புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Friday, January 20, 2006

மனித சாயலில் ஒரு மனிதன்


தீர்க்கதரிசனங்கள் சொன்னாலும்,
மனிதர் வியக்க
புதுமைகள் பல செய்தாலும்,
வானதூதரின் மொழிகளில் பேசினாலும்
அன்பு எனக்கில்லையேல்
எனக்கு ஒன்றுமில்லை.
-விவிலியம்

மனிதரோடு மௌனவிரதமிரு
ஜீவராசிகளோடு பேசு
ஏழாம் அறிவுக்கு ஏற்று மனிதரை!
ஓரிடத்தில் இராதே
ஒருநாள் இடுகாடு
ஒருநாள் பன்றிக்கொட்டகை
-வைரமுத்து


"கடல் தாயின் சீற்றத்தில் சென்ற வருடம் இதே நாளில் பலியான பக்தர்களுக்கும், வியாபாரிகளுக்கும், சகோதர சகோதரிகளுக்கும் கண்ணீர் அஞ்சலி" என்று துணியில் எழுதப்பட்ட வாசகம் என்னை வரவேற்றது. சரியாக 362 நாட்கள் கழித்து, வங்கக்கடலின் இந்தக் கரைக்கு வந்திருந்தேன். நான் பார்த்த உலகில் எனக்கு மிகவும் பிடித்த இடம். அது வேளாங்கண்ணி கடற்கரை.

பேருந்தைவிட்டு இறங்கி கடல் நோக்கி நடந்தேன். அந்த ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கண்ணில்பட்ட மனிதர்களை விரல்விட்டு எண்ணியிருக்க முடியும். ஓர் ஊருக்குள் அப்படி ஒரு தனிமை. கடற்கரை வந்துவிட்டது. கண்முன்னே படுத்திருந்தது வங்கக்கடல். ஒன்பது புயல்கள் தொடர்ந்து தாக்கியதால், வங்கக்கடல் கொஞ்சம் கோபமாகவே இருந்தது. கடற்கரையில் வடக்கும், தெற்குமாக உட்கார நல்ல இடம்தேடி அலைந்தேன். ஓரத்தில் நின்ற படகுகளில் கருப்புக் கொடிகள். ஆங்காங்கே மணல்மேடு கட்டி, ஒரு கிறிஸ்தவர்களின் புனித நகரத்தில், அவரவர் மதத்திற்கு ஏற்ப, சிலபேர் மௌனமாய்க் கைகட்டி நின்றுகொண்டு இருந்தார்கள். அவர்களிடம் நான் பார்த்தவரை அழுகை இல்லை. நான் சென்றமுறை வந்தபோது, நானும் சேர்ந்து தீமூட்டிய, அந்த ஒதுக்குப்புறமான இடத்தில் சிறிதுநேரம் நின்றுவிட்டு கடல் திரும்பினேன்.

பார்வையைக் கடல்மேல் விரித்து வைத்துவிட்டு, சிந்தனையை இறந்தகாலத்தில் மூடிவைத்தேன். ஒருமுறை நான் அமர்ந்திருக்கும் இதே இடத்தில் நான் குளித்துக்கொண்டு இருந்தபோது, என் செருப்புகளில் ஒன்றைக் கடல் எடுத்துக் கொண்டது. "கடல் ஒன்றும் சில பணக்காரர்கள் போல் இல்லை, சம்பாதித்தைத் தானே வைத்துக்கொள்ள. கொஞ்சநேரம் நின்றால் செருப்பு திரும்ப வரும்" என்ற நம்பிகையில், சில நேரம் கரையில் தேடிப் பார்த்தேன். தோல்விதான். ஒற்றைச் செருப்பு எதற்கு என்று அதைக் கடலில் வீசினேன். அடுத்த அலையில் பழைய செருப்பு வந்தது. புத்தியைச் செருப்பால் அடித்துவிட்டு, கொஞ்சநேரம் நின்றேன். மீண்டும் ஏமாற்றம். திரும்ப இந்த செருப்பையும் வீசிவிட்டு, அறைக்குத் திரும்பியபோது பழைய செருப்பு கரையில் கிடந்தது. இப்போது நான் அதை எடுக்கவில்லை.

இதேபோல் மலையாளப் பெண்ணொருத்தியின் நனைந்த உடம்பில் மறைபிரதேசங்கள் பார்த்தது, டவுசருக்குள் நண்டு புகுந்து திண்டாடியது, வெள்ளைக்காரியிடம் ஆங்கிலம் பேசுவதுபோல் கையைத் தடவிப்பார்த்தது என சிறுவயதில் நான் செய்த குறும்புகள் சிந்தனையில் வந்துபோயின. நான் மட்டும் சிரித்துக் கொண்டிருந்தேன். மற்றவர்கள் மயானத்தில் இருந்து திரும்புபவர்களின் அமைதியுடன் இருந்தனர்.

சூரியன் முகத்தில் வீசியபோதுதான் தெரிந்தது, விடிந்துவிட்டதென்று. சாப்பிட்டுவர கோயிலுக்கு அருகிலுள்ள அந்தக் கடைக்குச் சென்றேன். கூப்பன் கொடுத்துவிட்டு, காத்திருந்தபோதுதான், இதே இருக்கையில்தான் நான் சென்றமுறை வந்தபோதும் அமர்ந்திருந்தேன் என ஞாபகம் வந்தது. அப்போது, ஈரோட்டிலோ, மதுரையிலோ, அல்லது கடலூரிலோ இருந்து வந்திருந்த புளிசாதம் சாப்பிட்டேன். இப்போது இருபது ரூபாய்க்கு வாங்கிய தோசையை விழுங்க என் தொண்டை திறக்கவில்லை. அப்படியே வைத்துவிட்டு மீண்டும் கடல் நோக்கிப் பாய்ந்தேன்.

குச்சி ஐஸ் வாங்கும்போது, ஒரு பெண் தன் துணையின் தோளில் சாய்ந்துகொண்டு சொன்னது எனக்குக் கேட்டது: "எப்படித் தான் இந்த சனங்க பயப்படாமக் குளிக்குதுகளோ? சுனாமி கினாமி வந்தாத் தெரியும்". துணை அவள் கன்னத்தைத் தட்டிக் கொடுத்தது.

இம்முறை கொஞ்சம் அதிகமாக மனித நடமாட்டம் இருந்தது. இருந்தும் நூறைத்தாண்ட வாய்ப்பில்லை. இம்முறை தெற்கு பக்கம் சென்று தனியே அமர்ந்தேன். அங்கே என்னைப்போல் பலபேர் காரணமே இல்லாமல் தனித்தனியே நின்றுகொண்டு இருந்தனர். நான்
கடைசியாக அமர்ந்தேன். இப்போது ஒரு சிந்தனையும் இல்லாமல் சும்மா அமர்ந்திருந்தேன். சில மணிநேரங்கள் போயிருந்தன.

சில வாலிபர்கள் என் எதிரே நடந்து போய்கொண்டு இருந்தனர். அதில் ஒருவன் ஒவ்வொரு அலையையும் துரத்திக் கொண்டே தொடாமல் நடந்துகொண்டு இருந்தான். திடீரென ஓர் அவசர அலை அவன் முயற்சி கலைத்து, அவன் கால் நனைத்துப் போனது. அவன் அந்த
அலையைக் கோபமாய்ப் பார்த்தான். அவர்களில் ஒருவன் சிரித்துவிட்டு சொன்னான்: "இதுக்கே இப்புடியா? இந்த தென்னமரத்த ஒரு அல சாச்ச்சுது பாரு. சுதாரிக்கிறதுக்குள்ள வேலிக்குள்ள கெடந்தேன்டா மாப்புள்ள. இன்னும் இந்த தென்னமரமும் எந்திரிக்கல,..........". அவர்களும், அவர்களில் பேச்சும் மெல்லமாய் மறைந்து போயின.

காலில்படும் தண்ணீர், நழுவி ஓடிய செருப்பு, யாக்கை தாங்கும் இருக்கை இப்படி பேசாத உயிரிலிகளால் இயற்கை, மனிதனுக்குச் சொல்லும் பாடங்கள் எத்தனையோ? இப்படி யோசித்துக்கொண்டே இருக்கும்போது, என்னை அடுத்த பாடத்திற்கு இயற்கை
தயார்படுத்திக்கொண்டு இருப்பதை அறியாதவனாய்த் தெற்குப்பக்கம் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

தெற்குப்பக்கம் என் பார்வையில் நீண்ட நேரமாகத் தெரிந்தவை வங்கக்கடலும், அதில் கலக்கும் ஆறும், சில சவுக்கு மரங்களும். திடீரென ஒரு மனிதன். சிறுபிள்ளைகள் பார்த்தால், பைத்தியம் என்று சொல்லும் அளவுக்குத் தோற்றம். கரையின், மேட்டில் இடது
காலையும், இறக்கத்தில் வலதுகாலையும் வைத்து வடக்குநோக்கி நடந்து வந்தான். அவன் என்னைப் பார்க்கவில்லை. என்னை அவன் கடந்து போய்விட்டான். மீண்டும் சில மணிநேரங்கள் கடல் சிந்தனையில் மூழ்கினேன்.

எட்டுமணிநேரம் ஆகிவிட்டது. வீட்டுக்குத் திரும்ப எண்ணி நடக்க ஆரம்பித்து வடக்குக் கரைக்கு வந்தேன். இவ்வளவு நேரம் யாருடனும் பேசாமல், கட்டுப்பாடுகள் இன்றி சுதந்திரமாய்ச் சுற்றித் திரிந்தேன். ஆனால், என் அபிமான வங்கக்கடலின் ஒரு துளியில்கூட நான் நனைவுபடவில்லை. அதற்குச் சில காரணங்களும் உண்டு.

ஒருமுறை வங்கக்கடலில் கன்னியாக்குமரியில் குளித்தபோது, மூன்று பாலிதீன் பைகள்போட்டு நான் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த 1500 ரூபாய் நனைந்தது மட்டும் இல்லாமல், கடலோடு கலக்கப் பார்த்தது. அதேபோல், வங்கக்கடலில் தனுஷ்கோடியில் நான் தாவிக் குதித்தபோது, தண்ணீருக்கடியில் என் நெஞ்சுக்கும், மூழ்கி இருந்த ஒரு திடப்பொருளுக்கும், இடையே இருந்த இடைவெளி சில அங்குலங்கள் மட்டுமே. அந்த திடப்பொருள், 1964ல் வந்த புயலில் கடல் விழுங்கிய ஒரு ரயில் சென்ற தண்டவாளத்தின் கூறிய முனை. அதனால் நான் தனியாக கடலுக்கு வந்தால், குளிப்பதில்லை.

சரி கால் நனைத்து செல்லலாம் என செருப்பைக் கழற்றி வைத்துவிட்டு, கடலில் இறங்கினேன். நான் வந்தநேரம் பெரிய அலைகளே இல்லை. தொடை நனையும் வரை கரையேறுவதில்லை என நின்றுகொண்டு இருந்தேன். இப்போது என்னைச் சுற்றி மனிதர்கள்
கடலில் நனைந்துகொண்டு இருந்தனர். என் வலப்பக்கத்தில் என் வயது பெண்ணொருத்தியின் இச்சைப்பாகங்கள் மிகையாய்த் தெரிந்தன. நான் ரசிக்கவில்லை. தொடுவானம் பார்த்துக்கொண்டு இருந்தேன். கரையில் இருக்கும் செருப்பை ஒருமுறை பார்த்துக் கொண்டேன். புது மனைவியின் இடுப்பில் கைவைத்து, கடலின் மடியில் கால்வைக்கப் பணிக்கும் ஒரு கணவன், என் இடப்பக்கம் இருந்தனர். பெருமூச்சு மட்டுமே விடமுடிந்தது.

(சிறிது இடைவேளை எடுத்துக் கொண்டு, சற்றே மனநிலை மாற்றிக்கொண்டு தொடருங்கள்)

திடீரென என்னையும், எனக்குப் பின்னும் பார்த்துக் கொண்டே சுற்றிக் கடலில் இருந்தவர்கள் விலக ஆரம்பித்தனர். எனக்கு ஒன்றும் விளங்வில்லை. செருப்பு பத்திரமா எனத் திரும்பினேன். இரண்டடி இடைவெளியில் எனக்குப் பின் நான் முதலில் பார்த்த அந்த மனிதன் நின்றுகொண்டு இருந்தான். அவனின் சட்டையும், வேட்டியும், ஒரு பையும் கரையில் என் செருப்புக்குப் பக்கத்தில் கிடந்தன. இவன் கோவணத்துடன் நின்றுகொண்டு இருந்தான். ஏன் எல்லோரும் விலகுகிறார்கள் என எனக்குப் புரியவில்லை. மீண்டும் கடல் குடித்தேன்.

அவன் எனக்கு முன்னே வந்து குளிக்க ஆரம்பித்தான். அவன் உடல் அசைவுகள் வித்தியாசமாய் இருப்பதை இப்போதுதான் கவனித்தேன். அவன் மேட்டில் ஒருகாலும், இறக்கத்தில் ஒருகாலும் வைத்து நடந்து வந்தது கிறுக்குத்தனமல்ல. அவனது வயிற்றில் வலதுபக்கம் பக்கவாட்டில் ஒரு கட்டி இருந்தது, ஓர் ஊதப்பட்ட பலூனின் அளவில். என் கண்ணால் அக்கட்டியின் ஆழம் பார்த்துக்கொண்டு இருந்தேன். தற்செயலாய்த் திரும்பியவன், என்னைப் பார்த்து சிரித்தான். என்னில் சலனமில்லை. இடப்பக்கத்துக்கும், முன்பக்கத்துக்கும் இடையில் 45 டிகிரியில் அவன் இடதுகையைக் கீழே கொண்டுபோய் கடலில் விழுந்தான். அலை அவன் தலை நனைத்தது. சிரிப்புடன் எழுந்தான். யாரும் அவன் சிரிப்பை அங்கீகரிக்கவில்லை, நானும்தான்.

சில விநாடிகள் குளித்துவிட்டு கரையேறினான். என்மேல் ஒரு சிரிப்பைத் தெளித்துவிட்டுப் போனான். "யார்ரா இவன்? சம்மந்தமே இல்லாமல் சிரிக்கிறான்?" என நான் நினைத்தபோது, ஓரலை என் தொடை நனைத்தது. சரி தொடை நனைந்துவிட்டது. கிளம்பலாமா? கடலில் இறங்கினால் எனக்கு அதிகாலை தூக்கம் போல மீண்டுவர மனம் வராது. நின்றுகொண்டே இருந்தேன்.

திரும்பி செருப்பைப் பார்த்தேன். பக்கத்தில் அவன் சட்டை மாட்டிவிட்டு, வேட்டிக்கு மாறிக்கொண்டு இருந்தான். மீண்டும் என் பார்வை கடலில் மூழ்கப் போனது. என் முதுகருகில் தண்ணிரில் நடக்கும் சத்தம் கேட்டு திரும்பினேன். அவன் வேட்டியைக் கட்டாமல் வந்துகொண்டு இருந்தான். அவன் நிர்வாணத்தைக் கஷ்டப்பட்டு இடதுகையால் கூடியவரை மறைத்தான். நான் அவன் நிர்வாணத்தைப் பார்ப்பதை அவன் கண்டுகொள்ளவில்லை. அவன் சைகையால் என்னைக் கரைக்கு அழைத்தான். நானும் போனேன்.

அவனின் கோவணம் தரையில் கிடந்தது. அதைக் காட்டி, என்னை எடுக்கச் சொன்னான். நானும் எடுத்தேன். இப்போது அவன் செய்த சைகை, எனக்குப் புரியவில்லை. "நீங்க ஊமையா? பேசமாட்டீங்களா?" எனக் கேட்டேன். அவன் இப்போது மேலும் கீழும் தலையாட்டி, சிரித்துக்கொண்டே காட்டிய முகபாவனை, சாகும்வரை எனக்கு மறக்க
வாய்ப்பில்லை. அந்தப் பாவனைக்கு "சரியா கண்டுபுடுச்சுட்டீங்க. நான் ஊமையேதான்" என
அர்த்தம். அந்தப் பாவனையோடே, என் தோள் தொட வந்தவன் ஏதோ ஒரு தாழ்வு மனப்பான்மையுடன் விலகிக் கொண்டான்.

"சரி இத என்ன செய்யனும்" என என் கையில் இருந்த அவன் கோவணத்தைக் காட்டிக் கேட்டேன். அவன் தன் இடதுகையை எடுத்து, வலதுகைமேல் தட்டினான். பின் பின்பக்கம் திரும்பி, தன் பையைக் காட்டி, தூக்குவதுபோல் சைகை செய்து, வடக்கு நோக்கிப்
போவதுபோல் சைகை செய்தான். நான் அவனது வலதுகையைப் பிடித்துப் பார்த்தேன். அது வேலை செய்வதில்லை. இவனுக்கு எல்லாமே இடப்பக்கம்தான் என்று இப்போது விளங்கியது.

