புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Tuesday, November 01, 2016

அணுகவும் ஆதிக்கசாதி

இலையுதிர்க் காலக் காற்று
லிமோசின் புகை
தோல் இருக்கைகள்
புல்வெளி
துப்பாக்கித் தூள்
ஜாக்குலினின் வாசனைத் திரவியம்
கென்னடியின் இரத்தம்
இவை எல்லாம் சேர்ந்தது தான்
ஜான் கென்னடியின் மரண வாசனை

இப்படித்தான் சில பிரபல மரணங்களின் வாசனையை
உண்டாக்கிக் காட்டுகிறார்கள் டச்சு விஞ்ஞானிகள்
குளியல் தொட்டியில் கொக்கைன் நெடியுடன் ஒரு பாடகி
இளவரசி டயானா
முகமது கடாபி
இன்னும் சிலரின் மரண வாசனையும் கூட

மரணத்தின் மணத்தை மீளுரு செய்யும் விஞ்ஞானம்
மரணத்தையே மீளுரு செய்பவர்கள் நாங்கள்.

- ஞானசேகர்

Thursday, October 27, 2016

108

பெல்லட் குண்டு
கண்ணீர்ப் புகை
108வது நாளாகக் கஷ்மீர் பதற்றம்
செய்தி வந்த அதே நாளில்தான்
எங்கள் தாய்த் தமிழ்நாட்டில்
108 மொட்டைகள்
108 தேங்காய்கள்
108 அலகுகள்
108 பால்குடங்கள்
108 யாகங்கள்.

- ஞானசேகர்

Sunday, October 23, 2016

தேர்தல் அறிக்கைகள்

...a cow on the balcony of the nation, what a shitty country...
- Autumn of the Patriarch புதினத்திலிருந்து

('நாடு சும்மா கெடந்தாலும் கெடக்கும் - இந்த
நாகரீகம் ஓடி வந்து கெடுக்கும்'
என்றொரு பிரபலமான நாட்டுப்புறப் பாடல் உண்டு. பரவை முனியம்மா அப்பாடலைப் பாடிய காணொளியை இங்கு காணலாம். அப்பாடலின் மெட்டில் இதைப் படிக்கவும்)

நாடு சும்மா கெடந்தாலும் கெடக்கும் - இந்த
தேர்தலுங்க தேடி வந்து கெடுக்கும்

கருப்பு பணம் மீட்டு வந்து சரிசமமாப் பங்கு போட்டு
பத்து லட்சம் தருவோனாங்க‌ அப்போ - இப்போ
ஸ்வச்சு பாரத் ரெண்டு ரூபா கிஷான் விஹாஸ் ரெண்டு ரூவா
கரிசனமாப் புடுங்குறாங்க‌ இப்போ

மத்தியில எங்க ஆட்சி மாநிலங்கள் ரொம்ப ஹேப்பி
செப்புனாங்க சென்ட்ரலில அப்போ - இப்போ
அருணாச்சலு ரெண்டுதரம் உத்தரகாண்ட் ஒருதரம்
அடுத்தடுத்து கவுருதுங்கோ இப்போ

உள்ளங்கையில் நெல்லிக்கனி மக்களாட்சி வெற்றிக்கனி
பொற்கால‌ ஆட்சின்னாங்க அப்போ - இப்போ
தோத்தவங்க கவர்னராக கேபினட்டு அமைச்சராகச்
சைரன் வெச்ச‌ காருலதான் இப்போ

எடத்துக்கு ஏத்தமாரி பழக்கத்துக்குத் தக்கமாரி
பயிர் வகைகள் செய்வோம்னாங்க‌ அப்போ - இப்போ
மாட்டுக்கறி தின்பவன‌ அடிமாட்டுக் கொடுமையாக
மாட்டிவிட்டு உறிக்குறாங்க இப்போ

பாரம்பரியத் தொழில்கள் எல்லாம் பத்திரமாப் புதுசுபண்ணிப்
பாரறியப் பாப்போம்னாங்க‌ அப்போ - இப்போ
பிரதமரு பேருபோட்ட கோட்டு மட்டும் எட்டு இலட்சம்
எட்ட நின்னு கேட்டுக்கங்க இப்போ

எங்களுக்கு எதிர்காலம் கொடுத்துப் பாரு ஊழல் எல்லாம்
இறந்த காலம் ஆகும்னாங்க அப்போ - இப்போ
லலித் மோடி அடிச்சாரு விஜய் மல்லையா பறந்தாரு
அடுத்து யாருன்னு காத்துருக்கோம் இப்போ

சுத்திகரிப்போம் நதிகள் என்று காட்டுனாங்க‌ ஆராத்தி
கங்கையில சுத்திச் சுத்தி அப்போ - இப்போ
தபால் தரும் புனித நீரு; நதியை எல்லாம் புள்ளையாரு
கழுத்த நெருச்சிக் கொல்லுறாரு இப்போ

மேமாசம் வெயிலக்கூட புறங்கையால் வெரட்டிப்புட்டு
போட்டு வந்தோம் ஒத்த ஓட்ட அப்போ - இப்போ
மேதினமும் நேரமில்ல‌, கிறிசுமஸ்சு லீவு இல்ல
ஆயுத பூஜை யோகா தினம் டாப்புதான்க இப்போ

கடனெல்லாம் தள்ளுபடி நூறு ரூவா இந்தாப் புடி
காலில்கூட விழுந்தாங்கோ அப்போ - இப்போ
விவசாயி தற்கொலையில் மாண்டுபோனா ஆறு இலட்சம்
ஊக்கத்தொகை உயர்த்தியாச்சு இப்போ

நல்ல காலம் அர்த்தமுங்க அச்சா தின்னு நிச்சயங்க‌
அச்சு அச்சா அளந்தாங்க‌ அப்போ - இப்போ
இந்தியாவிலே இருக்கலையே; காவிரிக்கும் வழியில்லையே
நாங்க இந்திமொழி படிக்கணுமாம் இப்போ

நாடு சும்மா கெடந்தாலும் கெடக்கும் - இந்த
தேர்தலுங்க தேடி வந்து கெடுக்கும்

- ஞானசேகர்

Wednesday, October 19, 2016

தூய்மை இந்தியா

எச்சில் கையால் குழாய் திருகி
எச்சில் கைகழுவி
அதே கையால் குழாய் மூடுதற்குச்
சுத்தம் என்று பெயர்.

