புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Wednesday, July 05, 2006

சுயப்பிரசவம்

(டாக்டரான தனது சொந்த அண்ணன் தனக்குப் பிரசவம் பார்த்ததால், சேலையில் தூக்கில் தொங்கினாள் ஒரு தமிழச்சி, போன நூற்றாண்டின் கடைசியில். மகன் பிறக்கப் போகும் நேரம் கெட்ட நேரம் என்று ஜோசியர் சொன்னதற்காக, தன்னைத் தலைகீழாய்த் தொங்கவிட்டு, சில நிமிடங்கள் பிரசவத்தைத் தள்ளிப் போட்டாள் இன்னொரு தமிழச்சி, சங்க காலத்தில் ஒரு சோழ நாட்டில். இவர்கள் இருவரைப் பற்றியும் நான் கருத்துகள் ஏதும் சொல்ல விரும்பவில்லை. ஆனால், கால வித்தியாசங்கள் ஏதும் இல்லாமல், இக்கவிதையில் வருவது போல் நிகழ்ந்து கொண்டிருக்கும் பிரசவங்களுக்கு என் கவிதையால் கருத்து சொல்வேன்)

மூத்தரப் பாவாட
மொழங்காலுக்குச் சுருட்டிக்கிட்டு
மூலையில தூங்குறா
மூணுவயசு மூத்தமக.

குச்சி ஐசு ரெண்டு
அப்பனுக்கு ஆர்டர் போட்டுப்புட்டு
அம்மணமாத் தூங்குறா
நடுவுல சின்னமக.

பொட்டச்சியப் பெக்கப்போற
பொட்டக் கழுதக்கித்
தொணையெல்லாம் ஏதுக்குன்னு
வெசலூரு கெரகாட்டம்
போயிட்டாரு எம்புருஷன்.

ரெண்டு பொட்டகளப்
பெத்துப்போட்ட முண்டச்சின்னு
ஊரெல்லாம் வசவுனாலும்
எங்கப்பன் பொறப்பாரு
மூணாவது மாணிக்கமா
ஆம்பள சிங்கமா
அடுத்ததா ஏன் வவுத்துல.

நடுசாமம் ரெண்டுமணி.
நெஞ்சுல ஒதக்கிறான்
அடிவவுத்த முட்டுறான்
வவுத்துல குத்துறான்
கருவறக் கதவத்
தட்டித்தட்டிப் பாக்குறான்

நாலு உசிர உட்டுப்புட்டு
நடுத்தெரு ஆட்டத்துல
நழுவுந்துணி பாக்கப்போன
புருஷனத்தான் கூப்புடவோ?

தலக்கி எண்ண வெச்சு
பரலோக வழிகாட்ட
பேரப்பய வேணுமின்னு
திண்ணையில தவமிருக்கும்
காலு வெலங்காத
மாமனாரக் கூப்புடவோ?

ஆம்பள வித்து
அழிஞ்சுபோன சிருக்கிவந்து
மருமகளா வாச்சுட்டான்னு
ஊரெல்லாம் ஒப்பாரி
சமயக்கட்டில் படுத்திருக்கும்
மாமியாரக் கூப்பிடவோ?

ரெண்டு உடம்பத் தூக்கிக்கிட்டு
ரெண்டு தெரு தாண்டிப் போயி - இந்த
ரெண்டு மணி நேரத்துல - முன்ன
ரெண்டு பிரசவம் பாத்துப்போன
வெங்கலமண்டாயி கூப்புடவோ?

மனுசப்பயக் கூப்புடவோ - இங்க
உருப்படியா யாருமில்ல.
சாமிகளக் கூப்புட்டவோ - அதுக
வந்ததாவும் சரித்திரமில்ல.
ஒக்காந்து யோசிக்கவோ - இது
தள்ளிப்போடும் காரியமில்ல.
ரெண்டுபுள்ள பெத்துப்புட்டேன் - இப்ப
ஆபத்துக்குப் பாவமில்ல.

கட்டுலுல படுத்தாக்க
ராத்திரி வேளையில
சத்தம் வருதுன்னு
எம்புருஷன் சாச்சுவெச்ச
இரும்புக் கட்டுல
திருப்பிப் போடுறேன்.

எங்காத்த சீர்செஞ்ச
கட்டுலுக்குக் கீழே
பாயில படுத்திருக்குக
என்னோட மகாராணிக ரெண்டும்!
கட்டுலுக்கு மேல
முண்டக்கட்டயா ஒக்காந்துருக்கேன்
எங்காத்தாவோட மகாராணி நானு!

கட்டுலோட ஒருகாலோட
பீச்சாங்காலக் கட்டி
கட்டுலோட மறுகாலோட
சோத்தாங்காலக் கட்டி
கையால முட்டுக் குடுத்து
ஒதட்ட வாய்க்குள்ள வெச்சு
கண்ண உள்ள தள்ளி
ஒம்பதரைமாசப் பொதையல
வெளிய தள்ளுறேன்!

அண்ணன் தம்பிக
இல்லாம பொறந்த நான்
கழுத்து சுத்தி இருந்த
தொப்புள் கொடி பத்தி
கவலப்பட என்ன இருக்கு?

தொப்புளுக்குக் கீழ பாக்குறேன்.
நாசமாப் போச்சு!
திரும்பவும் பொறந்திருச்சு
பாழாப்போன பொட்ட!

பொறந்த மேனியாவாயே
ரெண்டு பேரும் இருக்கோம்
விடியற வரைக்கும்.
கதவத் தொறக்குறேன்
ஒத்தசேல சுத்திக்கிட்டு.
மூலையில ஒக்காந்துட்டேன்
எழவு வீடுபோல.
கொழந்த தொடக்கிறாரு
கெரகாட்டம் பாத்தவரு.

சேல வாய்சொருகி
எட்டி நின்னு பாத்துப்போற
மாமியாரே சொல்லுங்க
"சத்தியமாத் தெரியலையா
ஒங்க மொகம்
ஏன் புள்ள மேல?".

நாற்காலி வண்டியில
பார்வையிட வந்துபோகும்
மாமனாரே சொல்லுங்க
"சத்தியமா கேக்கலையா
கட்டுலப் பாடையாக்கிச்
சவமொன்னு பொறந்த சத்தம்?".

கட்டுலுக்கு மேல ஒண்ணு
கட்டுலுக்குக் கீழ ரெண்டு
மூணுக்கும் நாளக்கி இந்த
முண்டச்சி கெதிதானோ?

கட்டிப் போட்டுத்தான்
கருவறை திறக்கணுமோ?

பிறப்பு வீட்டுலதான்
மயானம் பாக்கணுமோ?

தன் ரத்தம் பொறக்கையில
தன் சதையும் ஆடாம போகணுமோ?

ஆம்பளயா மட்டுமே
அவதாரம் எடுத்துவந்து
அதிசயங்க காட்டிப்போகும்
ஆம்பள சாமிகளே!
பொம்பள நான் கேக்குறேன்
பதில் சொல்ல மாட்டீகளோ?

ஒத்தக் கண்ணுல
கோவம் கொப்பளிக்க
மனுசப் பயலுகளக்
களையெடுக்க வேணுமின்னு
அவதாரம் எடுக்க
அவகாசம் ஏதும் இருக்குதான்னு
தோதிருந்த சொல்லுங்க
ஆம்பள சாமிகளா!

அவசரமா முடிவெடுத்து
அவதாரம் எடுக்கையில
மறந்து தொலச்சிடாதீக.
மூணு பொட்டச்சிக்குத் தம்பியா
ஏன் வவுத்துல பொறந்து பாருங்க!

கடவுளையே வவுத்துல சொமந்தாலும்
சொயமாத்தான் பாத்துக்குவேன்
ஏன் பிரசவம் எனக்கு நான்.
அதுவரைக்கும் நிம்மதியா
செவுத்துல சாஞ்சு நிக்கும்
ஆத்தா தந்த இரும்புக் கட்டில் மட்டும்!

-ஞானசேகர்

17 comments:

Ahsan said...

அருமை! இயழாதவர்களின் விரக்தியை, நம் குல ஏழைப்பெண்களின் சொல்ல வொண்ணா சோகத்தைச் சிந்தித்திருக்கிறீர்கள்.

நன்மனம் said...

நல்ல படைப்பு!

Ahsan said...

அருமை! இயழாதவர்களின் விரக்தியை, நம் குல ஏழைப்பெண்களின் சொல்ல வொண்ணா சோகத்தைச் சிந்தித்திருக்கிறீர்கள்.

Anonymous said...

Solvartharkku vaarthai illai.. Excellent.. Keep it up!

கைப்புள்ள said...

//பிறப்பு வீட்டுலதான்
மயானம் பாக்கணுமோ?

தன் ரத்தம் பொறக்கையில
தன் சதையும் ஆடாம போகணுமோ?

ஆம்பளயா மட்டுமே
அவதாரம் எடுத்துவந்து
அதிசயங்க காட்டிப்போகும்
ஆம்பள சாமிகளே!
பொம்பள நான் கேக்குறேன்
பதில் சொல்ல மாட்டீகளோ?//
ஞானசேகர் அவர்களே!
அருமையான படைப்பு. படித்ததும் கண்கள் கலங்கிவிட்டன.

செங்கமலம் said...

excellant.. I have no word to describe my feeling.. good one..
expecting many more like this from you.

சிவமுருகன் said...

நல்ல கவிதை

//சாமிகளக் கூப்புட்டவோ - அதுக
வந்ததாவும் சரித்திரமில்ல.//

ஆனால் இந்த வரிகள் கொஞ்சம் நெருடியது, தாயுமானவராய் வந்தவன் திருச்சி தாயுமானவர்.

Thekkikattan said...

"ஞான" சேகர்

//நாற்காலி வண்டியில
பார்வையிட வந்துபோகும்
மாமனாரே சொல்லுங்க
"சத்தியமா கேக்கலையா
கட்டுலப் பாடையாக்கிச்
சவமொன்னு பொறந்த சத்தம்?".//

திரும்பவும் அழ வெச்சீட்டியளே... ;-((

//ஆம்பளயா மட்டுமே
அவதாரம் எடுத்துவந்து
அதிசயங்க காட்டிப்போகும்
ஆம்பள சாமிகளே!//

ஹூம்... எல்லோரும் படிக்கணும், படிப்பார்களா?

நன்றி சேகர்.

aaradhana said...

Really a good posting. This has affected me a lot. well done Sir.

delphine said...

Nice write up sir. Really heart breaking. could you please go through my blog http://lifeexperiencenhospital.blogspot.com/
i have written one about this in English which i came across in my life. sickening,

மா சிவகுமார் said...

சேகர்,

அந்தத் தாய் கூட முதலில் குழந்தை பிறக்கும் வரை தன் தந்தை வந்து தன் வயிற்றில் மகனாகப் பிறக்க வேண்டும் என்றுதானே விரும்புகிறாள். குழந்தை பிறந்த பிறகு பேசும் பெண் பெருமை வாக்கியங்கள் அதனால் போலியாக ஒலிக்கின்றன. அதைத்தான் சொல்ல வந்தீர்களா?

சுய பிரசவம் பார்த்துக் கொள்ளும் அந்தப் பெண்ணுக்கு பெண் எதிலும் சளைத்தவள் இல்லையென்று தன் மூன்று மகள்களையும் தன்னைப் போல உரம் ஏற்று வளர்க்கத் திடம் ஏன் வரவில்லை? கூத்துப் பார்க்கப் போய் விடும் ஆண்மகனின் ஒப்புதலுக்கு ஏன் ஏங்கி நிற்கிறாள்?

அன்புடன்,

மா சிவகுமார்

J.S.ஞானசேகர் said...

எனது எழுத்துக்கு மரியாதை தந்து, இதுவரை பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள். இப்பதிவைப் பரிந்துரை செய்த 'நன்மனம்' அவர்களுக்கு எனது வணக்கங்களும். சரி, கருத்து சொன்னவர்களுக்கு இனி கருத்து சொல்கிறேன்.

தெகா அவர்களே, திரும்பவும் அழ வெச்சுட்டேனே? இதுக்கு முன்னாடி எப்ப? வாழ்க்கைத்துணை பதிவிலா? 'இதெல்லாம் யாரும் படிக்க மாட்டாங்க' என்று அடிக்கடி என் பதிவுகளில் வந்து சொல்லிவிட்டுப் போவீர்களே, அந்த ஏக்கம்தான் உங்களிடம் எனக்குப் பிடித்த ஒன்று. பூமி தழைக்க வேண்டும் என்று பொழிவதில்லை மழை; பூமியிடம் வாங்கிய நீரை அதனிடம் திருப்பித் தருவதே மழையின் வேலை.

இப்பதிவின் மூலம் நான் சொல்ல நினைத்தது பெண் பெருமையோ, நாத்திகமோ, ஆணாதிக்கமோ அல்ல. பிரசவ நேரத்தில் ஒரு பெண்ணின் மனநிலையை வழக்குத் தமிழில் சொல்ல வேண்டும் என்பதே. எனக்குத் தெரிந்த வரை (சுடுகாட்டுச் சபதம், பிரசவ சபதம்) பிரசவ மனநிலையையும், இடுகாட்டு மனநிலையையும் புரிந்து கொள்வது ரொம்ப கஷ்டம். அதுவும் ஒரு திருமணமாகாத ஆண், பிரசவ மனநிலை சொல்வது மிகவும் கஷ்டம். நான் கஷ்டப்பட்டு சொன்னதைப் பலபேர் உள்ளது உள்ளபடி புரிந்து கொண்டதில் மகிழ்ச்சியே.

கொசுறு : இக்கவிதையில் ஒரே ஒரு வார்த்தையை அமைக்க ரொம்ப கஷ்டப்பட்டேன்; சில மணிநேரங்கள் செலவழித்தேன். அந்த வார்த்தை - கருவறைக்கதவு.

"காதலும்
கடவுளும்
கருவறைக் கதவைத்
திறக்கும் முயற்சிகள்" - நானே தான்

-ஞானசேகர்

தம்பி said...

ஞானசேகர்,

கண்ணிரை வரவழைத்து விட்டது உங்கள் எழுத்துக்கள். மூன்றாவதாக பிரசவிக்க போகும் ஏழைத்தாயின் இயலாமையை இவ்வளவு அழகா யாருமே சொல்லவில்லை. அவளின் எண்ண ஓட்டங்களின் ஊடே வாசிக்கும் ஒவ்வொருவரும் செல்ல முடிவது உங்கள் எழுத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றி. தாமதமாக படித்தாலும் மனதுக்கு மிக்க நிறைவை தந்தது.

அன்புடன்
தம்பி

narasi said...

http://idlyvadai.blogspot.com/2006/07/blog-post_115286335037099601.html is a false post. I have tried to post a comment and its yet to publish.

Check out here for more details http://narsidude.blogspot.com/2006/07/disgusting.html

சுந்தர் / Sundar said...

படித்தேன் ரசித்தேன்.

நிலாரசிகன் said...

//நாலு உசிர உட்டுப்புட்டு
நடுத்தெரு ஆட்டத்துல
நழுவுந்துணி பாக்கப்போன
புருஷனத்தான் கூப்புடவோ?//

இதில் உள்ள நியாயமான வலி,வேதனை,மறுக்கப்பட்ட கோபம் கவிதை முழுவதும் பரவி இருக்கிறது...
ஒரு சில வார்த்தைகள் கிராமத்து நடையில் இருந்து மாறுபட்டு சுத்த தமிழாகவும் தெரிகிறது. உதாரணம் "பார்வை"

மனதை பிழியும் படைப்பு. வாழ்த்துக்கள்.

செல்வேந்திரன் said...

aazham !!