நான் கடலுக்குள் இறங்கினேன். அவனது கோவணத்தை நன்றாகப் தண்ணீரில் நனைத்துவிட்டு, பிழிந்து அவனிடம் கொடுக்க வந்தேன். அவன் என்னைப் பார்த்துவிட்டு வானத்தைப் பார்த்தான். ஏதோ சொல்ல முயன்று, கத்தினான். எனக்கு அது புரிந்தது. அதன்
அர்த்தம் இங்கு வேண்டாம். படிப்பவர் வேறுமாதிரி புரிந்துகொண்டால், கரு மாறிவிடும். இப்போது கோவணத்தை வாங்கிவிட்டு, என் தோள் தொட்டான். "வேறெதும் செய்யனுமா?" எனக் கேட்டேன். அவன் முதலில் செய்த-எனக்குப் புரியாத-அதே சைகையை மீண்டும்
வேகமாகச் செய்தான். இப்போதுதான் எனக்கு அர்த்தம் புரிந்தது. சிரித்துக் கொண்டேன். அர்த்தம் இதுவே: "எனக்கு வலது கை விலங்காது. குனியவும் முடியாது. இக்கொவணத்தை வலதுகையில் வைத்தால், நான் இடதுகையில் பையை எடுத்துக் கொண்டு ஊருக்குக்
கிழம்புவேன்".

அவன் என்னைப் பார்த்துக் கைகூப்பிவிட்டு, வடக்கே நடக்க ஆரம்பித்தான். நானும் பின் தொடந்தேன். அவன் சொந்த ஊரைக் கேட்டேன். தென் திசை காட்டினான். நான் ஊர் அறிய முயற்சிக்கவில்லை. போகும் இடம் கேட்டேன். வடதிசை காட்டி, பலமாகச் சிரித்தான். ஓர்
பெரிய அலை வந்தது. இவன் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு, இடதுகையை முன்நீட்டினான், அலையை நிற்கச்சொல்லி. அலை அவனுக்குப் பின்னால் ஓடி, மீண்டும் அவன் முன் வந்தது. ஏதோ கடலைப் போரிட்டு வென்றவன் போல், கடலைப் பார்த்து நக்கலாய்ச் சிரித்தான். இப்போதுதான் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. கேட்டேவிட்டேன். "சுனாமி வந்தபோது, நீங்க எங்க இருந்தீங்க?". சைகையே இல்லை. அவன் முகபாவனை கடுமையாக மாறியது. சற்றே நின்றுவிட்டு, பின்னால் ஏன் வருகிறேன் என என்னைக் கேட்டான்.

என்னிடம் பதில் இல்லை. அவன் அதை எதிர்பார்க்கவும் இல்லை. தன் பயணம் தொடர்ந்தான். அவன் என் பார்வையில் இருந்து மறையும்வரை அங்கேயே நின்றுவிட்டு, மீண்டும் பழைய இடத்துக்குத் திரும்ப நடக்க ஆரம்பித்தேன், வெறும் கால்களுடன். அவனது
காலடிதடங்களில், அவனுக்கு எதிர் திசையில் என் பயணம். என் பயணம் என் செருப்பில் முடிந்தது. அவனது பயணம்?

இப்போது கரையில் அமர்ந்து யோசித்தேன்: "சிறுவயது குறும்புகளை நினைத்து தனியாக சிரித்துக்கொண்டு இருந்தால், அதன் பெயர் நினைவுகள். தன்னையும், தன்னைச் சார்ந்தவைகளையும் சுருட்டிக்கொண்ட கடலை, காலால் மிதித்து சிரித்துக்கொண்டால் அதன் பெயர் கிறுக்குத்தனம். செய்யும் செயல் ஒன்றாயினும் செய்பவனைப் பொறுத்து அர்த்தம் சொல்வதுதான் அனுபவமா-நடைமுறையா? மிருகக்காட்சி சாலையில் ஒரு மனிதக்குரங்கைச் சிரிக்கவைக்க சிரித்துக்காட்டும் நாம், சகமனிதன் சிரிப்பையே அங்கீகரிக்க முடியாத ஒரு வாழ்க்கையில் ஒளிந்திருக்கிறோம். குழந்தைகளிடம் குழந்தையாகவே மாறிவிடும் நாம், ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவனிடமோ-ஒரு கிழவனிடமோ-தனக்கு அடிமை என நினைக்கும் மனைவி போன்ற உறவுகளிடமோ- நம் ஆதிக்கம் காட்டுவதே மனிதனின் சராசரி வாழ்க்கை என்றால், ஆறாம் அறிவில்தான் ஏதோ பிரச்சனை. இதுபோன்ற நிகழ்வுகளால் பெறுவது ஒன்றும் ஏழாம் அறிவு அல்ல, ஆறாம் அறிவின் உண்மைவடிவம்".

