புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Friday, April 10, 2020

கடல் தொடா இரு தேசங்கள்

தூங்காத நகரங்கள்
விடிகிற பொழுதின்
எந்தப் பரவசத்தையும் காண்பதில்லை
அதற்குத் தன் செயல்களை
எங்கே நிறுத்தி
எங்கே தொடங்க வேண்டுமென‌
புரிவதேயில்லை
– மனுஷ்யபுத்திரன்

இந்தியா மூன்று பக்கங்கள் நீராலும், ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட நாடு. தீபா கர்ப்பம், மன்னிக்கவும், தீபகற்பம் என்று பெயர். இலங்கை மாதிரி எல்லாப் பக்கங்களும் நீரால் சூழப்பட்டு இருந்தால் தீவு என்று பெயர். எல்லாப் பக்கங்களும் நிலத்தால் சூழப்பட்ட நாடுகளைப் பற்றி சொல்லித்தர ஒன்றுமே இல்லாதது போல, அதற்கான தமிழ்ப்பெயரைப் பள்ளிப் பாடங்கள் எனக்குச் சொல்லித்தரவில்லை. Peninsula Island என்று சொல்லும் ஆங்கில மொழியிலும் அதற்கென தனி வார்த்தை இல்லை. Land-locked country. தீபகற்ப நாட்டில் மையத்தில் வாழும் என்னைப் போன்றவர்களுக்குக் கடல் ஒரு பேரதிசயம். அப்படியெனில் land-locked காரனுக்குக் கடல் தரும் பிரமிப்பு எப்படி இருக்கும்? செய்தித்தாள்களில் படித்திருக்கிறேன். கஷ்மீரில் இருந்து சுற்றுலா வந்த பள்ளிக் குழந்தைகள், மும்பை நகரில் முதன்முதலில் கடல் பார்த்து வியந்த செய்தி படித்திருக்கிறேன். அதுபோல Land-locked countryகளை, கடல் கண்டிராத அதன் சாமானிய மக்களைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு உண்டு. அதை இருமுறை நிறைவேற்றிய கதையே இப்பதிவு.

2016 கிறிஸ்மஸ். வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பொன்னியின் செல்வன் படித்துக் கொண்டிருந்தேன். தேவாலயத்திற்குப் போனவர்கள், பனியில் படிக்காமல் வீட்டிற்குள் போய் படிக்கச் சொன்னார்கள். திரும்பி வந்தவர்கள் இன்னுமா பனியில் படிப்பதாகக் கேட்டார்கள். 2017 கிறிஸ்மஸ். வீட்டுத் திண்ணையில் அமர்ந்து மகாபாரதம் படித்துக் கொண்டிருந்தேன். தேவாலயத்திற்குப் போனவர்கள், பனியில் படிக்காமல் வீட்டிற்குள் போய் படிக்கச் சொன்னார்கள். திரும்பி வந்தவர்கள் இன்னுமா பனியில் படிப்பதாகக் கேட்டார்கள். அப்போதுதான் முடிவெடுத்தேன், அடுத்த 2018 கிறிஸ்மஸ் பனிமலைக்கருகில் யார் தொல்லையும் இல்லாமல் புத்தகம் படிப்பது என்று! அப்புத்தகம் எஸ்.ராமகிருஷ்ணனின் இடக்கை.

நேபாளம். சில ஆண்டுகளுக்கு முன், உலகின் ஒரே இந்து நாடு. இந்தியாவோடு ஒட்டி இருக்கும் ஒரு land-locked country. இரு நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தப்படி, ஒரு நாட்டவர் அடுத்த நாட்டில் சுதந்திரமாக உலவலாம்; வேலையும் செய்யலாம். இந்தியாவில் இருந்து நேரடி விமானத்தில் அல்லது நிலவழியாக நேபாளம் போனால், பாஸ்போர்ட் கூட தேவையில்லை, தேர்தல் அடையாள அட்டையே போதும். இப்படி எளிதாக போகக்கூடிய நாடென்பதால் எனது உடனடி பட்டியலில் நேபாளம் இல்லை. அப்போது அங்கு அரசியல் குழப்பம் அதிகம். மன்னராட்சியில் இருந்து மதச்சார்பற்ற மக்களாட்சிக்கு அந்நாடு மாறியபோது இங்கிருந்த வாய்பாய் ஆட்சியின் முத்த அமைச்சர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். இந்து மதத்தின் ஐந்து புண்ணிய தளங்களில் ஒன்றை வைத்திருக்கும் நேபாளத்திற்கு மதச்சார்பற்ற மக்களாட்சி எதற்கு என்றார்கள், இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

என் பள்ளி நாட்களில் உலகையே உலுக்கிய, நேபாள அரச குடும்பம் முழுவதும் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி இன்றும் உலுக்கிக் கொண்டிருக்கிறது. 2015ல் ஒரு கொடிய பூகம்பமும் அந்நாட்டை உலுக்கியது. பூகம்பத்தில் நேபாளம் எரிய, இந்தியப் பிரதமர் டிவிட்டரில் பீடில் வாசித்தார். அவரின் படத்துடன் அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சின. இந்திய ரூபாயும்  நேரடிப் புழக்கத்தில் இருந்த நேபாளத்திற்கு, இங்கு பணமதிப்பிழப்பு செய்தபின் தேங்கிப் போன ரூபாய்த் தாள்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி பதில் சொல்லவேயில்லை எனவும் படித்தேன். இங்கு கர்நாடகா தேர்தல் நடந்தபோது, இந்து மதத்தின் ஐந்தாவது புண்ணிய தளத்திற்குப் போய் மறைமுகப் பிரச்சாரம் செய்தார் இந்தியப் பிரதமர்.

பெங்களூரில் இருந்து நேபாள தலைநகர் காத்மண்டு செல்ல நேரடி விமானம் உண்டு. புது நாட்டில் இரவில் இறங்கக் கூடாது என்ற எனது விதியின்படி அதில் செல்லவில்லை. காத்மண்டுவில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை ஒருவாரமாகத் தாலிபான்கள் கடத்தி வைத்திருந்த நினைவில் ஏர் இந்தியாவில் செல்ல முடிவெடுத்தேன். டெல்லியில் 7 மணிநேரம் காத்திருப்பு. டெல்லி பன்னாட்டு விமான நிலையத்தில், பாரம்பரியம் என்ற பெயரில் ஏதோ ஓர் ஆணுக்கு மீசையில்லாமல் சுடிதார் போல உடையில், ஆண்கள் கழிவறை வாசலில் ஒட்டியிருக்கிறார்கள். அது பெண் என நினைத்து, நிறைய வெளிநாட்டுப் பெண்கள் உள்நுழைந்த கூத்தைப் பார்த்தேன்.

5  நாட்கள்பயணம். காத்மண்டு பொகாரா என்ற இரு நகரங்களுக்குச் சென்றேன். பொகாராவிற்குச் சாலை வழியாக, வலப்பக்க இருக்கையில் இமயமலையின் மடியில் தூங்காமல் 8 மணிநேரம் பயணம். அந்நகரில் தான் கிறிஸ்மஸ் அன்று அன்னப்பூர்ணா மலைத்தொடர்களில் முதன்முதலில் பனியைப் பார்த்தேன். நடிகை மனிஷா கொய்ராலாவை நேரில் பார்த்தேன். இடப்பக்க இருக்கையில் இமயமலை உச்சிகளைக் கோதியபடி பொகாராவில் இருந்து காத்மண்டிற்கு 30 நிமிடத்திற்கும் குறைவான விமானப்பயணம். பனிமூட்டம் இல்லாதபோது எவரெஸ்ட் தெரியும் ஒரு கிராமத்திற்குப் போனேன். 4 உலகப் பாரம்பரியச் சின்னங்கள். மக்களாட்சி நாட்டில் மாட்டுக்கறி கிடைக்கிறது.

ஆறாம் நாள் கண்டிப்பாக நான் எனது தாய்மாமன் வீட்டில்  இருக்க வேண்டும் என்பதால், இதுவரையான எனது பயணங்களில் அதிக செலவான விமானத்தைத் தேர்ந்தெடுத்தேன். பக்கத்தில் இருக்கும் இந்தியாவிற்கு மலேசியா வழியாக செல்லும் என்னை நேபாள அதிகாரி சந்தேகமாகப் பார்த்தார். தென்கோடி இந்தியா மலேசியாவில் இருந்து பக்கம் என்றேன். பெங்களூர் டெல்லி காத்மண்டு கோலாலம்பூர் திருச்சி என்பது வட்டச்சுற்று. நான் பரவாயில்லை. என் பக்கத்து இருக்கையில் இருந்த நேபாளக்காரன் பர்மா போக வேண்டும். காத்மண்டு கோலாலம்பூர் ரங்கூன் என்பது அவனுக்குப் 'ப' சுற்று.

உங்களின் பார்வைக்கு எனது புகைப்படங்கள்:

https://photos.app.goo.gl/KoYo2KQD71kq45yCA

https://photos.app.goo.gl/yV6oAU17YMB6LALe7

https://photos.app.goo.gl/fY8NsU2N5i8wdsjZ9

https://photos.app.goo.gl/xMKACektxbqgor8H6

https://photos.app.goo.gl/qBHh3QJqVPRwmpQE8

https://photos.app.goo.gl/fZ7N8fbecmqj7n1j6

https://photos.app.goo.gl/5faF722YuaJ1r8SZ9

https://photos.app.goo.gl/eGuRgFpzP1ejWq9w9

https://photos.app.goo.gl/NT5rRfvEPUt98PfB6

https://photos.app.goo.gl/27FyKLHTUUDU2KdF9

https://photos.app.goo.gl/SHEnKujvDQLyMtuT6

https://photos.app.goo.gl/TnrnfWHobKSeufin8

https://photos.app.goo.gl/Kc6ozTgQoUqFYpny5

https://photos.app.goo.gl/WFKKD7CL76pLwRnq9

https://photos.app.goo.gl/m1C5KTD7hDTXma7Z9

https://photos.app.goo.gl/YqQXpMrCztnogH548

https://photos.app.goo.gl/YJp7EgFg699qcWwX6

https://photos.app.goo.gl/5G25K4yjvP75DPRQA

https://photos.app.goo.gl/1i2G1Mtp8QMcuk1R9

https://photos.app.goo.gl/hFgftSBJjrvaRXcp6

லாவோஸ். இப்படியொரு நாடு இருப்பதே பலருக்குத் தெரியாது.  தென்கிழக்கு ஆசியாவின் ஒரே land-locked country. உலகிலேயே குண்டுகளால் அதிகமாக துளைக்கப்பட்ட நிலமுடைய நாடும் கூட. வியான்டியன் அதன் தலைநகரம். வலதுபக்க போக்குவரத்து நாடு. 5  நாட்கள் பயணம். வியாண்டியன், லுவாங் பிரபாங் என்ற இரு நகரங்களுக்குச் சென்றேன். வியான்டியன் விமான நிலையத்தில் பெண்கள் நலனுக்காக ஒரு கண்ணாடி உண்டியல் வைத்திருந்தார்கள். பணமதிப்பிழப்பிற்கு முந்தைய 500 ரூபாய் தாள் மேலாக மிதந்தது. உண்டியல் நிரம்பி இருந்ததாலும், பணமதிப்பிழப்பாகி 2 வருடங்களுக்கு மேலாகி விட்டதாலும், யாரோ தான் சமீபத்தில் அதைப் போட்டிருக்கிறார்கள். செல்லாக்காசைப் பெண்கள் நலம் போன்ற செல்லாத விடயங்களுக்கென கககபோ! இன்னொரு நாட்டிற்குள் நிலவழியாக நுழையும் அனுபவத்தை முதன்முதலில் பெற்றேன். பதிவு செய்த விமானங்களைக் கேன்சல் செய்யும் நிலைமையும் இதே பயணத்தில் தான் முதன்முதலில் அமைந்தது. அதுவொரு தனிப்பதிவுக்கான கதை.

உங்களின் பார்வைக்கு எனது புகைப்படங்கள்:

https://photos.app.goo.gl/rX5NC3Zr7UJaG6h49

https://photos.app.goo.gl/7drsYtCsJ5AZVdtt8

https://photos.app.goo.gl/n2E8tA4yBj4j2VN69

https://photos.app.goo.gl/RTAK3gy7G8fxD5Sq6

https://photos.app.goo.gl/YD3J4RVfLaBNdrHS7

https://photos.app.goo.gl/iq5aN1Gz6tBgChei7

https://photos.app.goo.gl/g5g38UTMiEKdRQCG8

https://photos.app.goo.gl/uT6ry1LFBebfYEab6

https://photos.app.goo.gl/idwTqREY5ExGGbaZ9

ஜான் மில்டன் என்ற ஆங்கிலக் கவிஞர் தனது இன்பக் காலத்தில் Paradise Lost என்றும், துன்பக் காலத்தில் Paradise Regained என்றும் கவிதைகள் எழுதினார். கொரோனா வைரஸினால் வீட்டுச்  சிறைகளில் இருக்கும் இவ்வுலகத்திற்கு, விட்டு விடுதலையாகி நிற்போம் என்று நான் சொல்வதாக இப்பதிவு அமையட்டும்.

– ஞானசேகர்

No comments: