புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Sunday, January 30, 2011

அங்காடி நாய்

செல்வத்தின் உச்சமும்
வறுமையின் எச்சமும்
-வைரமுத்து (பெய்யெனப் பெய்யும் மழை)

மரணப்படுக்கையில் இருப்பவரின்
ஞாபகத்திலாடும்
கடைசி முகங்களில் ஒன்று
ஒரு வேசியினுடையதாகவும்
இருக்கலாம்.
- மகுடேஸ்வரன் (காமக்கடும்புனல்)


(பெண்ணுக்குப் பெயர் வைக்காத பிடிவாதத்துடன் இன்னுமொரு கதை)

இரகுராமன். 12 வருடங்களாக எனது நண்பன். அவனுக்குத் திருமணமாகி ஒருமாதங்கூட முடிந்திருக்கவில்லை. மூணாறு அந்தமான் டார்ஜிலிங் சிம்லா என்று எங்கேயோ இருப்பார்கள் என்ற நினைப்பில் அவனுக்குப் போன் செய்வதைத் தவிர்த்து வந்தேன். சரியாக 25 நாட்கள் கழித்து ஒரு வெள்ளிக்கிழமையில் அவனே அழைத்தான்.

அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் வாசலை அடைந்தபோது இரவு 8 மணி. வாட்ச்மேன் அனுமதிக்கவில்லை. ரகு ஏதோவொரு சன்னலில் இருந்து கையசைத்தபின் அனுமதிக்கப்பட்டேன். அங்கிருந்த கார் கண்ணாடி ஒன்றில் தலைமுடி சரிசெய்து, அவனது தளத்தை அடைந்தபின் அங்கிருந்த வீடுகளில் எதுவென்று தெரியாமல், கதவு திறந்திருந்த ஒரு வீட்டின் அருகில் சென்றேன். ரகுவின் மனைவிபோல் ஒருத்தி சோஃபாவில் சம்மணக்காலிட்டு சின்னத்திரைக் குடும்பவிவகாரங்களைக் கவனித்துக் கொண்டிருந்தாள். ரகுவின் மனைவியேதான். இடதுகைப்பழக்கம். அழைப்புமணி அழுத்த வலதுகை உயர்த்தியபோது பின் வீட்டில் இருந்து ரகு கூப்பிட்டான்.

'டேய் சேகர். இந்த வீடு. என்ன மறந்திட்டியா?'
உள்ளங்கை குவித்து தோளில் தட்டினான்.
'ஓ..... சரியா ஞாபகம் இல்லை. கல்யாணத்துக் முன்னாடி வீடுதேடி அலஞ்ச்சப்ப வந்தது'
கதவை உள்தாழிட்டான்.
'எதிர்வீட்டுப் பொண்ணு எடது கைல ரிமோட் யூஸ் பண்ணிட்டி இருந்துச்சு. ஒன்னோட மனைவியோன்னு கொழம்பிப் போய்ட்டேன்'
'ஞானசேகர்ட்ட புடிச்சதே யானமாதிரி இந்த ஞாபகசக்திதான்'
ஆள்காட்டிவிரலால் என் இடது நெற்றிப்பொட்டில் குத்தினான்.
'அவதான் என் ஒய்ஃப்'.

ஒவ்வொரு அறையாகச் சுற்றிக்காட்டினான். கல்யாணத்திற்கு முன் இருவரின் வாழ்க்கைகளையும் பிரதிபலிக்கும் புகைப்படங்கள் அலமாரிகளையும் மேசைகளையும் நிரப்பியிருந்தன. எனக்கு நன்கு பரிட்சயப்பட்டிருந்த ரகுவின் பழைய புகைப்படங்களை அவன் மனைவியின் புகைப்படங்களுக்கு இடையே பார்க்கும்போது, ரகு எனக்கு மிகவும் வித்தியாசமாகத் தெரிந்தான். இரண்டு தனித்தனி 'என்' விருப்பங்கள், ஓர் 'எங்கள்' விருப்பமாகியிருப்பதை வீடு ரம்மியமாகச் சொல்லியது. எனது அப்போதைய மனநிலையை எப்போதோ அனுபவித்த ஒருவன் சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்து போயின. 'ஆணால் வீட்டைத்தான் உருவாக்க முடியும்; பெண்ணால்தான் குடும்பத்தை உருவாக்க முடியும்'. ரகு அதிர்ஷ்டசாலி.

ஹாலில் போர்வை விரித்து அமர வைத்தான். அவன் மட்டும் லுங்கிக்கு மாறிக்கொண்டான். சாப்பாடு பரிமாறினான். சாப்பிட ஆரம்பித்தோம்.
'எப்டி இருக்கு என் மனைவி சமையல்?'
'நல்லாருக்கு'
நண்பனின் புதுவீட்டில் புதுமனைவியின் அறிமுகம்கூட இல்லாமல் அவள் சாப்பாட்டைச் சாப்பிடுவது என்னவோபோல் இருந்தது.
'ஓன்னோட ஒய்ஃப்?'
கேள்வியின் நீளத்தை வைத்தே புரிந்துகொண்டான்.

