார்"
"மருத்த ஒழுங்கா ஊத்துறீங்களா?"
"தூங்கப் போறதுக்கு முன்னாடி ஊத்துறேன் சார். ஆனா, இன்னும் அந்த தெர மறக்கிறது மாதிரியே இருக்கு. கண்ணுல இருந்து தொண்டைக்கி எறங்கிக் கசக்குது சார்"
"அது கசந்தா என்ன தாத்தா? உங்களாலதானே ஊரே நல்ல தண்ணீ குடிக்குது"

"சரி சார். இவனக் கொஞ்சம் டெஸ்டு பண்ணூங்க. மூச்சுக்கு முண்ணூறு தடவ சும்மா கண்ணக் கசக்கிக்கிட்டே இருக்கான்"
என் கண்ணோடு அவர் கண்ணை உரசி, சிவப்பு விளக்கெல்லாம் அடித்துப் பார்த்து, டாக்டர் என் கண்ணைப் பரிசோதனை செய்தார்.
"தம்பிக்கி இடது கண்ணுல, இமைகள் சேர்ற எடத்துல, மூக்குக்குப் பக்கத்துல ஒரு சின்ன கொப்பளம் இருக்குது தாத்தா"
இரத்ததானம் செய்யப் போனவனுக்கு, எயிட்ஸ்ன்னு சொன்னமாதிரி இருந்தது.
"அந்தோனியாரே!!!"
"அதனால ஒரு ஆபத்தும் கெடையாது. வயித்துல இருக்குற கொடல்வால் மாதிரி. ஒரு உபயோகமும் கெடையாது. ஆனால் கொடல்வால் வளந்தா தொல்லை. இது வளந்தாலும் தொல்லை கெடையாது"
"பூண்டி மாதாவுக்குக் கண்ணடக்கம் செஞ்சு வெக்கிறதா வேண்டிக்கணும்"
"தம்பி, வேணாமுன்னு நெனச்சா எனக்கிட்ட வா. இத வெட்டி விட்டுடுறேன். ஒரு நாள் கட்டுப்போட்டு, பிரிச்சுட்டா சரியாயிடும்"
டாக்டரின் இவ்வார்த்தைகள், பீரில் போடப்பட்ட ஐஸ்கட்டி போல, என் சிந்தனையில் மிதக்க ஆரம்பித்தன.

கண்ணற்ற வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை மூங்கில் வேகத்தில் என்னுள் வளர்ந்தது. நான்கு வருடங்கள் கழித்து, 500 ரூபாய் பணத்துடன், அதே டாக்டரிடம் போனேன். என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. கண்ணைப் பரிசோதித்துவிட்டு டாக்டர் என்னை ஆச்சரியமாகப் பார்த்தார்.
"நீ.... அந்த Cyclopent தாத்தாவோட ஒருநாள் இங்க வந்திருந்தேல்ல?"
எனக்குப் புரியவில்லை. அவரே தொடர்ந்தார்.
"மருந்துகளோட பழகிப் பழகி மனுஷங்க பேரெல்லாம் மறந்து போச்சு. அந்த..... பூழக்கண்ணு தாத்தா...."
"ஆமா சார். நான் அவன் தான்"
"அவரு எப்புடி இருக்காரு"
"அவரு பூமியில இல்ல சார்"
கொஞ்சம் அமைதி.
"என்ன எப்புடி சார், இத்தன நாள் ஞாபகம் வெசு இருக்கீங்க?"
"Cyclopent மருந்த இதுவரைக்கும் ஏன் சர்வீஸ்ல, ஒருத்தருக்கு மட்டும்தான் எழுதியிருக்கேன். அதனால் அந்த தாத்தாவ மறக்க முடியாது. நீ உள்ள வர்றப்ப, கட்டுப் போட்டுக்கிட்டு ஒருத்தர் வெளிய போனாரே, பாம்படிக்கப் போயி, பாம்பு வாயில இருந்த எச்சம் கண்ணூல விழுந்துருச்சு. அதேமாதிரிதான் நீயும். வித்தியாசமான் கேஸெல்லாம், கண்டிப்பா ஞாபகத்துல இருக்கும்"
எஸ்.ராமகிருஷ்ணனின் "எதையும் ஞாபகப்படுத்தாத முகம், எளிதில் மறந்துபோகும்" என்ற வரிகள் சட்டென ஞாபகத்தில் வந்துபோயின.

ஒரு நர்ஸ், என்னைக் கூட்டிக்கொண்டுபோய், ஒரு கட்டிலில் படுக்க வைத்தாள். கொப்புளம் பார்த்துவிட்டு, என்னை மிகவும் பரிதாபமாகப் பார்த்தாள். எனக்கு ஏதோ அவரசரப்பட்டு தவறான முடிவு எடுத்துவிட்டதுபோல் தோன்றியது. அவள் வெளியேபோய், இன்னும் மூன்று நர்ஸ்களைக் கூட்டுவந்து காட்டினாள். எனது சங்கட்டம் இன்னும் அதிகமாகியது. வெட்டுவதற்கு டாக்டர் சொன்ன நேரம் நெருங்கிவிட்டது.
ஒரு நர்ஸ் என்நெற்றியில் கைவைத்து, தலையை இருக்கிப் பிடித்துக் கொண்டாள். இன்னொருத்தி காலை. இன்னொருத்தி நெஞ்சை. ஒருத்தி ஒரு கண்மருந்துடன் வந்து, ஒரு சொட்டு என் இடக்கண்ணில் விட்டாள். இப்படி ஒரு எரிச்சல் உணர்ச்சியை, அதுவும் கண் போன்ற ஒரு மிருதுவான இடத்தில் உணர்ந்ததே இல்லை. துடிதுடித்துப் போனேன். சில சொட்டுகள் விட்டபிறகு, சொட்டுகள் கண்ணை நோக்கி வருவதை மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. கண்ணைத் தொடுவதை உணரமுடியவில்லை.

டாக்டர் வந்தார். டெட்டால் சோப், கையுறை போன்ற சம்பிரதாயங்களைச் செய்தார். மயிர் கத்தரிப்போன் முன்னிலையில் ஆடு போல, பார்த்துக் கொண்டு இருந்தேன்.
"இப்புடியே இருந்துட்டுப் போகட்டுன்னா, தம்பி, 750 ரூபா செலவுபண்ணி.... கேக்கமாட்டிகிறாரு. லவ் பண்றாரு போல"
என்னைக் கூட்டி வந்த நர்ஸ், சட்டென திருப்பி என்னைப் பார்த்தாள். நான் இல்லையென சைகை செய்தேன். ஒரே ஒரு துளை மட்டும் இருந்த கருப்புத் துணியை என் முகத்தில் போர்த்தினார்கள். அவர் பங்குக்கு டாக்டர் ஐந்து சொட்டு கண்ணில் விட்டார். இப்போது அவள் மட்டும் என் தலைக் கெட்டியாகப் பிடித்து இருந்தாள்.

ஒரு வித்தியாசமான ஆயுதம் என் கண்ணருகில் வந்து, கொப்பளத்தைப் பிடுங்கிப் போனது. வெளிவந்த ரத்தம், கண்ணை மூடியது. ச் ச் ச் ச் ச் சார் சார் என்ற சத்தங்கள் கேட்டன. சில நேரம் எனது ரத்தமே எனக்காக, கண்ணீர் சுரப்பியின் வேலை பார்த்தது. கண்ணீர் சுரப்பி கண்ணீர்விட்டதை, தொண்டையின் ஆழத்தில் உணரமுடிந்தது. ஒரு மெழுகுவர்த்தியில் சூடேற்றப்பட்ட, ஒரு கம்பியால், காயத்தில் சூடுபோடப்பட்டது. கண்ணில் உணர்ச்சியே இல்லை. இப்போதுதான், நான் இவ்வளவுகாலம் எதிர்பாத்தது நடந்தது. ஒரு கண்ணைச் சுற்றி, டாக்டர் கட்டுப் போட்டார்.
"இந்தாப்பா, ஒன்னோட கண்வால்"
உள்ளங்கையில் ஒழித்துக் கொண்டேன்.
"இதவெச்சு என்ன செய்யப் போறீங்க?"
பதிலே சொல்லாமல் எழுந்திரித்தேன்.
"நாளைக்கி வந்து கட்ட அவுத்துட்டுப் போங்க"

சூரிய ஒளியை வாங்கிக் கொள்ள, பாவம், எனது வலது கண் மட்டும், இது கண்ணின் துணை இல்லாமல் கஷ்டப்பட்டது. சட்டென நிழல் நோக்கி, பார்வை திருப்பினேன். வாசல்படியில் அவள் நின்றுகொண்டு இருந்தாள். திரும்பி நடக்க ஆரம்பித்தேன். ரோட்டில் நின்ற காரில் இடதுகால் முட்டியது. ரோட்டைக் கிராஸ் பண்ண, 180 டிகிரி திரும்ப வேண்டி இருந்தது. வலதுகண்ணின் பாவையின் விட்டம், சில மைக்ரோ மீட்டர்கள் அதிகமாயின. தனியே ரோட்டில் நடந்து போகும் என்னை எல்லோரும் வித்தியாசமாய்ப் பார்த்தார்கள். ஒரு குழந்தை என்னைப் பார்த்து அழுதது. எதைப்பற்றியும் நான் கவலைப்படவில்லை. ஏனெனில், நான் புரிந்துகொள்ள நினைத்தவை எல்லாம், அளவுக்கு அதிகமாய்ப் புரிந்து போயின.

நான் எதிர்பார்க்காத ஒன்றையும் என்னால் உணரமுடிந்தது. தனியாகப் போராடும் வலது கண்ணின் அசைவுகளுக்கு ஈடாக, கட்டுகளுக்கு உள்ளே இருந்துகொண்டு, ஆடி ஓடிக்கொண்டு இருக்கும் இடது கண்ணின் அசைவுகள். காட்சிக்கு வராமல், எந்த உபயோகமும் இல்லாமல் வெட்டியாக அசையும் இடது கண்ணால் என்ன பயன்? கட்டின் கட்டுமானம் புரியாத யாருக்கும், இடது கண்ணின் உன்னதம் புரியப் போவதில்லை, சேகர் எழுதிய இந்தக் கதையைப் போலவே!

-ஞானசேகர்

1 comment:

LondonKaran said...

Sekar,
Amazing blog.,First time am reading your blog. i was stunned by the depth of the subjects which you were talking about. I had many important works today - but still i couldn't stop reading this blog in middle. Probably i'd read all your posts. Your name realy suits what you're doing.. please keep up this good work -