புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Tuesday, August 27, 2013

அகாலம்

ஓடாத என் கடிகாரம்.

ஆற‌ அமர ஓய்வெடுக்கும்
மூன்று ஆரங்களின்
மர்ம வட்டம்.

மணிக்கட்டில் மல்லாந்திருக்கும்
மணிகளற்ற முள் கிரீடம்.

காலனைத் தவிர‌
யாவருக்கும் புதிர் போடும்
60 புள்ளிக் கோலம்.

தேவதையின் ஒளிவட்டம் பொருத்தி
சுழலும் பற்கள் விழுங்கி
முப்பற்களில் இளிக்கும்
குட்டிச் சாத்தான்.

முக்கண்களும் அணைந்து போய்
முக்காலங்களும் திக்குமுக்காடி
முட்டி எட்டிப் பார்க்கும் முக்கு.

நாடியோடு ஒட்டி உறவாடினும்
நாடி நோக்குகையில்
நடித்து
நொடித்து
நாதியற்று உணரச் செய்யும்
கையடக்கச் சூன்யம்.

சுற்றாமலேயே
சுற்றவைக்கும்
சுழி.

கரம்
சிரம்
புறம்
நீட்டும் சகபயணி.

அணிவாரையும்
அணுகுவாரையும்
நோக்குவாரையும்
வாரி விட்டு
வாரை வாறி அணைத்திருக்கும்
மதிமுகவார்.


ஓடாத என் கடிகாரம்.

வருத்தப்பட்டு நான்
சுமக்க வேண்டிய பாரம்.

நாளுக்கு இருமுறை
எனக்கே தெரியாமல்
உண்மையாக இருக்கும்
எனக்கான சத்திய சோதனை.

என்னைப் பட்டினியிட்டு
சுற்றும் பூமியில்
உங்களில் யாருடனோ
நித்தம் நித்தம்
அகநக நட்புறும்
நான் கட்டிவந்த பத்தினி.

அதன் நிகழ்காலம்
என் துர்மரணத்தின் இறந்தகாலமாக
உங்கள் வருங்காலத்தில்
பதிவு செய்யப்படும்
எனப் பயங்காட்டும்
ஒரு மாய எதார்த்தக் கூடு.

உலகத்தீரே!
என்னைப் போலவே
ஓடாத கடிகாரம் உடையவர்
நீங்கள் எனில்
தயைகூர்ந்து சொல்லுங்கள்
நேரம் என்னவென்று.

- ஞானசேகர்

No comments: