புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Wednesday, March 21, 2012

பாம்பின் கால்


சமூகத்துடன் சேர்ந்து வாழத் தெரியாத ஒன்று, மிருகமாக இருக்க வேண்டும்; இல்லை கடவுளாக இருக்க வேண்டும்.
- அரிஸ்டாடில்

Now here are these two unaccountable freaks; they came in together, they must go out together.
- Mark Twain

நான் சொல்வனவற்றுள்
பாதி பொருளற்றவை தான்.
ஆனால்
மறு பாதி
உங்களைச்
சரியாகச் சென்றடையத்தான்
நான் அவற்றைச் சொல்கிறேன்.
- கலீல் கிப்ரான்

(இங்கு இவர்களுக்கு இப்படி நடந்த‌தாக நான் செல்வதேதும் அங்கு அவர்களுக்கு அப்படி நடந்திருந்தால் அது தற்செயலே)

Kozhikode. இந்தியாவைக் கடல்வழி தேடிய ஐரோப்பியர்கள் முதலில் கரை தொட்ட கப்பாடு என்ற‌ இடத்திற்கு மிக அருகில் இருக்கும் நகரம் கோழிக்கோடு. ஆங்கிலத்தில் Calicut. தமிழில் கள்ளிக்கோட்டை. உச்சரிக்கத் திண‌றிய ஆங்கிலேயர்கள் Cawnporeஐக் Kanpurஆக மாற்றியதில் ஆரம்பமானது, இந்த Cயில் இருந்து Kக்குக் கட்சித் தாவ‌ல். Conjeevaram Kanchipuram ஆனது. Cஐ ஆதியில் வைத்திருக்கும் கம்யூனிசம் ஆதிக்கம் செலுத்தும் இடங்களில் கூட, Calicut Kozhikode ஆனது; Calcutta Kolkata ஆனது; Cochin Kochi ஆனது. கோழிக்கோடு இரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் புட்டு சாப்பிட்டவுடன் இது போன்ற சிந்தனைகள் தோன்றின‌. இயற்கையும் இது போன்ற இரட்டைகளைப் படைத்துக் கொண்டு, தன்னைத் தானே தகவமைத்துக் கொள்கிறது. அகலாது அணுகாது சேர்ந்தொழுக வைக்கும் கிரகங்களின் குவியங்கள் முதல் நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இக்கதையுங்கூட‌.

ஒரு மனிதனின் வாழ்க்கையை எந்த அளவுக்குத் துல்லியமாகப் பதிவு செய்ய முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஒவ்வொரு வருடமாக‌ ஒவ்வொரு நாளும் எங்கு இருந்தார் என்ன செய்தார் என்று துல்லியமாக. ஒன்று அந்த மனிதர் தினமும் டைரி எழுதியிருக்க‌ வேண்டும், அல்லது அதை இன்னொருவர் செய்து கொண்டிருக்க‌ வேண்டும், அல்லது ஒரே மாதிரி வாழ்க்கையைத் திரும்பத் திரும்ப வாழ்ந்திருக்க வேண்டும். இம்மூன்றும் தனித்தனியே இல்லாமல் இம்மூன்றும் மொத்தமாக இப்படி இருந்தால் எப்படி இருக்கும்? 366 தனித்தனி ஊர்கள் ஒரு மனிதன் தத்தம் ஊர்களில் 50 வருடங்களாக வாழ்ந்துபோன ஒரே மாதிரியான வாழ்க்கையை ஒவ்வொரு ஊராக ஒவ்வொரு தேதியாகக் கதை சொன்னால் எப்படி இருக்கும்? அதுவும் இயேசுவின் கதை போல் தெரிந்த‌ நான்கு சீடர்கள் சொன்ன நான்கு வெவ்வேறான பதிப்புகள் போல் அல்லாமல், படிப்பறிவு அதிகம் இல்லாத சாதாரண மனிதர்கள் தங்கள் நினைவில் இருந்து சொல்லும் ஒரே பதிப்பாக இருந்தால் எப்படி இருக்கும்? புரியவில்லையா?

இதை வைத்துக் கொள்ளுங்கள். இது 2008ம் ஆண்டு டைரி. இது என்னுடைய சுயசரிதை அல்ல. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வாழ்ந்த சொற்ப நாட்களைக் கூட இன்னும் வாழாதவன் நான். உருப்படியாகச் செய்வதற்கு ஒரு வேலையும் இல்லாதவர்கள் காதலிக்கிறார்கள், உருப்படியாக ஒரு வேலையும் செய்யாதவர்கள் சுயசரிதை எழுதுகிறார்கள் என்பவன் நான். ஒவ்வொரு தேதிக்கும் ஒரு முழுப் பக்கம் கொண்ட டைரி இது. எல்லாப் பக்கங்களிலும் அம்மனிதனின் கதைக் குறிப்புகளை எனக்கு மட்டும் புரியும்படி எழுதி இருக்கிறேன். ஒவ்வொரு தேதியிலும் ஓர் ஊரின் பெயர் இருக்கும். ஒவ்வொரு தேதியிலும் குறைந்தபட்சம்‌, கதை சொன்ன‌ ஓர் ஆளின் சில தகவல்களும் இருக்கும். புரியவில்லையா?

உதாரணத்திற்கு ஏதாவது சில‌ பக்கங்களைத் திறந்து ஊரின் பெயர்களை மட்டும் படியுங்கள். டிசம்பர் 16 நல்லறிக்கை. நவம்பர் 9 கொணலை. ஆகஸ்ட் 8 சிறுகமணி. மே 21 பொசுக்கனி. ஏப்ரல் 12 ஆலங்காயம். தமிழ்த் தேதிகளில் கதை சொல்லலாம் என நினைத்தேன். பரவாயில்லை. நான் சொல்லவரும் அந்த மனிதர் 50 வருடங்களுக்கு மேலாக‌ ஏப்ரல் 12ந் தேதி அன்று இன்றைய இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆலங்காயம் என்ற ஊரில் மட்டும் தான் இருந்திருக்கிறார். எந்த வருட‌ம் என்ன செய்தார் என்று அந்த‌ ஊர்மக்களுக்குத் தெரியும். இதே மாதிரி டைரியில் உள்ள ஒவ்வொரு தேதிக்கும் அந்த‌ந்த‌ ஊர்க‌ள். அந்த‌ 366 ஊர்க‌ளுக்கும் அவ‌ருக்கும் எந்த‌ச் ச‌ம்ம‌ந்த‌மும் கிடையாது. அந்த‌ 366 ஊர்க‌ளுக்கும் அவ‌ர் மூல‌ம் ச‌ம்ம‌ந்த‌ம் உண்டு என்ப‌து என‌க்கு ம‌ட்டும்தான் முழுமையாக‌த் தெரியும். புரியவில்லையா?

பார்த்தவர்கள் அவருக்கு வைத்த பெயர் ஊமையன். நான் வைத்த‌ பெயர் ஊமைச் சோசியன். மீண்டும் ஏதாவது ஒரு பக்கத்தைத் திறந்து முழுதும் படியுங்கள். ஆகஸ்ட் 6 - திமிரி - பராசரன் (1945) - பால் குறைக்கும் இடை. இரண்டாம் உலக யுத்தத்தில் ஜப்பானில் முதல் குண்டு விழுந்த நாளில் திருமணம் ஆனதாக பராசரன் சொல்வார். எப்போதாவது திமிரி கிராமத்திற்கு வந்துபோகும் ஊமைச் சோசியன் அன்றும் வந்திருக்கிறார். வாய்ப் பேச வராது. காது கேட்காது. தோட்டத்தில் இருந்த பராசரனிற்கு ஊமைச் சோசியன் ஏதேதோ வரைந்தும் எழுதியும் காட்டி இருக்கிறார். மொகஞ்சதாரோவில் வேலை பார்த்த‌ பராசரன் அந்தக் கிறுக்கல்களை ஒரு பொருட்டாக பாராமல் போனார். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையில் எல்லை க‌டப்பவர்கள் மேல் நட‌ந்த கொடுமைகள், நாடு திரும்பிக் கொண்டு இருந்த பராசரனின் குடும்பத்தையும் விட்டுவிடவில்லை. அவரின் இரண்டு மாதக் கைக்குழந்தை குடித்த பாலில் விசம் கல‌ந்திருந்தது. அண்ணனும் தம்பியும் இறந்த பிறகும் உயிரோடு இருக்கும் அக்குழந்தையின் உயரம் இன்று வரை மூன்றரை அடி. பராசரனுக்கு ஊமைச் சோசியன் கிறுக்கியதாக நான் ஊகித்தது - பால் குறைக்கும் இடை. இதை ஊமைச் சோசியன் கிறுக்கிய படத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள், புரியும்.