- ஞானசேகர்

Tuesday, October 11, 2016

நடை

குரங்கில் இருந்து மனிதனாக பரிணமிக்க முயன்ற முன்னோர்கள் முதலில் காட்டிய வேறுபாடு, நிமிர்ந்து நடக்க ஆரம்பித்ததாகத் தான் இருக்கும். இந்தியா சீனா தென்னமெரிக்க நாடுகளின் விடுதலைப் புரட்சிப் போராட்டங்களில் மக்களைத் திரட்டியதில் பெரும்பங்கு இந்தப் பொடிநடைக்கு உண்டு. இயேசு காலம் முதல் கிறித்தவம் என்ற மதமே நடை மூலம் தான் பிரம்மாண்டமாகப் பரவியது. இன்று தொழில்நுட்ப வளர்ச்சியில் அதிகம் நடக்கத் தேவையில்லை. விரல்நுனியில் சீண்டினால் நொடிக் கணக்கில் காலருகில் கார் வந்து நிற்கும். ஆனால் நல்ல கால்களில் நடக்க மறுப்பவனுக்கு உலகம் தன் அந்தரங்கங்களைத் திறந்து காட்டுவதில்லை என்பது ஊர் சுற்றும் தேசாந்திரிகளுக்குத் தெரியும். நடந்து வருபவனுக்கு மட்டுமே மணல் அலை காற்று சத்தம் தனிமை வெறுமை பயம் எனப் பலவற்றையும் தூவிக்காட்டும் தனுஷ்கோடி கடலைச் சிறந்த உதாரணமாகச் சொல்வேன். பேருந்தின் கடைசி நிறுத்தத்தில் இருந்து இந்திய எல்லை முனை வரை நீண்டு கிடக்கும் அக்கடற்கரைத் துண்டை என் சிறுகதை ஒன்றிக்குக் களமாகக் கூட பயன்படுத்தி இருக்கிறேன்.

காசி நகரம் இன்னொரு உதாரணம். நடக்க முடிந்தும் நடக்காத கால்கள் காசியை முழுமையாகக் காண்பதில்லை. காசியில் கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் நடந்தே திரிந்திருக்கிறேன். பிணம் எரிக்கும் இடத்தில் தற்செயலாக முட்டி நின்ற எனக்கு, அன்று ஏதாவது சாப்பிட்டேனா என்று இன்றுவரை நினைவில்லை. நகரங்களை நடந்து காண்பதுதான் சிறப்பு என்றாலும், காசி போல எல்லா நகரங்களும் அப்படி அமைந்து விடுவதில்லை. கவிஞர் மனுஷ்யபுத்திரன் சொல்வது போல், கண்காணிப்பின் காலம் நமது. எங்கும் எப்போதும் நம்மை எதாவதொரு கேமிராவின் கண் கண்காணித்துக் கொண்டே இருக்கும். அது பெரும்பாலும் குற்றவாளிகளை விட்டுவிட்டு, சந்தேகத்தின் பேரில் வெறுமனே திரிபவர்களைத் தான் கட்டி வைத்து கேள்வி கேட்கிறது. திருநெல்வேலியில், புதுக்கோட்டையில், மகாத்மா காந்தி பிறந்த வீடிருக்கும் தெருவில் எனக்கு அந்த அனுபவம் உண்டு. காசி போல இன்னொரு நகரில் நான் சந்து பொந்தெல்லாம் நடந்த இன்னொரு சுதந்திரக்  கதைதான் இப்பதிவு.

இவ்வருட ஜீன் மாதத்தில் இருந்து மாதத்திற்கு ஒரு மாநிலம் என கணக்கு வைத்து ஊர் சுற்றி வருகிறேன். ஜீன் தெலங்கானா. ஜீலை ஆந்திரா. ஆகஸ்டில் வீட்டிற்கு ஒரு வாரம் விடுமுறைக்கு வந்ததால் தமிழ்நாட்டுக் கணக்கு. செப்டம்பர் மஹாராஷ்ட்ரா. அக்டோபர் குஜராத். நவம்பரில் விடுப்பு கிடைக்காததால் பீகார் திட்டம் இல்லை. டிசம்பரில் போய் வந்து சொல்கிறேன். அக்டோபர் இரண்டாம் தேதி அன்று காந்தி பிறந்த வீட்டில் இருக்க வேண்டும் என்று குறி வைத்து திட்டம் தீட்டினால், தூரம் காரணமாக‌ எனது சில கொள்கைகளை மீற வேண்டி இருந்தது. முதல் மீறல் விமானப் பயணம். எங்கும் இரவில் தங்கக் கூடாது என்ற கொள்கையையும் இரண்டாவது முறையாக மீறினேன். மூன்று நாட்கள் குஜராத்தில் என்பது முடிவாகிவிட்டது. ஒரே மாநிலத்தில் இத்தனை நாட்கள் என்பதும் இதுதான் முதல்முறை. குஜராத் எனக்கு இதுதான் முதல்முறை. அக்டோபர் 2ல் போர்பந்தர் போனதும், அங்கிருந்து கடற்கரை ஓரமாகப் பேருந்தில் துவாரகா போனதும், திரும்பி போர்பந்தர் வந்ததும் இப்பதிவின் கருவிற்குத் தேவையற்ற தகவல்கள். அக்டோபர் 1 மற்றும் 3ல் அகமதாபாத் நகரில் இருந்தபோது நான் நடந்த கதை சொல்கிறேன்.

Heritage Walk. பாரம்பரிய நடை. இப்பெயரில் அகமதாபாத் மாநகராட்சியும் சில தன்னார்வலர்களும் தினமும் நடந்தே அந்நகரின் பாரம்பரியமிக்க வீதிகளைச் சுற்றிக் காட்டுகிறார்கள். கிட்டத்தட்ட 2 கிமீ நடை. காலை 8 மணி முதல் 10.30 வரை. ஐம்பது ரூபாய் தான் வாங்குகிறார்கள்! ஆங்கிலத்தில் தான் விளக்குகிறார்கள்! இப்படி ஒன்று இருப்பதும், அவர்கள் நடையினூடே சொல்லும் தகவல்களும் இணையத்தில் காணக் கிடைப்பது அரிது. எனக்கே பயணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் தான் தெரிய வந்தது. பசுமை நடை என்ற பெயரில் இதே போல் மதுரையைச் சுற்றியுள்ள சமணர்களின் இடங்களை எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் நடந்து வருவது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும்.

அகமதாபாத் இரயில் நிலையத்தின் வாசலில் இருந்து நீளும் சாலையில், சுவாமி நாராயணன் கோவில் என்று கேட்டால், சின்னப்பிள்ளை கூட வழி காட்டும். காந்தியால் விமர்சிக்கப்பட்ட சுவாமி நாராயணன் என்ற இந்துமதப் பிரிவொன்றின் முதல் கோவில் அது. முழுதும் மரத்தால் கட்டப்பட்டது. அக்கோவில் வளாகத்தில் இருக்கிறது, இந்தப் பாரம்பரிய நடை அலுவலகம். ஒரு சிறிய முன்னுரை விளக்கத்திற்குப் பின் நடைபயணம் ஆரம்பிக்கிறது. ஓர் இந்துக் கோவிலில் ஆரம்பித்து ஓர் இஸ்லாமிய மசூதியில் முடிக்கிறார்கள். தொடர்புக்கு 9327021686.

பாரம்பரிய நடை நடக்கும் பழைய அகமதாபாத் நகரில் பெரும்பாலும் வெள்ளப் பெருக்குக் காலத்தில் சேதம் அதிகம் இருக்காதாம். 2001 குடியரசு தினத்தன்று குஜராத்தைத் தாக்கிய பூகம்பம் அகமதாபாத்திலும் உணரப்பட்டாலும், பழைய அகமதாபாத்தில் அதிக சேதம் இல்லையாம். இப்படி பல தகவல்கள். அந்நடையில் நான் எடுத்த ஒவ்வொரு புகைப்படத்திற்குப் பின்னும் கிட்டத்தட்ட ஒரு கதையுண்டு. என் செருப்பைக் கூட புகைப்படம் எடுத்திருக்கிறேன்.
அந்த ஊர் மகாகவி. அந்த இன்னொரு காலணியில் குழந்தைகள் கால் விட்டு விளையாடுவார்களாம். பெண்கள் காய்கறிகளை அவர் மடியில் வைப்பார்களாம். மக்கள் கவிஞர்!
Bird feeders. பறவைகளுக்கு உணவளிக்கும் கூண்டு
கருந்தோலில் இராமர்
இத்திசைகாட்டி எதற்கென்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்
பிரிட்டிஷ் மொகலாயர் மராட்டியர் பெர்சியர் என நான்கு வகைக் கட்டிடங்கள் ஒரே இடத்தில்
சுவர்களில் கிளிகளுக்குக் கூடு
அகமதாபாத்தின் முதல் பாலம்
ஊர் திரும்பும் போது அகமதாபாத் விமான நிலையத்தில் என் பையை எக்ஸ் கதிர் சோதனைக்கு உட்படுத்திய போது, எதையோ கண்ட காவலர் எல்லாப் பொருட்களையும் வெளியே எடுத்துக் காட்டச் சொன்னார். திருவாசகம் போர்வை துண்டு டார்ச் கேமரா உள்ளாடை காந்தமானி, கடைசியாக அடியில் ஒரு சின்னப் பெட்டி. அப்பெட்டியைத் திறந்து காட்டச் சொன்னார். திறந்து காட்டினேன். 'சுதந்திரம் காணும் வரை காண்கிலேன்' என சபதமிட்டு வெளியேறி உப்புச் சத்தியாகிரகத்திற்குப் பொடிநடையாய்ப் போன, சபர்மதி ஆசிரமத்தில் 120 ரூபாய்க்கு வாங்கிய காந்தியின் கைராட்டையின் சின்ன மாதிரி அது. செத்த‌ பின்னும் சத்திய சோதனையுடன் இப்படித்தான் முடிந்தது எனது குஜராத் பயணம்.

மேலும் குஜராத் புகைப்படங்களுக்கு,
பாரம்பரிய நடை
தாதா ஹரிர் படிக்கிணறு
சபர்மதி ஆசிரமம்
காந்தி பிறந்த வீடு
துவாரகா
அடாலஜ் படிக்கிணறு

இன்னும் நடப்போம்.

- ஞானசேகர்

Sunday, September 25, 2016

தண்ணி காட்டும் தலைநகரங்கள்

என்ன? தலைநகரம் தானேன்னு இவ்வளவு சாதாரணமா சொல்லிட்டீங்க! ஒரு தலைநகருக்காக தெலுங்கு பேசுற ஒரு மாநிலமே ஒரு பெரிய சண்டை போட்டு, அத்தலைநகரை மறந்து இன்னொரு தலைநகர் கிடைத்து, அதிலேயும் அதிகாரச் சண்டை வலுத்து, அப்பறம் இன்னொரு தலைநகருக்கு மாறி, அதையும் பங்கு பிரிக்கப் பெருஞ்சண்டை வந்து, இன்னிக்குத் தெலுங்கு மக்களே ரெண்டு மாநிலமா ஒடைஞ்சதா இல்லியா? எங்கேயும் எப்போதும் தலைநகரம் தலைநகரம் தான். தலைநகருக்கென்று ஒரு தனிமொழி. மொத்த மாநிலமும் 16 மணி நேரம் இருட்டில் கிடந்தாலும், தலைநகரத்திற்கு மின்வெட்டே கிடையாது. ஓடும் இரயில்களை நிறுத்தி ஒரு மாவட்டமே கழிவறைகளில் தண்ணீர் பிடித்தாலும் கூட, தலைநகர‌த்திற்குப் பக்கத்து மாவட்டத்து ஏரியில் இருந்தோ, பக்கத்து மாநிலத்து ஆற்றில் இருந்தோ தண்ணீர் டான்டான் என வந்துவிடும். மஹாராஷ்ட்ரா மாநிலத்திற்குத் தன் கடும் எதிர்ப்பைக் காட்ட தலைநகரையே ஒருநாள் பெல்காம் நகரத்திற்குக் கர்நாடகா மாற்றிக் காட்டியது. வெள்ளைக்காரன் மட்டும் அன்று கல்கத்தாவில் இருந்து டெல்லிக்குத் தலைநகரை மாற்றாவிட்டால், இன்று பெங்காலி தேசிய மொழியாகி இருக்கும். பெங்காலியைச் சமஸ்கிருத வரலாற்றுடன் இணைத்து, அதன் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கி, அதை எல்லாக் குடிமக்கள் மீதும் திணித்து, அதைப் பேசாதவனைக் கிண்டல் செய்து ஒரு கூட்டம் இன்று திரியும். 'ஏக் காவ் மே ஏக் கிஷான் ரகு தாத்தா' விற்குப் பதிலாக 'அம்மி தும்மி பலாப்பஜ்ஜி' கற்றுக் கொண்டிருப்போம்.

கூடங்குளக் கரையிலும், நர்மதாக் கரைகளிலும் மக்கள் நீரில் மூழ்கிப் போராடுவது எத்தனை பேருக்குத் தெரியும்? ஹரியானாவில் ஒரு போராட்டம் என்றால் டெல்லிக்குத் தண்ணீர் கொண்டு போகும் கால்வாய்களை அடைத்து கவனம் ஈர்க்கிறார்கள். தானே புயலுக்கு விடை தெரியாமல் தவித்த கடலூரைப் பெருமழை மீண்டும் தத்தளிக்க வைத்த‌ போதும், சென்னையின் நிலைமைதான் உலகிற்குப் பெரிதாகத் தெரிந்தது. தண்ணீரைக் காசிற்கு வாங்கியாவது சிங்கப்பூர் என்கிற சிங்கம் சிங்கிளா நிக்கிதா இல்லியா! தண்ணீரால் பிளவுபட்டுக் கிடக்கும் இஸ்தான்புல் தான் துருக்கியின் தலைநகரம் என்று இன்றும் நம்பிக் கொண்டிருப்பவர்கள் பலர். தண்ணீரே இல்லாத ஜெருசலேமைத் தலைநகராக்கிப் பார்க்கத் தான் உலகம் முழுவதும் எத்தனை போர்கள்! பாகிஸ்தான் தலைநகரம் தண்ணீர்க் கரையில் இருக்கும் கராச்சியில் இருந்து இஸ்லாமபாத்திற்கு மாறியது. எம்ஜியாரே திருச்சிக்குத் தலைநகரை மாற்ற முயற்சி செய்தாராம். இப்படி எத்தனை கதைகள் உலகம் முழுதும்! அதனால், தலைநகரம் தானே என்று சாதாரணமாகச் சொல்லாதீர்கள். கூடங்குள‌ங்களைப் பணயம் வைத்தாவது தலைநகரங்கள் தங்குதடையின்றி பயணிப்பதுதான் வரலாறு. பலர் கண்ணில் பட்டும், வரலாறு தெரியாமல் தவிர்க்கப்படும் இரண்டு தலைநகரங்களைத் தேடிய எனது பயணத்தை இப்பதிவில் பகிர்கிறேன்.

திருப்பதி இரயில் நிலையத்தை அதிகாலையிலேயே அடைந்து விட்டேன். நான் செல்ல வேண்டிய இடத்திற்குப் பத்து மணிக்கு மேல் போனால் போதும் என்பதால், அவ்வூரில் மலையில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குப் பேருந்து ஏறினேன். எங்கு தேடினாலும் லட்டு கிடைக்கவில்லை. கோவிலுக்குப் போய் சாமி தரிசனம் செய்தால் மட்டும், வெளிவரும் போது லட்டு தருவார்கள் என கண்டுபிடித்தேன். கடன்பட்டு சாமி கிடப்பதாகச் சொல்லி, சில பரம்பரைப் பணக்காரர்களைக் காலங்காலமாக உண்டாக்கிக் கொண்டிருக்கும் சாமியின் வரிசையில் நின்று கிடைக்கும் லட்டு தேவையில்லை என்று திரும்பினேன். பழநி திருச்செந்தூர் பூரி என்று தலைவாசல் மிதிக்காமல் நான் திரும்பிய கோவில்கள் பட்டியலில் இப்படித்தான் சமீபத்தில் திருப்பதியும் சேர்ந்தது. மலையை விட்டு கீழிறங்கும் பேருந்து கிளம்பும்போது, ஒரு சகபயணி கத்தினார்: 'கோவிந்தா கோவிந்தா'.

நான் செல்ல வேண்டிய இடம், சந்திரகிரி. திருப்பதியில் இருந்து சித்தூர் செல்லும் வழியில் பத்து கிலோ மீட்டரில் இருக்கிறது. ஆட்டோவில் சென்றேன். போகும் வழியில், பெருமாள் சாமிக்குத் திருமணம் நடந்த இடம் என்று ஒரு கோவிலைக் காட்டி, உள்ளே போய் தரிசனம் செய்துவிட்டு வரச் சொன்னார் ஓட்டுநர். தலையை எண்ண வந்த இடத்தில் இலை எடுக்கும் வேலை எதற்கு? அன்றைய நாள் ஏதோ மிகப் பெரிய நல்ல நாள் எனவும், கூட்டம் இன்னும் இல்லாததால், நான் மிகவும் அதிர்ஷ்டசாலி எனவும் சொன்னார். எனது திருமணமே பெரும் கேள்விக்குறி! இதில் பகவானின் திருமணம் ஓர் ஆச்சரியக்குறியா? எங்கும் நில்லாமல் ஆட்டோ சந்திரிகிரியில் முற்றுப்புள்ளி. ஊரின் முக்கிய சாலையில் இருந்து, முட்புதர்களுக்குள் செல்லும் ஒரு குறுகிய பாதையைக் கடந்தால், வந்தது நான் காண வந்த கோட்டை. பெருமாளைப் பார்க்க வருபவர்களில் இலட்சத்தில் ஒருவர் இங்கு வந்தாலே ஆச்சரியம். சந்திரகிரி கோட்டை! உடைந்து சிதறிய விஜயநகரப் பேரரசின் கடைசித் துண்டு. அவர்களின் கடைசி தலைநகரம். இக்கோட்டையில் தான் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைநகரமாக ஆகப்போகும் சென்னைக்கான நிலம், மெட்ராஸ் என்ற கிராமத்தில் புனித ஜார்ஜ் கோட்டை கட்டுவதற்காக 1639ல் ஆங்கிலேயர்களுக்காக விற்கப்பட்டது. குறிப்பாக அந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணம், தண்ணீர். சுற்றி வங்கக்கடலாலும், கூவம் ஆற்றாலும் இயற்கையாகவே அமைந்த அரண்.

இந்நாள் வரையான எனது தனியான பயணங்களில் ஒரெயொரு ஊரில் மட்டும் தான் நான் தங்கி இருக்கிறேன். மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் அது. அஜந்தா மற்றும் எல்லோரா குகைகளுக்கு மட்டும் தனித்தனியே ஒருநாள் தேவை. அவுரங்காபாத் நகருக்குள் மற்றும் புறநகரில் மட்டும் சுற்றிப் பார்க்க ஒருநாள் தேவை. முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் கல்லறை, தாஜ்மகால் போலவே கட்டப்பட்ட அவரின் மனைவியின் கல்லறை என்ற நிறைய வரலாற்றுச் சின்னங்கள் உண்டு. எல்லோரா போகும் வழியில் மலையுச்சியில் இருக்கிறது இன்னொரு கோட்டை. தவுலதாபாத் கோட்டை. அச்சுறுத்தும் உயரத்தால் பலர் ஏறாமலே திரும்பிப் போவதுண்டு. 250 ரூபாய்க்கு அவுரங்காபாத் சுற்றுலாத் தளங்களை ஒரே நாளில் சுற்றிக் காட்டும் அரசுப் பேருந்து கூட அதற்கு வேண்டிய அளவு நேரம் ஒதுக்குவதில்லை. சாலை ஓரத்திலேயே வாசல் இருந்தாலும், பேருந்து நிறுத்தமே அருகில் கிடையாது. அவுரங்காபாத்தைச் சுற்றி இருக்கும் பல சுற்றுலாத் தளங்களால், இதன் பிரம்மாண்ட உயரத்தால் அதிகம் கவனிக்கப்படாமல் போகிறது. சமீபத்தில் தெலுங்கிலும் தமிழிலும் வந்த ருத்ரமாதேவி திரைப்படத்தில் இக்கோட்டையை நீங்கள் பார்க்கலாம். அப்படி என்ன முக்கியத்துவம் இக்கோட்டையில்? அதை அறிய இன்னொரு திரைப்படத்துடன் சொல்கிறேன்.

முகமது பின் துக்ளக். ஏதோ இந்தியா வரலாறு முழுவதும் சாலமோன் போன்ற புத்திசாலிகளால் ஆளப்படுவது போல, ஏன் முகமது பின் துக்ளக்கை மட்டும் ஒரு முட்டாள் ஆட்சியாளனாக வரலாறு சித்தரிக்கிறது என்று தெரியவில்லை. அவர் மேல் முட்டாள்தனம் என சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் மூன்று. ஒன்று அதிக வரி. வரிக்கு விளக்கம், நான் வரிவரியாய் எழுதத் தேவையில்லை. இரண்டு தோல் நாணயம். சில வருடங்களுக்கு முன், தேநீர் குடிக்க கண்ணாடி மற்றும் காகிதத்திற்கு மாற்றாக மண்சட்டியை இரயில்வேயில் அறிமுகப்படுத்தினார்களே! மூன்றாவது தலைநகரை டெல்லியில் இருந்து தேவகிரிக்கு மாற்றி, உடனே மீண்டும் தேவகிரியில் இருந்து டெல்லிக்கு மாற்றியது. தலைநகரை மாற்றி தோல்வி அடைந்தவர்கள் வரலாற்றில் ஏராளம். ஆக்ரா, பதேபூர் சிக்ரி, இலாகூர் என்று தலைநகரங்களை மாற்றிய  பேரரசர் அக்பரும் கூட விதிவிலக்கல்ல. பாகிஸ்தான் தலைநகரம் கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத் மாறியதற்கும், டெல்லியில் இருந்து தேவகிரிக்கு முகமது பின் துக்ளக் மாற்றியதற்கும் காரணம் ஒன்றுதான். பாதுகாப்பு! பதேபூர் சிக்ரியில் இருந்து இலாகூருக்கு அக்பர் மாறியதற்கும், தேவகிரியில் இருந்து மீண்டும் டெல்லிக்கு முகமது பின் துக்ளக் மாறியதற்கும் காரணம் ஒன்றுதான். தண்ணீர்! அந்தத் தேவகிரிதான் இன்றைய தவுலதாபாத் கோட்டை. ஒரு காலத்தில் இந்தியாவின் தலைநகரம்!

புகைப்படங்களுக்கு இங்கு செல்லவும்:
சந்திரகிரி
தவுலதாபாத்
அவுரங்கசீப் கல்லறை
அவுரங்கசீப் மனைவி கல்லறை
அஜந்தா குகைகள்
எல்லோரா குகைகள்
கைலாசநாதர் கோவில்

- ஞானசேகர்

Thursday, August 25, 2016

இந்தியக் கம்பெனி

சுதந்திர தினங்கள்
சலுகை விலை விளம்பரங்கள்
வேட்டிச் சேலையில் வெள்ளைக்கார மாடல்கள்.

- ஞானசேகர்

Tuesday, August 23, 2016

அரசன்வழி மக்கள்

வென்றவருடன் மேடையில்
விளையாடிக் காட்டுகிறார்
ஒரு முதல்வர்.

துப்பாக்கிச் சுடுதலில்
வெல்ல வேண்டுகிறது
ஒவ்வொரு மாநிலமும்.

- ஞானசேகர்

ஆசிர்வாதக் கூட்டங்கள்

அடிவாரத்தில் தவமிருக்கும்
99 செம்மறிகளைப் பட்டினியிட்டு
ஒற்றையாட்டைத் தோளில் தூக்கி
கொஞ்சிக் குதித்து ஆர்ப்பரித்து
ஒளிவட்டத்துடன் வலம் வருவர்
ஒலிவமலை உச்சியில் இறைவனும்
ஒலிம்பிக் கடைசியில் இந்தியரும்.

- ஞானசேகர்

Sunday, April 17, 2016

பாலித்தீவு - இந்தோனேசியா

இத்தனை நாட்களுக்குள் இத்தனை சின்ன கண்டுபிடிப்புகள், இத்தனை பெரிய கண்டுபிடிப்புகள் என இலக்கு வைத்து தாமஸ் ஆல்வா எடிசனின் சோதனைக் கூடத்தில் வேலை செய்வார்களாம். அதனால் தான் இன்றும் அவர் பெயரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காப்புரிமைகள் இருக்கின்றன. ஏறக்குறைய‌ அதுபோல இலக்குகள் வைத்து பயணிப்பவன் நான். குறிப்பாக முந்தையதை விட ஏதாவது வித்தியாசமாக அடுத்தடுத்த பெரிய பயணங்களை அமைக்கும் பழக்கம் எனக்குண்டு. தென் தமிழ்நாடு, கொங்கன் இரயில்பாதை, ஹம்பி, ஒடிஷா என்று எனது அடுத்தடுத்த பயணங்களில் மொழி உணவு பயண‌நேரம் போன்ற விடயங்களைக் கடினமாக்கிப் பார்த்ததுண்டு. எங்கும் தங்காமல், இரயில்களிலேயே எல்லாம் செய்து, 2014 ஆகஸ்டில் ஒருவாரம் தனியாக இந்தியாவைச் சுற்றி வந்ததுதான் எனது முந்தைய பெரும் பயணம். மொத்தமாக ஏறக்குறைய‌ 6000 ரூபாய் செலவு; அதில் ஏறக்குறைய‌ 3500 ரூபாய் இரயில் கட்டணம். அச்சாதனையை முறியடிக்கும் இன்னொரு பயணத்திட்டம் இந்தியாவிற்குள் வைத்திருக்கிறேன். அதற்குள் ஒரு வெளிநாட்டுப் பயணம் போய் வந்துவிடலாம் என்று பிரதமர் போல் ஆசை வர, நான் தேர்ந்தெடுத்த நாடுகள் எல்லாம், தூரம் பூகம்பம் தீவிரவாதம் உள்நாட்டுக்கலவரம் என ஏதேதோ காரணங்களால் தள்ளிப் போயின. இந்த டிசம்பரில் தான் பாலி போய் வந்த கதையை என் நண்பன் ஒருவன் சொன்னான். பூகம்பம் தீவிரவாதம் தவிர எரிமலை மிரட்டலும் கொண்ட பாலிக்கு இந்த மார்ச்சில் போய் வந்துவிட்டேன்!

பாலி என்றால் இரண்டு விடயங்கள் என் பொது அறிவில் உண்டு. புத்தரின் போதனை மொழி பாலி (Pali). இந்தோனேசியாவில் உள்ள ஒரு தீவு பாலி (Bali). இப்பாலித்தீவு சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம் என்பதே எனக்கு சமீபத்தில் தான் தெரியும். முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு இந்தோனேசியா. பாலியில் பெரும்பாலும் இந்துக்கள். அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலும் ஆஸ்திரேலியர்கள். தமிழ்நாட்டிற்குப் பாண்டிச்சேரி போல், இந்தியாவிற்குக் கோவா போல், ஆஸ்திரேலியர்களுக்குப் பாலி. முஸ்லீம் பெரும்பான்மை நாட்டில் கிறித்தவ பெரும்பான்மை சுற்றுலாப் பயணிகள் வரும் இந்துப் பெரும்பான்மை தீவு! இந்தோனேசியாவின் ருபையா பணமதிப்பு மிகவும் குறைவு. நமது 1 ரூபாய் என்பது  ஏறக்குறைய‌ 200 ருபையா. நம்மூர் 5000 ரூபாய் என்பது 10 இலட்சம் ருபையா.

நிலநடுக்கோட்டிற்கு மிக அருகில் இருப்பதால் எப்போதும் வெயில். பாலியின் தலைநகர் டென்பசார் (Denpasar). எப்போதாவது சீறும் இரண்டு எரிமலைகள். தீவைச் சூழ்ந்திருக்கும் மாசுபடாத கடல். தீவிற்குள் பசுமையாக இருக்கும் இயற்கை. நம்மூரில் எங்கு திரும்பினாலும் டீக்கடைகள் போல், பாலி முழுவதும் கோவில்கள் மற்றும் காட்சியகங்கள். பாலியின் இந்துக் கோவில்கள் பற்றி ஒரு தனிக் கட்டுரையே எழுதலாம். பெரும்பாலும் அக்கோவில்களைக் காணப்போகும் பயணிகள் ஒருவகை; அவர்கள் பெரும்பாலும் பிராமணர்கள். தேனிலவு பயணம் போகும் தம்பதிகள் இன்னொரு வகை. கடல்நீர் சாகச விளையாட்டுகள் செய்யப் போகும் பயணிகள் ஒருவகை. மலையேற்றம் போகும் பயணிகள் இன்னொரு வகை. இவை எதிலும் சேராத வகை எனது பயணம்.

ஈஸ்டர் விடுமுறையைத் தேர்ந்தெடுத்து மார்ச் 25 முதல் 31 வரை பாலி பயணத்திற்கு ஒதுக்கினேன். மார்ச் 25 முன்னிரவில் திருச்சியில் விமானம் ஏறி சிங்கப்பூர் வழியே அன்று மாலை பாலி அடைவது. மார்ச் 26 27 28 29 30 என ஐந்து பகல் இரவுகள் சுற்ற வேண்டியது. மார்ச் 31 காலையில் பாலியில் விமானம் ஏறி சிங்கப்பூர் வழியே அன்று இரவு திருச்சி அடைவது. மார்ச் 31 காலை உணவு இந்தோனேசியாவில், மதிய உணவு சிங்கப்பூரில், இராவுணவு இந்தியாவில். இதுதான் திட்டம். விமான பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்வதற்குச் சில மாதங்களுக்கு முன், பாலிக்கு அருகில் இருக்கும் ஜாவா தீவில் ஓர் எரிமலை சீறி, விமானப் போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்பட்ட செய்தி படித்தேன். பயணச்சீட்டுகள் எடுத்தபின், நான் புறப்படப் போகும் சில நாட்களுக்கு முன் இந்தியப் பெருங்கடலில் இந்தோனேசியாவிற்கு அருகில் பூகம்பம் ஏற்பட்டு சுனாமி எச்சரிக்கை தரப்பட்டது. நான் புறப்பட்ட வாரத்தில், பெல்ஜியத்தில் புருஸ்ஸெல்ஸ் நகரில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட இடங்களில் பாலியும் ஒன்று. நான் அதற்கு முன் சிங்கப்பூரும் போனதில்லை; நிலநடுக்கோட்டைத் தாண்டியதும் இல்லை.

இராமாயண மகாபாரதக் கதைகளை அரங்கேற்றும் பல நடனங்கள் பாலியில் பிரபலம். தினமும் ஒரு நடனம் காணத் திட்டம் வைத்திருந்தேன். 9 திசைக் கோவில்களால் பாலி பாதுகாக்கப் படுவதாக அம்மக்கள் நம்புகிறார்கள். அவைகளை என் பட்டியலில் சேர்த்தேன். இறந்தவர்களின் உடலை அப்படியே ஒரு புனித மரத்தடியில் விட்டு விட்டுச் செல்லும் ஒரு டெர்ர்ர்ரர் கிராமம் உட்பட சில கிராமங்களும் என் பட்டியலில் உண்டு. மற்றும் சில கடற்கரைகளையும் சேர்த்துக் கொண்டேன். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று இப்படி 93 விடயங்கள் 5 நாட்களில் பார்க்க வேண்டுமென‌ தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன். அதில் சில விடயங்கள் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் மட்டும் தான் பார்க்க முடியும். ஒரு திரைப்படம் பார்க்கக் கூட திட்டம் வைத்திருந்தேன். எதிர்பாராத விதமாக என்றாவது எங்காவது திட்டம் செயல்படுத்த முடியவில்லை என்றால், எப்படி மாற்றி அமைப்பது என்ற திட்டமும் என் சமயோசிதப் புத்திக்குள் இருந்தது.

சாலையில் ஆங்காங்கே Sekar என்ற வார்த்தை அடிக்கடி தென்பட்டது. Sekar என்றால் அவர்கள் மொழியில் 'மலர்' என்று கார் ஓட்டுனர் சொன்னார். ஒரு பெண்ணை எதிர்பார்த்து எனக்காகக் காத்திருந்ததாகவும் சிரித்தார்; சிரித்தோம். Shekhar என்று உச்சரிக்கும் என் தேசத்தவர்களையே கண்டு கடுப்பான எனக்கு, அயல் நாட்டவர் என் பெயரைச் சரியாக உச்சரிப்பதில் மகிழ்ச்சி. பாலி போய் இறங்கியவுடன், முதல் வேலையாக மறுநாள் திட்டத்தைக் கார் ஓட்டுனரிடம் சொன்னேன். 93ம் வாய்ப்பில்லை என்று அவரிடம் பேசியதில் இருந்தே தெரிந்துவிட்டது. பாலியின் இயற்கை மற்றும் சாலை அமைப்புகள் அப்படி. 9 திசைக் கோவில்கள் அம்மக்களில் பலருக்குத் தெரியவில்லை என்பதே எனக்குத் தாமதமாகத் தெரிந்தது. வாய் பேச முடியாதவர்கள் அதிகம் பிறப்பதால், தனக்கென ஒரு சைகை மொழியைக் கொண்டிருக்கும் ஒரு விநோதக் கிராமமும் பாலியில் உண்டு. அதுவும் நிறைய பேருக்குத் தெரியாததால் என் பட்டியலில் இருந்து வேண்டா மனதுடன் நீக்க வேண்டியதாயிற்று. டெர்ர்ர்ரர் கிராமத்திற்கு ஓட்டுனரே வர விரும்பாததால், அதையும் நீக்கியாயிற்று. பல கோவில்களையும், சில கிராமங்களையும், சில கடற்கரைகளையும் நீக்கி உடனே ஒரு திட்டம் செய்து, அடுத்த மூன்று நாட்களுக்கான‌ திட்டத்தைச் சொன்னேன். கார் ஓட்டுனர் ஏற்றுக் கொண்டார்.

கோவில்களில் உள்ள கட்டிட அமைப்புகள் எல்லாம் சீனவகை. கோவிலுக்குள் தெய்வச் சிலைகள் இல்லாமல், கோவிலுக்கு வெளியே சிலைகள் வைத்திருக்கிறார்கள். கோவில் வாசலில் கோபுரம் போல் ஓர் அமைப்பு. கங்கை நீர் புனிதத்திற்கு எல்லாம் புனிதம் என நம்புகிறார்கள். கங்கை நீரை இந்தியாவில் இருந்து கொணர்ந்துதான் இன்றும் சில பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள். இந்தியாவில் இருந்து வருபவர்கள் எல்லாம் இந்துக்கள் என நம்புகிறார்கள். பிரம்மா விஷ்ணு சிவன் என்ற மூன்று முக்கிய தெய்வங்கள் இருந்தாலும், கிறித்தவ மதம் போல் மூவொருதேவன் கொள்கை (trinity). அதாவது பாலியில் ஏறக்குறைய‌ உருவ வழிபாடு அற்ற ஒரேகடவுள் கொள்கை கொண்ட இந்துமதம்! மாதவிலக்கான பெண்களுக்குக் கோவிலுக்குள் அனுமதியில்லை. பசு புனிதம். முக்கிய விழாக்களில் பன்றியைப் பலியிட்டு, முழுதாக வேகவைத்து (Babi Guling), பகிர்ந்து உண்கிறார்கள். இராமாயணம் மகாபாரதம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். புத்தமதம் சீனாவில் இருந்து வந்திருக்கிறது. நான்கு சாதிகள் உண்டு. தீண்டாமை இருப்பது போல் தெரிகிறது. சுத்தசைவம் இல்லை என நினைக்கிறேன். இறந்தவர்களை எரிக்கிறார்கள். இத்தகவல்களை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால், கிமு முதலாம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்த இந்துமதம் பாலியில் இருக்கிறது.

9 திசைக் கோவில்களில் மையக் கோவிலுக்குச் சுற்றுலாப் பயணிகள் யாருமே வருவதில்லை என்பதே அங்கு போய்தான் எனக்குத் தெரிந்தது. என் திட்டத்தில் இல்லாத ஒன்றையும் காணும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. பாலியில் மரண இறுதி ஊர்வலங்கள் மிக விமரிசையாகச் செய்யப்படுவதால், மிகப் பிரபலம் என இணையத்தில் படித்திருந்தேன். ஓர் அரசக் குடும்பத்து ஊர்வலத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. Nyepi day என்றழைக்கப்படும் முழு அமைதி நாள், பாலிக்கே உரித்தான கலாச்சாரம். அந்நாள் முழுவதும் யாரும் யாருடனும் பேசுவதில்லை. மொத்தத் தீவும் வேலை செய்வதில்லை. விமான நிலையம் கூட மூடப்படும். மேலும் தகவல்களை இணையத்தில் படித்துப் பாருங்கள். சமீபத்தில் முடிந்து போயிருந்த அந்நாளுக்கான போஸ்டர்களைச் சாலைகளில் என்னால் காண முடிந்தது.

93 திட்டம் போட்டு 48 விடயங்கள் செய்து முடித்தேன். இணையத்தில் ஒரு நடனத்திற்கான முகவரி தவறாக இருந்ததால் ஏற்பட்ட குழப்பம் மட்டும் இருந்திருக்காவிடில், 50 விடயங்கள் செய்திருப்பேன். இணையத்தில் படித்தவரை இதுதான் அதிகபட்சம்! எனது மற்ற பயணங்களைப் போல பாலியில் ஒருநாள் தவிர மற்ற எல்லா நாட்களிலும் மதிய உணவு கிடையாது. கார் ஓட்டுனரே எனது திட்டத்தைப் பாராட்டினார் என்றால் பாருங்கள்! பல்லாண்டுகள் கார் ஓட்டும் அவருக்கே, சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லாத‌ இரண்டு இடங்களை அறிமுகப்படுத்தி வைத்தேன். மலையேற்றம், சாகச விளையாட்டுகள் எனது திட்டத்தில் இல்லாததால் 5 நாட்கள் போதும். அவையும் வேண்டும் என்றால் கண்டிப்பாக ஒரு வாரம் வேண்டும். மேற்கு வடமேற்கு வடக்கு வடகிழக்கு கிழக்குப் பகுதிகளுக்கு அதிகமாகச் சுற்றுலாப் பயணிகள் செல்வதில்லை. அங்கும் இயற்கை கன்னி கழியாத சில நல்ல இடங்கள் உள. மக்களும் நன்கு உதவுகிறார்கள்.

ஆல்பங்களை ஒரே இடத்தில் பார்க்கும் வசதி கூகுளில் இப்போது இல்லை என நினைக்கிறேன். எனது பாலி ஆல்பங்களை இச்சுட்டியில் நீங்கள் காணலாம். மொத்தம் 41 ஆல்பங்கள். (Ctrl+F) Bali என்ற வார்த்தையைத் தேடுங்கள். ஆல்பங்களின் பெயர்களிலேயே தேதியும் இருப்பதால், கிட்டத்தட்ட எனது பயண பாதையை இந்த ஆல்பங்கள் சொல்லும். பின்னாளில் செல்ல விரும்புபவர்களுக்கு அவை உதவும் என நம்புகிறேன்.

https://plus.google.com/103740705199337696353

- ஞானசேகர்

Saturday, February 20, 2016

666

அவையில்
அம்மணமாக ஓடினான்

அரண்மனை கட்ட
பிறன்மனை இடித்தான்

போட்டிகள் நடத்தி
பரிசுகள் பெற்றான்

தலைநகர் தகிக்க‌
இசையில் சுகித்தான்

கடவுள் ஒருவனே
அவனே தான் என்றான்

வணங்காதோரை
வாணலியில் வாட்டினான்

பிறமதம் மிதித்தழி
சம்மதம் சொன்னான்

இரவுகள் ஒளிர‌
வனங்கள் எரித்தான்

நகரம் கட்டி
நரகம் காட்டினான்

போதாது இக்குற்றச்சாட்டுகள்

உங்கள் ஆட்சியாளர்கள்
செய்யாத ஒன்றை
அவனிடம் காணும்வரை
தயவுசெய்து நீரோவைப் பழிக்காதீர்கள்.

- ஞானசேகர்

Tuesday, January 19, 2016

தொந்தி சரியச் சுமந்து பெற்றவள்


மேற்கே பலரும்
பிணங்கள் பலதும்
சொந்தமாக்கிக் கொண்டதால்
இனிமேல் அழைக்க வேண்டாம்
'மம்மி' என்று!

மேற்கே ஒருத்தரும்
கிழக்கே ஒருத்தரும்
சொந்தமாக்கிக் கொண்டதால்
இனிமேல் அழைக்க வேண்டாம்
'மாதா' என்று!

வடக்கே ஒருத்தரும்
விலங்குகள் பலரும்
சொந்தமாக்கிக் கொண்டதால்
இனிமேல் அழைக்க வேண்டாம்
'அம்மா' என்று!

வடக்கே ஒருத்தரும்
சாமிகள் சிலதும்
சொந்தமாக்கிக் கொண்டதால்
இனிமேல் அழைக்க வேண்டாம்
'அன்னை' என்று!

நான்கு திசைகளிலும்
நாய்பாடு படுவதால்
இனிமேல் அழைக்க வேண்டாம்
'தாய்' என்று!

மொழி சொல்லித் தந்தவளை
முகம் பார்த்து அழைக்க
மொழி சொல்லும் வார்த்தைகள்
முகம் சுழிக்க வைப்பதால்
மீண்டும் வாய்க்குமா
கருவறை பாஷைகள்?

- ஞானசேகர்