புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Wednesday, August 17, 2011

மனையடி சரித்திரம்

மிதக்கும் பிணங்கள்
ஆலைக் கழிவுகள்
விலக்கிய கங்கை
தேடிப் பார்க்கிறாள்
பகீரதன் பிணத்தை.
- தி.பரமேஸ்வரி ('எனக்கான வெளிச்சம்' நூலிலிருந்து)
(http://tparameshwari.blogspot.com/)


வருடம் 2010.
சோழையன் என்ற 60 வயது மதிக்கத்தக்க அந்த முதியவர் களைக்கொத்தியுடன் தனது மிதிவண்டியில் ஊரைவிட்டுப் புறப்பட்டபோது வியாழக்கிழமை காலை 6 மணி. புதுக்கோட்டை - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் ஏறி மச்சுவாடி - ந‌ரிமேடு - அடப்பன்குளம் - திலகர் திடல் - பால்பண்ணை வழியாக புதுகை மாவட்ட ஆட்சியர் அலுவலக ஓரமாகவே வந்து நகரத்தின் கடைசியில் தண்டவாளங்கள் குறுக்கிட மிதிவண்டியைவிட்டு இறங்கும்போது 7 மணி இருக்கும். மூன்றாள் மட்டத்தில் இருக்கும் அந்த ரெயில்பாதையை மிதிவண்டியைத் தூக்கிக்கொண்டு கடந்து மீண்டும் ஏறி அமர்ந்தால், அழுத்தவே தேவையில்லாமல், சபிக்கப்பட்டதுபோல் வெறும் தரிசுநிலமாக முடிவற்றுக் காட்சியளிக்கும் பரந்த வெளியில் தனியனாய் நிற்கும் ஒரு வேப்பமரத்தடியில் வந்துசேரும்.

வேப்பமரத்தின் உச்சந்தலை வெயில் பொழுதில், நிழல்படும் இடமெல்லாம் சோழையனுக்குச் சொந்தமானதென கிட்டத்தட்ட நிலப்பரப்பு சொல்லலாம். புதுகை நகரின் வடகிழக்கிலிருந்து தென்மேற்கிலிருக்கும் அந்த மரமுள்ள இடத்திற்குப் புரட்டாசி 14ம் நாள் அவர் வருவதில் ஒரு சோகம் உண்டு. 15 வயதில் அந்த வேப்பமரத்தைச் சிறுகன்றாகக் கண்டெடுத்ததும் அய்யாவை விசக்கடிக்குப் பறிகொடுத்ததும் ஒரு புரட்டாசி 14ல் ஒருசேர நடந்திருந்தன. அதே காலகட்டத்தில் மொத்த ஊரும் பஞ்சம் பிழைக்க தூரத்தில் வெவ்வேறு இடங்களில் சிதறிப் போனார்கள். சோழையன் மட்டும் பக்கத்திலேயே பிழைப்பு தேடிக்கொண்டார். வறண்ட பூமியில் சுயம்புவாய் நிமிர்ந்து நிற்கும் அந்த வேம்பு, சோழையனைப் பொறுத்தவரை அய்யாவின் மறுபிறப்பு.

வழக்கம்போல் கோவண‌ உடைக்கு மாறிக்கொண்டார். மரத்தடியில் அமர்ந்து பழைய நினைவுகளைக் கொஞ்சம் அசைபோட்டார். இத்தனை காலமாகியும் இந்நிலத்தை நன்செய் ஆக்கிவிடமுடியாத தன் இயலாமையை எண்ணிக்கொண்டே தன் நிலத்தின் ஒரு மூலையிலிருந்து களைக்கொத்தியில் புற்களைச் செதுக்க ஆரம்பித்தார். அமர்ந்துகொண்டே களையெடுக்க வசதியாக, கொத்திக்கு நீளவாக்கில் இருக்கும் கைப்பிடியின் ஒருமுனையை வலதுகையாலும், கொத்தியில் செருகப்பட்டிருக்கும் இன்னொரு முனைக்கருகில் இடதுகையாலும் பிடித்துக்கொண்டே களை செதுக்கிக்கொண்டு நகர்ந்துபோய்க் கொண்டிருந்தார்.

ச்சரக்க் ச்சரக்க் ச்சரக்க் என்ற களைக்கொத்தியின் ஒழுங்கான தாளத்தில் பழைய நினைவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக‌ மறந்துகொண்டிருந்த பொழுதில், தூரத்தில் ரெயில்நிலைய திசையில் இருந்து கார் ஒன்று சர்ரென்று வந்து, நாணல் மண்டிய பக்கத்து நிலத்தில் நின்றது. இரண்டு பேன்ட்சட்டைக்காரர்களும் ஒரு வேட்டிக்காரரும் நிழலுக்காக வேப்பமரக் குடைகீழ் வந்தனர். வேட்டிக்காரர் தொடக்கவுரையாற்றினார்.
"என்னய்யா சோழா, இங்கத்தான் இருக்கியா? ரெம்ப‌ சவரியமாப் போச்சுப் போ. களக்கட்டெ வெச்சுக்கிட்டு கோவணத்தோட என்னய்யா பண்ணிக்கிட்டிருக்கெ? வயசான காலத்துல கண்ணுமுன்னு தெரியாம எசக்குப் புசக்கா எங்கையாவது..."
பேன்ட்சட்டைக்காரர்களை வழிநடத்திவரும் அந்த 40 மதிக்கத்தக்க ஆசாமியைச் சோழையனுக்குச் சட்டென அடையாளம் தெரியவில்லை.

அருகில் வந்ததும் சிறிது ஞாபகம் வந்தது. நிஜாம் நகர். வீடுமனைகள் வாங்க விற்க அணுகவும். தொடர்புக்கு... அதுவரைக்கும் சென்ற‌ ஞாபகத்தால், அதன்பிறகிருந்த பத்திலக்க எண்ணையும் பெயரையும் கண்டெடுக்க முடியவில்லை.
"வாங்க துப்பாக்கி. சடக்குன்னு ஆள்தெரியல"
"இதுக்கு இவ்ளோ நேரமா? கிழிஞ்சது கிருஷ்ணகிரி"
துப்பாக்கி என்ற பதத்துக்கும் வள்ளுவனின் 12வது குறளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தாத்தாவுடன் ஒட்டியே வந்த பரம்பரைச் சொத்தில் ஒரு கம்பீரத்துக்காக எடுத்துக்கொண்ட புனைப்பெயர்தான், இந்தப் பொருளாகுபெயர். சுடப்பட்ட குண்டு வேகத்தில் வேலை முடியும் என்ற ராசியில், சமீப காலங்களில் பண்பாகுபெயரும்கூட‌. புல் செதுக்கியிருந்த பகுதியொன்றில், துண்டைப்போட்டு துப்பாக்கி உட்கார்ந்தார். ஒரு பேன்ட்சட்டை துண்டைப் பகிர்ந்துகொண்டார். இன்னொரு பேன்ட்சட்டை தனியே வெறுந்தரையில் அமர்ந்துகொண்டார். கார் ஓட்டுனர் காரிலேயே படுத்துக்கொண்டார்.

துப்பாக்கி பேசினார்.
"இந்த நெலத்தெ யாருக்குமே கொடுக்காமெ, பில்லு செதுக்கிப் பில்லு செதுக்கி, சோடிச்சுச் சிங்காரிச்சு என்னதான்யா பண்ணப்போறெ?"
ஒரு சிறு நகைப்புக்குப் பிறகு ச்சரக்க் ச்சரக்க் ச்சரக்க் தொடர்ந்தது.
"இந்த ஏரியாவுல ஒன்னோடது போக சொச்ச எடமெல்லாம் இந்தத் தம்பியோடது. மெட்ராஸ்ல டாக்டர்" என்று சொல்லி, தன் துண்டைப் பகிர்ந்துகொண்டிருக்கும் டாக்டர் சாரின் நிலஎல்லைகளை வரையறுத்துச் சொன்னார்.
"சோழா, நீ பேப்பர்லாம் படிப்பியா? விழுப்புரத்துல இருந்து மெட்ராஸ் வரைக்கும் ரோட்டோரத்து வெள்ளாமெ நெலமெல்லாம் பிளாட் போட்டாச்சு. நீமட்டுந்தான்யா இந்தப் பொட்டக் காட்ட கொடங்கையிலேயே வெச்சுக்கிட்டுத் திரியுறே. எத்தனக் குழியா இருக்கும்?"
"குழின்னா?" இது டாக்டர் சார்.
தரையில் அமர்ந்துகொண்ட இன்னொரு பேன்ட்சட்டைக்காரர் பேசினார்.
"பாரதியாரு பொறந்த தெக்கிச்சீமையிலே காணிக்கணக்குமாதிரி, இங்கெல்லாம் குழிக்கணக்கு. 100 குழி ஒரு காணி. புதுக்கோட்டே பக்கம் கிட்டத்தட்ட 232 கால் குழி ஒரு சென்ட்டு. தஞ்சாவூர் பக்கம்லாம் வேற கணக்கு. மா வேலி போகம் நெடுகெ இன்னும் நெறையா இருக்கு. ஒரு ஆளு ஒரு நாளைக்கி நாத்து நடமுடிஞ்ச எடத்தளவுக்கு நெடுகென்னு நம்ம முன்னோர்க பேர்வெச்சிருக்காங்க. ஓவ்வொரு ஏரியாவுலையும் பொம்பளைங்க நடவு வேகத்தப் பொறுத்து இதுவும் மாறும். எங்க பக்கம்லாம் 16 அரை சென்ட்டு ஒரு நெடுகெ"
யாருக்கும் புரியவில்லை.

"செவனேன்னு இந்த எடத்தெ தம்பிக்கிட்ட கொடுத்திட்டியன்னா, தம்பி வாடகெ வீடுக கட்டிவிட்டு, ஒனக்கும் ஒரு வீடு கொடுத்துடுவாரு. அதுல வர்ற வருமானம் போதாதா? ராசா மாதிரி கால்மேல கால்போட்டுக்கிட்டு..."
"அட ஏங்கண்ணே..." என்று தனது விருப்பமின்மையைக் காட்டிக்கொண்டார் டாக்டர் சார்.
அந்த வேப்பமரம் நடும்போது சோழையனை மண்ணுளிப்பாம்பு நக்கி, மருத்துவரிடம் போன இடத்தில், அங்கிருந்த நல்லபாம்பு சீண்டி தன் அய்யா இறந்துபோன கதை சொன்னார். சிகிச்சையில் சூடுபோடப்பட்ட காயத்தின் தழும்பைக் கெண்டைக்காலில் காட்டினார். சமீபத்தில் டாடியைப் பறிகொடுத்து பூர்வீகச் சொத்தை விற்க வந்திருக்கும் டாக்டர் சாருக்குச் சோழையன் மேல் கொஞ்சம் அனுதாபம் தோன்றியது.

"மண்ணுளிப்பாம்பு ராசியோ என்னவோ, சோழாவுக்குப் புடிவாதம் அதிகம். என்ன அடிச்சாலும் அது சாகாது. இவரு என்னா சொன்னாலும் கேக்குறதில்ல"
தனது நகைச்சுவை யாராலும் அங்கீகரிக்கப்படாததால், துப்பாக்கி குறி மாற்றினார்.
"சரி சோழா, வெட்டிக்கதெய விட்டுட்டு நம்ம விசயத்துக்கு வருவோம். இந்த ஏரியாவுல நிலத்தடி நீரோட்டம் எப்புடி?"
சப்புக்கொட்டிவிட்டு, இயற்கை நீர்வளம் இல்லாத புதுக்கோட்டை இராமநாதபுரம் ஜில்லாக்களின் தண்ணீர்ப்பஞ்சத்தை மனிதர்கள் உண்டாக்கிய ஏரிகளின் வரலாறு சொல்லியும், காவிரி தண்ணீர் குழாய்கள்மூலம் திருச்சியிலிருந்து வருவதையும் சொன்னார்.
"ரெயில்வே டேசன் வழியாத்தானே வந்தீங்க? நிக்கிற ட்ரெயினுல சனங்கெ கக்கூசுல தண்ணிப்புடிச்ச கொடுமையெல்லாம் ஏன் கண்ணால பாத்திருக்கேன்".

