புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Tuesday, November 08, 2005

கேட்க மறந்த வரம்

மறக்க முடியாதது
முதல் காதலும்
முதல் முத்தமும்.
-யாரோ


முத்தம்.

அவ்வளவாக அறிமுகம் அற்ற
சொற்ப மனிதர்களில்
நானும் ஒருவன்.

மூளையின் மூலையெல்லாம்
தேடிப் பார்த்தேன்
முத்தம் என்னும் முத்திரை
பதிக்கவில்லை
பதிக்கப்படவில்லை

அப்பாவிடம் வாங்க நான்
பிடித்தபிள்ளை இல்லை.
அம்மாவிடம் வாங்க நான்
பிரிந்திருந்த நாட்கள் அதிகம்.
காதலியிடம் வாங்க
காதலும் ஜெயிக்கவில்லை.

இயேசு கிறிஸ்து போல்
தருணம் காத்திருந்தேன்
எனக்கு கிடைக்கும்
முதல் முத்தத்திற்கு.

கடைசி ஆசை சொன்ன தாத்தா
என் முதல் ஆசை முத்தம்
நினைவாகத் தந்து போனார்.
அந்த ஆஸ்துமாக் கிழவனின்
கோழை கலந்த எச்சிலை
என் கன்னத்தின் கரையோரம்
அழுது கழுவாமல்
ஒன்றரைநாள் வாழவிட்டேன்.

காதலி திரையரங்கு இருட்டில் தரும்
முதல் திருட்டு முத்தம்,
மனைவி முதல் இருட்டில் தரும்
முதல் வசிய முத்தம்
இரண்டும் மறக்கப்படலாம்.
கிழவனின் முத்த ஆசை
தீர்த்து வைத்த
அந்த முதல் முத்தம்
நான் கடைசி ஆசை சொல்லும்போதும்
நினைவுபடுத்தப்படும்.

முத்தம் அறிமுகம் ஆகிவிட்டது.
அடுத்து எனது முறை
அறிமுகப்படுத்த.

யாருக்குக் கொடுப்பது?
அம்மாவுக்கு?
பெண்தேட ஆரம்பித்துவிட்டால்?

பக்கத்து வீட்டுக் குழந்தைக்கு?
பெற்றோரிடம்
போட்டுக் கொடுத்துவிட்டால்?

நண்பனுக்கு?
இருக்கிற பட்டப்பெயர்
போதாதா?

யூதாஸ் காரியோத் போல்
தருணம் காத்திருந்தேன்
நான் கொடுக்கும்
முதல் முத்தத்திற்கு

இன்னமும்
பரிணாமம் இல்லாமல்
பதுங்கித்தான் இருக்கிறது
எனது முத்த வரலாறும்.

பொறுத்தது பொறுத்தோம்
இத்தனை வருடம்?
இன்னும் கொஞ்சம்
பொறுத்து விட்டால்
ஒரே நேரத்தில்
இருஜோடி உதடுகளில்
ஒரு முத்தம் பதிக்க
எனக்கென ஒருத்தி ஒதுக்கப்படுவாள்.

அதற்குள் மரணம்
என்னை முத்தமிட்டால்?
அடுத்த கணமே
அறுத்தெரியச் சொல்வேன்
யாரும் தொடாத
என் ஜோடி உதடுகளை!
-ஞானசேகர்

3 comments:

Gnaniyar @ நிலவு நண்பன் said...

நன்றாகத்தான் இருக்கிறது முத்தத்தின் ஆராய்ச்சி..

ஆனால் அதற்குள் மரணம் முத்தமிட்டுவிட்டால் அறுத்தெறிவேன் எனது உதடுகளை என்று சொல்லியிருக்கிறீர்கள். செத்தபிறகு எப்படி அறுத்தெறிவது உதடுகளை..?

ஆகவே அதனை நீக்கிவிட்டால் இன்னும் நன்றாக இருக்கும் டின்பது எனது கருது;து


இதயம் நெகிழ்வுடன்

ரசிகவ் ஞானியார்

J S Gnanasekar said...

'நிலவின் நண்பன்' போல் சிலர் இதைக் குறை சொல்லி இருப்பதால், பொருள் மாறாமல் இரு வரிகளில் வார்த்தைகளை மட்டும் இடமாற்றி இருக்கிறேன். சொல்லவந்தது பாதிக்கப்படாததில் எனக்கு மகிழ்ச்சி. முன்னதைவிட இப்போது தெளிவான வார்த்தைகளில், அர்த்தம் பாதிக்கப்படாமல்.

யாத்ரீகன் said...

முதல் முத்ததுக்கு இப்படி ஒரு கவிதையா.. வித்யாசமான கோணம்.. நல்லாவே இருக்கு...

-
செந்தில்/Senthil