புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Friday, October 14, 2011

அக்காவின் அண்ணன்

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
- வள்ளுவம்

ஒவ்வொரு பிறப்பும் உலகின் ஏதோவொரு காரியத்தை நிறைவேற்றுவதற்காகவே நிகழ்கிறது.
- அவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம் (அக்னிச் சிறகுகள்)


(பெண்ணுக்குப் பெயர் வைக்காத பிடிவாதத்துடன் இன்னுமொரு கதை)

ஞாயிறை வரவேற்று முடித்திருந்தது ஞாயிற்றுக் கிழமை. வீட்டிற்குப் போன் செய்தேன். பாட்டி எடுத்தாள்.
"பிரண்டோட அக்கா கல்யாணம் முடிஞ்சி நேத்து ராத்திரியே மெட்ராஸ்ல இருந்து கெளம்பியாச்சு. இப்ப திண்டிவனத்துல இருக்கேன். விழுப்புரம் பெரம்பலூர் திருச்சின்னு பஸ் மாறி மாறி வரலாம்னு இருக்கேன். அம்மாட்ட சொல்லிடாதெ. சாயந்த‌ரம் வந்துடுவேன். இன்னக்கி என்ன மட்டனா சிக்கனா?"
"சேகரு இன்னும் ஒரு வாரத்துக்குக் கவுச்செ பொலங்குறது இல்ல. ரோமாபுரி பாப்பரசர் தவறிப் போய்ட்டாரு. ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கிறதா நம்ம ஊரு மக்கள் எல்லாம் முடிவு பண்ணி இருக்கோம்"
கலிலியோவுக்கும் சிலுவைப்போர்க் குற்றங்களுக்கும் உலக மக்களிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்ட போப் இரண்டாம் அருள் சின்னப்பர் (ஜான் பால் II) ஞாபக‌த்தில் வந்து போனார்.

கோவிலுக்குப் போய் அவருக்காக வேண்டிக் கொள்ளும்படி அழப்போகும் குரலில் பாட்டி சொன்னாள். உலகில் அதிகப்படியான மக்களின் தலைவனின் மரணத்தை, மக்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ள கிறித்தவ தேவாலயங்கள் தேடி முதல் முறையாக திண்டிவனத்தினூடே நடக்க ஆரம்பித்தேன். ஞாயிறு காலை என்பதால் தேவாலயங்கள் பற்றி விசாரிக்கத் தேவையிருக்கவில்லை. சிவப்பு அல்லது கருப்பு அட்டைப் புத்தகத்தை வைத்திருப்பவரையோ, முக்காடு இடுவதற்கு வசதியாக சேலை தலைப்பையோ அல்லது துப்பட்டாவையோ வைத்திருக்கும் பெண்களையோ பின் தொடர்ந்தால் எளிதாக தேவாலயம் செல்லலாம்.

நீண்ட காத்திருப்பு மற்றும் சில நிராகரிப்புகளுக்குப் பின், கருப்பு அட்டைப் பைக்குள் விவிலியத்தை வைத்து, ஜிப்பிட்டு, தேவதைகளுக்கான வெள்ளைத் துப்பட்டாவுடன் தனியே நடந்து போய்க் கொண்டிருக்கும் என் வயதொத்த மஞ்சள் சுடிதாரைப் பின்தொடர்ந்தேன். வட்டாட்சியர் அலுவலகம் தாண்டி ஒரு தேவாலயத்துள் நுழைந்தாள். அது கத்தோலிக்கத் தேவாலயம் இல்லை. தேவதையின் முகங்கூட பார்க்காத ஏமாற்றத்துடன் கத்தோலிக்கத் தேவாலயம் தேட ஆரம்பித்தேன். பழக்கமில்லாத‌ நகரம் என்பதாலும், ஏற்கனவே திருப்பலி தொடங்கும் நேரமாகிவிட்டதாலும், ஒரு கடையில் விசாரித்தேன். அவர் சொன்ன வீதியில், பிறைவடிவ‌ ஓட்டுவீட்டுப் பாணியில் அக்ரகாரம் போல வீடுகள். இருபக்க வீடுகளையும் பார்த்துக் கொண்டே மெதுவாக நடந்து கொண்டிருந்தேன். அத்தெருவில் தொடர்திருட்டுகள் நடந்திருந்தால், கண்டிப்பாக என்னைச் சந்தேகத்தில் விசாரித்திருப்பார்கள். அப்படியொரு சந்தேகம் யாருக்காவது வந்திருப்பின் அதை உறுதிப்படுத்தும் வகையில், ஒருவீட்டின் வாசலில் நின்று ஆச்சரியமாக திண்ணையில் உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தேன். காரணம் ஒரு புகைப்படம்.

01.02.1985 - அன்னை ஸ்டுடியோ - வேளாங்கன்னி. மேரிமாதா பின்னணியில், இடது கன்னத்திலும் நெற்றியிலும் விரல்நுனியளவு பொட்டுடன், வெள்ளி அரையான்கயிறு, கட்டம்போட்ட போர்வை மேல் ஒற்றை ஜட்டியுடன் குப்புறப் படுத்துக்கொண்டு, சலங்கை சத்தங்களுக்கு எல்லாம் திரும்பாமல், தாத்தா கூப்பிட்ட 'சேகரு' என்ற வார்த்தைக்குக் கேமராவைக் கருப்பு வெள்ளையில் பார்த்த அந்தத் தருணம்தான், எனது முதல் புகைப்படம். எனக்கு முதல் தலைமுடி எடுக்க வேண்டுதல் இருப்பதாக வேளாங்கன்னி போய், மொட்டை அடிப்பதற்கு முன் எடுக்கப்பட்டது. எங்களுக்குச் சம்மந்தமே இல்லாத திண்டிவனத்தில் பார்த்ததில்தான் ஆச்சரியம்.

டெலிபோன் பூத் தேடி நடந்தேன். வழியில் ஒரு கத்தோலிக்கத் தேவாலயத்தில், தன்னைத் துப்பாக்கியால் சுட்டவனை நேரில் சென்று மன்னித்த போப்பைப் பற்றி பாதிரியார் சொல்லிக் கொண்டிருந்தார். அதையும் கடந்துபோய் ஒரு டெலிபோன் பூத் கண்டுபிடித்தேன். வீட்டில் யாருமே போனை எடுக்கவில்லை. அவர்கள் தேவாலயம் சென்றிருக்கலாம். இரண்டு மூன்று முறை டீ குடித்துவிட்டு, அக்கத்தோலிக்கத் தேவாலயத்தில் இருந்து மக்கள் வெளிவந்தபின் மீண்டும் போன் செய்தேன்.

ஐந்தாவது முறை அம்மா எடுத்தாள். திண்டிவனத்தில் என்னைப் பார்த்ததை அதிசயமாக‌ச் சொன்னேன். பதிலே இல்லை. அம்மா எதையோ மெதுவாக எண்ணுவது போல் கேட்டது.
"ஒன்னு... ரெண்டு... ஆறு சின்ன‌ அண்ணி... ஏழு ஒரட்டாங்கையி சிருக்கி... எட்டு பெரியைய்யா... பத்து போடியக்கா... அது போடியக்கா வீடா இருக்கும் சேகரு"
"யாரு?"
"என்னடா மறந்து போயிட்டியா? சின்ன வயசுல அந்த அக்கா சேலையப் புடிச்சுக்கிட்டே சுத்துவே. இப்ப யாபகம் இல்லயா? அந்தப் போட்டோவுல பத்து பிரிண்டுல ஒன்னே, தாத்தா போடியக்காவுக்கும் கொடுத்தாரு. ஓன்மேல அவ்வளவு பாசமா இருந்துச்சு"
தாத்தாவைப் பற்றி பேசும்போது தன் இருப்பைக் காட்டிக்கொள்ள‌, பேசுவது போடியக்காவா என்று பாட்டி அம்மாவிடம் கேட்டது எனக்கும் கேட்டது. கதையெல்லாம் சொல்லாமல் போடியக்கா யாரென்று முதலில் சொல்லச் சொன்னேன்.

போடியக்கா. என் அம்மாவின் வயதிருக்கும். நான் மூன்றுமாதக் கைக்குழந்தையாக இருந்தபோது பக்கத்து வீடு. திருமணமாகி ஈராண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் என்மேல் மிகவும் பிரியமாக இருந்திருக்கிறாள். அவளின் அண்ணன் ஒருவரின் பெயர் சேகர் என்பதால் என்னை அண்ணன் என்றுதான் அழைப்பாளாம். நடக்க ஆரம்பித்த காலத்தில், தொடர்ந்து 40 நாட்கள் மருத்துவமனை போய் ஊசி போட வேண்டிய நிலை வந்தபோது, ஆரம்பத்தில் அம்மாவுடன் போகாமல் அடம்பிடித்திருக்கிறேன். போடியக்கா கூட்டிப்போக ஆரம்பித்தவுடன், நானே தயாராகி அவள் வீட்டு வாசலில் முன்கூட்டியே போய் நின்று, அழுகை இல்லாமல் ஊசி போட்டு வந்திருக்கிறேன். திருமதி ஒரு வெகுமதி திரைப்படம் பார்த்ததில் இருந்து, 'அக்கா அக்கா நீ அக்கா இல்ல, மாமா மாமா நீ மாமா இல்ல' என்று போடியக்காவையும் அவள் கணவரையும் பார்க்கும்போதெல்லாம் பாடிக்கொண்டு திரிந்திருக்கிறேன். எனது முதல் புகைப்படத்தின் பத்துப் பிரதிகளில் ஒன்றை என் தாத்தாவே தேடிப்போய் கொடுத்த, இரத்த சம்மந்தமில்லாத உறவு என்ற பெருமையைத் தட்டிச் சென்றவள் போடியக்கா.

"அது என்னம்மா இப்புடி ஒரு பேரு? போடியக்கா"
"அது அவுங்க ஊரு பேரு. உண்மையான பேரு டக்குன்னு யாபகத்துக்கு வல்ல‌. ஊரெ எதித்துக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க போல, அவங்க வீட்டுக்குச் சொந்தக்காரங்க யாருமே வந்ததில்ல. அதுனாலயே அந்த அக்கா நம்ம வீட்டு மேல ரொம்ப பாசமா இருக்கும்"
அவள் வீட்டிற்குச் சென்று அவளைச் சந்திக்கப் போவதாகச் சொன்னேன். புதுக்கோட்டை நகரைவிட்டு வந்தபின் தொடர்பற்று போன போடியக்காவைப் பற்றி தெரிந்துகொள்ள அம்மாவும் ஆர்வமானாள். நான்கு முறைகள் வெறுமனே வைத்துவிட்டாலும், கடைசியில் தொடர்ந்து இரண்டு மணிநேரம் பேசியதால், ஒரு கால் இல்லாத டெலிபோன் பூத் உரிமையாளரும் மகிழ்ச்சியானார். ஒருகை உயர்த்தி உலக மக்களை ஆசீர்வதிக்கும் போப்பின் படம் வழியெங்கும் சுவர்களை ஆக்கிரமித்திருந்தது.

உலகில் ஒரேயொரு அழகுக் குழந்தைதான் உள்ளது. அது ஒவ்வொரு தாயிடம் உள்ளது. அதுமாதிரி திண்டிவனத்திலும் யாரோ ஒருவர் வீட்டில் என்னை மாதிரியே ஓர் அழகுக் குழந்தை இருக்கலாம். குழந்தை இல்லாத ஒருத்தி, பக்கத்துவீட்டுக் குழந்தைகள் மேல் பாசமாக இருப்பதெல்லாம் இயல்புதான். அண்ணன்மேல் மரியாதையுள்ள ஒருத்தி, அதே பெயர் உடையவர்களை வயது வித்தியாசம் இல்லாமல் அண்ணன் என்று சொல்வதில் ஆச்சரியம் இல்லைதான். ஆனாலும் அவ்வீட்டில் கண்டிப்பாக போடியக்கா இருக்க வேண்டும் என்று உள்மனது ஏங்கியது. சிறுவயதில் 40 நாட்கள் ஊசி போட்டுக் கொண்டிருந்த நாட்களில், அவள் வீட்டு வாசலில் நான் நின்று கொண்டிருந்தது போல், அவ்வீதியில் அவ்வீட்டு வாசலில், முன்னர் நின்ற அதே இடத்தில் நின்றேன். சந்தேகமே இல்லை, எனக்கு முன்னால் ஆணியில் தொங்கிக் கொண்டிருப்பது என் தசாவதாரம்தான்.

"யார் சார் வேணும்?" வீட்டில் இருந்து வெளிவந்து கொண்டே கேட்டது என் வயதுடைய‌ ஒரு பச்சை நைட்டி. என்ன சொல்வதென்று தெரியாமல் நான் நின்று கொண்டிருந்த வேளையில், என் அம்மா வயதுடைய இன்னொருத்தியும் வந்தாள்.
"யாருடி?"
"தெரியல அத்தெ"
"என்ன தம்பி வேணும்?"
"நா... நான்... சே...கர்... ஞானசேகர்".

என்னையும் என் பார்வையின் திசையில் இருக்கும் புகைப்படத்தையும் பார்த்துவிட்டு, ஏதோ புரிந்து கொண்டவளாய், ஏதோ கண்டெடுத்தவளாய், "சேகர் அண்ணே..." எனக் கத்திவிட்டாள். என்னை நோக்கி ஒடிவந்தவள், அனிச்சையாய் முதலில் என்னைத் தூக்கப் போவது போல் வந்து, நான் வளர்ந்து போனதைப் புரிந்தவளாய், என் கன்னங்கள் இரண்டையும் இரு கைகளால் கிள்ளி அவ‌ள் நெற்றிப் பொட்டில் நெட்டி முறித்துவிட்டு, மீண்டும் கிள்ளி, விரல்களை வாயில் வைத்து முத்தமிட்டுக் கொண்டாள். எனக்கு வயது இருபதா அல்லது இரண்டா என்று அந்நொடிகளில் ஞாபகமில்லை.

வீட்டின் உள்ளே கூட்டிப்போய் மின்விசிறி போட்டு பாயில் அமரவைத்து பொருட்களை அங்குமிங்கும் எடுத்துவைத்து சந்தோசத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் ஏதேதோ செய்துகொண்டிருந்தாள். மாமாவை அறிமுகப்படுத்தினாள். சுடிதாருக்கு மாறியிருந்த பச்சை நைட்டி பெண்ணை அண்ணன் மகள் எனவும், 8ம் வகுப்பு சேரப்போகும் மூத்த மகனையும், 6ம் வகுப்பு சேரப்போகும் இளைய மகனையும் அறிமுகப்படுத்தினாள். எனது அறிமுகம் அங்கிருப்பவர்களுக்குத் தேவைப்படவில்லை. மகன்களின் பெயரில் சேகர் இல்லையென்பதை ஏனோ நினைத்துக் கொண்டேன். இரண்டு மணிநேரத்தில் 17 வருடங்களைப் பகிர்ந்து கொண்டோம். விடுகதைப்புலி தாத்தாவின் இறப்பிற்கு மிகவும் வருத்தப்பட்டார்கள்.

உரையாடல் மிகவும் இயல்பாகப் போய்க்கொண்டிருந்த ஒரு சமயத்தில்,
"17 வருசம் கழிச்சு சேகர் எப்புடி இருப்பான்னே ஒங்களுக்குத் தெரியாது. சேகர்ன்னு சொன்னதுக்காக இப்புடி கவனிக்கிறீங்களே, யாராவது சேகர்ன்னு சொல்லிட்டு வந்து ஏமாத்திரப் போறான்க்கா" என கிண்டல் செய்தேன்.
"சேகரான்னு செக் பண்ணிட்டாப் போகுது" சுடிதார் இரண்டு பையன்களுக்கும் ஏதோ சைகை செய்தாள். மூத்தவன் எனது முதுகுபக்கம் நின்றுகொண்டு என் பின்கழுத்தின் இடதுபக்கம் கைவைத்து கபாலத்தின் அடியில் ஏதோ தேடினான். என் முன்னால் நின்றுகொண்டு என் முடியைக் கலைத்துக் கொண்டே இளையவன் உச்சந்தலையில் ஏதோ தேடினான்.
"அய்ய்ய்யோ... எவ்வ்வ்ளோ பெரிய தழும்பு" என்று இடது காதருகில் என் கபாலத்தில் இருக்கும் தழும்பைத் தொட்டுக் கொண்டே மூத்தவன் சொன்னான்.
"ஒனக்குத் தலையில கட்டி வந்தப்ப எங்க ஊர்லயிருந்து ஒரு நாவிதரக் கூட்டியாந்து வெட்டிவிட்ட தழும்பு அது சேகர் அண்ணே" என்றாள் வெங்காயம் வெட்டும் போடியக்கா. அவள் சொன்னதைப் புரிந்து கொள்வதற்குள் என் உச்சந்தலையில் நறுக்கென்று கொட்டினான் இளையவன். ச்ச்ச் ஆஆஆ என்று கத்தினேன்.
"ய‌ம்மா, தலயில மச்சம் இருந்து கொட்டுனா வலிக்காதுன்னு சொன்னே?"
"அதுக்காக இப்புடியா மாமா மேல கொட்டுறது பாவி? தலக்குள்ள போயி தேடுறானுக பாருடி. கமுக்கட்டு மச்சத்தக் காமிக்கலாம்ல. வலிக்கிதாண்ணே?" என்று அவனுக்கு உருளைக் கிழங்கின் தோலுரிக்கும் தண்டனை தந்தாள். இதற்கு மேல் இதே விசயத்தைப் பேசினால் என் வருங்கால‌ மனைவியை ஆச்சரியப்படுத்துவதற்காக நான் வைத்திருக்கும் மிச்ச மச்சங்கள் எல்லாம் சபையேறும் என அமைதியானேன்.

"நீங்க மட்டும் எப்புடி எங்க அத்தெ மாமாவெக் கண்டுபுடிச்சீங்க? இவங்கதான்னு என்ன அத்தாட்சி?" கேட்டாள் தக்காளி நறுக்கும் சுடிதார்.
"வெளில என்னோட போட்டோ"
"ஆணோ பொண்ணோ சின்னப் புள்ளயில எல்லாருமே ஒரே மாதிரிதான் இருப்போம். அது நீங்கதான்னு நம்புறீங்களா?"
"என் போட்டோ எனக்குத் தெரியாதாங்க" என்று கேள்விக் குறியுடன் நான் நிறுத்தியிருக்க வேண்டும். பழமொழியுடன் காற்புள்ளி இட்டிருக்கக் கூடாது.
"காக்கைக்குத் தன்குஞ்சு பொன்குஞ்சு இல்லையா?"
"அதுவும் சரிதான். நீங்க ஆம்பளப் புள்ள வேற‌. குப்பறவேற படுத்திருக்கீங்க‌" என்றாள் சுடிதார். மற்றவர்கள் யாருக்கும் புரியவில்லை ஆச்சரியக் குறி. மீண்டும் அமைதியானேன் முற்றுப்புள்ளி.

ஆட்டுக்கால் சூப்பு. ஆட்டுத் தலைக்கறி. மதிய உணவு முடித்தபின் நான் பேசத் தொடங்கினேன்.
"எனக்கு மூத்தவங்க யாருமே இல்லன்னு நான் அடிக்கடி வருத்தப் படுவேங்க்கா. அதுவும் அக்கான்னு ஒரு ஒறவு நெருங்கின‌ சொந்தத்துல‌ கூட‌ இல்லையேன்னு ரொம்ப வருத்தப்படுவேன். அண்ணன் இருக்குற பொண்ணும் அக்கா இருக்குற ஆணும் ரொம்ப கொடுத்து வெச்சவங்கன்னு நானே நெனச்சுக்குவேன். இன்னையிலே இருந்து நானும் கொடுத்து வெச்சவன், அதிர்ஷ்டசாலி"
இவ்வளவு உணர்வுப் பூர்வமான வார்த்தைகளை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. சிறிதுநேரம் நீடித்த அமைதியைச் சுடிதார் விரட்டினாள்.
"அத்தைக்கி நீங்க அண்ணன், ஒங்களுக்கு அத்தெ அக்கா. சூப்பர். நீங்க எனக்கு பெரியப்பாவா? சித்தப்பாவா?"
"தெரியலையப்பா" என்றான் இளைய 'நாயகன்'.
சிரிப்புகள் முடித்தபின் நான் சுடிதாரிடம் கேட்டேன்.
"சேகர்ங்கிறது ஒங்க அப்பாவா?"
சற்று நிதானித்து இல்லை என்றாள்.
"எங்க இருக்காரு?"
யாருமே பதில் சொல்லவில்லை. தலை கவிழ்ந்து கொண்டார்கள். சோகத்தைப் பதிலாகக் கொண்ட கேள்வியைக் கேட்டபின், மீண்டுவரத் தெரியாமல் நானும் அமர்ந்திருந்தேன்.
"வா சேகர், காலாட‌ கடவீதி பக்கம் போய்ட்டு வரலாம்" என்றார் மாமா.

நானும் மாமாவும் இளைய‌வனும் நடக்க ஆரம்பித்தோம். அன்று மிதிவண்டியிலேயே செஞ்சிக்கோட்டை போய்வருவதாகத் திட்டம் இருந்ததாகவும், சுற்றுவட்டாரங்களின் அருமை பெருமைகளையும் மாமா சொல்லிக்கொண்டு வந்தார். திண்டிவனம் பாலத்தின் உச்சிக்குக் கூட்டி வந்திருந்தார். ஞாயிறை வழியனுப்பி முடித்திருந்தது ஞாயிற்றுக் கிழமை.

"தமிழ்நாட்டுப் போக்குவரத்துல ரொம்ப‌ முக்கியமான பாலம் இது. மனசு பாரமா இருக்குறப்ப எல்லாம் இங்க வந்து நின்னுக்கிட்டு கீழ மனுசங்களப் பாத்துக்கிட்டு இருப்பேன். காத்துல பறக்குற மாதிரி மனசு லேசாயிடும்" என்று சொல்லிக் கொண்டே இளையவனைக் கிழக்குப்பக்க பாலத்தின் வழியே கீழிறங்கி மேற்குப்பக்க பாலம் வழியாக திரும்பவும் மேலேறி வரச்சொன்னார். ஏனென்று கேட்காமலேயே அவன் நடந்தான். நான் பாண்டிச்சேரியைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
"சந்திரசேகர். அக்காவோட ரெண்டாவது அண்ணன்" என்று திருச்சியைப் பார்த்து பேசினார்.

அக்காவின் நிச்சயதார்த்த கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள் இரண்டை என் கையில் திணித்தார். முதல் படத்தில் அக்கா மட்டும் அலங்காரத்தில் இருந்தாள். இரண்டாவதில் அக்காவுடன் இருந்த‌ இன்னொரு பெண் அலங்காரத்தில் இருந்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
"அக்காவோட இருக்குறதுதான் சந்திரசேகர்"
அதிர்ச்சியின் உச்சியில் சென்னையை நோக்கி நின்று கொண்டிருந்தேன். புகைப்படத்தை உற்றுக் கவனித்தேன். அக்காவின் பக்கத்தில் நிற்பவர் பெண்ணுடை தரித்த‌ ஆண்.

"சந்துருவுக்குப் பெண்கள் மாதிரி நடந்துக்கணும், ட்ரஸ் போட்டுக்கணும்ன்னு ஆசைன்னு மொத மொதல்ல அவங்க வீட்டுக்குத் தெரிஞ்சப்ப எங்க மாமனாரு கொல்லவே போயிட்டாரு. அதுக்கப்பறம் சந்துரு வீட்டோட ஒட்டியே இருக்கல. ஒங்க அக்கா மட்டும்தான் அவனுக்கு ஆதரவு. அவளும் எவ்வளோ சொல்லிப் பாத்தா. அது ஒரு ம‌னோவியாதி, ஆஸ்பத்திரி கூட்டிட்டுப் போலாம், அப்புடி இப்புடின்னு. யாருமே கேக்கல. அவளுக்குக் கல்யாணம் நிச்சயமாகி, நிச்சயதார்த்தப்ப, அண்ணன் ஆசப்பட்டார்ன்னு தன்னோட ட்ரஸையும் நகையையும் கொடுத்து, யாருக்கும் தெரியாம அண்ணனும் தங்கச்சியும் எடுத்துக்கிட்ட போட்டோதான் இது"
மாமா என் தோளைத்தட்டி பாலத்தின் கீழ் நிற்கும் இளையவனைக் காட்டினார். கனத்த மனத்துடன் காற்றில் பறக்கிற மாதிரி கையசைத்தேன்.

"சந்துரு ஆம்பளைன்னு சந்தேகமே அந்தப் போட்டோக்கிராப்பருக்கு இல்ல. அந்த போட்டோவ மட்டும் அக்கா தனியா வாங்கிக்கிட்டா. அந்த போட்டோகிராப்பருக்குக் கல்யாணத்தன்னக்கி உண்ம தெரிஞ்சி ஒளறி கல்யாணம் நின்னுப் போச்சு. சந்துருவ அன்னக்கே கல்யாண வீட்டுலயே அவமானப்படுத்தி வீட்ட விட்டே தொரத்திட்டாங்க‌. பொட்ட விழுந்த வீடுன்னும் கல்யாணம் நின்னு போனவள்னும் யாரும் அக்காவக் கட்டிக்க முன்வரல. ரெண்டு வருசம் கழிச்சு நான் கல்யாணம் பண்ணி ஆறேழு வருசமா கொழந்த பாக்கியம் இல்லாம பொட்ட விழுந்த வீடு பொட்ட விழுந்த வீடுன்னு ஊரே சொல்ல எல்லாரும் அந்த ஊரவிட்டே வந்துட்டோம்"
மாமாவின் கண்ணிமைக் கரைகடக்க கண்ணீர் காத்துக் கொண்டிருந்தது.

"அவரு திரும்ப வரவே இல்லயா?"
"மூணு வருசத்துக்கு முன்னாடி... அப்பத்தான் மொதமொதன்னு நேர்ல பாத்தேன். சேல கட்டிருந்தாப்புல. வெறும் என்புதோல் போர்த்த ஒடம்பு. ஒரு ரெண்டு மணிநேர‌ம் பேசுனோம். தான்பட்ட கஷ்டங்கள் பத்தி எதுமே அவரு சொல்லல சேகர். ஆனா நான் கேள்விப்பட்டுருக்கேன். சந்துருவுக்கு என்ன ஆகியிருக்குமுன்னு நான் யூகிக்க விரும்பல. அப்புடி எதுவும் நடந்திருக்கக் கூடாதுன்னும் நெனச்சிக்கிட்டேன். தன்னால கல்யாணம் நின்னுபோன தங்கச்சிக்கு வாழ்க்கை கொடுத்ததுக்காக எனக்கு நன்றி சொல்லி அழுதாரு. பணம் கொடுத்தாரு, நான் வாங்கிக்கலே. ஏன்னா நான் எரக்கப்பட்டு கல்யாணம் பண்ணிக்கல. இன்னொரு ஜீவனுக்கும் என்னெ மாதிரி 300 கிராமுல துடிக்கிற இதயம் இருக்கும்ன்னு ஒரு சின்ன‌ நெனப்புத்தான்"
இனிமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பதுபோல் என்னைப் பார்த்தார்.
"அவரு அக்காவப் பாக்கலையா?"
"சந்துரு நம்மலோடல்லாம் வாழ விரும்பல. அவருக்கு எயிட்ஸ். போன வருசம் எறந்து போயிட்டதா எனக்கு போன் மட்டும் வந்திச்சி".

இளையவன் திரும்பிவிட்டதால் அதற்குமேல் பேசாமல் வீட்டிற்கு அமைதியாக நடக்க ஆரம்பித்தோம். "இன்னக்கி என்னடா சீக்கிரமா வந்துட்டே!" என்று பொய்யாக ஆச்சரியம் காட்டினார் மாமா. வழிநெடுக மனது கனமாயிருந்தது. திரும்ப ஓடிப்போய் பாலத்தின் மேல் நின்றுகொண்டு மனிதத்திரளைப் பார்த்து அழவேண்டும் போலிருந்தது. வீடு திரும்பி கைலிக்கு மாறிக் கொண்டிருந்தபோது மாமா சொன்னார்: "ஓடிப்போன சந்துரு திரும்பவும் வந்துருவார்ன்னு இன்னும் எங்கக் குடும்பம் நம்பிட்டு இருக்கு, அக்காவும்தான்".

