புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Thursday, November 17, 2005

தர்மம் வெல்லும் ?

ஒடித்துப்போடுங்கள்
போதையில் ஆடும்
உங்கள் தராசின் முட்களை!
-பிரேம்குமார்
(http://premkalvettu.blogspot.com/)

நம்பியா தொலைத்தீர்கள்
போதையில் ஆடும்
உங்கள் கண்களின் காட்சிகளை?
-ஞானசேகர்


(இந்த நெடுங்கவிதையில் முதல் பாதியில் போதையில் கண்கள்; இரண்டாம் பாதியில் போதையில் தராசின் முட்கள். நீளம்-அவை-அடக்கம் கருதி சில விஷயங்கள் இலைமறைகாயாக. முயலுங்கள்!)

(இதைத் திரௌபதி (பாஞ்சாலி) சொல்வதாகப் படிக்கவும்)

இடம்: ஏதோவொரு அரண்மனை

பிறந்த வீடு விட்டு
விளக்கேத்த வேண்டி
கணவர் வீடு புகுந்தேன்.

அங்கோ
குடும்பம் என்ற குத்துவிளக்கில்
ஐந்து படுக்கைகள்
ஒற்றைத் திரியாய் நான்!

ஈருடல் ஓருயிர்
என்ற மண்ணில்
ஆருடல் ஓருயிராய்
மாதச்சிக்கல்களையும்,
சகோதரச் சிக்கல்களையும்
சமரசமாய் நடத்தி வந்தேன்!

செய்கையில் இன்று
அதர்மம் இருக்க
பெயரில் மட்டும்
தர்மம் வைத்து
பதிகள் ஐந்தும்
கதியென வந்த
சதி என்னைச் சூதாட
ஓராடையும் உரித்துப் போனான்
நூற்றில் ஒருவன்
சபைக்குள்ளே!

ஏதோ புண்ணியம்!
எனக்குக் கிடைத்தன
கண்ணன் சில்க்ஸின்
கண்ணன் திருடாத
தள்ளுபடி புடவைகள்!

ஆடை களைப்பது அதர்மம்,
களைய வைத்தது தர்மம்!
மலுங்கிய புத்தியில்
முடி விரித்து
சபதம் செய்தேன்.

இரத்தம் சீகையாக்கி
தலை குளித்து
முடி முடித்து
சபதம் முடித்தேன்.
வரலாறு பேசுகிறது
"தர்மம் ஒருநாள் ஜெயிக்கும்"!

(இதை ஒரு பாலியல் தொழிலாளி சொல்வதாகப் படிக்கவும்)

இடம்: சோனாகஞ்ச் போல் ஓர் அங்கீகரிக்கப்பட்ட இடம்

பிறந்த வீடு விட்டு
விளக்கணைக்க வேண்டி
மாமா வீடு புகுந்தேன்.

அங்கோ
இளமை என்ற குத்து(ம்)விளக்கால்
சிலபல படுக்கைகள்
ஒற்றைத் திரியாய் நான்!

ஈருடல் ஓருயிர்
என்ற மண்ணில்
ஈருடல் நான் பிணமாய்
மாதச்சிக்கல்களையும்,
பெண்மைச் சிக்கல்களையும்
சமரசமாய் நடத்தி வந்தேன்!

இரைப்பை இன்று
மூடாமல் இருக்க
கருப்பை மட்டும்
திறந்து வைத்து
உணர்வுகள் ஐந்தும்
சரணெனக் கிடக்க
விதி என்னைச் சூதாட
இன்னொருமுறை உதிர்த்துப் போனான்
முப்பது கோடி உயிரணுக்கள்
ஆணுறைக்குள்ளே!

ஏதோ புண்ணியம்
எனக்கும் கிடைக்கின்றன!
காமக் கறைபூசிக்கொண்டு
ஊரின் சுத்தம் காக்கும் இந்தத்
தள்ளுபடி வாழ்க்கையில்!

கருப்பை காப்பது அதர்மம்,
இரைப்பை காப்பது தர்மம்!
மலுங்கிய புத்தியில்
மடி விரித்து
சபலம் தணிக்கிறேன்.

இரத்தம்
வெளிவந்தால் சிவப்பாக,
வெளி வந்ந்ந்தால்ல்ல் வெள்ளையாக,
மூச்சிறைக்க முட்டுப்பட,
உடல் முழுக்க முத்திரை வாங்க,
உடல் ஒழுக்கம் நித்திரை வாங்க,
ஒற்றை இருட்டறையில்
பல உயிர் பரிமாற,
ஓருயிர் வசிக்காதிருக்க
வழக்கப்போல் காத்திருக்கிறேன்
தோற்றுப்போன தர்மத்தை நம்பாமல்!

ஒரு கண்ணன் வருவானா?
கருப்பை திறக்க.....
இரைப்பை மூடுவதற்குள்!

(முதல் பாதியில் போதையில் இருப்பது திரௌபதியின் பதிபக்தி, ஒரு தனிப்பட்ட போதை. இரண்டாம் பாதியில் போதையில் இருப்பது ஒழுக்கம் என்ற வார்த்தைக்குச் சமூகம் காட்டும் அளவை, ஒரு சமூகப்போதை. இதைப் படிப்பவர்கள் தெளிவாக இருந்தால் சரி)

-ஞானசேகர்

1 comment:

J S Gnanasekar said...

பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் திரௌபதி இழுத்துச் செல்லப்படும்முன் அவள் சொல்வாள்: "மாதவிலக் காதலால் ஓராடைதன்னில் லிருக்கிறேன்". எனவேதான், "ஓராடையும் உரித்துப் போனான் நூற்றில் ஒருவன்" என எழுதி இருக்கிறேன்.
-ஞானசேகர்