'காலையில் எதிர்வீட்டுப் பொண்ணு ஏதோ வந்து சொன்னா. இவளும் இன்னைக்கி நைட்டு மட்டும் அந்தப் பொண்ணுக்குத் தொணையாப் படுத்துக்கிறேன்னா. என்னான்னு கேட்டா பொம்பளைங்க சமாச்சாரம்னு சொல்லமாட்டேன்டா. அந்தப் பொண்ணு ஹஸ்பண்ட் வேற ஊர்ல இல்லை. அந்தப் பொண்ணு தனியா இருக்கும்போல'
சிக்கனின் காலெலும்பில் இருந்து சதையைப் பிய்த்துக் கொண்டிருந்தேன்.
'ஒருவாரமா ஒருவிசயம் என்னெ உறுத்திக்கிட்டு இருக்கு. யாருக்கிட்டயாவது மனசுவிட்டுப் பேசுனா பரவாயில்லன்னு தோணிச்சு. நீதான் அதுக்குச் சரியான ஆளு. அதான் ஒன்னக் கூப்டேன்'
ஒரு குடும்பஸ்தன் தனது பிரச்சனைகளுக்கு, தனியாய்த் திரியும் நட்புக்காரனைத் தூண்டில் புழுவாய் உபயோகிக்கப் போவதுபோலத் தோன்றியது. சாப்பாடு இறங்கவில்லை.

'ஒன்னோட பேரச்சொல்லி மனைவிக்கிட்ட இன்னக்கி ஒருநாள் மட்டும் கெஞ்சிக் கூத்தாடி பெர்மிஷன் வாங்கி வெச்சிருக்கேன் சரக்கடிக்க'
இது வேறயா? எந்தத் தாயாவது தம்புள்ளயக் கெட்டவன்னு ஒத்துக்குவாளா? எந்த மனைவியாவது தம்புருசன விட்டுக்குடுப்பாளா? வீட்டுக்கு வந்த ஒருவனைத் தன் கணவனுடன் மதுவருந்தச் சொல்லிவிட்டு இன்னொருவீட்டில் ஒருபெண் படுத்துக் கொண்டால் என்னைப்பற்றி அவள் எவ்வளவு கீழ்த்தரமான கருத்து வைத்திருப்பாள்! போற்றுவார் போற்றட்டும், புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும், போகட்டும் சேகருக்கே என்று கைகழுவினேன்.

சாப்பிட்ட பாத்திரங்களை அப்புறப்படுத்திவிட்டு குளிர்சாதனப்பெட்டியில் இருந்து 4 பியர் பாட்டில்களை எடுத்து வந்தான்.
'சில செல்போன்கள் தானாகவே ஆன் ஆகிடும். நம்ம பேசுறது வெளி ஆட்களுக்குக் தெரியக்கூடாதுன்னு ஒரு முன்ஜாக்கிரதைதான். போதையில எந்த விசயமும் விட்டுப்போகக்கூடாதுன்னு என்னென்ன பேசணும்னு ஏற்கனவே பாய்ண்ட்ஸ் எடுத்து வெச்சிருக்கேன்'
அவனது இடது பக்கத்தில் ஏதோ எழுதப்பட்டிருந்த வெள்ளை காகிதத்துண்டை வைத்து அதன்மேல் எங்களது செல்போன்களை வைத்தான்.

'ஏதோ முக்கியமான விஷயம், சொல்றதுக்கு நான்தான் சரியான ஆளுன்னு சொன்னியே. சொல்லு, சியர்ஸ்' என்றேன்.
'சியர்ஸ் for ஜெஸ்டினா வாசுதேவன்' என்றான்.
ஒருகனம் திடுக்கிட்டேன். இ-மெய்லில் கல்யாணப் pdf / jpg அனுப்பும் இக்காலத்தில்கூட, நேரில் வந்து என்னை அழைத்த அந்நாளில், இரவு தூங்கும்போது ரகு முனகிய அதேபெயர். மறுநாள் கல்யாணப் பத்திரிக்கை படித்து, அது அவனது வருங்கால மனைவி பெயரில்லை என்று தெரிந்தவுடன், கல்யாண அலைச்சலில் அசதியில் முனகியிருப்பானென்று நானும் சுவாரசியம் காட்டாமல் விட்டுவிட்ட அதேபெயர்! இரண்டு மாதங்களுக்குமுன் பின்னிரவில் ஒருபெண் என் செல்பேசியில் அழைத்து சொன்ன பல பெயர்களின் ஊடே நான் கவனித்த அதேபெயர்! இன்று மூன்றாவது முறையாக கேட்கிறேன்.

'யார்டா அது?' வெகு இயல்பாகக் கேட்டுக் கொண்டே பியர் ஒரு மடக்கு.
'தேவ்டியா' வெகு இயல்பாகச் சொல்லிக் கொண்டே பியர் மடக் மடக் மடக்.
எனக்குப் புரையேறியது.
'பாத்து மெதுவா. என்ன ஏறிடுச்சா?'
'Asian flush. அத விடு. நீ சொன்னது புரியல'
'ஜெஸ்டினா வாசுதேவன்னு ஒரு பிராஸ்ட்டிடியூட்'
'ஜெஸ்டினா?' இழுத்தேன்.
'வாசுதேவன்' முடித்தான்.
'ஜெஸ்டினாவும் வாசுதேவனும் சேத்தா?'
'ஆமாடா. புணர்ச்சி விதி பேசுறப்ப, நேர்நிரை புளிமான்னு கேக்காதா ப்ளீஸ்'
சதுரங்கத்தில் Stalemate என்றொரு நிலையுண்டு. அது புரியாதவர்கள் என்னுடைய இப்போதைய நிலையைப் பாருங்கள்.

'சேகர், நான் ஒரு பொண்ணோட படுத்திருக்கேன்னா நம்புவியா?'
வந்ததில் இருந்தே சென்சார் செய்யப்பட வேண்டிய வார்த்தைகளையே ரகு உபயோகப்படுத்துவது எனக்கு அசௌகரியமாக இருந்தது.
'கண்டிப்பா. ஏன்னா நீ கல்யாணம் ஆனவன். இதுல நம்புறதுக்கு ஒண்ணுமில்ல'
'I mean கல்யாணத்துக்கு முன்னாடி'
அந்நொடி வரை அவனை ஜெஸ்டினா என்ற பெண்ணுடன் சேர்த்து சந்தேகிக்க எனக்கு தோன்றியிருக்கவில்லை. ரகு அப்படிப்பட்டவன் இல்லை. அதெல்லாம் எப்படா செய்தாய் என்ற நோக்கில் பார்த்தேன்.

'சின்ன சபலம். அப்டி என்னதான் இருக்குன்னு பாத்துடலாம்னு தோணிச்சு'
No objection Your Honour நிலை எனக்கு.
'இன்டர்நெட்ல தட்டுனா 1000 சைட்ஸ். லெட்சம் பேர். டெய்லி நியூஸ் பேப்பர்லே Classifieds பகுதியில Escortsன்னு ஒரு Columnமே வருது. அப்டி இப்டி ஜெஸ்டினாவப் புடிச்சேன்'
Yes proceed என்று நான் சொல்லவேயில்லை.
'ஜஸ்ட் ஒரு நைட். ஆறுமணிநேரம். அதுலயும் ரெண்டுமணிநேரம் தூங்கிட்டேன். அகரமும் னகரமும் அதுமட்டுந்தான்'


வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த என் கண்களுக்குமுன் கை அசைத்துக் காட்டினான்.
'என்னடா நான் பண்ணது தப்பா?'
'மாட்டிக்காத வரைக்கும் யாரும் தப்பே இல்ல'
ஏதோ பேச வேண்டும் என்பதற்காகப் பேசினேன். அதிர்ச்சியில் பேசியதால் முதல் வார்த்தை தொண்டைக்குள் மாட்டிக் கொண்டு குரல் தடுமாறியது. நிமிர்ந்து பார்த்தான்.
'ஒனக்குத்தான் சொன்னேன்'
யாருக்கோ சொன்னதுபோல் குனிந்து கொண்டான்.
'வாய்ப்புக் கெடைக்காத வரைக்கும் எவனும் நல்லவனும் இல்ல. எனக்கு நானே சொல்லிக்கிறேன்' என்றேன்.
'டயலாக்லாம் நல்லாத்தான் இருக்கு'
'உயிர் பிழிஞ்சு சொல்றதெல்லாம் யாரும் கண்டுக்கிறதே இல்ல. யாரோ சொன்னதைச் சொன்னா ஆஹா ஓகோன்னு பாராட்டுக்கள்'
'ஓ சுட்டதா? Customerரத் திருப்திப் படுத்துற மாதிரி நீதான் மசாலா சேத்துச் சொல்லணும்'
'கஸ்டமர் ஸேடிஸ்ஃபேக்ஷன்தான் முக்கியம்னா ஒரு விபச்சாரிக்கும்..... ஓ...... சாரி.... சாரி... தப்பான உதாரணம்'
'பரவாயில்ல சொல்லு'
'ஜெஸ்டினாவப் பத்தி பேசுறப்ப இப்படி ஒரு வார்த்த சொன்னது தப்புதான். In fact அதக்கூட நான் சொல்லல. நடிகர் சிவக்குமார்ன்னு நெனக்கிறேன். Any how, sorry'.
'ஓகே. இனிமே அப்டி சொல்லாதே. கால் கேர்ள்னு சொல்லு'

விபச்சாரி வேசி அவ்சாரி தேவடியாள் என்ற பதங்களை வெறுப்புக்குள்ளான எப்பெண்ணின்மீதும் தொடுக்கலாம் என்ற இச்சமூகத்தில், உபயோகப்படுத்தபட்ட ஆணுறையென பெண்ணை மிதிக்கும் கீழ்த்தர ஆண்கள் பட்டியலில் ரகுவும் சேர்ந்துவிட்டானோ எனப் பயம் வந்தது. இதுதான் சரியான தருணம், தொடு கணையை!
'சரிடா. அந்த so called கால் கேர்ள்னால இப்ப என்ன? ஏதாவது மஞ்ச நோட்டீஸ் வியாதி கியாதி?'
முதன்முதலாகச் சிரித்துக் காட்டினான். நானும் சிரித்து வைத்தேன்.
'அந்த ஜெஸ்டினா வாசுதேவன் இப்ப என்னோட எதிர்வீட்டுக்காரன் பொண்டாட்டி'
பாதிப்பாட்டிலை ஒரே மடக்கில் குடித்தான். எனக்குக் குடித்ததெல்லாம் பாதியாக இறங்கிப் போனது. இதுக்கு மேலயும் Stalemate புரியாதவர்களுக்கு ஒரு Checkmate.

(வழக்கம்போல் சற்றே இடைவெளி எடுத்துகொண்டு, கொஞ்சம் மனநிலையை மாற்றிக்கொண்டு தொடருங்கள்)

சுவர்க்கடிகாரத்தின் வினாடிமுள் மட்டும் சத்தம் போட்டுக் கொண்டே அடிமேல் அடி வைத்துக்கொண்டிருந்தது. இருவருமே அடுத்த அடி எடுத்துவைக்க முன்வராமல் அவரவர் பாத்திரங்களில் கவனம் செலுத்துவதுபோல் பாவனை செய்துகொண்டிருந்தோம். அமைதியைக் கலைக்கும் நோக்கில் எழுந்துபோய் சிறுநீர் கழித்துவிட்டு முகம்கழுவி வந்தேன். முழங்கையால் முட்டுக் கொடுத்து பின்னால் சாய்ந்து அமர்ந்திருந்தான். அவன் கண்கள் என்னை நேரே நோக்கின. நான் ரெடி நீ ரெடியா மாதிரி அவன் தோற்றம்.

'அந்தப் பொண்ணுக்குத் தொணையாத்தான் ஒன்னோட மனைவி?'
'யெஸ்'
தலையை முன்பின் ஆட்டிக்கொண்டே, 'ஸ்' ஐ ரொம்ப அழுத்தினான்.
'அந்த வீட்டுல வேற யாருமில்லையா?'
'புருஷன் மட்டும். சைதாப்பேட்டையில ஸ்வீட் ஸ்டால் வெச்சிருக்கான்'
'எத்தன நாளா இந்த வீட்ல இருக்காங்க?'
'எங்க கல்யாணத்துக்கு ஒருவாரத்துக்கு முன்னாடித்தான் அவங்க கல்யாணம். நான் இங்க வந்து மூணுவாரம் ஆகுது. அவங்க அதுக்கு முன்னாடியே வந்துட்டாங்க'
'அந்தப் பொண்ணு blackmail ஏதாவது....?'
'என்னெ அடையாளம் தெரிஞ்சுக்கிட்டாளான்னு கன்ஃபார்மா தெரியல'
'நீ மட்டும் எப்டி அவதான்னு கன்ஃபார்மா சொல்றே?'
நிமிர்ந்து உட்கார்ந்தான்.
'முதல் வெட்கம். முதல் முத்தம். முதல் நிர்வாணம். இப்படி என்னோட பல முதல்கள். கடைசி வரைக்கும் மறக்க முடியாது'
'அதுவும் சரிதான். ஆனா ஒலகத்துல ஒரே மாதிரி பலபேர் முக ஒற்றுமை இருக்க வாய்ப்பிருக்கு இல்லையா?'
'சிங்கப்பல்லு தெத்துப்பல்லு'
'100 வருசத்துக்கு முன்னாடி வங்காளத்துல வாழ்ந்த ரவீந்திரநாத் தாகூருக்கும், கர்நாடகா அனில் கும்ளேக்கும் இளவயதில் ஒரேமாதியான முகத்தோற்றத்தோட வெச்சது இயற்கையோட ஒரு விந்தைனா, nothing unusual in தெத்துப்பல்லு also. Its all about your false memory'
'Agreed. பணத்த கையால எண்ற ஸ்டைல், தரையில கால மடக்கி ஓட்கார்ற மொறை, வெறிச்சுப் பாத்துட்டு படபடன்னு சிமுட்ற கண்ணிமைகள். இந்த மூணு வாரத்துல இப்டி நெறைய ஒற்றுமைகள் கவனிச்சேன். இதுக்குமேல என்ன வேணும்? பச்சையா சொல்லனும்னா, அவ மாரு சைஸ் அப்புடியே.....'
காதுகளுக்கு மட்டும் ஏன் தானாகவே மூடிக்கொள்ளும் சக்தியில்லை?

ஏதோ ஓரூரில் சட்டவிரோதமான மதுபானநடன விடுதியொன்றில் தமிழன் ஒருவன், 10 வயது மூத்த தமிழ்ப்பெண்ணொருத்தியின் மார்புக்காம்புகளையும் புட்டத்தையும் வருடிக்கொண்டிருந்தபோது, அவளுக்கும் தனது இறந்துபோன தாயின் பெயரென்று தெரிந்தவுடன், முகம்கவிழ்ந்து ஓடிவந்து தேம்பி அழுதபோது,
'பெண்ணின் மார்பென்பது
அயல்நாட்டில் காமக்குறி
தமிழ்நாட்டில் தாய்மை'
என்று எங்கள் நண்பன் சேரலாதன் சொன்னதை, உணர்வுப்பூர்வமான உதாரணமாகச் சொன்ன அதே ரகு, இன்று இப்படிப் பேசுவதை என்னால் சீரணிக்க முடியவில்லை.

'சரிடா. ரெண்டு பேருமே ஒரே ஆளாவே இருக்கட்டும். ஒரு ஆம்பள அவள மனைவியா ஏத்துக்கிட்டான்ல? ஒனக்கு என்ன பிரச்சன?'
'அதான் சந்தேகமே. இவளப்பத்தி எல்லாமே தெரிஞ்சுதான் கல்யாணம் நடந்துச்சான்னு எனக்கு டவுட்டு. அவ கல்யாணமே ஒரு கொளறுபடி கேசு'
'என்னாச்சு?'
'முகூர்த்த நேரத்துல மாப்ள சிங்கப்பூர்ல இருந்து வல்லன்னு, கொழுந்தன் தாலிகட்டி, பின்ன மாப்ள வந்து, மொதத் தாலியப் பிரிச்சுப்புட்டு மறுதாலி'
தாலியெல்லாம் ஊருக்காக; பொண்ணோட மனசவிட வேற வேலியில்லன்னு ரகுவே சொல்லியிருக்கான்னு நான் இப்ப சொன்னா எடுபடாது.பொதுவாக, தான் விருப்பப்பட்ட பெண்ணை இன்னொருவன் கட்டிப்போனால், இல்லாததும் பொல்லாததுமாக அப்பெண்ணைப் பற்றி பரப்பிவிடுவதுதான் தொன்றுதொட்டு வரும் பாரம்பரியம். பிடிக்காத ஒருபெண் பிடித்து செய்த விசயங்களைத் தனக்குப் பிடிக்காமல் ரகு புலம்புவதுதான் எனக்குப் பிடிபடவில்லை. மொத்தத்தில் பண்பாட்டைத் தொலைத்துவிட்டு கலாச்சாரத்தைக் குறைசொல்லிக் கொண்டிருக்கிறான் ரகு. ரகு மட்டுமல்ல, இது ஒரு சமூகத்தின் புலம்பல். நமக்குப் போதிக்கப்பட்டவைகள் அப்படி!

'ஓகே. அவளப்பத்தி எல்லாம் தெரிஞ்சுதான் கல்யாணம் நடந்துச்சுன்னு வெச்சுக்க. இப்பவும் ஒனக்கு ஏதாவது பிரச்சனையாடா?'
'லிஃப்ட் படிக்கட்டு பார்க்கிங் ஏரியா கடைத்தெரு எங்க பாத்தாலும் சிரிக்கிறா. என் மனைவியோட உடன்பிறவா மக்க மாதிரி கூடவே திரியுறா'
'அவனவன் பக்கத்து வீட்டுப் பொண்ணு கடைக்கண் பார்வை கெடைக்கலையேன்னு மலையளவு ஏங்குறான். நீ ஏன்டா இப்புடி? வேலைக்குப் போகாத பக்கத்து வீட்டுப் பொம்பளங்க பேசிக்கிறதெல்லாம் சகஜம்டா'
'அவங்க புருஷன் பொண்டாட்டி ஒரு சினிமாவுக்குப் போனா எங்களையும் கூப்புட்றா'
'கோழிலருந்து முட்ட வந்துச்சு'
'அவங்க ஊட்டி பிக்னிக் போறதுக்கு நாங்களும் வரணுமாம்'
'முட்டைலருந்து கோழி வந்துச்சு'
'அவளோட ஒவ்வொரு நடவடிக்கையும் பார்வையும் சிரிப்பும் என்னெ காட்டிக் கொடுத்துருமோன்னு பயமா இருக்கு. இப்புடி பயந்து பயந்தே என்னையே நானே காட்டிக் கொடுத்துக்குவேனோன்னு வேற பயமா இருக்கு. வாழ்க்கையத் தொடங்க வேண்டிய நேரத்துல இப்புடி பூச்சாண்டி காட்றா'
'மனைவிக்கு ஜெஸ்டினா விஷயம் தெரியாது?'
'No. Never by my mouth'
'சூப்பர். இவ்வளவு நேரம் பேசுனதுக்கு ஒரு நல்ல கேள்வி, ஒரு நல்ல பதில்'.

