புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Friday, November 18, 2005

அத்தைமார் முத்தம்

(எனது ஒரு சிறு சிறுகதை முயற்சி)

அண்ணன் தம்பிகள் பாகப்பிரிவினை, கட்டிக்கொடுத்த அக்காவின் நகைகளைக் கடன்வாங்கி தங்கச்சி கல்யாணம், முப்பது கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் உறவுகளைச் சுருக்கிக்கொண்டு சொந்தமண்ணே உலகம், விவசாயவேலை உறுதியானாலும் பள்ளிக்கூடப்படிப்பு, கோழிச்சண்டை, அருவாள் சண்டை, இதுபோன்ற பழக்கவழக்கங்கள் கொண்ட ஒரு சராசரி கிராமம்தான் எனக்கு சொந்தமண். மற்ற ஊர்களைப் போல் திருவிழா எடுத்து சொந்தபந்தங்கள் பார்க்க முடியாத சின்ன கிராமம், திருச்சியில் குடியேறின ரெயிவேகாரரையும் சேர்த்தாலே மொத்தம் எட்டு குடும்பங்கள். "அந்தக் கல்லாங்குத்துலபோய் இடுப்பொடிஞ்சு சாவுரதுக்கா?" என்று வெளியூர் சொந்தங்களே பெண்தர மறுக்கும் ஓரிடம். "அந்த ஊரு பொண்ணுக்குத்தான்யா கஷ்டம்னா என்னான்னு தெரியும்" என்று வெளியூர்காரர்கள் போட்டி போட்டுக்கொண்டு பெண்ணெடுக்கும் ஓரிடம். அரசியல்வாதிகூட ஒட்டுக்கேட்காத ஓரிடம்.

அப்பாவுக்கு வேலை மாற்றலாகி நாங்கள் 25 கி.மீ. தள்ளி புதுக்கோட்டையில் குடியேறினோம். இப்போது சித்தப்பா மட்டும்தான் எங்கள் ஊரில் இருக்கிறார். சொத்துப் பிரச்சனையில் பேச்சுவார்த்தை கிடையாது. ஒரே அத்தை, இன்னொரு கிராமத்தில், அதுவும் சீர் பிரச்சினையில் பேச்சுவார்த்தை இல்லை. சொந்தபந்தம், ஆறுதல் பேச்சு, பாட்டிமார் கதைகள், தாத்தாக்களின் காமக்கதைகள் எதுவும் இல்லாமலே முடிந்து போனது எனது 13 வருடங்கள்.

அன்று ஒரு உயரமான பெண் எங்கள் வீட்டிற்கு வந்தாள். வாசலில் நின்றிருந்த என் கன்னம் கிள்ளி, ஐந்து விரல்களையும் சேர்த்து அவள்வாயில் ஒட்டிக் கொண்டு, "என்னப் பெத்தவரு" என்று சொல்லிக் கொண்டாள். கன்னத்தின் வலியிலும் ஏதோ ஒரு சந்தோஷம். அதன் அர்த்தம் பிற்காலத்தில் 'அத்தைமார் முத்தம்' என்று வைரமுத்து சொல்லித்தான் புரிந்தது. 'பல அம்மாக்களுக்கு இதெல்லாம் ஏன் செய்யத் தெரியவில்லை?' என்று இன்னும் குழப்பம். எழுதிக்கொடுத்தைப் படிக்கும் பிள்ளை போல அம்மா ஒப்பித்தாள்:
"வாங்க அண்ணி"
"அண்ணின்னா என்னம்மா?"
"சும்மா இருடா........அண்ண வல்லங்களா? கமலா எப்புடி இருக்கா?"
"கமலான்னா யாரும்மா?"
"இவன் இப்புடித்தான் அண்ணி. சும்மாவே உம்முன்னு கெடப்பான். ஒரு புது ஆளு வந்துட்டா சும்மா நொய்யிநொய்யின்னுட்டு"
"இந்தாடா சேகரு, மிச்சரு. நல்லா படிக்கிறியா? சித்தப்பா வீட்டுக்குப் போனியா?"
மிக்சரை வாங்கிக்கொண்டே 'நல்லா படிக்கிறேன்' என்று தலையாட்டினேன்; 'சித்தப்பாவா?' என்று புரியாமல் நின்றேன்.
"வா டம்ளர்ல கொட்டித் தர்றேன்" என்று சொல்லி என்னைச் சமையலறைக்குள் அம்மா இழுத்துச் சென்றாள். ஏற்கனவே வீட்டில் இருந்த மிக்சர் எனக்குத் தரப்பட்டது. அந்தப் பெண் கொடுத்ததை, சீனி டப்பாவிற்குள் அம்மா ஒளித்து வைத்தாள். நான் மீண்டும் அந்தப் பெண்ணிடம் வந்தேன். அவள் என்னைக் கவனிக்கவில்லை; வீட்டின் உத்திரத்தை உட்கார்ந்து கொண்டே சுற்றிப் பார்த்தாள்.
"நீங்க யாரு?"
அவள் என் பக்கம் வந்து, சுவற்றில் இருந்த அம்மா-அப்பாவின் கல்யாணப் போட்டோவைக் காட்டி,
"ஒங்க அம்மா நெத்தியில கயிறு கட்டுறது நாந்தான்" என்றாள்.
புரியவில்லை. எங்களுக்குக் காபி தரப்பட்டது. நான் பக்கத்து மாமி வீட்டுக்குச் சென்றுவிட்டு, 'கிழக்குச் சீமையிலே' படம் பார்த்துவிட்டு, இரவு எட்டு மணியைப்போல் வந்தேன்.

அப்பா வரும் நேரம். ஆயிரம் காலடி ஓசைகளில் அப்பா காலடி ஓசையை அறிந்துகொண்டவளாய், அவரை வரவேற்க அம்மா தயாரானாள். அந்தப்பெண் மூலையில் போய் நின்றுகொண்டாள். அப்பா அவளைப் பார்த்துவிட்டார். செருப்பைக் கழட்ட தடுமாறினார்.
"வாப்பா! மச்சான் வல்லையா? நல்ல இருக்கீங்கல்ல. மூத்தபய புதுநன்மைக்குக்கூட இந்த அண்ணனக் கூப்புடல. தாய்மாமன் என்னா செத்தாப் போயிட்டேன்?"
அப்பா அழவில்லை. அந்தப் பெண் அழுதாள்.
"என்னண்ணே பண்றது? பொண்ணாப் பொறந்துட்டேனே? கட்டுனவன் சொல்லறதுதானே பத்துக்கட்டள"
யாருக்கும் முகம் பார்த்து பேச துணிவில்லை. அழுகை பயமா? குற்ற உணர்ச்சியா? சொல்வது பொய்யா? அவ்வயதில் புரியவில்லை. அப்பாவின் கையிலிருந்து Little Hearts பிஸ்கட்டை நைஸாக உறுவினேன்.

மூக்கு சிந்தி முந்தானையில் துடைத்துவிட்டு, அவளே மௌனம் கலைத்தாள்.
"ஏன் புருஷன் பாவிப்பய செஞ்ச தப்புக்கெல்லாம் நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேண்ணே. ஏன் சொந்தம் விட்டுப் போகக் கூடாதுன்னுதான் ஏன் பொண்ணு சடங்குக்குத் தாய்மாமன அழைக்க வந்திருக்கேன்"
"கமலாவா அண்ணி? மேஜராயிட்டாலா?" என்றாள் அம்மா.
"மேஜர்னா என்னாம்மா? மேஜர் சுந்தர்ராஜன் மாதிரியா?"
கொஞ்சம் சிரித்தார்கள், அழுத இரண்டு பேரும். வெற்றிலை பாக்கில் ஐந்து ரூபாயைத் திணித்து அப்பாவிடம் அவள் நீட்டினாள். அதை வாங்கும்போது தாய்மாமன் தெனாவெட்டு அழுகையிலும் லேசாகத் தெரிந்தது அப்பாவிடம்.

அப்புறம் எல்லாரும் ஒன்றாக அமர்ந்தோம். ஒவ்வொருத்தரும் பாவமன்னிப்பு கேட்பதுபோல் "நான் அப்புடி பண்ணியிருக்கக் கூடாது? நீ செஞ்சது தப்பு?" என சமாதானம் செய்து கொண்டனர். இடையில் பேச்சைத் திசை மாற்ற "ஏன் மருமகன் எனக்கிட்ட பேசவே மாட்டேங்கிறாண்ணே" என்றாள் அவள். "ஏன் தங்கச்சிடா. ஒனக்கு அத்தை. புதுசுல. பயப்புடுறான். பழகிட்டான்...... தலக்கி ஏறிருவான்".
"அத்த" என்று சொல்லிப் பார்த்தேன்.
மீண்டும் கிடைத்தது ஒரு அத்தைமார் முத்தம்.
"எத்தனாவது படிக்கிற"
"எட்டாவது படிக்கிறேன். டி.ஈ.எல்.சி.ல"
"ரெண்டு வருஷம் முன்னாடிதான் பொறந்தியா? கமலா பத்தாவது படிக்கிறா? அண்ணன் சம்பந்தம் எனக்குக் குடுத்து வெக்கல"
சாப்பாட்டு நேரம். நான்கு தட்டுகள்.
"அண்ணே, நம்ம தங்கச்சி செத்த அன்னக்கி நாம சாப்புட்டது மாதிரி சாப்புடுவோமா?"
அப்பா அவர் தட்டைத் தள்ளி வைத்துவிட்டு, அத்தையின் தட்டுகளில் பிணைய ஆரம்பித்தார். என் கையையும் சேர்த்து ஒரே தட்டில் மூன்று கைகள்.
"அப்புடியே எங்கண்ணன் மாதிரி"
மீண்டும் ஒரு அத்தைமார் முத்தம். கன்னத்துச் சோற்றைத் துடைக்கவில்லை. சாப்பிட்ட சோறு கொஞ்சம் வித்தியாசமாய் உப்புக் கரித்தது.

இரவு முழுவதும் அப்பாவும், அத்தையும் வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். தூங்கும் என்னை யாரோ கன்னத்தில் கிள்ளுவது தெரிந்து எழுந்தேன். அத்தையை அம்மாவும், அப்பாவும் வழியனுப்பிக் கொண்டு இருந்தார்கள்.

சில நாட்கள் கழித்து, ஒரு புதன் கிழமையில், ஸ்கூலுக்கு லீவு போட்டுவிட்டு நாங்கள் ஒரு கிராமத்திற்குச் சென்றோம். பின்னால் ஒரு ஆட்டோவில், வாழைத்தார், இனிப்பு வகைகள், இன்னும் பல பாத்திரங்கள் எங்களைத் தொடர்ந்து வந்தன. அந்த ஓட்டுவீட்டின் முன்பந்தலில் இருந்து அத்தையும், ஒரு மீசைக்காரரும் எங்களை வரவேற்றனர். அத்தையின் பக்கம் போனேன். அத்தை புரிந்து கொண்டாள். மீண்டும் அத்தைமார் முத்தம்.

எல்லோரும் எங்களை ஆச்சரியமாகப் பார்த்தனர். அந்த கூட்டத்தில் முதல் வரிசையில் நாங்கள் மூவரும் அமர்த்தப்பட்டோம். முன்னால் இருந்த சின்ன மேடையில் "அ.கமலா" என்று எழுதப்பட்டிருந்தது. ஒரு உயரமான பெண் அதற்குமுன் நகைகளுடன் எங்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அவளை அத்தை எங்களிடம் அழைத்துவந்து அம்மா-அப்பா காலில் விழச் செய்தாள். எங்களை அறிமுகப்படுத்தியும் வைத்தாள். நான் பலூன் வைத்து விளையாடும் என்போன்ற பயல்களைப் பார்த்துக்கொண்டு இருந்தேன்.

ஒரு பையனின் பலூன் கூரையில் மாட்டிக் கொண்டது. அதை எடுத்துத் தந்தேன். எனக்கு விவரம் தெரிந்து இரண்டாவது முறை என் அம்மாவிடம் அடி வாங்கினேன். ஏன் என்று தெரியவில்லை. அப்பா தனியாக அழைத்துப்போய், என்னிடம் சொன்னார்:
"அவனுக்கு ஏன்டா பலூன எடுத்துக் கொடுத்த? அவன்பேரு இருதயராசு. ஏன் தம்பி மகன். ஒனக்கு தம்பி. இந்தா 100 நூபா, அம்மாவுக்குத் தெரியாம அவனும் நீயும் எங்கையாவது கடக்கிப் போயி ஏதாவது சாப்டுட்டு வாங்க"
அவனைத் தேடினேன். அவன் கிட்டத்தட்ட என் அப்பா சாயல் உள்ள ஒரு ஆளின் மடியில் அமர்ந்திருந்தான் பலுன் வெடித்துப்போய் இருந்தது.
"ஓன்பேரு இருதயராசா?"
"ஆமா"
"நீதான் சேகரா?" ஒரே தொனியில் கேட்டனர் அவனது அம்மாவும், அப்பாவும்.