குழிக்கணக்கு சொல்லிவிட்டு அமைதியாய் இருந்த பேன்ட்சட்டைக்காரர் சொன்னார்.
"சோளா அய்யா சொல்றதும் சரிதான். இது என்னோட ரிடயர்மென்ட் வருசம். கடெய்சி கால‌த்துல சொந்த மண்ணுல வேல பாக்கலாம்னு ட்ரான்ஸ்ஃபர் வாங்கியாந்தேன். இதுவரைக்கும் நான் டெஸ்ட்டுக்குப் போன எடமெல்லாம் பெய்யிலு. ரிடயர் ஆவுறதுக்குள்ள ஒரு டெஸ்டுலயாவது தண்ணி கண்டுபுடிச்சாத்தான் என் சர்வீஸ் சாந்தியடையும். சரி நான்போயி ஏன் வேலைய ஆரம்பிக்கிறேன்" என்று வட்டவடிவக் கருவியுடன் ஆயத்தமானார். அவருக்கு அத்து காண்பிக்க துப்பாக்கி உடன் சென்றார்.

டாக்டர் சாரும் சோழையனும் அவர்களைப் பார்த்துகொண்டே பேசிக்கொண்டார்கள்.
"இந்த சார் வாட்டர் போர்டுல அரசு அதிகாரி. விஞ்ஞான முறைப்படி கருவியெல்லாம் வெச்சு நீரோட்டம் பாக்குறவரு. இதுமட்டும் இல்லாம நம்ம ஊருல இருக்குற சில கிராமத்து மொறைக்காரங்களையும் வரச்சொல்லி இருக்கேன். அவங்களுக்காகத்தான் வெயிட்டிங்"
"தரைக்கடியில தண்ணி கண்டுபுடிக்க எத்தனெ மொறைகள் இருக்கோ அத்தனையும் இந்த ஏரியா மக்களுக்கு அத்துப்புடி"
சிறுநகை பூத்துவிட்டு டாக்டர் சார் சொன்னார்.
"இன்னக்கி நெலமக்கி நெலந்தானே கிராக்கி. வித்துப்புடலாம்னு துப்பாக்கி சொன்னாரு. இங்கெ வாங்கி அங்கெ நெலத்தெ விக்கிற அவரு அப்புடித்தான் யோசனெ சொல்லுவாரு. ரெண்டு வருசத்துல பத்து லெட்சம் காசு பாத்துட்டாராம்"
சோழையன் ஒருமுறை நிமிர்ந்து பார்த்தார்.
"உண்மெதான். டாடி ஞாபகமா இங்கெ ஏதாவது அபார்ட்மென்ட் மாதிரி கட்டலாம்னு அய்டியா. தண்ணிதான் இப்ப ஒரே பிரச்சனெ. காவிரித்தண்ணியெ ஊருக்குள்ள இருந்து கொண்டாரலாம்னா இது புதுக்கோட்ட எல்லையில வராதாம். பக்கத்தூர் பஞ்சாயத்துல வருது. சரி அப்புடியே கொண்டாரலாம்னு பாத்தா ரெயில்வே லயனெக் கிராஸ் பண்ணி தண்ணி கொழாய் போட்றதெல்லாம் சுலுவு இல்ல‌. அதான் த‌ண்ணி இருக்கான்னு பாக்கலாம்னு முடிவெடுத்துட்டேன். தண்ணி இருந்தா டாடி ஆசீர்வாதம்னு ஏத்துக்குறது. இல்ல வித்துர்றது".
தன் தகப்பனுடன் தனக்கிருக்கும் வேம்புபோல், டாக்டர் சாருக்கும் தண்ணீர் மூலம் பூர்வீகம் தொடர வேண்டுமென சோழையன் நினைத்துக் கொண்டார். ச்சரக்க் ச்சரக்க் நிறுத்திவிட்டு புற்களை ஓரிடத்தில் குவிக்க ஆரம்பித்தார்.

சிறுது நேரத்தில் இன்னொரு காரில், மூன்றுபேர் வந்திறங்கினார்கள். பல்வேறு முறைகளில் நீரோட்டம் பார்ப்பவர்கள். எலுமிச்சம்பழம். வேப்பங்குச்சி. தேங்காய். அந்தோனியார் தகடில் பார்ப்பவர் கடைசி நேரத்தில் வரமுடியாத‌தால்தான் இவ்வளவு தாமதம். இருந்தாலும் நான்கு முறைகளில் சோதிப்பதில் டாக்டர் சாருக்கு மகிழ்ச்சிதான். இம்மும்மூர்த்திகளும் களம் புக்கினர். இந்தக் காரின் ஓட்டுனரும் காரிலேயே படுத்துக்கொண்டார். கோவணத்துடன் சோழையனும் தூக்கிவிடப்பட்ட சட்டைக்காலருடன் டாக்டர் சாரும் வேப்பமர நிழலிலிருந்தே அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 11 மணியளவில் சாந்தியடையாமல் சர்வீஸ் முடிந்துவிடும் சோகத்தில், அதிகாரி நிழல் திரும்பினார். "கஷ்டம் தம்பி" என்பதுதவிர வேறேதும் பேசாமல் தனது கருவியையும் கைக்கடிகாரத்தையும் செல்பேசியையும் கைப்பைக்குள் வைத்துவிட்டுத் தூங்க ஆரம்பித்தார். ப‌ன்னிரண்டு மணிக்குள் மும்மூர்த்திகளும் கீழுதடு பிதுக்கித் திரும்பினர்.

முடிகட்டி மலையிழுக்க வந்திருந்த டாக்டர் சார் முடிபோனாலும் மலைவந்தாலும் கொண்டாடுவதற்கு ஏற்கனவே தயாராக வந்திருந்தார். காரிலிருந்து மதுவகைகள் எடுத்துவரப்பட்டன. தான் கோயில்போல் மதிக்கும் இடத்தில் இப்படி நடப்பது சோழையனுக்கு என்னவோபோல் இருந்தாலும் இருக்கட்டும் என்று காட்டிக்கொள்ளவில்லை. அன்று முழு உண்ணாநோன்பு அனுசரிக்கும் சோழையனையும் வேலை நேரத்தில் குடிக்காத ஒரு கார் ஓட்டுனரையும் தவிர மற்ற 7 பேரும் மதுவருந்தத் தயாரானார்கள். வட்டமிட்டு உண்ணும் தர்மப்படி மதுவைச் சமபங்கிட்டு கைக்கெட்டியதை வாய்க்குக் கொண்டுபோகும் சுபதருணத்தில் அங்கிருக்கும் 9 பேரும் என்றுமே பார்த்திராத‌ ஒரு சம்பவம் நடந்தது!

தூரத்தில் என்றோ ஒருநாள் குளமாக இருந்து, கொட்டைச்செடிகள் மண்டி வாய்பிளந்து கிடக்கும் நிலத்திலிருந்து ஒரு பெண்ணின் அலறல் சத்தம்! எடுத்த மதுவை ஒரு மாதுவிற்காகத் துறந்துவிட்டு மும்மூர்த்திகளும் அங்கு ஓடினார்கள். கொட்டைச்செடிகளின் புதர்களுக்கு நடுவே ஒருத்தி தலைவிரி கோலமாய் வெளியேற திணறிக் கொண்டிருந்தாள். அடித்தொண்டையிலிருந்து தொடர்ந்து கத்திக் கொண்டிருந்தாள். மூன்று ஆண்கள் அவளின் பின்புறம் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் சட்டை அணியாமல் நீண்ட தலைமுடி வைத்திருந்தான்.

