காலத்தாயின்
குறைபிரசவக் குழந்தை
பிப்ரவரி மாதம்.
-யாரோ
ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனோடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றோடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றோடு செவியே
ஐந்து அறிவதுவே அவற்றோடு கண்ணே
ஆறு அறிவதுவே அவற்றோடு மனனே
-தொல்காப்பியர்
எங்கள் கல்லூரியில் என் நண்பன் ஒருவன், ஒரு கவிதையில் எழுதியிருந்தான்: "விதவை என்பவள் கணவனின் மரணச் சின்னம்". ஆனால், வாழ்க்கைத்துணை என்பவன் (என்பவள்) தன் எதிர்கால வாழ்வைக் கட்டித்தரச் சம்மதித்த ஒரு ஒப்பந்தக்காரன். அவனே வாழ்க்கையின் சொந்தக்காரன் என்பது அறிவீனம். ஒப்பந்தம் முறிந்து போனால், மறு ஒப்பந்தம் தேடுவதோ அல்லது ஒப்பந்தத்தொகை மிச்சம் என்று தானே மிச்சத்தையும் கட்டிமுடிப்பதோதான் புத்திசாலித்தனம். பெற்ற தாய்தந்தை இறந்தாலே சிலநாளில் மறந்து போகும் அற்ப ஜீவன்கள் நாம். இன்னொரு ஜீவனின் இறப்பில் தன் பிறப்பை அர்த்தமற்றதாக்குவது அறிவீனம்.
கைம்பெண்களை மறுமணம் செய்துகொள்ளத் தயாரானவர்கள் உள்ள இதே சமுதாயத்தில் தான், அவர்களின் ஒவ்வொரு செயல்களிலும் குற்றம் கண்டுபிடிப்பவர்களும் உள்ளனர் என்பதும் உண்மைதான். ஒரு கைம்பெண்ணின் மனநிலைகளையும், அவளுக்கு நிகழ்த்தப்படும் கொடுமைகளையும் நான் எழுத்து வடிவில் சொல்லப்போனால், கண்டிப்பாக முழுமை கிடைக்காது என்பது எனது எண்ணம். ஏனெனில், நமக்குத் தெரிந்த சோகங்களைவிட வெளிக்காட்டிக் கொள்ளாத சோகங்களே அதிகம் என்பது பல இழப்புகளைப் போல இதற்கும் பொருந்தும். எனக்குத் தெரிந்த ஒருத்தியின் மேலோட்டமான கதையிது.
போன நூற்றாண்டின் கடைசியில், என் தாத்தா இறந்த அன்று நடந்த நிகழ்சி இது. உயிரற்ற தாத்தாவின் அருகில், கொஞ்சம் உயிருள்ள பாட்டியும் அமர்ந்திருந்தாள். தாத்தாவைப் போல, பாட்டிக்கும் மாலை போடப்பட்டு இருந்தது. பாட்டியின் தம்பி, பாட்டியின் காலைப் பிடித்துக் கொண்டு பயங்கரமாக அழுதார். சிலபேர் உணர்ச்சி வசப்பட்டு அழுதுவிட்டார்கள்; சிலபேர் அழுகையை வரவழைத்துக் கொண்டார்கள்.
"அழுதது போதும் அவரத் தூக்குங்கையா? அடுத்து மருமகன் காத்துக்கிட்டுருக்காரு" என்று ஒரு சத்தம். அது வந்த திசை நோக்கித் திரும்பிப் பார்த்தேன். பாட்டிக்குப் பின்னால், தலை முழுக்க வெள்ளை முடிகளுடன், கருத்த தோலுடன் ஒரு கிழவி நின்றுகொண்டு இருந்தாள். (இந்தக் கிழவியை 'அவள்' என்று இனிமேல் குறிப்பிடுகிறேன்; புரிந்து கொள்ளுங்கள்)
கூட்டம் முழுவதும் சோகத்தை வரவழைத்துக் கொண்டு அமர்ந்திருக்க, அவள் மட்டும் கொஞ்சம் விதிவிலக்காகத் தெரிந்தாள். அமைதியாக அமர்ந்திருந்த பாட்டியின் தலை பின்னால் சாயும்படி மல்லிகைப்பூவையும், நெற்றியை மறைக்கும்படி மிகப்பெரிய பொட்டையும் வைத்தாள். பாட்டி மறுக்கவே,
"இனிமே எப்ப வெக்க போற கடேசிவாட்டிதானே. வெச்சுக்க" என்ற சமாதானத்துடன் அலங்காரம் செய்தாள். தாத்தாவைக் கல்லறைக்குத் தூக்கிச் செல்லும்போது, வழக்கம்போல, பெண்கள் அனுமதிக்கப் படவில்லை.