மறுநாள், திருச்சியில் ஒரு பிரபல தனியார் மருத்துவமனைக்குச் சென்று இருந்தேன். மருத்துவரைச் சந்தித்துவிட்டு திரும்புகையில், என் செருப்பு காணாமல் போயிருந்தது. இம்முறை தாமதிக்காமல், ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, வீடு திரும்பினேன். ஏனெனில், செருப்பு திரும்பிவர எடுத்தது ஒன்றும் கடல் அல்ல.

-ஞானசேகர்
(சாயலில் மனிதன்)

7 comments:

கல்வெட்டு(பிரேம்) said...

"இதுக்கே இப்புடியா? இந்த தென்னமரத்த ஒரு
அல சாச்சத நான் பாத்தேன். சுதாரிக்கிறதுக்குள்ள வேலிக்குள்ள நான் கெடந்தேன். இன்னும் இந்த தென்னமரமும் எந்திரிக்கல,..........".


The beauty lies in the way it is paused.

மூர்த்தி said...

ஞானசேகர்... அருமையான பதிவு அய்யா. நல்ல இலக்கிய ஆர்வம் உங்களுக்கு இருப்பதைக் கண்டேன் நான்.

சேரல் said...

பயன்படுத்தும் வார்த்தைகளில் இன்னும் கொஞ்சம் கவனம் தேவை.


அறிவுரை இல்லை....அக்கறை!

J.S.ஞானசேகர் said...

//பயன்படுத்தும் வார்த்தைகளில் இன்னும் கொஞ்சம் கவனம் தேவை.

அறிவுரை இல்லை....அக்கறை! //

ஓர் இடத்தை உதாரணமாக சொன்னால் திருத்திக் கொள்வேன். கண்டிப்பாக, 'எனது எண்ணம் இது, உனது எண்ணம் வேறுமதிரி இருக்கும். அவரவர் எண்ணோட்டத்தில் எல்லாம் சரியே' என சொல்லமாட்டேன்.

-ஞானசேகர்

றெனிநிமல் said...

வணக்கம் ஞானசேகர்.
அருமையாக எழுதுகின்றீர்கள்.
வாழ்த்துக்கள்.

கீதா said...

நல்ல ஒரு பதிவு சேகர்.

J.S.ஞானசேகர் said...

சென்ற வாரம் நண்பர்களுடன் மஹாராஷ்ட்ராவில் உள்ள (கணபதி புலே) அரபிக்கடலின் ஒரு கரைக்குச் சென்று இருந்தேன். அலையும் இல்லை; ஆழமும் இல்லை; சற்றே பெரிய குளம். அவர்கள் யாரும் கடலில் இறங்கத் தயாராய் இல்லை. அவர்களால் கிரிக்கெட், வாலிபால் என்றே கடல் வாழ்க்கையை ரசிக்க முடிந்தது. நான் கடலில் இறங்கி, இடுப்பளவு தண்ணீரில் நின்று திரும்பிப் பார்த்தேன். பத்து மீட்டரில் கரை. நண்பர்கள் திட்டினார்கள். "டேய், ஆழமும் இல்ல. அலையும் இல்ல. பயப்படாதீங்கடா" என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவர்கள் கேட்பதாய் இல்லை. "மனித சாயலில் ஒரு மனிதன்" என்று ஆரம்பித்தால், அவர்களுக்குப் புரியப் போவதும் இல்லை. அவர்கள் அதிகம் அறிவுரை பேச, நான் கொஞ்சம்தான் பேசினேன். பிறகு சிலபேர் பேசவேயில்லை.

கல்வெட்டு, தனுஷ்கோடிக்கு அப்புறம் இப்பத்தான் கடலில் இறங்கினேன்.

'சாகப் போகிறோம்' என்று நாம் தெரிந்தே இறங்கியபோது, நீ தடுக்கவில்லை, பிடித்திருந்தாய். 'சாக மாட்டோம்' என்று தெரிந்தும், இறங்கவிடாத ஓர் வாழ்க்கையில் தடுப்புண்டு, பிடிப்பில்லை.

-ஞானசேகர்