அவனது அம்மா என் கன்னம் கிள்ள வந்தாள். நான் விலகிப் போனேன்.
"இருதயராசு, நான் பலூன் வாங்கித்தாரேன் வாடா"
அவன் அப்பா காசு தேடினார்.
"எங்க அப்பா காசு கொடுத்துருக்காரு"
அவன் அப்பா அவனை மடியில் இருந்து தூக்கிவிட்டார். அவன் அம்மா அவன் கையைப் பிடித்தார். நான் மறுகையைப் பிடித்தேன். இருவரும் பலூன் வாங்கப் போனோம். இருவரின் அம்மாவும் எங்களைப் பார்த்தார்கள். இருவரின் அப்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவனோடு வந்து அப்பா-அம்மா பக்கத்தில் அமர்ந்தேன். அவன் அப்பா மடியில் அமர்ந்தான். தகப்பனுக்குப் பாடம் சொன்ன முதிர்ச்சி எனக்கு அப்போது தெரியவில்லை.

மீண்டும் அத்தை எங்கள் பக்கம் வந்து அமர்ந்தாள். இங்கிருந்தே கமலாவிற்கு ஏதேதோ சைகையெல்லாம் காட்டினாள். திடிரென ஏதோ ஞாபகம் செய்த அத்தை, ஒரு அத்தைமார் முத்தம் கொடுத்து, கமலாவிடம் கொடுக்கச் சொல்லி, ஒரு திப்பெட்டியைக் கொடுத்தார்.

(ஒரு இடைவேளை எடுத்துக் கொண்டு சற்றே மனநிலையை மாற்றிக் கொண்டு மீண்டும் தொடருங்கள்)

கமலாவிடம் வந்தேன், ஒரு தீண்டத்தகாதவன் கருவறைக்குள் நுழைவதுபோல் ஒரு தயக்கத்துடன். தோழியர் கூட்டத்திற்கு நடுவில் அவள் தலை குனிந்தபடி அமர்ந்திருந்தாள்.
"கமலா, இந்தா தீப்பட்டி. அத்த குடுத்தாங்க"
"இத்துனூன்டு இருந்துட்டு என்ன பேர் சொல்லிக் கூப்புடுற" என்று ஒருத்தி Adam-teasingஐ ஆரம்பித்து வைத்தாள்.
"ஏ மெரட்டாதீங்கடி, அவன் எங்க பெரிய மாமா பையன். சேகர். இப்பத்தான் மொதமொதன்னு எங்க வீட்டுக்கு வர்றாங்க"
தீப்பெட்டி கைமாறியது.
"என்ன சேகரண்ணே, நீங்கதான் இந்த கமலாவக் கட்டிக்கப் போறீங்களோ?"
"நல்ல ஜோடிடி. சரியான குட்டையன். நீ ஒரு ஒட்டகச்சிவிங்கி"
நான் கமலாவிடம் பேசிய ஒரு வாக்கியத்துடன் விருட்டென்று வந்துவிட்டேன். நான் ஏதாவது போட்டுக் கொடுக்குறேனா என்று தோழியர் பார்த்துக்கொண்டு இருந்தனர். மறுநாள் மாமன் விருந்து முடிந்தவுடன், அத்தை குடும்பம் நன்றாகப் பழக்கமாயிருந்தது, கமலாவைத்தவிர. சித்தப்பா விஷயம் முன்னேற்றமில்லை.

"ரெண்டு வருஷம் முன்னாடிதான் பொறந்தியா?" என்ற ஏக்கத்துடன் அத்தைமார் முத்தம் வாங்கி கொண்டு வீடு திரும்பினோம். என்னிடம் பேசிய-எனக்காகப் பரிந்து பேசிய முதல் பெண் என்ற முறையில் கமலா மறக்கப்படாமல் இருந்தாள். அந்த வருடம் நடந்த அத்தை ஊரின் திருவிழாவிற்கு அப்பா மட்டும் போய்வந்தார். என்னை கமலா ரொம்பா விசாரித்ததாகச் சொன்னார்.

பத்தாம்வகுப்பு லீவில் சும்மா இருந்த என்னை அந்த வருடம் அத்தை ஊர் திருவிழாவிற்கு தனியாக அனுப்பி வைத்தார். எனக்கு பலத்த வரவேற்பு. போனவுடனேயே சாப்பாடு. அன்று என்னோடு அப்பா இருந்ததால் பேச பயந்த கெழவிகள் எல்லாம் என்னைச் சுற்றி உட்கர்ந்துகொண்டு நொய்நொய் என்று கேள்வியாய்க் கேட்டுக் குடைந்தன. நான் கமலாவை மட்டும் எதிர்பாத்துக் கொண்டே இருந்தேன். வந்தே விட்டாள்.
"என்ன மாப்புள்ள. மாமா அக்கால்லாம் வல்லையா?"
"அவுக வல்லைங்கவும்தான் நான் வந்தேன்"
கிழவிகளுக்குப் புரியவில்லை. அவள் கண்களை புருவத்தில் சொருகிப் பார்த்தாள். நான் சோற்றைப் பார்த்தேன்.

திண்ணைக்கு வந்தேன். மீண்டும் கூட்டம். இருதயராசு வீதியில் விளையாடிகொண்டு இருந்தான். என்னைப் பார்த்தும் அவன் பலூன் கேட்கவில்லை. கமலா எல்லாரையும் விலக்கிவிட்டு, என்னோடு தொடை உரசி அமர்ந்தாள். இவளைப் பார்த்தால் கேட்க வேண்டும் என இத்தனை நாள் பொதித்து வைத்திருந்த ஒரு ஆசை இப்போதும் என் சிந்தனையில் இருந்தது. ஒருவேளை அவமானம் ஆகிவிட்டால்? அதனால் தனியாகக் கேட்கலாம் என்று காத்திருந்தேன்.
"பப்ளிக்ல எவ்வளவு மார்க் வரும்?"
"410 ஒட்டி"
"அடேயப்பா?"
"அப்புடின்னா? பாசுதானே" இது அத்தை.
"ஆமா அத்த. பாசுதான். என்ன கமலாவக் கடக்கிக் கூட்டிப்போகச் சொல்லுங்க"

அத்தையின் சம்மதத்துடன் இருவரும் நடந்தோம். வழியில் ஒரு கருவேளக்காடு. இதுதான் சரியான இடம். கேட்டு விடலாமா? சுற்றிப் பார்த்தேன். எங்கள் பின்னாலேயே ஒருவன் வந்துகொண்டிருந்தான்.
"டேய், இருதய ராசு இங்க என்னடா பண்ணுற"
"அண்ணே, பலூன் வாங்க காசு குடுண்ணே"
"அத அங்கேயே கேட்டிருக்கலாம்லே"
"அம்மா அடிக்கும்ணே"
அவன் கையில் 50 ரூபாய் திணித்துவிட்டு, கடை நோக்கி நடந்தோம், சித்தப்பா ஞாபகத்தில் பேச்சுவரவில்லை. ஆளுக்கொரு கலர் குடித்துவிட்டு, மீண்டும் நடந்தோம். ஏதோ சேசிக்கிட்டு வந்தோமே என்று யோசித்து,,,, "ஆமா, இதுதான் சரியான நேரம். கேட்டு விடலாம்"
"உங்கள நான் என்ன சொல்லிக் கூப்புடுறது?"
"பேர் சொல்லித்தானே கூப்புடுற. அப்புடியே கூப்புடு"
"பேர் சொல்லிக் கூப்புட ஒருமாதிரி இருக்கு. சரி கமலா. நான் ஒண்ணு கேப்பேன் தப்பா நினைக்கக் கூடாது"
"சொல்லுடா"
"மொதல்ல டா போடுறத நிறுத்து. பேர் சொல்லிக் கூப்புடு"
"சரிங்க சேகர் சார். சொல்லுங்க தப்பா நெனக்கல"
"பக்கத்துல வா"
"இது போதுமா"
"மேட்டுல நிக்காம, கொஞ்சம் கீழ எறங்கி, இன்னும் பக்கத்துல வா"
"போதுமா"
"தோளோட தோள ஒரசி நில்லு"
"போதுமா"
"அப்பா, போய் ஓன் கூட்டாளிங்கக் கிட்ட சொல்லு. நான் குட்ட இல்லன்னு. ரெண்ருபேரும் ஒரே ஒயரம்தான்"

வீட்டுக்குச் சந்தோஷமாக வந்தேன்-வந்தோம். மீண்டும் அதே திண்ணை, அதே கிழவிகள் கூட்டம். ஒரு பெருசு ஆரம்பித்தது:
"பெரியவரு மகனுக்கு ரொம்ப தெகிரியந்தான்"
"ஏன்"
"ஒரு வயசுப் புள்ளையோட சுத்திட்டுவர்ற"
"ஒனக்கு ஒரு வயசா கமலா?"
அவள் மட்டும் சிரித்தாள். அவளே கேட்டாள்.
"ஏன் கெழவி, மாமா பையந்தானே கூடப்போனா என்ன?"
பெரியவங்களக் கெழவின்னு மரியாதை இல்லாமல் கூப்பிடலாம் போல!
"இல்ல அவருக்கு ரெண்டு வயசு கொறச்சு. ஒத்து வராது. ஊரு தப்பா பேசும்"
சின்னவங்கள அவருன்னு மரியாத போட்டுக் கூப்பிடலாம் போல!
பூட்டோவ விட அவரு பொண்டாட்டி 15 வயசு மூத்தவங்கன்னு சொல்லி, ஜோக் அடிக்கலாம்னு பார்த்தேன். பூட்டோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று விட்டுவிட்டேன்.

"இவுக அம்மாவ நான் அக்கான்னு கூப்புடுறேன். இவன் எனக்கு அக்கா பையன்", என்றாள் கமலா. அவள் தொடைமேல் முதல் முறையாகக் கைவைத்தேன். மறுகையை வாயில் வைத்துக் கொண்டு, தலை குனிந்து, குருகுல மாணவன் போல, காதோரமாய்,
"சரிங்க சித்தி"
"நீ கமலான்னே கூப்புடுடா"
"இல்ல சித்திதான், சித்தி"
"சித்தின்னா அர்த்தம் வேற. சரி அத்தாச்சின்னு கூப்புடு"
"இல்ல சித்திதான், சித்தி"
நான் அவளை, இல்லை அவங்களைச் சித்தின்னு குப்புட்டது எங்க ரெண்டு பேருக்கு மட்டும்தான் தெரியும்.

திருவிழா முடியும்வரை நாங்கள் இருவரும், ஒன்றாகவே திரிந்தோம். நான் "சித்தி" எனக் கூப்பிட்டுத் திரிவதை யாரும் கேட்டிருக்க வாய்ப்பில்லை. நான் கிளம்பும்போது, தூங்கிக்கொண்டு இருந்ததால், போர்வை விலக்கி, "போய்ட்டு வர்றேன் சித்தி" எனக் காதில் ரகசியம் சொல்லிவிட்டு, கையில் திணிக்கப்பட்ட 100ரூபாயுன் திரும்பினேன். அது அப்படியே இருதயராசு கைக்கு இடம் மாறியது. ஏதோ விட்டுச் செல்வதுபோல் மனம் பதபதைத்தது. பஸ் ஏறும்போதுதான் ஞாபகம் வந்தது, வேகமாய் ஓடிவந்து வாங்கிக் கொண்டு திரும்பினேன், அத்தைமார் முத்தம்.

(ஒரு இடைவேளை எடுத்துக் கொண்டு சற்றே மனநிலையை மாற்றிக் கொண்டு மீண்டும் தொடருங்கள்)

பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்ணுடன், இரண்டு வருடங்கள் திருச்சியில் படிப்பு. மீண்டும் நல்ல மதிப்பெண். திருச்சியிலேயே பொறியியல் படிப்பு. வாழ்க்கை திருச்சியிலேயே அமைந்துவிட்டதால், அதிகம் வீட்டுக்குச் செல்வதில்லை. இடையில் எதர்த்தமாக ஒருமுறை அப்பாவுடன் சித்தி பேசிக்கொண்டு இருந்தபோது, நான் பக்கத்தில் இருந்தும், சித்தி என்னுடன் பேச விரும்பவில்லை.

நான் பொறியியல் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது, ஒருமுறை வீட்டுக்குத் திரும்பும்போது, சித்தி ஒருவருடன் பக்கத்தில் அமர்ந்து கொண்டு, பேருந்தில் போய்க்கொண்டு இருந்தாள். என்னைப் பார்த்ததும், அவரை எழுந்திருக்கச் சொல்லி, என்னை அமரச் செய்தாள். அவர் முன்னால் சென்று ஒரு சீட்டில் அமர்ந்து கொண்டார். நான் "ஏன் என்னிடம் போனில் பேசுவதில்லை?" என சித்தியைத் திட்டினேன். அவள் நான் எதிர்பார்க்க முடியாதவகையில், ஓர் உண்மைக்கதை சொன்னாள்.

