புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Friday, September 05, 2008

ஆண்சிசுக்கொலை

எனது சுதந்திர எல்லைக்குள் எனது உரிமைகளின் எல்லையை மீறாமல் இதோ கடவுளுக்கான எனது இலக்கணக்குறிப்பு. இது நமக்கான இலக்கணக்குறிப்பு என ஏற்றுக்கொள்ளப்படும்போது, ஆயிரக்கணக்கான ஆண்களின் மூலம் தொலைந்துபோன தலைமுறைகளின் மதமற்ற ஆதரவு நமக்குண்டு.

காலம்: கிறிஸ்து பிறப்பிற்கு முன் 3ம் ஆண்டு, கிறிஸ்து பிறந்தபின் 33ம் நாள்

(இரண்டு மாதக்குழந்தை முதன்முதலாய்ப் பேச முடியாமல் அழுத வார்த்தைகள் இவை. மறு பிறப்பென்று ஒன்று இருக்குமெனில், நம்மில் ஒருவரின் குரலாகக்கூட இது இருந்திருக்கலாம்)

மார் முட்டி
பால் குடிக்கிறேன்
வெடுக்கென பிடுங்குகிறான்
மன்னனின் படைவீரன்.

கச்சை கழட்டி
பாலினம் பார்க்கிறான்
பொக்கை வாயில்
சிரிப்பைப் பார்க்கிறான்.

துள்ளிக் குதிக்குமுடல்
செஞ்சூடு உணர்கிறான்
கட்டற்று ஊற்றும்
சிறுநீர் உணர்கிறான்.

எல்லாருக்கும்
கழுத்தில் கீறினான்
எனக்கு மட்டும்
குறியில் கீறினான்.

கண்ணில் நீர் நிற்க,
வாயில் பால் நிற்க,
குறியில் குருதி நிற்க,
எனக்கான சந்ததி நிற்க,
தாயின் இதயம் நிற்க
அவன் நடக்கலானான்
அடுத்த ஆண்குறிதேடி.

ஆண்டு ஆயிரம்
காலம் ஓடியது.
ஆண்டு நூறு
போர் ஓடியது.
வயிற்றுக்கடுப்பில்
மலம் ஓடியது.
நூறு ஆயிரம்
உயிர் ஓடியது.

மக்கள் காக்க
கடவுள் வந்ததாய்
மதம் வந்தது.
மதம் காக்க
ஆண்டு நூறாய்ப்
போர் வந்தது.

ஆணாய் மட்டுமே
பிறப்பவன் கடவுளா?
ஆணாய்ப் பிறந்ததற்காக
கத்திமுனையில் கொல்லப்பட்டு
கடவுள் எனப்பட்டவனையும் காத்த
நாங்கள் கடவுளா?

அறிவு ஆறெனில்
கடவுள் யாரென
கட்டாயம் கண்டிருப்பீர்கள்!

-ஞானசேகர்

2 comments:

priyamudanprabu said...

ஆண்டு ஆயிரம்
காலம் ஓடியது.
ஆண்டு நூறு
போர் ஓடியது.
வயிற்றுக்கடுப்பில்
மலம் ஓடியது.
நூறு ஆயிரம்
உயிர் ஓடியது.


////

அருமை நன்பரே

J S Gnanasekar said...

தன்னை மிஞ்ச ஒருவன் பிறந்திருப்பதாகக் கனவுகண்ட‌ ஏரோது மன்னன், கலிலேயா நாடு முழுவதும் கைக்குழந்தைகளைக் கொல்லக் கட்டளையிடுகிறான். ஒரு குகைக்குள் ஒளிந்திருக்கும் இயேசுநாதரின் குடும்பத்தாரைக் காப்பாற்றுவதற்காக சிலந்திகள் வாயிலில் வலைபின்னி வைக்கின்றன. சிலந்தி கூடுகட்டியிருக்கும் வாசலில் மனிதர் பிரவேசிக்க வாய்ப்பில்லையென வீரர்கள் கடந்துபோய் விடுகின்றனர். சிலந்திகள் காப்பாற்றிய ஒற்றை மனிதனுக்காக அன்றைக்கு எத்தனைக் குழந்தைகள் கொல்லப்பட்டார்கள் என்று விவிலியம் சொல்லவில்லை. இதேபோல்தான் கம்சனும் கண்ணனின் சகோதரர்களைக் கொன்றிருக்கிறான்.

கடவுளின் பெயரால் மனிதசிசுக்கள் நசுக்கிக் கொல்லப்படுவது மட்டும் எக்காலத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

- ஞானசேகர்