ஆப்கான் யுத்தம் நடந்து கொண்டிருந்த கல்லூரி நாட்களில், சக மனிதன் மேல் இன்னொரு மனிதனின் அடக்குமுறைகளை வரலாற்றில் தேடித் தேடிப் படித்துக் கொண்டிருந்தேன். ரோமானியக் கொடுங்கோலர்கள், சிலுவைப் போர்கள், நாசிகளின் யூத இனப்படுகொலைகள், ஹிரோஷிமா, நாகசாகி, ஏஜன்ட் ஆரஞ்ச், நேபாம் குண்டு. இப்படித்தான் தன் சொந்த மக்களையே கொன்றழித்த போல் பாட் (Pol Pot) என்ற ஆட்சியாளரைப் பற்றியும், கம்போடியா என்ற நாட்டைப் பற்றியும் எனக்கு புத்தகங்கள் அறிமுகம் செய்து வைத்தன. அப்படி கொல்லப்பட்டவர்கள் மட்டும், கம்போடிய மக்கள் தொகையில் 20% பேர். அதாவது ஐந்தில் ஒருவர். அதாவது ஈராக் யுத்தத்தில் அமெரிக்காவின் கணக்கை 1970களிலேயே செய்து காட்டியவர் போல் பாட்!
கம்போடிய நாட்டை அங்கோர் வாட் (Angkor Wat) என்ற கோவிலின் மூலமும் பின்னாளில் காலம் எனக்கு அறிமுகப்படுத்தியது. அதுதான் உலகின் மிகப்பெரிய கோவில். ஆரம்பத்தில் விஷ்ணுவிற்காக கட்டப்பட்ட அக்கோவில், இன்று ஒரு புத்தக் கோவில். கெமேர் (Khmer) என்ற அரச வம்சத்தவர்களால் கட்டப்பட்டது. தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு மன்னன் அல்லது இளவரசனால் தான் கெமேர் அரசு உருவாக்கப்பட்டது, என்று கேள்விப்பட்டதும் கம்போடியா மீது கவனம் அதிகமானது. கம்போஜம் என்று தமிழில் அழைக்கப்பட்ட கெமேர் நாட்டு மன்னன் சூரியவர்மன், தன் பகைவர்களுக்கு எதிராகப் போர் புரிய தஞ்சாவூர் இராஜேந்திர சோழனின் உதவி கேட்டதாக பேராசிரியர் கே.ராஜய்யனின் 'தமிழ்நாட்டு வரலாறு' என்ற புத்தகத்தில் படித்தேன். பல்லவர்களால் காஞ்சிபுரத்தில் கட்டப்பட்டு, இந்தியப் பெருங்கடல் வழியாகவும், மேகாங் ஆற்றின் நீரோட்டத்திற்கு எதிராகவும் கொண்டு போய் கட்டப்பட்டதாக அங்கோர் வாட் பற்றி நித்தியானந்த சுவாமிகள் (ஆமாம் அவரேதான்) கூட ஒரு யூடியூப் காணொளியில் சொல்கிறார். அங்கோர் வாட்டை விட ஒரு பெரிய கோவிலைப் பீகாரில் கட்டப் போவதாக யாரோ விளம்பரம் செய்ய, கம்போடிய அரசு தலையிட்ட பின், அத்திட்டமும் சமீபத்தில் கைவிடப்பட்டது.
நானும் அங்கோர் வாட் பார்த்துவிட வேண்டும் என நீண்ட நாட்களாகத் திட்டம் வைத்திருந்தேன். முதன் முதலில் சொந்த செலவில் போகும் வெளிநாடு கம்போடியாவாக இருக்கட்டும் என்று நினைத்துக் கொண்டேன். விமானம், அந்நியப் பணப்பரிமாற்றம் மற்றும் தங்குமிடங்கள் பற்றி அப்போது எனக்கு அனுபவம் இல்லாததால், என் கண்ணில்பட்ட இணையதளங்கள் எல்லாம் அதிகமாக பட்ஜெட் சொல்ல, கம்போடியாவை விட்டுவிட்டு இந்தோனேசியாவின் பாலி போய் வந்தேன். கடந்த தீபாவளிக்கு வெளியான கஷ்மோரா திரைப்படத்தில் அங்கோர் வாட் கோவிலைப் பார்த்தவுடன், ஆவல் அதிகமாக, ஒரு மாதமாக இணையத்திலும் புத்தகங்களிலும் தகவல்களைச் சேகரித்து, பயணப்படத் தயாரானேன். பாலி அனுபவம் இப்பயணத்தின் பட்ஜெட்டைக் கொஞ்சம் குறைத்துக் காட்டியது. கம்போடியாவில் போய் இறங்கியவுடன் 30 அமெரிக்க டாலர்களுக்கு இந்தியர்களுக்கு விசா கிடைக்கும் வசதி உண்டு (On arrival visa).
சென்ற வருட பாலி பயணத்தைப் புனித வெள்ளியன்று ஆரம்பித்தேன். இவ்வருட கம்போடிய பயணத்தைப் புனித வெள்ளியன்று முடித்தேன். வெள்ளி இரவு ஹைதராபாத்தில் இருந்து விமானப் பயணம் ஆரம்பம். சனி காலை மலேசியத் தலைநகர் கோலாலம்பூர். மதியம் விமானத்தில் அங்கிருந்து கிளம்பி, மாலையில் கம்போடியத் தலைநகர் பினாம் பென் (Phnom Penh) அடைந்தேன். பினாம் பென் என்றால் பென் என்ற பெண்ணின் குன்று என்று அர்த்தம். திங்கள் காலை பினாம் பென்னில் இருந்து ஆரம்பித்த பேருந்து பயணம், மாலையில் அங்கோர் வாட் இருக்கும் சியாம் ரீப் (Siem Reap) நகரில் முடிந்தது. தாய்லாந்தையும், ஒட்டிப் பிறக்கும் இரட்டையர்களையும் குறிக்கும் ஆங்கில வார்த்தை சியாம் (Siam). தாய்லாந்தை வென்று கட்டப்பட்ட நகரம் என்பதால், சியாம் ரீப் என்றால் தாய்லாந்தை வென்றல் என்று அர்த்தம். இதனால் தாய்லாந்துக்காரர்கள் இந்நகரத்தை அங்கோர் என்றுதான் அழைப்பார்களாம். வெள்ளிக் கிழமை காலை சியாம் ரீப்பில் இருந்து விமானப் பயணம். முற்பகலில் கோலாலம்பூர். பிற்பகலில் அங்கிருந்து கிளம்பி மாலையில் திருச்சி. காலையில் கம்போடியா. கானாவுக்குக் கானா. மதியம் மலேசியா. மானாவுக்கு மானா. இரவு இந்தியா. இனாவுக்கு இனா.
வலதுபக்கத்தில் வாகனங்கள் செல்வதை எல்லையில் நின்றுகொண்டு, முதன் முதலில் சீன நாட்டில் பார்த்திருக்கிறேன். அந்த அனுபவத்தை முதன் முதலில் பெற்றது கம்போடியாவில் தான். காலநிலை நமது திருச்சி போலத்தான். இந்த இருபது வருடங்களாகத் தான் போர் இல்லாமல், மக்களாட்சியில் கொஞ்சம் அமைதி இருக்கிறது. இந்தியாவைவிட 1:30 மணிநேரம் முன்னால். கெமேர் மொழி. ஆங்கிலம் பெரும்பாலானவர்கள் பேசுவதால், மொழிப் பிரச்சனை இல்லை. நாணயங்கள் கிடையாது. கம்போடியாவுக்கு ரீல் என்று தனியாக பணம் இருந்தாலும், சில்லறைக்கு மட்டும் தான் அதைப் பயன்படுத்துகிறார்கள். அமெரிக்க டாலர்கள் தான் பரிவர்த்தனைக்கு. நான் சென்ற போது ஓர் அமெரிக்க டாலர் = 65 இந்திய ரூபாய், ஓர் இந்திய ரூபாய் = 60 கம்போடிய ரீல். தினமும் மதிப்பை மாற்றிக் கொள்ளாமல், ஓர் அமெரிக்க டாலருக்கு 4000 ரீல் என்று கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள். நமது ஆட்டோக்கள் போல அங்கு டுக் டுக் என்றொரு வாகனம்தான் ஊர் சுற்ற.
'கம்போடியனாக இருங்கள். கம்போடியப் பியர்களையே (beer) பருகுங்கள்' போன்ற விளம்பரங்கள். அருவியில் குளிப்பவர் முதல், நடு சாலையில் போக்குவரத்தை நெறிப்படுத்தும் காவலர் வரை அனைவரும் பெரும்பாலும் கையில் பியர் கேன் வைத்திருக்கிறார்கள். இந்த வருடம் கம்போடிய வருடப் பிறப்பு ஏப்ரல் 14 அன்று. அட நம் தமிழ்ப் புத்தாண்டும் கூட! கம்போடிய இராமாயணத்தில் சீதைக்கு இராவணன் தகப்பன். புத்தமதம் பெரும்பான்மை. மொத்த பயணத்தில் ஒரு கிறித்தவ தேவாலயமும், வியட்நாமியர்கள் வாழும் பகுதியில் ஒரு மசூதியும் கண்டேன். வழக்கம் போல் எனது பயணங்களில் மதியவுணவு தவிர்த்துக் கொண்டேன். பினாம் பென்னில் இந்திய உணவகங்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். சியாம் ரீப்பில் நிறைய உண்டு. மெரினா பீச்சில் சுண்டல் போல, ஓடுகளுடன் அவிக்கப்பட்ட நத்தைகள் வழியெங்கும் விற்கப்படுகின்றன. பாம்பு வறுவல் கிடைக்கும்.
பயணம் முடிவானபின் கடலோடியின் 'கம்போடிய நினைவுகள்' என்ற புத்தகத்தைத் தான் முதன் முதலில் படித்தேன். அது கம்போடியாவில் பணிபுரிந்த ஆசிரியரின் பணி தொடர்பான தகவல்களாக அமைந்ததே தவிர, சுற்றுலா செல்வதற்கான தகவல்கள் இல்லை. எனக்குப் பெரிதும் உதவிய இணைய தளங்கள்:
துளசிதளம்
உலாத்தல்
Solobackpacker
Michael Freeman மற்றும் Claude Jacques என்பவர்களால் எழுதப்பட்ட Ancient Angkor என்ற புத்தகத்தைப் படிக்காமல் நான் கம்போடியா போய் இருந்தால், அங்கோர் வாட்டினுள் ஒளிந்து கிடக்கும் அற்புதங்கள் எனக்குப் புரிந்திருக்காது.
அங்கோர் வாட் என்பது ஒரு கோவிலைக் குறித்தாலும், அதைச் சுற்றி பல ஏக்கர் பரப்பில் சின்னதும் பெரியதுமாக பல கோவில்கள் உண்டு. ஏறக்குறைய 45. அதில் 20 இடங்களைப் பார்க்க திட்டம் போட்டு, 21 இடங்களைக் கண்டேன். இப்படி அங்கோர் வாட் என்ற அற்புதத்தைக் காண வேண்டும் என்று ஆரம்பித்த பயணத்தில், இனப்படுகொலைகளின் சுவடுகளும் சேர்ந்து கொண்டன. இரண்டு திசைகளில் ஓடும் ஒரே நதி, மிதக்கும் கிராமம், அருவியில் சிவலிங்கங்கள், கண்ணிவெடிகள் என பல விடயங்கள் இணைந்து கொண்டன. எனது புகைப்படங்களே அதிகம் பேசுவதால், நான் பயண அனுபவங்களை விரிவாக எழுதுவதில்லை. அவற்றிற்கான சுட்டிகள் இதோ:
Choeung Ek Killing Museum
Tuol Sleng Genocide Museum
Independence Monument
Royal Palace
Wat Ounalom
Phnom Penh city
Wat Phnom
Bakheng
Bayon
Angkor Thom
Bapuon
Thommanon
Chao Say Tevoda
Ta Keo
Ta Phrom
Prasat Kravan
Banteay Kdei
Kbal Spean
Banteay Srei
Landmine Museum
Siem Reap city
Banteay Samre
Civil War Museum
Floating village
Roluos group of temples
Wat Preah Prohm Rath Monastery
Bas-reliefs of Angkor Wat
Angkor Wat temple
இந்தியாவைப் பற்றி ஊடகங்களில் காட்டப்படும் விடயங்களைச் சொல்லி, கம்போடியாவில் அறிமுகமான நண்பர் ஒருவர் பல கேள்விகள் கேட்டார். ஒன்றரை கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டவனுக்குப் பதில் சொல்லி புரியவைக்க, 130 கோடி மக்கள்தொகை கொண்ட இந்த நாட்டவன் எவ்வளவு சிரமப்பட்டேன் தெரியுமா?
- ஞானசேகர்

No comments:
Post a Comment