புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Wednesday, October 10, 2018

நேர்படப் பேசும் தலைமுறை

வாராத ஒரு மழையைச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றும், அதற்காக சில நாட்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தும், அதற்காகவே சில தேர்தல்களைத் தள்ளி வைத்தும், அதே போல அடுத்த ஒரு மழைக்காக காத்திருக்கும் என் தமிழ்கூறும் நல்லுலகிற்காக ....

இறைவிகளையும்
தேவதைகளையும்
மனைவிகளாக்கிக் கொள்வதை
இறைவி கண்டிப்பது
இறைவனுக்குப் பிடிக்கவில்லை

இறைவியின் கவனம் சிதறடிக்க‌
தேவதை ஒருத்தியை
அனுப்புகிறார் இறைவன்

தேவதைக்கான கட்டளை என்பது
இறைவியைப் பேசவிடாமல்
தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பது

ஏமாற்றப்படுவதை
ஒருநாள் உணர்ந்த இறைவி
தேவதையைச் சபிக்கிறாள்

உரையாடல் என்ற
ஆயுதத்தையே அபகரிக்கிறது அச்சாபம்
யார் பேசினாலும்
கடைசி வார்த்தைகளை மட்டுமே
திரும்ப பேச முடியும்

குகைகளில் தஞ்சம் அடைந்த தேவதை
பேசுபவர்களின் கடைசி வார்த்தைகளையே
மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறாள்

அத்தேவதையின் பெயர் Echo
எதிரொலிக்கான ஆங்கில வார்த்தையானாள்

காலங்கள் மாறிவிட்டன‌
தலைமுறைகள் ஓடிவிட்டன‌
கதை மட்டும் இன்னும் இருக்கிறது

இறைவியின் இரத்தலை இறத்தலாக்கும் இறைவனாய்
ஓட்டுக்கட்சி அரசுகள்!
இறைவி என்பதை மறந்துபோன‌ இறைவியாய்
ஓட்டைவிற்ற‌ மக்கள்!
இறைவியின் கைகளில் இறைவனின் தேவதையாய்
இரைச்சலுடன் ஊடகங்கள்!

இரைச்சலை எதிரொலிக்கும்
சபிக்கப்பட்ட தேவதையாய்
மீண்டும் மீண்டும் அதே மக்கள்!

– ஞானசேகர்

No comments: