புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Sunday, April 19, 2020

வீடு வாடகைக்கு: Strictly vegetarian only

அதனால் எகிப்து நாடெங்கும் இதற்கு முன்னும் பின்னும் இருந்திராப் பெரும் கூக்குரல் உண்டாகும். ஆயினும், இஸ்ராயேல் மக்கள் அனைவரிடையேயும், மனிதர் முதல் மிருகங்கள் வரை யாரை நோக்கியும் ஒரு நாய் முதலாய்க் குரைப்பதில்லை. அவ்வித அதிசய அடையாளத்தின் மூலம், ஆண்டவர் எகிப்தியருக்கும் இஸ்ராயேலருக்குமிடையே வேறுபாடு காட்டுகிறாரென்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
- விவிலியம் (யாத்திராகமம் 11:6,7)

புறவினத்தாரின்  வீடுகளும்
நம்மைப் போலவே இருப்பதால்
அடையாளம் தெரியவில்லை என்றார்கள்
கொள்ளை நோயின் தூதர்கள்.

'இது என் கட்டளை
இதுவே அடையாளம்
நம் இனத்தார் வீடுகளில்
வரும் ஞாயிற்றுக் கிழமை கரவொலி'
வாழ்த்துச் சொல்லி அனுப்பினார்
கொள்ளை நோயின் கடவுள்.

எதிரொலி குழப்பிவிட்டதாக
முறையிட்டார்கள்
கொள்ளை நோயின் தூதர்கள்.

'இது என் கட்டளை
இதுவே அடையாளம்
நம் இனத்தார் வீடுகளில்
வரும் ஞாயிற்றுக் கிழமை தீபவொளி'
வாழ்த்துச் சொல்லி அனுப்பினார்
கொள்ளை நோயின் கடவுள்.

புறவினத்தார் சிலரும் ஏற்றிவிட்டதாக
முறையிட்டார்கள்
கொள்ளை நோயின் தூதர்கள்.

'இனி கட்டளையும் இல்லை
இதுவரையானது அடையாளமும்  இல்லை.
செய்யச் சொல்வதைச் செய்யாததும்
செய்யச் சொல்லாததைச் செய்வதும்
புறவினத்தார் புத்தி.
வரும் ஞாயிற்றுக் கிழமை
தீபவொளியோ கரவொலியோ இருக்கும் வீடுகள்
புறவினத்தார் வீடுகள்
இதுவே அடையாளம்'
வாழ்த்துச் சொல்லி அனுப்பினார்
கொள்ளை நோயின் கடவுள்.

துல்லியமான பட்டியலுடன் திரும்பினார்கள்
கொள்ளை நோயின் தூதர்கள்.

– ஞானசேகர்

No comments: