புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Sunday, September 25, 2016

தண்ணி காட்டும் தலைநகரங்கள்

என்ன? தலைநகரம் தானேன்னு இவ்வளவு சாதாரணமா சொல்லிட்டீங்க! ஒரு தலைநகருக்காக தெலுங்கு பேசுற ஒரு மாநிலமே ஒரு பெரிய சண்டை போட்டு, அத்தலைநகரை மறந்து இன்னொரு தலைநகர் கிடைத்து, அதிலேயும் அதிகாரச் சண்டை வலுத்து, அப்பறம் இன்னொரு தலைநகருக்கு மாறி, அதையும் பங்கு பிரிக்கப் பெருஞ்சண்டை வந்து, இன்னிக்குத் தெலுங்கு மக்களே ரெண்டு மாநிலமா ஒடைஞ்சதா இல்லியா? எங்கேயும் எப்போதும் தலைநகரம் தலைநகரம் தான். தலைநகருக்கென்று ஒரு தனிமொழி. மொத்த மாநிலமும் 16 மணி நேரம் இருட்டில் கிடந்தாலும், தலைநகரத்திற்கு மின்வெட்டே கிடையாது. ஓடும் இரயில்களை நிறுத்தி ஒரு மாவட்டமே கழிவறைகளில் தண்ணீர் பிடித்தாலும் கூட, தலைநகர‌த்திற்குப் பக்கத்து மாவட்டத்து ஏரியில் இருந்தோ, பக்கத்து மாநிலத்து ஆற்றில் இருந்தோ தண்ணீர் டான்டான் என வந்துவிடும். மஹாராஷ்ட்ரா மாநிலத்திற்குத் தன் கடும் எதிர்ப்பைக் காட்ட தலைநகரையே ஒருநாள் பெல்காம் நகரத்திற்குக் கர்நாடகா மாற்றிக் காட்டியது. வெள்ளைக்காரன் மட்டும் அன்று கல்கத்தாவில் இருந்து டெல்லிக்குத் தலைநகரை மாற்றாவிட்டால், இன்று பெங்காலி தேசிய மொழியாகி இருக்கும். பெங்காலியைச் சமஸ்கிருத வரலாற்றுடன் இணைத்து, அதன் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கி, அதை எல்லாக் குடிமக்கள் மீதும் திணித்து, அதைப் பேசாதவனைக் கிண்டல் செய்து ஒரு கூட்டம் இன்று திரியும். 'ஏக் காவ் மே ஏக் கிஷான் ரகு தாத்தா' விற்குப் பதிலாக 'அம்மி தும்மி பலாப்பஜ்ஜி' கற்றுக் கொண்டிருப்போம்.

கூடங்குளக் கரையிலும், நர்மதாக் கரைகளிலும் மக்கள் நீரில் மூழ்கிப் போராடுவது எத்தனை பேருக்குத் தெரியும்? ஹரியானாவில் ஒரு போராட்டம் என்றால் டெல்லிக்குத் தண்ணீர் கொண்டு போகும் கால்வாய்களை அடைத்து கவனம் ஈர்க்கிறார்கள். தானே புயலுக்கு விடை தெரியாமல் தவித்த கடலூரைப் பெருமழை மீண்டும் தத்தளிக்க வைத்த‌ போதும், சென்னையின் நிலைமைதான் உலகிற்குப் பெரிதாகத் தெரிந்தது. தண்ணீரைக் காசிற்கு வாங்கியாவது சிங்கப்பூர் என்கிற சிங்கம் சிங்கிளா நிக்கிதா இல்லியா! தண்ணீரால் பிளவுபட்டுக் கிடக்கும் இஸ்தான்புல் தான் துருக்கியின் தலைநகரம் என்று இன்றும் நம்பிக் கொண்டிருப்பவர்கள் பலர். தண்ணீரே இல்லாத ஜெருசலேமைத் தலைநகராக்கிப் பார்க்கத் தான் உலகம் முழுவதும் எத்தனை போர்கள்! பாகிஸ்தான் தலைநகரம் தண்ணீர்க் கரையில் இருக்கும் கராச்சியில் இருந்து இஸ்லாமபாத்திற்கு மாறியது. எம்ஜியாரே திருச்சிக்குத் தலைநகரை மாற்ற முயற்சி செய்தாராம். இப்படி எத்தனை கதைகள் உலகம் முழுதும்! அதனால், தலைநகரம் தானே என்று சாதாரணமாகச் சொல்லாதீர்கள். கூடங்குள‌ங்களைப் பணயம் வைத்தாவது தலைநகரங்கள் தங்குதடையின்றி பயணிப்பதுதான் வரலாறு. பலர் கண்ணில் பட்டும், வரலாறு தெரியாமல் தவிர்க்கப்படும் இரண்டு தலைநகரங்களைத் தேடிய எனது பயணத்தை இப்பதிவில் பகிர்கிறேன்.