மும்மூர்த்திகள் பக்கத்தில் ஏதாவ‌து தற்காப்பு ஆயுதம் தேடிக்கொண்டிருந்த‌ பொழுதில் அவள் வேப்பமரத்தை நோக்கி ஓடியிருந்தாள். அவளின் சேலை புதர்களுக்கிடையே கைவிடப்பட்டிருந்தது. அவளைத் துரத்தியேவந்த மூவரில், சட்டை போடாதவன் நிழலில் நிற்பவர்களை ஒதுங்கச்சொல்லி சைகை செய்தே ஓடிவந்தான். ஓடிவந்தவள் சோழையன் கழட்டி வைத்திருந்த வேட்டிசட்டைக்கருகில் நின்றாள். அவற்றைத் தூக்கியெறிந்தாள். கால்பரப்பி அமர்ந்தாள். அழுதாள். அழுதாள். அழுதாள். ஐந்து நிமிடங்கள் வேறேதும் சம்பவிக்கவில்லை. அருங்காட்சியகச் சிலைகள் போல் எல்லோரும் நின்று கொண்டிருந்தார்கள். அழுகை நிறுத்தினாள். வெறிபிடித்துத் தரையை வெறுங்கையால் தோண்டினாள். ஒரு முழம் ஆழம் தோண்டி ஒருகைப்பிடி மண்ணெடுத்து வந்த திசையிலேயே திரும்பி ஓடினாள். அவள் தன் சேலையையும் தாண்டி ஒடியிருந்தாள்.

"சரி சரி. நீங்க ரெண்டு பேரும் வெரசா கூடவே ஓடுங்க. நான் சாமி வந்திக்கிட்டு இருக்குன்னு அய்யாவுக்குச் செல்போன்ல தகவல் சொல்லிடுறேன்" என அந்த மூவரில் ஒருவன் மற்ற இருவரையும் அனுப்பி வைத்தான். சட்டை போடாத பூசாரியும் இன்னொருவனும் அவளைத் தொடர்ந்தோடினர். மற்றவர்களைச் சட்டை செய்யாமல் தன் செல்பேசியில் யாரையோ தொடர்புகொள்ள முயன்றான்.
"மூணு நாளைக்குச் செல்போன் வேல செய்யாதுன்னு பேப்பர்ல படிச்சேன்" கார் ஓட்டுனர் சொன்னார்.
"அது மெசேஜ் மட்டும்தாம்பா. கால்லாம் பண்ணலாம்" என்றார் டாக்டர் சார்.
"தரையிலெ டவர் கெடைக்காது. மரத்துலெ அந்த ரெண்டாவது வாதுலதான் பேசமுடியும்" என்று சோழையன் கிளை காட்டினார். அவன் மரமேறி செல்பேசியில் கத்தினான்.
"அண்ணன் மண்ணெடுத்துக்கிட்டு வர்றாரு. ரெடியா இருங்க..."
அவன் கீழிறங்கி சைகையில் தண்ணீர் வாங்கி முகம் கழுவினான். வீரம்காட்ட வேலை இல்லாததால் மும்மூர்த்திகள் ஆளுக்கொரு திசையில் சிறுநீர் கழிக்கப் போயிருந்தார்கள்.

"பேய் முத்திடுச்சுப் போல" வேறு யாருமில்லை துப்பாக்கியேதான்.
முகம் துடைத்துக் கொண்டிருந்தவன் சொன்னான்.
"பேயில்ல. ஏன் அண்ணனோட ஆவி. அவங்க ஏன் அண்ணி. சாமிபாக்க ஓடியாந்தோம்"
யாருக்குமே புரிய‌வில்லை. சோழைய‌ன் விள‌க்கினார்.
"எதிர்பாராமெ எறந்துபோனவங்க ஆவிய, சாமியாட்டிய வெச்சு, பிரியமானவங்க ஒடம்புல வரவெச்சு, அவங்க ஆத்மாவெ அவங்களுக்குப் புடிச்ச எடத்துல கொண்டுபோய் அடக்கிவெக்கிறது"
மும்மூர்த்திகள் சிறுநீர் முடித்துவிட்டு அங்கேயே பீடி குடித்துக் கொண்டிருந்தார்கள். அறிவிய‌ல் ரீதியில் டாக்ட‌ர் சார் விள‌க்கினார்.
"நெருக்கமானவரோட திடீர் மரணத்துல நிறைவேறாம போன ஆசைகளத் தன்னால மட்டும்தான் நிவர்த்தி பண்ணமுடியும் அப்புடின்னு ஒருத்தர் நெனச்சா இதுமாதிரி வந்து முடியும்"
யாருக்கும் புரிய‌வில்லை.
"சந்திரமுகி படம் மாதிரி" என்றார் டாக்ட‌ர்.
"அப்புடிச் சொல்லுங்க‌" என்றார் கார் ஓட்டுன‌ர்.
"அப்ப‌ இது உண்மையான‌ பேயில்லையா?" மீண்டும் துப்பாக்கியே.
"அய்யாவோட‌ கோமண‌ம் அவுந்துருந்தா தெரிஞ்சிருக்கும். பொய்ப் பேயின்னா பயந்து போயிருக்கும்ல‌". ஆவியின் த‌ம்பி முறைத்தான்.