அன்று இரவு, அவளைப் பற்றி அம்மாவிடம் விசாரித்தேன். "அவ பாட்டியின் சின்ன வயசு கூட்டாளி. கல்யாணமாகி ஒரே மாசத்துல வயுத்துல ஒரு பயலக் கொடுத்துட்டு, புருஷன் தவறிப் போயிட்டாரு. அன்னையிலருந்து ஊருல எவளோட புருஷன் செத்தாலும், இவதான் முன்னால வந்து எல்லா வேலையும் செய்வா. இவளுக்கு எல்லாமே இவ மகந்தான். இப்பதான் அவனுக்குக் கல்யாணம் நடந்துச்சு" என்று சுருக்கமாக ஞாபகம் வைத்துக் கொண்டேன், வாழ்க்கையில் சுகம் என்பதைப் பெரும்பாலும் அறியாத அவளின் வாழ்க்கை பற்றி. அந்தக் காலத்தில் இருந்தே இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்து வரும் இவள் எனக்கு ஒரு பெரிய அதிசயமாகவே தெரிந்தாள்.
"மூன்றாம் குழி மூடும் வரை மூத்த பேரன் வெளி இடங்களுக்குச் செல்லக் கூடாது" என்ற கட்டுப்பாட்டின்படி, நான் அங்கேயே மூன்று நாட்கள் இருக்க வேண்டி இருந்தது. அந்த மூன்று நாட்களும் அவளிடமே நேரடியாகப் பேசி, நன்கு பழகி இருந்தேன். கடைசி நாள் இரவு, தாத்தா அன்புடன் வளர்த்த கோழிகள் எல்லாம் சமைக்கப்பட்டன. எல்லாருக்கும் சாப்பாடு பரிமாறப்பட்டது. பாட்டியும், அவளும் கூட்டத்தில் காணவில்லை. சாப்பாட்டை அப்படியே வைத்துவிட்டு, வெளியே வந்து பார்த்தேன். தாத்தா இறந்த குடிசையில் அவர்கள் இருவரும் தனித்தனி இலைகளில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.
"பாட்டி இங்கே ஏன் ஒக்காந்து இருக்க? உள்ள வா"
"இல்லடா தம்பி, பாட்டி இங்கேயே சாப்புடட்டும்"
நானும் ஓரளவு நிலைமையைப் புரிந்து கொண்டேன்.
"நானும் இங்கேயே சாப்புடுறேன்"
அதற்குள் என்னைத் தேடி சிலர் வந்துவிட்டனர்.
"சேகரு, என்ன பாதியோட ஏந்திரிச்சு வந்திட்ட? உள்ள வா"
"இல்ல இவன் கேக்கமாட்டான். அவன் எலய இங்க கொண்டாங்க" என்று பாட்டி சொல்லி, தலை குனியும் போது, பாட்டியின் இலையில் இருந்து ஒரு கவலம் என் வாயில் இருந்தது. பாட்டி வெள்ளை சோற்றை எனக்காத் தனியே ஒதுக்கி வைத்தாள். நான் எச்சில் சோற்றை மீண்டும் எடுத்தேன்.
"இது எச்சிடா. அத சாப்புடு"
"நான் சின்ன வயசுல, ஒன்னுக்குப் போன சோத்தெல்லாம் நீயும், ஓம் புருஷனும் தின்னீகல்ல. இப்ப நான் ஏன் பாட்டி எச்சியத் திங்கக்கூடாதா?"
பாட்டி அழுதுவிட்டாள். நானும்தான். சிலநேர சமாதானங்களுக்குப் பிறகு, அவளைப் பார்த்தேன். ஒன்றுமே நடக்காததுபோல், சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள்.
"ஒங்களுக்கு அழுகையே வராதா?"
"நான் எதுக்கு அழுகணும்?"
என்னிடம் பதில் இல்லை.
மறுநாள் கிழம்பும்போது அவளைப் பார்த்து,
"நான் ஒங்க வீட்டுக்கு ஒரு நாளு வந்தா, எனக்குச் சோறு போடுவீங்களா?"
"நீங்களா? எங்க வீட்டுக்கு எல்லாம் வருவீங்களா?"
"வரக்கூடாதுன்னா சொல்லுங்க, வல்ல்"
"அதெல்லாம் இல்ல தம்பி, எப்ப வாரீங்க?"
"இப்ப இல்ல. இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்"
(வழக்கம்போல், சற்றே இடைவெளி எடுத்துக் கொண்டு மீண்டும் தொடருங்கள்)
போன நூற்றாண்டின் கடைசி ஆண்டில் பிப்ரவரி மாதம் இறுதியில், நான் அவளது ஊருக்குச் சென்றிருந்தேன். சேரன் திரைப்படங்கள் எடுக்கச் சிறந்த ஊர் அது. அவள் என்னை எதிர்பார்க்கவில்லை. மிகவும் சந்தோஷப்பட்டாள். மகனும், மருமகளும் அறிமுகமாயினர். ஒன்பது மாத கர்ப்பிணியான மருமகளை ஒரு கிழவி பரிசோதித்துக் கொண்டு இருந்தாள். அவள் எனக்காக சிறப்பு சமையல் செய்ய, சாமான்கள் வாங்க வெளியே போனாள். அவள் மகன் கேட்டார்,
"என்ன தம்பி படிக்கிறீங்க?"
"இன்ஜினியருக்குப் படிக்கிறேன்"
"கம்பியூட்டரு எல்லாம் படிப்பீகலா?"
"ம், படிப்போம்"
"அதுல பொட்டப் புள்ளகல பாக்காமலே லவ்வு பண்றாய்கலாமுல்ல"
"அதெல்லாம் தெரிமுமா உங்களுக்கு?"
"இல்ல ஒரு படத்துல பாத்தேன். நீங்க பாத்துப் படிங்க தம்பி. பொட்ட புள்ளக அப்புடித்தான்..." என்று அவர் முடிப்பதற்குள், அவர் மனைவி பிரசவ வலியில் துடித்தாள். அவள் பதறிப்போய் எங்கிருந்தோ ஓடிவந்தாள். சில கிழவிகள் கூடினர். ஒரு கிழவி சுடுதண்ணியில் பாதங்களைத் தேய்த்துவிட்டாள். பெருசுகள் அடிக்கடி வந்து நலம் விசார்த்துவிட்டு போயின. இவ்வளவு நெருக்கடியிலும் அவள் எனக்காக சமையல் செய்து முடித்து இருந்தாள். நீண்ட நாளைக்குப் பிறகு தனது வீட்டில் சிறப்பு சமையல் என்று எனக்கு முருங்கைக்காய் சாம்பார் பரிமாறினாள். சிறப்பு சமையலே இதுவென்றால், என்னால் கற்பனை செய்ய முடியவில்லை.
புளிப்பு அதிகமான சாப்பாடு எனக்குப் புதிது என்பதால், கொஞ்சம் கஷ்டப்பட்டேன். சமாளிப்பதற்காக பேச ஆரம்பித்தேன்.
"நீங்க என்ன வேல பாக்குறீங்க?"
"அருந்ததியப் பாக்குறதுக்காக மட்டும் எப்பையாவது எங்களுக்கு ஆர்டர் வரும். அத நம்பி வயித்தக் கழுவ முடியாது. அதனால, அப்ப அப்ப,,,,, புரியுதுங்களா?"