'என் ஒய்ஃபோட நீ பேசினதில்ல. அவ அப்பாவிடா, வெகுளிடா. கண்மூடித்தனமா என்னெ நம்புறா. நம்பியே இருக்கா. அவளுக்கும் ஒரு காதல் அப்புடி இப்புடின்னு ஏதாவது இருந்திருந்தா என்னோட கதையையும் சொல்லி மைனஸ் இன்ட்டு மைனஸ் கிவ்ஸ் பிளஸ், அப்புடின்னு சின்னவீடு ஹீரோயின் மாதிரி அவ வாயாலையே இன்னொரு பொம்பளையப் பாக்கச் சொல்ற ஒரு கேவலமான புருசனா என்னால வாழமுடியும். Company of womenன்னு குஷ்வந்த் சிங் புத்தகத்துல படிச்சப்ப சிரிக்கவெச்ச முதலிரவு, என்னோட வாழ்க்கையில அதே மாதிரி ஒரு பொண்டாட்டியோட நடக்குறப்ப சிரிக்கமுடியல. அவள ஏமாத்துற மாதிரி என்னெ நானே ஏமாத்திக்கிற மாதிரி தெரியுது. I feel guilty before her innocence'. ரகுவின் கண்களில் முண்டியடித்துக் கொண்டு நீர்த்துளிகள் நின்று கொண்டிருந்தன.

கல்யாணம் என்பது உயர்ந்து வளர்ந்த கோட்டை. வெளியே இருப்பவர்கள் உள்ளேபோகத் துடிக்கிறார்கள். உள்ளே இருப்பவர்கள் வெளியேற முடியாமல் துடிக்கிறார்கள். இப்படிப்பட்ட வார்த்தை ஜாலங்கள் எல்லாம் உண்மையோ என்று தோன்றியது. மோகப்பித்து முப்பதுநாள் காலக்கட்டத்திற்குள்ளேயே புத்திப்பித்து பிடித்தவன்போல் பேசுகிறான். டென்னிஸில் மட்டும் லவ் பூச்சியமாக இருக்கட்டும், தனது இல்லறத்தில் வேண்டாமெனத் தவிக்கிறான் ரகு.

'எவனெவனோ என்னென்னமோ பண்றான். நான் தப்பேதும் செய்யல. ஜெஸ்டினா விருப்பத்தோடத்தான் பண்ணினேன். I paid too'
பெண்ணை ஆக்கிரமிக்கும் எல்லாரும் சொல்லும் பண்டைகால தர்க்கம். ஆதித்தொழில் என்று சேர்த்துச் சொல்லாமல் விட்டுவிட்டான். இப்போது ரகு எழுந்துபோய் சிறுநீர் கழித்துவிட்டு முகம்கழுவி வந்தான்.

'மணி 11 :45. Let me bury this topic with this day. ஒன்ன மாதிரி ஏதோ ஒரு குழந்தையத் தூக்கி, அதுக்கிட்ட பிரச்சனைகளைச் சொல்லி அழுது, குழந்தையோட பல முகபாவங்களப் பாத்து, அதுல அமைதிதேடுற பக்குவம் எனக்குக் கெடையாது. பாவங்களைக் காதுகொடுத்து கேக்குற சாமியும் எங்கள்ல கெடையாது. ஆனா இன்னொரு மனுசன்ட தன் மனப்பாரத்தை வெளிப்படையா சொல்லும்போது மனசு லேசாகிடும்னு எனக்குப் பலமான நம்பிக்கை இருக்கு. இதுவரைக்கும் எங்க அண்ணன் செத்ததப் பத்தி ஒனக்கிட்ட மட்டும்தான் சொல்லியிருக்கேன். 11 வருசத்துக்கு முன்ன அதக் கேட்ட நீ, இப்பவும் கேப்பங்கிற நம்பிக்கையில்தான் ஓங்கிட்ட சொன்னேன்'.
ரகுவின் அண்ணனின் ஞாபகத்தில் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. டக்கென்று இடதுபக்கம் திருப்பி சட்டைக்காலரில் தொடைத்துக் கொண்டேன். அவனும் அழுதுவிட்டான்.

தூங்கும்போது சொன்னான்.
'I feel completely free now. இந்த நொடியில இருந்து ஜெஸ்டினா வாசுதேவன்னு யாரையும் எனக்குத் தெரியாது. ஒருவேள என் மனைவிக்குத் தெரிய வந்தா, அவளச் சமாளிக்கிற பெரும்பொறுப்பு என் நண்பன் சேகருடையது'
'கன்ஃபார்மா அந்தப் பொண்ணுதான்னு தெரியாம நீயே ஒரு பிரச்சனைய உண்டாக்கிக்கிற. அதனால பல பயங்கள்; பல கேள்விகள்; எல்லாத்துக்கும் ஒங்கிட்டே தெளிவான பதில்களும் இருக்கு. இதெல்லாம் பாக்குறப்ப கெல்வின் கார்டரோட தற்கொலைக் குறிப்புதான் ஞாபகம் வருது'
'என்னடா அது?'
'சரியான வாக்கியம் ஞாபகம் இல்ல. நெட்ல பாத்துக்க'
தேடினான்.
'ஸ்பெல்லிங்?'
'Kelvin Carter'
'ok'.

அதைப் படித்துவிட்டு வெள்ளைக்காகிதக் குறிப்புகள் எல்லாம் சொல்லப்பட்டுவிட்டனவா என்று சரிபார்த்தான். ஒருவிசயம் விட்டுப்போய்விட்டதென என்னை எழுப்பினான்.
'அதான் பொதைக்கப் போறேன்னு சொன்னியே, திரும்ப ஏன்டா எழுப்புற?'
அவன் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு தூங்கிப்போன அவ்விசயம், எனது எல்லா செல்களையும் எழுப்பிவிட்டு அதன்பிறகு தூங்கவிடவேயில்லை.
'அன்னைக்கி ஜெஸ்டினா கெளம்புறப்ப என்னோட மொபைல் நம்பர் கேட்டா. எனக்குப் பயம். எனக்கு மனப்பாடமா தெரிஞ்ச ஒன்னோட நம்பர சொல்லிட்டேன். தூக்கத்துல எழுப்பிக் கேட்டாலும் சொல்லுவோம்ல. ஹா ஹா ஹா ஹா'
சரியான ஆள் என்று அவன் என்னைச் சொன்னதன் அர்த்தம் அப்போதுதான் உறைத்தது.

ரகு தூங்கிவிட்டான். இருட்டுக்குள் ஆந்தைபோல் விழித்திருந்தேன். ஜெஸ்டினா வாசுதேவன் என்ற பெயரை இரண்டாம் முறை நான் கேட்டிருந்த நிகழ்ச்சி நினைவில் வந்தது. அந்நிகழ்ச்சியுடன் ரகுவைச் சம்மந்தப்படுத்தி பார்க்கும் அளவிற்கு, அவ்வளவு நேரம் ரகு என்னிலிருந்து தூரப்பட்டுவிடவில்லை. இப்போது கட்டாயம் சந்தேகப்பட வேண்டிய தருணம்.

இரண்டு மாதங்களுக்கு முன் பின்னிரவு மூன்று மணிக்கு ஒரு பெண்குரல் என் செல்பேசியில் அழைத்தது.
'சார் இது ஒங்க செல்போனா இருந்தா தொடர்ந்து கேளுங்க. இல்ல கட் பண்ணிடுங்க'
நடுங்கும் குரல். மதுவாடை குரலிலேயே வீசியது.
'ஒங்களை எனக்குத் தெரியாது. ஒங்களுக்கு என்னெ தெரிய வாய்ப்பிருக்கு. ஐஸ்வர்யா, அர்ச்சனா, சுகப்ப்ரியா, ஜமுனா, ...... ஜெஸ்டினா வாசுதேவன், ..... இந்த 15 பேர்கள்ல ஏதாவது ஒரு பேர்ல நான் ஒங்கள சந்திச்சிருக்கலாம்.....'
எழுதிவைத்துப் படிக்கிறாள். அவள் சொல்ல வரும் விஷயம் சரியான ஆளுக்குத்தான் போய்ச் சேரவேண்டும் என்பதில், அவளின் வார்த்தைகள் படுகவனமாய் இருந்தன. தள்ளாடும் குரல் தள்ளாடாத நோக்கம். என்னிடமிருந்து ஒரு பதிலும் எதிர்பார்க்கவில்லை. இரண்டு நிமிடங்கள் வாசித்துவிட்டு கட் செய்துவிட்டாள். யாரோ விளையாட்டுத்தனமாக wrong number என்று நினைத்து, வழக்கம் போல் Call Logஐச் சுத்தமாக Delete செய்துவிட்டு தூங்கிவிட்டேன்.

காலையில் விழித்தவுடன்தான் எனக்கு விசயத்தின் வீரியம் புரிந்தது. எனக்குத் தெரிந்த ஒரு மனநல ஆலோசனை மையத்தைத் தொடர்பு கொண்டேன்.
'அந்தப் பொண்ணு இன்னும் ஒரு ரெண்டு வாரத்துல கல்யாணம் செய்யப்போதாம் மேடம். அதுக்குள்ளே, தலையே வெடிச்சுரும் போல இருக்காம். கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்ல மொத பிளாட்பார்ம்ல நாளைக்கி நிக்குமாம். பணம் தரத் தயார்னு சொன்னிச்சு மேடம்'
அவளைக் கண்டுபிடித்து, கவுன்சிலிங் செய்தார்கள். அவள் கதையை மேடம் சொன்னபோது பயமாக இருந்தது.
'கப்பல் மாலுமிகள் தரைக்கு அடியில் விபச்சாரம் செய்த மண். பெயர் மறைத்து வாழும் ஜெஸ்டினா வாசுதேவன்கள், சமுதாயத்துல இயல்பா வாழணும்னு நெனச்சா அவர்களின் பழைய பெயர்களை ஞாபகப்படுத்த பல்லாயிரம் பேர் இருக்கிறார்கள்' என்றார் மேடம்.

தூங்கவே முடியாமல் அதிகாலை ஐந்து மணியளவில், ரகுவிடம் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பிவிட்டேன். வாட்ச்மேன் தடுக்கவில்லை. 11 மணியளவில் ரகு போன் செய்தான்.
'ரகு, பச்சையா சொல்லணும்னா இடது மாருக்குக் கீழ மச்சம்; அப்பெண்டிசைடிஸ் தழும்பு. டீசண்டா சொல்லணும்னா ஒன்னோட எதிர் வீட்டுப் பொண்ணுக்குக் கண்டிப்பா வலது கண்ல மச்சம் இருக்காது'
ரகு பேசவேயில்லை.
கட் செய்துவிட்டு நேரில் வந்தான்.
'நீ எப்டிடா சேகர்?'
'இதுல என்னாடா ஆச்சர்யம் ரகு. நீ பிம்ப்ட (pimp) ஒரு 6000 ரூவா கொடுத்துட்டு, ரெண்டு பேர்டயும் என் நம்பர வேற கொடுத்துட்டு வந்திருக்க. அந்தக் காசு எங்க எங்கெல்லாம் போனுச்சோ? ஏதோ ஒரு மார்க்கெட்டுல வெடிக்கிற குண்டுல ஒன்னோட பங்களிப்பு கூட இருக்கலாம். ஒருவேள அந்தப் பொண்ணு இறந்துபோய் என்னையும் சந்தேகத்துல விசாரிச்சிருக்கலாம். இல்ல, வாடிக்கையாளரே இல்லாதப்ப என்னக் கேட்டிருக்கலாம். இப்புடி நெறைய options'
'சாரிடா. வார்த்தையால கொல்லாதடா'
'போடா வீட்டுக்குப் போ. ஜெஸ்டினா வாசுதேவன்னு ஒருத்தி இருப்பாளோன்னு அரைகொறை மனசோட வாழாத. இப்ப திருப்தியா? அப்படி ஒருத்தி இல்லவே இல்ல. சந்தோசமா வீட்டுக்குப் போடா'
'உண்மையிலேயே கோவம் இல்லையே?'
'ஒனக்கிட்ட கோவப்படாம வேற யாருக்கிட்ட கோவப்பட முடியும்?'
'உண்மையிலேயே கோவம் இல்லையே?'
'இல்ல நம்பு'
'எப்புடி நம்புறது?'
'ஆஊன்னா நெட்டுல தேடுவியே. போய்த் தேடு. அப்பத் தெரியும் எனக்குக் கோவம் இல்லன்னு. உலகத்திலேயே சின்ன உயில் என்னன்னு போய்த் தேடு'
போய்விட்டான்.

ரகுவின் கதை போல், சமூகத்தில் இதுபோன்ற பல பிரச்சனைகள் வெள்ளிக்கிழமை இரவு ஆரம்பித்து சனிக்கிழமை மதியம் முடிந்துவிடுவதில்லை. ஒருவேளை ஜெஸ்டினா வாசுதேவன் என்றொருத்தியை ரகுவின் மனதில் இருந்து நீக்கமுடியாமல் போயிருந்தால், எதிர் வீட்டுப் பெண் ரகுவால் கொல்லப்பட்டிருக்கலாம். ஒருவேளை ஜெஸ்டினா விஷயம் மனைவிக்குத் தெரிய வந்தால், அவளும் நானும் கொல்லப்படலாம். ரகுவும் தற்கொலை செய்து கொள்ளலாம். மறுநாள் தினசரியில் என்னையும் ரகுவின் மனைவியையும் கள்ளக்காதலர்களாகச் சித்தரித்து, ரகுவின் திருமணத்தில் நாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் கருப்பு வெள்ளையில் மூன்றாம் பக்கத்தில் வரலாம். மீனவர்கள் தமிழகத்திலும் தமிழர்கள் ஈழத்திலும் கொல்லப்படுவது போல வாடிக்கையாகிப் போன இதுபோன்ற செய்திகளில் சுவாரசியம் காட்டாமல், சப்புக்கொட்டிவிட்டு ஜெஸ்டினா வாசுதேவன்களை உண்டாக்கும் அடுத்தகட்ட நடவடிக்கையில் சமூகம் மும்மரமாக இருக்கலாம்.

ரகுவிடம் இருந்து குறுந்தகவல். உலகின் மிகச் சிறிய உயிலைக் கண்டுபிடித்து விட்டான்.

All to wife - எல்லாம் மனைவிக்கே!

- ஞானசேகர்

2 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நல்ல சிறுகதை தம்பி. உன் கதைகளை வாசித்து வெகு நாட்களாகிறது.

-ப்ரியமுடன்
சேரல்

Venkata Ramanan S said...

Arumai ...