புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Thursday, August 20, 2009

தாய்மாமன் கதை

ஆடு கனவுகண்டா
அருவா அறியாது

புழுவெல்லாம் கனவுகண்டா
கொழுவுக்குப் புரியாது

எப்படியோ பிரிவானோம்
இடிவிழுந்த ஓடானோம்

- வைரமுத்து (தோழிமார் கதை - பெய்யெனப் பெய்யும் மழை)


(தனது சகோதரியின் தாயிழந்த பிள்ளைகளுக்காகக் கல்யாணம் தவிர்த்து வாழும் மகாத்மாக்களுக்காக - அங்கிள் மாம்ஸ் காலத்தில்கூட மாமன் சித்தப்பன் வித்தியாசப்படுத்தும் உண்மைத் தமிழர்களுக்காக - பருத்திவீரனின் முடிவுக்குப் பின் சித்தப்புவின் எதிர்காலம் சிந்தித்தவர்களுக்காக,)

வயலோரம் வளந்த மலை
வானரமும் வாழும் மலை
இடுக்கெல்லாம் அடைகட்டி
தேனடையும் குன்னமலை.

குன்னமலை முகத்தில்
வெயில் பொசுக்கும் ஒரு முகட்டில்
ரயில் பாத்த சிறுவயசு
மகனே நெனவிருக்கா?

ஒருகை முட்டுதந்து
அக்காவ நான் நிறுத்த

அஞ்சு வெரலும்
அடுத்தடுத்து கொடுத்துனக்குப்
பால் அழுக நான் நிறுத்த

போலீசுக்குப் பயந்துபோய்
என் அழுக நான் நிறுத்த

எறப்பும் பொறப்பும்
எங் கூடவந்த
சாமத்துக் கார்சவாரி
மருமகனே நெனவிருக்கா?

அம்மா போத்து
நான் படுக்க
பாழாப் போன
கொப்பளமும் தான்வலிக்க
அம்மாவப் போலநீயி
அங்கமெல்லாம் கழுவுனியே
அய்யா நெனவிருக்கா?

காலைக்கடன் தொடச்ச கல்லப்
பொதருக்குள்ள நாமெறிய
கலவிய ரெண்டு பாம்பு
சர்ர்ர்ருன்னு சீறிவர

டவுசர விட்டுப்புட்டு
தல தெறிக்க நீயோட
கைலிய கழட்டிப்புட்டு
காலால நான் பறக்க

செத்தபாம்பு சட்டைதுக்கி
வீராப்பா வீதியில
உலா போனோம் நெனவிருக்கா?

ஒண்ணா திரிஞ்சோம்
ஒரே துண்டில் துயில் கண்டோம்
ஒண்ணாவே இருக்க
ரெண்டுபேரும் யோசிச்சோம்

மகளப் பெத்த
வாழாவெட்டி நாங்கட்டி
மகள நீ கட்டி
மாமன் மருமகனா
ஒரேவீட்டில் வாழச்
சம்மதிச்சோம் நெனவிருக்கா?

பத்தாவது பீசாகி
கல்லொடைக்க நான்போக
வாத்தியார அடிச்சிப்புட்டு
வீட்டவிட்டு நீ ஓட

சோசியஞ் சொன்ன
சாமியெல்லாம் தேடிப்போனேன்
ஏஞ் சாமி நெனவிருக்கா?

தாராபுரம் தாண்டிப்போயி
தாரங்கட்டி நீதிரும்ப
ஆசிர்வாதம் கேக்கயில
ஆயுசுக்கும் மொததடவ
மாமானியே நெனவிருக்கா?

திருமதியக் கூட்டிக்கிட்டு
திருப்பூரு நீபோக
வான்மதியும் புடிக்காம
மதியிழந்து நான்போக

ஓங்குடும்பம் ஓம்புள்ள
ஓம்பொழப்பு ஒன்னோட
எங்கக்கா அவபுள்ள
பழந்நெனப்பு என்னோட.

நாளும் நழுவிடுச்சு
நரம்பெல்லாம் சுண்டிருச்சு
உன் தோளேறி தேர்பாக்க
மகன்கூட வளந்திருச்சு

வயலோரம் வளந்த மலை
வானரமும் வாழ்ந்த மலை
டவுன்காரன் வீடுகட்ட
லாரியேறிப் போயிருச்சு!

- ஞானசேகர்
(அம்மா என்று இருமுறை சொல்லி மாமா என்ற வார்த்தையைப் பழகியவன், உங்களில் பலரைப் போல)

4 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

அதிகம் பரிச்சயமில்லாத உணர்வு. இருந்தும் ஏதோ செய்கிறது. சந்தத்தில் அமைத்த விதம் நன்று.

-ப்ரியமுடன்
சேரல்

நட்புடன் ஜமால் said...

தாயோடு சேர்த்து சொல்லும் ஒரே பெயர்

தாய் மாமன்.


நானும் நேசிக்கும் ஒரு ஜீவன்.

Bee'morgan said...

நன்று.. கிராமத்து மணம் மாறாத நடை அழகு.. :)
--
வழக்கம்போல் பல இடங்கள் திரும்பவும் வாசிக்க அழைக்கின்றன.

சத்ரியன் said...

//நாளும் நழுவிடுச்சு
நரம்பெல்லாம் சுண்டிருச்சு
உன் தோளேறி தேர்பாக்க
மகன்கூட வளந்திருச்சு...//

ஞானசேகர்,

அற்புதமய்யா...! கழுத்து வலிக்க திரும்பிப் பார்த்தேன்...கடந்த நாட்களையும்,இடறிய வாழ்க்கையையும்!