மாமா நடந்துபோய் நாற்காலியில் உட்காரும்போது கீழே படுத்திருந்த பெரியவன் "அய்யா பாத்துட்டேன்" என்று கத்தினான். தனக்கும் காட்டச் சொல்லி இளையவனும் அடம்பிடித்தான். மொத்த வீடும் சிரித்தது. நான் சிரிக்கிறேனா என்று மாமா என்னைத் திரும்பிப் பார்த்தார்.
"அப்புடியே ஒங்கள‌ மாதிரி இந்த சின்னவன், சேகரண்ணே"
"அக்கா... என்ன எதுக்கெடுத்தாலும் நான்தானா?"
"அட சும்மா நடிக்காதீங்க சின்ன பெரியப்பா, இல்ல பெரிய சித்தப்பா. மைதிலி என்னைக் காதலி படத்துக்கு அத்தெ ஒங்களக் கூட்டிட்டுப் போய், தனியா டாய்லெட் போய்ட்டு வந்துருக்காங்க. எங்கடீ போய்ட்டு வந்தே, என்னையும் கூட்டிட்டுப் போடீன்னு கத்தி, படம் பாக்கவிடாம, அப்புறம் எங்க அத்தெ..."
"சும்மா இருடீ... நீ ஒருத்தி... சின்னப்புள்ளயில செஞ்சதெல்லாம் சொல்லிக்கிட்டு..."
மனிதத்திரள் துடிக்கவிடாமல் நசுக்கிய 300 கிராம் இதயம் ஒன்று, என் இதயம் மூலம் துடித்துக் கொண்டிருப்பதாக எண்ணும் அக்காவின் நம்பிக்கை எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மனிதத்திரளுக்குள் பின்னிக்கிடக்கும் மர்ம முடிச்சுகள் சிலவற்றை விடுவித்து எனக்கான சில உறவுகளை உண்டாக்கிக் கொண்ட பலத்தை உணரமுடிந்தது. எல்லா உறவுகளும் எல்லாருக்கும் பிறப்பிலேயே அமைந்துவிட்டால் உலகமும் தாங்காது.

நான்செய்த சேட்டைகளை எல்லாம் தன் பிள்ளைகளுடன் ஒப்பிட்டுக் கொண்டே போடியக்கா இரவு வெகுநேரம் தூங்காமல் பேசிக் கொண்டிருந்தபோது தாத்தாவைப் பற்றி பேச்சு வந்தது. அவர் பதில் சொல்லாமல் போய்விட்ட விடுகதைகளுக்கு எல்லாம் என்னிடம் விடை கேட்டார்கள்.
"கத்தி போல் எலெ இருக்கும். கவரிமான் பூ பூக்கும். தின்னப் பழம் பழுக்கும். தின்னாத காய் காய்கும்" மாமா கேட்டார்.
"வேம்பு"
"கறக்க முடியாத மூணு பால் சொல்ற புத்திசாலியத் தான் கட்டிக்கிவேன்னு சொல்லிட்டு ஒரு எளவரசி மனுசங்களையே பாக்காம கதவச் சாத்திக்கிட்டாளாம். அது என்னென்ன‌ பால் சேகர் அண்ணே?"
"கள்ளிப்பால் எருக்கம்பால் சுண்ணாம்புப்பால்" என்றாள் சுடிதார்.
"ஒடிப்பது குத்துவது கரைப்பது அனைத்தும் கறப்பதே ஔவையே"
"தனபால் ஜெயபால் இக்பால்" என்றாள் சுடிதார்.
"இக்பால். இந்து முஸ்லீம் சீக்கியம் இந்த மூணு மதங்களுக்கும் பொதுவான பேரு. ஆனா விடை தப்பு"
"அறத்துப்பால் பொருட்பால் இன்பத்துப்பால். சரியா மாமா?" கேட்டான் மூத்தவன். தவறென்று சொல்லி சரியான பதிலைச் சொன்னேன். பல‌ வருடங்கள் விடை தெரியாத புதிர்களுக்கு விடை கிடைத்த திருப்தியில், நான் சொன்ன மூன்று பால்களையும் ஒத்துக் கொண்டார்கள். மனிதத்திரள்தான் இன்னும் ஒத்துக்கொள்ள மறுக்கிறது; ஒதுக்கியே வைக்கிறது; ஒதுங்கியும் கொள்கிறது.

சாதி மூன்றொழிய வேறில்லை!

- ஞானசேகர்

1 comment:

சேக்காளி said...

பெண்ணுக்குப் பெயர் வைக்காத பிடிவாதத்துடன் இன்னுமொரு கதை
என்ற ஆரம்பத்துடன் ஆரம்பித்ததனால் படிக்கும் போது எங்கேயாவது பெண் பெயர் வருகிறதா என்ற துப்பறியும் புத்தி முடிக்கும் போது ஏற்பட வேண்டிய தாக்கத்தின் அளவை குறைத்து விட்டதாக தொன்றுகிறது.அதை கதையின் முடிவில் கொடுத்திருந்தால் உடனடி மறு வாசிப்பிற்கும் வழி வகுக்கும் என நினைக்கிறேன்.மற்ற படி நச்சென்று மனதில் பதிந்து விடும் கதைதான்.