ஏதோ ஒரு பாதம்
என்றோ சிந்திய
ஒருதுளி ரத்தம்
இன்று ஓர் ஒற்றையடிப்பாதை!
-இரகுமித்ரன் (எனது பல ஒருநாள் நண்பர்களில் ஒருவன்)
மன்னனின் தலைமகனையும், ஓவ்வொர் எகிப்தியரின் தலைமகனையும்,எகிப்தியர்களுடைய கால்நடைகள் ஈன்ற முதல் ஆண் குட்டிகளையும், கன்றுகளையும் கொள்ளை நோய்தாக்கி இறக்கச் செய்வேன்.
- விவிலியம் (பழைய ஏற்பாட்டில் மோசேயிடம் கர்த்தர்)
("நான்" என்ற கதாபாத்திரம் இல்லாத எனது முதல் சிறுகதை இது. பெண் கதாபாத்திரத்திற்குப் பெயர் உள்ள இரண்டாம் சிறுகதையும் கூட. பள்ளத்தைப் பற்றிய மேட்டின் கதையிது. பள்ளத்தில் கிடக்கும் தத்தம் மக்களை மேடேற்ற துடித்த இருவேறு மனிதர்களின் கதையிது. அதில் ஒருவனை, இக்கதையின் கடைசியில் ஒரு மேட்டில் கொண்டுபோய் நிறுத்துகிறேன். அங்கிருந்து நீங்கள் பள்ளத்தைப் பார்க்கும்போது, இன்னொருவனின் கதை உங்கள் மனக்கண்ணில் தொடங்கலாம்; தொடங்க வேண்டும்!)
வேப்பமரங்களின் (44+16)+(8+2)+(7+1)+(2+1)+(1+2)=84 கிளைநுனிகள் ஒடிபட்டன. குளங்களின் pH அளவு பூச்சியத்தை நோக்கி சற்று முன்னேறியது. அவ்வூரின் இரண்டு தெருக்களிலும், ஒரு மருதநில கிராமத்திற்கான அனைத்து நடவடிக்கைகளும் என்றும்போல அன்றும் நடந்துகொண்டிருந்தன. அவ்விரு தெருக்களுக்கு இடையே வில்லின் முதுகுபோல் தரிசுமேடு;அதன் முனைகளில் கட்டப்பட்டு இருந்தன சாதிகள். பல நாட்களாக முறுக்கிக் கொண்டிருக்கிற நாணில் அம்புதான் அம்புடவில்லை.
கீழத்தெரு மக்களைக் கீழோர் என்றும், மேலத்தெரு மக்களை மேலோர் என்றும் மனிதன் பிரித்துக்கொண்டான். என்றோ ஒருநாளில் திசைகளை வைத்து பெயர் சூட்டப்பட்ட அத்தெருக்களின் மேல்-கீழ் வித்தியாசம் தெரியாமல், என்றும்போல அன்றும் கீழத்தெரு மக்களை முதலில் தொட்டுவிட்டு, மேலத்தெருவிற்கு மெதுவாக நகர்ந்துபோனான் சூரியன். அவனுக்கு முன்னால் மூன்று அம்புகள் ஏற்கனவே புறப்பட்டுவிட்டன, விடியலைத் தேடி சூரியனுக்கு எதிர்திசையில்.
கீழத்தெருவைச் சேர்ந்த மூன்று வாலிபர்கள், மேலத்தெருவின் குருசடி அருகே சைக்கிள் ஓட்டிக்கொண்டு வருவதை யாரும் கவனிக்கவில்லை. அதில் ஒருவன் மணி அடிக்கவும், கோலம் போட்டவர் - சாணி சுமந்தவர் - கோவில் திண்ணையில் அமர்ந்திருந்தவர் - தாய்மார்பில் பால் குடித்துக்கொண்டு இருந்த ஒரு குழந்தையைத் தவிர, வீதியோரம் இருந்த அனைவரும் திரும்பிப் பார்த்தனர். கோலம் போட்ட ஒருத்திக்காக அடிக்கப்பட்ட அந்த மணி, அவளைத் திண்ணைக்குத் துரத்தியது. கோவிலுக்கு அருகில், அந்த மூவரையும் மேலத்தெரு இளைஞர்கள் நான்கு பேர் மறித்தனர்.
இத்தனை நாள், தனக்கு முன்னால் செருப்பு போடாத - வேட்டியைத் தூக்கிக் கட்டாத ஒரு கூட்டம், இன்று சைக்கிளில் வந்ததால், வாய்த்தகராறு ஆரம்பித்தது. கூட்டம் அதிகமாவதைக் கண்டு, பாப்பாத்தியின் அய்யா அங்கு ஒடிவந்தார்.
"டேய் டேய் டேய் விடுங்கடா. கோயிலுக்கு முன்னாடி நின்னு பேசுற பேச்சாடா இது. அம்மா அக்கானுட்டு. அவன் சைக்கிள அவன் ஒட்டுறான். ஒங்களுக்கு ஏன்டா இந்தக் கோவம்? அவனுக மூத்தரம் ஆத்தடோ போன என்ன? கொளத்தோட போன என்ன? போயி சோலியப் பாருங்கடா".
"இவங்கள இப்புடியே விட்டா, நம்மல மேச்சிட்டுப் போயிடுவாங்க மாமா. அப்பறம் நம்ம வீட்டுக்குகுள்ளே வெந்தலபாக்கு தட்டோட வந்து பொண்ணு கேப்பானுங்க"
"ஆமாடா, சும்மா சைக்கிள் ஓட்டிக்கிட்டுப் போறவனுக்கு அடியெடுத்து குடுங்க".
மேலத்தெருவில் கொஞ்சம் படித்திருத்த பாப்பாத்தியின் அய்யா, கீழத்தெரு சைக்கிள்காரர்களுக்கு ஆதரவாகத்தான் பேசினார். அவர்மேல் இருசாரரும் வைத்திருந்த மரியாதையில், சொற்கள் மட்டும் மோதிக்கொண்டிருத்தன. அந்த மோதலையும் ஒரே ஒரு அலறல் சொல், முடித்து வைத்தது. அந்த சொல் "யய்ய்ய்யா"; சொன்னவள் பாப்பாத்தி. மொத்த ஊரும் பாப்பாத்தியின் வீடு நோக்கி ஓடியது. அகவிக்கொண்டிருந்த மயில்கள் அமைதியாயின. இந்நிகழ்ச்சிகள் எதிலும் சுவாரசியம் காட்டாமல், சூரியன் நகர்ந்து கொண்டிருந்தான்.
தாயில்லாத பாப்பாத்தி, முதன்முதலில் தாயாகப் போவதற்காகப் போட்ட சத்தம் அது. தன் ஒரே மகளான பாப்பாத்தியின் பேறுகாலத்திற்கு முன்னேற்பாடாக, சுற்றுவட்டாரத்தில் பிரசவத்திற்குப் பிரபலமான நான்கு கிழவிகளை ஒரு மாதமாக வீட்டில் தங்கவைத்துக்கொண்டுருந்தார் அய்யா. நான்கு கிழவிகளாலும் முடியவில்லை; பாப்பாத்தியின் தலச்சம்பிள்ளை இறந்தே பிறந்தது.
சைக்கிள்காரர்கள் மூன்றுபேரும், தங்கள் இயலாமையைக் காட்டிக் கொள்ளாமல், வயலுக்குச் சென்றனர். ஆர்ப்பரித்து ஆரம்பமான மேலத்தெரு அமைதியாய்ப் போனது. ஆளாளுக்கு எதையெதையோ பேசிக்கொண்டு இருந்தார்கள்.
"இருத்தாலும் மாமாவுக்கு இப்படி கர்த்தர் பண்ணக்கூடாதுய்யா. மருமகன் இப்பதான் சைனாகாரன் சுட்டு செத்தாரு; வருஷம் திரும்பல; அதுக்குள்ள இன்னொரு பெரியகாரியம். மாதாதான் காப்பாத்தணும்"
"எந்த நேரம் இந்த **** ** பயலுக சைக்கிள்ல ஏறுனானுகளோ?"
"இனாம் கிராமம் மொறைய சர்க்காரு தடை செஞ்சுருச்சுல்ல. அதான், அவனவனுக்கு வெள்ளாம நெலம் கெடைக்கவும், ரொம்ப ஆடுறானுங்க"
தலச்சம்பிள்ளையை வீட்டின் கொள்ளைப்புறத்தில் புதைத்து ஒரு மரம் நட்டுவைப்பதுதான் வழக்கம். பாப்பாத்தியின் அய்யா அப்படி செய்யவில்லை. தனது வேட்டியை உருவி, பேரனைச் சுற்றினார். யாரையும் துணைக்கு அழைக்காமல், தனியாகவே சென்று தனது பூர்வீக வயலின் ஏதோ ஓர் இடத்தில் புதைத்தார். புதைத்த இடம் தெரியாமல் இருக்க, வயல் முழுவதும், ஒருமுறை உழுதுபோட்டார்.
அய்யா வீடு திரும்பினார். சைக்கிள்காரர்களை எதிர்பார்த்து, சாயங்காலம் இளைஞர்களின் கூட்டம் ஒன்று மேலத்தெருவில் கூடி இருந்தது. அய்யா வீட்டில் நடந்திருந்த துக்ககாரியத்துக்காக, அவர்கள் சைக்கிளைத் தள்ளிக்கொண்டே சென்றார்கள். என்றோ ஒருநாளில் திசைகளை வைத்து பெயர் சூட்டப்பட்ட அத்தெருக்களின் மேல்-கீழ் வித்தியாசம் தெரியாமல், என்றும்போல அன்றும் கீழத்தெரு மக்களை முதலில் விட்டுவிட்டு, மேலத்தெருவிற்கு மெதுவாக நகர்ந்துபோனான் சூரியன்.
மறுமணம் வேண்டாம் என்று தகப்பனோடே தங்கிவிட்டாள் பாப்பாத்தி. இந்த ஆறுமாதங்களுக்குள், கீழத்தெரு மக்களின் சைக்கிள் பயணம், மேலத்தெருவில் அன்றாடமாகிப் போனது. சர்க்கார் தனது தெருவிற்குக் கரண்ட் கொடுத்தபொழுது, கீழத்தெருவிற்கும் வாங்கிக் கொடுத்தார் அய்யா. சைக்கிள், கரண்டு, பள்ளிக்கூடம், மண்ரோடு, பட்டா இப்படி பல விஷயங்களில் கீழத்தெரு மக்களுக்கு உதவிக்கொண்டு இருத்த அய்யாவை, மேலத்தெரு கவனித்துக் கொண்டுதான் இருத்தது. நாண் அப்படியேதான் இருக்கிறது; அம்புகள்தான் மேலதெருவிற்கு இடம்பெயர்ந்துவிட்டன.
தன் வம்சத்திற்கு ஓர் ஆண், ஒரு பெண் என மிச்சமிருத்த பாப்பாத்தி குடும்பத்தில், ஒரு நச்சுப்பாம்பு கடிக்க பாப்பாத்தியும் இறந்துபோனாள். ஒரே வருடத்தில் மூன்று பெரிய காரியங்கள். ஆனால் அந்த பெரிய மனுஷர், அய்யா, மனம் தளரவில்லை. மகளைக் கல்லறையில் புதைத்துவிட்டு வந்த கையோடு, தனது வயலில் ஒரு குண்டை ஒரு கீழத்தெரு குடும்பத்திற்குக் கொடுத்தார்.
சரி எழவு விழுந்த அன்றே பிரச்சனை செய்யக்கூடாது என்று மேலத்தெருவும் விட்டுப்பிடித்தது. பாப்பாத்தி இறந்த மறுநாள் அதிகாலையில், மேலத்தெரு வாலிபன் ஒருவன் தலைதெறிக்க ஓடிவந்தான். அவன் சொல்வதைக் கேட்டு, பாப்பாத்தியின் கல்லறை நோக்கி ஊரே ஓடியது. அய்யாவும் ஓடினார். கூட்டத்தை விலக்கிப் பார்த்தார். அவர் அருகில் போகாமல் இருக்க, சிலபேர் அவர் அருகில் தயாராக இருந்தனர்.