திருப்பதி இரயில் நிலையத்தை அதிகாலையிலேயே அடைந்து விட்டேன். நான் செல்ல வேண்டிய இடத்திற்குப் பத்து மணிக்கு மேல் போனால் போதும் என்பதால், அவ்வூரில் மலையில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குப் பேருந்து ஏறினேன். எங்கு தேடினாலும் லட்டு கிடைக்கவில்லை. கோவிலுக்குப் போய் சாமி தரிசனம் செய்தால் மட்டும், வெளிவரும் போது லட்டு தருவார்கள் என கண்டுபிடித்தேன். கடன்பட்டு சாமி கிடப்பதாகச் சொல்லி, சில பரம்பரைப் பணக்காரர்களைக் காலங்காலமாக உண்டாக்கிக் கொண்டிருக்கும் சாமியின் வரிசையில் நின்று கிடைக்கும் லட்டு தேவையில்லை என்று திரும்பினேன். பழநி திருச்செந்தூர் பூரி என்று தலைவாசல் மிதிக்காமல் நான் திரும்பிய கோவில்கள் பட்டியலில் இப்படித்தான் சமீபத்தில் திருப்பதியும் சேர்ந்தது. மலையை விட்டு கீழிறங்கும் பேருந்து கிளம்பும்போது, ஒரு சகபயணி கத்தினார்: 'கோவிந்தா கோவிந்தா'.

நான் செல்ல வேண்டிய இடம், சந்திரகிரி. திருப்பதியில் இருந்து சித்தூர் செல்லும் வழியில் பத்து கிலோ மீட்டரில் இருக்கிறது. ஆட்டோவில் சென்றேன். போகும் வழியில், பெருமாள் சாமிக்குத் திருமணம் நடந்த இடம் என்று ஒரு கோவிலைக் காட்டி, உள்ளே போய் தரிசனம் செய்துவிட்டு வரச் சொன்னார் ஓட்டுநர். தலையை எண்ண வந்த இடத்தில் இலை எடுக்கும் வேலை எதற்கு? அன்றைய நாள் ஏதோ மிகப் பெரிய நல்ல நாள் எனவும், கூட்டம் இன்னும் இல்லாததால், நான் மிகவும் அதிர்ஷ்டசாலி எனவும் சொன்னார். எனது திருமணமே பெரும் கேள்விக்குறி! இதில் பகவானின் திருமணம் ஓர் ஆச்சரியக்குறியா? எங்கும் நில்லாமல் ஆட்டோ சந்திரிகிரியில் முற்றுப்புள்ளி. ஊரின் முக்கிய சாலையில் இருந்து, முட்புதர்களுக்குள் செல்லும் ஒரு குறுகிய பாதையைக் கடந்தால், வந்தது நான் காண வந்த கோட்டை. பெருமாளைப் பார்க்க வருபவர்களில் இலட்சத்தில் ஒருவர் இங்கு வந்தாலே ஆச்சரியம். சந்திரகிரி கோட்டை! உடைந்து சிதறிய விஜயநகரப் பேரரசின் கடைசித் துண்டு. அவர்களின் கடைசி தலைநகரம். இக்கோட்டையில் தான் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைநகரமாக ஆகப்போகும் சென்னைக்கான நிலம், மெட்ராஸ் என்ற கிராமத்தில் புனித ஜார்ஜ் கோட்டை கட்டுவதற்காக 1639ல் ஆங்கிலேயர்களுக்காக விற்கப்பட்டது. குறிப்பாக அந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணம், தண்ணீர். சுற்றி வங்கக்கடலாலும், கூவம் ஆற்றாலும் இயற்கையாகவே அமைந்த அரண்.

இந்நாள் வரையான எனது தனியான பயணங்களில் ஒரெயொரு ஊரில் மட்டும் தான் நான் தங்கி இருக்கிறேன். மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் அது. அஜந்தா மற்றும் எல்லோரா குகைகளுக்கு மட்டும் தனித்தனியே ஒருநாள் தேவை. அவுரங்காபாத் நகருக்குள் மற்றும் புறநகரில் மட்டும் சுற்றிப் பார்க்க ஒருநாள் தேவை. முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் கல்லறை, தாஜ்மகால் போலவே கட்டப்பட்ட அவரின் மனைவியின் கல்லறை என்ற நிறைய வரலாற்றுச் சின்னங்கள் உண்டு. எல்லோரா போகும் வழியில் மலையுச்சியில் இருக்கிறது இன்னொரு கோட்டை. தவுலதாபாத் கோட்டை. அச்சுறுத்தும் உயரத்தால் பலர் ஏறாமலே திரும்பிப் போவதுண்டு. 250 ரூபாய்க்கு அவுரங்காபாத் சுற்றுலாத் தளங்களை ஒரே நாளில் சுற்றிக் காட்டும் அரசுப் பேருந்து கூட அதற்கு வேண்டிய அளவு நேரம் ஒதுக்குவதில்லை. சாலை ஓரத்திலேயே வாசல் இருந்தாலும், பேருந்து நிறுத்தமே அருகில் கிடையாது. அவுரங்காபாத்தைச் சுற்றி இருக்கும் பல சுற்றுலாத் தளங்களால், இதன் பிரம்மாண்ட உயரத்தால் அதிகம் கவனிக்கப்படாமல் போகிறது. சமீபத்தில் தெலுங்கிலும் தமிழிலும் வந்த ருத்ரமாதேவி திரைப்படத்தில் இக்கோட்டையை நீங்கள் பார்க்கலாம். அப்படி என்ன முக்கியத்துவம் இக்கோட்டையில்? அதை அறிய இன்னொரு திரைப்படத்துடன் சொல்கிறேன்.

முகமது பின் துக்ளக். ஏதோ இந்தியா வரலாறு முழுவதும் சாலமோன் போன்ற புத்திசாலிகளால் ஆளப்படுவது போல, ஏன் முகமது பின் துக்ளக்கை மட்டும் ஒரு முட்டாள் ஆட்சியாளனாக வரலாறு சித்தரிக்கிறது என்று தெரியவில்லை. அவர் மேல் முட்டாள்தனம் என சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் மூன்று. ஒன்று அதிக வரி. வரிக்கு விளக்கம், நான் வரிவரியாய் எழுதத் தேவையில்லை. இரண்டு தோல் நாணயம். சில வருடங்களுக்கு முன், தேநீர் குடிக்க கண்ணாடி மற்றும் காகிதத்திற்கு மாற்றாக மண்சட்டியை இரயில்வேயில் அறிமுகப்படுத்தினார்களே! மூன்றாவது தலைநகரை டெல்லியில் இருந்து தேவகிரிக்கு மாற்றி, உடனே மீண்டும் தேவகிரியில் இருந்து டெல்லிக்கு மாற்றியது. தலைநகரை மாற்றி தோல்வி அடைந்தவர்கள் வரலாற்றில் ஏராளம். ஆக்ரா, பதேபூர் சிக்ரி, இலாகூர் என்று தலைநகரங்களை மாற்றிய  பேரரசர் அக்பரும் கூட விதிவிலக்கல்ல. பாகிஸ்தான் தலைநகரம் கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத் மாறியதற்கும், டெல்லியில் இருந்து தேவகிரிக்கு முகமது பின் துக்ளக் மாற்றியதற்கும் காரணம் ஒன்றுதான். பாதுகாப்பு! பதேபூர் சிக்ரியில் இருந்து இலாகூருக்கு அக்பர் மாறியதற்கும், தேவகிரியில் இருந்து மீண்டும் டெல்லிக்கு முகமது பின் துக்ளக் மாறியதற்கும் காரணம் ஒன்றுதான். தண்ணீர்! அந்தத் தேவகிரிதான் இன்றைய தவுலதாபாத் கோட்டை. ஒரு காலத்தில் இந்தியாவின் தலைநகரம்!

புகைப்படங்களுக்கு இங்கு செல்லவும்:
சந்திரகிரி
தவுலதாபாத்
அவுரங்கசீப் கல்லறை
அவுரங்கசீப் மனைவி கல்லறை
அஜந்தா குகைகள்
எல்லோரா குகைகள்
கைலாசநாதர் கோவில்

- ஞானசேகர்

No comments: