புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Tuesday, October 11, 2016

நடை

குரங்கில் இருந்து மனிதனாக பரிணமிக்க முயன்ற முன்னோர்கள் முதலில் காட்டிய வேறுபாடு, நிமிர்ந்து நடக்க ஆரம்பித்ததாகத் தான் இருக்கும். இந்தியா சீனா தென்னமெரிக்க நாடுகளின் விடுதலைப் புரட்சிப் போராட்டங்களில் மக்களைத் திரட்டியதில் பெரும்பங்கு இந்தப் பொடிநடைக்கு உண்டு. இயேசு காலம் முதல் கிறித்தவம் என்ற மதமே நடை மூலம் தான் பிரம்மாண்டமாகப் பரவியது. இன்று தொழில்நுட்ப வளர்ச்சியில் அதிகம் நடக்கத் தேவையில்லை. விரல்நுனியில் சீண்டினால் நொடிக் கணக்கில் காலருகில் கார் வந்து நிற்கும். ஆனால் நல்ல கால்களில் நடக்க மறுப்பவனுக்கு உலகம் தன் அந்தரங்கங்களைத் திறந்து காட்டுவதில்லை என்பது ஊர் சுற்றும் தேசாந்திரிகளுக்குத் தெரியும். நடந்து வருபவனுக்கு மட்டுமே மணல் அலை காற்று சத்தம் தனிமை வெறுமை பயம் எனப் பலவற்றையும் தூவிக்காட்டும் தனுஷ்கோடி கடலைச் சிறந்த உதாரணமாகச் சொல்வேன். பேருந்தின் கடைசி நிறுத்தத்தில் இருந்து இந்திய எல்லை முனை வரை நீண்டு கிடக்கும் அக்கடற்கரைத் துண்டை என் சிறுகதை ஒன்றிக்குக் களமாகக் கூட பயன்படுத்தி இருக்கிறேன்.

காசி நகரம் இன்னொரு உதாரணம். நடக்க முடிந்தும் நடக்காத கால்கள் காசியை முழுமையாகக் காண்பதில்லை. காசியில் கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் நடந்தே திரிந்திருக்கிறேன். பிணம் எரிக்கும் இடத்தில் தற்செயலாக முட்டி நின்ற எனக்கு, அன்று ஏதாவது சாப்பிட்டேனா என்று இன்றுவரை நினைவில்லை. நகரங்களை நடந்து காண்பதுதான் சிறப்பு என்றாலும், காசி போல எல்லா நகரங்களும் அப்படி அமைந்து விடுவதில்லை. கவிஞர் மனுஷ்யபுத்திரன் சொல்வது போல், கண்காணிப்பின் காலம் நமது. எங்கும் எப்போதும் நம்மை எதாவதொரு கேமிராவின் கண் கண்காணித்துக் கொண்டே இருக்கும். அது பெரும்பாலும் குற்றவாளிகளை விட்டுவிட்டு, சந்தேகத்தின் பேரில் வெறுமனே திரிபவர்களைத் தான் கட்டி வைத்து கேள்வி கேட்கிறது. திருநெல்வேலியில், புதுக்கோட்டையில், மகாத்மா காந்தி பிறந்த வீடிருக்கும் தெருவில் எனக்கு அந்த அனுபவம் உண்டு. காசி போல இன்னொரு நகரில் நான் சந்து பொந்தெல்லாம் நடந்த இன்னொரு சுதந்திரக்  கதைதான் இப்பதிவு.

இவ்வருட ஜீன் மாதத்தில் இருந்து மாதத்திற்கு ஒரு மாநிலம் என கணக்கு வைத்து ஊர் சுற்றி வருகிறேன். ஜீன் தெலங்கானா. ஜீலை ஆந்திரா. ஆகஸ்டில் வீட்டிற்கு ஒரு வாரம் விடுமுறைக்கு வந்ததால் தமிழ்நாட்டுக் கணக்கு. செப்டம்பர் மஹாராஷ்ட்ரா. அக்டோபர் குஜராத். நவம்பரில் விடுப்பு கிடைக்காததால் பீகார் திட்டம் இல்லை. டிசம்பரில் போய் வந்து சொல்கிறேன். அக்டோபர் இரண்டாம் தேதி அன்று காந்தி பிறந்த வீட்டில் இருக்க வேண்டும் என்று குறி வைத்து திட்டம் தீட்டினால், தூரம் காரணமாக‌ எனது சில கொள்கைகளை மீற வேண்டி இருந்தது. முதல் மீறல் விமானப் பயணம். எங்கும் இரவில் தங்கக் கூடாது என்ற கொள்கையையும் இரண்டாவது முறையாக மீறினேன். மூன்று நாட்கள் குஜராத்தில் என்பது முடிவாகிவிட்டது. ஒரே மாநிலத்தில் இத்தனை நாட்கள் என்பதும் இதுதான் முதல்முறை. குஜராத் எனக்கு இதுதான் முதல்முறை. அக்டோபர் 2ல் போர்பந்தர் போனதும், அங்கிருந்து கடற்கரை ஓரமாகப் பேருந்தில் துவாரகா போனதும், திரும்பி போர்பந்தர் வந்ததும் இப்பதிவின் கருவிற்குத் தேவையற்ற தகவல்கள். அக்டோபர் 1 மற்றும் 3ல் அகமதாபாத் நகரில் இருந்தபோது நான் நடந்த கதை சொல்கிறேன்.

Heritage Walk. பாரம்பரிய நடை. இப்பெயரில் அகமதாபாத் மாநகராட்சியும் சில தன்னார்வலர்களும் தினமும் நடந்தே அந்நகரின் பாரம்பரியமிக்க வீதிகளைச் சுற்றிக் காட்டுகிறார்கள். கிட்டத்தட்ட 2 கிமீ நடை. காலை 8 மணி முதல் 10.30 வரை. ஐம்பது ரூபாய் தான் வாங்குகிறார்கள்! ஆங்கிலத்தில் தான் விளக்குகிறார்கள்! இப்படி ஒன்று இருப்பதும், அவர்கள் நடையினூடே சொல்லும் தகவல்களும் இணையத்தில் காணக் கிடைப்பது அரிது. எனக்கே பயணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் தான் தெரிய வந்தது. பசுமை நடை என்ற பெயரில் இதே போல் மதுரையைச் சுற்றியுள்ள சமணர்களின் இடங்களை எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் நடந்து வருவது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும்.

அகமதாபாத் இரயில் நிலையத்தின் வாசலில் இருந்து நீளும் சாலையில், சுவாமி நாராயணன் கோவில் என்று கேட்டால், சின்னப்பிள்ளை கூட வழி காட்டும். காந்தியால் விமர்சிக்கப்பட்ட சுவாமி நாராயணன் என்ற இந்துமதப் பிரிவொன்றின் முதல் கோவில் அது. முழுதும் மரத்தால் கட்டப்பட்டது. அக்கோவில் வளாகத்தில் இருக்கிறது, இந்தப் பாரம்பரிய நடை அலுவலகம். ஒரு சிறிய முன்னுரை விளக்கத்திற்குப் பின் நடைபயணம் ஆரம்பிக்கிறது. ஓர் இந்துக் கோவிலில் ஆரம்பித்து ஓர் இஸ்லாமிய மசூதியில் முடிக்கிறார்கள். தொடர்புக்கு 9327021686.

பாரம்பரிய நடை நடக்கும் பழைய அகமதாபாத் நகரில் பெரும்பாலும் வெள்ளப் பெருக்குக் காலத்தில் சேதம் அதிகம் இருக்காதாம். 2001 குடியரசு தினத்தன்று குஜராத்தைத் தாக்கிய பூகம்பம் அகமதாபாத்திலும் உணரப்பட்டாலும், பழைய அகமதாபாத்தில் அதிக சேதம் இல்லையாம். இப்படி பல தகவல்கள். அந்நடையில் நான் எடுத்த ஒவ்வொரு புகைப்படத்திற்குப் பின்னும் கிட்டத்தட்ட ஒரு கதையுண்டு. என் செருப்பைக் கூட புகைப்படம் எடுத்திருக்கிறேன்.
அந்த ஊர் மகாகவி. அந்த இன்னொரு காலணியில் குழந்தைகள் கால் விட்டு விளையாடுவார்களாம். பெண்கள் காய்கறிகளை அவர் மடியில் வைப்பார்களாம். மக்கள் கவிஞர்!
Bird feeders. பறவைகளுக்கு உணவளிக்கும் கூண்டு
கருந்தோலில் இராமர்
இத்திசைகாட்டி எதற்கென்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்
பிரிட்டிஷ் மொகலாயர் மராட்டியர் பெர்சியர் என நான்கு வகைக் கட்டிடங்கள் ஒரே இடத்தில்
சுவர்களில் கிளிகளுக்குக் கூடு
அகமதாபாத்தின் முதல் பாலம்
ஊர் திரும்பும் போது அகமதாபாத் விமான நிலையத்தில் என் பையை எக்ஸ் கதிர் சோதனைக்கு உட்படுத்திய போது, எதையோ கண்ட காவலர் எல்லாப் பொருட்களையும் வெளியே எடுத்துக் காட்டச் சொன்னார். திருவாசகம் போர்வை துண்டு டார்ச் கேமரா உள்ளாடை காந்தமானி, கடைசியாக அடியில் ஒரு சின்னப் பெட்டி. அப்பெட்டியைத் திறந்து காட்டச் சொன்னார். திறந்து காட்டினேன். 'சுதந்திரம் காணும் வரை காண்கிலேன்' என சபதமிட்டு வெளியேறி உப்புச் சத்தியாகிரகத்திற்குப் பொடிநடையாய்ப் போன, சபர்மதி ஆசிரமத்தில் 120 ரூபாய்க்கு வாங்கிய காந்தியின் கைராட்டையின் சின்ன மாதிரி அது. செத்த‌ பின்னும் சத்திய சோதனையுடன் இப்படித்தான் முடிந்தது எனது குஜராத் பயணம்.

மேலும் குஜராத் புகைப்படங்களுக்கு,
பாரம்பரிய நடை
தாதா ஹரிர் படிக்கிணறு
சபர்மதி ஆசிரமம்
காந்தி பிறந்த வீடு
துவாரகா
அடாலஜ் படிக்கிணறு

இன்னும் நடப்போம்.

- ஞானசேகர்

No comments: