புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Tuesday, August 13, 2013

எங்கள் காலத்தில்

'காசிக்குப் போனா கருவுண்டாகு மென்பது அந்தக் காலம்
ஊசியப் போட்டா உண்டாகுமென்ப திந்தக் காலம்' என்றார் N.S.கிருஷ்ணன்.
'எளிதில் மணப்பெண் கிடைத்தாள்
ராமராஜனைக்கூட விரும்பி ரசித்தோம்
ஆம்… 
அந்தக் காலம் நன்றாக இருந்தது' என்றார் கவிஞர் மகுடேசுவரன்.
'என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம்' என்று எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் தலையங்கம் எழுதுகிறார். நிகழ்கால ஒழுங்கின்மைகளைக் கடந்த‌கால வார்த்தைகளில் கடந்து போய் விடத் துடிக்கும் ஒரு பாமர மனநிலையில் நான் எழுதியது: 


கவிதையோ கதையோ பெரிதெனில்
தொடர்ந்து படிக்கலாமா
முதல் வரியிலேயே தீர்மானித்தோம்
முதல்நாளே Download செய்தோம்
கடைசிநாளில் Recharge செய்தோம்
Favourite Song Dedicate செய்தோம்
Invest செய்தோம்
Likeகினோம்
Customer caரிடம் கத்தினோம்
'வந்து'
'பாத்தீங்கன்னா'
'இப்ப என்ன சொல்ல வர்றேன்னா'
'you know'
'என்னோட point of viewல‌'
என வாக்கியங்கள் நிரப்பினோம்
புட்டம் தெரிய‌ பேன்ட் போட்டோம்
வாழ்த்துக்கள் தேடி தவமிருந்தோம்
கூட்டத்தில் தேசியகீதம் 
பிரமாதமாகப் பாடினோம்
முகநூல் நட்பது நட்பென்றோம்
ஆம்புலன்ஸ் முந்தினோம்
ஒலிம்பிக்ஸ் பிந்தினோம்

பொச்சு வலிக்காமல்
கோழிகள் முட்டையிட்டன‌
நியாயவிலைக் கடைகள் இருந்தன‌
மட்டைப்பந்து மைதானம்
அமெரிக்கத் தூதரக‌ம்
வாசல்களில் வரிசைகள் நின்றன‌

குலதெய்வங்கள் குற்றுயிராய்க் கிடந்தன‌
ந‌டிக‌ர்க‌ள் பாலில் குளித்த‌ன‌ர்
ந‌டிகைக‌ளுக்குக் கோவில்க‌ள் இருந்த‌ன‌
நாத்திகர்கள்
கோவில் நுழையப் போராடினர்
ஆத்திகர்கள்
மசூதி இடித்தனர்

மதராஸ் மாகாணம் தமிழ்நாடாகி
பின் சென்னை ஆனது
த‌மிழ்நாடு
சென்னையின் ஸ்கோர் கேட்ட‌து
சென்னைக்கும் தமிழ்நாட்டிற்கும்
16 மின்நேரம் வித்தியாசம் இருந்தது

ஆணுறுப்பின் மேல்தோல்
உயிர் தீர்மானித்தது
பெண்ணின் முகம் உயிரைத்
திராவ‌கம் தீர்மானித்தது

குறிஞ்சி ரிசார்ட் ஆனது
முல்லை தீம் பார்க் ஆனது
மருதம் அபார்ட்மென்ட் ஆனது
நெய்தல் பிக்னிக் பார்க் ஆனது
பாலைச் சாலையில் ஊற்றிப் போராடினர்

கடனட்டை கௌரவம் தந்தது
பச்சையட்டை பெருமை சேர்த்தது
உதட்டு முத்தம் U பெற்றது
கன்னித்தீவு
இரண்டாம் பக்கத்தில் எப்போதும் இருந்தது
கச்சத்தீவு 
இந்தியா பக்கத்தில் எப்போதோ இருந்தது
திருவள்ளுவர் சாதிவரை
விக்கிபீடியா சொன்னது
சிதம்பர ரகசியம் 
கடைசியாகச் சொல்லப்பட்டது

பிராய்லர் கோழிகளுக்கும்
பள்ளிக் கூடங்களுக்கும்
நாமக்கல் புகழ் பெற்றிருந்தது
விபி சிங் இறந்தது பலருக்குத் தெரியாது
இந்திரா முனை இருந்தது
தபால் பெட்டி இருந்தது

முதல்வர்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதினர்
ஒரே மதிப்பெண்ணில்
ஓராயிரம் மாணவர்கள் இருந்தனர்
பெண்கள் பெரும்பாலும்
சாய்பாபாவை வணங்கினர்
கோட்டைக்குப் போக‌ பலர்
கோடம்பாக்கம் போயினர்
விபச்சாரத்தைச் சட்டமாக்க‌
நுகர்வோர் போராடினர்
ஜனங்க‌ளிடம் வென்றவர்கள்
ஜனாதிபதிக்குச்
செல்லாத ஓட்டுப் போட்டனர்
ஆகஸ்ட் மாதங்களில்
அன்னா ஹசாரே வந்து போனார்

நம்பிக்கைகள் தீர்ப்பெழுதின‌
அர்ச்சகர் முதல் ஆளுநர் வரை
குறுந்தகடுகள் சுற்றின‌
நிருபர்களின் செருப்புகள்
செய்திகளில் வந்தன‌
விவாகங்கள் சில இருந்ததால்
விவாகரத்துகள் பல இருந்தன‌
பிறந்தவுடன் வங்கிக்கணக்கு
இறந்தபின்னும் ஓட்டுரிமை கிடைத்தன‌

இயேசு பிறக்கவில்லை
உலகம் அழியவில்லை
கைக்கிளை வழக்கில் இல்லை
ஆசிரியர்கள் பெரும்பாலும்
தேர்வில் தேறவில்லை
சச்சினும் ரமணனும்
ஓய்வுபெறவில்லை
23 ரூபாய் இருந்தால்
ஏழை இல்லை
வெள்ளியில் கிடைத்தது
ஞாயிறு சனியில் வந்தால் 
சுதந்திரம் இனிக்கவில்லை
கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்ட நந்தனார்
கருவறைக்குள் அனுமதிக்கப்படவில்லை

108 ஆம்புலன்ஸ் திட்டம்
மத்திய அரசா?
மாநில அரசா? 
சேதுவைப் பாரதி
தோண்டச் சொன்னாரா?
மூடச் சொன்னாரா?
இராஜீவ் காந்தியைக் கொன்றது யார்?
நாடாளுமன்றத்தைத் தாக்கியது யார்?
உண்மையிலேயே அது திரிஷாவா?
சொப்பனசுந்தரியை யாரு வெச்சிருக்கா?
எங்களுக்கும் தெரியவில்லை

சிறுநீரகங்கள் விற்றோம்
சந்திப் பிழைகள் சகித்துக் கொண்டோம்
மரபுப் பிழைகள் மறந்து போனோம்
வாழ்த்த வயதில்லாமல் வணங்கினோம்
நேரு பரம்பரையைக்
காந்தி வாரிசுகள் என நம்பினோம்
தேசிய மொழி
இந்தி என நம்ப வைத்தோம்
மருத்துவ‌ர்களிடம் பெயர் மறைத்து
கேள்விகள் கேட்டோம்
இந்தியர் ஆளா நாட்டில்
ஈழ ஆதரவு கேட்டோம்

கவிதையோ கதையோ பெரிதெனில்
நேராக கடைசி வரிகளைப் படித்தோம்.

- ஞானசேகர்

1 comment:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

பின்னூட்டம் வாங்க, பின்னூட்டம் இட்டோம்.