"ம் ம் ம் சொல்லுங்க"
"அதனால் அப்ப அப்ப மலையில கல்லு ஒடச்சி காலத்த ஓட்டிக்கிட்டு இருக்குறோம்"
"நீ மொதல்ல சாப்புடுப்பா. அப்பறம் பேசிக்கலாம்"
இடையிடையே பிரசவ வலியில் அவள் துடித்தாள்.
"இவ ஒருத்தி ஒன்பது மாசத்துலயே இந்தக் கத்து கத்துறா"
பிரசவ வலியில் அவள் இருப்பதால், இரவு முழுக்க தூங்காமல் பல விஷயங்கள் பேசிக்கொண்டு இருந்தோம். இரவு மூன்று மணியளவில் பிப்ரவரியின் கடைசி நாள் பிறந்து சில மணி நேரத்தில், ஒரு பெண் குழந்தை பிறந்தது. யார் முகத்திலும் சந்தோஷம் இல்லை. காரணம் கேட்டேன். அவள் சொன்னாள்.
"கொழந்த கொற மாசத்துல பொறந்திருக்கு. அதான் பயமா இருக்கு"
"அதுக்கு ஏன் பயப்படுறீங்க. இன்னைக்கி நாள் இருக்கே இது ரொம்ப வித்தியாசமான நாள். பிப்ரவரி மாசம் 29ம் தேதி. நாலு வருசத்துக்கு ஒரு மொறதான் வரும். பிப்ரவரி மாசத்தைக் கடவுளோட கொறப்பிரசவத்துல பொறந்த கொழந்தன்னு சொல்லுவாங்க. இந்த நாள்லதான்..." என்று நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, யாருக்கும் புரியவில்லை எனப் புரிந்தது.
பேச்சை மாற்றினேன். "நியூட்டன்னு ஒரு பெரிய அறிவாளி இருந்தாரு. அவரும் கொறமாசத்துலதான் பொறந்தாரு. எல்லாரும் அவரு ஆறு மாசத்துல செத்துருவாருன்னு சொன்னாக. ஆனா அவருதான், அதிக நாளு இந்த ஒலகத்துல வாழ்ந்த விஞ்ஞானி. அது மாதிரி இவளும் ஒரு நாள் மிகப்பெரிய ஆள வந்து, என்னென்ன செய்யப் போறா பாருங்க?". இப்போதும் புரியவில்லை. முயற்சியைக் கைவிட்டுவிட்டேன்.
காலத்தின் அசுர ஓட்டத்தில் என்னால், ஈடு கொடுக்க முடியாமல், எப்போதாவது அவளை ரோட்டில் பார்த்தால் குடும்பத்தை நலம் விசாரிப்பதோடு எங்கள் பழக்கம் இருந்து வந்தது. இரண்டு இரண்டுகளும், இரண்டு பூச்சியங்களும் சேரும் வருங்காலத்தில் ஓர் ஆண்டைப் பற்றி இந்தியர்கள் கனவு கண்டுகொண்டு இருக்க, இரண்டு இரண்டுகளும், இரண்டு பூச்சியங்களும் சேரும் இறந்த காலத்தில் ஓர் ஆண்டில் மீண்டும் அந்த சேரன் படத்து ஊருக்குச் சென்றேன், சிலபல தின்பண்டங்கள் வாங்கிக் கொண்டு.
(வழக்கம்போல், சற்றே இடைவெளி எடுத்துக் கொண்டு மீண்டும் தொடருங்கள்)
அவள் வீடு கொஞ்சம் பழுதடைந்து இருந்தது. வீட்டின் முன் ஒரு குழந்தை சிரித்துக் கொண்டே படுத்திருந்தது. அதன் அருகில் அவள் அமர்ந்திருந்தாள். என்னைப் பார்த்தவுடன், மிகவும் பரவசமானாள். கிழிந்த பாயில் அமர்த்தப்பட்டேன். மீண்டும் அவள் முருங்கைக்காய் வாங்கப் புறப்பட்டாள். நான் குழந்தையிடம் விளையாட்டு காட்டிக்கொண்டு இருந்தேன். என்னை அது சிரிப்பால் அடித்தது. ஆரஞ்சு பழத்தை உரித்துக் கொடுத்தேன். அது சிரித்துக் கொண்டே, வாங்கவில்லை. நான் ஊட்டிவிட்டேன். உண்டது.
அவள் வந்து அடுப்படி புகுந்தாள்.
"என்ன? என்னோடல்லாம் பேசக்கூடாதுன்னு பேத்திக்கிட்ட சொல்லி இருக்கீங்களா? ஆரஞ்சு பழம் குடுத்தா வாங்கவே மாட்டேங்குது"
"கையி இருந்தாத் தானே வங்குறதுக்கு"
"ஒனக்கு எப்பவுமே தமாசுதான். இது கையி இல்லாம வேற என்ன?"
"அதப் புடிச்சுப் பாரு" என்று சொல்லிக் கொண்டே வெளியே வந்தாள்.
கையைப் பிடித்துப் பார்த்தேன். ஜில்லென்று இருந்தது. விட்டேன். தொப்பென்று விழுந்தது. நடப்பதை என்னால் உணரமுடியவில்லை.
"காலையும் புடிச்சுப் பாரு"
செய்து பார்த்தேன். அதே நிலைமைதான்.
கழனித் தண்ணீரை வெளியே ஊற்றிவிட்டு, மீண்டும் அடுப்படி புகுந்தாள். சில மணிநேரங்கள் இதயம் தாறுமாறாய் எனக்குத் துடித்தது.
"வெண்டக்கா பொடுசா போடட்டுமா? இல்ல...."
"எப்புடியாவது போடு"
சில காய்கறிகளுடனும், அரிவாள் மனையுடனும் என் அருகில் அமர்ந்தாள்.
"நீதான் சொன்னே. யாரோ ஒரு பெரிய மனுசன் இதேமாதிரி பொறந்து, பிற்காலத்துல பெரிய ஆளானாருன்னு. அவரு பணக்கார வீட்டுல பொறந்துருப்பாரு. இது இந்த ஈனச்சிருக்கி வீட்டுலல்ல பொறந்திருக்கு"
குழந்தை அழுதது.
"என்னாடி என்னப் பெத்த மகராணி" எனக் கொஞ்சிக் கொண்டே ஆரஞ்சுப்பழம் கொடுத்தாள்.
"ஆஸ்பத்திரியில காட்டுனீங்களா?"
"எல்லா வெளக்கமாறுந்தான் செஞ்சோம். ஒன்னும் வேளைக்கி ஆகல. இது ரொம்ப நாளைக்குத் தாங்காதுன்னு சொல்லிட்டாக"
"இவுக அம்மா-அப்பா யாரையும் காணோம். வேலக்கிப் போயிட்டாகலா?"
"இவ இப்புடி இருக்குறது தெரிஞ்சதும் இவ ஆயி, பொறந்த வீட்டுக்குப் போனவதான். திரும்பவே இல்ல. ஒன்ற வருஷம் ஆச்சு"
"இவுக அப்பா"
"நம்ம மைனரா? அவரும் பொன்டாட்டி முந்தானையப் புடிச்சிக்கிடே போய் மாமியாரு வீட்டுல குடுத்தனம் ஆயிட்டாரு"
"அப்ப இத்தன நாளு?"
"நாங்க ரெண்டு பேரும்தான் இந்த வீட்டுல ஒன்டிக்கட்டையா இருக்கோம்"
"ஓன் வாழ்க்கையில சந்தோஷம்னே ஒன்னு கெடையாதா? ஏன் கடவுள் ஒன்ன மட்டும் இப்புடி?"
"கர்த்தர் என்னா பண்ணுவாரு? ஏதோ அவரு கிருபையில இவ மொதல்லயே போயிட்டா, இவளத் தூக்கிப் போட்டுட்டு, நிம்மதியா நானும் போயிடுவேன்"
குழந்தை அழுதது.
"இல்லடி ராஜாத்தி நீ சாகமாட்டடி"
தாமதிக்காமல் நான் சொன்னேன்: "நீயும்தான்"
"..........."
"ஏன் கல்யாணத்துக்குத் தாலி எடுத்துக் குடுக்காம நீ சாக மாட்டே"
என்னை அவள் வெறித்துப் பார்த்தாள். நானே தொடர்ந்தேன்.
"அங்கி மட்டும் வெள்ளயா போட்ட ஒரு சாமியார், இல்லாட்டி புரியாம திட்டிக்கிட்டே குடுமி வெச்ச ஒரு ஆளு, இப்புடி யாராவது எடுத்துக் கொடுக்குற தாலியவிட, ஒன்னமாதிரி ஒரு ஆளு எடுத்துக் கொடுக்குற தாலியக் கட்டினாத்தான், வாழ்க்கைன்னா என்னான்னு கட்டிக்கப் போறவளுக்குத் தெரியும்".
கண்களில் இருந்து வழியும் கண்ணீர்த் துளிகளை அவள் தடுக்க முயலவில்லை. முதல் முறையாக அவளை அழவைத்தேன். அசிங்கமாகக் கருதப்படும் அழுகையைப் புனிதமாக்கிய பெருமிதத்துடன் சிலமணிநேரங்கள் அங்கே இருந்துவிட்டு திரும்பினேன்.
இந்த சேகர், இக்கதையின் சுவாரஸ்யம் கருதிகூட, இறக்கவிட விரும்பாத அந்தக் குழந்தையை, காலம் தனது சுவாரஸ்யம் கருதி எடுத்துக் கொண்டது. அந்த நான்கறிவு மனிதக்குழந்தை, தனது மூன்றாவது வயதில், தனது முதல் பிறந்த நாளைக்கூட எதிர்கொள்ள முடியாமல், தனது பூலோக வாழ்க்கையை மூன்றடிக்குள் அடக்கிக் கொண்டது, வாழும் போதும், வாழ்ந்த பிறகும்.
பிப்ரவரி மாதத்தில் எப்போதாவது வரும் 29ம் தேதி, அம்மாதத்தை முழுமை செய்வது போலத் தோன்றினாலும், 29 என்பது கூட முழுமை கிடையாது. அவளும் பிப்ரவரி போலத்தான். திருமணம், தாம்பத்யம், குழந்தைப்பேறு, பேரக்குழந்தை என அவள் வாழ்வில் சந்தோஷம் வருவதுபோல் அறிகுறி இருந்தாலும், அவள் வாழ்க்கையில் என்றுமே சந்தோஷம் என்பது முழுமை கிடையாது. பிப்ரவரி மாதத்திற்கு Month of Sacrifice என்ற பெயருமுண்டு. Sacrifice என்றால் பலி, தியாகம் என்று இரு அர்த்தங்கள் உண்டு. அவள் வாழ்க்கை பலியா? தியாகமா? இரண்டுமா?
காலம் அனுமதி தந்தால், பிப்ரவரி போன்ற அவள் வாழ்க்கையில், அடுத்து வரப்போகும் 29, எனது திருமணம். ஆனால், அதுவும் நிரந்தரம் இல்லை என்பதே அமைதியான உண்மை.
-ஞானசேகர்
5 comments:
உண்மையான உணர்வுகள் போற்றுதலுக்குரியவை...
அது எதுவாக இருந்தாலும்...!
நல்ல முன்னேற்றம்...சேகர்!
நெஞ்சைத் தொடுகிற கதை.
அழகாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!
எனக்கு பணத்தை விட மனிதர்களை
சம்பாதிக்கவும் ! சந்தோசப் படுத்தவும் !! ஆசை உண்டு !!
அவ்வாசை உடைய இன்னோர் மனிதனை காண்கிறேன் !!
மேலும் வளர்க !!
HUMANITY LIVING LIKE YOU. WE ARE NOT AWARE OF HUMAN RIGHTS. WE HAVE TO EDUCATE ALL OUR PEOPLE ABOUT HUMAN RIGHTS. EACH AND EVERY HUMAN BEING HAVE TO READ THIS. BY RAMKI
Very good story i like every line
Post a Comment