புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Saturday, August 23, 2014

எட்டுத் திசையும் பறந்து திரிகுவை

கொஞ்சம் சோறு
கொஞ்சம் சுதந்திரம்
கொஞ்சம் தைரியம்
வேறொன்றும் வேண்டியதில்லை
இவர்களிடமெல்லாம்
எதையும் நிரூபிக்காமல்
முழுப் பைத்தியமாக வாழலாம்.
- மனுஷ்ய புத்திரன்

ஆகஸ்ட் 15 முதல் 22 வரை. இந்த 8 நாட்களில் உலகில் பெரிதாக ஏதேனும் நடந்திருந்தால் எனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பெரும்பாலும் அலைபேசியை அணைத்தே வைத்திருந்தேன். அழைத்தவர்களுக்கும் செவி கொடுக்காமல் தவிர்த்திருந்தேன். இந்த 8 நாட்களும் எனக்காக மட்டுமே வாழ்ந்து வந்திருக்கிறேன். வேறொன்றுமில்லை. வழக்கம் போல் பயணம்தான். வழக்கம் போல் தனியாகத்தான். இப்படியொரு பயணம் செய்யப் போகிறேன் என்பது என் வீட்டாருக்கும், அலுவலகத்தில் சில நண்பர்களுக்கும் மட்டும்தான் சொல்லி இருந்தேன். என் நெருங்கிய நண்பர்கள் அனைவரும் இப்பதிவின் மூலம்தான் தெரிந்து கொள்ளப் போகிறார்கள்! 

7 பகல்கள். 8 இரவுகள். சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு எங்கள் வீட்டில் கூடடையும் வரை 176 மணிநேரங்கள். இந்தியாவைச் சுற்றி ஒரு பயணம். எந்த ஊரிலும் தங்கவில்லை. இரவில் இரயில்களில் தூங்கி, பகல்களில் ஊர்சுற்றி மகிழ்ச்சியாகத் திரும்பி வந்திருக்கிறேன். பற்துலக்கல், முகங்கழுவல், உடற்குளித்தல், இன்னபிற யாவையும் இரயிலுக்குள்ளேயே தான். முதல் 5 நாட்களில் நான் எதிர்கொண்ட நிலங்கள், மொழிகள், காட்சிகள், உணவுகள், பழக்கவழக்கங்கள் எல்லாம் எனக்கு முற்றிலும் புதியவை. எனக்கு என் தாய்மொழியும் ஆங்கிலமும் மட்டும்தான் தெரியும் என்பது ஒருதகவல். மராத்தி கொஞ்சம் படிக்கத் தெரியும் என்பது உபதகவல். பெரும்பாலும் மராத்தி எழுத்துக்களைத் தான் ஹிந்தியும் பயன்படுத்துகிறது என்பது இப்பதிவிற்குத் தேவையில்லாத தகவல்.


சென்னை வந்தபின் பெரும் பயணங்கள் யாதொன்றும் செய்யவில்லை என்ற வருத்தம் அதிகமாகி கிணற்றுத்தவளை உவமை பயங்காட்ட, இந்த வருட ஆகஸ்ட் மாதத்தில் கண்டிப்பாக ஊர் சுற்றுவது என்று முடிவெடுத்து இருந்தேன். தற்செயலாக Around India in 80 trains என்ற புத்தகம் கண்ணில்பட, அதிலிருந்தும் சில குறிப்புகள் எடுத்துக் கொண்டேன். சென்னைக்கு வடக்கே இந்தியாவைச் சுற்றுவது என்ற கரு, ஏப்ரல் மாதத்திலேயே என்னுள் சூல் கொண்டுவிட்டது. அலுவலகத்தில் ஒருவாரம்தான் விடுப்பு கிடைக்கிறது. பெரும்பாலான தென்னிந்தியாவை ஏற்கனவே சுற்றிவிட்டதால், வடக்கு மேற்கு கிழக்குப் பகுதிகளில் கவனம் செலுத்தினேன். போக வேண்டிய இடங்களை இந்திய வரைபடத்தில் குறித்து, இரயில் வசதிகளை இரண்டு வாரங்களாக ஆய்வுசெய்த பிறகுதான் இந்திய நிலப்பரப்பின் பிரம்மாண்டமே புரிந்தது.

எனது பயணங்களில் முடிந்தவரை சில விதிகளைப் பின்பற்றுவதுண்டு. 
1. ஒரு பாதையில் ஒருமுறைக்கு மேல் பயணிக்கக் கூடாது. (18 பாதைகளில் திருச்சியில் இருந்து மாத்தூர் தொட்டிப்பாலம் போய்வந்த கதையை நண்பர் சேரலாதன் வலைத்தளத்தில் நீங்கள் வாசிக்கலாம்)
2. இரவில் எந்த ஊரிலும் தங்கக் கூடாது. (மாலையில் சென்னையில் இருக்கும்போது, மறுநாள் காலையிலும் சென்னையில் வேலை இருப்பதால், இரவில் திண்டிவனம் போய் திரைப்படம் பார்த்துவிட்டு திரும்பும் 'காதல்' திரைப்படம் மாதிரி. நானும் சேரலாதனும் ஒருமுறை கோவையில் இப்படி செய்தோம். கோவையில் பொம்மலாட்டம் திரைப்படம் பார்த்துவிட்டு பாலக்காடு போனோம்; விடிய இன்னும் நேரம் இருந்ததால் திருச்சூர் போய் திரும்ப கோவை வந்தோம். ஹம்பி போன்ற இடங்கள் விதிவிலக்கு. 75 இடங்கள் உள்ள ஹம்பியை முழுதும் பார்க்க ஒருநாள் போதாது என்பதால் இரவில் தங்கினோம்)

இரண்டு மாதங்களுக்கு முன்னரே பயணச்சீட்டு முன்பதிவு செய்ய வேண்டும் என்பதால், கடைசிநேரக் குளறுபடிகள் தவிர்க்க, நான்கு விதமான வழிகளில் பயணத்திட்டம் தயாரித்துவிட்டேன். பயணப்படும் நேரத்தில் சூழ்நிலை காலநிலை பொருத்து ஒருவழியில் பயணிப்பதாகவும், மற்ற மூன்றையும் கேன்சல் (cancel) செய்வதாகவும் திட்டம். இதற்கிடையே Around India in 80 trains புத்தகம் பற்றி எங்கள் புத்தகம் தளத்தில் எழுதும்போது, இரயில் கட்டணங்களை மத்திய அரசுகள் அரசியல் ஆதாயத்திற்காக நிறுத்தி ஏற்றுவதைக் கிண்டல் செய்திருந்தேன். வெயிலுக்குப் பயந்த எலி வெள்ளாவிக்குள் போய் ஒளிந்த கதையாய், ஜனநாயக முறைப்படி மத்தியில் ஆட்சி மாற, அவர்களும் வழக்கம் போல் இரயில் பயணக் கட்டண உயர்வைத் திடீரென அறிவிக்க, அது IRCTC தளத்தில் பிரதிபலிப்பதற்குள் சில பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்த அப்பாவிகளில் நானும் ஒருவன். அந்த உபரித் தொகையைப் பயணச்சீட்டு பரிசோதகரிடம் பயணிக்கும்போது செலுத்த வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை, என் இரவுப்பயணத் தூக்கங்களில் எழுப்பக் காத்திருப்பது அப்போதே தெரிந்தது.

மொத்தம் 13 பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்திருந்தேன். அனைத்தும் குளிரூட்டப்படாத படுக்கை வகுப்புகள் (Sleeper Class). ஆகஸ்ட் 15 விடுமுறை தினமாய் இருந்தும், முதல்நாள் இரவே பயணம் தொடங்காமல், சுதந்திர தினத்தன்று இரவுதான் பயணம் தொடங்குவதாகத் திட்டம். அதற்கு ஒரு புத்திசாலித்தனமான காரணம் இருந்தது. எவ்வளவு யோசித்தும் இப்போது நினைவுக்கு வரவில்லை. ஆகஸ்ட் 14 அன்று இரவு இறுதியாக ஒரு வழியை முடிவு செய்தேன். மற்ற 3 வழிகளில் முன்பதிவு செய்திருந்த அனைத்து பயணச்சீட்டுகளையும் கேன்சல் செய்துவிட்டேன். புதிய மத்திய அரசு முதல் இரயில்வே பட்ஜெட்டைக் கொடுப்பதற்கு முன், இந்திய இரயில்களில் உடனடியாகச் சரிசெய்யப் படவேண்டிய சில விடயங்களை ஓர் ஆங்கிலப் பத்திரிக்கை பட்டியலிட்டு இருந்தது. அதில் ஓர் பாஸன்சர் (Passenger) இரயிலின் கொடுமையான புகைப்படம் இருந்தது. அதே இரயிலில் பயணிப்பதாகவும் என்னிடம் ஒரு திட்டம் இருந்தது. அப்படத்தில் மிரண்டுபோய் அந்த வழியைத்தான் முதலில் கேன்சல் செய்தேன்.

நான் பயணித்த பாதையை இப்பதிவில் நான் சொல்லப் போவதில்லை. பயண அனுபவங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவை எனது வருங்காலப் பதிவுகளில் பொறுத்தமான இடங்களில் எப்போதாவது வெளிப்படத்தான் போகின்றன. அதுவரை கீழ்க்கண்ட சுட்டியில் இரண்டு நாட்கள் கழித்து நீங்களே படம்பார்த்து கதை தெரிந்து கொள்ளுங்கள். தற்போது எடிட்டிங் - சென்சார் - வசனம் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறேன்.
https://plus.google.com/103740705199337696353/photos

முதல் இரயிலில் இருந்து கடைசி இரயில் வரை எனது பயணச் சுருக்கம்:
2 உலகப் பாரம்பரியச் சின்னங்கள் (World Heritage Sites)
5 மதங்கள் / மார்க்கங்கள்
3 அதிவிரைவு இரயில்கள் (Super Fast Express)
3 விரைவு இரயில்கள் (Express)
1 மெயில் இரயில் (Mail)
5 மெட்ரொ இரயில்கள்
4 ஆட்டோக்கள்
2 பேருந்துகள்
2 ஷேர் ஆட்டோக்கள்
3 வேன்கள்
5 சைக்கிள் ரிக்ஷாக்கள்
அப்பறம் 2 ட்ராம்ஸ் (Trams)

ஒரு நகரம் கொல்கத்தா என்று நீங்களே யூகித்து இருக்கலாம். அங்கு ஏற்கனவே நான் சென்றிருப்பதாலும், கொஞ்சம் படித்த பிறகு இன்னொரு முறை விரிவாகச் சுற்றிப் பார்க்கும் திட்டம் இருப்பதாலும் இம்முறை புகைப்படங்கள் எதுவும் எடுக்கவில்லை. அதாவது முதலில் 10 நாட்களுக்குத் தான் திட்டமிட்டேன். கொல்கத்தாவில் இருந்து ஆகாய மார்க்கமாக அந்தமான், பிறகு சென்னை என்று திட்டம். அது கைகூடவில்லை. மூன்று மாநிலங்களின் தலைநகரங்களை இரவில் தூக்கத்தில் பார்க்காமலேயே கடந்து போனேன். இந்தியாவில் உள்ள 15 உலகப் பாரம்பரியச் சின்னங்களில், இதுவரை 9 பார்த்துவிட்டேன். மிச்சத்தையும் சீக்கிரம் முடிக்க வேண்டும். ஒரு நாத்திகன் ஒரு கோவிலைப் பார்த்து அசந்து போனேன். அக்கோவிலில் பெயர் தெரியாத உணவை வரிசையில் நின்று, அதிகம் கேட்டு வாங்கிச் சாப்பிட்டு வந்தேன்.

ஆஸ்த்மா நோயுடன் தென்னமெரிக்காவைச் சுற்றக் கிளம்பி ஆற்றின் குளிர் நீரோட்டத்திற்கு எதிராக நீந்தி அக்கரை போன சே குவேராவும், தென்னாப்பிரிக்காவில் இருந்து வெற்றியுடன் திரும்பியவுடன் இந்தியத் தலைமையை உடனே ஏற்காமல் இந்தியா முழுதும் இரயிலில் இரண்டாம் வகுப்பில் பயணித்து மக்களைப் படித்த காந்தியும், கொஞ்சம் எஸ்.ராமகிருஷ்ணனும் என்னுள் கிடந்த தேடல் என்ற ஆர்வத்தைப் பயணங்கள் மூலம் தூண்டிவிட்ட வினையூக்கிகள் என்பேன்; மற்றும் அர்த்தமின்றி எனக்கிருக்கும் ஓர் அசாத்திய வேகத்திற்குப் பயணங்கள் மூலம் கோடுபோட்டு வரலாறு - மனிதம் - இலக்கியம் என பல்லுருக்கள் கொடுக்கலாமென யோசிக்கச் சொன்னவர்கள் என்றும் சொல்வேன். தினமும் இரண்டு வேளைகள் கட்டாயம் மருந்து சாப்பிட வேண்டிய ஓர் ஆங்கில வியாதியுடன் தான் நானும் இப்படியொரு பயணம் செய்தேன். மூன்றே மூன்று வேளைகள் மட்டும்தான் உகந்த உணவு உண்டேன். இயேசுவும் புத்தரும் சொல்லிப்போன, உடல் வருத்தி ஞானம் தேடுவதை இப்பயணங்கள் தான் இந்த ஞானசேகருக்குக் கற்றுத் தருகின்றன. இவ்வளவு தூரம் போய்விட்டு வந்த நான், எந்தச் சோர்வும் இல்லாமல் புத்துணர்வுடன் இருக்கிறேன். வைரமுத்து சொன்னது போல், பயணங்கள் மனதைச் சலவை செய்து உடுத்த!

கொஞ்சம் கருப்பாகி திரும்பி இருப்பதைக் கவனித்துக் கொண்டே காலையில் அம்மா கேட்டாள்: 'மனுச மக்க எல்லாம் கடவீதி போகக் கூட தொணை தேடுதுக. எப்புடிதான்டா பாஷக்கூடத் தெரியாம இப்புடி தனியாவே ஊரு சுத்துறே?'. சிரித்தேன். 'அட மனுச ஆவி அண்டாத காஞ்சப் பயலே' என்றாள். மீண்டும் சிரித்தேன். 'இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம்தேடி எங்கெங்கோ அலைகிறாய் ஞானத்தங்கமே' என்ற பாடல் டிவியில் ஓடிக் கொண்டிருந்தது கேட்டது. சரி, இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். 10 நாட்களின் செய்தித்தாள்கள் படிக்க வேண்டும்!

தேடல் உள்ளவரை வாழ்வில் சுவையிருக்கும்!

- ஞானசேகர்

2 comments:

Unknown said...

unadhu dhedalgal dhodarattum.. vaaldhukkal..

Unknown said...

unadhu payanaggal dhodarattum.. vaaldhukkal.