திருவிழா முடிந்தவுடன், எங்கள் சொந்தக்காரர்களில் யாரோ ஒருவன் எங்க அப்பாவிடம் நாங்கள் சுற்றியதைப்ப்ற்றி தவறாகப் போட்டுக் கொடுக்க, எங்க அப்பா அத்தை வீட்டுக்குப் போய், "நல்லா படிக்கிற ஏன் பையன வளச்சுப் போடலாம்னு பாக்கிறீங்களா? இதுக்குத்தான் சொந்தம் கொண்டாடிக்கிட்டு வந்தீங்களா?" என்று காட்டுக்கத்து கத்த, மீண்டும் சொந்தம் விட்டுப்போகக் கூடாது என அத்தை சமாதானம் பண்ணி, அவசர அவசரமாய் தனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கப் பட்டதாய்ச் சொன்னாள். பக்கத்தில் இருந்தவர்தான் கணவன் என்றும், ரெண்டு மாதம் ஆகிவிட்டது என்றும் சொன்னாள்.
"அழாம சொல்லுங்க சித்தி, இது உண்மையா?"
"உண்மைதான். இந்தக் கதையும், சித்தி என்கிற உறவும். சித்தின்னு நீ கூப்புடுறது எனக்கு மாதிரி எல்லாருக்கும் தெரிஞ்சிருந்தா இந்தப் பிரச்சினையே இல்ல"
"இது அவருக்குத் தெரியுமா?"
"நான் சொன்னதில்ல. அவரும் கேட்டதில்ல. ஆனா கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்"
நான் பஸ்ஸைவிட்டு இறங்கிவிட்டேன், ஏதோ ஒரு இடத்தில்.

அப்பாவிடம் இரவு முழுவதும் சண்டை. அவர் பதிலே பேசாமல் தலை குனிந்து நின்றார். நம்பிக்கை இல்லாத அவர்களிடம் பேசவே பிடிக்கவில்லை. ஆனால் ஊரை நம்பும் பெற்றோர் அவர்கள் எதிர்பார்ப்பை எல்லாம் படிப்பிலும், நடத்தையிலும் பூர்த்தி பண்ணி வைக்கும் தன் மகன் மீது நம்பிக்கை வைக்கவில்லையே ஏன்? என்று ஒரே ஏக்கம்தான். எல்லா பெற்றவர்களுக்கும் வரும் ஒரு குருட்டுபாசம் அது என்பது எப்போதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதன்பிறகு, சித்திக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருப்பதாக அப்பா சொன்னார். நான் கண்டுகொள்ளவில்லை.

நான் கல்லூரி முடிக்கப் போகும் நேரத்தில், ஒருநாள் வீட்டிற்கு வந்திருந்தேன். கடைவீதியில், நடந்து போய்க்கொண்டு இருக்கும்போது, சித்தி ஒரு குழந்தையுடன் சோர்ந்துபோய் அமர்ந்திருந்தாள்.
"சித்தி, என்ன இங்கே? இது யாரு பாப்பாவா? கொஞ்சம் இருங்க வர்றேன்"
பாப்பாவின் கையில் மாட்டிவிட்டேன், கடன் சொல்லி வாங்கி வந்த வளையல்களை.
"சொல்லுங்க. ஏன் எளச்சிப்போயிட்டீங்க சித்தி?"
"கையில பொறப்பாடு வந்திருக்கு. மந்திருக்க. ஒங்க சித்தப்பா கூட்டிட்டு வந்தாரு"
கையை நீட்டினாள். நான் கையைப் பற்றி இங்கே சொல்ல விரும்பவில்லை (கரு திசைமாறிவிடலாம்).
"சித்தப்பாவா?"
"ஏன் புருஷந்தான். அதுக்குத்தான் அப்பவே சொன்னேன், அத்தாச்சின்னு கூப்புடச் சொல்லி..."
இருவரும் சிரித்தோம். அவர் வந்தார்.
"வாங்க, தம்பி. ரொம்ப நேரமா ஆட்டோ கேக்குறேன். தூரம்னு யாரும் வரமாட்டீங்கிறாங்க. நீங்க கொஞ்சம் உதவி பண்ணுங்க"
"அப்பாட்ட வண்டி வாங்கிட்டு வர்றேன்"
"எனக்குன்னு கேக்காத. ஓன் பிரண்டுக்குன்னு கேளு" என்றாள் சித்தி.
நான் "கமலாவுக்கு முடியல. வண்டி வேணும்னு" எடுத்துட்டு வந்தேன்.

கிழம்பிய என்னை அவர்,
"எனக்கு மனசு சரியில்ல. நீங்களே ஓட்டுங்க"
"சரி"
நான் ஸ்டார்ட் செய்துவிட்டேன். இருவரும் ஏறாமல் நின்றனர்.
"நீ ஒக்காரு கமலா"
"இல்ல"
ஏதோ சித்தி அவர் காதில் சொன்னார்.
"சீ. நீ ஏன் பொண்டாட்டிடீ. அவன் ஓன் தம்பி மாதிரி. ஒக்கரு" அவர்தான்.
"எறங்கு கீழ. ஒரு பக்கம் ஒக்கந்தா பேலன்ஸ் பண்ண முடியாது. ரெண்டு பக்கம் கால் போட்டு ஒக்காரு" அவர்தான்.
மறுத்த அவளை எப்படியோ இருபக்கம் கால்போட்டு அமரச் செய்தார். அவள் என்னை முடிந்தவரை தொடாமல் அமர்ந்தாள், தொடைமேல் கைபோட்ட அதே கமலா சித்திதான். மனதைக் கல்லாக்கி ரோட்டின்மேல் கண்போட்டு, எங்கள் உறவை யார் தப்பாய் புரிந்து கொண்டால் என்ன? சித்தியின் கணவர் என்னைத் தெய்வமாகப் பார்க்கிறாரே அது போதும். அவர்களை 30 கி.மீ. தள்ளி ஒரு கிராமத்தில் விட்டுவிட்டு, "மந்திரிக்கிறது எல்லாம் சரிப்படாது. ஆஸ்பத்திரி போங்க" என்று சொல்லிவிட்டு, சித்தி என்று சொல்லவந்த வாயைக் கட்டுப்படுத்திவிட்டு,
"போய்ட்டு வர்றேங்க" என்று சொல்லிவிட்டு, கிளம்பினேன்.

பின் நானும் படிப்பில் மூழ்கிவிட்டேன். இரண்டு வாரங்கள் கழித்து, சித்தியும் இறந்து போனாள். எனக்கு சித்தியின் மரணம், தகனம் முடிந்து மூன்று நாட்கள் கழித்தே சொல்லப்பட்டது. இந்த முறை நான் வாதம் செய்யவில்லை. இதே மனநிலையுடன் இருக்கும்வரை நான் வாதம் செய்யப்போவதுமில்லை.

எல்லோர் முன்னிலையிலும் "சித்தி" என்று இப்போது கூப்பிடத் தயார்; சித்தி இல்லை. சித்தியின் மகள், பாப்பா இருக்கிறாள்; நான் வளையல் போட்டால், உலகத்திற்கு அது என்ன அர்த்தமோ? அத்தை இருக்கிறாள். அதே பழைய நம்பிக்கையுடன் கிடைக்குமா, மீண்டும் ஒருமுறை ஒரு அத்தைமார் முத்தம்?

-ஞானசேகர்

8 comments:

Anonymous said...

மனசை உருக்குவது போல இருக்குங்க.

யாத்ரீகன் said...

ஹைய்யோ.. ரொம்ப கஷ்டமா போச்சு படிச்சு முடிச்சதும்... :-(

-
செந்தில்/Senthil

J S Gnanasekar said...

எனது இந்த இரண்டாவது சிறுகதை முயற்சிக்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு, மிக்க நன்றிகள். மீண்டும் எனது அடுத்த சிறுகதையில், சொல்ல முடியாமல் தவிக்கும் இதுபோன்ற தனிமனித உணர்வுகளை உங்கள் முன் வைக்கிறேன். அடிக்கடி வருகை தாருங்கள்.

ஹலோ, இது ஒரு கற்பனை கதைங்க. களம் மட்டும்தான் உண்மை. யாரும் என்னைப் பரிதாபமாகப் பார்க்காதீர்கள்!

-ஞானசேகர்

நாமக்கல் சிபி said...

நல்ல சிறுகதை ஞானசேகர் சார்!
சொல்ல முடியாத உணர்வுகளின் தவிப்பு இப்படித்தான் இருக்கும்.


(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

viki said...

this is very very nice and super story touch to my heard

viki said...

this story is very very super touch my heard

Unknown said...

this stores is very differnt

Unknown said...

நண்பா கண்டல் கண்ணீர் வராத்துதா குறை
உங்கள் அடுத்த கதைக்காக காத்துக்கிட்டுஇருப்போன்