அபூர்வ சகோதரர்கள் அப்பு கதை போல் இருந்தாலும், ஊமைச் சோசியன் கிறுக்கியதை இதுவரை பராசரன் சம்மந்தப் பட்டவ‌ர்கள் புரிந்து கொண்டதில்லை. தனது திருமணத்தைப் பற்றி நினைவுகூறும் போதெல்லாம் ஊமைச் சோசியனுடன் விளையாடிக் கொண்டிருந்ததையும் மறக்காமல் சொல்லி இருக்கிறார். இதேபோல்தான் எல்லா ஊர்களும். வருடத்திற்கு ஒருமுறை தங்கள் ஊரில் வாழ்ந்துபோன ஒருவரை 366 ஊர்கள் எந்த நிலையிலும் சந்தேகிக்கவில்லை என்பது மிகப்பெரிய ஆச்சரியம். ஊமைச் சோசியனின் கிறுக்கல்களைத் தங்கள் எதிர்காலத்தில் எதிர்பார்க்கவோ அல்லது இறந்தகால‌த்துடன் சம்மந்தப்படுத்திப் பார்க்கவோ யாருக்குமே தோன்றியிருக்கவில்லை. ஊமைச் சோசியன் ஒவ்வொரு வருடமும் ஒரே தேதியில் வந்து போனதையே ஒரு சில வருடங்கள் கழித்துத்தான் கவனித்து இருக்கிறார்கள். இந்த வினோத வாடிக்கையை ஒரு கிறுக்கனிடம் ஏன் கேட்க வேண்டும் என யாருமே கேட்காமல் வெறுமனே அவரை வேடிக்கை பார்த்துப் போனதும் வினோதமே.

பிப்ரவரி 19 - பாச்சல் - கந்தபலவேசம் (1976) - மூப்பு இணையும் இடம். ஜீலை 28 - கூடாரம் - தையல்நாயகி (1983) - தோல் பிரிக்கும் மந்தை. இப்படி பல உதாரணங்கள். ஆனாலும் இந்தக் கணிக்கும் சக்திக்காக ஊமைச் சோசியனை நான் ஆச்சரியப் பட்டதில்லை. ஏன் என்றால் எனக்கு நாஸ்டர்டாமஸ் தெரியும். 400 வருடங்களுக்கு முன்னால், உலகில் நடக்கப் போகும் முக்கிய நிகழ்வுகளைக் கணித்துச் சொன்னவர். இன்றுவரை அவருக்கு அச்சக்தி எப்படி வந்ததென்று யாருக்குமே தெரியாது. டம்ளரில் தண்ணீரை ஊற்றி வைத்தால், தேவதூத‌ர் ஒருவர் அதில் படம் காட்டுவதாகச் சொல்வார். அவரை முதன்முதலில் பிரபலமாக்கிய சம்பவம் உங்களுக்குத் தெரியுமா? ஓர் அரசனின் ஏழு ஆண் குழந்தைகளும் அரசாளும் என்றார். சந்தோசத்தில் மூழ்கிப் போனான் அரசன். அதே போல் ஏழு குழந்தைகளும் தனித்தனியே அரசாண்டன, உடன்பிறந்தவர்களைக் கொன்றுவிட்டு. அதே மாதிரி ஊமைச் சோசியனும் நெற்குப்பை என்ற‌ ஊரில் செய்திருக்கிறார். கொஞ்ச‌ம் பொறுங்க‌ள். த‌மிழ்நாட்டு வ‌ரைப‌ட‌த்தை வைத்து உங்க‌ளுக்குப் புரிகிற‌ மாதிரி சொல்கிறேன்.

நெற்குப்பை நெற்குப்பை நெற்குப்பை... இதோ இருக்கிறது. 1 2 3... 38. 38 என்றால் பிப்ரவரி 7. பிப்ரவரி 7 அன்று டைரியில் என்ன இருக்கிறது என்று பாருங்கள். பிப்ரவரி 7 - நெற்குப்பை - போதும்பொண்ணு (1974) - பத்தும் செய்யும் ஆறு. நெற்குப்பையில் 1974 பிப்ரவரி 7 அன்று போதும்பொண்ணு என்ற‌ 3 மாதக் குழந்தைக்கு, ஊமைச் சோசியன் கிறுக்கியதாக நான் ஊகித்தது. 5 மூத்தவர்கள் பிழைக்காமல் 6வதாக தப்பிப் பிழைத்தவள். 20 வயதுக்குள் அவளுக்குப் 10 திருமணங்கள். கன்னி கழிவதற்குள் கட்டியவன் எல்லாம் காலி. 11வதாக‌ ஒருவன் தைரியமாக முன்வந்தும் அவள் விதியோடு விளையாட விரும்பாமல் கன்னியாகவே இருந்து கொண்டிருக்கிறாள். தன்னைத் தானே தீண்டத் தகாதவளாக ஒதுக்கிக் கொண்டு வாழும் அவளை ஒருமுறை சந்தித்தேன். பட்ட காலிலே படும் என்ற இயற்கையின் இந்த வினோதமான‌ அற்ப கொள்கைக்குச் சாட்சியாய் இன்னும் நிற்கிறாள். ஒருச்சாமி ரெண்டுச்சாமி மூணுச்சாமி, இந்த ஆறுச்சாமியின் கதைகூட கிட்டத்தட்ட நாஸ்டர்டாமஸ் சொன்ன அரசன் கதை மாதிரி தான்.

நடந்த நிக‌ழ்ச்சிகளை நாஸ்டர்டாமஸ் சொன்னவற்றுடன் ஒப்பிட்டுப் புரிந்து கொண்டார்கள். அதைத்தான் ஊமைச் சோசியன் விசயத்திலும் நான் செய்து கொண்டு இருக்கிறேன். இவர் சம்மந்தப்பட்ட ஆட்களிடமே நேரடியாகக் கிறுக்கி இருக்கிறார்; படிக்கத் தெரிந்தவர்களுக்கு எழுதியும் காட்டியிருக்கிறார். நாஸ்டர்டாமஸின் கவிதைகள் யாருக்கானவை என்று முன்கூட்டியே தெரிவதில்லை. 366 கிராமங்கள் என தன் எல்லையை இவரே தேர்ந்தெடுத்துக் கொண்டார். அவர் அப்படியல்ல. நாஸ்டர்டாமஸ் தன் கல்லறையைத் தோண்டப் போகிறவர்களின் முடிவைக் கூட சொல்லி இருக்கிறார். ஊமைச் சோசியன் பற்றி ஒரு குறிப்பு கூட கிடையாது. அது மட்டுமில்லாமல், இவர் எல்லா நாட்களிலும் எல்லா ஊர்களிலும் கிறுக்கி இருக்கவில்லை. குறைந்தபட்சம் ஊருக்கு ஒருவர் வீதம், கிறுக்கப் பட்டவர்களின் வாழ்க்கையை மொத்தமாகக் கேட்டு, கிறுக்கல்களைச் சரியான இடத்தில் பொருத்தி வைத்திருக்கிறேன். கிறுக்கப் பட்டவர்கள் எவருக்கும் இந்த ஆச்சரியம் தெரியவே தெரியாது. அவர்களுக்குள்ளும் ஊர்களுக்குள்ளும் எந்த ஒற்றுமையும் கிடையாது. கூட்டிக் கழித்துப் பார்க்கையில் நாஸ்டர்டாமஸ் என்பவ‌ரின் உள்ளூர் வடிவமே ஊமைச் சோசியன் என்பதால் கணிக்கும் திறனும் ஆச்சரியப் படுத்தவில்லை. ஞாபகசக்திக்காகவும் பிரமித்தது இல்லை. அவரிடம் இருந்த இன்னொரு திறமைக்காகத் தான் நான் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டு இருக்கிறேன். புரியவில்லையா?

தமிழ்நாட்டு வரைபடத்தில் ஊமைச் சோசியனின் 366 ஊர்களைக் காட்டுகிறேன். உங்களுக்கே புரியும். ஜனவரி 1 மால்வாய். 2 மணவாசி. 3 தோகூர். 4 எசனை. 5 அண்டமி. 6 பேலுக்குறிச்சி. 7 ஏனாதி. 8 ஆலக்குமுனை... இப்போது புரிகிறதா அவரின் திட்டமிட்ட பாதை? அடுத்தடுத்த ஊர்கள் சம தொலைவில் இருக்கின்றன. ஒரு முழுப் பெண்ணை மூன்றே கோடுகளில் வரைந்த எம் எஃப் ஹீஸைன் போல், சம அளவுள்ள 366 அல்லது 365 கோட்டுத் துண்டுகளைப் பறவைப் பார்வையில் இணைத்தது போல், ஒரு மூடப்பட்ட ஒழுங்கான அந்த‌ உருவத்தைத் தனது பயணத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் உருவாக்கிய ஊமைச் சோசியனை ஒரு சாதாரண நாடோடியாக‌ மட்டும் என்னால் பார்க்க முடியவில்லை. பூகோளத்தை ஒரு புதிராக அணுகிய‌ அந்த ஊமைச் சோசியன் ஒரு நடமாடும் மர்மம்.

(வழக்கம்போல் சற்றே இடைவெளி எடுத்துகொண்டு, கொஞ்சம் மனநிலையை மாற்றிக்கொண்டு தொடருங்கள்)

இன்று மார்ச் 21, 2012. உலகம் முழுக்க இரவும் பகலும் சமமாய் இருக்கும் வருடத்தின் இரண்டு நாட்களில் இன்றும் ஒன்று. மார்ச் 21க்கு டைரி என்ன சொல்கிறது? மார்ச் 21 - பொன்னிரை - இரஞ்சிதம் (1945) - தலை சாயும் பேடைகள். ஆபிரகாமின் கொள்ளுப் பேரன் ஜோசப்பின் கனவில் வந்ததுபோல் சில வைக்கோல் கட்டுகளை நிமிர்த்தி வைத்தும் சாய்த்து வைத்தும் ஏதோ ஊமைச் சோசியன் கிறுக்கியதாக இரஞ்சிதம் பாட்டி சொல்வாள். இரஞ்சிதத்தின் நான்கு பெண்களுக்கும் தலைப் பிள்ளைகள் இறந்தே பிறந்தன. மகள்களைப் போல ஆகிவிடுமோ என மகனின் முதல் பிள்ளையைப் பயத்தோடு எதிர்பார்த்தனர். அவன் சாகவில்லை. சாதலின் எதிர்பார்த்தல்களுடன் வாழவந்த‌ அவன் இப்போது உங்களுக்குக் கதை சொல்லிக் கொண்டு இருக்கிறான்.

அத்தைகள் அனைவருக்கும் ஒரே மாதிரி நடந்த‌ சோகத்திற்கு, பழங்கதை பேசுபவர்கள் எல்லாரும் பரிதாபப் படுவார்கள். ஊமைச் சோசியனைப் பற்றி ஊரில் பேச்சு வரும்போது எல்லாம், தலை சாயும் பேடைகள் என்று எழுதியதையும், வைக்கோல் கட்டுகளைக் கிறுக்கியதையும் பாட்டியும் தாத்தாவும் சொல்வார்க‌ள். இந்தத் தனித்தனி சம்பவங்களை ஏனோ சம்மந்தப்படுத்தி, முதல் முறையாக அடுத்த மார்ச் 21க்கு ஊமைச் சோசியன் வரவை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தேன். கடந்த 4 வருடங்களாக அவர் வருவதில்லை என எனக்கு பிறகுதான் தெரிந்தது. தகப்பனில் இருந்து மகள்கள் மூலம் மூத்த பேரன்களுக்குப் பரவும் Rh காரணி பற்றி பின்னாளில் தெரியவர, அத்தைகளின் பொதுவான சோகத்திற்குப் பகுத்தறிவு கொடுத்து ஒதுக்கி வைத்தேன். அவை எப்படி 20 வருடங்களுக்கு முன் அவரால் 100% துல்லியமாக நிகழ்தகவு 1 எனச் சொல்ல முடிந்தது என்றும் நான் மேற்கொண்டு யோசிக்கவில்லை.

மார்ச் 20 விலந்தை, மார்ச் 22 சங்கொடி என்று எங்கள் ஊருக்கு எதிரெதிர் திசையில் உள்ள இரண்டு ஊர்களுக்கும் அவர் போய் இருக்கிறார் என்று தெரிய வந்தபோதுதான் எனக்குக் கொஞ்சம் சந்தேகம் வந்தது. அக்கம் பக்கத்தில் இன்னும் சில ஊர்களை விசாரிக்கையில், சங்கிலிபோல் ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் ஊர். படிப்பு வேலைகளுக்கு இடையே நேரமும் பணமும் ஒதுக்கி ஊமைச் சோசியனைத் தேட ஆரம்பித்தேன். 2006 2007 என‌ இர‌ண்டு முழு வ‌ருட‌ங்க‌ள் செல‌வ‌ழித்து இந்த‌ டைரியின் த‌க‌வ‌ல்க‌ளைச் சேக‌ரித்தேன். எதிர்பார்த்த‌ப‌டியே 366 த‌னித்த‌னி ஊர்கள் அந்த மனிதன் வருடந்தோறும் போய் இருக்கிறார். என் இல‌க்குப்ப‌டி குறைந்த‌து ஊருக்கு ஒரு த‌க‌வ‌ல் சேக‌ரித்தேன். தகவல்களை ஒழுங்குபடுத்தி இந்த டைரிக்கு மாற்றி, தமிழ்நாட்டு வரைபடத்தில் அவ்வூர்களைப் பார்த்த போது தான், அவை சம தூரத்தில் இருப்பது தெரிந்தது. பறவைப் பார்வையில் ஓர் ஒழுங்கான உருவத்தை உருவாக்கிய ஊமைச் சோசியனின் பாதை பிரமிக்க வைத்தது.

நாஸ்டர்டாம்ஸ் இறந்தபோது அவரின் சவப்பெட்டியில் எதிர்காலத் தேதி ஒன்றைப் பொறிக்கச் சொன்னாராம். அவரின் புகழ் பரவி, அவர் மண்டை ஓட்டில் ஒயின் குடித்தால் அவரின் சக்தி கிடைக்குமென வதந்தி பரவ இரண்டு பேர் கல்லறையைத் தோண்டப் போய், அன்றைய தேதி சவப்பெட்டியில் எழுதி இருந்ததாம். பயந்து ஓடிப் போனவர்கள், கல்லறை திரும்பவும் மூடப்படும்முன் இறந்து போனார்கள். ஊமைச் சோசியனைத் தேடும் எனக்கும் இக்கதை தெரியும். கடவுள்களைக் கூட பூமிக்குக் கொண்டு வருவதற்கும் அடையாளம் காட்டுவதற்கும் சாதாரண மனிதர்கள் பிரத்யேகமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டதைத்தான் உலகின் பெரும்பாலான மதங்கள் சொல்கின்றன. ஊமைச் சோசியன் என்ற ஒருவரை உலகிற்கு அடையாளம் காட்டுவதற்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டவன் நான் என நினைத்துக் கொண்டேன். ஒலிம்பிக் தீபம் போல் யாருக்கும் எளிதில் கிடைக்காத காரியம் இது. இப்போது என் கையில். அணைக்கும் வரை அல்லது இன்னொருவன் கையில் ஒப்படைக்கும் வரை நான் தான் ஓடவேண்டும்.

மைக்கேல் லோலிடொ என்பவருக்கு மனிதக்குடல் ஜீரணிக்க முடியாத பொருட்க‌ள் தான் தினசரி உணவு. ஓர் ஆகாய விமானத்தை இரண்டு ஆண்டுகள் சாப்பிட்டு வியக்க வைத்தவர். அவருடைய அந்த வித்தியாசமான திறமைக்குக் காரணமாக அவர் பிறந்த நேரத்தைக் கூறுவார்கள். 1950 ஜூன் 15. 20ம் நூற்றாண்டின் மைய நாள். அவர் பிறந்த நேரம் 20ம் நூற்றாண்டின் மைய நேரம். இதுபோல ஊமைச் சோசியனுக்கும் தேதிகளுக்கும் கண்டிப்பாக ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாக ஆழமாக நம்பினேன். நான் முதலில் சந்தேகித்த ஊர் உஞ்சினி. பிப்ரவரி 28 மேவணி. பிப்ரவரி 29 உஞ்சினி. மார்ச் 1 வாங்கல். மார்ச் 2 மடிகை. பறவைப் பார்வையில் பார்த்தால் இந்த நான்கு ஊர்களும் சாய்சதுர முனைகள். மேவணி உஞ்சினி வாங்கல் இவை மூன்றும் ஒரு சமபக்க முக்கோண முனைகள். உஞ்சினி வாங்கல் மடிகை இவை மூன்றும் ஒரு சமபக்க முக்கோண முனைகள். நான்கு வருடங்களுக்கு ஒருமுறை உஞ்சினி போய் இருக்கிறார். காலத்தைத் தமிழில் பின்பற்றும் மக்களை ஆங்கிலத்தில் தேடிப்போன ஊமைச் சோசியன் அதிகமாகக் குழப்பினார். அப்படி என்னதான் அங்கு இருக்கிறது? திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு வாரம் சுற்றினேன். உருப்படியாக ஒன்றும் கிடைக்கவில்லை. அந்த ஊர்களும் மனிதர்களும் மற்ற ஊர்களில் இருந்து அப்படி ஒன்றும் பெரிதாக வித்தியாசப் படவில்லை.

எல்லா சராசரி மனிதர்களும்தான் கழுவ மறந்த‌ சாப்பாட்டுத் தட்டைப் பார்த்து வருத்தப் படுகிறார்கள். அலெக்ஸாண்டர் பிளெமிங் என்ற ஓர் அசராசரி மனிதனால் மட்டும்தான் வருத்தத்தையும் மீறி சந்தோசமாக பெனிசிலின் கண்டுபிடிக்க முடிகிறது. எல்லா சராசரி மனிதர்களும்தான் கொல்லப்படுவது போல் கண்ட கனவில் இருந்து திடுக்கிட்டு எழுந்து சிறுநீர் கழித்துவிட்டு தூங்கிப் போகிறார்கள். ஓர் அசாசரியால் மட்டும்தான் கொல்லவந்த ஆயுதத்தில் இருந்து தையலூசி கண்டுபிடிக்க முடிகிறது. எல்லா சராசரி மனிதர்களும்தான் எட்டி உதைக்கப் படுகிறார்கள். ஓர் அசராசரியால் மட்டும்தான் குண்டடி படும்வரை ஓடிஓடி போராடி மகாத்மா ஆக முடிகிறது. நான் சராசரியும் இல்லை. அசராசரியும் இல்லை. சராசரி ஆழம் கணக்குப் போட்டு ஆற்றைக் கடக்கப்போய், சராசரிக்கு அதிகமான ஆழத்தில் மூழ்கப் போகும் அபாயத்தில் இருக்கும், சராசரிக்கும் அசராசரிக்கும் இடைப்பட்ட ஒரு பெயரிப்படாத பாதி மிதவை நிலையில் இருப்பவன் நான்.

அந்தரத்தில் பறப்பது, இறந்தவர்களுடன் பேசுவது போன்ற அசாதாரண செயல்களைச் செய்த டேனியல் டங்ளஸ் ஹோம் என்ற மனிதர் இருந்தார். இறந்து போன அவரின் நண்பன் எட்வினை வைத்துத் தான் அவற்றைச் செய்வதாகச் டேனியல் சொன்னார். அது போல ஊமைச் சோசியனுக்குப் பின்னாலும் யாரும் இருப்பார்களோ? ரைட் சகோதரர்கள் போல் கூட்டணி செயலோ? கிராமங்களைக் கடக்கும் போது இடையில் இருக்கும் சுடுகாடுகளில் குடுகுடுப்பைக்காரர்கள் போல் இறந்தவர்களிடம் கதை கேட்பாரோ? பல விதங்க‌ளில் யோசித்து இருக்கிறேன். ஊமைச் சோசியன் பிடிபடவே இல்லை.

எனது டைரிக் குறிப்புகளும், தமிழ்நாட்டு வரைபடத்தில் 367 கோடுகளில் நான் வரைந்திருக்கும் உருவமும், விதவிதமான மனிதர்களிடம் பேசக் கற்றுக் கொண்ட அனுபவமும், அவர்களின் முழுக் கதை கேட்ட அறிவும் வீண் போலத் தோன்றின‌. 1000 ஆண்டுகள் தாண்டியும் விழாது என மக்கள் நம்பும் தஞ்சை பெரிய கோவில் நிழலில் அமர்ந்திருந்த போது, விழாமல் ஆடும் தலையாட்டிப் பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தையைப் பார்த்து, திடீரென ஒரு சிந்தனை தோன்ற, தமிழ்நாட்டு வரைபடத்தை எடுத்து, 366 கோடுகள் வழியே வெறிகொண்டு கிழித்தேன். அவ்வுருவம் கொண்ட தமிழ்நாட்டுத் துண்டை மட்டும் வெட்டி எடுத்து, பேனா முனையில் நிறுத்த முடியுமா என்று பார்த்தேன். நின்றது அவ்வுருவம்! பேனா முனையில் நின்றது அவ்வுருவம்! நம்புக்குறிச்சி என்ற ஊரில் இருந்தது பேனா முனை. எனது டைரியில் இல்லாத ஊர்.

இன்றைய கரூர் மாவட்டத்தில் இருக்கும் நம்புக்குறிச்சி போனேன். ஊமைச் சோசியனைக் கடைசியாகப் பார்த்தவர்கள் சொன்ன அடையாளத்துடன் ஒரு மனிதரைப் பார்த்தேன். வாய்ப் பேச வரவில்லை. காது கேட்கவில்லை. விசக்கடி மருத்துவராக இருப்பதால் அந்த ஊரைவிட்டு வெளியூர் போகாதவர் என்று கேள்விப்பட்டவுடன் எனது கடைசி நம்பிக்கையும் நொறுங்கிப் போனது. எனது மன ஆறுதலுக்காக ஊமைச் சோசியனின் மொத்தக் கதையையும் அவரிடம் சைகை மொழியில் சொன்னேன். எந்த ஆறுதல் பேச்சும் எதிர்பாராமல் கிளம்பத் தயாரான என்னிடம் சில கேள்விகள் கேட்டார். ஊமைச் சோசியனுக்கு உண்மையிலேயே வாய்ப் பேச வராதா? காது கேட்காதா? என்னிடம் பதில் இல்லை. கோமல் என்ற ஊரில் சில வருடங்களுக்கு முன், தொடர் கொலைகள் செய்துவரும் குரங்கு மனிதன் என்று பயந்து, தன்னைப் போல் தோற்றமுடைய‌, மனநிலை பாதிக்கப் பட்டவர் போல இருந்த ஒருவரை ஊர்மக்கள் சேர்ந்து கொன்ற நிகழ்ச்சியை, ஒரு பழைய‌ செய்தித்தாளில் காட்டினார். டைரிப்படி அன்று ஊமைச் சோசியன் எட்டுக்கால்பட்டியில் இருந்திருக்கிறார். ஊமைச் சோசியன் என்ற ஒரு மர்மத்தைத் தேடிப் போனால் ஒவ்வொரு முறையும் இன்னொரு மர்மத்தின் அறிமுகத்துடன் திரும்பினேன்.

இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள பல்வேறு உயிரினங்களுக்கு இடையே நடக்கும் போராட்டத்தில், தன‌க்கென சில இனங்களை மட்டும் தேர்ந்தெடுத்து பாதுகாத்து தகவமைத்து, தன் இருப்பைத் தக்க வைத்துக் கொள்கிறது இயற்கை. தனது 20 ஆண்டுகள் ஆராய்ச்சியில் சார்லஸ் டார்வின் கண்டுபிடித்த இப்பரிணாமத் தத்துவத்தை, ஆல்ப்ரெட் ருசெல் வாலஸ் என்பவர் அப்படியே அச்சு பிசகாமல் வெளியிட பதறிப் போனார் டார்வின். இரண்டு பேரும் ஒரே விசயத்தைத் தனித்தனியே பல ஆண்டுகள் செய்து கொண்டிருந்ததைப் பார்த்து சிரித்துக் கொண்டார்கள். வாலஸ் பெருந்தன்மையுடன் விலகிக் கொள்ள பரிணாமத்தின் தந்தையாக நிலைத்தார் டார்வின். ஊமைச் சோசியனை என்னைப் போலவே வேறு யாராவது இப்படித் தேடிக் கொண்டிருப்பார்கள் என நானும் நீண்ட காலம் நம்பினேன்.

என்னையும் பதறிப் போகச் செய்யும்படி ஒரு சிறுகதை படித்தேன். ஒரு குடும்பத்தில் ஆண் இரட்டையர்கள் மட்டுமே பிறக்கிறார்கள். இளையவர்கள் மட்டுமே தலைமுறை தளைக்கச் செய்கிறார்கள். இளையவர்கள் எப்போதும் வாய்ப் பேச இயலாதவர்களாகவும் காது கேட்காதவர்களாகவும் பிறக்கிறார்கள். அக்குறைகள் இல்லாத மூத்தவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பின் வீட்டை விட்டு வெளியேறி அக்குறைகளுடன் நாடோடிகளாக‌ வாழ்கிறார்கள். முடிவற்ற அக்கதையை எனது ஊமைச் சோசியன் கதையுடன் ஆங்காங்கே இணைத்தால் ஒரு முழுமையான கதை கிடைத்தது. அக்கதாசிரியனைக் கண்டுபிடித்தேன்.

ஓர் உண்மை மனிதன் கதை என்றான். எனது பங்குக் கதை பற்றி எதுவும் சொல்லாமல் அவன் பங்குக் கதை பற்றி தெரிந்து கொள்ள எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. நான் எப்படி எனது குறிப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தயாரில்லையோ, அது போலவே அவனும் இருந்தான். வேறு வழியே இல்லாமல் எனது குறிப்புகளில் இருந்து சில சொன்னேன். ஊமைச் சோசியன் வரும் நாட்களில் அவ்வூர்களில் மழை பெய்ததில்லை; கெட்ட காரியமோ நல்ல காரியமோ நடந்ததில்லை; எல்லோரும் ஊரில் இருந்திருக்கிறார்கள். அவனது குறிப்புகளில் இல்லாத குறிப்புகள் இவையென அவன் பதறிப் போனான். எனது டைரிக் குறிப்புகள் அத்தனையும் சொன்னேன். அவனது சிறுகதையின் பின்புலம் சொன்னான்.

ஊமைச் சோசியன் நிமித்தம் ஓடப்போய் அவரையும் தாண்டி நாங்கள் நீண்ட தூரம் ஓடிவந்து விட்டோம். கோழிக்கோடு இரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் புட்டு சாப்பிட்டவுடன் தோன்றிய‌ C-K சிந்தனைக்குப் பின், நான் உங்களிடம் இதுவரை சொன்னவை எல்லாம், அவன் என்னிடம் சொன்ன அவனது டைரிக் குறிப்புகள். எனது சிறுகதையின் பின்புலக் குறிப்புகளைக் கேட்டபின் அவன் பெருந்தன்மையுடன் தோள் கொடுத்தான். அப்போது நான் டார்வின்; அவன் வாலஸ். ஓடிக் கொண்டிருக்கிறோம். இப்போது நாங்கள் ரைட் சகோதரர்கள். இன்னும் ஓடுவோம். முதலில் இறப்பவன் எட்வின்; இன்னொருவன் டேனியல். இறந்த பின்னும் நாங்கள் நாஸ்டர்டாமஸ். அதன்பிறகு எங்களைத் தேடப் போகிறவர்களுக்கு நாங்கள் விட்டுச் செல்லும் குறிப்புகளே இதுவரை நீங்கள் படித்தவை!

- ஞானசேகர்

2 comments:

Bee'morgan said...

இரண்டு வாரத்துக்கு முன் முதன் முறை பார்த்தபோதே, இப்போதைக்கு இதனைப் படிக்கமுடியாது. சாவகாசமாக படிக்கும் படியும் இல்லை.. நிதானமாக நேரம் ஒதுக்கித்தான் படிக்கவேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அந்த நிதானமான நேரம் இன்றுதான் வாய்த்தது.

இது வரை 3 முறை வாசித்துவிட்டேன். எவ்வளவு புரிந்தது, நான் என்ன புரிந்துகொண்டேன் என்பதையும் தாண்டி ஒரு வசீகரம் இழையோடுகிறது.. போகிற போக்கில் இடைச்செருகலாக வந்துபோகும் தகவல்களும் அருமை. :)

ஒரு கதைக்கு இவ்வளவு effort ம் இத்தனை முடிச்சுகளும் கொஞ்சம் அதிகம்தான். :P

It stands apart from your rest of the articles.

Gnanasekar J S said...

உரையாடல்களே இல்லாமல் எழுதப்பட்ட கதையிது.