புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Saturday, January 20, 2018

சங்கறுக்கும் நக்கீரனோ?

(எதனையும் அதனதன் இயற்பெயரால் அழைப்பதே ஞானத்தின் ஆரம்பம் என்கிறது ஒரு சீனத்துப் பழமொழி. சில நேரங்களில் இயற்பெய‌ர்கள் மதச்சாயல் கொண்டிருப்பதுண்டு. அதனால் அந்த இயற்பெயர்களைச் சொல்லி, எளிதாக‌ மக்களிடையே வெறுப்பை விதைப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் ஆட்சி மன்றத்தில் இருப்பவர்கள் என்பதும், அவர்களின் இலக்கிற்கு இத்தேசத்தின் அப்பாவி மக்கள் பலியாகி விடுகிறார்கள் என்பதும் நமக்கான சாபம் என்பேன்)

எட்விகி அண்டோனியா அல்பினா மையினோ
என்றே மேடைகளில் முழங்கினார்கள்
அரசியலுக்கு வந்த‌ சோனியா காந்தியை!

ஜேம்ஸ் மைக்கேல் லிண்டோ
என்றே நீட்டிச் சொன்னார்கள்
கேட்ட நேரத்தில் தேர்தலை அனுமதிக்காத ஆணையரை!

ஜோசப் விஜய்
என்று மெர்சலாக்கினார்கள்
ஒரு திரைப்பட நடிகரை!

திலீப் குமார்
என்று திரும்பி வரச் சொன்னார்கள்
ஏ ஆர் இரகுமானை!

அப்துல் ஹமீது என்றார்கள்
மனுஷ்யபுத்திரனை!

நீளும் பட்டியலில் இன்று
விக்டர் ஜேம்ஸ் என்று பரப்பிவிடுகிறார்கள்
வைரமுத்துவை!

நாளை
இக்கவிதை எழுதியவன்!

நாளை மறுநாள்
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று
பாகிஸ்தானையும் சேர்த்துச் சொன்ன‌
கணியன் பூங்குன்றன்!

- ஞானசேகர்

No comments: