புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Saturday, June 27, 2009

திசைதொலைக்கும் கடலோடிகள்

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.
- வள்ளுவம்


உலகம், ஒரு யானை மாதிரிங்க. பிறவிக்குருடர்கள் போல, நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு இடங்களைத் தொட்டுப்பார்த்து எப்படிஎப்படியோ புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம். யாருக்கும் இல்லாத தும்பிக்கைதான் உலகம் எனத் தூக்கிவிடுகிறாள் தாய் ஒருத்தி. எல்லாவற்றையும் தாங்குகிற கால்கள்தான் உலகம் என இறக்கிவிடுகிறான் தந்தை ஒருவன். எதிர்த்து நிற்கும் தந்தம்தான் உலகம் என உசுப்பிவிடுகிறார் ஒரு குரு. வாலைப் பிடித்திழுத்து மதமடக்கும் நட்புதான் உலகம் என ஆசைகாட்டித் தந்தம் கடத்துகிறான் ஒரு சுயநலக்காரன். திடீரென ஒருவன், "கண்டுபிடிச்சிட்டேன்! காதுக்குள்ள எறும்பு போனா யானக்கிக் கோவம் வருது. எல்லாரும் நான் சொல்றதக் கேளுங்க. இல்லாட்டி எறும்பக் காதுக்குள்ள விட்டுடுவேன்". அவன் காட்டும் திசையில் ஓட ஆரம்பிக்கிறோம். எறும்பு என்று ஒன்று உண்மையிலேயே இருந்திருந்தால்கூட, யானையே புரியாத குருடர்கள் நெரிசலில் செத்தேபோயிருக்கும். வயிறருகில் வழுக்கி விழுபவர்கள் யானையைப் பழிக்கிறார்கள். எதையும் கண்டுகொள்ளாமல் நின்றுகொண்டே தூங்குகிறது யானை.

அமர்ந்த உடனேயே தூங்குவதற்குத் தயாரானேன். டிக்கட் எடுக்க வேண்டும். கடைசி நிறுத்தத்திற்கு டிக்கட் கேட்டு ஒரு தீர்மானம் கொண்டுவந்தேன். பஸ்ஸக் கடத்தப்போறதா சந்தேகப்பட்ட நடத்துனர் அதிகம்பேச, இருக்கையில் இருந்து ஓட்டுனர் எழுந்திரிக்க, தூக்கமயக்கத்தில் சகபயணிகள் எதிர்க்க, வெளிநடப்பு செய்தேன். இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலையில், என்னை இறக்கிவிட வேற நல்ல இடமே கெடைக்கலையா? பழக்கப்படாத பாதை; சுற்றி இருள்; கடந்து செல்லும் வாகனங்களின் ஹாரன் சத்தம்கூட எரிச்சலூட்டும் தனிமை; அதிகாலை இரண்டுமணியின் மார்கழிக்குளிர்.

வெகுநேரமாக ஒருசிந்தனையும் இல்லாமல் ஒரு பாலத்தின் சுவரில் நான் அமர்ந்திருந்தபோது, சாலையின் மறுபுறம் முட்புதர்களுக்கு இடையே ஒரு சிறு விளக்கொளி. அருகில் சென்றபோதுதான் தெரிந்தது, அது ஒரு கல்லறை. சிலுவைகளை எண்ணினேன். சத்தம்போட்டு "இருவத்தி ஆறு" எனக் கத்தினேன். சரிசொல்லிப் போனது ஒரு லாரியின் ஹாரன்.

ஏதோ பாட்டு முனகினேன். அரிப்பாரைத் தாங்கும் நிலம் என்னையும் தாங்கிக்கொண்டு இருந்தது. சிறுநீரின் சத்தத்தில் இரட்டைக்கிளவி பார்க்கும் அளவிற்குத் தனிமை. அதையும் கலைத்தது இன்னொரு கிளவி. தடதட கடகட சலசல. சரியாக கேட்கவில்லை. நீர் முடித்து, கண்காதுகள் துரிதப்படுத்தினேன். கடகட தான். கல் எறியப்பட்ட சத்தம். மீண்டும் கடகட. கடகட. கடகட. கற்கள் வரும் திசை நோக்கி நடந்தேன். அது ஒரு குழி. பத்துக்குப் பத்து நீளஅகலம் இருக்கும். ஆழமெல்லாம் இருள்மூடிக் கிடந்தது. இரண்டடி வரை கொஞ்சம் சுவர்மட்டும் தெரிந்தது.

யாரென்று கேட்டேன். கல் வந்தது. யாரது. கல். அமைதியாக நின்றேன். கல். எல்லாக் கற்களும் நான் நிற்கும் இடத்தின், எதிர்ப்பக்க வலதுமூலையில் இருந்து வந்தன. கல். இருகைகளின் விரல் நுனிகளில் சட்டென்று ஆரம்பித்து, ஜிவ்வென்று மேலேறி, காதுகளுக்கு அருகில் சில்லென்று சிலிர்த்துவிட்டு, நடுமண்டையின் உச்சியில் பட்டென்று தாக்கியது ஒரு மின்சாரம். பின்னங்கால்கள் பிடறியில் அடிபடாமல் ஓடி, நுரையீரல் கேட்டுக்கொண்டதற்கிணங்க நின்றேன். எதிரில் சிமிட்டிக்கொண்டிருந்தது ஒரு கிராமம். மெதுவேகமாக நடந்தோடினேன்.

மராட்டிய மாநிலம் சனிசிங்னாபூருக்குள் நுழைந்துவிட்ட ஒரு பிரமை. பூட்டப்படாத வீடுகள். யாரும் இல் உள் இல்லை. ஆறுதல் பரிசாகச் சற்று தூரத்தில் மனிதக்குரல்கள். ஆங்காங்கே கிறிஸ்மஸ் ஸ்டார் கட்டப்பட்ட வீடுகள்; இரண்டு நாட்களுக்குமுன் நினைவுநாள் அனுசரிக்கப்பட்ட எம்ஜிஆர் நிழற்படம். அஞ்சாமை என்ற திராவிடர் உடைமையைத் தூக்கிக்கொண்டு நகர்ந்தேன். கடந்துபோனபிறகு நாயொன்றுக்கு மனதார நன்றி சொன்னேன். மொத்த ஊரும் அச்சிறுகோவிலில் கிறிஸ்மஸ் கொண்டாடிக்கொண்டு இருந்தது.

ஊரின் மொத்தப் பேச்சுரிமையையும் சிறைவைத்துப் பேசினேன்: "எம்பேரு சேகர். வழிதவறி பஸ்ஸவிட்டு எறங்கிட்டேன். ரோட்டுப் பக்கத்துல ஒரு கல்லறை இருந்துச்சு; அது பக்கத்துல ஒரு பள்ளங்க; அதுக்குள்ள இருந்து கல்லா வருது; பயந்து உடியாந்துட்டேன்".

யாருமே பேசவில்லை. ஒரு பதினைந்து ஆண்கள் என்னைத் தனியாக ஒருவீட்டுக்குக் கூட்டிவந்து, முகம்கழுவச் சொன்னார்கள். இரண்டு நாட்களுக்குமுன் நினைவுநாள் அனுசரிக்கப்பட்ட தந்தை பெரியாரின் படம் அவ்வீட்டில் இருந்தது. தொட்டி நீருக்குள் தலையைவிட்டு கண்களை நன்றாகத் திறந்து பார்த்து, தலைதுவட்டினேன். எனக்குக் கதை சொன்னார்கள்.

"அதுவந்து தம்பி, போனமாசம் கல்லறத் திருநா அன்னிக்கி வெங்காய வெடி வெடிக்க, கல்லற பக்கத்துல ஒரு சின்ன குழி வெட்டுனோம். ஒக்காந்த மனியமா மூணு எலும்புக்கூடுக தம்பி"
"நாங்களும் சுத்துவட்டாரமல்லாம் விசாரிச்சுப் பாத்தோம். ஒண்ணும் தண்டுப்படல. ஊர் பெரிய மனுசங்க எல்லாம் அவுங்கவுங்க வகையறாவுல ஒக்காரவெச்சு பொதக்கிற வழக்கமில்லனு அடிச்சு சொல்லிட்டாங்க"
"மதுர பக்கத்துல செல வடநாட்டுக்காரங்க இருக்காங்க. அவங்களுக்குள்ளயும் இப்டியாப்பட்ட சடங்கு கெடையாதாம். மண்ணுவேற கெட்டி மண்ணா இருந்ததால எங்களாலையும் ஒருமுடிவுக்கு வரமுடியல"
"இப்ப போலீசுதான் ஒன்ற ஆளுமட்டத்துக்குப் பள்ளந்தோண்டி விசாரிச்சுகிட்டு இருக்குது". பலவிசயங்கள் சொன்னார்கள்.

"அப்பவே மதுரயில குறிசொல்றவன் ஒருத்தன் சொன்னான். ஒரு இருவது அறிகுறிகள் இருக்காம். அது எல்லாம் நடந்து முடிஞ்சவொடனேயே ஒலகம் அழிஞ்சிடுமாம். இரும்பு பறக்குமாம்; செவுரு பேசுமாம். பிளைட்டு பறக்குதா? பஞ்சாயத்து டிவி பேசுதா?"
"அந்தப் பிளைட்டையும் கடத்திட்டிப் போயிடுறாய்ங்க. அதையும் டிவிதான் சொல்லுது. இன்னும் அஞ்சே நாளுதான்; ரெண்டாயிரத்துல ஒலகம் அழியிறது நிச்சயம்".

இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814, சம்மந்தமில்லாத ஒரு கிராமத்திற்குள் புகுந்துவிட்டதாக உணர்ந்தேன். கந்தகார் என்ற ஏதோ ஓரூரில் இதே நேரத்தில் அந்த விமானத்திற்குள் 200க்கு மேற்பட்ட பணயக்கைதிகள். அவர்களுக்கும் எனக்கும் பெரிய வித்தியாசமில்லை. பயணத்தால் கைதிகள். உச்சந்தலை மின்சாரத்தை அணைத்துவிட்டு, இயல்பாகப் பேச ஆரம்பித்தேன்.

"பெரியார் படமெல்லாம் வெச்சு இருக்குறதுனால கேக்குறேன். ஒண்ணுமே பண்ணாம, ஒரு கல்லு நகருமுன்னு நம்புறிங்களா? ஏம்மேல கல்லெறிய எந்தப் பேய்ப்பிசாசுக்கும் தைரியம் கெடையாதுன்னு நம்புறவன் நான். நாளைக்கிக் காலையில அந்தக் குழிக்குள்ள ஒரு பொணமிருந்தா, கொன்னது பேயில்ல. நீங்களும் நானும்தான்".

சபரிமலைக்கு மாலைபோட்டிருந்தவரின் மகன் ஒருவன். பெரியார் படவீட்டின் ஒரு மகன். கோவில்பிள்ள கடைசிமகன். விருந்தாளியாக வந்த ஒருவர். நான்கு பேர் தயாரானார்கள். ஆளுக்கொரு டார்ச் லைட். ஒற்றை ஏணியுடன் ஐந்துபேர் குழிநோக்கிக் குவிந்தோம்.

குழிக்குக் கொஞ்சம் தூரத்திலேயே நின்றுகொண்டு, எனக்கு நடந்ததை விளக்கினேன்.
"நான் வடக்கால நின்னேன். தெக்கால மூலையில இருந்துதான் கல்லு வந்திச்சு. ஒண்ணரை ஆளுமட்டம் ஆழம்னா, கண்டிப்பா ஆளு படுத்துக்கிட்டோ இல்ல ஒக்காந்துகிட்டோ இருக்கணும். ஏந் நெஞ்சு மட்டத்துக்குக் கல்லு போச்சு. நின்னுக்கிட்டு எறிஞ்சிருந்தா கண்டிப்பா கையசைவு தெரிஞ்சிருக்கும். படுத்திக்கிட்டலாம் இவ்வளவு ஒயரத்துக்கு எறியமுடியாது. அப்படியே எறிஞ்சாலும், ஒடம்பு அசையுற சத்தம் கேக்கும்". எல்லாரும் ஒருமனதாக ஒத்துக்கொண்டார்கள்.

"குழிக்குள்ள இருந்து பிட்டு சத்தம் வரல. நான் கொரல் கொடுத்தும்கூட கல்லுமட்டும்தான் வந்திச்சு. ஊமையாவோ இல்ல வாய் கட்டி இருந்தாவோ, கத்த முயற்சி பண்ணியிருக்கலாம். இல்லாட்டி ஒடம்ப தேச்சு சத்தம் உண்டாக்கி இருக்கலாம். அதுனால நான் என்ன சந்தேகப்படுறேன்னா, தென்மேற்கு மூலையில ஒரு உயிர் ஒக்காந்து இருக்கு; அது சத்தம் போடுற நெலமையில இல்ல. ஆனா சத்தமில்லாம கல் எறியறதுதான் புடிபடல".

ஐந்து மூளைகள் யோசித்தும், ஒரு முடிவும் இல்லை. என்ன வேண்டுமானாலும் இருக்கலாம்; நடக்கலாம்; இல்லாமலும் போகலாம். திட்டம் தயாரானது. மூன்றுபேர் ஆளுக்கொரு திசையில் படுத்துக்கொண்டு, குழியின் எதிர்ப்பக்கம் தெரியும்வரை ஊர்ந்து முன்னேறினார்கள். நானும், இன்னொரு நண்பனும், வடக்குப்பக்கமும் மிச்சம். திட்டமிட்டபடி, இப்போதைக்கு அவ்வுயிரின் தோராய இடம் கண்டுபிடிக்க வேண்டும். எனது முதல் அனுபவத்தை மீண்டும் உண்டாக்கும் முயற்சி அது.

இருவத்தி ஆறு. தேவையில்லை என்றாலும், அவசரத்துக்காக சர்சர் எனும் இரட்டைக்கிளவி. பேதமை நிறைந்தது என் வாழ்வு அதில் பேதையும் வரைந்தது சில கோ.... அதோ கடகட! வடக்குப்பக்கம் சென்று நின்றேன். யாரது. கல். கல். கல். திரும்பிவந்துவிட்டேன். கல் ல் ல் ல். கல் ல். தெற்குப்பக்க வலதுமூலையில், அதாவது தென்மேற்கு மூலையில் ஓர் உயிர் இருப்பது உறுதியானது. எதிர்பார்த்தபடியே நடந்ததால், திட்டமும் மறுபரிசீலனை இல்லாமல் தொடர்ந்தது.

வடக்குப்பக்கம் ஊர்ந்தேபோய், என்னுடம்பு குழிக்குள் முடிந்தமட்டும் தெரியாமல், என் பார்வையைத் தென்மேற்கு மூலையில் நிறுத்திவைத்தேன். தெற்குப்பக்க நண்பனும் அதே செய்தான். திட்டமிட்டபடி அவன் சட்டென டார்ச்சை ஆன்செய்து, தெற்குப்பக்க ஆழத்தில் வெளிச்சம் காட்டினான். பார்த்துவிட்டேன். உச்சந்தலை மின்சாரம் உடம்பெல்லாம் பாய்ந்து துக்கிவாரிப்போட்டது எனக்கு.

ஆரம்பித்த இடத்திலிலேயே மீண்டும் கூடினோம். எனக்கு வார்த்தைகள் தடுமாறின.
"ஒரு பொண்ணு ஒக்காந்துருக்குங்க"
"பொண்ணா?"
"நம்ம வயசிருக்கும் போல தெரியுது. தாவணி. கண் முழிச்சிருக்கு. தலைய மேலத் தூக்கி வடக்கப் பாத்து ஒக்காந்திருக்கு".

புதுத்திட்டம் தயாரானது. நான்குபேர் திசைக்கொரு பக்கம் படுத்துக் கொண்டோம். நான் திரும்பவும் வடக்கு. எனக்குப் பின்னால் இன்னொரு நண்பன் சற்று தூரத்தில் நின்றுகொண்டான். கிழக்குப்பக்க நண்பன் டார்ச்சை ஆன்செய்து, தெற்குப்பக்கச் சுவரில் இருந்து ஓரடி இடைவெளிவிட்டு, மேற்குச் சுவரில் வெளிச்சம் காட்டினான். என் இடதுகை சைகைப்படி, கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்தைக் கீழிறக்கினான்.

அவள் பார்வைமட்டம் வந்தவுடன் நிறுத்த சைகை காட்டினேன். அவள்மேல் வெளிச்சம்படாமல், நான்மட்டும் அவளைப் பார்ப்பதற்கான ஏற்பாடு. புத்தம்புது தாவணி. தலைக்கு மல்லிகைப்பூ வைத்திருக்க வேண்டும். இரண்டின் மணங்களையும் என்னால் உணர முடிந்தது. கண்கள் அகல விரிந்திருந்தன. மேலும் கீழும் ஏறி இறங்கின. மூச்சுவிடும் வேகம் அப்படி இருக்கலாம். திட்டமிட்டபடியே, ஆளாளுக்கு எதிர்ச்சுவர்களில் வெளிச்சம் செய்தோம். அவளைத்தவிர யாருமே இல்லை.

மீண்டும் கூடினோம். நன்கு உடையணிந்த ஒரு பெண், வேறுயாரும் இல்லாத குழிக்குள் நகராமல் இருப்பது இன்னும் மர்மமாகத்தான் பட்டது. அவளுடன் பேசமுடிவெடுத்து மீண்டும் பழைய நிலைகளுக்குத் திரும்பினோம். பழையபடி கிழக்குநண்பன், அவள் பார்வை மட்டத்தில் ஒளிநிறுத்தினான். நான் பேசினேன்.

"நாங்க ஒங்களக் காப்பாத்தத்தான் வந்துருக்கோம். நான் கேள்வி கேக்குறேன். ஆமான்னா கண்ண சிமுட்டுங்க. இல்லன்னா ஒண்ணும் செய்ய வேண்டாம். தமிழா?"
முதல் அடியே நல்ல அடிதான். கண்ணடித்தாள்.
"நாங்க குழிக்குள்ள எறங்கி ஒங்களக் காப்பாத்தலாமா?"
அடி சறுக்கியது. அதாவது ஆம், இல்லை என்ற இருபதில்களைத் தவிர வேறொரு பதில் சொன்னாள். கண்களைக் கீழ்நோக்கிச் சுழற்றிக் காட்டினாள். என் சைகைப்படி கிழக்குநண்பன் கீழிறக்கித் தரையில் அடித்தான். சடாலென தெற்குநண்பன் குழியைவிட்டு நகர்ந்தான்; எங்களையும் வரச்சொல்லி சைகை செய்தான்.

"என்னாச்சு?"
"அந்தப் பொண்ணு 'உடும'ன்னு சின்னச்சின்ன கல்லாலயே எழுதி இருக்குடா. உள்ள உடும்பு இருக்குமோ?". இறுதித்திட்டம் தயாரானது. பழைய நிலைகளில் ஒரு சின்ன மாற்றம். தெற்கு நண்பனும், எனக்குப் பின்னால் நின்ற நண்பனும் வடமேற்கு மூலைக்கு வந்தார்கள்.
"குழிக்குள்ள உடும்பு இருக்கா?" அவளிடம் கேட்டேன்.

எரியத்துடிக்கும் மெழுகுவர்த்தி, கழுத்தறுபட்ட கோழி, சூடுபட்ட குழந்தை, எல்லாவற்றையும் ஞாபகப்படுத்திப் படபடத்தன அந்தப் பட்டாம்பூச்சி இமைகள். நாடுகடத்தப்பட்டவன் தனதுமொழி கேட்டுத் திரும்பும் ஒரு பரபரப்பு. தென்னைமரத்தில் காய்பறிப்பவன் முதலில் பார்க்கும் ஆழிப்பேரலை தரும் மரணபயம். நீண்டநாள் நீரருந்தா பாலைவனப் பயணி, தண்ணீர் குடிக்கும் ஒருவனின் தொண்டையைப் பார்க்கும் எதிர்பார்ப்பு. எல்லாவற்றையும் ஒருசேரக் காட்டின அந்த சோடிப் பட்டாம்பூச்சி விழிகள்.

திட்டப்படி, வடமேற்கு சந்திப்பில் மேலும் கீழும் வெளிச்சம்போட்டுப் பார்த்துவிட்டு, அப்பகுதியில் உடும்பில்லாததை உறுதிசெய்தோம்.
"கவலப்படாதீங்க. எங்கள்ட்ட ஏணி இருக்கு. இப்ப ஒங்க காலடியில ஏணிய வெக்கிறோம். எங்கள்ல ஒருத்தர் ஏணியில மல்லாக்கப் படுத்திருப்பாரு. ஒண்ணுமில்ல, ஏணிய நல்லா வெச்சதுக்கப்பறம் ஒங்க மொழங்க்கைய அவரு புடிச்சிக்கிவாரு. நீங்க ஒண்ணுமே பண்ணத் தேவையில்ல; ஒங்க ஒடம்ப மட்டும் ஏணிக்கு மேலயே வெச்சுக்குங்க. அப்பறம் எல்லாமே நாங்க பாத்துக்குறோம்".

கொஞ்சம் தயங்கி யோசித்த பிறகு, தன் முழங்கையைத் தொடும் அனுமதியை முகம் தெரியாத ஓர் ஆணுக்குத் தந்தாள். புத்தம் புது தாவணியுடன், கசங்காத மல்லிகையுடன் ஏணிமேல் படுக்கவைத்தே ஊர்கொண்டுவந்து சேர்த்தோம்.

ஞாயிற்றுக் கிழமை என்பதால் அதிகாலையிலேயே கிறிஸ்தவக் குடும்பங்கள் பக்கத்து ஊர் பெரிய கோவிலுக்குப் பூசைக்குச் செல்லத் தயாரானார்கள். நானும் பஸ் ஸ்டாண்ட் வரை உடன் சென்றேன்.
"நீங்க எந்த ஊரு தம்பி?"
வசமாக மாட்டிக்கொள்ளாமல் இருக்க, கைவசம் இருந்த ஒருபதில் சொன்னேன்.
"நான் ஒரு மதத்தோட குரு. ஊர் ஊராப் போயி மக்களோடப் பழகி அவங்கள நெறிப்படுத்துறதுதான் எங்களோட வேல. எங்களப் பத்திய உண்மைகள யாருக்கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு எங்க மடத்தோட கட்டளை. தெரிஞ்சா மக்களால சகஜமா பழகமுடியாதுள்ள. நான் ஒங்க ஊரவிட்டுப் போறதுனால சொன்னேன்".

வருகிற சனிக்கிழமை, கன்னியாக்குமரியில கடல் நடுவுல திருவள்ளுவருக்குச் சிலை திறக்கப்படப் போவதாகவும், மாமா வரச்சொன்னதாகவும் ஒரு சிறுமி சொல்லிக்கொண்டு வந்தாள்.
"அன்னக்கி எல்லாரும் கடலுக்குள்ள இருப்பமோ, மண்ணுக்குள்ள இருப்பமோ, இல்ல நெருப்புக்குள்ள இருப்பமோ யாருக்குத் திரியும்?". சிரித்தேன்.
கடைசி நிறுத்தத்திற்கு டிக்கட் தரும் ஒரு பேருந்தில் ஏறிக்கொண்டேன். கடந்த ஆறுமணிநேரத்தில் நடந்த பெரும்பாலான விசயங்கள் எனக்குப் புரியவில்லை.
"பகலில் அவள்பார்த்த உடும்பு, உண்மையிலேயே அந்த நேரத்திலும் குழிக்குள் இருந்ததா?"
"இந்த ஊர் கிறிஸ்மஸ்க்கு மறுநாள், அதுவும் ராத்திரி 3 மணிக்கு ஏன் கிறிஸ்மஸ் கொண்டாடுகிறது?"
"வடக்கப் போகுமுனு ஏறுனா இந்தப் பஸ் ஏன் தெக்கப் போகுது?".

எப்படியோ வீடுவந்து சேர்ந்தேன். வெள்ளிக்கிழமை, IC 814 மீட்கப்பட்டது. சனிக்கிழமை கடல் நடுவில் எழுந்து நின்று தமிழ்மக்களைப் பார்த்தார் வள்ளுவர். நியூஸிலாந்தில் ஏதோ ஒரு தீவில் சூரியன் முதல்கதிரை கைதுசெய்ய சில பேர் போயிருந்தனர். சோழமன்னனின் தாயொருத்தியைப் போல் சிலபேர், பிரசவத்தைக் காலந்தள்ளி நிகழ்த்திக் கொண்டார்கள். மண்ணுக்குள், கடலுக்குள், நெருப்புக்குள் நான் எங்கும் போகவில்லை; வீட்டில்தான் இருந்தேன். ஒண்ணுமே இல்லாததில் இருந்து வந்த இந்த உலகம், ஒண்ணுமே இல்லாமல் போகாமல் இருக்க, நான் ஒண்ணுமே செய்யாமல் இருந்தேன்.

நாலுகால் பாய்ச்சலில் ஓடிய காலம், அந்தப் பட்டாம்பூச்சி விழிகளைச் சானூரப்பட்டி சானடோரியத்தில் சந்திக்கும் வாய்ப்பும் தந்தது. பெயர்கூட தெரியாத அவளிடம் அறிமுகப்படுத்திக்கொள்ள விரும்பாமல், விலகிப்போய்விட்டேன். சில நாட்களுக்கு முன், பிறவியிலேயே பார்வை இல்லாத இருவர் மணந்துகொண்ட ஒரு திருமணத்திற்கு அழைக்கப்படாமல் சென்றிருந்தேன். மணப்பெண்ணருகில் நின்றுகொண்டிருந்த பட்டாம்பூச்சியிடம் என்னை அறிமுகப்படுத்தி, மணமக்களிடமும் அறிமுகப்படுத்திக் கொண்டேன். சிறகடித்த கண்கள் அழுதுகாட்டின.

அவள் பணிபுரியும் பள்ளிக்கூடத்திற்கு ஒருமுறை கூட்டிப் போனாள். குளத்துக்கரையில் கருவேலங்காட்டுக்குள் அந்த ஓட்டுப் பள்ளிக்கூடம். சுற்றி 3 கிலோமீட்டருக்கு வீடே கிடையாது. பெற்றோர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ இல்லாத குழந்தைகளுக்கான பள்ளி அது. யாரோ ஒரு பையனைக் கூட்டிவரச் சொல்லிவிட்டு, என்னை அவள் அறைக்கு அழைத்துப் போனாள்.
"நான் அந்தப் பள்ளத்துக்குள்ள எப்படி வந்தேன்னு கேக்காமலேயே போய்ட்டீங்களே! அன்னக்கி கிறிஸ்மஸ்சுக்காக எங்க அக்காவீட்டுக்குப் போனப்பதான் அப்டி விழுந்திட்டேன். அடுத்த வெள்ளிகிழம ராத்திரி, ஓலகம் அழியப்போற பயத்துல குடிச்சுகுடிச்சே எங்க மாமாவும் தவறிட்டாரு. ஒருபயலப் பெத்துப் போட்டுட்டு அதே ராத்திரி அக்காவும் போய்டா".
எனது கண்கள் சிமிட்டப்படவில்லை. "என்னங்க அம்மா?" என்று கேட்டுக் கொண்டே ஒரு சிறுவன் அறையினுள் நுழைந்தான்.
"என்ன ஆச்சரியமாப் பாக்குறீங்க? அக்கா பையன்தான். ஸ்கூல் லீவுநாள் அன்னக்கி மட்டும் அம்மான்னு கூப்புடுவான். இவன் பொறந்த நேரம், பக்கத்து ஊரு கோயில்ல மணியடிச்சுச்சு. புதுவருசம்ல". இந்த நூற்றாண்டின் முதல் தமிழ்க்குழந்தை என்வலதுகரம் பிடித்துக்கொண்டு பக்கத்தில் அமர்ந்தான்.

நின்றுகொண்டே யானை இன்னமும் தூங்கிக்கொண்டிருக்கிறது. எங்கு வேண்டுமானாலும் தொட்டுப்பார்க்கலாம். எங்கு வேண்டுமானாலும் விளையாடலாம். எல்லாமே யானை தூங்கும்வரைதான். மதம்பிடிக்கும் யானைக்குத் தெரிவதில்லை பாகனுக்கும், பிறவிக்குருடனுக்கும் வித்தியாசம். மதம்பிடிக்காதவரை நடக்கும் சேதாரங்களுக்கு எல்லாம் யானை பொறுப்பல்ல!

- ஞானசேகர்

(இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)

6 comments:

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் நண்பா

kartin said...

வணக்கம்..
சேரல் வழியே வருகிறேன்..
அருமையான கதைகள்..கவிதைகளுடன்!!
வாழ்த்துக்கள்..

//இதயம் இறந்தபின், மூளை இறப்பதற்குள்// beauty!!

சேரல் said...

தம்பி!

மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் புதிது புதிதாக ஏதாவது விஷயங்கள் தென்பட்டுக்கொண்டே இருக்கின்றன. நண்பர் பிரவின்ஸ்கா சொன்னார் 'ஓர் உலகத்திரைப்படத்தைப் பார்க்கும் கவனத்துடன் இச்சிறுகதையைப் படித்தேன்' என்று. உண்மைதான். அத்தனை கவனமும், சிரத்தையும் இக்கதைக்குத் தேவை. வெற்றியையோ, பரிசையோ கருத்தில் கொண்டு நீ எழுதவில்லை என்பது எனக்குத் தெரியும். மீண்டும் ஒரு நல்ல கதையை அளித்தமைக்கு நன்றி! வாழ்த்துகளும் கூட.

-ப்ரியமுடன்
சேரல்

ராஜ நடராஜன் said...

கதை எங்கெங்கோ இழுத்துச் செல்கிறது.வாழ்த்துக்கள்.

Bee'morgan said...

ஒவ்வொரு முறை படிக்கையிலும் ஆச்சரியப்படவைக்கும் எழுத்து உங்களது.. :)
வாழ்த்துகள்.. :)

J.S.ஞானசேகர் said...

இக்கதை நடக்கும் அதே நேரத்தில்தான், நான்காண்டுகளுக்குப் பிறகு, இந்தியப் பெருங்கடலில் ஆழிப்பேரலை தமிழ்நாட்டை நோக்கி பயணம் செய்துகொண்டிருந்தது.

- ஞானசேகர்