"சரி சரி ஆக வேண்டியதப் பாருங்கப்பா. மணி என்ன ஆச்சு?" இதுவும் துப்பாக்கிதான். குழிக்கருகில் மண்ணாராய்ச்சி செய்துகொண்டிருந்த அதிகாரி அவர்கள், கைப்பை திறந்து கடிகாரம் எடுக்கப் போனார். அந்த நொடியில் அவரின் சர்வீஸ் சாந்தியடைந்தது! அவரின் வட்டக்கருவிமுள் சுற்றிக்கொண்டிருந்த‌து! அவரால் பேசக்கூடமுடியவில்லை. என்னவோ ஏதோவென்று அருகில் வந்தவர்களுக்குப் புரிந்துபோனது. சந்தோசத்தின் 'எல்லைதாண்டி' நின்றிருந்த டாக்டர் சார், சோழையனுக்குச் சொந்தமான அந்த இடத்தைவிட்டு எல்லாரையும் விலகிப் போகச்சொன்னார்; சோழையனையும் சேர்த்துத்தான். அதிகாரி மட்டும் தனியேபோய் மீண்டுமொருமுறை சோதித்தார். "கன்பார்ம் தம்பி. நூற‌டிக்குள்ள தண்ணி". குழியை மூடி புல் செதுக்கப்பட்ட தரைபோல் ஆக்கிவிட்டு ஒன்றுமே நடக்காததுபோல் எல்லாரையும் கார்களுக்கருகில் இருக்கச் செய்தார் டாக்டர் சார்.

மும்மூர்த்திகளை ஒவ்வொருவராக அழைத்தார். முதலில் வேப்பங்குச்சிக்காரன். "இந்த மரத்து நெழல்ல எதாவது ஓட்டம் இருக்கான்னு பாருப்பா" துப்பாக்கி வெடித்தார். தனது வேப்பங்குச்சியை எடுத்து நாக்கு வழிக்கப் போவதுபோல் வளைத்துப் பிடித்து மெதுவாக நடக்க ஆரம்பித்தான். 'அவ்விடத்'திற்கு அருகில் ராட்டனம்போல் சுற்றியது. அடுத்து எலுமிச்சைக்காரன். மந்திரம் சொல்பவன்போல் எலுமிச்சையை விரல்களுக்கிடையே உருட்டிக்கொண்டே நடந்தான். ஏதோ சிலிர்ப்பூட்ட வானத்தில் தூக்கியெறிந்தான். வேறு எங்கேயோ விழப்போகிறதென மற்றவர்கள் எதிர்பார்க்க வளைந்துவந்து 'அதே இடத்தில்' விழுந்தது. கடைசியாக தேங்காய்க்காரன். தேங்காய்க்குடுமியை அவனது வலதுகையின் நடுவிரல்நுனி தொடும்படி உள்ளங்கையில் வைத்துக்கொண்டு நடந்தான். 'அந்த இடத்'திற்கருகே குடுமி தானே எழுந்து நேராக நின்றது. "அட்றா மொளைக்குச்சிய இங்கெ" கத்திச் சொன்னார் டாக்டர் சார்.

முன் கூடியவர்கள் எல்லாரும் மீண்டும் மதுவருந்த‌‌க் கூடினார்கள். துப்பாக்கியும் டாக்டர் சாரும் ரகசியம் பேச சோழையனை மரத்துக்குப்பின் அழைத்தார்கள். சோழையன் வேட்டிச்சட்டைக்கு மாறிக்கொண்டிருந்தார்.
"இவரு பேரென்னா? ராஜராஜனா? ராஜேந்திரனா?"
"சோழையன். வெறும் சோழையன்" துப்பினார் துப்பாக்கி. 'வெறும்' என்ற‌ வார்த்தை அழுத்திச்சொல்ல‌ப்ப‌ட்ட‌து.
"எங்க தம்பி, ஆவியோட தம்பியக் காணாம்?" அவர்கள் சுற்றிமுற்றிப் பார்ப்பதற்குள் சோழையன் அங்கு வந்தார்.
"பாத்தியா சோழா. அண்ணன் ஒருத்தன் ஓன் எடத்துல உயிர்விட்டான்னு ஒருத்தன் அடிச்சு சொல்றான். ஓட்டம் பாத்தப்ப இங்கதான் நின்னான். இப்பக் காணாம் பாரு. எனக்கென்னவோ அவன்போய் ஆளுகளக் கூட்டியாந்து, இங்கெ ஒரு மண்டபமோ சமாதியோ கட்டாம விடமாட்டான். நீயே எடத்தத் தரமாட்டேன்னு சொன்னாலும், மத்தவனுக்குப் போகவிடாம பண்ணிடுவானுக. பைபாஸ் ரோடு, ஸ்கூலு, ஃபேக்ட்ரி, ஆஸ்பத்திரி அப்பிடி இப்டி பண்ணி அடிமாட்டுவெலைக்கி அபகரிச்சுப் போயிடுவானுக. அதனாலதான் சொல்றேன்...".

எச்சரிக்கையாகவும் மிரட்டலாகவும் தாக்கத் தொடங்கிய துப்பாக்கிக் குண்டுகளைச் சோழையன் உதாசீனப்படுத்திவிட்டு நடக்கலானார். ஆர்.கே.பி. தியேட்டர் - புதுக்குளம் - காமராஜர் நகர் வழியாக ஊர்வந்து சேர்ந்தபோது மாலை 6 மணி. பணத்துக்காக பணத்தால் பணத்துக்குக் காரியங்கள் ந‌டக்கும் உலகத்தில் நிகழ்கால எதார்த்தங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பாலைவன மழைத்துளியாய்க் காணாமல் போகும் சோழையன் போன்ற அப்பாவிகள் இத்தேசத்தில் அதிகம். இறந்தவனை இருப்பவனாகவும், இருப்பவனை இறந்தவனாகவும், கையெழுத்தைப் பொதுவுடைமையாகவும், கடவுளையும் தனியுடைமையாகவும் மாற்றமுடியும் என்று இந்தச் சோழையன்களுக்குத் தெரிவதில்லை.

நீரோட்டம் கண்டுபிடித்து சரியாக 67ம் நாள், திங்கள்கிழமை, மர்மமாக வேப்பமரம் வேரோடு சாய்ந்துகிடந்தது. ஒரு மண்ணுளிப்பாம்புதவிர உயிர்ச்சேதம் வேறெதுவுமில்லை எனத் தகவல்.

- ஞானசேகர்

3 comments:

Bee'morgan said...

அருமையான களமும் பாத்திரங்களும். மிகவும் ரசித்துப் படித்தேன். கடைசி, பத்தி மட்டும் ஒரு டாக்குமெண்டரி டச் தருகிறது.

நல்லதொரு படைப்பு.

இராஜராஜேஸ்வரி said...

இறந்தவனை இருப்பவனாகவும், இருப்பவனை இறந்தவனாகவும், கையெழுத்தைப் பொதுவுடைமையாகவும், கடவுளையும் தனியுடைமையாகவும் மாற்றமுடியும் என்று இந்தச் சோழையன்களுக்குத் தெரிவதில்லை.
மனம் கனக்கிறது.

J S Gnanasekar said...

கதை புரியாதவர்களுக்கும் வேறுவிதமாகப் புரிந்துகொண்டவர்களுக்கும் ஒரு சிறு விளக்கம்.

கதையில் வரும் இரண்டு தேதிகளை வைத்தே சிலர் யூகித்திருக்கலாம், இது பாபர் மசூதி சம்மந்தப்பட்டதென்று.

வேப்பமரத்தைப் பாபர் மசூதி எனக்கொண்டு, மற்ற பாத்திரங்களையும் சம்பவங்களையும் உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.

- ஞானசேகர்