"ஐயோ போய்விட்டாரே" என்று சவப்பெட்டி செய்பவன்கூட வருந்தும் அளவிற்கு வாழ்வதே வாழ்க்கை.
- சாமுவேல் கிளமென்ஸ் (மார்க் ட்வைன்)
கொடுப்பதற்கு இனிப்பு இல்லாவிட்டால், இனிப்பாகப் பேசுங்கள்.
-மேற்கத்திய பழமொழி
"மண்ணெண்ணையவிட சீக்கரமா சீனி தீந்துபோயிடுது சீனம்மா"
"ரேஷன்ல சீனி கொஞ்சம் அதிகமா போட்டா தேவல போலருக்கு"
"எங்க வீட்டுல மட்டும் வித்தியாசமா எலிகிலி, எறும்புகிறும்பு ஏதாவது இருக்கான்னு தெரியல செல்லக்கண்ணு அக்கா"
இதுபோன்ற வசனங்களை அம்மா பேசும்போதெல்லாம், ஒன்றுமே தெரியாதவன்போல் அமைதியாக அமர்ந்திருப்பேன். ஒருநாள் கடையில் இருந்து சீனி மடித்து வாங்கி வந்தபோது, கையில் கொட்டியதை வாயில் போட்டு பார்த்தேன். நாக்கின் இனிப்புச்ச் சுவை அரும்புகளின் அதிஉன்னத அருமை அன்றுதான் புரிந்தது. அன்றில் இருந்து, அடுப்படியில் அடுத்த சில கணங்களுக்கு யாரும்வர வாய்ப்பில்லை என்று தோன்றும் போதெல்லாம், சீனிடப்பா கதவு தட்டப்படும்; அரும்புகள் வாசல் திறக்கப்படும். நடுராத்திரியில் விழிப்பு வரும்போதெல்லாம் அரும்புகள் வாசல் திறந்த கதைகள் ஏராளம்.
வீட்டில் யாரும் இல்லாதபோது, சீனியை வாயில் போட்டு, கண்ணாடி முன்னால் நின்றுகொண்டு, கன்னம் குறுக்கி, உதடு குவித்து, நாக்கிற்கும் மேல் அன்னத்திற்கும் இடையில் சீனியைவைத்து இழுக்கும்போது, கண்ணாடி முன்னால் நின்றாலும் தானாகவே கண்கள் மூடுமே, அந்த ஒரு தருணத்தை மூன்று ஆண்டுகள் அப்ப அப்ப அனுபவித்து இருக்கிறேன். சுட வைத்த சீனியின் சுவைக்காகவே, தேங்காய் மிட்டாய் போடும் ஒரு பாட்டியைப் பழக்கம் செய்து, விடுமுறை நாட்களில் தேங்காய் மிட்டாய் போடும்போது எல்லா வேலைகளும் பார்ப்பேன். கடைசியாக சட்டத்தைவைத்து, மிட்டாய்களை அறுத்துவிட்டு, சுடச்சுட சில துண்டுகள். 'பச்சை நிறமே' பாடலை மட்டும் நான் எழுதி இருந்தால், சீனி கரைந்த அடுத்த சில நிமிடங்களில் நாக்கின் நிறத்தைச் சிவப்பிற்கு எழுதியிருப்பேன்.
எனது சீனிகாண்டத்திற்கும் ஒரு பெரிய கண்டம் வந்தது. அன்று இரவு, இல்லை இல்லை அன்றிற்கு அடுத்த நாள் அதிகாலை, மூன்று மணியளவில் சேது எக்ஸ்பிரஸ் சத்தத்தில் விழித்துக் கொண்டேன். வழக்கம்போல் அடுப்படி. வழக்கம்போல் பச்சைநிற சீனிடப்பா. மஞ்சள்நிற ஸ்பூன். வெள்ளைநிற சீனி. சிவப்புநிற நாக்கு. எல்லாமே கருப்புநிற இருட்டில் எனக்கு அத்துப்பிடி. ஆனால் வித்தியாசமாக ஒன்று ஸ்பூனிற்கு இடையில் பிடிபட்டது. அது ஒரு காகிதம். டவுசர் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, படுத்துக் கொண்டேன்.
விடிந்து பார்த்தால், அக்காகிதத்தை வைத்திருப்பவருக்கு அம்பது ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தரச்சொல்லி மன்மோகன்சிங் கையெழுத்து போட்டிருந்தார். 'ஐம்பது ரூபாய்' என்ற தமிழ் வார்த்தைகளுக்குப் பாராளுமன்றக் கொடி முகம் திருப்பிக்கொண்டிருந்தது. சீனியில் சுட்ட பணம், சீனி வாடை இருக்கிறதா என மூக்கில் வைத்துப் பார்த்தேன். சீனிகாண்டமே ஒரு திருட்டுப் புராணம் என்று உணர்த்தாத 10 வயது, பத்தும் செய்யும் ஐம்பது என்று அப்போது உணர்த்தவில்லை. பத்தோடு ஒன்று பதினொன்றாக அந்த ஐம்பது ரூபாயையும் வைத்துக்கொண்டு பள்ளிக்கூடம் போய்விட்டேன். ஆனால் பணத்தை என்ன செய்ய வேண்டும் என்றோ, எடுத்த இடத்தில் வைக்கலாம் என்றோ, பத்து எனக்குப் பரிந்துரைக்கவில்லை.
வீடு திரும்புகையில், காலையில் பார்த்த சாலை, சுவடே இல்லாமல், அதாவது நடக்கவே வழியில்லாமல் மாறியிருந்தது. சாலையின் குறுக்கே ஒரு பந்தல். அதைத்தாண்டி சாலையோரத்தில், ராட்டினம். சில தற்காலிக கடைகள். உலகமே சுற்றிவரும் பணம், என்னையும் ராட்டினத்தில் சுற்றவைத்தது. ராட்டினக்காரன் மீதியாக நான்கு காகிதங்கள் கொடுத்தான். நான்கிலும் மீண்டும் மன்மோகன் சிங். ஆனால், நான்கிலும் 'பத்து ரூபாய்' என்ற தமிழ் வார்த்தைகளைக் கண்டாமிருகம் ஒன்று முகர்ந்து பார்த்தது. நான் முகரவில்லை. ஒரு காகிதம் வைத்து நான்கு காகிதம் சம்பாதித்துவிட்டாலும், ஒன்றை வைத்தே ஒன்றும் தெரியாமல் இருந்த நான் நான்கை வைத்து என்ன செய்யப் போகிறேன் என்று தெரியாமல் இருந்தேன்.
வீட்டிற்கு நான் வந்ததும், பானவகைகளில் எனக்குப் பிடித்த கொள்ளுரசம் தயாரானது. குடித்து முடித்தவுடன், அருகில் இருந்த பக்கத்துவீட்டு யாமினி என்னைக் கேட்டாள்:
"சேகரு, சீனிடப்பாவுல இருந்த அம்பது ரூவாய எடுத்தியாடா?"
எனது மூளை, முதன்முதலில் பதறாமல் ஒரு பொய் சொல்ல, எனது கற்பனைவளத்தைத் திறந்து வைத்தது.
"நானா? சீனிடப்பாவ தொட்டதே இல்ல. நாம ரெண்டுபேரும்தானே காலையில எழுந்திருச்ச ஒடனேயே கேரம்போர்டு வெளையாண்டம்?"
மூளை என்னைத் தட்டிக்கொடுப்பதற்குள், அம்மா என் கன்னத்தைத் தட்டியாயிற்று.
"பொய் பேசிறியாடா?"
பளிச்சென்று என்னைச் சுவர் பக்கம் இழுத்து, யாமினி என்னை முதுகுக்குப் பின்னால் வைத்துக் கொண்டாள்.
"நீ ஒதுங்கு யாமினி" என்று அம்மா சொல்லும்போது, என் கன்னத்தை யாமினி தேய்த்துவிட்டுக்கொண்டு இருந்தாள்.
"ரொம்ப செல்லம் கொடுத்து...."
"இப்பவே இப்புடின்னா, இன்னும் சொச்ச காலத்துக்கு...."
"அப்பா வரட்டும்...."
"ஸ்கூல்ல இதுதான் சொல்லித்தாராங்களா?...."
என வாக்கியங்கள் ஆரம்பித்தன. பிறகு அம்மா காபி தயார் செய்தாள்.
யாமினி கேட்டாள்:
"உண்மையச் சொன்னா அம்மா அடிக்க மாட்டாங்கடா? சொல்லு? அப்பறம் கேரம்போர்டு வெளையாட எங்க வீட்டுக்குள்ள விடமாட்டேன்"
சீனிடப்பா திறக்கும் சத்தம் கேட்டது.
"இன்னும் மங்குனி மாதிரி இருக்கான் பாத்தியா? உண்மைய ஒத்துக்கிற வரைக்கும் சோறு கெடையாது"
காபி குடிக்காமல், சீனிடப்பாவை எடுத்துவந்து அவர்கள் முன்னால், சீனிதின்ன ஆரம்பித்தேன். யாரும் ஒன்றும் சொல்லவில்லை.
"ரொம்ப தின்னாத. பல்லு போயிடும்" என்று வெடுக்கென்று டப்பாவை யாமினி எடுத்துக்கொண்டாள்.
எழுந்திரித்து நேராக மாடிக்குப் போய்விட்டேன். அப்பா வருவதற்குள் ஒரு சூரியனும், மூன்று ரயில்களும் மறைந்து போயிருந்தன. கீழே நின்றுகொண்டு, Little Hearts பிஸ்கெட்டைக் காட்டி அப்பா கூப்பிட்டார். அவரின் இன்னொரு கையில் இருக்கும் Lion Dates சிங்கத்தின் கம்பீரத்துடன் நான் மேலேயே நின்றுகொண்டு இருந்தேன். விடுமுறையில் என்னை அழைத்துச் செல்ல அம்மாச்சியும் வந்திருந்தாள். கொஞ்சநேரம் கழித்து, மாடிக்கு அப்பா வந்தார். ஒரு குடத்துத் தண்ணிரை ஊற்றிவிட்டு,
"அனல் போனதுக்கப்பறம் இங்கேயே படுத்துக்க. பயம், பசி ரெண்டுல எது வந்தாலும் வீட்டுக்கு வா. கதவு தெறந்துதான் இருக்கும். நான் அடிக்க மாட்டேன். பயப்படாதே"
ஒரு பாய். இரண்டு போர்வைகள். ஒரு டார்ச் லைட். Little Hearts. Lion Dates.
அப்போது இருந்த மனநிலையில் வானத்து நட்சத்திரங்களையோ, டைல்ஸ்களையோ எண்ணிக்கை செய்ய தோன்றவில்லை. சீனி விசயத்தில் மாட்டிக்கொள்ளவில்லை என பெருமைப்பட்டேன். ஆனால், இத்தனைநாள் தின்ன சீனியால், பல்லில் ஏதாவது கிருமி வந்திருக்குமோ என புதுப்பயம் வந்தது? அடுத்த வருடத்திற்குள் பல்லெல்லாம் கொட்டி, செத்துவிடுவேனோ எனவும் தோன்றியது. "இங்கே இருந்து அடிவாங்குறதுக்குப் பதிலா சாகப்போற வரைக்கும் எங்கையாவது போயி சந்தோசமா இருக்கலாம்" என நான்கு காகிதங்களும் ஒருசேர சொல்லின. காலம் அது, இன்னும் சில மணிநேரங்களில் பங்குனி முடிந்து சித்திரை ஆரம்பிக்கப் போகிறது. சேகர் நான், பள்ளிச் சீருடையுடன் வீட்டுமாடியை விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தேன். வாழ்க்கை அது, சீனிகாண்டத்தில் இருந்து பெயர் வைக்கப்படாத அடுத்த காண்டத்திற்கு நடக்க ஆரம்பித்தது.
(வழக்கம்போல் சற்றே இடைவெளி எடுத்துகொண்டு, கொஞ்சம் மனநிலையை மாற்றிக்கொண்டு தொடருங்கள்)
நன்கு பழக்கப்பட்ட பள்ளிகூடப் பாதையிலேயே நடக்க ஆரம்பித்தேன். பகலில் அமர்க்களப்படுத்திய ராட்டினம், அமைதியாக நின்று கொண்டிருந்தது. ஏதோ ஒரு தமிழ் ஆண்டின் பிறப்பை முன்னிட்டு, ஏதோ ஒரு குழுவினரின் பாட்டுக்கச்சேரி மேடையில் நடந்து கொண்டிருந்தது. நடுராத்திரியில் சுறுசுறுப்பாக எல்லாரும் அமர்ந்து பார்த்துகொண்டிருந்தார்கள். ஒருவர் மேடையில் ஏறி, அம்பது ரூபாய் பரிசளித்தார். சுக்குக்காபி குடித்தேன். ஆடும் ரசிகர்களுடன் நானும் ஆடினேன். அடுத்தநாள், இல்லை இல்லை இன்று ரிலீஸாகும் புதுப்படத்தின் முதல் காட்சியை நேற்று பார்த்துவிட்டு, போதையுடன்வந்த பரமரசிகர்களுடன் சேர்ந்து சந்தோசமாக ஆடினேன். ஒரு நான்கு மணியைப்போல் சட்டையைக் கழட்டி தலைமாட்டில் வைத்துக்கொண்டு, கட்டடமணலில் தூங்கினேன். ஒரு ஐந்து மணியளவில் ஒரு கை என்னைத்தட்டி எழுப்பியது.
"என்ன தம்பி இந்த ஊரா?"
"இல்ல இல்ல". தூக்கத்திலும் தெளிவாகச் சொன்னேன்.
என் முழியைப் பார்த்தே கண்டுபிடித்துவிட்டார். அவர் வேறு கேள்வி கேட்டிருந்தால், வேறு பதில் சொல்லி இருப்பேன். "என்ன? வீட்டவிட்டு ஓடியாந்துட்டியா?" என்று கேட்டதால், "ஆமா" என்று ஏனோ சொல்லிவிட்டேன்.
"சரி வா. டீயக் குடி" நடக்க ஆரம்பித்தார்.
சட்டையக் காணவில்லை. சொல்ல மறந்துவிட்டேன். சுக்குக்காபி குடித்துவிட்டு, மீதிபணத்தைச் சட்டையில்தான் வைத்திருந்தேன். அப்படியே வீட்டிற்குப் போகலாமா என்று தோன்றியது. அப்பெரியவர் கையசைத்துக் கூப்பிட்டார்.
"சட்ட போடாம ஓடி வர்ற அளவுக்கு என்னடாப்பா கோவம்"
வார் டவுசருடன் நின்ற என்னிடம் கேட்டார்.
"காசுகீசு எதாவது வெச்சிருக்கியா?"
"பயங்கரக் கோவக்காரன் போலருக்கே"
"சரி அடுத்து எங்க போறதா உத்தேசம்"
அவர் கேட்ட ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் சரியென்று பதில் சொன்னேன். அது,
"பேசாம என்னோட வந்துட்றியா?"
என்னை யாரென்றே தெரியாமல் ஏறத்தாழ முந்நூறு நாட்கள் வயிற்றில் சுமந்த தாயைப் பற்றி கவலைப்படாமல், யாரென்றே தெரியாத ஒரு கிழவனின் பின்னால், அவன் தந்த பச்சை துண்டைப் போர்த்திக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.
செங்கோல் வாடகை சைக்கிள் கடை. அடையாளம் தெரியாதென சைக்கிள் தரமறுத்தவரிடம், ஏதோ சொல்லி கேரியர் வைத்த சைக்கிள் வாங்கினார். சைக்கிளில் பின்னால் அமர்ந்து கொண்டேன். வயதுக்கு மீறிய வேகத்தில் சைக்கிள் ஓட்டினார்.
"சைக்கிள் ஓட்டத் தெரியுமா?"
"தெரியாது"
"எத்தனாவது படிக்கிற?"
"நேத்துதான் அஞ்சாவதுல கடசி பரிச்ச எழுதுனேன்"
"எதுக்காக வீட்டவிட்டு ஓடியாந்தே?"
"அந்தப் பேச்ச விடுங்க. இப்ப எங்க போறீங்க?"
"எங்க போறம்னே தெரியாம போற ஒருத்தருக்காக, தெரிஞ்ச ஒருத்தரப் பாக்கப் போறேன்"
நிஜமாக நான் அர்த்தம் கேட்கவில்லை. எனக்குப் புரியக் கூடதென்று வேண்டுமென்றே சொன்ன பதிலது.
ஒற்றைச் சிம்னி விளக்கொளியுடன் ஒரு கிராமத்து டீக்கடை தயாராக இருந்தது. சூரியனின் மங்கலான வெளிச்சம் மட்டும், இன்னும் தூங்குபவர்களைப் பார்வையிட்டது. சைக்கிளைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, "இந்தா வர்றேன்" என்று டீயுடன் என்னைக் கைவிட்டார். மீண்டும் சைக்கிள் பயணம்.
"இதெல்லாம் ஒரு காலத்துல பெரிய கொளமா இருந்துச்சு. சர்க்காரு ஆரஸ்பதி எல்லாம் நட்டுச்சு. இப்ப பாத்தா பொட்டக்காடா கெடக்குது. கா....லம்"
அவர் ஊரைப்பற்றிக் கேட்டால், மீண்டும் என்னைப் பற்றி ஆரம்பிப்பார் என ஒன்றும் பேசவில்லை.
"வழிப்பறி, கொலையெல்லாம் ரொம்ப நடக்குதுன்னு சர்க்காரே மரத்த வெட்டிடிச்சு. ஒனக்கிட்ட சொல்லக் கூடாத பல கெட்ட காரியங்களும் இங்கதான்"
ஒற்றைச் சிம்னி விளக்கொளியுடன் அடுத்த கிராமத்து டீக்கடை தயாராக இருந்தது. அந்த ஊரிலும் சைக்கிளைப் பாதுகாத்துக் கொண்டு, ஒரு டீ. அடுத்து ஒரு வயல்காட்டு வழியே சைக்கிளைத் தள்ளிகொண்டே, அடுத்த ஊர். அங்கே சிம்னியை விரட்ட சூரியன் தயாராகிக்கொண்டு இருந்தான். அடுத்த டீ சைக்கிளுடன்.
சைக்கிள் பயணம். பொறுமையை முழுவதும் இழந்தவனாய்,
"என்னங்க ஒவ்வொரு ஊராப் போயி, என்னமட்டும் விட்டுப்புட்டு ஊருக்குள்ள போயிட்டு திரும்ப வர்றீங்க?"
"ஒனக்குப் புரியாது தம்பி"
"சொல்லுங்க. இல்ல எறங்கி ஓடிடுவேன்"
சைக்கிளை நிறுத்திவிட்டு சொன்னார்.
"நான் கேதம் சொல்லி போயிக்கிட்டு இருக்கேன்"
புரியாமல் விழித்தேன்.
"ஒருத்தர் எறந்து போனதுக்கு எழவு சொல்லிப் போறேன்"
யாரோ ஒருவரின் சாவுக்கு நானும் இறக்கப்பட்டேன்.
"நீங்க என்னத் தொட்டு டீ கொடுத்தீங்க. ஒங்க போர்வைய நான் போத்தி இருக்கேன். தீட்டுதானே?"
"என்னத் தொட்டா தீட்டு இல்ல. ஒனக்கு சொன்னாலும் புரியாது"
"அப்ப எழவு சொல்றது எப்புடின்னு எனக்கும் காட்டுங்க"
சந்தோசமிகுதியில் சட்டென வெளிவந்தான், சூரியன்.
(வழக்கம்போல் சற்றே இடைவெளி எடுத்துகொண்டு, கொஞ்சம் மனநிலையை மாற்றிக்கொண்டு தொடருங்கள்)
டீக்கடையைத் தாண்டி சைக்கிளுடன் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தோம்.
"என்ன ஊசி? ஏதாவுது பெரிய காரியமா?" கோவணத்துடன் ஒரு பெருசு கருவேள மரத்தின் பின்னிருந்து கேட்டார்.
"இல்ல சின்ராசு. வேற வெசயமா"
"ஊசியா?"
"ஏன் பேருதான்"
வழியில் ஓர் ஆள் முண்டாசுடன், போர்வையைச் சுற்றிக்கொண்டு வந்துகொண்டு இருந்தார்.
"கட்டக்கலப்ப வீடு எதுங்க?"
"யாரு?"
"கட்டக்கலப்ப"
"அப்புடி யாரும் இல்லேங்கலே... நெசப் பேரே அதானா?"
"அவர கட்டக்கலப்பந்தான் கூப்புட்றது. தெக்கிச் சீமையில பொண்ணெடுத்தாரு"
"நான்கூடத்தான் தெக்கிச் சீமையில பொண்ணெடுத்தேன். என்ன சங்கதியா பக்கணும்?"
"ட்ராக்டரவிட்டு உழுவ மாட்டேன்னு, கலப்பயிலேயே உழுவுவாரே அவருயா"
"என்னய்யா இது? எனக்குத் தெரியாமா?"
"நீ எத்தன வருசமாய்யா இந்த ஊர்ல இருக்க?"
"பொறந்ததுல இருந்து இங்கதான் இருக்கேன்"
"கட்டக்கலப்பயத் தெரியாது?"
"எனக்குத் தெரியாம இங்க ஒன்னுமே நடக்காது"
விருட்டென்று சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார். ஒரு வீட்டின் முன்னால் வாசல் தெளிக்கும் ஒரு பெண்ணை அடையாளம் கண்டு கொண்டவராய்,
"ஏம்மா? இதுதான் கட்டக்கலப்ப வீடா?"
"ஆமாங்க? என்ன விசயம்? டேய் ஆங்ஞான கூப்புடுடா"
"இல்ல செங்களூரு காயங்கோட்டையாரு தவறிப்போயிட்டாரு"
கட்டக்கலப்ப பதறினார்.
"போனவாரந்தான்யா பாத்தேன். மகளுக்கு ஒரு நல்ல எடமா பாக்கச் சொன்னாரு"
"சரிங்க. நான் செல்லுகுடி வேற போகணும்"
சைக்கிள் எடுக்கையில் பக்கத்துவீட்டு எளசு கேட்டது: "எங்களுக்குன்னு எதாவது தனி எழவு சொல்லி வருவாகலா? இல்ல இது ஊருக்கின்னு சொன்னதா?"
"சொல்லாம போகுற சாவுக்குக் கூப்புடாமப் போறதே உத்தமங்க"
சைக்கிள் பறந்தது.
போகும் வழியில். எழவு சொல்லிப் போகும்போது தெரியாத ஒரு ஆளை எப்படி கண்டுபிடிப்பது என சொல்லிக்கொண்டு வந்தார். அவரின் துணையில்லாமல், திம்மியம்பட்டி என்ற ஊரில் துப்பாக்கிக்காரர் வீட்டைக் கண்டுபிடித்து எழவு சொன்னேன். தட்டிக் கொடுத்தார்.
"இப்ப நீயும்தான் எழவு சொன்னே. நீ திட்டா?" என்று அவர் கேட்டிருக்கலாம். இல்லை.
இப்படி ஒரு ஏழெட்டு ஊர்கள். பசி தெரியவில்லை. வெயில் தெரியவில்லை. சைக்கிளில் போகும்போது, சுருங்கி விரியும் அவர் முதுகைப் பார்த்துக் கொண்டும், நடந்து போகும்போது, கட்டை விரலாலும், அதற்கடுத்த விரலாலும் நிலத்தை நன்கு அழுத்தி இருகோடுகள் போட்டுச் செல்லும் அவரின் பாதங்களை ரசித்தவாறும் சென்றேன். வேகமாக நடக்க என் கால்கள் பழகின.
எல்லா ஊர்களும் முடிந்தபிறகு, திரும்பும் வழியில் ஒரு சவுக்குக் காட்டுக்குள் புகுந்து கள் குடித்தார். எனக்கு இளநீர். என்னைப் பார்த்ததில் இருந்து தேக்கி வைத்ததோ என்னவோ, கண்களில் நீருடன் பேச ஆரம்பித்தார். சிறுவயதில் தந்தையை இழந்த அவர், தாயுடன் பஞ்சம் பிழைக்க கண்டி, மலேசியா என்று கடல்தாண்டிபோய், தாயும் இறந்தவுடன் சொந்த ஊர் திரும்பி இருக்கிறார். ஒண்டிக்கட்டையான இவர் யார் என்னா வேலை கொடுத்தாலும் செய்திருக்கிறார். நல்லதோ கெட்டதோ, எல்லா காரியத்தையும் எல்லாருக்கும் இவர்தான். இப்படியே அம்பது வருட வாழ்க்கையில், யார் யாருக்குச் சொந்தம், எங்கே எப்படி போகணும் என்ற பலவிஷயங்கள் இவருக்கு அத்துப்பிடி. உதாரணமாக, ஒரு பெருங்கெழடு இறந்தபோது, அவரது தாய்வீட்டுப் பூர்வீகம் இவரைத்தவிர வேறு யாருக்கும் தெரியவில்லை. தூரத்து ஊர்களுக்கு எழவு சொல்வதும், இன்னபிற வேலைகளும் இவர் வேலைகள். சுருக்கமா சொன்னால், தரைவழி கொலம்பஸ்.
அவர் பேசியதில் இரண்டு வாக்கியங்கள் என்பசுமரத்தில் ஆணியடித்தன.
"என் ஆதி வேற. என் சாதி வேற. இருந்தாலும் ஏன் எழவு சொல்றேன்னா, பணம் சம்புடிக்கத் தெரிஞ்ச மனுசனுக்கு, பாசத்த சம்புடிக்கத் தெரியல. என்னால பாசமோ, பணமோ தேடமுடியாம போச்சு. எவனும் பொண்ணுகூடத் தரல. ஒருத்தனோட கடைசி பாசத்த ஒருத்தனுக்குக் காட்டச் சொல்ற இந்தவேலைய வருத்தப்பட்டு நான் பாரம் சொமக்கல"
"ஒனக்கும் எனக்கும் ஒரே வித்தியாசம்தான். நான் பெத்தவளக் காப்பாத்த ஊரவிட்டுப் போனேன். நீ...."
செங்கோல் வாடகை சைக்கிள் கடை. சைக்கிள்விட்ட பிறகு, பந்தலைக் காணவில்லை; ராட்டினம் தரையில் கழட்டிக் கிடந்தது. இன்னும் அவருக்குப் பஸ் வர அரைமணிநேரம் இருந்தது. வார் டவுசருடன் பேசாமல் அமர்ந்திருந்தேன். டீ. பஸ். வீடு திரும்பினேன்.
வீடு பூட்டி இருந்தது. தொடியில் காய்ந்துகொண்டிருந்த ஒரு சட்டையை மாட்டிகொண்டு யாமினி வீட்டுக்குப் போனேன்.
"எங்கடா போனே?"
"அம்மா எங்க?"
"காலையில ஒரு ஆறு மணி இருக்கும்டா. ஒங்க சின்ன அம்மாச்சி இறந்து போயிட்டாங்கன்னு எழவு வந்திச்சி. ஒங்க அம்மாவும், அம்மாச்சியும்.... எப்பா அப்புடி ஒரு அழுகடா. அழுதுக்கிட்டே ஒடினாங்க. ஒங்க அம்மா அழுது நான் இன்னிக்குத்தான்டா பாத்தேன்"
நான் பார்த்ததே இல்லை.
"ஒங்க அப்பாவும் சைக்கிள எடுத்துக்கிட்டு பின்னாடியே போயிட்டாரு. இந்தா வீட்டுச்சாவி. எங்க வீட்டுலேயே பத்தரமா இருக்கச் சொன்னாரு. இன்னிக்கி முழுக்க ஒனக்கு எங்கவிட்டூ தயிர்சாதம்தான்" என்றாள் யாமினி.
அன்று இரவே அப்பாவும், அடுத்தநாள் மதியம் அம்மாவும் திரும்பிவிட்டார்கள். ஒரு உயிரின் பிரிவு, நான் பிரியப் பார்த்ததை மொத்தமாக மறைத்துவிட்டது. சீனிகதையும், எழவுகதையும் யாருக்கும் தெரியாமல் வைத்து, காலம் என்னை வைத்து விளையாடிய கதை, வெளியே எதுவும் சொல்லாமல் மனதிற்குள்ளே திட்டங்கள் போட்டு, தக்க நேரத்தில் செயலால் வெளிப்படுத்தும் அதிஉன்னத தத்துவத்தை, ஊசி என்ற கிழவன் மூலம் கற்றுக்கொடுத்துவிட்டது.
மீண்டும் யாமினி வீட்டில் கேரம்போர்டு. இரண்டு நாட்கள் கழித்து, சோகம் கொஞ்சம் விலக அம்மா என்னிடம் பேசினாள்:
"சேகரு, இந்தா அம்பது ரூவா. பத்து மணியப் போல யாமினி ரேஷன் கடக்கிப் போவா. அவளோட நீயும் போயி, சீனி வாங்கிட்டு வந்துடு. சீனிடப்பாவுல முக்காவாசி வரும். சின்னப்பயன்னு ஏமாத்திடுவாங்க. பாத்து
யாமினி, இவனக் கொஞ்சம் பாத்துக்க. இன்னக்கிச் சின்னம்மாவுக்குப் பாலு. சாயந்தரம் வந்துட்றேன்"
அதே மன்மோகன் சிங். ஐம்பது ரூபாய். சீனிடப்பா. சேகர். ஆனால் ஏதோ சொல்லமுடியாத் ஒரு மிகப் பெரிய வித்தியாசம்.
அந்த ஏப்ரல் 14, என்னைவிட்டுப் போய் 14 வருடங்கள் ஆகிவிட்டது. மன்மோகன் சிங், ரங்கராஜன், பிமால் ஜலான், ஒய்.வி.ரெட்டி என்று பலபேர் கையெழுத்துப் போட்டு பரிந்துரைக்கும் காகிதங்களும், நானே கையெழுத்துப் போட்டு பரிந்துரை செய்துகொள்ளும் கார்டுகளும் என்னிடம் நிறைய இருந்தாலும், ராட்டினத்தில் கீழிறங்கும்போது வயிற்றில் தோன்றும் அந்த சுகம் எனக்கு மறந்துபோய்விட்டது; யாரோ ஒருவன் என்னை ஒரு பகல் முழுவதும் சுமந்துகொண்டு, பசி-கவலை-அறியாமை எதுவும் தெரியாமல் டீக்கடைகளில் கற்றுக்கொடுத்த வாழ்க்கை மறக்கும்போது நானிருக்க மாட்டேன்.
நாம் சொல்லாமல் செல்லும்போது, அழையாமல் வரப்போகும் உறவுகளுக்காக அலைவோம்.
-ஞானசேகர்
3 comments:
கொஞ்சம் படிச்சேன் நல்லாருக்கு. மிச்சத்த நாளைக்கு படிச்சு சொல்றேன் :)
Engengo ittuchellum kadhai, than adinaadhaththai izhakkaamal irukkiradhu. vaazhththukkal.
- priyamudan
sEral
உங்களுக்கு தனித்துவமான ஒரு நடை கைவந்திருக்கிறது. எந்த நேரத்திலும் அலுப்பேற்படுத்திவிடக்கூடிய அபாயகரமான நடை.
-ரமேஷ் வைத்யா
Post a Comment