பாப்பாத்தியின் கல்லறை, தலைமாட்டில் தோண்டப்பட்டு இருந்தது. ஒருபக்கம் கழுத்தில் கத்தி குத்துப்பட்டு, ஒரு நரி செத்து கிடந்தது. மறுபக்கம், கையில் கத்தியுடன் வெறித்த விழிகளுடன் மண்ணைப் பார்த்துக்கொண்டு ஒருவன் உட்கார்ந்து இருந்தான். மேலத்தெரு பேச ஆரம்பித்தது.
"பொதச்சதுக்கப்பறம் முள்ளு போட்டிகளா இல்லையாப்பா?"
"பச்சமண்ணு வாசனக்கி நரி தோண்டிருக்கு பாருய்யா!"
"ஆளு புதுசா இருக்கான்; பாக்குறதுக்குக் குடுகுடுப்பன் மாதிரி இருக்கான்"
அருகில் போக எத்தனித்த அய்யாவைத் தடுத்தனர். "கொள்ளி போட்ட ஆளு, மொகத்த திரும்ப பாக்கக் கூடாது மாமா". ஒருவன் அருகில் போய், கல்லறைக்குள் எட்டிப் பார்த்துவிட்டு, முகமெல்லாம் தெரியவில்லை என்றான். அய்யா அருகில் சென்றார். தனி ஆளாகக் கல்லறையை மூடினார். கத்திக்காரனை வீட்டிற்குக் கூட்டிச் சென்றார். முன்னர் இவ்வூருக்கு வந்துகொண்டிருந்த குடுகுடுப்பனின் மகன் என்றும், அவர் இறந்துவிட்டதால் தான் தொழிலுக்கு வந்ததாகவும் சொன்னான். வேறு எதுவும் அவனிடம் கேட்கப்படவில்லை. அவனும் சாயங்காலம் ஊரைவிட்டுப் போய்விட்டான்.
அய்யாவுக்குத்தான் இப்பொழுது யாருமே இல்லை. நின்றுபோன சந்ததியின் கடைசி சாட்சியாக, தினமும் தனது மகளின் கல்லறையில் உட்கார்ந்துகொண்டு தனியாக பேசிக்கொண்டு இருப்பார். தனது அய்யா, ஆயா (அம்மா), செத்தேபிறந்த தனது அண்ணன், மனைவி, மகள் எல்லாருடனும் அய்யா இப்படிதான் பேசிக்கொண்டு இருக்கிறார்.
கொஞ்சம் என் கூடவே நீங்களும் சத்தம் போடாம வாங்க. அவர் பக்கத்துல போய் கொஞ்சநேரம் நிற்போம். "இந்தா தெரியுறது மேலத்தெரு. இந்த மேட்ட தாண்டி அந்தப்பக்கம் போனா கீழத்தெரு. ஒருகாலத்துல சண்டை போட இருந்த இந்த ரெண்டு ஊர்களையும் அய்யாதான் சமாதானமா வெச்சிக்கிட்டு இருக்காரு. இனிமே சண்ட வரவும் வாய்ப்பில்ல. இந்த ஊர்களுக்கு எடையில இருக்க இந்த மேட்ட, வருங்காலத்துல கவர்மெண்டு தூத்துப்புட்டு ரோடுகூட போடலாம். அப்ப ஊர்காரங்க சம்மததோட இந்தக் கல்லறையும் எடம் மாத்தப்படலாம். அதெல்லாம் நடக்கறப்ப, பாப்பாத்தி கல்லறைக்குள்ள, அவ தலக்கிப் பக்கத்துல ஒரு நைத்துபோன துணி இருக்கலாம். அதுக்குள்ள அவளோட தலச்சம்பிள்ளையோட மண்டஓடு இருக்கலாம். அத வெச்சவன தடுக்கப் போனதுக்காக, ஒருவன் அந்த எடத்துல கழுத்துல கத்தி குத்துப்பட்டு செத்துப்போய் இருக்கலாம்".
நாணில்லாமல் ஒரு வில்!
- ஞானசேகர்
(என் தாய்க்குத் தலைமகன்)
No comments:
Post a Comment